இன்றைய சூழலியல் பிரச்னைகளுக்கு கார்ல் மார்க்ஸ் சொல்ல வேண்டியது என்ன?*
டெட் பென்டன். தமிழில் : செ.சண்முகசுந்தரம்
“முதலாளிய வேளாண்மையில் ஏற்படும் அனைத்து முன்னேற்றமும் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்லாமல் மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படும் முன்னேற்றமாகும்; குறிப்பிட்ட கால அளவுக்கு மண்ணின் வளத்தை அதிகரிக்கும் அனைத்து முன்னேற்றமும் நீடித்து நிற்கும் வளத்தின் மூலாதாரத்தை அழிப்பதை நோக்கிய முன்னேற்றமாகும்”.
– கார்ல் மார்க்ஸ், மூலதனம் தொகுதி 1
சோவியத் யூனினின் தகர்வு, சீனப் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் காரணமாக, உலகில் முதலாளித்துவத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருந்ததது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் எளிதாகத் தூக்கியெறிய முடிந்தது. ஆனால் 2008ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரச் சரிவும் அதன் தொடர்விளைவுகளும் பலரையும் அந்தக் குப்பைத் தொட்டிக்கு வேகமாகத் திரும்பிச் செல்ல வைத்துள்ளன. நல்லதற்கோ கெட்டதற்கோ, வேறு எந்த சமூக, அரசியல் சிந்தனையாளரைக் காட்டிலும் அந்த ஜெர்மன் தத்துவவாதியின் கருத்துகள்தாம் இவ்வுலகின் மீது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் அண்மையில் வந்த மார்க்ஸின் 200ஆம் பிறந்த நாளையொட்டி, அவருடைய கருத்துகளின் தொடர்ந்த பொருத்தப்பாடு பற்றிய விவாதங்களில் மார்க்ஸியம் பற்றிய “மரபான” புரிதலே மேலோங்கியிருந்தது. அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்துகளைக் கூறியவர்கள் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் சுரண்டல், அவை ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியன பற்றிய மார்க்ஸின் விமர்சனப் பகுப்பாய்வு, சோசலிச திசை நோக்கிய அவருடைய இடைவிடாத போராட்டம் ஆகியவற்றின் மீதே கவனம் குவித்தனர்.
ஆனால், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவுகள் குறித்த மார்க்ஸின் சிந்தனையைப் பற்றிய விவாதங்கள் குறைவாகவே, மிகவும் குறைவாகவே நடைபெற்றுள்ளது வருந்தத்தக்கது. மனித வாழ்வு உள்ளிட்ட அனைத்து உயிர்களின் வாழ்வையும் நிலைக்கச் செய்யும் நிலைமைகள் அனைத்தையும் தொடர்ச்சியாகவும் அதிகரித்து வரும் வேகத்திலும் நவீன முதலாளித்துவம் அழித்து வருவதுதான் மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மிக அடிப்படையான சவால் என்று சொல்லலாம். பருவநிலை மாற்றம் என்பது அந்த சவாலின் மிக நாசகரமான அறிகுறிகளிலொன்றின் வடிவம் என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. இது தவிர, கடல்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த மாசு ஏற்படுதல், காடழிப்பு, மண் வளம் அழிக்கப்படுதல், உலகளவில் ஏற்பட்டு வரும் உயிர் பன்மயத்தின் இழப்பு ஆகியவற்றையும் நம்மால் காண முடிகின்றது.
இவையெல்லாம் புதிய பிரச்சினைகள், எனவே ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்கு முன் எழுதி வந்த மார்க்ஸிடம் இன்று நமக்கு வழங்குவதற்கு உருப்படியானது ஏதேனும் உள்ளதா என்று சிலர் கேட்கின்றனர். ஆனால் மனிதகுலத்திற்கும், இயற்கையின் இதர பகுதிக்கும் உள்ள முரண்பாடான , சிக்கலான உறவுகள் என்பது மார்க்ஸின் வாழ்நாள் முழுக்க அவரது சிந்தனையில் முக்கிய அம்சமாக இருந்தது என்பதை மார்க்ஸியம் குறித்த சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மனிதகுலத்திற்கும் இயற்கைக்குமுள்ள உறவு குறித்த மார்க்ஸின் கருத்துகள் பெரும் மதிப்பு கொண்டவையாகவும், – ஏன், இன்றியைமையாதவையாகவும்கூட – இருந்தாலும், அவரது சிந்தனை மரபு பிரச்சினைக்குரியதாக இருப்பதால் புதிய சிந்தனை இன்று தேவைப்படுகிறது.
