கூடங்குளம் : பாதை மறந்த பயணம்
கூடங்குளத்தில் நிறுவப்படவிருக்கும் அணுமின் உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதி மக்களும்,சுற்றுவட்டாரப்பகுதி மீனவர்களும்,பொதுமக்களும் நடத்துகின்ற போராட்டங்கள் மிகவும் தீவிரத்தை அடைந்துள்ளன.இந்த உலகத்தில் இயந்திரங்களே வேண்டாம் என்ற மகாத்மா காந்தியடிகளின் அகிம்சா வழியில்,சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டுள்ள பொதுமக்கள் கூடங்குளம் அணு உலைகளின் உட்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை நிறுத்தக்கோருகிறார்கள்.மாநிலங்களின் உரிமையை நிலைநிறுத்தவும் அவர்கள் போராடுகிறார்கள். கடற்கோளால் பழங்குமரி ஏப்பம் விடப்பட்டதைப்போல,அணுவினால் தற்காலக் குமரியும் சிதைக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையினால் போராட்டம் தொடர்கிறது.
அணு உலைகள் அமைப்பது என்பது நீலகிரிக் காடுகளுக்கு நடுவே சாலை அமைப்பது போன்றதல்ல.மலைகளை வெட்டி,குடைந்து,மேடாக்கி,காடுகளை அழித்து சாலைகளை அமைக்கும்போது இயற்கைச் சூழல் பாதிக்கப்படுவது என்னவோ உண்மைதான்.ஆனால் மனிதன் நினைத்தால் அழிக்கப்பட்ட காட்டைப்போன்று பல மடங்கு காடுகளை உருவாக்கிட முடியும்.இப்போது அணு உலைகளுக்கு வருவோம்.மாசற்ற,தூய்மையான மின்சாரம் தயாரிக்க அணு மின் உலைகள் உதவுகிறது என்பதுதான் அணுமின் ஆதரவாளர்களின் வாதம்.கூடங்குளம் மின் உலைகள் கடல் மட்டத்தைவிட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது,எனவே சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை.அப்படியே தாக்கினாலும் உலைகள் சேதமடையாவண்ணம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதும் அவர்களது வாதம்.சரி.நல்லது.அமெரிக்காவின் மூன்றுமைல் தீவு அணு மின் விபத்தும்,செர்னோபிள் அணு உலை விபத்தும் நிலநடுக்கத்தாலோ,சுனாமியாலோ ஏற்பட்டதல்ல.மனிதத்தவறுகளாலும்,இயந்திரக்கோளாறுகளாலும்தான் ஏற்பட்டன.எதிர்காலத்தில் இத்தகைய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என மேலை நாட்டு அணு உலை உற்பத்தியாளர்கள் உறுதி அளிப்பார்களா?நிச்சயம் அளிப்பார்கள்.வியாபாரம் வேண்டுமல்லவா?விபத்து ஏதேனும் நடந்தால் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவன அதிபர் செய்தது போல சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.அவர்களோடு சேர்ந்து இங்குள்ள பலரும் தரையில் விழக்கூடும்.
போராடும் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய தோழர்கள் சிலர் போராட்டத்தை கேலி பேசுகிறார்கள்,கொச்சைப்படுத்துகிறார்கள்.இந்தியாவுக்கும்,முந்தைய சோவியத் யூனியனுக்கும் இடையேயான தேனிலவில் உருவான கூடங்குளம் அணு உலைகளை எதிர்ப்பதா என்று அவர்கள் கோபப்படக்கூடும்.இயற்கையை,தொழில்நுட்பத்தை மனிதனின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றுதான் கம்யூனிசத் தத்துவங்கள் கூறும்.அணு மின் சக்திக்கு ஆதரவாக ஏராளமான தத்துவங்களை அவர்கள் தரக்கூடும்.ஆனால் அணு மின் சக்திக்கு எதிரான வலுவான வாதங்களை கம்யூனிச தத்துவவாதிகளின் எழுத்துக்களைக்கொண்டு நாமும் முன் வைக்கலாம்.
