கொரோனா – பெருந்தொற்றுப் பேரலை.!
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும், அரசு, தனியார் மருத்துவமனைகள் கொரோனா பெருந்தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு இசைநாற்காலி போல ஆகியிருக்கிறது நோயாளிகளுக்கான படுக்கைகள். சகல திசைகளிலிருந்தும் தொற்றுக்கு ஆளானோர் மருத்துவமனைகளை முற்றுகையிட்டுக் கொண்டுள்ளனர். கிட்டதட்ட ஒரு ஆழிப்பேரலையின் அவலம் போல இருக்கிறது. பேரிடர், பெரும் போர்களில் காயம்பட்டவர்கள் போல மக்கள் மருத்துவமனைகளில் வதியழிகிறார்கள். பதட்டம் தொற்றிக் கொண்ட மருத்துவமனையின் சுவர்கள் நடுக்கம் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் முடிந்தவரை பணத்தைப் பெற்றுக்கொண்டு முடியாதபோது நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் கொண்டு வந்து போட்டுவிட்டுச் செல்கின்றன. கைவிட்டுச் செல்கின்றன. அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், இன்னபிற மருத்துவ ஊழியர்களும் அவர்களுக்கு உயிரளிக்கும் போராட்டத்தைத் தொடங்குகின்றனர். தாமும் தொற்றுக்கு உள்ளாகி நிலைகுலைந்த நிலையிலும் அவர்கள் மருத்துவமனையையும், நோயாளர்களையும், அரசையும் தூக்கி நிறுத்துகிறார்கள். நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைக்கு சென்ற ஒருவர் தமக்கு தொற்று இருப்பதை உறுதி செய்வதற்கு(!) முன்தொகையாக கட்டிய ரூ ஒரு இலட்சத்தை தொற்று இல்லை என்று உறுதியான பிறகு கேட்டதற்கு கால்வாசிக்கும் குறைவானத் தொகையையே அந்தத் தனியார் மருத்துவமனை திருப்பிக் கொடுத்தற்காக நீதி மன்றம் சென்றிருக்கிறார். நீதி மன்றம் தமிழக அரசிடம் பதில் கேட்கிறது. கொரோனா சிகிச்சையில் தனியார் பங்கு பெறுவது என்பது சேவையில் பங்குபெறுவதல்ல. நெருக்கடியில் பங்கு பெறுவதல்ல. மாறாக சேவைக்கு உயர் பங்கு மதிப்பை நிர்ணயிப்பது. கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை நடத்த இயலாமல் தவிக்கும் இவர்கள், வரும் நோயாளிகளிடம், கிடைக்கும் நோயாளிகளிடம் வழிப்பறி செய்கிறார்கள். தொற்றின் தீவிரம் மருத்துவமனைகளில் மட்டுமே உணரக்கூடியதாக இருக்கிறது. மக்களை கிருமிநாசினிக் கொண்டு கைகழுவ வலியுறுத்தியபடியே மக்களை அரசு முற்றாக கைகழுவிக் கொண்டிருக்கிறது. முககவசம் என்பது எல்லாவற்றையும் மறைக்கும் மூகமூடியாக அது நினைக்கிறது.
பெருந்தொற்றுடன் வாழப்பழகச் சொல்லிவிட்டு நமது பிரதமர் மானோடும், மயிலோடும் பழகத் தொடங்கியிருக்கிறார். தொற்றில் நாளுக்கு நாள் வீழும் குடிமகனை காப்பாற்ற அறிவியல் வழியிலான எந்த வழிமுறைகளும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. தொற்றிலிருந்து அவர்கள், தாமே மீண்டுவருவார்கள் என்று சொல்கிறார் பிரதமர். கைவிடப்பட்ட மக்கள் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. செய்கிறார்கள். மக்களைவிட இப்போது இராஜபாளையத்தையும், சிப்பிப்பாறைகளையும் காப்பாற்றுவது முக்கியம். அழிந்துவரும் மக்கள் அரிய இனமாகும்போது ஒரு வேளை காப்பாற்ற முயற்சி எடுக்கலாம் என்று எண்ணியிருக்கலாம் நமது பிரதமர்.
