இந்தியக் குடிசை – செ. சண்முகசுந்தரம்
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் ரூசோவின் மாணவரான பெர்னார்தன் தெ சேன்பியேர் இந்திய சமூகத்தைப் பற்றி 1790ல் எழுதிய ஒரு குறுநாவல் “இந்தியக்குடிசை”. தமிழறிஞர் இரா.தேசிகப்பிள்ளை 1968ம் ஆண்டில் இந்நூலை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு பெயர்த்தார். சிந்தனைப்பதிப்பகம் இக்குறுநாவலை வெளியிட்டிருந்தது. மிகச்சிறந்த பிரெஞ்சு அறிஞரான தெ சேன்பியேர் 18ம் நூற்றாண்டு இந்திய தேசத்தில் சாதியும், பார்ப்பனியமும் சமூகத்தில் நிகழ்த்தியுள்ள கேடுகள் குறித்தும், அக்கால சமூகச் சூழல் குறித்தும் மிகச்சிறப்பாக இந்நாவலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். இன்றைய இந்திய சாதி சமூகத்தைப் பற்றி ஏராளமான இலக்கியங்கள் அணிவகுத்துக் கிடக்கின்றன. தலித் மக்களின் வாழ்வியலை எடுத்து இயம்பும் தலித் இலக்கியங்கள் இன்று எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளன.தீண்டாதாரின் உச்சபட்ச அறிவுக்கோயிலான அண்ணல் அம்பேத்கர் பகுத்து எழுதாத துறை என்று இன்று எதுவும் இல்லை. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலத்தில் இந்தியாவில் சாதியக் கொடுமைகள் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது இருக்கும்போது இந்நாவல் தீண்டத்தகாத மக்களின் கொடுமையான சூழலை விவரிக்கிறது.
இந்நாவல் காலத்துக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டன் மாநகரத்தில் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சங்கம் ஒன்று தொடங்கப்படுகிறது. உயரிய குறிக்கோள்களுடன் தொடங்கப்படும் அச்சங்கத்தில் தேர்ந்தெடுத்த சில அறிஞர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அதன் குறிக்கோள்களுள் முக்கியமானது என்னவென்றால் இவ்வுலகம் முழுமைக்கும் அவ்வறிஞர்கள் சென்று உலகம் முழுவதிலும் பரந்து விரிந்திருக்கும் மானுட சமுதாயத்தினைப் பற்றி அறிந்து வரவேண்டும். வெவ்வேறு நாடுகளிலும் அரசர்களும், மதத்தலைவர்களும், சாதாரண மக்களும் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், சமய உண்மைகள், அரசாட்சி முறைகள் என சகல துறைகளைப் பற்றியும் அறிந்துவரவேண்டும். மொத்தம் 20 அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு அறிஞரும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று உண்மைகளைக் கண்டுவரவேண்டும். அதற்கேதுவாக எவ்வுண்மைகளை அவர்கள் அறிந்துவரவேண்டும் என்பது அடங்கிய சுவடியும் அவர்களுக்கு தரப்பட்டது.
தாங்கள் செல்லும் வழியில் விவிலியத்தின் பழைய சுவடிகள் எங்கு இருந்தாலும் அது என்ன விலையாக இருந்தாலும் அதனை வாங்கிவரவேண்டும் அல்லது அதன் பிரதியையாவது கொண்டுவரவேண்டும். பயணத்திற்கு ஆகும் மொத்த தொகையும் அவர்களுக்கு தரப்பட்டது. முக்கியமாக சூரியனே அஸ்தமனமாகாத தேசமாக இங்கிலாந்து தேசம் அக்காலத்தில் இருந்தபடியால் உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் இங்கிலாந்து நாட்டின் ஆட்சி அலுவலர்களுக்கு கடிதங்களும் கொடுத்தனுப்பப்பட்டன. எல்லா கலைகளும், தத்துவங்களும், வேதங்களும் செழித்து வளரும் இந்தியாவுக்கு மிகச்சிறந்த பண்டிதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவருக்கு இந்திய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகள் தெரிந்த ஒரு பன்முகப்புலவர். ஐரோப்பா மற்றும் துருக்கி வழியாக அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஐரோப்பாவின் புகழ்மிக்க நூல்நிலையங்களையும், கலைக்கூடங்களையும், சமயச் சின்னங்களையும் அவர் பார்வையிடுகிறார். மிகச்சிறந்த நூலகங்களில் அவர் மூழ்குகிறார். தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விச் சுவடிகளுக்கு விடைகளைத் தேடியபடியே அவர் அவ்விடங்களை வலம் வருகிறார். அரபு நாட்டிற்கும் செல்கிறார். பின்னர் அவர் டில்லி நகரை அடைகிறார். தனது மூன்றாண்டு பயணத்தின் முடிவில் அவர் காசியில் இருக்கிறார்.