பீட்டர்(Peter,the Lombard)தன்னுடைய வாக்கியங்கள் என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்:’கடவுளுக்காக மனிதன் படைக்கப்பட்டதைப்போல-அதாவது அவரை வணங்குவதற்காகப் படைக்கப்பட்டிருப்பதைப் போல-பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது-அதாவது அவனுக்கு சேவை செய்வதற்காக.இதனால்தான் மனிதன் சேவிப்பதற்காகவும்,சேவை செய்யப்படுவதற்காகவும் பிரபஞ்சத்தின் நடுபிராந்தியத்தில் வைக்கப்பட்டிருக்கிறான்’.ஆனால் பிரபஞ்சத்தின் இயற்கை விதிகள் மிக முக்கியமானவை.அதன்படிதான் மனிதன் நடந்துகொண்டாகவேண்டும்.”இயற்கையின் மகத்தான விதிகளுக்கு வெளியே மனிதனின் திட்டங்கள் பேராபத்துக்களாக மட்டும்தான் இருக்கும்”என்று பியர் ட்ருமோ கூறியதை மார்க்சும்,லெனினும் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்ற கட்டுரையில் எங்கெல்சு பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஒரு மிருகம் தனது சுற்றுச்சார்பை(அதாவது இயற்கையை)சும்மா பயன்படுத்த மட்டுமே செய்கிறது.தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில் மாற்றங்களை உண்டாக்குகிறது.மனிதன் தனது மாற்றங்களால் தனது குறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான்.அதற்கு எஜமானனாகிறான்.இருந்தபோதிலும் இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ளவேண்டியதில்லை.ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது.மெசபடோமியா,கிரீசு,ஆசியா மைனர் இன்னும் இதர இடங்களிலும் விளைநிலங்களைப் பெறுவதற்காக காடுகளை அழித்த மக்கள் அத்தோடு கூடவே நீர்த்தேக்கங்களையும்,தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும் ஒழித்ததினால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்ற நிலைக்கு அடிகோலியதாகக் கனவும்கூடக் காணவில்லை.ஆல்ப்சு மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வடபுறச்சரிவுகளில் அவ்வளவு பரிவுடன் பேணிக்காக்கப்பட்ட பைன் மரக்காடுகளைத் தென்புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டிப்பயன்படுத்திவிட்டபொழுது,அவ்விதம் செய்ததின்மூலம் அப்பிரதேசத்துப் பால்பண்ணைத்தொழிலின் அடி வேர்களையே வெட்டிவிட்டதின் சூசகத்தையும் கூடக்காணவில்லை.அதன்மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைச்சுனைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்துவிட்டதைப் பற்றியோ,மழைக்காலங்களில் கூடுதலான வெள்ளப்பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்கு வகைசெய்யப்பட்டது என்பதைப்பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைப்பிடிப்பதில் இதர எல்லாப் பிராணிகளைக்காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன்மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதை இயற்கை காலம் காலமாக நமக்கு நினைவூட்டுகிறது”.
எங்கெல்சின் இந்த எச்சரிக்கையை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.வளர்ச்சி வேண்டும்,மின்சாரம் வேண்டும் என்ற வெறியில் அணுப்பிளப்பு மற்றும் கதிர்வீச்சு போன்ற விஞ்ஞான முன்னேற்றங்களை மின்சாரம் தயாரிக்க,அணுகுண்டு தயாரிக்க மனிதன் எத்தனித்து அணு உலைகளை நிறுவி,இயற்கைக்கு மாறாகச் செயல்பட்டு,இயற்கையிடம் சூடு வாங்கத்தயாராகிவிட்டான்.இந்த முயற்சியில் அணுவிஞ்ஞானிகளை விட அரசியல்வாதிகளும்,ஆதிக்கவாதிகளும்,ராணுவ வல்லுனர்களும் மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.இவர்களுக்கு அணுகுண்டுகளும்,அணு எரிபொருட்களும் வேண்டும்.இந்தியா வல்லரசாகக் கனவு கண்டுகொண்டிருக்கும் அப்பாவி விஞ்ஞானிகளும் இதற்கு ஒத்துழைக்கின்றனர்.எதிர்காலத்தில் கூடங்குளம் ஒரு மூன்று மைல் தீவாகவோ,செர்னோபிள்ளாகவோ மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அணுஇயற்பியல் மிக முக்கியமான ஒரு விஞ்ஞானப்பிரிவு.