ஆதி இந்தியர்கள் – செ. சண்முகசுந்தரம்
ஒரு தேசத்தின் கடந்தகால வரலாறு என்பது அது எதிர்காலத்தில் செல்ல எத்தனிக்கும் பாதையைத் தீர்மானிக்கவல்லது. அத்தேசத்தில் மேலோட்டமான அரசியல் செயற்பாடுகளுக்கு மத்தியில், அடியில் கனன்று கொண்டிருக்கும் கடந்தகாலத்திய பண்பாட்டு, கலாச்சார வெம்மையானது, அத்தேசத்தின் எதிர்காலப் பண்பாட்டு, கலாச்சார வடிவங்களைத் தீர்மானிக்க வல்லவை. கடந்த நூறு ஆண்டுகளின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மை வழிநடத்தும் என்றால், நம்முடைய இப்போதைய பழக்கவழக்கங்களும், கலாச்சாரங்களும் அடுத்த தலைமுறைக்கு, அடுத்த நூறு வருடங்களுக்கு மட்டுமல்ல, அதன் சில கூறுகள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூட நம்மை வழிநடத்திச் செல்லும். சீதையை சிதையில் ஏற்றிய பண்பாட்டின் தொடர்ச்சிதான் ஹத்ராசின் இளம்பெண்ணின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் சிதையில் போட்டு எரிக்க வைத்தது. எல்லாமும் பண்பாட்டின் நீட்சிதான். பெண்களின் மீதான அதிகாரமும், சாதி அதிகாரமும்தான் நம் தேசத்தின் வாழ்வியலை மிகுதியாகத் தீர்மானம் செய்கிறது.
நம் தேசத்தின் கடந்தகால வரலாறும்கூட நமது பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடித்தளமாக அமைகிறது. அதனால்தான் எதிர்காலப் பண்பாட்டைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்மானித்துக் கொள்வதற்காகத் திரிக்கப்படும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வ(ந்தி)ரு(க்)கிறது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, உலகத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தீர்மானிக்கும் பகுதிகளாக தெற்காசியா, சீனா மற்றும் மெசபடோமியா நாகரிகங்கள் இருந்து வந்திருக்கின்றன. தொடர்ச்சியான மனித நாகரிகங்கள் தெற்காசியா மற்றும் சீனப் பகுதிகளில் நிலவி வந்திருக்கின்றன.
நம் தேசத்தின் கலாச்சார, பண்பாட்டின் அடிப்படையே “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் சொற்றொடரில் அடங்கியிருப்பதாக நம் சிறுவயது முதல் நமக்கு பாடம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறை வாழ்வு அப்படிப்பட்டதாக இருக்காது. நாடு முழுவதற்கும் ஒரே ரேசன் அட்டை, ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்), ஒரே மொழி (இந்தி) என்பவைகளைக் கூட ஆதிக்கத்தின் கூறுகளாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் உயர்சாதிப் பெண்ணும், தலித் ஆணும் திருமணம் செய்துகொண்டுவிட்டால் இந்தச் சொற்றொடர் எல்லாம் காணாமல் போய்விடும். தலித் பெண்களை மானபங்கம் செய்வதற்கும், அவர்களை நுகர்ந்துவிட்டுப் பின் கொலை செய்வதற்கும் இத்தொடர்கள் பயன்படலாம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால சாதியும், அதன் படிநிலைகளும், இவற்றுக்கெல்லாம் மதரீதியான ஒப்புதலைத் தரும் மனுதருமம் முதலிய இந்துச் சட்டங்களுமே நாம் இப்போது அனுபவிக்கும் கலாச்சார, பண்பாட்டு சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் என்பதை கசப்பு மருந்துபோல ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
