சாதியாவது ஏதடா
சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டிச்சித்தர்.
சாதி பேதமில்லை – அகப்பேய்ச் சித்தர்.
சாதியாவது ஏதடா … சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ – சிவவாக்கியார்.
தமிழக சமூக வரலாற்றில் சாதிமோதல்கள் தொடர்ச்சியாக,மிக நேர்த்தியாக நடைபெற்றுவருகின்றன.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால தமிழக சாதிய வரலாற்றில் சாதிய முரண்பாடுகள் கூர்மையடையும்போதெல்லாம் அதை சாதிக்கலவரமாக மடைமாற்றும் முயற்சிகள்தான் செய்யப்படுகின்றன.இருசாதிகள் மோதிக்கொள்ளும்போது தமிழகம் மவுனம் சாதிக்கிறது.ஒடுக்கப்படும் சாதி வன்முறை சாதியாக முத்திரை குத்தப்படுகிறது.ஒடுக்கப்படும் சாதி மக்கள் படுமோசமான அழிவைச் சந்திக்கிறார்கள்.ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் சமூகத்தில் தன்னை அந்நியமாக உணர்கிறான்.அம்மக்கள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.ஜனநாயக நிறுவனங்கள் அம்மக்களுக்கு எவ்வித ஆறுதலையும் தருவதில்லை.தமிழக சமுதாயத்தின் தொடர்ச்சியான சாதிய வரலாறு இதைத்தான் சொல்கிறது.கடந்த பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்படும் மக்களுக்கு செய்துவரும் தீங்குகள் குறித்து ஒடுக்கும் சாதிமக்கள் எள்ளளவும் வருத்தப்பட்டது கிடையாது.நிலம்,காடு,வீடு,கல்வி,
தண்ணீர்,குளம்,கிணறு என பொதுச்சொத்துகள் எவையும் ஒடுக்கப்படும் சாதிக்கு சொந்தம் கிடையாது.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால தமிழகவரலாற்றில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சாதிகள் இரண்டே இரண்டுதான்.ஒன்று தலித் சாதி. மற்றொன்று பார்ப்பனர் சாதி.இது ஒரு கொடுமையான,ஜீரணிக்கமுடியாத உண்மைதான்.இன்று இந்த சாதிகள் என்னென்ன வேலைகள் பார்க்கின்றனவோ அதே வேலைகள்தான் அன்றைக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.சங்க இலக்கியங்களிலிருந்து இவ்வுண்மையை நாம் அறியலாம்.சமண,பௌத்த நெறிகளை வைதீகம் வெற்றிகொண்ட காலமும்,விவசாயம் பேரளவு விரிவாக்கம் செய்யப்பட்டகாலமும் ஒத்திருப்பதை வரலாறு சொல்லும்.செய்யும் தொழிலைக் கொண்டு சாதிகளின் பல்வேறு படிநிலைகள் காலப்போக்கில் தோன்றுகின்றன.அன்றைய வேளிர்கள் இன்றைய வேளாளர்களாகவும்,பாணர்கள் இசை வேளாளர்களாகவும்,வணிகர்கள் செட்டியார்களாகவும்,பல்வேறு இனக்குழு மக்கள் பிற்பட்ட சாதியினராகவும் உருப்பெற்றனர்.தெலுங்குக் குடியேற்றங்களுக்குப் பிறகு(14 ம் நூற்றாண்டுக்குப் பின்னர்)ரெட்டியார்,நாயுடு போன்ற விவசாய சாதியினரும்,சங்கிலியர்,தோட்டி போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினரும் குடியேறியிருக்கலாம்.அதற்குமுன்னர் தோலுடன் தொடர்புடைய வேலைகளை தலித் சாதியினரே செய்து வந்துள்ளனர்.14 ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில்தான் மலம் அள்ளும் பணியும் தோன்றியிருக்கவேண்டும்.
