உயிர்த்தெழும் நீதி
சொல்வதற்கு என்ன இருக்கின்றது
அம்மா
பூக்களைப் பார்க்கின்றபோதும்
புன்சிரிக்கமுடிவதில்லை… (அம்மாவுக்கு,செழியன் கவிதை)
ஒவ்வொரு முறை பேரறிவாளனை அற்புதம்மாள் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம் எனக்கு இக்கவிதை வரிகள் மட்டுமே நினைவுக்கு வரும். பிப்ரவரி,18 அன்று தனது இளமையான வாழ்க்கையை தனிமைக்கொட்டடியில் கழித்துக்கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கும்,முருகனுக்கும்,சாந்தனுக்கும் புது வெளிச்சம் கிடைத்திருக்கிறது.அவ்வெளிச்சத்தில் அற்புதம்மாளும்,பேரறிவாளனும் சந்தித்தபோது ஒருவரையொருவர் ஆரத்தழுவி வெளிப்படுத்திய அன்புப்பிரவாகம் அன்றையதினம் தமிழகத்தை மூழ்கடித்தது.நடந்து நடந்து அத்தாயின் கால்கள் உருவாக்கிய வெப்பக்காற்றும்,22 ஆண்டுகளாகத் தேம்பித் தேம்பி அழுத கண்ணீரின் வெப்பத்துளிகளும் உருவாக்கிய ஒரு தீப்பொறி இன்று இம்முழக்கயிற்றை எரித்து அழித்திருக்கிறது..
2014,பிப்ரவரி 17 இரவு மிக மிக நீண்டு சென்றுகொண்டே இருந்தது.மறுநாள் வெளிவரப்போகும் தீர்ப்பு தமிழ்மக்களின் மனத்தில் எத்தகைய தாக்கத்தையும்,பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்னும் எண்ணங்கள் அலைமோதிக்கொண்டு தூக்கத்தையும் விரட்டியடித்தன.தீர்ப்புக்காக காத்திருந்த என்போன்ற எல்லோருக்கும் அன்றைய இரவு அதுதான் நிலை.நாளைய தீர்ப்பு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாதகமாகப் போனால் அத்தீர்ப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் சிந்தனையும் வந்து வந்து போனது.சமீபகாலங்களில் இம்மூவரின் மரணதண்டனை தமிழ்மனத்தில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப்போல வேறு எதுவும் ஏற்படுத்தவில்லை.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டோரில் விடுதலை செய்யப்பட்டவர்கள் போக குற்றவாளிகளாக எஞ்சிய எழுவரில் மூவருக்கும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டு,கருணை மனுக்களும் 2011-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டபின்னர் எப்போது வேண்டுமானாலும் அவர்களது தூக்குத்தண்டனை வேலூர் சிறைச்சாலையில் நிறைவேற்றப்படலாம் என்னும் நிலையில் தமிழ்மனத்தின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது.தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மூவரின் தூக்குதண்டனையை ரத்து செய்யச்சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தின் இளம் பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார்கள்.அக்காலகட்டத்தில் மிகப்பெரும் எழுச்சி தமிழ் உணர்ச்சி கொண்ட இளைஞர்கள்,மக்கள்,அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்டது.எல்லோரும் கோயம்பேடு நோக்கி குவிந்தோம்.உண்ணாவிரதப் பந்தலின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டிருந்த மூன்று தூக்குக்கயிறுகள் இந்த அரசுகளின்மீது மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தின.அது வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்ல.மிகத் தீர்க்கமாக சிந்தனை செய்ததன் விளைவாக வந்த கோப உணர்ச்சியே அது. ஏன் இம்மூவரின் தூக்குதண்டனை தமிழ்மனத்தில் இவ்வளவு பெரும் கொந்தளிப்பையும்,தாக்கத்தையும் ஏற்படுத்திற்று? ராஜீவ்காந்தி கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த சிவராஜனும்,தனுவும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.அக்கொலைக்கு மூளையாக சொல்லப்பட்ட பிரபாகரனும்,பொட்டு அம்மானும் ஈழத்தின் இறுதிப்போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.மனிதவெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை பேரறிவாளன் வாங்கிக்கொடுத்தான் என்பது பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.மனிதகுண்டுவில்தான் அது பயன்படுத்தப்படப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதை தனது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டபோது அவன் தெரிவித்திருந்தாலும் தடா சட்டத்தின் மூலம் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்த காவல் அதிகாரி அவனது உண்மையான வார்த்தைகளை மறைத்து வாக்குமூலத்தை தயார்செய்து அதன் அடிப்படையில் அவனுக்கு தூக்குதண்டனையை வாங்கிக்கொடுத்திருந்தார்.சமீபத்தில்தான் அவ்வாக்குமூலமே தவறான ஒன்று என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்படப்போகிறார் என்பது குறித்து இங்கு யாருக்கும் தெரியாது என்பதை சிவராசன் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையகத்துக்கு தெரிவித்தார் என்பதையும் இப்புலனாய்வு அதிகாரி பதிவு செய்கிறார். அக்காவல் அதிகாரியின் சமீபத்திய ஒப்புதல் வாக்குமூலம் கண்டு நீதித்துறை வெட்கித் தலைகுனிந்தது.அற்புதம் அம்மாள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
