உடலை மட்டுமே அழிக்க முடியும்!!
ஒவ்வொரு நாளும் இந்துத்வாவாதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட காரியங்கள் கனகச்சிதமாக நிறைவேறிக் கொண்டே வருகின்றன.சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அது தனது வெற்றிக்கொடியை நாட்டிக்கொண்டே வருகிறது.புனேயின் தேசிய திரைத்தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பொறுப்புக்கு தனது ஆளை நியமிப்பதில் ஆகட்டும்,அதனை எதிர்த்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மாணவர் போராட்டங்களை நசுக்குவதிலாகட்டும் தனது இலக்கை மோடி அரசும்,ஆளும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அடைந்தே வந்திருக்கின்றன.தான் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியப் பண்டிகைகள் அல்லாத பிற மதத்தவரின் பண்டிகை தினங்களில் இறைச்சி விற்பனையைத் தடை செய்தும்,சில மாநிலங்களில் மாட்டிறைச்சியை முழுவதுமாகத் தடை செய்தும் பா.ஜ.கவும்,ஆர்.எஸ்.எஸ்ஸும் திட்டமிட்டு பிற மதத்தவரை பண்பாட்டு நீக்கம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றன. முகம்மது படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ள இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மூட இஸ்லாமிய அமைப்பு ஃபத்வா விதித்ததையடுத்து ரஹ்மானை தாய் மதத்திற்கு திரும்ப அழைப்பு விடுக்கிறது இந்துத்வா.திப்பு சுல்தான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது என ராமகோபாலன் கூக்குரலிடுகிறார். இந்துத்வா தத்துவத்தை மிக ஆழமாக வேரூன்றிவிடவேண்டும் என்ற வேகம் ஆளும் வர்க்கத்தை வாட்டி வதைக்கிறது. சென்ற காங்கிரஸ் அரசு பசுமை வேட்டை என்று சொல்லி அறிவுஜீவிகளை வேட்டையாடியது. இன்றைய மோடி அரசில் இந்துத்வா இயக்கங்களின் நேரடி மேற்பார்வையில் அறிவுஜீவிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டே வருகிறார்கள்.இந்து மதத்தையும்,அதன் தத்துவங்களையும் அவமதிக்கிறார்கள் என்ற சாக்கிட்டு அறிவுஜீவிகளும்,நாத்திகர்களும் இந்துத்வத்திற்கு, சாதி வெறிக்கு நரபலி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆளும் மோடி அரசு இது குறித்து தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகிறது.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வெளிக்குள் புகுந்த ஆரிய மதம் ஆரம்பம் தொட்டே ரத்தப்பலி வாங்கிக்கொண்டே வந்திருக்கிறது.அந்த ரத்தம்தான் ஆரியத்தையும்,இங்கிருந்த மக்களையும் ஒன்றிணைத்து வந்திருக்கிறது.தொல்குடி மக்களின் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும்,பழக்க வழக்கங்களையும் சிதைத்திருக்கிறது.சாதியையும்,வர்ணத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது.அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புத்தத்தையும்,சைனத்தையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.ஒவ்வொரு புத்தபிக்குவின் தலையையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஆயிரம் பொன் பரிசு வாங்கிக்கொள்ளுங்கள் என்று பிராமணியத்தை மீண்டும் அரியணை ஏற்றிய சுங்க வம்சத்து அரசன் புஷ்யமித்ர சுங்கன் பறை சாற்றினான்.தமிழகத்தில் ஆயிரமாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றார்கள். ஆரியத்தால்,இந்துத்வத்தால் இம்மண்ணில் சிந்தப்படும் ரத்தம் இன்னமும் உலர்ந்தபாடில்லை.இந்துத்வத்தை எதிர்த்து தமிழ்நாட்டு மண்ணில் போராடிய பெரியார் என்னும் மலையை அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.பெரியார் பிறந்து 137 ஆண்டுகள் கழித்து அவர் எழுப்பிச் சென்றிருக்கிற வெம்மையை இந்துத்வா சக்திகள் அவரது புகைப்படத்திற்கு மூத்திரத்தை அபிஷேகம் செய்துதான் தணித்துக் கொள்ளமுடிகிறது.ஆனால் ஆச்சர்யம்.இச்சம்பவத்திற்குப் பிறகு பெரியார் என்னும் சூறாவளிக்காற்றில் இந்துத்வா சக்திகள் சிக்கிப் போனதுதான் மிச்சம்.பெரியார் என்னும் வெம்மை இந்தியா முழுமைக்கும் அன்று வீசியிருக்குமானால் இன்று இந்தியாவிற்கு இந்துத்வா சக்திகளினால் இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்காது.