இந்தியாவின் ஏதென்ஸ் (கிரீஸ் நாட்டின் பழைய சிறந்த நகரம்) என்று அழைக்கப்படும் காசியில் பார்ப்பனர்கள் பலரோடும் அவர் உரையாடுகிறார். அவர் கடந்து வந்த இந்த மூன்றாண்டு காலத்திலும் மொத்தமாக அவர் சேகரித்த பழைய நூல்கள், குறிப்புகள், ஆதாரங்கள், மூலப்புத்தகங்கள் கையேடுகள் இவை அனைத்தும் தொண்ணூறு மூட்டைகளில் ஒன்பதாயிரத்து ஐநூற்று நாற்பத்தைந்து பவுண்டு எடை கொண்டவையாக மாறிப்போயிருந்தது. அரசக் கழகத்தினர் தனக்குக் கொடுத்திருந்த விடை காண வேண்டிய 3500 கேள்விகளுக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஐந்து பதில்களைச் சேர்த்திருந்தார் பண்டிதர். அதாவது பண்டிதரிடம் மட்டும் 17500 விடைகளுக்கான குறிப்புகள் இந்த 90 மூட்டைகளில் இருந்தன. ஆனால் ஒவ்வொரு விடையும் மற்றொரு விடையோடு பிண்ணிப்பிணைந்து இடியாப்ப சிக்கலில் இருந்ததுதான் உண்மை.
அரசக்கழகத்தின் மீதம் உள்ள 19 அறிஞர்களும் இவ்வாறே கொண்டு வந்தார்கள் என்றால் மொத்த விடைகளின் எண்ணிக்கை 350000 ஆகிவிடும். அரசக்கழகத்தினர் ஒவ்வொரு கேள்விக்கும் விடை அறிய இந்த 350000 விடைச் சிக்கல்களிலும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். தன்னளவில் தன்னுடைய பணி நிறைவடைந்துவிட்டது என்னும் முடிவுக்கு அந்த பண்டிதர் வந்தார். ஆனாலும் சுமையான இந்த பதில் மூட்டைகளை (குப்பைகளை) எண்ணி அவர் வருத்தமடைந்தார். அரசக்கழகத்தினர் எதிர்கொள்ளப்போகும் இச்சுமைகளை எண்ணியே அவர் வருத்தமடைந்தார். 3500 கேள்விகளுக்கும் இம்மூட்டைகளில் உள்ள பதில்கள் உண்மையாக அல்லாமல் சச்சரவு வருவாமானால் தனது நாட்டாரின் நிலையையும், அவர்கள் எதிர்நோக்கும் ஓய்வற்ற தன்மையையும் பண்டிதர் நினைத்துப் பார்த்தார். இச்சமயத்தில் பண்டிதரின் நிலையை கண்ணுற்ற ஒரு பார்ப்பனர், பண்டிதரின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வல்லவர் ஒருவரே எனவும் அவர் ஒரிஸ்ஸாவின் பூரி ஜெகந்நாதம் என்னும் கோவிலின் தலைமை அந்தணர்தான் அவர் என்றும் பண்டிதரிடம் தெரிவிக்கிறார். இங்கிலாந்து கிளம்பும் தனது முடிவை மாற்றிக்கொண்டு உடனடியாக ஜகந்நாதம் கோவிலுக்கு தனது பரிவாரங்களுடன் செல்கிறார் பண்டிதர்.