நாட்டு நாய்களை காப்பாற்றுவது என்பது நாட்டு நாயின் மரபை காப்பாற்றுவது. நாட்டு நாய்களின் சாதிகளைக் காப்பாற்றுவது, நாட்டு நாயின் விசுவாசத்தைக் காப்பாற்றுவது. நாட்டு நாயின் வீரத்தை, தீரத்தைக் காப்பாற்றுவது.
உள்நாட்டு நாய்கள் எப்போதுமே எசமான விவசுவாசம் மிக்கவை. வாசல்தாண்டி வராதவை. மேல்சாதி, மேட்டுக்குடி ஆதிக்க அதிகாரம் சார்ந்தவை. நாட்டு நாய்களில் உயர்ந்தவை அவை. நாட்டு நாய்களில் உயர்சாதி நாய்களைக் காப்பாற்றுவது என்பது நாய்களைக் காப்பாற்றுவதல்ல சாதிகளைக் காப்பதாகும். இராஜபாளையமும், சிபிப்பாறையும் நாய்கள் மட்டுமேயல்ல.
செப்தம்பர் முதலிலும் பின்னர் 20 திகதிக்குப் பின்னரும் மேலும் மேலுமான தளர்வுகளை நடுவணரசும், மாநில அரசுகளும் கொண்டுவர இருக்கின்றன. பெருந்திரள் இடங்களை சில விதிமுறைகளுடன் திறப்பதற்கு அது அனுமதித்துக் கொண்டுள்ளது. பெருந்தொற்றை கொண்டாட்ட மனநிலைக்கு மாற்ற அரசுகள் விரும்புகின்றனவா என்று தெரியவில்லை. இது தொற்றுப் பேரலை பரவுவதற்கு வழி செய்யும் என்பதை அரசுகள் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. பெருந்திரள் என்பது பெருவணிகத்துடன் தொடர்புடையது. பெரு வணிகம் தங்கு தடையில்லாமல் நடைபெறுவதற்கு பெருந்திரளின் பெருநுகர்வு முக்கியம். எனவே பெருவணிகத்தின் நுகர்வை, மூலதனத்தைப் பெருக்குவதற்கு பெருவாசலைத் திறக்கிறது அரசுகள். மூலதனத்தை ஒரு பக்கமும், தொற்று நோயாளிகளை மறுபக்கமும் இணையாக குவிக்கிறது அது.
பண மதிப்பிழப்பில் உயிரிழந்த பொருளாதாரப் பிணத்தை அகற்ற விழி பிதுங்கிய பாசக அரசு, இப்போது பெருந்தொற்றைக் காரணம் காட்டி செத்தப் பிணத்தை கடவுள்தாம் காப்பாற்ற வேண்டும் என்கிறது. எதிர்கட்சிகள்மீது அல்லது சென்ற ஆட்சியின் மீது பழியைப் போட்டு தப்பிப்பது என்பது தற்காலிகமானதாகத்தான் இருக்க முடியும். கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டால் கடவுளை விமர்சனம் செய்ய யாதொருவருக்கும் துணிவிருக்காது. கடவுள் என்பது பாசகவாகவும், பாசக என்பது கடவுளாகவும் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
பாசக தமது வெற்றிக்குத் துணையாக கடவுளை அழைத்தது போக இப்போது தோல்விக்கும் கடவுளை அழைக்கத் தொடங்கியிருக்கிறது. தொடங்கும். பெருந்தொற்றில் வீழ்வோர், சாவோர் கடவுளின் கருணை கிடைக்காதவர்கள் என்றும், தாக்குப் பிடித்து வாழ்வோர் அவரது கருணைப் பெற்றவர்கள் என்றும் அது சொல்லக்கூடும். சொல்லும். அரசையோ, மருத்துவர்களையோ எதிர்பார்க்கும் அவலம் ஒருபோதும் அவர்களுக்கு நேர்வதில்லை. சொந்த அவலத்தைத்தவிர.