இந்திய நாத்திகர்களின் மீது இந்துத்வாவாதிகளின் கொலைவெறிப் பார்வை இப்போது திரும்பியிருக்கிறது.மஹாராஷ்டிரா மாநிலத்திலும்,கர்நாடகா மாநிலத்திலும் புகழ்பெற்று விளங்குகின்ற நாத்திக அறிஞர்கள் ஒவ்வொருவராக இந்துத்வா பலி எடுத்துக் கொண்டே வருகிறது.நவீனமூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்துப் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர் என்னும் பகுத்தறிவுவாதி 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2015ம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ-ன் தலைவரும் நாத்திகவாதியுமான பன்சாரே தனது கருத்துகளுக்காகக் கொலை செய்யப்பட்டார்.கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடக மாநிலத்தின் மிகச்சிறந்த இலக்கியவாதியான கல்புர்க்கி தனது 77வது வயதில் தனது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இவர்களின் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் உறுப்பினரும்,அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் பொதுச்செயலாளரும்,நாட்டின் மிகச்சிறந்த மனித உரிமைவாதியுமான ஜான் தயாளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
பகுத்தறிவு என்னும் அவருடைய ஆயுதத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்துத்தீவிரவாதிகள் நரேந்திர தபோல்கரை சுட்டுக்கொன்றனர்.பன்னிரெண்டு ஆண்டுகள் மருத்துவசேவை புரிந்தபின்பு தனது மனதுக்கு விருப்பமான பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்காகவும்,கலாச்சார மறுமலர்ச்சிக்காகவும்,பொதுச்சேவைக்காகவும் தன் தொழிலைத்துறந்தார்.இதற்குமுன்னர் பாபா அதேவின் சாதி எதிர்ப்பு இயக்கமான “ஒரு கிராமம்,ஒரு கிணறு” என்னும் இயக்கத்தில் பங்கு பெற்றிருக்கிறார்.பிறகு ஷ்யாம் மனவ் நிறுவிய அகில பாரதிய அந்தஸ்ரத்த நிர்மூலன் சமிதியில் சிலகாலம் பணிபுரிந்துவிட்டு,பின்னர் மஹாராஷ்டிரா அந்தஸ்ரத்த நிர்மூலன் சமிதி(MANS) யை ஆரம்பிக்கிறார்.
மராட்டிய மாநிலத்தில் சாமியார்கள் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சுரண்டுவதை எதிர்த்துக் குரல்கொடுத்தார்.ஜோசியத்தைச் சொல்லி சுரண்டிப் பிழைப்பு நடத்தும் அக்கிரமக்காரர்களுக்கு எதிராகவும்,பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் சாமியார்களின் மந்திர சக்திக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்.அவர்களோடு நேருக்கு நேர் வாதம் செய்தார்.அவரது வாதத்தில் துளியளவும் வன்முறை எண்ணம் கிடையாது.கடைசிவரை மிகவும் அமைதியாகத் தனது கருத்துகளைச் சொல்லி வந்தார்.இன்னமும்கூட மராட்டிய மாநிலத்தில் நிலவும் தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.மனநோயாளிகளை அடித்து கடுமையாகத் துன்புறுத்தும் பழக்கத்திற்கு எதிராகப் போராடினார்.அந்நோயாளிகளுக்கு நல்ல மருத்துவர்கள் தருவிக்கப்பட்டனர்.