இயற்கையிலிருந்து அந்நியமாதல்
முதலாளியத்தின் கீழ் ‘அந்நியமாக்கப்பட்ட உழைப்பு’ என்னும் மார்க்ஸின் கருத்தாக்கம் மார்க்ஸின் தொடக்ககால தத்துவக் கையெழுத்துப் படிகளில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்ற அளவிலேயே அக்கையெழுத்துப் படிகள் நன்கு அறியப்பட்டுள்ளனவேயன்றி, நாம் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டுள்ளதுதான் அந்நியமாதலுக்கான அடிப்படையான மூலகாரணம் என்று அவர் கருதினார் என்பதை அவரது படைப்புகள் மீது கருத்துரைப்பவர்கள் ஒரு போதும் கவனித்ததில்லை.
இயற்கையிலிருந்து அந்நியமாதல் என்பது பொது நிலங்கள் வேலியிடப்பட்டு தனியுடைமயாக்கப்பட்டதலிருந்து தொடங்கியது. அப்போது , கிராமப்புற மக்கள் பலருக்கு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தங்கள் உழைப்புச் சக்தியைப் புதிய தொழிற்துறை வர்க்கத்திற்கு விற்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போயிற்று. ஆனால் மார்க்ஸ், மனிதர்களின் ஆன்மிகத் தேவைகளைப் பற்றியும் , இயற்கையுடன் கொண்டிருந்த உறவில் அவர்கள் கொண்டிருந்த பொருள் பொதிந்த வாழ்க்கையை இழந்தது பற்றியும் எழுதுகிறார்.
தொழிலாளர்கள் மீதும் இயற்கை மீதும் சுரண்டல் ஒருசேர நிகழ்த்தப்படுகிறது என்ற வரலாற்றுப் பார்வையைதான் அவருடைய தொடக்ககாலக் கையெழுத்துப் படிகள் முழுவதிலும் இழையோடும் கருத்தாகும். எதிர்காலக் கம்யூனிச சமுதாயம், மனிதர்கள் ஒருவருக்கொருவருடனும் இயற்கையுடனும் கொண்டுள்ள நல்லிணக்கத்துடன் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், மனிதர்களுக்கிடையேயும் மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையேயுமுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் என்று மார்க்ஸ் கருதினார்:
“மனிதன் இயற்கையைக் கொண்டு வாழ்கிறான் – இதன் பொருள், இயற்கை அவனது உடல் என்பதாகும். அவன் சாகாமல் இருக்க வேண்டுமானால், அவன் அதனுடன் இடைவிடாத பரிமாற்றத்தில் இருந்தாக வேண்டும். மனிதனின் பொருள்வகை , ஆன்மிக வாழ்க்கை இயற்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதன் பொருள், இயற்கை தன்னுடனேயே இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான்; ஏனெனில் மனிதன் இயற்கையின் பகுதி”.