பெருந்தொற்று பற்றி ஒவ்வொரு கட்டுரை எழுதும்போதும் அது, அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாகவே எழுத நேர்கிறது. எழுத நேரும் என்று தோன்றுகிறது. மக்கள் தளர்வதாக அல்லது அரசு தளர்வதாக நம்பும்போது, கருதும்போது அது தளர்வுகளை அறிவிக்கிறது. நோயாளி தொண்டைக்கும், வாய்க்குமாக இருக்கும்போது “ஆர்லிக்ஸ் குடி சரியாகிவிடும்!” என்பது போல இருக்கிறது அது.
மக்கள் தங்களைத் தூக்கி நிறுத்தவும், அரசு தம்மை நிறுவிக் கொள்ளவும் தளர்வுகள் சர்வரோக நிவாரணியாக ஆகிக் கொண்டிருக்கிறது. தொற்றுடன் பழக சொல்வது மரணத்துடன் பழகுவதுதான் என்று தெரிந்தும் பசித்த வயிறுடையோர் சதுக்கப் பூதங்கள் உறையும் வணிகப் பெரு வீதிகளை அடைகின்றனர். கடக்கின்றனர். போருக்கிடையே ஊர்ந்து செல்ல அவர்கள் பழகிக் கொண்டுள்ளார்கள். பொருளாதாரத்தைக் காப்பாற்ற தம்மை அவர்கள் நம்பிக் கொண்டு அரசையும் நம்ப வேண்டியிருக்கிறது. அரசு கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறது.
பேரிடரையும், பெருந்தொற்றையும் எதிர்கொள்ள அரசுகள் வைத்திருக்கும் அருமருந்து தனியார்மயம். அரசு நிறுவனங்களை தனியாரிடம், அதானியிடம், அம்பானியிடம் கொடுத்துவிடுவதால் பொருளாதாரம் பிழைத்துவிடும். கடவுளும் பெருமுதலாளிகளும் வேறு வேறு அல்ல. கடவுளின் கருணையும், பெருமுதலாளிகளின் கருணையும் ஒன்றுதான். கடவுள் கைவிடும்போது பெருமுதலாளிகளும், பெருமுதலாளிகள் கைவிடும்போது கடவுளும் வரத்தான் வேண்டும். வருவார்கள். அப்போதுதான் அரசும், ஆட்சியும், கட்சியும் மக்களும் பிழைத்துக் கொள்வார்கள், பிழைத்துக் கொள்ளச் செய்வார்கள்.
பெருந்தொற்றில் இரண்டு வகையிருக்கிறது ஒன்று கொரோனா தொற்று பிறிதொன்று தனியார் மயம். மக்களை பீடித்திருப்பது கொரோனா தொற்று அரசைப் பீடித்திருப்பது தனியார்மயம். வீழந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரே மருந்தும், நிவாரணமும், தீர்வும் அதுதான். கொரோனா தொற்றில் பிழைத்தவர் குருதிக் கொடையைக் கொண்டு கொரோனா நோயாளிகளை பிழைக்க வைப்பது போல தனியாரைக் காப்பாற்ற அரசு, பொதுத்துறைகளை, தனியாருக்கு, பெருமுதலாளிகளுக்குத் தானமளித்து அரசை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.
முன்னதில் பலனிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். நம்பித்தான் ஆகவேண்டும். பின்னதிலும் அரசு அதைத்தான் சொல்கிறது. கடவுளை நம்பும் அரசை நம்புவது கடவுளை நம்புவது போல. கேள்விகளுக்கு இடமிருப்பதில்லை. கூடாது.
