அற்பத்தனமே அரசியலாக! (தன்னலன் – தற்புகழ்ச்சி – தன்னகங்காரம்)
அது 1999 அல்லது 2000 மாவது ஆண்டாக இருக்க வேண்டும். அப்போது நான் ஜாதி ஒழிப்பு இயக்கம் ஒன்றின் உறுப்பினராகச் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தேன். அதனை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பல தோழர்களையும் மக்களையும் சந்தித்து உறவாடும், சமூகத்தை மேலும் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றேன்.
அதோடு கூடவே அமைப்பில் தோழர்கள் சிலர் தமக்குள் முரண்படும் வேளையில் அவர்களிடம் பேசி முரண்பாட்டைக் களைந்து ஐக்கியப்படுத்தும் வேலையையும் இயக்கத் தலைமை எனக்கு வழங்கியதன் பொருட்டு நானும் என்னைவிட மூத்த மற்றொரு தோழரும் சிலபல முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தோம்.
இவ்வாறு தோழர்களது அய்க்கியத்தைக் கட்டிக் காப்பதில் அமைப்பை, குழுவை ஒற்றுமையாகக் கொண்டு செல்வதில் படாதபாடுபட்ட, போராடிய அனுபவம் ஏற்கனவே (25 வயதிலேயே) எனக்கு உண்டு. ஆனால் அதில் நான் வெற்றி பெற்றேனா? என்பது கேள்விக்குறிதான்.
ஆம் இதற்கு முன்பாகவே 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் முற்பகுதியிலும் சமூக விஞ்ஞானப் பயிலகம் என்ற அமைப்பின் கீழ் ஒரு பத்து இளைஞர்களை ஒற்றுமையாக வழி நடத்துவதற்கு முயற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு. இதையெல்லாம் இப்போது கூறுவதற்குக் காரணம் இன்று 2020-லும் கூட ஓர் அமைப்பு அல்லது ஒரு இயக்கம் அல்லது ஒரு கட்சி அல்லது ஒரு சங்கம் என்று எதுவொன்றாக இருந்தாலும் அதனுள் உள்ள ஒருசில தோழர்களுக்கு இடையே அய்க்கியம், ஒற்றுமை என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதோடு தோழர்களுக்கு இடையிலான உறவு போலித்தனமானதாகவும் ஒருவருக்கொருவர் கீழறுப்பு வேலைகளில் இறங்கக் கூடியவர்களாகவும் இருப்பதையும் நாம் காண முடிகிறது என்ற வருத்தத்தில் தான்.
தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை சுவைக்கக் கூடிய கட்சித் தோழர்களுக்கு இடையே இந்தப் போட்டி பொறாமை துரோகம் கழுத்தறுப்பு போன்ற செயல்கள் இருப்பதைக் கூட நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . ஆனால் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி/பதவி சுகம் காண விரும்பாத இயக்கங்களில் உள்ள தோழர்களுக்கு இடையேயும் இவ்விதமான முரண்பாடுகளும் குரோத உணர்வுகளும் நிலவுவதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது ?
ஒருவேளை பின் நவீனத்தவர்கள் கூறுவதைப் போல ஒரு இயக்கம் நிறுவன மயப் படும்போதே அதிகாரம் கட்டமைக்கப்படுவதும் அதிகாரப் போட்டி தோன்றி விடுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறதா? இது ஏதோ நமது தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இயக்கங்களில் மட்டும் காணப்படக்கூடிய ஒரு விரும்பத்தகாத நோய்க்கூறு என்று கருதமுடியாது. ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட அன்று 1950-களுக்கு முன்பு புரட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இது காணப்பட்டது தான் என்பதை சில ரஷ்ய, சீன நாவல்களை வாசிக்கும்போது நாம் அறிந்து கொள்கிறோம்.
குறிப்பாக ‘வீரம் விளைந்தது’, ‘கன்னிநிலம்’, ‘சூறாவளி’ போன்ற நாவல்களை வாசிக்கும்போது புரட்சிக்குப் பின்னான காலகட்டத்தில் கட்சித்தோழர்கள், நிர்வாகிகள், மத்தியில் நிலவிய பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு எதிரான சுயநலப் போக்குகளை அதிகார வர்க்க போக்குகளை இந்நாவல்கள் யதார்த்த பூர்வமாகவும் விமர்சன பூர்வமாகவும் எடுத்துக்காட்டின.