அதன்மூலம் மருத்துவத்துறைக்குத் தேவையான பலவித ஐசோடோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டுவருகிறது.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் DDT பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கும் ‘பசுமைப்புரட்சி’க்கு வித்திடப்பட்டது.அதன் கண்டுபிடிப்பாளருக்கு நோபல் பரிசு கூட வழங்கப்பட்டது.ஆனால் அடுத்தப் பத்தாண்டுகளில் அதன் தீமை உணரப்பட்டது.தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் அது தடை செய்யப்பட்டுவிட்டது.ஒரு குறிப்பிட்ட காலத்தின் கண்டுபிடிப்பு என்பதற்காக அதன் தீமையையும் மறந்து எல்லாக் காலத்திற்கும் அதைக் கொண்டாடிக்கொண்டிருக்கமுடியுமா?அதுபோலத்தான் அணுவிஞ்ஞானமும்.அணுப்பிளப்பு கண்டுபிடிக்கப்பட்டது.அதன் தீய பலனை ஹீரோஷிமாவிலும்,நாகசாகியிலும் பார்த்தோம்.மனிதன் உடனே அதை விலக்கியிருக்கவேண்டும்.அதைச்செய்ய அவன் தவறியதால் உலகம் முழுவதும் கதிரியக்கச் சாம்பலாகும் ஆபத்து இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
சோவியத் யூனியனின் புகழ்மிக்க தத்துவஞானி இலியாநோவிக் தன்னுடைய ‘சமூகமும்,இயற்கையும்’ என்ற நூலில் இப்படி எழுதுகிறார்:’திட்டவட்டமான,யதார்த்த நிலைமைகளினால் படைக்கப்பட்ட மனிதன் தொழில்நுட்பவளர்ச்சிப் போக்கில் அவற்றைத் தாங்கிக்கொள்ளக்கூடிய எல்லைகளுக்கு அப்பால் படிப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறான்.மனித வாழிடத்தின் நிலையான பண்புகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றம் அடிப்படையானது,ஆபத்தானது.ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப எல்லைக்குள்,திட்டவட்ட அளவுள்ள கதிரியக்கத்துக்குள்,குறிப்பிட்ட தீவிரமுடைய ஒலி அலைகளுக்குள் மட்டுமே இந்த மனித வாழிடம் உயிரோடு நீடிக்கமுடியும்.காற்று மண்டலம்,நீர் மண்டலம்,தாவர மண்டலம்,ஒளிக்கதிர் மண்டலம்,வெப்ப மண்டலம்,ஒலி மண்டலம் ஆகிய கூறுகள் அடங்கிய இந்த உயிர் மண்டலத்தின் நிலைமைகளில் ஏற்படுகின்ற மாற்றம் மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குத் தீவிரமடையக்கூடாது.தொழில்நுட்பத்தை உயிர்மண்டலத்துக்கு ஒத்ததாக்க வேண்டும்.தொழில்நுட்பம் உயிர்மண்டலத்துடனான உறவை சரியான,பொருத்தமான வழியில் அமைத்துக்கொள்ளும்போது,மனிதனின் நடவடிக்கைக்குச் சில அறிவுப்பூர்வமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் இயற்கைக்கு உரிய நிலையைக் கொடுத்துப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும்’.
விரும்பும் லட்சியத்தை திடீரென்று அடைந்துவிடுவதற்கான எந்த வழியையும் இயற்கை அளிக்கவில்லை என காந்தியும் தெரிவிக்கிறார்.அடுத்தப் பத்தாண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சி இத்தனை சதவிகிதம் இருக்கவேண்டுமானால் பல்லாயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் அணுமின் உலைகளில் உற்பத்தி செய்யப்படவேண்டும் என வலுவான பிரச்சாரம் செய்யப்படுகிறது.ஒன்றை நாம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.1947-லிருந்து இன்று வரை நாம் உற்பத்தி செய்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு அம்பானிகளும்,டாட்டாவும் இன்னும் பல தொழில் குழுமங்களும் உலகின் முதல் பத்து,இருபது,ஐம்பது இடங்களைத் தொட்டுவிட்டன.ஆனால் ஒரு நாளைக்கு 25 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை கூட சம்பாதிக்க வழி தெரியாத,திக்கற்ற,அட்டப்பழசு ஏழைகள் மொத்தம் 40 கோடிக்கும் மேல் இருப்பதாக மத்திய அரசின் திட்டத்துறை சொல்கிறது.அப்படியானால் புதிது புதிதாகத் தொடங்கப்படும் அணுமின்நிலையங்கள் இந்தப் பரம ஏழைகளின் எண்ணிக்கையை 80 கோடியாக்கிவிடுமோ?இந்த வளர்ச்சியின் அலையில் இன்னும் பல பில்லியனர்கள் மிதப்பார்களோ?
