கமலா ஹாரிஸைக் கொண்டாட நாம் தகுதியானவர்கள்தானா?.
அமெரிக்காவின் உதவி ஜனாதிபதியாக ஆப்ரோ – அமெரிக்க, இந்திய – அமெரிக்க வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஒருவித பெருமை கலந்த மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது பாட்டனாரின் சொந்த ஊரில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருப்பதை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் கமலா ஹாரிஸைக் கொண்டாடுவதற்கு நாம் தகுதி படைத்தவர்கள்தானா? நமது மகிழ்ச்சி உண்மையானதா? அல்லது போலித்தனமும், பாசாங்கும் நிறைந்ததா?
சுதந்திரம் பெருக்கெடுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பான கதையே வேறு. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத, அடிமை முறை ஒழிக்கப்பட்டிருந்தபோதிலும் கருப்பின மக்களின் மீதான கொடும் அடக்குமுறைகளும் நிலவிய காலமாக அக்காலம் இருந்தது. தொடர்ச்சியான சிவில் உரிமைப் போராட்டங்களும், கருப்பின மக்களின் போராட்டங்களும் மட்டுமே இப்போதைய அமெரிக்க நாட்டின் உண்மையான சுதந்திரத்தின் ஊற்றுக்கண்களாகத் திகழ்கின்றன. சமீபத்தில் அங்கு நிறவெறியால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃப்ளோய்டு மரணத்திற்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் பொங்கியெழுந்த கருப்பின, வெள்ளையின மக்களினால் மட்டுமே அங்கு சுதந்திரமும், சகோதரத்துவமும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டுவந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு போராட்ட சமுதாயத்திலிருந்து மட்டுமே கமலா ஹாரிஸ் போன்ற கலப்பின பெண்மணிகள் அமெரிக்க தேசத்தின் உயர்ந்த பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது அந்நாட்டின் சிவில் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் பெருமையானதாக இருக்கமுடியுமே தவிர, அவரது பாட்டனார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதினால் இந்தியாவுக்குப் பெருமை தந்துவிடமுடியாது.
எல்லோருக்குமான வளர்ச்சிக்காவும், அமெரிக்க சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் நிறவெறிக்கு எதிராகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவுமே கமலா ஹாரிஸ் உரத்து குரல் எழுப்பிவந்தார். அதை அமெரிக்க மக்களும் ஏற்றுக்கொண்டுதான் கமலா ஹாரிஸுக்கு இந்நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தியாவும் கமலா ஹாரிசுக்காகப் பெருமைப்படலாம். எப்போது? கமலா ஹாரிஸ் வளர்ந்த அமெரிக்க சூழலை இந்தியாவிலும் ஏற்படுத்தும்போது நாமும் கமலாவுக்காகப் பெருமை கொள்ளலாம்.
கமலா ஹாரிஸின் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக, பலதலைமுறைகளாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் அல்ல. மன்னார்குடி, பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் ஐயர் என்கிற, நேரு காலத்து ஐசிஎஸ் அதிகாரியின் மகளான, கமலா ஹாரிஸின் தாயான சியாமளா 1958 ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவுக்கு படிப்பதற்காகச் செல்கிறார். அங்கு ஜமைக்கா நாட்டு மாணவரைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஆக, வெறும் அடுத்த அறுபது ஆண்டுகளில் அவருடைய மகள் அமெரிக்காவின் உதவி ஜனாதிபதியாக உயர்வு பெறுகிறார். இது எப்படி நடந்தது? இது இந்தியாவில் சாத்தியமா? ஒருவேளை சியாமளா அமெரிக்காவிற்குச் செல்லாமல், இந்தியாவிலேயே ஜமைக்கா நாட்டவரைத் திருமணம் செய்திருந்தாலோ, அல்லது கமலா ஹாரிஸ் யூத இனத்தவரைத் திருமணம் செய்திருந்தாலோ அவர்கள் மீது லவ் ஜிகாத் பாய்ந்திருக்காதா? கௌரவக் கொலைகள் அரங்கேறியிருக்காதா?
கடந்த பல நூறு ஆண்டுகளாக இங்கு வசிக்கும் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்புணர்வு இங்கு மறைந்துவிட்டதா? பல தலைமுறைகளாக இங்கு வசித்துவரும் இஸ்லாமியர்களின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறதே? அமெரிக்காவில் தொடர்ச்சியான சிவில் உரிமைப் போராட்டங்களின் மூலமாக மட்டுமே கருப்பின மக்களின் வாழ்வுரிமைகள் காப்பாற்றப்பட்டு வந்திருக்கும் சூழலில், இந்தியாவில் குடியுரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறதே? அதில் ஈடுபடும் சிவில் உரிமைவாதிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்களே? இஸ்லாமியர்களின் குடியுரிமைக் குறித்து கேள்வி எழுப்புவதின் மூலம், இந்திய சமுதாயத்தில் பதற்றத்தையும், பிளவையும் ஏற்படுத்தும் தலைவர்களைக் கொண்டிருக்கும் நாம் எப்படி கமலா ஹாரிஸின் பாரம்பரியத்தைக் கொண்டாட முடியும்? இங்கிருந்து அமெரிக்கா சென்று உதவி ஜனாதிபதி வரை உயர்வு பெறும் நம் சந்ததிக்காக பெருமைப்படும் நாம், போரினால் ஈழத்திலிருந்து துரத்தப்பட்டு தமிழ்நாட்டு அகதி முகாம்களில், கடந்த நாற்பது ஆண்டுகளாக சகிக்கமுடியாத வாழ்க்கை நடத்தும் ஈழ அகதிகள் குறித்து என்றாவது சற்றேனும் கலங்கி நின்றிருக்கிறோமா?
கமலா ஹாரிஸுக்காகப் பெருமைப்படும் நாம் அவரது உயர்வுக்குப் பின்னால் அச்சமுதாயத்தில் காணக்கிடைக்கும் உயர்வான அறங்களை பார்க்கத் தவறுகிறோம். அதை நாம் எடுத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறோம். அதைச் செரித்துக் கொள்ள அச்சப்படுகிறோம். ஏனென்றால் கோபாலன் ஐயரின் வாரிசுகள் சாதி, மதம் துறந்து எல்லாவற்றையும் சாதித்திருக்கிறார்கள். ஆனால் கோபாலன் ஐயரின் மூலமான சனாதனத்தைப் பிடித்துக் கொண்டு நாம் இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறோம். நம் சமுதாயத்தின் விளிம்பில் நிற்கும் மக்களை நாம் என்றும் விலக்கியே வைத்திருக்கிறோம். கமலா ஹாரிஸைக் கொண்டாட நாம் தகுதியானவர்கள்தானா?.