அதனால்தான் நம் அடுத்த தலைமுறைக்கான பண்பாட்டை, கலாச்சாரத்தை எந்த வடிவத்தில் கடத்தித் தருகிறோம் என்பதில் இருக்கிறது நம் எதிர்காலப் பண்பாடும், கலாச்சாரமும். இன்றைய வாழ்வியலின் சீர்கேடானக் கூறுகளை தொய்வின்றி, அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது, அதன்வழி தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பதுதான் இன்றைய மத ஆதிக்கவாதிகளின் ஒற்றைக் குறிக்கோள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. மக்களின் பலஹீனமான பண்பாட்டுக் கூறான மதத்தின்வழி, வெகுமக்களின் அரசியலைக் கைப்பற்றி, அம்மக்களை பண்பாட்டு ரீதியில் அடிமைப்படுத்துவது, கலாச்சாரத்தைச் சீர்குலைப்பது, மூடப்பழக்க வழக்கங்களில் தள்ளிவிடுவது, ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து செயல்படுத்துவது, ஒற்றைக் கலாச்சாரத்தை நாடுமுழுவதும் அமல்படுத்த முயற்சிப்பது. இவைகள்தாம் அவர்களின் சீர்குலைவு முயற்சிகள். அவர்களின் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இல்லாத பழம் வரலாற்று, பண்பாட்டுக் கூறுகள் அவர்களால் தகர்த்து எறியப்படும், பாபர் மசூதியைப் போல. அவர்களின் செயலுத்தி இதுதான். அதனால்தான் நமது தேசத்தின் கடந்தகால வரலாறும், பண்பாடும் திரிக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் என்பவர்கள் எவர் என்பதும் கடந்தகாலங்களில் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்படி எதையும் திரித்துவிடமுடியாது எனக் கடந்த பத்து ஆண்டுகளின் தொல்லியல், மரபியல் ஆய்வு முடிவுகள் உலகத்திற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
தெற்காசியாவின் வளம்மிக்க நாகரிகமாக கிமு 6500 ஆண்டுகள் முதல் கிமு 2000 ஆண்டுகள் வரை திகழ்ந்த ஹரப்பன் நாகரிகம் அல்லது சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம், வேத நாகரிகம் என்று அழைத்து வரலாற்றைப் புரட்டிய பல சாகசக்காரர்களின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டது தொல்லியல் ஆய்வுகளும், அது சார்ந்த மரபியல் ஆய்வு முடிவுகளும். தெற்காசியாவில் கிடைத்த மண்டை ஓடுகளைக் கடந்த இருபது ஆண்டுகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் நவீன மரபியல் ஆய்வுமுறைகளில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியபோது பல அதிர்ச்சி தரத்தக்க முடிவுகள் இந்துத்துவர்களுக்குக் கிடைத்தன.
அதன்படி தொன்மையான ஹரப்பன் நாகரிகம் வேத நாகரிகமோ, ஆரிய நாகரிகமோ அல்ல. அது ஒரு மிகச்சிறந்த லௌகீக நாகரிகம். திராவிட நாகரிகம். தொன்மையான ஹரப்பன் நாகரிக எழுத்து வடிவங்கள் இன்னமும் வாசித்து அறியப்படவில்லை என்றபோதிலும் ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளின்படி, அவ்வெழுத்து தமிழின் முந்தைய எழுத்து வடிவமாக, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கவேண்டும். அதுபோல தொன்மையான இந்திய நாகரிகத்தின் வரலாறு கிமு 6500 ஆம் ஆண்டுகளிலிருந்து அல்ல, மாறாக கிமு 65000 1 ஆண்டுகளிலிருந்தே தொடங்கப்படவேண்டும். மரபியல் ஆய்வுகளின்படி கிமு 65000 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த பல்வேறு குழுக்களில் ஒருபகுதிக் குழுவானது வடமேற்கு இந்தியாவின் வழி, இந்தியவிற்குள் நுழைந்தது முதலாக இந்தியாவின் வரலாறு எழுதப்படவேண்டும்.
