ஒருகாலத்தில் இங்கு ஒரு மசூதி இருந்தது
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும், அதன் பிறகான கடும் சமூகக் கொந்தளிப்புகளின் போதும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி இந்துக்களும், இஸ்லாமியர்களும் மத வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பக்கங்களில் காகிதங்களாக அச்சடிக்கப்பட்டு உள்ளடங்கிப்போய்விட்டன. தற்காலத்திய நவீன, மதச்சார்பற்ற, பல கலாச்சார, பல பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கியதில் தொன்மைமிக்க சிந்துச்சமவெளி நாகரிகத்திற்கும், மத்தியகால இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும் முக்கியமான பங்குண்டு.
உலகின் வரலாற்றைப் புரட்டும்போது நாம் அறிய வரும் மிக முக்கியமான செய்தி என்ன தெரியுமா? அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்பவே மக்களும், மன்னர்களும் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். மார்க்சின் தத்துவங்கள் ஏன் 15 ஆம் நூற்றாண்டின் காலக்கட்டங்களில் தோன்றவில்லை? என்று கேள்வி கேட்கும் ஒரு நபர் உலக வரலாற்றையும், அதன் இயங்கியலையும் அறியாதவராகவே இருப்பார். ஆயுதவலிமையோடு போர் புரிந்து நாடுகளையும், மக்களையும், செல்வங்களையும் கொள்ளையிட்ட மன்னர்களின் செயல்பாடுகள் குறித்து இன்றைய ஜனநாயக யுகத்தில் வரலாறாக படிக்கலாமே தவிர, ஏன் அவர்கள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, அகிம்சையை கடைபிடிக்கவில்லை? என்று கேட்கமுடியாது.
ராஜராஜசோழனும், குலோத்துங்க சோழனும் தங்கள் தேசத்தில் ஏன் சோசலிசத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்பது எவ்வளவு பரிதாபகரமானதாக இருக்குமோ அதுபோலவே, மத்தியகால இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏன் அதைச் செய்தார்கள், இதைச் செய்யவில்லை என்று கேட்பதும் கூட சகிக்கமுடியாதவையாகவே இருக்கும்.
தந்தை பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே கூறியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அவர் கூறினார்: ” இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து வரும் தலைமுறை, ராமசாமி என்னும் ஒரு பிற்போக்குவாதி இங்கு வாழ்ந்தான் என்று கூறும்”. பெரியாருக்குப் பிறகான அடுத்தடுத்த தலைமுறைகளான நாம் இன்னமும் மேலும் மேலும் பிற்போக்குத்தனத்திலேயே ஊறி, ஊறி வாழ்ந்துவருகிறோமேயல்லாது, பெரியார் சொன்னது போல சொல்லக்கூடிய தலைமுறையை நாம் கண்ணால் காண்போமா என்றுத் தெரியவில்லை.