தலைமை அந்தணருக்குக் கொடுப்பதற்காக விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும், அவரது மனைவிக்கு பட்டுகளையும், சீடர்களுக்கு பட்டுக்கச்சைகள் செய்வதற்காக சீனப்பட்டுகளையும் அவர் தனது பெரிய பரிவாரங்களுடன் எடுத்துச்செல்கிறார். தனது 3500 கேள்விகளில் எக்கேள்வியிலிருந்து அந்தணரிடம் கேட்கலாம் என்று அவர் யோசனையில் மூழ்குகிறார். கங்கையாற்றின் உற்பத்தியையும் அதன் வெள்ளங்களையும் பற்றிக் கேட்பதா அல்லது இந்துமாக்கடலின் ஆண்டுக்கு இருமுறை மாறி மாறி வரும் நீரோட்டத்தைப் பற்றிய கேள்வியிலிருந்து தொடங்குவதா அல்லது பூமண்டலத்தைச் சூழ்ந்துள்ள பேராழியின் ஊற்றுக்களையும், கால முறைப்படி ஏற்படும் அசைவுகளையும் பற்றிய கேள்வியிலிருந்து தொடங்குவதா அல்லது பல பூசல்களுக்குக் காரணமாக இருக்கின்ற ஊழியின் விரிந்த தன்மையைக் குறித்து கேட்கலாமா அல்லது பலகோடி ஆண்டுகளாய் இருந்து வருகிறதென இந்தியர்கள் கூறும் பூமண்டலம் தோன்றிய காலத்தைப் பற்றிக் கேட்கலாமா என்றவாறு சிந்தனை செய்துகொண்டே செல்கிறார். இப்படியாக அவரின் சிந்தனை சென்று கொன்டிருக்கும்போது அவருக்கு திடீரென்று ஒரு சிந்தனை உதிக்கிறது. இதுகாறும் அறிவைக் கொண்டு உண்மையைத்தேடிய அனுபவத்தில் தனக்குக் கிடைத்த விடைகளும் குழப்பமாகவே இருப்பதைக் கண்ணுற்ற பண்டிதர், அந்தணரிடம் 3500 கேள்விகள் பற்றி கேட்டு குழப்பிக்கொள்வதற்குப் பதிலாக இம்மூன்று கேள்விகளை மட்டும் கேட்டால் என்ன என்று எண்ணுகிறார்:
1.எவ்வழியாக உண்மையைத் தேடவேண்டும்?
2.உண்மையை எங்கு தேடவேண்டும்?
3.மனிதரிடத்தில் உண்மையைக் கூறவேண்டுமா?
இவைதான் அம்மூன்று கேள்விகளும். இதுகாறும் அறிவைக் கொண்டு உண்மையைத் தேடி வந்திருக்கும் அப்பண்டிதர் தான் சேகரித்து வைத்திருக்கும் தொன்னூறு மூட்டைகளில் இருக்கும் அறிவுக்களஞ்சியங்களைக் கொண்டு உண்மையைத் தேடமுடியுமா என்னும் ஐயத்திற்கு வருகிறார். எனவேதான் தலைமை அந்தணரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தில் இம்மூன்று கேள்விகளை மட்டும் கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார். அக்காலத்தின் இந்தியாவில் மிகப்புகழ்பெற்ற சமயத் தலைவராக விளங்கிய ஜகந்நாதர் கோவிலின் தலைமை அந்தணர் இருப்பிடத்திற்கு பண்டிதர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
உண்மையை எவ்வழியாகத் தேடவேண்டும் என்ற தனது முதல் கேள்வியை அந்தணரிடம் கேட்கிறார். அதற்கு அந்தணர் “அந்தணர்கள் வழியாகத்தான் உண்மை அறியப்படும்” என்று பதிலுரைக்கிறார். ‘உண்மையை எங்கு போய்த் தேடவேண்டும்?’ என்ற பண்டிதரின் கேள்விக்கு “இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியில் எழுதப்பட்ட நான்கு வேதங்களிலே எல்லா உண்மைகளும் அடங்கிக் கிடக்கின்றன. அவைகளின் நுட்பம் அந்தணர்களுக்குத்தான் தெரியும்” என்று அந்தணர் உரைக்கிறார். தலைமை அந்தணரின் இப்பதிலுரைகளைக் கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்கின்றனர். ஆரவாரம் அடங்கியவுடன் பண்டிதர் அந்தணரைப்பார்த்துக் கேட்கிறார்: “அந்தணர்கள் மட்டுமே உணரக்கூடிய நூல்களில் கடவுள் உண்மையைப் பொதித்து வைத்தாரென்றால், அந்தணர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாத பெரும்பாலான மக்கள் அவ்வுண்மைகளை அறியக்கூடாதென்று கடவுள் மறுத்திருப்பதாக அல்லவா அதற்கு அர்த்தம்.அப்படியானால் கடவுள் நேர்மையானவனல்லன்”. அதற்கு அந்தணர் கூறுகிறார்: “பிரம்மாவின் விருப்பம் அதுவே. அதற்கு மாறாக யாரும் எதுவும் செய்யமுடியாது”.