கடந்த ஏப்ரலில் தொற்று அதிகரித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 23.9சதவீதம் குறைந்து சவளைப்பிள்ளையாகிக் கொண்டிருக்க அம்பானியின் மதிப்பு ஏப்ரலிலிருந்து ஏற்றம் கண்டிருக்கிறது. ஊட்டம் கண்டிருக்கிறது. அதானியின் சொத்தின் மதிப்பு 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கக்கூடும். பொதுச் சொத்தைத் தனி சொத்தாக்கும்போது இதுதான் நிகழும். தொற்று மக்களுக்கு சொந்தம். சொத்து அதானிகளுக்கு சொந்தம். தனியாரைக் காப்பாற்றுவதும் அரசைக் காப்பாற்றுவதும் வேறு வேறல்ல. அரசு என்பது பெருமுதலாளிகள் தாம். பெருமுதலாளிகள் என்பது அரசுகள்தாம்.
அரசுகள் மக்களை ஒரு தொற்றைப்போல முன்னெப்போதும் போலன்றிக் கைக்கழுவிக் கொண்டிருக்கின்றன. 2019 ஆண்டில் மட்டும் 10,281 எண்ணிக்கையிலான உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற கூலித் தொழிலாளர்கள் 32,559 ஆயிரம் பேர் நெருக்கடியான வாழ்க்கையிலிருந்தும், இவ்வுலகிலிருந்தும் தம்மைவிடுவித்துச் சென்றுவிட்டனர். தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடத்திலிருப்பது ஓர் அவலப் பெருமிதம். குறிப்பாக தலைநகர் சென்னை நாட்டின் முதலிடத்தில் இருப்பது குறித்து ஆட்சியாளர்கள் தமது சாதனைப் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம். கொரோனா கால நெருக்கடிகளின் பின்னணியிலான தற்கொலைகள் பல மடங்கு அதிகரிக்கக்கூடும். ஆனால் என்றுமில்லாத வகையில் தற்போதுதான் வேலையிடங்கள் அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக(என்.சி.ஆர்.பி.) அறிக்கையை நாம் பெருந்தொற்றுப் பலியைப் போலக் கேட்கவும், பார்க்கவும், சந்திக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு நடுவணரசைக் கைகாட்டுகிறது. நடுவணரசு ஆண்டவனைக் காட்டுகிறது. மக்கள் பொது முடக்கத்திலும், தளர்வுகளிலும் மாறிமாறி வாழ்வைப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை மக்களுக்கு உதவித் தொகை கொடுத்து நிறுத்திவிட்டது போல தற்போது உதவிப் பொருட்களை நிறுத்திவிட்டு முககவசத்தை இலவசமாகக் கொடுத்துக் கொண்டுள்ளது. பொதுத் தளர்வுக்கும் முககவசத்துக்கும், உதவிப் பொருட்கள் நிறுத்தத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. பொதுத்தளர்வில் அரசின் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இனி உங்கள் வேலையைத் தொடருங்கள், அரசை எதிர்ப்பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அது. அதனால்தான் அரசு செய்ய வேண்டிய கடப்பாடுகளை, கட்டுப்பாடுகளை மக்களிடம் தள்ளிவிட்டுக் கொண்டுள்ளது. கட்டாய முககவசம், தனிநபர் இடைவெளிகளை மீறுவோருக்கு அது தண்டனையை அறிவிப்பது என்பது பொறுப்புக்களை மக்களுடன் அரசு பகிர்ந்து கொள்வதல்ல, பொறுப்புக்களை மக்களிடமே விட்டுவிடுவதாகும்.