ஆக கடந்த 2000 வருட தொடர்ச்சியான தமிழ்நாட்டு சமூகவரலாற்றில் தலித்துகளும்,பிராமணர்களும் செய்த வேலை மாறவில்லை.சோழப்பேரரசு காலத்தில்,வைதீக சமயங்களின் எழுச்சிகாலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும்கூட கடவுள் வழிபாடு,கோவில் என்னும் வைதீகக் கருத்துகளை மையப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணிகளை ஆழ்வார்களும்,நாயன்மார்களும் செய்தார்கள்.”குலந்தாங்கு சாதிகள் நான்கிலும் கீழ் இழிந்த சண்டாளர்களாயினும் சக்கரத்தண்ணலாகிய மணிவண்ணர்க்கு ஆள் என்று கலந்தால் அவரது அடியவருக்கும் அடியவர்கள் நாங்கள்” என்று இவர்கள் பாடினார்கள்.தீண்டாமையை ஒழித்துவிடவேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல.ஏனென்றால் தீண்டாமையை பரிபாலிக்கும் மனுதர்மத்தை வளர்த்தவர்கள்தான் இந்த நாயன்மார்களும்,ஆழ்வார்களும்.மனுதர்மக் குதிரையின்மீது சவாரி செய்தவர்கள் இவர்கள். தலித்துகளும்,பார்ப்பனர்களும் தங்கள் தங்கள் தொழில்களை இரண்டாயிரம் ஆண்டுகளாக மாற்றிக்கொள்ளாமல் தொடர்ச்சியாக அதைச் செய்துவருகிறார்கள் என்றால் அதன் அடிப்படை காரணமாக மனுதர்மம் மட்டுமே இருக்கமுடியும்.மனுதர்மம் இல்லாது போயிருக்குமானால் பார்ப்பனர்கள் புலையர்களின் தோல் தொழிலை இழிவாகக் கருதியிருக்க மாட்டார்கள். தாங்களும் செய்திருப்பார்கள்.அதுபோலவே தலித்துகளும் பார்ப்பனர்களின் தொழிலான வேதம் ஓதுதலும் தோல் தொழிலுக்கு சமம்தான் என்கிற சுயமரியாதை உணர்வைப் பெற்றிருப்பார்கள்.அப்புள்ளியில் சாதிப்படிநிலைகள் காணாமல் போயிருக்கும்.
மனுதர்மத்தின் காலம் காலமான சூழ்ச்சிகளை அறியாமல்தான் பிற்பட்ட சாதிமக்களும் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்.சாதியப்படிநிலைகளில் தனக்கும்கீழே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் ஒடுக்குதலுக்கு உரியவர்கள் என்னும் மனுதர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் பிற்பட்ட சாதியினர்,அதே மனுதர்மத்தின் அடிப்படையில் தாங்களும் சாதியப்படிநிலைகளில் தங்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்களால் ஒடுக்குதலுக்கு உட்பட்டவர்களே என்னும் நியதியை அறிய மறுக்கிறார்கள்.
சங்ககாலத் தமிழகத்தில் சாதி இருந்தது.ஆனால் சாதிவெறி இல்லை.பௌத்த,சமண சமயங்களின் வீழ்ச்சிக்குப் பிறகான வைதீக சமயங்களின் எழுச்சி சூழலில்தான் சைவமடங்களும்,சைவ சித்தாந்தமும் கொடூரமான சாதி ஆதிக்கக்கருவிகளாக உருமாறின.அன்றையப் பேரரசின் ஆட்சியாளர்கள் அதற்கு உதவினார்கள்.காலனிய ஆட்சி தொடங்குவதற்கு முன்புவரை சாதிவெறி பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.அப்பேய்களின் புத்துயிர்ப்பாகத்தான் கீழ்வெண்மணியையும்,பரமக்குடியையும்,தர்மபுரியையும்,மரக்காணத்தையும் இன்னும் எண்ணற்ற வன்கொடுமைகளையும் பார்க்கவேண்டியுள்ளது.காலனிய ஆட்சியில் கொணரப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள்,மேலைத் தத்துவங்கள்,அறிவியல் கருத்துகள்,அம்பேத்கரின் இடையறாத உழைப்பு இவையெல்லாம் சாதியவெறியை ஓரளவு மட்டுப்படுத்தி வைத்திருந்தன.ஆனால் சாதியின் உயிர் மனுவில் அல்லவா ஒளிந்திருக்கிறது!!சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு மனுதர்மம் சமயப்பூர்வமான ஒப்புதலைத் தருகிறது.சாதிப்படிநிலைகளில் வாழும் மக்கள் அப்படிநிலையைப் பற்றி எதுவுமே தெரியாமல் வரலாறு முழுவதும் உழன்றுகொண்டே இருக்கிறார்கள்.”சாதியை ஒழிக்கிறேன்” பேர்வழிகளைக் கண்டால் நிறைய கோபம் வருகிறது.சாதியை ஒழிப்பதற்கான வழி மிக மிக மிக….நீண்டது.சமுதாயத்தின் மிக மிக ஆழத்தில் புரையோடிப்போயிருக்கும் மனுதர்ம வேர்களைக் கண்டறிந்து அதன் முனையில் வெந்நீர் ஊற்றவேண்டும்.அம்முயற்சி இருக்கட்டும். முதலில் நம்முடைய முயற்சி தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுபடுவதாக அமையட்டும்.