மூன்றுதமிழர்களுக்கும் தூக்குதண்டைனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்ததற்கு மறுநாள் அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் எஞ்சிய நால்வரையும் சேர்த்து மொத்தமாக எழுவரையும் விடுதலை செய்வது என்று ஜெயலலிதா முடிவு எடுத்தபோது, அதை சட்டப்பேரவையில் அறிவித்தபோது 2009 மே மாதத்தில் போர் உச்சம் அடைந்தவேளையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மெரினா கடற்கரையில் போய் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று உட்கார்ந்தபோது என் உள்ளத்தில் எப்படி உற்சாகம் கரைபுரண்டு ஓடியதோ அதுபோலத்தான் இருந்தது.நாள்முழுவதும் உற்சாகம் நீடித்தது.தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்கள் திருவிழாக்கள் போல இருந்தன.ஆனால் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்று சொல்லி உண்ணாவிரதம் கைவிடப்பட்டபோது நாமும் எப்படி கைவிடப்பட்டது போல உணர்ந்தோமோ அப்படிதான் இருந்தது இன்று (20.02.2014) உச்சநீதிமன்றம் அம்மூவரின் விடுதலைக்கும் தற்காலத்தடை விதித்தபோது. அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்குக் கொடுத்திருக்கும் கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பயன்படுத்தி மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசை மிரட்டும் தொனியில் அதிரடியாக காய்களை நகர்த்தினார் முதல்வர் ஜெயலலிதா.வந்தால் ஓட்டு,வராவிட்டாலும் ஓட்டு என்று தன் அம்புகளை எடுத்து எய்ய ஆரம்பித்தார்.அற்புதம்மாளை சந்தித்தார்.அன்றைய தினம் உணர்ச்சி மட்டுமே எங்கெனும் ஆட்கொண்டிருந்தது.தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தாலும்கூட அவர்களது விடுதலை பற்றி மாநில அரசுக்கு சில ஆலோசனைகளையும் அது வழங்கியிருந்தது.பிரிவு 432,433 ஆகியவற்றைப் பயன்படுத்தியும்,சரியான சட்ட வழிவகைகளை அனுசரித்தும் அவர்களது தண்டனை குறைப்பு பற்றி மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று அது கூறியிருந்தது.
ஜெயலலிதா உடனடியாக விடுதலை அறிவிப்பை வெளியிட்டபின்னர் சமூக ஊடகங்களில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உணர்ச்சிப்பூர்வமான பாராட்டுதல்கள் பாயத்தொடங்கின.ஜெயலலிதாவை இதுவரை பாராட்டியிராதவர்கள்கூட வெளிப்படையான ஜெயலலிதா புகழ் பாடத்தொடங்கினர்.ஏனென்றால் நம்முடைய சகோதரனில் ஒருவனுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு அவன் விடுதலை பெறும் அந்தநாளில் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைப்போமோ அதுபோலத்தான் இது.பேரறிவாளனின் இளமைப்பருவம் முழுவதும் கழிந்துபோய்விட்டது.முதல்நாள் காலைவரை தலைக்குமேல் கண்டம் இருந்தவனுக்கு அடுத்தநாள் காலையில் விடுதலை கிடைக்குமென்றால் அந்நிகழ்வு இக்கொண்டாட்டத்திற்குத் தகுதியானதுதான்.ஆனால் நம் தமிழ்மனத்தை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி பின் அரசியல் செய்யும் கலைகள் நம் அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.தமிழக அரசியல்வாதிகளின் மனக்கணக்கு எல்லாம் எபோதுமே தேர்தலை உள்வாங்கித்தானிருக்கும். சில நாட்கள் தாமதமானாலும்கூட சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சில வரைமுறைகளைக் கடைப்பிடித்து அவர்களது விடுதலைக்கு ஜெயலலிதா முயன்றிருக்கலாம். எழுவரின் விடுதலையிலும் மிக முக்கியப் பங்காற்றப்போகும் இதுவரையிலான அவர்களுடைய நன்னடத்தை குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.சேலை முள்ளில் மாட்டிக்கொண்டிருக்கிறது.சேலை நமக்கு முக்கியம்.நமது உணர்ச்சிகளும்,வேகமும் இப்போது தடையாகிப்போய்விட்டதோ என்னும் எண்ணம் வருகிறது.