ஆக இந்த அரசியல் அற்பத்தனம் என்பது ஒரு உலகளாவிய நோய்தான் என்று நாம் சமாதானம் அடைந்து எளிதில் கடந்து விடவும் முடியாதபடி எதார்த்தத்தின் ஒவ்வொரு நிமிடமும் இந்நோயால் தாக்கப்பட்ட இயக்கத் தோழர்களது நடவடிக்கைகள் பல சீர்குலைவு வேலைகளைச் செய்கின்றன. இது ஓர் வேர் பூச்சி நோயைப்போல செயல்பட்டு ஒரு பரந்து விரிந்த மரத்தின் பூமிக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத வேர்களை அரித்து அழுகச் செய்கின்றன. நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் திடீரென்று ஒருநாள் அந்த மரம் சாய்ந்து வீழ்வதை தடுக்க முடியாது.
அற்பத்தனம் என்பது அவ்வளவு கொடியதா? தீவிரமானதா? என்று கேட்டால் ஆம்! என்றுதான் கூற வேண்டும். அந்தச்சொல் அற்பமானதாகத் தெரியலாம். ஆனால் அதன் அரசியல் மிகத் தீவிரமானது! வன்மம் நிறைந்தது! வஞ்சகமானது! உயிர்ப்பலி கேட்கக்கூடியது!.
பல முதலாளியத் தேர்தல் கட்சிகளின் உட்கட்சி மோதல் மற்றும் கொலைகளுக்கு காரணமாக இருந்ததும் இந்த அற்பத்தனம் தான். கட்சிகள் பலவாக உடைந்து போனதற்கும் காரணம் இந்த அற்பத்தனம் தான். அப்படிப்பட்ட இந்த அற்பத்தனத்தின் அடித்தளம் என்ன? வேறென்ன அப்பட்டமான சுயநலம் தான்.
தன்னகங்காரம்! தற்புகழ்ச்சி! தன்னலன்!
சுயநலமில்லாதவர்கள் இங்கு யாரும் இருக்கிறார்களா? அல்லது சுயநலம் உடையவர்கள் எல்லாம் இதுபோன்ற கீழறுப்பு வேலைகளைச் செய்யக் கூடியவர்களா? என்ற கேள்வி எழலாம். இது நியாயமான கேள்விதான். இங்கு அனைவருக்கும் சுயநலம் உள்ளது. அது தவறும் இல்லை. ஒரு தனி உடமைச் சமூகத்தில் சுயநலம் என்பது குற்றமும் இல்லை. ஆனால் இந்த சுயநலன் பொது நலனை – சமூக நலனை மறுக்காததாக இருக்க வேண்டும்.
மாறாக அற்பத்தனம் என்பது பொது நலனை – சமூக நலனைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. பொது நலனுக்கு உட்பட்டதாகத் தன் நலனை வைப்பதற்கு மாறாக தன் நலனுக்கு கீழ்ப்பட்டதாக சமூக நலனை மாற்றுகிறது. அதாவது மக்கள் நலன் சமூக விடுதலை என்பதற்காகத்தான் கொள்கை. அந்தக் கொள்கையைப் பரப்ப நடைமுறைப்படுத்துவதற்காகத் தான் இயக்கம் / கட்சி என்பதற்கு மாறாக தனக்கு அதிகாரத்தை, பதவியை, மரியாதையை வழங்கக்கூடிய இயக்கம் / கட்சி என்ற வகையில் அமைப்பு முதன்மை படுத்தப்பட்டு கொள்கையும் மக்கள் நலனும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இயக்கம் கட்சி வழிபாட்டுக்குரியதாக மாற்றப்படுகிறது.
இதன் எதிர்மறையாக பிற இயக்கங்கள் கட்சிகள் மீது வெறுப்பும் விரோதமும் ஏற்படுத்தப்படுகிறது. அதாவது மக்களது சமூக விடுதலைக்கு முன்னேற்றத்திற்குப் பாடுபடும் சக இயக்கங்களின் மீது சகோதர உறவும் பற்றும் ஏற்படுவதற்கு மாறாக விரோதமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு இந்த கொள்கையற்ற அமைப்பு வெறியே காரணமாகிறது. இந்த அமைப்பு அல்லது இயக்க வெறியானது நாளடைவில் தலைமை அல்லது தலைவர் வழிபாடாகவும் உருமாறி விடுகிறது.