சாதிவெறியையும்,தீண்டாமையையும் நீரூற்றி வளர்க்கும் கருவிதான் அகமணமுறை.அகமணமுறை என்னும் பாறையை உடைக்க கலப்பு மணங்கள் என்னும் விதைகள் அவசியம்.எனவேதான் இவ்விதைகள் எங்கு முளைவிட ஆரம்பிக்கிறதோ அங்கெல்லாம் பாறைகளும் பிளவுபடும்.தலித்துகளின்மீது வன்முறைகளும் ஏவப்படும்.அப்படி ஒரு விதை முளைத்ததை சகிக்கமுடியாமல்தான் தர்மபுரியில் நூற்றுக்கணக்கான தலித் மக்களின் வாழ்விடங்களை எரித்தார்கள்.அவர்களது செல்வங்களைப் பொசுக்கினார்கள்.அரைமரக்கால் கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காக 44 தலித் விவசாயக்கூலி மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.செங்கொடி இயக்கமும்,தலித்துகளின் அமைப்புகளும் போராடிப் போராடி தலித்துகளின் பொருளாதார வாழ்வும்,சமூக வாழ்வும் பெரும் பள்ளத்திலிருந்து இன்று எவ்வளவோ மேலே வந்திருக்கின்றன.இன்னமும் மேலே வரவேண்டுமானால் தலித் மக்கள் மேலும் போராடியே தீரவேண்டும்.அமைப்பு ரீதியாக திரண்டே ஆகவேண்டும்.பிராமணர்களுக்கு சங்கம் பொழுதுபோக்கு சார்ந்ததாக இருக்கலாம்.பிற்பட்ட சாதியினருக்கான சங்கம் அரசிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்காக இருக்கலாம்.ஆனால் தலித் மக்களுக்கான அமைப்புகள் அவர்களின் வாழ்வை,அவர்களது சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகான தலித் இயக்கங்களின் வளர்ச்சியும்,கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தொய்வும் அப்பாவி இளைஞர்களை சாதிச்சங்கங்களில் கொண்டுபோய் சேர்த்தது.தங்கள் தங்கள் சாதி மரபுகள் பற்றி சாதிக்கட்சி மக்கள் மிகவும் சிலாகித்துப் பேசுகின்றனர்.ராஜராஜாதி பட்டங்களும் சூட்டிக்கொள்ளப்படுகின்றன.தேர்தல்கள் சாதிக்கட்சிகளின் வேட்டைக் களங்களாகிப் போகின்றன.அதன் தலைவர்கள் நல்ல விலை போகிறார்கள்.அதன் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நல்ல கட்டப்பஞ்சாயத்துத் தலைவர்களாகிறார்கள்.சோழப்பேரரசுக் காலத்தில் மனுநீதி செழித்து வளர்ந்தது.இன்றைய ஆட்சியாளர்கள் மனுவின் அடிமையான மனுநீதிச் சோழனுக்கும் மணிமண்டபம் கட்டுகிறார்கள்.பரமக்குடியையும்,தர்மபுரியையும்,மரக்காணத்தையும் விட இங்கு நாம் வேறென்ன எதிர்பார்த்திடமுடியும்?.
(தீராநதி,ஜூன்,2013)