இம்மூவரின் தூக்குதண்டனை ரத்து அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசும் மனுதாக்கல் செய்திருக்கிறது.இம்மனு சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வில் விசாரிக்கப்படாமல் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பப்படுமானால் மீண்டும் இம்மூவரின் உயிர் குறித்து நம்மால் கவலைகொள்ளாமல் இருக்கமுடியாது. அதனால்தான் மத்திய அரசின் அப்பீல் முடிவு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தூக்குதண்டனையை வழங்குவது போன்றது என்று அரசியல் விமர்சகர் ஞாநி மிகச்சரியாகக் குறிப்பிடுகிறார்.மூவரின் தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை விரும்பாத மக்கள் தங்களது கருத்துகளை ஊடகங்களின்மூலம் தெரிவித்தார்கள்.பத்திரிகைகளில் எழுதினார்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அரசு மற்றும் தேசியக்கட்சிகளை மையப்படுத்தி தங்கள் வாழ்க்கையைக் கழுவிக்கொண்டிருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.மீண்டும் மீண்டும் ராஜீவ்காந்தியின் அந்தஸ்து பற்றி மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு , முன்னரே தூக்குதண்டனை வழங்கப்பட்டு தினம்தினம் அதை நினைத்து கொடும் துன்பம் அனுபவித்தவர்கள் என்பதையும்,கருணைமனுக்களைப் பரிசீலிக்க 11 ஆண்டுகளுக்கும் மேலானதையும் அதன் காரணமாகவே அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டதையும் பாவம் அவர்கள் அறியவில்லைபோலும். 19 வயதில் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிக்கொன்ட பேரறிவாளனின் இளமைப்பருவம் முழுவதும் சிறைக்கொட்டடியில்,தூக்குமரநிழலில் கழிந்தும்,சீரழிந்தும் போய்விட்டது.ஒருமுறை அவர் சொன்னார்:’என்னை உடனடியாக தூக்கில் போடுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்’.தூக்குதண்டனை என்ற அறிவிப்பை தந்துவிட்டு தினம் தினம் அந்த நினைவின் அழுத்தத்தில் வாழ்க்கையை அணுஅணுவாகக் கழிப்பது எவ்வளவு பெரிய துன்பம்!.பேரறிவாளனின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி வேண்டுமென்றே திரித்து எழுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துதான் இத்தூக்குதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையையும் அது குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் புகுமானால் புலனாய்வு அதிகாரிகளின் பல்வேறு அசிங்கங்கள் வெளிவரும் என்பதையெல்லாம் இந்த நடுநிலையாளர்களும்,இந்தியதேசத்தில் குற்றங்களைக் குறைக்க அயராது பாடுபடுபவர்களும் உணரவில்லைபோலும் அல்லது தெரிந்தும் தெரியாது நடிப்பு காட்டுகிறார்கள் போலும்.2011-ல் நாம் போராடாமல் போயிருந்தால் பேரறிவாளன் உட்பட இம்மூவரும் தூக்கில் போடப்பட்டிருப்பார்கள்.அதன்பிறகு இவ்விசாரணை அதிகாரி இவ்வுண்மையை சொல்லியிருப்பாரானால் அதற்காக அவரையும் தூக்கில் போடப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் மரண்தண்டனை கொடுப்பதற்குக் காரணமாக உச்சநீதிமன்றம் வரையறுத்திருக்கும் குற்றங்களில் ஒன்று என்ன தெரியுமா? பொய்சாட்சி தயார் செய்து அப்பாவி ஒருவரை தூக்கில் போடுவதற்குக் காரணமாக இருப்பது. அப்பாவிகள் கூட பிழையான சாட்சியங்கள் கொண்டு தூக்குதண்டனையால் உயிரிழக்கக்கூடும் என்னும் ஆபத்து இருக்கும் காரணத்தினால்தான் மரணதண்டனையை இவ்வுலகிலிருந்து ஒழிக்கவேண்டும் என்னும் கோரிக்கைக்காக ஐ.நா.மன்றம் உட்பட உலகில் மனசாட்சி கொண்டுள்ள ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர்.