மனநல மையங்களின் மூலம் சிறந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இவையனைத்தையும் மராட்டிய மாநிலத்தின் ஒரு மூலையிலிருந்து பிறிதொரு மூலைக்குப் பயணம் செய்து அவர் செய்துவந்தார். வட இந்தியாவில் மிக ஆழமாக வேரூன்றி உள்ள சாதிப்பஞ்சாயத்துகளை அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.சாதி ஒழிக்கப்படவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.தான் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்புவரை கூட சாதிப்பஞ்சாயத்துகளுக்கு எதிரான ஒரு விவாதத்தில் பங்குகொண்டு பேசினார்.நாசிக்கில் ஒரு பெண் பிறசாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளத் துணிந்ததையொட்டி அவரது தந்தையே தனது மகளைக் கொலை செய்த அவலத்தையொட்டி அந்த தொலைக்காட்சி விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
சாமியார்களின் சித்துவேலைகளுக்கும்,மாயாஜாலங்களுக்கும்,திடீரென்று காணாமல்போகும் நோய்நொடிகளுக்கும் இன்றைய பெருகிப்போன தொலைக்காட்சிச் சானல்கள் மிக அதிகத் தீனி போடுகின்றன என்பதை நாம் அறிவோம்.நித்தியானந்தாவை எடுத்துக்கொள்வோம்.ஒரு நடிகையுடன் அவர் அந்தரங்கமாக இருந்தக் காட்சிகள் ஒரு சானலில் ஒளிபரப்பப்பட்டன.நித்தியானந்தா சந்தி சிரித்தார்.ஆனால் சில மாதங்கள் கழிந்து அதே நித்தியானந்தா ஒரு தொலைக்காட்சி சானலில் தோன்றி பரம்பொருள் பற்றிப்பேசுகிறார்.தனது தவவலிமை பற்றிப் பேசுகிறார்.சமீபத்திலும் ஒரு பாபுராம் சாமியார் மாட்டிக்கொண்டார்.போலிச்சாமியார்களின் நயவஞ்சகங்கள் “ஆன்மிகம்” என்னும் போர்வையில் இருந்துகொண்டு மக்களின் பகுத்தறிவை குருடாக்கிவிடுகின்றன.அப்போதுதான் நமக்கு ஒரு பெரியாரும்,தபோல்கரும் தேவைப்படுகின்றனர்.
இந்திய நாத்திக சங்கத்தின் தலைவர் சனல் இடமருகு ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த கதை தெரியுமா உங்களுக்கு?பிள்ளையார் பால் குடித்த சம்பவத்தை ஒத்ததுதான் இதுவும்.மும்பையின் வில்லே பார்லேயில் உள்ள ஒரு தேவாலயத்தில் இயேசுகிறிஸ்துவின் சிலையின் மேலிருந்து துளிதுளியாக தண்ணீர் சொட்டுகிறது.மக்கள் இதை அற்புதமாகக் கருதினர்,பரப்பினர்.உடைந்துபோன தண்ணீர் குழாய் ஒன்றிலிருந்து புவீஈர்ப்பு விசைக்கு எதிரான கேப்பிலரி விளைவின் மூலம் தண்ணீரானது சிலையின் மீதேறி சொட்டுகிறது என்று இடமருகு நிறுவினார். பிரபல மும்பைத் தொலைக்காட்சி சானலிலும் இதை செய்துகாட்டினார்.மறுநாள் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 17 வழக்குகள் தொடுக்கப்பட்டன.எல்லாம் பிரிவு 295(ஏ)ன் கீழ்.முன் ஜாமீன் வழங்க நீதிமன்றமும் மறுத்தது.அவர் ஐரோப்பாவிற்குத் தப்பிச் சென்றார்.
ஹூலிகல் நடராஜ் என்ற ஆசிரியர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது சபரிமலை ஐயப்பன் ஜோதி மனிதனால் உருவாக்கப்படுகிறது என்றார்.அவர் மீது பஜ்ரங்தள் தொண்டர் ஒருவர் வழக்கு தொடுத்தார்.வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது வேறுகதை.
