கூடங்குளம் : சத்தியாகிரகம் தோற்றதா?
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது.முதல் அணு உலை சனிக்கிழமை(13.07.13) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இனிமேல் அவ்வுலையிலிருந்து மின்சாரம் மட்டுமல்ல, கதிரியக்கம் கலந்த கழிவுத்தண்ணீரும்,கடும் சத்தமும் இன்ன பிறவும் அவ்வப்போது வெளிவரலாம்.பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கியுள்ள இரு பெரும் பூதங்களும் உயிர் பெற்றுவிட்டன.உலையை மையமாகக் கொண்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டுமல்ல,தென்னிந்தியா மற்றும் இலங்கை முழுவதும் அச்ச ரேகைகள் ஓடத்தொடங்கிவிட்டன. கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நெருங்கவிருக்கும் சாத்வீகப் போராட்டம் சுதந்திர இந்தியா கண்ட வித்தியாசமான,மிக நீண்ட போராட்டம்.இடிந்தகரை மக்களுக்கும்,சுற்றுப்புற கிராம மக்களுக்கும் தார்மீக பலத்தை அளித்த, மிகப்பெரும் இந்திய அரசையே எதிர்க்கும் சக்தியைக் கொடுத்த இப்போராட்டம் உண்மையிலேயே அதிசயமானதுதான்.இந்நெடியப் போராட்டத்திற்கு அவர்கள் கொடுத்த,கொடுத்துக்கொண்டிருக்கிற விலையும் மிக அதிகம்.சுதந்திரத்திற்கு முந்தைய காந்தியின் சாத்வீகப் போராட்டத்தை இத்தருணத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
மௌண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியப்பிரிவினை 100 சதவிகித உண்மையாகிவிட்ட சூழலில்,சுதந்திரத்திற்கான தேதியும் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,பஞ்சாபும்,வங்காளமும் கூறுபோடப்படுவது நிதர்சனமாகிவிட்டபோது,பல்லாயிரக்கணக்கான இந்துக்களும்,சீக்கியர்களும்,இஸ்லாமியர்களும் பஞ்சாபின் மதக்கலவரங்களில் கொல்லப்பட்டுவிட்ட நிலையில்,கல்கத்தாவிலும்,வங்காளம் முழுமையிலும் இப்படுகொலைகள் நிகழாமல் இருக்க கல்கத்தாவிற்குச் செல்ல காந்தி முடிவெடுக்கிறார்.கல்கத்தாவில் காந்தி தங்கியிருந்த இடத்தை வன்முறைக்கும்பல் கல்வீசித் தாக்குகிறது.அக்கும்பல் காந்தி தங்கியிருக்கும் வீட்டிற்குள்ளும் புகுந்து காந்தியைத் தாக்க முயற்சிக்க,காந்தி நொடிப்பொழுதில் தப்பிப் பிழைக்கிறார். அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெறும் காந்தி ,ஒரு நாள் ஒரு வன்முறைக் கும்பல் ஒன்று அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று போட்டதைக் கேள்வியுற்று சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்குகிறார்.அவரது உண்ணாவிரதத்தின் சக்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை காந்தியிடமே அழைத்துவந்து மன்னிப்பு கேட்கச் செய்தது.பஞ்சாபில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்க, காந்தி உண்ணாவிரதம் இருந்த கல்கத்தாவில் இந்துக்களும்,இஸ்லாமியர்களும் தெருக்களில் கைகோர்த்து ஊர்வலம் சென்றனர். ” 55000 படைவீரர்கள் பஞ்சாபில் சாதிக்கமுடியாததை காந்தி என்ற என்னுடைய ஒற்றை தனிமனிதப்படை வங்காளத்தைக் காத்தது” என்று மௌண்ட்பேட்டன் எழுதினார்.காந்தியின் உண்ணாவிரதத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மதித்தது.அவருடைய உண்ணாவிரதத்துக்கு அன்றைய மதக்கலவரக்காரர்கள் கூடப் பணிந்தார்கள்.ஆனால் சுதந்திர இந்தியாவில் உண்ணாவிரத அறப்போராட்டங்கள் கேலிக்குரியவையாக மாறிப்போய்விட்டன.வடகிழக்கு மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை சட்டங்களை விலக்கிக் கொள்ள வற்புறுத்தி ஐரோம் சர்மிளா தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். ஆனால் பதிலுக்கு அவருக்குக் கிடைத்ததோ அரசின் உதாசீனம் மட்டுமே.