இந்த உன்மத்த நிலை தான் ஒரு இயக்கம் அல்லது ஒரு கட்சித் தலைமை மக்கள் விரோத / சமூக விரோத நிலைபாட்டை மேற்கொள்ளும்போது எதிர்த்துக் கேள்வி கேட்காது அதை நியாயப்படுத்திப் பேசும் பித்தலாட்டத்தை உருவாக்குகிறது. இதைத்தான் தவறுக்கு தத்துவார்த்த முலாம் பூசுவது என்று கூறுவர். மேலும் தனது கட்சியின் தலைமையை விமர்சிப்பவர்களை எதிர்த்துத் தாக்கவும், இழிவுபடுத்தவும், அவதூறு செய்யவும் முற்படுகிறது.
இதுவே ஈழத்தில் சகோதர இயக்கத் தலைவர்களின் கொலையாக முடிந்தது. அதாவது தங்களுக்கு கிடைத்த ஆயுதங்களின் மூலம் கணக்கைத் தீர்த்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் அது சொற்களாகவும், பேனா அல்லது இணைய வழி எழுத்தாகவும் ஈழத்தில் அதுவே துப்பாக்கியாகவும் அதிலிருந்து வெளியேறும் தோட்டாக்களாகவும் அமைந்து போனது.
சரி! இந்தப் போக்குகள் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்லது கட்சித் தலைமைக்கு தெரியுமா? தெரியாதா? இன்றைக்குப் பெரும்பாலான கட்சி அல்லது இயக்க தலைமைக்கு இது தெரியும். தெரிந்தே இதை அனுமதிப்பதை நாம் காண்கிறோம். இது ஒருவகையில் தலைமைக்கு லாபம் தரக்கூடிய விசயம் எனக் கருதும் போக்கு இன்று ஏற்பட்டுள்ளது. ஆம் கீழே இரு அல்லது பல பிரிவுகளாக / குழுக்களாக இருந்து போட்டி பொறாமையோடு தொண்டர்கள், தோழர்கள் இயங்குவது ஒருவகையில் தலைமைக்கு நன்மையான செயலாகவே பார்க்கப்படுகிறது.
தலைமைக்கு யார் நெருக்கமானவர்கள்? யார் விசுவாசமானவர்கள்? தலைமை இட்ட பணியை மிகச் சிறப்பாக யார் நிறைவேற்றுகிறார்கள்? என்ற போட்டி தலைமைக்கு லாபமானது தானே? இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையிலும் தங்கள் பொருளாதாரத்தையும் உழைப்பையும் செலவிட்டு எப்படியாவது தானே தலைமையில் நன்மதிப்பை பெற்றுவிட வேண்டும் என்று இரு பிரிவும் போட்டி போட்டு உழைக்கின்றனர். இவ்விரு பிரிவையும் அப்படியே மெயின்டெயின் செய்வதில்தான் தலைமையின் திறமை அடங்கியுள்ளது.
இதில் என்றாவது ஒருநாள் தலைமை சற்று சறுக்கி எவராவது ஒரு பிரிவுக்கு சிறிது சாய்வாக நடந்து கொண்டால் போதும் மற்றொரு பிரிவு கட்சி / இயக்கத்தை விட்டு போவது முதல் தலைமைக்கு விரோதமாக உள்ளடி வேலைகளைச் செய்வது வரை ஏதாவது ஒன்று நடைபெறும். அல்லது இத்தகைய முரண் தலைவருக்கும் இரண்டாம் கட்டத் தலைவருக்கும் இடையிலானதாகவும் இருக்குமேயானால் கட்சியிலிருந்து இரண்டாம் கட்ட தலைவர் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ கூடிய சூழலில் அவரோடு கீழ் மட்டம் வரை உள்ள இந்த போராடிக்கொண்டிருக்கும் அதிருப்திப் பிரிவும், போட்டிக் குழுக்களும் வெளியேறுகிறது. இதுவே கட்சி உடைவாகவும் கருதப்படுகிறது.