(கார்ல் மார்க்சின் 1844 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் தத்துவஞான கையெழுத்துப் பிரதிகளில் ‘Estranged Labour’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் காணப்படும் சில வரிகள் இவை – மொழி பெயர்ப்பாளர்)
இந்த எழுத்துகளில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவுகள் குறித்த நமது புரிதல்களுக்கு மார்க்ஸ் முக்கிய பங்களிப்புகளை செய்திருக்கிறார். நீண்டகாலமாகவே, மனிதர்களை இயற்கையின் இதர பகுதியிலிருந்து வேறுபட்டவர்களாகவும் அதற்கு மேலானவர்களாகவும் பார்த்து வந்த தத்துவ மரபைக் கடந்து வரும் மார்க்ஸ், மனிதர்களின் உயிர் வாழ்வுக்கும் அவர்களது ஆன்மிக வளர்ச்சிக்கும் அவர்கள் இயற்கையுடன் கொண்டுள்ள சரியான, செயலூக்கமுள்ள உறவுகள் அவசியமானவை என்று கூறுகிறார். அதேவேளை, இந்த உறவுகள் முதலாளித்துவ சகாப்தத்தில் தவறான திசையில் செல்வதையும் புரிந்து கொள்கிறார்.
முதலாளித்துவம்தான் பிரச்னை – மனிதகுலமல்ல…
தமது பிற்கால எழுத்துகளில் மார்க்ஸ், இந்தப் பகுப்பாய்வை ‘உற்பத்தி முறை’ என்னும் தமது முக்கியக் கருத்தாக்கத்தைக் கொண்டு வளர்த்துச் சென்றார். வரலாற்றிலும் உலகிலும் இதுவரை பல்வேறு வடிவங்களில் நிலவி வந்துள்ள சமுதாயங்கள் ஒவ்வொன்றும், இயற்கை மீது உழைப்பைச் செலுத்தியும் இயற்கையைக் கொண்டும் தனது உயிர் வாழ்வுக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்காக மானுட உழைப்பை ஒழுங்கமைப்பதற்குத் தனக்கே உரிய வழியைக் கொண்டிருந்தது என்று கூறினார். எடுத்துக்காட்டாக, வேட்டையாடியும் உணவுப் பொருள்களைத் தேடித் திரட்டியும் வாழ்கிற சமுதாயம் வழக்கமாகவே சமத்துவமானதாகவும் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாத வகையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதாகவும் இருந்தது. ஆனால், நிலப்பிரபுத்துவ அல்லது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமுதாயங்கள் ஆழமான ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டல்தன்மையும் கொண்ட சமூக உறவுகளைக் கொண்டிருந்தன. எனினும், அவற்றிடம் தொழிற்துறை முதலாளித்துவத்தில் இருப்பது போன்ற வரம்பற்ற முறையில் பரந்து விரிந்த, நாசகரமான இயக்காற்றல் இருக்கவில்லை.
“மக்கள் தொகைப் பெருக்கம்”, “பேராசை”, “ மனித இயல்பே இப்படித்தான்” என்பன போன்ற அருவமான கருத்துகளைக் கொண்டு நாம் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சினைகளை விளக்கும் எந்த முயற்சியையும் “ உற்பத்தி முறை” என்னும் கருத்தாக்கம் தகர்க்கின்றது. ஒவ்வொரு வகையான சமுதாயமும் தனக்கேயுரிய சூழலியலைக் கொண்டிருக்கின்றது. நாம் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்னைகள் முதலாளித்துவத்தினால் ஏற்பட்டவை, மனித நடத்தையால் அல்ல. இந்தப் பிரச்சினைகளைக் கையாள வேண்டுமானால் நாம் இயற்கை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முதலாளியம் அதனுடன் உறவு கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்ஸுமே இந்தப் பிரச்சினை குறித்த விவாதத்தில் முக்கிய தொடக்கத்தை ஏற்படுத்தினார். 