பொதுவாழ்க்கையில் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் உண்ணாவிரதம் அஹிம்சையின் ஆயுதக்கிடங்கிற்கு மிக உறுதியான ஆயதத்தை அளிப்பதாக காந்தி கூறினார்.சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே உண்ணாவிரதத்தை மேற்கொள்ளமுடியும் என்று காந்தி நம்பினார்.”உண்ணாவிரதம் இருப்பவர் எதிராளியின் அன்பையும்,அக்கறையையும் பெறமுடியாதபோது அவருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பயனற்றது”.புஷன்வால்டில்(Buchenwald) அடைபட்டிருக்கும் யூதர் ஒருவர் அவரை சிறை வைத்திருக்கும் நாஜிக்களுக்கு எதிராகவோ,சைபீரியாவின் சிறையிலிருக்கும் ஒருவர் ஸ்டாலின் படையினருக்கு எதிராகவோ உண்ணாவிரதம் இருப்பது பைத்தியக்காரத்தனம்;அவரது கோட்பாடுகளுக்கு எதிரானது.பிரிட்டிஷாருக்குப் பதிலாக இந்தியாவை ஹிட்லரோ,ஸ்டாலினோ ஆண்டிருந்தால் அவரின் உண்ணாவிரதக்கருவி பயனற்றுப்போயிருக்கும் என்பதை காந்தி ஒப்புக்கொண்டார்.”இந்தக் கருவியை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அரிதாகவே பயன்படுத்தவேண்டும்.அடிக்கடி பயன்படுத்தினால் இது கேலிக்குரிய பொருளாகிவிடும்” என்றார் காந்தி. அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் திரு.உதயகுமார் இந்திய அரசின் ,காங்கிரஸ்காரர்களின்,அணு உலை விஞ்ஞானிகளின் அன்பையோ,அக்கறையையோ பெற்றவர் அல்ல.மாறாக அந்நிய தேசத்தின் கைக்கூலி என அவர்களால் போற்றப்படுபவர்.தொலைக்காட்சி விவாதங்களின்போது கூட எவ்வித நாகரிகமும் இல்லாமல் அந்நியர்களின் கைக்கூலி என்று காங்கிரஸ்காரர்களால் பச்சையாகக் குற்றம் சாட்டப்படுபவர்.காந்தியின் விதிகளின்கீழ் காங்கிரஸ் அரசுக்கெதிராக,அணு உலைகளுக்கு எதிராக உதயகுமாரின் உண்ணாவிரதம் என்பது அர்த்தமற்றதுதான்.அர்த்தமற்ற ஒன்றைத்தான் இரண்டு வருடங்களாகச் செய்திருக்கிறார்களோ என்னும் சந்தேகம்கூட வருகிறது.
பிறகு என்னதான் செய்வது?திரு.உதயகுமாரின் சூழலில் அவர் செய்ததுதான் சரி.வேறு எதையும் அவர் செய்திருக்கமுடியாது.வேறு எம்மாதிரியான போராட்டங்களும் மிகக்கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும்.அப்பாவி ஏழைப் பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளித்ததற்காக,அம்மக்களின் உடல்நலமின்மையின் பின்னுள்ள அரசியல் காரணங்களைப் பேசியதற்காக சத்தீஸ்கர் மருத்துவர் பினாயக்சென் எப்படி இரண்டுவருட காலம் சிறைப்பட்டாரோ,அதுபோலவே உதயகுமாரும் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்.தேசத்திற்கெதிராகப் போர்புரிந்தார் என்றக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கும்.ஏனென்றால் “இந்தியா = அணுசக்தி = அணுகுண்டு” என்னும் சூத்திரம் மட்டுமே தங்களையும்,தங்கள் சந்ததிகளையும் அதிகார போதையிலும்,பணபோதையிலும் என்றென்றைக்கும் வைத்திருக்கும் என்பது இந்திய அரசியலின் அதிகார வர்க்கத்திற்கு நன்கு தெரியும்.