பிரதமர் தமது திங்கள்தோறுமானக் குரங்குக் குளியலின்(மன்கிபாத்) போது கிடைக்கும் அரிய தொல் பொருட்களுடனே வந்து பேசுகிறார். இப்போது கிடைத்திருப்பது சிப்பிப்பாறை நாய்களும், ராஜபாளையத்தில் எஞ்சிய நாய்களின் எலும்புத் துண்டுகளுமாகும். கோம்பை நாய்களின் விலா எலும்பு கிடைக்கவில்லை போலும். கொரோனா தொற்றில் களைத்தும், நம்பிக்கையற்றும் கிடப்போர் இணைய வழிக் கல்வி நேரலை வகுப்பிலிருக்கும் கல்லூரி மாணவன் போல ‘ம்யுட்டில்’ வைத்துவிட்டு நகர்ந்து போய்விடுகின்றனர். பிரதமரும் விடுவதாயில்லை.
சமையற்கலை வல்லுநர் போல தொல்பொருட்கள் செய்வது எப்படி என சொல்கிறார். சொல்லித் தருகிறார். இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. பிரதமர் சொல்வதில் நிறைந்த பொருளிருக்கும் என்று நம்புபவர்கள் கனிசமாக இருக்கக்கூடும். அதற்காகவே அவர் இதை சொல்கிறார் என்பது நினைவிருக்கட்டும். கொரோனா தொற்று அலையெனப் பெருகி வந்த காலத்தில் அவர் அகல்விளக்கேற்ற சொன்னதும், கைதட்டச் சொன்னதும், அப்படித்தான். ஆனால் இம்முறை அது அப்படியாக இருக்கவில்லை.
ஜே.இ.இ, நீட் தேர்வுகளைத் தள்ளிவைப்பது பற்றிய எந்த முடிவும் அவரது உரையில் நேர்த்தியாக மறைத்திருந்தார். ஒரு மத பிரசங்கிப்போன்ற அவரது திங்கள் உரையை ‘டிஸ்லைக்’ என்று பதிவிட்டு பாசக அதிகாரபூர்வ பக்கத்தில் 12 இலட்சம் பேர் விலகிச் சென்றிருந்தனர். காத்து வாங்கிய கடற்கரைக் கூட்டம் போல பிரதமர் மட்டும் தன்னந்தனியே அந்த பிருமாண்டமானக் கூட்டத்தில் பேசுவது போலாகிவிட்டது அது. பிரதமர் இனி தனது உரையை ஆண்டுக்கு ஒரு முறையென மாற்றுவதுடன் அவ்வுரையை இராமர் கோயில் வளாகத்திலேயே வைத்துக்கொள்வது நலம்.
பள்ளி கல்லூரி திறப்புத் தொடர்பான செய்திகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பதட்டத்திலேயே வைத்திருக்க முயற்சிக்கிறது அரசுகள். மாநில அரசு ஒரு சட்டமும், நடுவணரசு ஒரு சட்டமுமாக அனுதினம் வெளியிட்டு கல்விபுலத்தை கலங்கடித்துக் கொண்டுள்ளன. நீட், ஜே.இ.இ போன்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்து ஏகப்பட்ட குழறுபடிகளுடன் இருக்கிறது அரசு. நுழைவுத் தேர்வுக்காக வந்துகுவியும் விண்ணப்பங்கள் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வத்தைக் காட்டுவதாக கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரிவால் தனது வளமான கற்பனையை அவிழ்த்துவிடுகிறார். கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கு வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், நோயின் மீது அவர்களுக்கு கட்டுக்கடங்காத ஆசை இருப்பதாகச் சொல்லக்கூடும் போல.
நீட்டே தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நுழைவுத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதா, அல்லது தேர்வறைகளில் நடத்துவதா என்ற பட்டிமன்ற விவாதத்தில் ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று பட்டிமன்ற நடுவர் போல நடுவமாகப் பேசி முடித்துவைக்கிறார் மாநிலக் கல்வி அமைச்சர்.