பண்டிதர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்கிறார்.”உண்மையை மக்களுக்குத் தெரிவித்தல் வேண்டுமா?”. அதற்கு அந்தணர்,”அந்தணரைத் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் அவ்வுண்மையைத் தெரியாமல் மறைக்கவேண்டும்” என்கிறார்.
இப்பதிலுரைகளைக் கேட்டுக் கோபமடைந்த ஆங்கிலேயப் பண்டிதர் “உண்மையில் அந்தணர்கள் நேர்மையற்றவர்களே” என்று கோபத்துடன் கூறுகிறார் . கடவுள் நேர்மையில்லாதவன் என்று கூறியபோது அமைதியாக இருந்த கூட்டம் அந்தணர்கள் நேர்மையற்றவர்கள் என்று கூறியபோது ஆத்திரம் கொண்டு ஆங்கிலேயப் பண்டிதருடன் தர்க்கம் செய்ய கிளம்புகிறது. பண்டிதர் அவையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார். தனது பரிவாரங்களுடன் கோவிலைவிட்டு வெளியேறுகிறார். தன்னை உறுத்தும் இம்மூன்று கேள்விகளுக்குமான விடையைத்தான் தெரிந்து கொள்ளாமலேயே தனது நாடு திரும்புகிறோம் என்ற வருத்தத்தோடு அவர் போய்க்கொண்டிருக்கும்போது சூறைக்காற்றுடன் பெருமழை பெய்கிறது. அக்கொடும் இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க நினைத்து அப்பரிவாரங்கள் ஒரு காட்டில் இருக்கும் குடிசை ஓரம் ஒதுங்குகிறார்கள்.
பரிவாரங்கள் அக்குடிசையை அணுகிப் பார்த்ததும் அங்கு ஒரு தீண்டத்தகாதவன் தனது மனைவியுடனும், குழந்தையுடனும், தான் வளர்க்கும் நாயுடனும் இருப்பது கண்டு பண்டிதனிடம் வந்து அக்குடிசையில் ஒரு பறையன் இருக்கிறான் என்று கத்துகிறார்கள். (இந்நூலில் வரும் பறையன் என்னும் வார்த்தை அப்படியே இங்கு பயன்படுத்தப்படுகிறது.) உடனே அப்பண்டிதன் ஏதோ மிருகம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு தனது கைத்துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பறையன் என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று வினவுகிறார். அதற்கு அப்பரிவாரத்தில் இருக்கும் ஒருவன் “நம்பிக்கையும் சட்டமும் இல்லாதவன்” என்று பதில் சொல்லுகிறான். அதற்குள் அப்பரிவாரத்தின் தலைவனான இராஜபுத்திரன் ஒருவன் பண்டிதரிடம் சென்று, “பறையனென்பவன் மிக இழிவான குலத்தைச் சேர்ந்த இந்தியன். அவனால் தீண்டப்பட்ட மாத்திரத்திலேயே அவனைக் கொன்று விடுவதற்கு அனுமதியுண்டு. அவன் இல்லத்தில் நாம் நுழைந்துவிட்டால், ஒன்பது பிறையளவும் நாம் எக்கோவிலுள்ளும் நுழையமுடியாது. நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒன்பது முறை கங்கையில் முழுகவேண்டும். அத்தனை முறை ஓர் அந்தணர் கையினால் பசு மூத்திரத்தைக் கொண்டு தலை முதல் கால் வரையில் கழுவிக்கொள்ளவேண்டும்” என்றான். இந்தியப் பரிவாரங்கள் அனைவரும் “நாங்கள் ஒரு பறையன் வீட்டில் நுழையமாட்டோம்” என்று கூக்குரலிட்டனர். அதற்கு அந்தப்பண்டிதர் “நீங்கள் வேண்டுமானால் இங்கேயே இருங்கள். என்னை மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள எல்லாக் குலங்களும் எனக்கு ஒன்றே” என்று சொல்லிவிட்டு குடிசையை நோக்கிச் சென்றார்.