கடந்த நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலைகளையும்,இன்னல்களையும் அனுபவித்த யூதர்கள் வாழும் இசுரேலை எடுத்துக்கொள்வோம்.நாஜிக்கள் தோல்வி அடைந்தபின் எத்தனையோ நாஜிக்களை இசுரேலியர்கள் தூக்கில் போட்டிருக்கமுடியும்.ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.இசுரேலால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரே நாஜி அடால்ப் எய்க்மான் மட்டுமே.எய்க்மானுக்கு விசாரணைக்குப்பின் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டபோதுகூட அவருக்கு மரணதண்டனை கூடாது என்று ஒரு யூத தத்துவவாதி பிரச்சாரம் செய்து,மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்துப்பெற்றதை நாம் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும்.ஒரு உயிரின் வலி எப்படிப்பட்டது என்பதை யூத சமுதாயம் நன்கு உணர்ந்திருந்தது.
சமீபகாலம் வரை ஐரோப்பியநாடுகளில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் முறைகள் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது பல விசித்திரமான பழக்கவழக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.பேரறிவாளன்,முருகன்,சாந்தன் இம்மூவரின் கருணை மனுக்கள் 2011ல் நிராகரிக்கப்பட்ட பின்னர் இம்மூவருக்கும் ஆதரவாக மிகப்பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையும் அவர்களுக்குக் கருணை காட்டவேண்டும் என்பதாகவே இருந்தது.18ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும் இத்தருணத்தில் குறிப்பிட்டு ஒப்பிடவேண்டும்.18ம் நூற்றான்டின் மத்தியில் குழந்தை கடத்தலுக்கு எதிராக மிகப்பெரும் கலகம் பிரான்ஸ் தேசத்தில் நடந்தது.இக்கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.அதனை நிறைவேற்ற ஆகஸ்ட்,3,1750 அன்று ஆயத்தமும் செய்யப்பட்டபோது(அக்காலங்களில் மரணதண்டனை பலவழிகளில் மக்களின் முன்னிலையிலேயே நிறைவேற்றப்படும்)கூடியிருந்த மக்கள் அதைத் தடுத்து நிறுத்தினர்.ஒரு குற்றவாளிக்கு சாதகமாக ஏதேனும் சாட்சிகள் கிடைக்குமானால் அல்லது மக்கள் அவன் ஒரு நிரபராதி என்று முடிவு செய்வார்களானால் மரணதண்டனை நிறைவேற்றப்படும் கடைசி தருணத்தில் கூட உரத்தக்குரல் எழுப்பி அதைத் தடுத்து நிறுத்துவதற்கு மன்னராட்சியின் மக்கள் அதிகாரம் பெற்றிருந்தனர்.அதன்பின்னர் மன்னராலோ அல்லது அவன் சுட்டும் நீதிமன்றத்தாலோ விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு தண்டனை விபரங்கள் உறுதி செய்யப்படும்.(Discipline and Punish,Michel Foucault,Part One,Torture)
18ம் நூற்றாண்டின் பிரான்ஸ் தேசத்து நடைமுறைதான் இன்று இந்தியாவில் இம்மூவர் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கும் நிகழ்விலும் நடந்திருக்கிறது. இன்றைய 21ம் நூற்றாண்டு இந்தியாவில் தூக்குதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்று நாம் கோருகிறோம்.ஆனால் “தேசபக்தர்களும்”,பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் “காப்பவர்”களும் மரணதண்டனை 18ம் நூற்றாண்டில் நிறைவேற்றப்பட்டதைப்போல எழுதுவதற்கே பேனா கூசும் கொடூர முறைகளைப் பின்பற்றிதான் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.