தனது நாத்திகக் கருத்துக்களுக்காகவும்,இந்துத்வா எதிர்ப்பிற்காகவும்,மோடியை விமர்சனம் செய்ததற்காகவும் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி நாட்டை விட்டே ஓடவேண்டும் என்று மிரட்டப்பட்டார்.2014ல் அவர் மறைந்தவுடன் இந்துத்வாவாதிகள் அவரது இறப்பைக் கொண்டாடினர்.தனக்கு நேரும் எதிர்ப்புகளை இந்துமதம் மிகப்பக்குவமாக செரித்து ஏப்பமிட்டுக் கொள்ளும்.ஆனால் இந்துத்வா அவ்வெதிர்ப்புகளை ரத்தம் சிந்த வைக்கும். அனந்தமூர்த்தியின் எழுத்துகள் பாரதியைப் போல,கந்தியைப் போல.இந்து மதத்தின் அடிப்படையை கேள்விக்கு உட்படுத்தாது அதன் சாதிப் பாகுபாட்டைக் கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருப்பார்.இந்து மதத்தின் பெயரால் சாதிய வேறுபாடு கடைபிடிக்கப்படுவதை அவர் வன்மையாக எதிர்த்தார். பாரதிபுரத்தின் ஜகன்னாதனாகட்டும்,சம்ஸ்காராவின் நாரணப்பாவாகட்டும் அனந்தமூர்த்தியின் கலகக்குரல் மட்டுப்பட்டதே கிடையாது. இப்படியாக நாத்திகத்தின் தொடர்ச்சியாக அவர் தெரிவித்த கருத்துகள் மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தன. தன்னுடைய சிறு வயதில் தான் செய்ய நேரிட்ட ஒரு சாகசம் குறித்து ஒரு முறை அனந்தமூர்த்தி கூறியிருக்கிறார்.தெய்வ விக்கிரகங்கள் மீது சிறுநீர் கழிப்பது என்பதுதான் அது.அதை செய்தும் காண்பித்தும் இருக்கிறார் அனந்தமூர்த்தி.இது வேடிக்கைக்காகவும்,சாகசத்திற்காகவும் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்று அனந்தமூர்த்தியும் சொல்லி இருக்கிறார். தெய்வ விக்கிரகங்கள் வழியாக இந்த நாட்டில் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைக் கருத்துகளை பெரியார் உள்ளிட்ட நாத்திகவாதிகளும்,பகுத்தறிவுவாதிகளும் தொடர்ந்து எதிர்த்து வந்திருகின்றனர்.பிள்ளையாருக்கு யானை தலை என்பதை மூடநம்பிக்கையாகப் பார்க்காமல்,வேத காலத்திலேயே நம் நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி ஒருமுறை கூறியதையும்,பிள்ளையார் என்பது மூடநம்பிக்கையின் உச்சம் என்ற பெரியார் பிள்ளையார் சிலைகளை வீதிக்கு வீதி உடைத்ததையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். பல நூறு ஆண்டுகளாக இம்மண்ணில் கடைபிடிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காகவும்,இந்து மதத்தின் வர்ணாசிரம,சாதிப்பாகுபட்டைகண்டிக்கும் நோக்கத்துடனும்தான் இப்படிப்பட்ட தீவிரமான போராட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக,சொல்லப்போனால் ஆங்கில அறிவு,மேலை அறிவுக் கருத்துகள் இந்நாட்டில் பரவத் தொடங்கிய பின்னர்தான் நடந்து வருகின்றன.ஆனால் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர்ச்சியாகத்தான் கல்புர்க்கியும் அனந்தமூர்த்தியின் செயலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
கல்புர்க்கி கன்னடத்தின் மிகப்பெரிய ஆளுமை.அடில்ஷாகி சுல்தான் ஆண்ட பிஜப்பூர் மாவட்டத்தில் தான் அவர் பிறந்தார்.கன்னட மொழி மற்றும் இலக்கியத்தில் அவர் பட்டம் பெற்றார்.கன்னடப் பேராசிரியர் பணி தொடங்கி 1998ல் ஹம்பியின் கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அளவுக்கு உயர்ந்தார்.கர்நாடக வரலாறு,கன்னட இலக்கியம்,மொழி இவற்றில் ஆழ்ந்த புலமை பெற்று இத்துறைகளில் பெரும் ஆராய்ச்சி செய்து 600க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார்.கன்னட இலக்கியத்தின் மிக முக்கியமான வசனகாரர்களின் பாடல்களான வசனாவைப் பற்றியே அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவை இருந்தது.மாதர சென்னையா வழி வந்த பசவன்னர் உள்ளிட்ட ஏறக்குறைய 200 வசனகாரர்களின் (இவர்களில் 30 பெண்களும் அடக்கம்) வழி வந்த வசனாவை தற்காலத்தோடு ஒப்பிட்டு லிங்காயத்துகள் வழிதவறி சென்ற தடம் பற்றி கல்புர்க்கி ஏராளம் எழுதினார்.பசவன்னரின் லிங்காயத்துகள் சாதி பேதம் பார்க்காதவர்கள்.