அக்குடிசையில் அன்று இரவு அப்பண்டிதருக்கும், அப்பறையனுக்கும் நடக்கும் உரையாடல் நாவலின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளது. பெரும் காடு ஒன்றில் மிருகங்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் மத்தியில் ஒருமனிதன் தன்னந்தனியாக குடும்பம் நடத்துகிறான் என்பதை நினைக்கும்போது பண்டிதர் ஆச்சர்யத்தின் எல்லைக்கே செல்கிறார். அவனின் கடவுள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் பண்டிதர் கேள்வி எழுப்புகிறார். இயற்கைதான் தான் வணங்கும் தெய்வம் என்று அம்மனிதன் கூறுகிறான். எழுதப்படிக்கத் தெரியாத தனக்கு இயற்கைதான் எல்லாமும் என்கிறான். பகல் முடிந்து இரவுத் தூக்கத்தை எதிர்பார்ப்பது போல இவ்வாழ்க்கை முடிந்து வாழ்வின் முடிவில் ஏற்படப்போகும் சாக்காட்டை இன்முகத்துடன் எதிர்பார்ப்பதாக அவன் கூறுகிறான். அம்மனிதனே தான் கண்டடைந்த ஞானியாக இருக்கமுடியும் என்றுணர்ந்த பண்டிதர் தான் கேட்க விரும்பிய மூன்று கேள்விகளை அவனிடம் கேட்க முடிவு செய்தார்.
உண்மையை எவ்வழியில் தேடவேண்டும் என்ற முதல் கேள்விக்கு அம்மனிதன் கூறுகிறான்: “இயல்பான உள்ளத்தைக் கொண்டுதான் உண்மையைத் தேடவேண்டும். புலன்களும், புத்தியும் தவறிவிடக்கூடும். ஆனால் இயல்பான உள்ளம் தான் ஏமாற்றமடைய நேரினும் எப்பொழுதும் பிறருக்கு ஏமாற்றத்தைத் தருவதில்லை” என்று உரைக்கிறான். ஆழமான கருத்துகள் நிறைந்துள்ள இப்பதிலை பண்டிதர் உடனே ஒப்புக்கொள்கிறார். அவனை ஒரு ஞானியாக உணர்கிறார்.
தனது அடுத்த கேள்வியான “உண்மையை எங்குத் தேடவேண்டும்?” என்று அவனிடம் கேட்கிறார். அதற்கு அம்மனிதன் “உண்மையை மனிதனிடத்தில் தேடவே கூடாது. இயற்கையிடத்தில்தான் தேடவேண்டும்” என்கிறான். உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஊற்றாயிருப்பது இயற்கைதான். மனிதர்கள் நூல்களைப் படைக்கிறார்கள். ஆனால் இயற்கையோ பொருள்களைப் படைக்கிறது. நூல் மனிதனின் கலையாயிருப்பது போல இயற்கை இறைவனது கலையாயிருக்கிறது என்றும் பண்டிதனுக்கு அம்மனிதன் உரைக்கிறான்.
உண்மையை எல்லோருக்கும் சொல்லலாமா?என்னும் தனது இறுதி கேள்வியை அம்மனிதனிடம் கேட்கிறார் பண்டிதர். இயல்பான உள்ளத்தையுடைய மக்களுக்குத்தான் உண்மையைச் சொல்லவேண்டும். உண்மையைத்தேடும் நன் மக்களுக்குத்தான் உண்மையை உரைக்கவேண்டும். உண்மைகளை வெறுத்துத்தள்ளும் தீயோர்க்கு உண்மைகளை சொல்லலாகாது என்று அம்மனிதன் பண்டிதரிடம் கூறுகிறார். தனது மூன்று கேள்விகளுக்கும் மிகச்சிறந்த பதிலை அளித்த ஞானியான அப்பறையனை பண்டிதர் போற்றுகிறார். பல தேசத்தவர்கள் வணங்கிச்செல்லும் ஜெகந்நாதரின் தலைமை அந்தணர் தனக்கு தெளிவு செய்ய முடியாத பல மெய்யறிவுக் கேள்விகளை காட்டில் தனது மனைவியோடு வசிக்கும் ஒரு பறையன் தீர்த்து வைப்பது கண்டு உள்ளம் நெகிழ்ந்து போகிறார் ஆங்கிலேயப் பண்டிதர்.