வளர்ச்சி என்றப் போர்வையில் நமது பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும் நாம் அழித்துக்கொண்டுவருகிறோம்.வளர்ச்சி நம் கிராமியக்கலாச்சாரத்தை சிதைத்துவிட்டது.வளர்ச்சி என்பது பல பத்து ஆண்டுகளாக செழித்து வளர்ந்த மரங்களை வேரோடு அழித்து அதன் மேல் சாலை அமைப்பதாக மாறிவிட்டது,ஊரின் ஏரி குளங்களின் மேல் சுற்றுச்சாலைகளை அமைப்பதாக குறுகிப் போய்விட்டது,சுற்றுச்சாலைக்குள் உள்ள செழிப்பான நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது எனத் திரிந்து போய் விட்டது.மாசேதுங்கைப் போலவே ‘வளர்ச்சியும் கலாச்சாரமும்’ ஒன்றையொன்று அழித்துக்கொண்டுவிடும் இயல்புடையன என்பதை காந்தியும் கண்டார்.வளர்ச்சியின் வெற்றி கலாச்சார அடையாள அழிவில்தான் சாத்தியம்.
வளர்ச்சியும்,விஞ்ஞானத்தொழில்நுட்பமும் மனிதாபிமானம் கொண்டதாக இருக்கவேண்டும்.மத்தியகால ஐரோப்பாவில் மதக் கொடுங்கோன்மை நிலவிய அந்த நாட்களில் விஞ்ஞானத்தின் மீது மதம் நடத்திய காட்டுமிராண்டித்தாக்குதல்களை மீள்பார்வை செய்வோமானால் இரத்த ஒட்டத்தைக் கண்டுபிடிக்கும் தருவாயில் இருந்த செர்வேட் என்பவரை எரிக்கம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்கச்செய்த கால்வினுக்கும்,இன்று அதே அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுரத்தனத்தை உள்வாங்கிக்கொண்டு அணு உலைகளை நிறுவி இந்த உலகத்தையே சுட்டுப்பொசுக்க துடித்துக்கொண்டிருக்கும் அணுகுண்டு-அணுமின் ஆதரவு ஆதிக்கவாதிகளுக்கும் இடையே என்ன வித்தியாசத்தை நாம் காணமுடியும்?
வளர்ச்சி பற்றிய கருதுகோள்களை நமது மூளையில் செலுத்துவதற்கு முன்னால் காந்தி மொழிந்த ஒரு பொன்மொழியை நினைவு கொள்வது மிகுந்த உசிதமாக இருக்கும்.அது இதுதான்:’ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் போதுமானது உள்ளது.ஒவ்வொரு மனிதனின் பேராசைக்கும் போதுமானது இல்லை’.இதனைச் செயலுக்குக் கொண்டுவர வளர்ச்சி 9 சதவிகிதம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.பூஜ்ஜிய வளர்ச்சியே போதும்.அதற்கு அணுமின்சாரம் தேவைப்படாது.அதன் விளைவாக அணு உலைகள் இல்லை.அணுகுண்டுகள் இல்லை.மக்கள் அமைதியாக வாழலாம்.ஆனால் ஆதிக்கவாதிகளுக்கு வளர்ச்சி வேண்டும்.