மக்கள் கோரிக்கையின் பேரில் தண்டனை பற்றி மறுபரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் கருணைமனுக்களின் காலதாமதத்தைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைத்தது.18ம் நூற்றாண்டு பிரான்ஸ் தேசத்து நிகழ்வோடு மீண்டும் இதை ஒப்புநோக்கவேண்டும்.18ம் நூற்றாண்டில் பிரான்ஸில் பொதுமக்கள் முன்பு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது நாம் அறிந்ததே.தண்டனையை நிறைவேற்றுபவர் ஒரே முயற்சியில் தண்டனையை நிறைவேற்றவேண்டும்.அதன் நோக்கம் அக்குற்றவாளி கொஞ்சம் கொஞ்சமாக வலியை அனுபவிக்காமல் உடனடியாக மரணம் அவனுக்கு ஏற்படவேண்டும் என்பதுதான்.தண்டனையை நிறைவேற்றுபவர் ஒரே முயற்சியில் தவறினால் மக்கள் அவரைத் தாக்கத்தொடங்கிவிடுவார்கள் அல்லது அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும்.ஒரே முயற்சியில் கொல்லப்படாமல் போன அக்குற்றவாளி உடனடியாக விடுதலையும் செய்யப்படுவார்( Discipline and Punish,Michel Foucault,Part One,Torture).
இதைக் கொஞ்சம் இங்கே ஒப்பிடுவோம்.இம்மூவரையும் இந்த மத்திய ஆட்சியாளர்கள் ஒருமுறை,இருமுறை அல்ல,கொஞ்சம் கொஞ்சமாக 11 ஆண்டுகள் கொன்றிருக்கிறார்கள்.அவ்வலியைப் பொறுக்கமாட்டாத உச்சநீதிமன்றம்(18ம் நூற்றாண்டின் பிரான்ஸ் தேசத்து மக்கள் போல)
இம்மூவருக்கும் தண்டனை குறைப்பு செய்தது.18ம் நூற்றாண்டின் நியாயத்தைப் பார்த்தாலும் இவர்களை உச்சநீதிமன்றமே விடுதலை செய்திருக்கவேண்டும்.அதைத்தான் தமிழக அரசு செய்திருக்கிறது.அதைப்பொறுக்காத நடுநிலையாளர்கள்,காங்கிரஸ் கட்சிக்காரர்கள்,கூட்டு மனசாட்சிக்காக அப்பாவிகளையும் பலியிடத்தயாராக இருப்பவர்கள்,இவ்வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாமல் கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் பசப்பர்கள் கற்கால இந்தியாவிற்கே சென்றுவிட்டார்கள்.இவர்களிடம் மனிதஉரிமை பற்றியும்,சட்ட நடைமுறைகள் பற்றியும் பேசும் நம்மூர் மனித உரிமைவாதிகளைப் பார்க்கும்போது பரிதாபகரமாக இருக்கிறது.
நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் எனக்கோ,எனது மகளுக்கோ,மகனுக்கோ விருப்பம் இல்லை என்று சோனியாகாந்தி 1999-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்வித ஆட்சேபணைகளும் இல்லை என்று மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்ட விஜயதாரணி வகையறாக்கள் வரை சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று(20.02.2014) மத்திய காங்கிரஸ் அரசு தூக்குதண்டனை ரத்துபற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது எதற்காக?காங்கிரஸும்,மத்தியஅரசும் சோனியா,ராகுல்,பிரியங்கா அல்லாமல் வேறு யார்?ஏனிந்த பசுத்தோல்? கூட்டு மனசாட்சியையும்,பொதுமனசாட்சியையும் திருப்திப்படுத்த அதிகாரம் துடியாய் துடிக்கிறது.இதிலிருந்து அதிகாரம் பெறப்போகும் பலன் என்ன என்பதுதான் தெரியவில்லை.ஒருவேளை தனது அதிகாரத்தை மேலும் அது வலுப்படுத்திக்கொள்ளலாம்.தனது கைகளில் இருக்கும் சாட்டையை இரும்பு சங்கிலியாக மாற்றிக்கொள்ளலாம். அதிகாரத்தின் மனசாட்சியும் வலுப்படலாம்.ஆனால் இதெல்லாம் யாருக்காக?நாடு என்ற ஒன்று யாருக்காக?அதிகாரத்தின் இருப்பு யாரைப் பாதுகாக்க?
(உயிர்மை,மார்ச்,2014)