அவனோடு பல தத்துவ விசாரணைகளில் ஈடுபடுகிறார். கடுமையான துன்பம்தான் ஒரு மனிதனை உண்மையை உணர வைக்கிறது என்ற அம்மனிதனின் மொழியை மறுத்து பண்டிதர் பேசுகிறார். துன்பம் மனிதர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிறது. உள்ளத்தையும், அறிவையும் அது சாய்த்து விடுகிறது. எவ்வளவுக்கு மக்கள் துன்பமடைகிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் இழிவுள்ளவர்களாகவும் எதையும் எளிதில் நம்புகிறவர்களாகவும் எவருக்கும் அடங்கிக் கிடக்கிறவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று பண்டிதர் உரைக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பறையன் பண்டிதரிடம் பற்பல உண்மைகளைச் சொல்லி விளக்குகிறான். நான் கண்ட மனிதர்களிலேயே நீதான் மிகச்சிறந்தவனாக இருக்கிறாய். ஆனால் உனது குலம் மட்டும் ஏன் தாழ்ந்த குலமாக இருக்கிறது? அந்தணர் குலம் ஏன் மிக உயர்ந்த குமலாக இருக்கிறது? என்று பண்டிதர் வினவுகிறார்.
அதற்கு அம்மனிதன், அந்தணர்கள் தொன்மையில் தாங்கள் பிரமதேவனின் தலையினின்று வெளிப்பட்டதாகவும், பறையர்கள் அவன் கால்களினின்று இறங்கினதாகவும் கூறுவதுதான். மேலும் பல கட்டுக்கதைகளைக் கூறி எங்களை மிகவும் கீழ்த்தர நிலைக்கு அந்தணர்குலத்தினர் விட்டுவிட்டார்கள். தங்களுக்கு ஒரு தெய்வீக மூலத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் அக்கறையில் செயல்படும் அந்தணர்களின் சதிதான் அந்த வரலாறு. அவ்வரலாற்றை நம்ப மறுத்த எங்கள் குலத்தவரை பறையர்களாக்கிவிட்டார்கள் என்று பண்டிதரிடம் அவன் உரைக்கிறான். எல்லோராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் நீ உயிர்வாழ்வதற்கு என்ன செய்தாய்? என்று மிகவும் அக்கறையோடு கேட்கும் பண்டிதருக்கு தன்னுடைய நீண்ட துன்பமான வரலாற்றை எடுத்துரைத்தான். கிராமப்புறங்கள், வயல்வெளிகள், நகரங்கள் என்று எங்கெனும் அலைந்து திரிந்த அம்மனிதன் தீண்டத்தகாதவன் என்னும் ஒரே காரணத்திற்காக தான் எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டதாகச் சொல்கிறான். இந்நிலையில் சதி ஏறுவதற்கு ஆயத்தமாக இருந்த ஒரு பிராமணப்பெண்ணின் மனத்தை மாற்றி இருவரும் காதலர்களாகி காட்டுக்குள் ஓடி, இதோ இங்கேயே எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும் அவன் கூறுகிறான்.