மத்தியகால இந்தியாவின் சிறந்தச் சின்னமாக விளங்கிய பாபர் மசூதி இன்று இல்லை. ஒருகாலத்தில் இங்கு ஒரு மசூதி இருந்தது என்று இந்தியர்கள் சொல்லிக்கொள்ளக்கூடும். ஆனால் அது இப்போது இங்கு இல்லை. வெறுப்பின் பலிகடாவாக அது வீழ்ந்துபோய்விட்டது. அது மட்டுமா வீழ்ந்தது? கூடவே இந்தியாவின் அடையாளமாகத் திகழும் சகிப்புத்தன்மையும் வீழ்ந்துபோனது. அந்த சகிப்புத்தன்மைதான் பாபரையும், மாலிக்காபூரையும் இந்திய நிலத்திலேயே விட்டுவைத்தது. அந்த சகிப்புத்தன்மைதான் மைசூர்ப்புலியான திப்பு சுல்தானை ஒரு சிறந்த அரசனாகப் பரிமளிக்கச் செய்தது. இல்லையென்றால், சீரங்கப்பட்டணத்து பெருமாள் கோயிலின், ஏதோவொரு கால பூஜையின்போது, கோயில் பணியாளர்கள் மணிஅடிக்கத் தவறும் பட்சத்தில், சற்றுத் தொலைவில் உள்ள அரண்மனையிலிருந்து அவன் ஏன் பதறவேண்டும்? இவைதான் இந்தியச் சமூகத்தைச் சுற்றியிருக்கும் நுண்ணிய வலைப்பின்னல்கள். இந்த வலைப்பின்னல்கள்தான் இந்தியச் சமூகத்தை இதுவரை காத்துவந்திருக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சாட்சியாக இப்போது ராமர் கோயில் கம்பீரமாக எழுந்து நிற்கப்போகிறது. மதவெறியும், இன வெறியும் உலகெங்கும் பல நூற்றுக்கணக்கான சின்னங்களைப் பலியெடுத்திருக்கின்றன. பாபர் மசூதியும், பாமியான் புத்த சிலைகளும், யாழ் நூலகமும் இப்போது கனவுகளாகிப் போய்விட்டன. மத்திய கால இந்தியாவின் அடையாளமாக விளங்கிய பாபர் மசூதியை இடித்துவிட்டு, அவ்விடத்தில் எழும் ராமர் கோயிலை நவீன இந்தியாவின் சின்னமாக, அடையாளமாக எப்படி ஏற்றுக்கொள்வது? நவீன இந்தியாவின் அடித்தளம் என்பது சிந்துச்சமவெளியிலும், இடைக்கால இந்திய வரலாறுகளிலும் ஊன்றியிருக்க, அவ்வேர்களைப் பெயர்த்தெறிந்துவிட்டு நவீன இந்தியாவை எப்படி உருவாக்குவது? அப்படிப்பட்ட இந்தியா யாருக்கானது?
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு தொடுக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களும், பொய்ப்பிரச்சாரங்களும் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. பாபர் மசூதி ஒரு இந்துக் கோயிலை இடித்துதான் பாபரால் கட்டப்பட்டது என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு பிரச்சாரம் என்பதை தொல்பொருள்துறையின் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதியில் அகழ்வு செய்தபோது அங்கே புத்த சமயத்தின் எச்சங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. வரலாற்றைத் தோண்டி, தோண்டிப் பார்க்கவேண்டும் என்ற சங்கப்பரிவாரத்தினர் தங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்வார்களேயானால், ராமர் கோயில் கட்டப்படுவதற்குப் பதிலாக ஒரு புத்த விகாரமே அங்குக் கட்டப்படவேண்டும் என்று ஒப்புக்கொண்டிருப்பார்கள். நமக்கு இப்போது தேவை ராமர் கோயிலோ அல்லது புத்த விகாரமோ அல்ல. மாறாக நமது அரசியல் சாசனம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பாபர் மசூதியை இடித்தவர்களை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்படக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளும் உடனடியாகத் தண்டிக்கப்படவேண்டும். சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நிலைநிறுத்தப்படவேண்டும்.
இங்கு அரசியலும், அதிகாரமும், நம்பிக்கையும் வரலாற்றை தோற்கடித்திருக்கின்றன. ராமன் ஒரு நம்பிக்கை என்பதற்கு மேலாக இங்கு எதுவுமில்லை. ராமன் வரலாற்றின் அங்கமாக இருந்ததற்கான எந்தப் புறச்சான்றுகளும் இங்கு இல்லை. நம்பிக்கையும், அரசியலதிகாரமும் இப்போது ராமர் கோயிலைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. இன்றைய அயோத்தியைத்தான் ராமாயணம் குறிப்பிடுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. வால்மீகி ராமாயணத்தின்படி அயோத்தி மன்னன் ராமன் ‘திரேதாயுகத்தில் பிறந்தான். திரேதாயுகம் என்பது கலியுகத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள காலம். கலியுகம் கி.மு.3102 ஆம் ஆண்டில் ஆரம்பமானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இன்றைய அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் இவ்வளவு பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அகழ்வாய்வுச் சான்றுகள் எதுவும் இல்லை. கி.மு. 8 ஆம் நூற்றாண்டில்தான் இங்கு குடியேற்றங்கள் தொடங்கிற்று என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.