எதுவுமே செய்யாத விவசாய முறையை தனது விவசாயமாக அறிவிக்கும் ஜப்பானிய விவசாய விஞ்ஞானியான ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’கண்ட ஃபுக்காகோ, நவீன நாகரிகத்தின் ‘வளர்ச்சி’ குறித்த துடிப்பை மற்ற அதன் இயல்புகளோடு ஒப்பிட்டு சென்புத்த மத அடிப்படையில் அணுகி பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றே தேவையில்லை என்பதை நிறுவுகிறார்.நீங்கள் எதுவுமே செய்யாவிட்டால் உலகம் எப்படி இயங்கும்?வளர்ச்சி என்கிற ஒன்றில்லையென்றால் உலகம் எப்படி இருக்கும்?என்னும் கேள்விகளுக்கு அவர் கீழ்கண்டவாறு பதிலளிக்கிறார்:
“நீங்கள் ஏன் வளர்ச்சி அடையவேண்டும்?பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்ந்தால் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகப் போகிறதா? 0 சதவிகித முன்னேற்றத்தால் என்ன கெடுதல்?அதுவும் நிலையான தன்மை கொண்ட பொருளாதாரம்தானே?எளிமையாகவும்,கவலையே இல்லாமலும் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டும் வாழ்வதற்கு வேறு ஏதும் ஒப்பாகுமா?
வளர்ச்சியே வேண்டாம் என்றால் அப்படிச்சொல்பவர்களை புத்தி பேதலித்தவர்கள் எனப் பொருளாதார அறிஞர்களும்,அரசியல்வாதிகளும் தூற்றலாம்.ஆனால் மிக எளிமையாக சிந்தித்துப் பாருங்களேன்! நம் நாட்டின் 9 சதவீத வளர்ச்சி நகரங்களை வீக்கமடையச் செய்திருக்கிறது.அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பெருகியிருப்பதைப் போல பல நூறு மடங்கு நகரத்தின் குடிசைவாசிகளும், குடிசைகளும் பெருகிவிட்டன.9 சதவிகித வளர்ச்சியினால் அம்பானிகளின் சொத்துமதிப்பு 900 மடங்கு உயர்ந்துவிட்டது.கருப்புப் பணத்தின் அளவும் பல லட்சம் கோடி டாலர்களாக வளர்ந்துவிட்டது.40 கோடி ஏழை மக்களையும் அம்பானிகளாக,டாட்டாக்களாக மாற்றும் வளர்ச்சியை நாம் கேட்கவில்லை.இந்த 40 கோடி மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும்.அவர்கள் மூன்று வேளை உண்ண உணவு வேண்டும்.வறுமைக் கணக்கீட்டு முறைகளையும்,வளர்ச்சி முறைகளையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.அது
அவர்களுக்கு வேண்டாம்.யாரோ சிலரின் தொழில் தேவைக்காக,செல்வ வளர்ச்சிக்காக எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் அணு உலைகளும்,அணுமின்சாரமும் அது தரப்போகும் வளர்ச்சியும் நமக்கு வேண்டாம்.
கூடங்குளம் அணுமின் உலைகள் நிறுவப்படும்போதே அதன் ஆரம்பக்கட்டப் பணிகளைத் தடுத்து நிறுத்தாத மக்கள்,அப்போது போராடாமல்,உலையின் கட்டுமானம் நிறைவுற்று மின் உற்பத்தியும் தொடங்கயிருக்கும் இந்தத்தருணத்தில்,தற்போதையப் போராட்டம் தேவையற்றது,சிலரால் மட்டுமே நடத்தப்படுவது என்ற சில தோழர்களின் கூற்றுக்குப் பதிலளிப்பது மிக மிக அவசியம்.கூடங்குளம் அணுமின் ஒப்பந்தம் உருப்பெற்ற நாள் முதலே மக்களின் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.இன்றையப் போராட்டங்களைப் போல அளவில் பெரிதாக இல்லாமல் அவை இருந்திருக்கலாம்.அணுமின் உலைகளால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருந்த காலக்கட்டம் அது.1988-ல் சோவியத்-இந்திய நட்புறவின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும்,2005-ல் தான் அங்கு அணு மின் உலைகளை நிறுவ இந்திய அணுமின் கழகம் அனுமதி பெற்றது.இப்போது அணுமின் உலைகள் அமையப் பெற்றுள்ள இடத்தை 2004-ம் ஆண்டின் சுனாமி மிகக் கடுமையாகத் தாக்கியது.இத்திட்டம் பற்றி மக்களின் கருத்தை அறிய கருத்துக்கேட்புக் கூட்டம் ஒன்றை அரசு பிப்ரவரி-2007-ல் நடத்தியது.கன்னியாக்குமரி,தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறிய திருநெல்வேலி நகருக்கு வெளியே நடத்தப்பட்ட இந்தக்கூட்டம் பாதியிலேயே முடிந்தது.