1860ஆம் ஆண்டுகளில், அக்காலத்தில் கவலை தரக்கூடியதாக இருந்த பிரச்சினையை, மண்ணின் சீரழிவு என்ற பிரச்சினையைப் பற்றி எழுதினார். நகரத்துக்கும் கிராமத்துக்குமுள்ள பிரிவினை, மண் வள இழப்புக்குக் காரணமாக உள்ள அதேவேளை சுற்றுச்சூழல் மாசு, நோய்கள் என்னும் சுமைகளை நகர்ப்புற மையங்கள் மீது ஏற்றுவதை அவரது எழுத்துகள் எடுத்துக் காட்டின. நவீன கால எழுத்தாளர்கள் இதே கருத்தை மேலும் வளப்படுத்தினார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் : ஜேம்ஸ் ஓ கொன்னொர்; மனித சமுதாயத்துக்கும் இயற்கைக்குமிடையே ‘சூழலியல் விரிசலை’ உண்டாக்கும் போக்கு முதலாளித்துவத்தில் எப்போதும் இருக்கிறது என்பதை நிறுவிய சமூகவியலாளர் ஜான் பெல்லாமி ஃபோஸ்டர்; இங்கிலாந்தில் சிவப்பு- பச்சைக் குழுவினரோடு (மார்க்ஸியப் பார்வையையும் சூழலியல் பார்வையையும் இணைத்துச் செல்பவர்கள் – மொழிபெயர்ப்பாளர்) இணைந்திருப்பவர்கள்
மார்க்ஸின் கருத்துகள் இன்றியமையாதவை, ஆனால் பிரச்சினைக்குரியவை என்று நான் மேலே கூறினேன். உற்பத்தித்திறனிலும் இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதிலும் முதலாளித்துவம் சாதித்த பெரும் முன்னேற்றங்களைப் போற்றிப் புகழ்ந்து, இவற்றின் பலன்கள் ஒவ்வொருவருக்கும் போய்ச் சேர்வதற்காகவே சோசலிசம் தேவை என்று கூறும் இடங்கள் மார்க்ஸின் எழுத்துகளில் உள்ளன. மார்க்ஸின் இந்த விளக்கத்தை அண்மைக்கால ஆய்வுகள் கேள்விக்குட்படுத்தியுள்ளன என்றாலும், வரலாற்றுரீதியாக மார்க்ஸின் இந்தப் பார்வைதான் மிகவும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. ரஷியாவை துரிதமாகத் தொழில்மயமாக்குவதற்கான ஸ்டாலினியத் தூண்டுதலின் பேரழிவுமிக்க பின்விளைவுகளுக்கு மார்க்ஸின் மேற்சொன்ன கருத்து காரணம் என்று வாதிட முடியும்.
ஆனால் வேறொரு விஷயமும் இருக்கிறது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சியை முதலாளித்துவத்தால் சாதிக்க இயலாது என்றும் இயற்கையின் பிற பகுதியுடன் அறிவுபூர்வமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சோசலிசம் இன்றியமையாதது என்றும் புதிய, சூழலியல் மார்க்ஸியவாதிகள் சரியாகவே வாதிடுகின்றனர். ஆயினும், சமுதாயத்தில் சோசலிச மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடைய ஓர் இயக்கத்தைக் கட்டுவதற்கு, மனிதர்களின் பொருள்வகைத் தேவைகள், ஆன்மிகத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் அழுத்தம் கொடுத்த மார்க்ஸின் முந்தைய எழுத்துகளை நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். இயற்கையின் பிற பகுதியுடன் கொள்ளும் உறவின் மூலமே – இயற்கையை மதிக்கின்றதும் மனிதர்கள், இயற்கை ஆகிய இரண்டிற்கும் முழுமையான பலனைத் தரக்கூடியதுமான உறவின் மூலமே – இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.சுருக்கமாகக் கூறினால், நமக்கு பசுமையான, அதேபோல சூழலியலில் அக்கறை கொண்ட மார்க்ஸியம் தேவைப்படுகின்றது.
*theconversation.com என்னும் இணையதள ஏட்டில் ஜூன் 5, 2018 அன்று எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர் டெட் பென்டன் (Ted Benton) எழுதிய ” What Karl Marx has to say about today’s environmental problems ” என்னும் கட்டுரை, மந்த்லி ரெவ்யூ வின் இணையதள ஏடான mronline.org இல் மறு வெளியீடு செய்யப்பட்டது.
உயிர் எழுத்து, ஜூலை 2018 ல் முதன்முதலில் வெளிவந்தது.
தோழர் எஸ்.வி.ஆர் பதிப்பித்த கார்ல் மார்க்ஸ் 200 என்னும் நூலிலும் இடம் பெற்றுள்ளது இக்கட்டுரை.