இந்த நிலையில்தாம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அந்த அமைச்சகம் பெருமிதம் கொள்கிறது. தனியார்களின் அரசு, அரசுதுறைகள் பற்றி பெருமைபடுவது என்பது ஒரு வழமையான சடங்கென்றாலும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பது அரசை, அரசுப் பள்ளிகளை அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்று பொருள் அல்ல. இணைய வழிக் கல்விக்கான கட்டாயச் சூழலை உருவாக்கிவிட்டுத், தனியார் பள்ளிக், கல்லூரிகளை அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கல்விக் கட்டணக் கொள்கைக்கு, கொள்ளைக்கு வழி செய்துவிட்டு, மறுபக்கம் அரசுப் பள்ளிகளில் இயன்றால் இணைய வகுப்புக்களை நடத்துங்கள் என்கிறது கல்வித்துறை.
தனியார் பள்ளிக் கல்லூரியில் பயிலும் விளிம்பு நிலை மாணவர்களிடம் கற்கும் திறன்தான் இருக்கிறது. திறன்பேசி இல்லை. இருக்காது. திறன்பேசி இல்லாதவர்கள் திறன் இல்லாதவர்கள். வாசிப்பதற்கோ, கற்பதற்கோ வாழ்வதற்கே என்கிறது அது. கல்வித் திறன் இருந்தும் திறன் பேசி இல்லாத மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து நீங்குகிறார்கள் அல்லது இந்த கல்வி சூழலிலிருந்து நீங்குகிறார்கள், இல்லை இந்த உலகிலிருந்தே நீங்குகிறார்கள்.
தனியார் பள்ளியிலிருந்து நீங்கும் திறன்பேசி இல்லாத மாணவர்கள்தாம் அரசுப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் வருகிறார்கள். வருவார்கள். திறனடிப்படை என்பது திறன்பேசி அடிப்படைதான் என்கிறது கல்வித்துறை. ஏறக்குறைய 10 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள், இனியும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தவர் தொகை இது. வராத மாணவர் தொகை பற்றி பேசவேண்டும் என்பதில்லை.
இக்காலத்தில்தாம், ஏறக்குறைய 2.5 இலட்சம் சிறார்கள் கல்விச் சூழலிலிருந்து விலகக்கூடும் என்று எச்சரிக்கிறது ஒரு புள்ளிவிபரம். கல்விப்புல சூழலைக் கொண்டு விளிம்பு நிலை மாணவர்களை கீழ்மட்டத் தொழில்களுக்கு திருப்பக் கிடைத்த, திரும்பக் கிடைத்த அரிய வாய்ப்பாக இந்த கொரோனா காலத்தை மேட்டுக்குடி அதிகாரவர்க்க சாதிய, மதவாத அரசு நினைக்கிறது.
கல்லூரி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தவணைத் தேர்வை எழுத வேண்டியதில்லை என்று முதல்வர் அறிவித்துக் கொண்டுள்ளார் இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொரோனா நெருக்கடியில் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கிறது. ‘அரியரை நீக்கிய அரசனே!’ என்று மாணவர்கள் பெயரில் நெகிழிப் பதாகைகள் முளைத்துக் கொண்டுள்ளன. முளைக்கும். ஆனால் கல்விச்சூழல் அப்படியானதாக இருக்கவில்லை. தொற்று மற்றும் அதற்கிணையான அரசியலின் தீவிரத் தாக்கம் கல்விச்சூழலையும் ஒரு பிணியாக பீடித்திருக்கிறது என்பதைத்தான் கல்விப்புலத்தின் நோய்மை சொல்லிக் கொண்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை என்ற புதியக் காவிக் கொள்கையை புதிய கல்விப் புரட்சி என்கிறார் பிரதமர். கொரோனா கால