பொதுமக்களில் பெரும்பாலோர் இக்கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் இந்தக்கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டது.நீண்டதூரப் பயணம் செய்து தங்கள் எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவிக்க வந்த மக்கள் ஏமாந்துப் போயினர்.அந்தக் கூட்டத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்களை தகவலறியும் சட்டத்தின்படி பெறப்பட்டு பார்த்தபோது கூடங்குளம் திட்டத்திற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம்!ஒரு அணுமின் உலை நிறுவப்படுவதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளையும்,நெறிமுறைகளையும் திட்ட அதிகாரிகள் திட்டமிட்டு மறந்தனர்.அணு உலை அமைய உள்ள 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் எந்தக் குடியிருப்பும் இருக்கக்கூடாது.ஆனால் இடிந்தக்கரை உட்பட 3 ஊர்கள் கூடங்குளத்தைச் சுற்றியுள்ளன.அணு உலையைச் சுற்றி 16 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மொத்த மக்கள்தொகை 10000-க்கும் மேல் போகக்கூடாது.ஆனால் தற்போதைய மக்கள்தொகையோ 70000.உலையிலிருந்து கடலில் விடப்படவுள்ள கொதிநீர் தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 70 சதவிகிதத்தைத் தருகிற இந்த மூன்று மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காது என்பதற்கான உத்திரவாதமும் அணுசக்தித்துறையிடமிருந்து இதுவரை வரவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க தங்கள் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றப்படுவோம் என்ற பீதியில் 70000 மக்களும்,தங்கள் வாழ்வாதாரம் போய்விடுமே என்று 3 மாவட்டமீனவக் குடும்பங்களும்,புகுஷிமா அணு உலை வெடிப்பின் பயங்கரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்ணுற்ற தமிழக மக்களும் வீதிக்கு வந்து போராடாமல் இருந்தால்தான் தோழர்களுக்கு எரிச்சல் வரவேண்டும்.
சோவியத் தத்துவஞானி இலியாநோவிக் கூறுகிறார்:’சோவியத் சோசலிசம் சோவியத் மக்களின் இன்றையத் தலைமுறை,எதிர்காலத்தலைமுறையினருடைய உடல் நலத்திற்கு குணப்படுத்த முடியாதத் தீங்கை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவிர்த்துவிடக்கூடியதே.சோசலிசத்தின் கீழ் இயற்கை உபயோக முறையியலின்படி தொழில்நுட்பத்துக்கும்,உயிர் மண்டலத்துக்குமுள்ள உறவை மிகச் சரியான வகையில் அமைத்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த கட்டளை விதி மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கையும்,அவனுடைய உடலியல்,உளவியல் அமைப்பின் சூழ்நிலையுமே என்பதில் சந்தேகமில்லை!’.
இலியாநோவிக்கின் சிந்தனைகளையும்,எழுத்துக்களையும் அன்றைய சோவியத் அரசு ஏற்க மறுத்தது.இன்று சில தோழர்களும் அதை ஏற்க,உணர மறுக்கிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் சோகம்.இலியாநோவிக்கை சோசலிசநாடுகள் பின்பற்றுகின்றனவோ இல்லையோ,ஜெர்மனி பின்பற்றத்தொடங்கிவிட்டது. 2033-க்குள்ளாக தனது நாட்டின் அனைத்து அணுமின் உலைகளையும் மூடிவிடப்போவதாக அது அறிவித்துள்ளது.
‘தசையும்,இரத்தமும்,மூளையும் உடைய நாங்கள் இயற்கைக்குச் சொந்தமானவர்கள்,அதன் மத்தியில் வாழ்பவர்கள்’ என்ற எங்கெல்சின் வார்த்தைகளைப் பிரகடனம் செய்ய நம் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.அணு உலைகளுக்கு மத்தியில்தான் வாழவேண்டும் என்றக் கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்த அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
(அம்ருதா, நவம்பர், 2011 இதழில் வெளிவந்தக் கட்டுரை)