தலித்துகளும் அதில் ஐக்கியமானார்கள்.வீர சைவத்திற்கும்,லிங்காயத்திற்கும் எந்த வேறுபாட்டையும் என்னுடைய ஆராய்ச்சியில் தான் காணவில்லை என்று கூறும் கல்புர்க்கி,புத்த,சீக்கிய,ஜைன மதங்கள் போன்று வீர சைவமும் இந்து மதம் சாராத ஒரு மதப்பிரிவு என்றும்,வேத இந்து மதத்தை வீர சைவம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும்,இந்து மதத்தின் ஆகம விதிகளையும்,கர்ம பலன்களையும்,மறுபிறப்புக் கொள்கைகளையும்,வர்ணாசிரம சாதிப் பிரிப்புகளையும் அது ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் கல்புர்க்கி தனது ஆய்வின் வழியே நிறுவுகிறார்.மார்க்கா என்னும் தனது ஆய்வு நூலை உருவாக்க அவர் கர்நாடகா முழுவதும் உண்மைகளைத் தேடி அலைந்தார்.பசவன்னர் உருவாக்க நினைத்த சமுதாயம் இதுவல்ல என்று ஓங்கி எடுத்துரைத்தார்..பசவன்னரின் லிங்காயத்துகள்,வீர சைவர்கள் சமுதாயம் இதுவல்ல என்று கல்புர்க்கி உரத்துப் பேசினார்.சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க நினைத்த பசவன்னரின் கனவு இன்று எப்படியெல்லாம் தகர்ந்து போய் அவரது பெயரைச் சொல்லும் ஒரு மதமே இந்து மதத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக இருந்து வருவது குறித்தும் பேசினார். ஆனால் காலம் கடந்து போய்விட்டது.இவரது பேச்சு இந்துத்வாவாதிகளை விட சாதியவாதிகளைத்தான் மிகவும் கோபப்படுத்தியது.ஏனென்றால் பசவன்னரின் பெயர் கொண்டு பிழைப்பு நடத்தும் சாதியவாதிகளை அவர் தோலுரித்துக் காட்டினார். பசவன்னர் தற்போது இருந்திருந்தால் சாதிவெறி சீழ் பிடித்திருக்கும் இச்சமுதாயத்தை மீண்டும் ஒருமுறை திருத்தமுடிந்திருக்குமா என்பது சந்தேகமே!
மூடநம்பிக்கைக்கு எதிரானப் பிரச்சாரத்தை அரசியல் சட்டப்பிரிவுகள் கொண்டே மதவாதிகளும் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் வேதனைதரும் செய்தி.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு(51ஏ) என்ன சொல்கிறது?”ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் அறிவியல்பூர்வ சிந்தனைகளையும்,மனிதத்தையும்,எதையும் ஆய்ந்து பார்த்து மாற்றத்தை ஏற்கும் மனோபாவத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்கிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள இக்கருத்துகளை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தால் அதே அரசியல் சட்டம் 295(ஏ) பிரிவின்படி பழமைவாதிகளும்,அவர்களின் விசிறிகளும்,மதத்தீவிரவாதிகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.பிரிவு 295 என்ன சொல்கிறது?”பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பொருளையோ,இடத்தையோ,வழிபாட்டுத்தலத்தையோ களங்கப்படுத்துபவர்கள்,சேதப்படுத்துபவர்கள் தண்டனைக்குரியவர்கள்” என்கிறது. பால்தாக்கரே இறந்தபோது அவருக்கு எதிராக முகநூலில் கருத்துகளைப் பதிவிட்ட இரண்டு இளம்பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டது இந்தப்பிரிவின்கீழ்தான்.
தனது தீவிர நாத்திகக் கருத்துகளுக்காகவும்,மூடநம்பிக்கை எதிர்ப்பு கருத்துகளுக்காகவும் கல்புர்க்கி போன்ற ஆளுமைகளின் உயிர்கள் பறிக்கப்படத்தான் வேண்டுமா?கருத்துகள் கருத்துகளாக எதிர்கொள்ளப்படவெண்டுமேயொழிய துப்பாக்கிகளால் எதிர்கொள்ளும்போது இந்துத்வா சக்திகளும்,சாதிய சக்திகளும் தோல்வியை மட்டுமே சந்திக்கும். மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது.இன்னும் ஆயிரமாயிரம் பெரியார்களும்,தபோல்கர்களும்,கல்புர்க்கிகளும் இச்சமுதாயத்திற்கு வேண்டும்.அப்போதுதான் பகுத்தறிவுச் சூரியன் சுடர்விட்டுப் பிரகாசிப்பான்.
“இவர்களின் உடலை அழித்து விடமுடியும்,இவர்களுடைய சிந்தனையை அழித்துவிட முடியுமா?” என்று தொடங்கும் கபீர் கலா மஞ்ச் தலித் கலைக்குழுவைச் சேர்ந்த ஷீத்தல் ஷாத்தேவின் பாடல் வரிகள்தான் என் காதில் ரீங்காரமிடுகிறது.
(உயிர்மை, அக்டோபர்,2015)