கிமு 7000 ஆண்டுவாக்கில் ஈரானிய ஜாக்ரோஸ் வேளாண் குடியினர் இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு வசித்த தொல் இந்தியர்களுடன் இனக்கலப்பு செய்து, வளமான ஹரப்பன் மக்களைப் பெற்றெடுத்தனர். இப்படியாக கிமு 6500 இலிருந்து கிமு 2000 வரை ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அரிய கூறுகளை தொல்லியலும், மரபியலும், மொழியியலும் நமக்குத் தேடித்தந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் என பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த ஹரப்பன் நாகரிகம் தன் சமகாலத்திய மெசபடொமிய நாகரிகத்தோடு வர்த்தக, கலாச்சார, பண்பாட்டு உறவுகளைப் பேணி வளர்த்தது. ஹரப்பன் நாகரிகம் உச்சநிலை அடைந்த கிமு 4000 முதல் கிமு 2500 வரையான காலத்தில் அதன் மக்கள் தொகை ஐம்பது லட்சம் என ஹரப்பன் ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். ஹரப்பன் நாகரிகத்தின் தொடக்கம் ஜாக்ரோஸ் ஈரானிய பழங்குடிகளின் வேளாண் செழிப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம். எந்தவொரு செழிப்பான நாகரிகத்திற்கும் வேளாண்மையே அடிப்படையாக இருக்கமுடியும். எதிர்காலத்தில் வீழ்ந்துபோகும் சமுதாயம் மட்டுமே விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வழக்கத்தை, சட்டங்களை தொடர்ச்சியாகக் கைகொள்ளமுடியும்.
முன்பே குறிப்பிட்டபடி ஹரப்பன் நாகரிகம் ஒரு லௌகீக நாகரிகம். வணிகநாகரிகம். மன்னர்கள் அந்நாகரிகத்தை நிர்வகிக்கவில்லை. மதகுருமார்கள் அங்கே இல்லை. எனவே கோயில்களோ, வழிபாட்டுத் தலங்களோ இல்லை. சாதியப்படிநிலைகள் இல்லை. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை. மன்னர்கள் இல்லாமையால் பெரும் கல்லறைகள் ஹரப்பன் நாகரிகத்தில் காணப்படவில்லை. எனவே பெரும் செல்வங்கள் அங்குள்ள கல்லறைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. மக்கள் அன்றைய பொழுதைச் சிறப்பாக வாழ்ந்து களித்துள்ளனர். மிகப்பெரும் வணிகத்தலங்களாக இருந்த அந்நகரங்களுக்கு உலகின் பிற நாகரிகங்களின் வணிகர்கள் தொடர்ச்சியாக வருகை புரிந்திருக்கின்றனர். வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட தராசுகளும், சீரான எடைக்கற்களும் அந்நாகரிகத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன. பொதுக்குளங்களும், பொது சேமிப்புக் கிடங்குகளும் அங்கு இருந்தன. பொதுக்கழிப்பிடங்களும், ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் வெளிச்சென்று பொது சாக்கடையில் கலந்து வெளியேறுவதற்கும் சிறப்பான தகவமைப்புகள் இருந்துள்ளன. அதாவது இன்றைக்கு விளிம்புநிலை மக்களுக்குக் கூட கிடைக்காத கழிப்பிட வசதிகள் சரியாக 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பன் நாகரிகத்தின் மக்களுக்குக் கிடைத்துள்ளன.
சீரான எடைக்கற்களும், முத்திரைகளும், இன்னமும் வாசித்தறியப்படாத அதன் எழுத்துகளும் அந்நாகரிகத்தின் உச்சங்கள். கோயில்களும், மதகுருமார்களும் இல்லை என்னும்போது அம்மக்களின் வாழ்வியலில் அந்நாகரிகத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தின் கூறுகளையும் நாம் தேடிடமுடியும். இதுதான் இத்தேசத்தின் உண்மையான கலாச்சாரக் கூறுகளாக இருக்கமுடியும். ஏற்கனவே வறண்டு போயிருந்த கக்கர் – ஹக்ரா ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஊன்றியிருந்த ஹரப்பன் நாகரிகம் நீர் மேலாண்மையிலும், நீரைச் சேமிப்பதிலும் மிகப்பெரும் வல்லமையைப் பெற்றிருந்தது. கிமு 2000 ஆண்டுகளின் முன்னும், பின்னும் ஏற்பட்ட நீடித்த, பெரும் வறட்சி ஹரப்பன் நாகரிகத்தை மட்டுமல்ல, சீன, மெசபடோமிய நாகரிகங்களையும் கூட அழிவுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஹரப்பன் நாகரிகம் குறித்த அனைத்து