கோசல நாட்டின் நகரங்களாக ஷரவஸ்தியையும், சாகேதத்தையும் மட்டுமே ஆரம்பகால பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றனவே தவிர, அயோத்தி எங்கும் குறிப்பிடப்படவில்லை. அந்த அயோத்தியும் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சரயு நதிக்கரையில் அல்ல. குப்த அரசன் ஒருவன் சாகேதம் என்னும் நகருக்கே அயோத்தி என்று பெயர் சூட்டி, தன் இருப்பிடத்தை அங்கே மாற்றிக்கொண்டு, தன் பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக்கொண்டு ஆட்சி நடத்தலானான். அவன் ஒன்றும் ராம பக்தனல்ல, மாறாக ராமனது சூரியவம்சப் பரம்பரையை தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் முயற்சியே இது. இப்படியாக வரலாறு எங்கெங்கோ நம்மை இழுத்துச் செல்கிறது. வழிவழியாக வந்த புராணங்களும், கதைகளும், திரேதாயுகத்தில் காணாமல் போன அயோத்தியை விக்கிரமாதித்தன் தேடிக் கண்டுபிடித்தான் என்று திரித்துக்கட்டின. இன்றைய இந்துத்துவர்கள் நவீன விக்கிரமாதித்தர்களாக உருமாறியிருக்கிறார்கள். அரசியலதிகாரமும், நம்பிக்கையும் இவர்களின் வரலாற்றை வழிநடத்துகின்றன.
இன்றைய அயோத்தியின் வரலாற்றைக் கிளரும்போது பல்வேறு உண்மைகள் நமக்குத் தெரியவரும். இவைகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட உண்மைகள் அல்ல, திரிக்கப்பட்ட வரலாறும் அல்ல.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகள் அனைத்தும் அயோத்தி மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட ராமன் வழிபாடு குறித்துக் குறிப்பிடவில்லை. பிக்குகளின் மடங்கள், ஸ்தூபிகள் மற்றும் ஒருசில பௌத்தமல்லாத கட்டிடங்களும் அமைந்திருந்த அயோத்தி, பௌத்தர்களின் முக்கிய தலம் என்று யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். புத்தர் சிறிது காலம் தங்கியிருந்த அயோத்தி பௌத்தர்களின் புனிதத்தலம். ஜைனர்களின் புனிதத்தலமுமாகவும் அயோத்தி இருந்திருக்கிறது. முதலாம், நான்காம் ஜைன தீர்த்தங்கரர்கள் பிறந்த இடம் அயோத்தி. கி.மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாம்பல் நிற, மண்சுதையிலான உருவங்கள் அங்கே அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பழைய ஜைன உருவகங்களில் இதுவும் ஒன்று.
ராமநந்தி சமயப் பிரிவின் மெதுவான தோற்றத்தோடும், இந்தியில் ராமன் கதை எழுதப்பட்டதோடும் ராம வழிபாடு அடித்தளத்தைப் பெற்றது. 15, 16 ஆம் நூற்றாண்டில் கூட ராமநந்திகள் அயோத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறியிருக்கவில்லை. ராமர் வழிபாட்டைவிட சைவ சமயமே மிக முக்கியமானதாகயிருந்தது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ராமநந்தி சாதுக்கள் இங்கு பெருமளவில் குடியேறியதாகவும், அதன் பின்னர் அவர்கள் அயோத்தியில் பல கோயில்களைக் கட்டியதாகவும் தெரியவருகிறது.