கோமாவிலிருக்கும் மாநிலங்களின் கல்விக்குள், நீண்டத் தடைக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக்கிற்குள் நுழையும் குடிமகன் போல அவசர அவசரமாகக் கொண்டு வந்து திணித்துக் கொண்டுள்ளது. மூன்றாவது மொழி என்ற கடந்த காலப் பல்லவியை இந்த முறையும் பாடத் திட்டத்தில் ஓத முயற்சிக்கிறது அது. தமிழகத்திலும், வட மாநிலங்கள் சிலவற்றிலும் புதிதாக எழுந்திருக்கும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க வேண்டும் என்பதற்கான எதிர்ப்புக் கொரோன தொற்று விழிப்புணர்வுக்கு மேலான விழிப்புணர்வை கொண்டிருக்கிறது. அதேவேளை, இந்தி கற்கும் ஆர்வத்தை தமிழக அரசு தடுப்பதாக நடுவணரசும், தமிழக பாசகவும் கருதுகிறது. இப்படிக் கருதிய காங்கிரசு அரசு தமிழகத்தில் பிறெகெப்போதும் இந்தி பற்றி பேசக் கசந்ததை அவர்கள் அறிய வேண்டும். இந்திக் கற்பதைத் தடுப்பது ஒரு நவீனத் தீண்டாமை என்கிறார் தமிழக பாசக தலைவர். மொழித் ‘திணிப்பை’ அவர் ‘ஏற்பு’ என்று கருதும் போதுதான் ‘தடுப்பு’ என்ற வார்த்தையை, தடுக்கிறார்கள் என்ற வாதத்தை அவர் வைக்க வேண்டியிருப்பதை அவரே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழை நீசமொழி என்றார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பிறப்பு மொழியாகக் கொண்டவர்கள் பொறுத்துக் கொண்ட இழிவு அது.
மொழித் தீண்டாமை குறித்துப் பேசும் அதே நேரத்தில், மொழி பேசுவோர் தீண்டாமையிலிருப்பது குறித்தும் பேசுவது நலம். பேச வேண்டும். தேசமற்ற நிலமற்ற ஆட்புலமற்ற மொழியை உயர்ந்தது என்றும் கடவுள் மொழி என்றும் சொல்பவர்களின் மொழி குறித்தத் தீண்டாமை அரசியல் பேசுவது மொழி அரசியல் மட்டுமல்ல அது அவர்களது வழமையான அரசியல் மொழியும் கூட. இத்தனைக்கும் நடுவேதான் கொரோனா தொற்று அலையெனப் பரவிக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் நடுவேதான் வாழப்பழகுதல் வேண்டும். வாழப்பழகுதல் என்றால் வாழ சகித்தல் ஆகும் போல.
கொரோனா இருக்கிறது என்றால் இருக்கிறது. இல்லையென்றால் இல்லை. முகவசம் போல, கிருமிநாசினிகளில் கைகழுவிவிடுவது போல அல்லது தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களில் சிகிச்சைப் பெற்றுத் திரும்புவது போல அல்லது நோய்தொற்றின் இறுதி கட்டத்திலிருக்கும் பொருளாதாரத்தை கடவுள் வந்து காப்பற்றுவார் என்று சொல்வதைப் போல நம்பித்தான் ஆக வேண்டும் அரசுகள் சொல்வதை. அப்படி நம்பாதவர்கள் பாரம்பரியமான தலையாட்டல்களுக்கும், மரபான தலையசைப்பிற்கும் திரும்பியாக வேண்டியிருக்கிறது. எனவேதான் பாரம்பரிய தொழிலுக்கும், பாரம்பரியமான தலையசைப்பிற்குமாக தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை ஒரு ஏற்பாடாகக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார் பிரதமர்.
பாரம்பரியமானத் தொழில், பாரம்பரியமான சாதி, பாரம்பரிய மதம், பாரம்பரிய வாலாட்டல், விசுவாசம், பாரம்பரிய பொம்மை, பாரம்பரிய அரசுகளுக்கு ஆதரவானப் பாரம்பரியமான அடிமைத் தலையாட்டல் நிலையான பாரம்பரிய மத அரசுக்கு, உடனடி மற்றும் நீண்டகாலத் தேவையாக இருக்கிறது.