சமீபத்தில் ஒருநாள் மாலைப் பொழுதில் நானும்,நண்பனும் இடிந்தகரைக்கு சென்றிருந்தோம்.அன்றைக்கும் உண்ணாவிரதப் பந்தலில் உன்ணாவிரதம் முடிந்து திரவ உணவு எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.எதேச்சாதிகார இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக,அதன் அணுசக்திக் கொள்கைகளுக்கு எதிராக காத்திரமான,மிகநீண்டப் போராட்டத்தை உண்ணாவிரதப் பந்தல் தாங்கிக்கொண்டிருந்தது.எல்லையற்றப் பட்டினியையும்,நீண்ட சொற்பொழிவுகளையும் அது கண்டிருக்கிறது.அணுசக்திக்கு எதிராக அதன் தர்க்கம் அணு உலையையும் புரட்டிப்போட்டுவிடும்.அணுசக்திக்கு எதிரான அதன் அறப்போராட்டங்களுக்கு,நியாயங்களுக்கு தேசம் செவி சாய்த்தது.ஆனால் அதன் ஆட்சியாளர்களும்,அணு அதிகாரவர்க்கத்தினரும், நாட்டின் உயர்ந்த நீதி அமைப்புகளும் உண்மை உணர மறுத்தனர்.கேலி செய்தனர்.ஒன்றும் தெரியாத பயந்தாங்கொள்ளிகள் என்றனர். ஆட்சிக்கு வந்துவிட்டால் பிறகு 5 வருடங்களுக்கு தங்களை யாருமே,எதைப்பற்றியுமே கேள்வி கேட்கமுடியாது என்றனர்.ஆனால் சாதாரண மீனவ மக்கள் சாதாரணமானவர்களும் அல்ல.அவர்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் உதயகுமாரும்,புஷ்பராயனும்,முகிலனும், மைபாவும் சாதாரணமானவர்கள் அல்ல.மக்களின்மீதான அன்புதான் அவர்களை வழி நடத்துகிறது.அவர்களை சந்தித்துப் பேசியபோதும் சரி,மக்களிடம் அவர்கள் பழகுவதைப் பார்க்கும்போதும் சரி அவர்கள் என்றுமே மமதையுடன்,தலைவர்கள் என்னும் செருக்குடன் நடந்துகொண்டது கிடையாது.
இரண்டு வருட காலங்களில் இடிந்தகரை மக்கள் சாமானியர்கள் என்ற நிலையிலிருந்து அணு சக்தி பற்றிய முழு விவரமும் தெரிந்த சாத்வீகப்போராளிகள் என்னும் நிலைக்கு மாறியிருக்கிறார்கள்.இச்சாதனைக்கான முழு பொறுப்பும் போராட்டக்குழுவிற்குத்தான் போய்ச்சேரும்.போராட்டக்குழுவினரது தொடர்ச்சியான முயற்சிகளும்,பிரச்சாரங்களும் “இடிந்தகரை – அணு உலை” என்னும் எல்லைக்கப்பால் ” தமிழகம் – தமிழகம் எதிர்நோக்கும் பிரச்னைகள்” என்னும் பரந்த தளத்திற்கு விரிவடைய வேண்டும். இடிந்தகரை எல்லைக்குள்ளாக தங்களைத் தாங்களே சிறை வைத்துக்கொண்டு கூடங்குளம் அணு உலை பற்றிய பல்வேறு ஊழல் விவகாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணிகளின் ஊடாக,கடலோர மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு நாள் உவரிக்கும் வருகை புரிந்தனர் போராட்டக்குழுவினர்.உண்ணாவிரதப் போராட்ட வடிவம் பற்றியும்,அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் அப்பால் உதயகுமாரின் தலைமைத்துவம் பரந்த தமிழ்நாட்டுக்குத் தேவைப்படப்போவது பற்றியும் அவரிடம் விரிவாய்ப் பேச ஆசை கொண்டிருந்தேன்.ஆனால் அது நடக்கவில்லை.உதயகுமாரின் தலைமைத்துவத்துக்கு இடிந்தகரை தன்னை தகுதியாக்கிக் கொண்டதுபோல் தமிழகமும் தன்னைத்தகுதியாக்கிக் கொள்ளும்போது கட்டாயம் உதயகுமாரின் தலைமை தமிழகத்துக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு அப்போது கிடைத்தது.
வரும் சுதந்திர தினத்தோடு இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்யப்போகும் அணு உலைக்கெதிரான மக்களின் போராட்டங்கள் இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு மிக வலுவான உறுதியை அளித்துள்ளன.போராட்டத்தின் தலைவர் ஒருவர் பிரதமரை நோக்கி கேள்விகள் கேட்க முடிந்துள்ளது.நாடெங்கிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை அதனால் முடுக்கி விட முடிந்துள்ளது.நாட்டின் முக்கிய அறிவு ஜீவிகளும்,அறிஞர் பெருமக்கள் பலரும் இடிந்தகரை வந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்,இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண ஒரு மனிதன் அணு உலை பற்றி கேள்வி எழுப்பலாம் என்ற வெற்றியை இப்போராட்டங்கள் சாதித்துள்ளது. கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை நண்பருக்கு தெரிவித்தேன்.இந்திய ஜனநாயகம் என்பதெல்லாம் ஒரு மாயை என்றான்.எவ்வளவு பெரிய பேருண்மை!.
(தீராநதி,ஆகஸ்ட்,2013)