இடைச்செருகல்களும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 2017 ஜூன் 17 ஆம் தேதியன்று ‘ த இந்து’ வில் ‘How Genetics Is Settling the Aryan Migration Debate’2 என்னும் கட்டுரை வெளிவந்தது. இக்கட்டுரையை டோனி ஜோசப் எழுதியிருந்தார். தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்ட இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசிய மக்கள், ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்ற கோட்பாட்டிற்கு டிஎன்ஏ சான்றுகள் எப்படி ஆதாரமாகத் திகழ்கின்றன என்பதை இக்கட்டுரை விளக்கியிருந்தது. 2018 மார்ச்சில் bioRxiv இணையத்தளத்தில் 92 அறிவியலறிஞர்கள் இணைந்து எழுதி வெளியிட்ட ‘Genomic Formation of South and Central Asia’3 என்னும் ஆய்வறிக்கையும்கூட டோனி ஜோசப்பின் கருத்தை உறுதி செய்தது. “நடைமுறையில் உண்மைகளைத் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருப்பது பிரிவினை உணர்வுகளை குணப்படுத்தாது. அவை நம் பார்வைக்குப் புலப்படாமல் மேலும் அதிக வீரியத்துடன் வளர்வதற்கே அது வழிவகுக்கும்”4 என டோனி ஜோசப் குறிப்பிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்றைய இந்துத்துவ ஆட்சியாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒற்றைப் பரிமாணம் கொண்ட நாடு கிடையாது. அதன் மக்கள் பன்மைத்துவம் கொண்டவர்கள். தொல் இந்தியர்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள். ஈரானிய ஜாக்ரோஸ் வேளாண் இனக்குழு மக்களின் இந்திய வருகைக்குப் பின்னர் வளமான ஹரப்பன் நாகரிகம் பிறக்கிறது. புதிய இனமும் தோன்றுகிறது. கடைசியாக இந்தியப்பகுதிக்குள் வந்தவர்கள் ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியைச் சேர்ந்த ஆரிய இன மக்களே. ஆரியர்களின் வருகைக்கு முன்பு இங்கு வளமான திராவிட நாகரிகமும், திராவிட மொழிகளும் இருந்துவந்துள்ளன. ஆரியர்கள் தங்களோடு கொண்டுவந்திருந்த வழிபாட்டு முறைகளும், வேதப்பாடல்களும், சமஸ்கிருத மொழியும் இந்திய மண்ணுக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலம் தொடக்கம் ஆரியத்தின் மேலாண்மை இந்திய நிலப்பரப்பில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. இன்னும் இன்னும் அது ஆழமாகப் பரவிச் செல்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தியாவில் ஒற்றை சமஸ்கிருத மொழியாதிக்கமோ, வைதீக மதத்தின் ஆதிக்கமோ எதுவும் இருக்கமுடியாது. இவை அனைத்தும் ஆதிக்கக் கூறுகளே. இந்த ஆதிக்கக் கூறுகளே நம் நடைமுறை அரசியலிலும்கூட ஊடுருவி நிற்கிறது. இக்கூறுகளே நம் பண்பாட்டின் தொடர்ச்சியை ஆக்கிரமிக்கவும் செய்கின்றன.
திராவிட மொழிகளின் பழமையை, திராவிடக் கலாச்சாரத்தின் மேன்மையை, பண்டைய திராவிட மக்களின் வாழ்வியல் சிறப்பை இன்று எவரும் யாசகமாகக் கேட்டுப்பெறவேண்டிய அவசியமில்லை. கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற தொல்லியல், மரபியல், மொழியியல் ஆய்வு முடிவுகள் இந்திய நிலப்பரப்பின் தொன்மையின் சிறப்பைப் பகுத்து ஆராய்ந்திருக்கின்றன. இந்தியாவின் மூல நாகரிகத்தையும், மூல மொழிக்குடும்பத்தையும், மூலக் கலாச்சாரத்தையும் சிதைக்க இங்கு எவருக்கும் உரிமையில்லை. கனவில் கூட இச்சிதைக்கும் முயற்சியில் ஈடுபட எவருக்கும் யோக்கியதையும் இல்லை.
பின்குறிப்புகள்:
- இக்கட்டுரையில் வரும் புள்ளிவிபரங்கள் அனைத்தும் டோனி ஜோசப்பின் ‘ஆதி இந்தியர்கள்’ நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
- https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece, accessed on 24.10.2020
- https://www.biorxiv.org/content/10.1101/292581v1, accessed on 24.10.2020
- ‘ஆதி இந்தியர்கள்’ நூலின் முன்னுரையில் டோனி ஜோசப்.