பண்டிதருக்கும், அப்பறையனுக்கும் நடைபெற்ற உரையாடலின் வழி நூலின் ஆசிரியர் சாதி வேறுபாடுகளையும், தீண்டாமை வழக்கத்தையும், பார்ப்பனர்களின் சூழ்ச்சித்திறத்தையும் அலசுகிறார். முகலாய சக்ரவர்த்திகளின் ஆடம்பரங்களையும், அரசியல் குழப்பங்களையும் விளக்குகிறார். தீண்டத்தகாத மனிதன் பட்ட எல்லா துன்பங்களும் அவனை உள்ளத்தில் வலுக்கொண்டவனாக மாற்றிவிட்டது. சமயம் என்னும் ஒன்று அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பங்களைக் கொடுத்துவிட்டது. அவன் கூறுகிறான்: “சமயம் என்பது என்னை அவ்வளவு அருவருப்புக்குரியவனாக்கிவிட்டது! உயிருள்ளவர்களிடையே எனக்கு நண்பர்கள் கிடையாது. ஆகையால் இறந்து பட்டவர்களிடையே எனக்கு நண்பர்களைத் தேடினேன். சுடுகாட்டுக்குச் சென்று அங்கே சவக்குழிகளின்மீது உறவினர்களின் வாஞ்சையால் தரப்படும் உணவை உண்டு வந்தேன். என் துன்பங்களின் அடிப்படையிலேதான் என் இன்பத்தின் அடிப்படையைக் கண்டேன்” என்றும் கூறுகிறான்.
அன்றிரவு இப்படியாக உரையாடிவிட்டு அப்பண்டிதர் அவனுடைய குடிசையில் தங்குவதற்கு தன்னுடைய கட்டிலை வழங்கினான். மறுநாள் காலை வரை அம்மனிதனும், அவன் மனைவியும் உறங்காது விழித்திருந்தனர். அதனை அறிந்து பண்டிதர் மிகவும் வருத்தம் அடைந்தார். பின்னர் காலை உணவை அக்குடிசையில் முடித்துக் கொண்டு அம்மனிதனிடம் விடை பெற்றுக்கொண்டு அப்பண்டிதர் கிளம்பினார். பண்டிதர் விலையுயர்ந்த தனது பல பொருட்களை அவனுக்குத் தர முடிவெடுத்தாலும் அவன் அப்பொருட்களை வாங்க மறுத்துவிடுகிறான். ஏழ்மை எங்களிடமிருந்து திருடர்களைத் தொலைவில் நிறுத்தும் ஒரு பெரிய மதிலாகும் என்று கூறி அவன் மறுத்துவிடுகிறான். இறுதியில் புகை பிடிக்கும் குழாயை மட்டும் அவர்கள் தங்களுடையதை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியாக நாவல் முடிவடைகிறது.
பெரியார் பிறப்பதற்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டில் நிலவிய கொடுமையான தீண்டாமைப் பழக்கத்தையும், பார்ப்பனர்களின் சூழ்ச்சித் திறத்தையும் பிரெஞ்சு தேசத்து எழுத்தாளரும் அறிஞருமான பெர்னார்தன் தெ சேன்பியர் இந்நாவல் வழியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் என்றால் அதனை ஆச்சர்யத்துடன் தான் பார்க்கவேண்டியுள்ளது. அன்றைய ஆட்சிக்கட்டிலில் முகலாயர்கள்தான் இருந்தார்கள் என்றாலும் அக்காலத்திய இஸ்லாமிய சமயச் சான்றோர்கள் எல்லோரும் இந்து சமயத்தின் அதிபதியாக விளங்கிய ஜெகந்நாதர் கோவிலின் தலைமை அந்தணரை வழிபட்டு அவரது சொற்படி நடந்து வந்திருக்கின்றனர் என்பதையும் இந்நாவலின் வழி ஆசிரியர் காட்டுகிறார். அதாவது அவர்கள் இந்து சமயத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் இந்து சமயத்தின் உயர்ந்த குடிகளாகக் கருதப்படும் பிராமணர்களை வழிபாடு செய்தும், போற்றியும், அதன் வழி இஸ்லாம் உள்ளிட்ட இச்சமுதாயதில் சாதி அடுக்குகள் மிக பலமாக நிலவியதையும், பிராமணியத்தின் மேலாண்மையை அனைத்து ஆட்சிக்குடிகளும் ஆதரித்ததையும் ஆசிரியர் காட்டுகிறார். இயற்கை என்னும் ஒரு காரணிதான் எல்லா மனிதர்களையும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் ஒன்றிணைத்து வைக்கிறது என்னும் தத்துவ விசாரணையையும் இந்நாவலின் வழி ஆசிரியர் நிகழ்த்துகிறார்.
இந்தியக் குடிசை(நாவல்)
முதல் பதிப்பு,1967,சிந்தனைப் பதிப்பகம்
வெளியீடு : திராவிடர் கழக(இயக்க) வெளியீடு
விலை :ரூ 35/-