முன்னர் ஒரு கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்கிற கருதுகோளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாபருக்காக ஒரு மசூதி நிறுவப்பட்டது என்பதைக் குறிக்க, மசூதியினுடைய கதவின் இரு பக்கங்களிலும் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதில் இருக்கும் வரிகளைத் தவிர, வேறெந்த மூலச்சான்றும் அங்கு கிடையாது. அந்த வரிகள் இவைதான்: “விண்ணுலகத்தை எட்டும் வகையில், நீதியை நிலைநாட்டிய பேரரசர் பாபரின் ஆணைப்படி, நல்லிதையம் படைத்த மீர்பாகி என்பவர், தேவ தூதர்கள் வந்திறங்கும் இடமாக இதைக் கட்டினார். பவத்(புவத்) கெயிர் பாகி (இந்நற்செயல் நீடித்து நிலைக்கட்டும்)” (பாபர்நாமா , எ.எஃப், பெவரிட்ஜ் மொழிபெயர்ப்பு 1922, II, PP LXXVIIff).
பாபர் அவையின் அறிஞரான மீர்பாகி என்பவர் இந்த மசூதியைக் கட்டியதாக மட்டுமே இந்தக் கல்வெட்டு கூறுகிறது. ஒரு கோயில் இருந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாக இதில் வரும் எந்த வரியும் கூறவில்லை. அயோத்தியிலுள்ள எந்தக் கோயிலையும் இடித்ததாக பாபர்நாமாவில் எந்தக் குறிப்பும் இல்லை. அக்பரின் சமகாலத்தவரும், ராமபக்தரும் அயோத்தியில் குடியிருந்தவருமான துளசிதாஸ், மிலேச்சர்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு வருத்தமடைவதாகக் கூறினாரேயன்றி ராம ஜன்மபூமியின் அமைவிடத்திலிருந்த இந்துக்கோயிலை இடித்ததாகக் கூறவில்லை. கோயில் இடிக்கப்பட்ட கதை 19 ஆம் நூற்றாண்டில்தான் பரவியது என்பதும், இக்கதையைப் பரப்பியதிலும், அதற்கு சான்றுரீதியாக முக்கியத்துவம் வழங்கியதிலும் பிரிட்டிஷ் அரசின் பங்கு உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தக்கதை இப்படித்தான் பிரிட்டிஷ் அரசின் பதிவேடுகளில் ஏறியது. பின்னர் இப்பதிவேடுகள் மட்டுமே முக்கியமான வரலாற்றுச் சான்று என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டது. இந்தியாவில் ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மேலோட்டமான இக்கதைகள் உண்மையான வரலாற்றுச் சான்றுகளாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மையான வரலாற்றாய்வாளனுக்கு இட்டுக்கட்டப்பட்ட கதைகள் எப்போதும் வரலாற்று ஆதாரமாக இருப்பதில்லை.
இப்படியாக வரலாற்றின் பக்கங்கள் செல்கிறது. ஒருநாட்டை வரலாறு மட்டுமே வழிநடத்தமுடியும். வரலாற்றின் பக்கங்கள் இப்போது திருத்தப்படுகின்றன. நவீன இந்தியாவின் அடித்தளம் சிந்துச்சமவெளி நாகரிகத்தின் தொட்டிலான பண்டைய இந்தியாவிலும், பலசமய, பல கலாச்சார, பல பண்பாடுகளின் தொட்டிலாக விளங்கிய மத்தியகால இந்தியாவிலும்தான் உள்ளது. நவீன இந்தியாவின் தூண்களாக மதச்சார்பற்ற தன்மையும், அரசியல் சாசனமும் மட்டுமே இருக்கமுடியும். அயோத்தியில் நடைபெற்றது போல இந்தியமண்ணில் வேறெங்கும் நடைபெற்று விடக்கூடாது.
(இக்கட்டுரையின் வரலாற்றுப் பூர்வ ஆதாரங்கள் அனைத்தும் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், சென்னை வெளியிட்ட “அரசியல் திசை திருப்பலுக்கு உள்ளாகும் வரலாறு” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)