உண்மையில் இது ஒரு கொள்கை வழிப்பட்ட கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் அமைந்த பிளவு அல்ல! மாறாக அற்பத்தனம் என்னும் அரசியலால் மேலிருந்து கீழ் வரை ஏற்பட்ட பிளவு என்ற ஓர் ஒற்றுமை உண்டே தவிர வேறு எவ்வித கருத்தொற்றுமையோ, கொள்கைப் புரிதலில் ஒற்றுமையோ உள்ள அணி அல்ல. இவ்வாறான ஓர் அணிக்கான சிறந்த உதாரணமாக இன்று நம் கண் முன் இருப்பது இ.பி.எஸ், ஓ.பி.எஸ். அணியாகும்.
இந்தக் கட்சியில் எந்த சமூகப் பிரச்சனை குறித்தும் ஓர் ஒன்றுபட்ட புரிதல் எவருக்கும் இல்லை என்பதை ஊடகங்களில் அவர்கள் அளிக்கும் முரண்பட்ட பேட்டிகளின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம் அவர்களை எல்லாம் ஒன்றாக கட்டி வைத்திருப்பது அற்பத்தனமான சுயநலம் எனும் அரசியல் மட்டுமே.
இந்த அரசியல் நோய் இன்று பீடிக்காத இயக்கமோ கட்சியோ எதுவும் இல்லை என்று நாம் உறுதியாகக் கூறலாம். இதில் அளவு வேறுபாடு மட்டுமே உள்ளது. இந்த நோய் இயக்கங்களில் இருவித நிலைகளில் வெளிப்படுகிறது. ஒன்று மேலே இருப்பவர் கீழே இருப்பவரது சுயநலத்தை அங்கீகரிக்கும் வரை கீழே இருப்பவர் அடிமையாக விசுவாசமாக இருப்பது. மாறாக மேல் இருப்பவர் தனது சுய நலனுக்கு, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் போது அவருக்கு எதிராகத் திரும்புவது .
இரண்டு; கீழே இருப்பவர் மேல் இருப்பவர் வரையறுத்துக்கொடுத்த எல்லைக் கோட்டுக்குள் நின்று தனது மேலே இருப்பவருக்குத் தனது எஜமான விசுவாசத்தை காட்டும் வரை கீழே இருப்பவரது சுய நலனை அங்கீகரிப்பது. மாறாக எல்லைக்கோட்டை அவர் மீறி வளர முற்படும் போது அதைத் தடுத்து நிறுத்தி அவரை கீழே வீழ்த்துவது என்ற இரு விதங்களில் செயல்படுகிறது. அதாவது அமைப்பு (இயக்கம் / கட்சி) இன்றைய சமூக அமைப்பைப்போலவே படி நிலையில் மாற்றம் இன்றித் தொடர வேண்டும் எனச் சிலர் விரும்புகிறார்கள் என்பதுதான்.
ஆக இங்கு கட்சி / இயக்க வளர்ச்சி என்பது பற்றிய விருப்பமோ அதன் மூலம் தமது கொள்கையை நடைமுறைப்படுத்தி மக்களை அவர்களது வாழ்வை முன்னேற்றம் அடையச் செய்வது என்ற லட்சியமோ எதுவுமின்றி கட்சி / இயக்க உறுப்பினர்களில் பலர் தங்களது இடம் அமைப்பில் என்ன? என்ற ஒற்றைச் சிந்தனையில் மட்டுமே உள்ளனர் என்பதே இங்கு பெரும்பான்மையாக இருக்கும் நிலவரம் ஆகும்.
இது எங்கிருந்து துவங்குகிறது? மீண்டும் நாம் ரஷ்யா சீனா அனுபவங்களை ஒப்பிட்டுத் தான் இதற்கு விடை காண வேண்டும். ஆம் எந்த ஒரு வெற்றிக்கும் பிறகுதானே பலனை அனுபவிக்கவும் அதில் தனக்கு கிடைக்கக்கூடிய பங்கு என்ன என்ற கேள்வியும் எழ முடியும். எவ்வாறு ரஷ்யப் புரட்சிக்குப் பின் சோசலிச நிர்மானக் காலத்தில் கட்சி தோழர்களிடம், நிர்வாகிகளிடம் அதிகாரத்துவப் போக்கு, சுயநலம் வெளிப்பட்டதோ அதே போலத்தான் இங்கும் தமிழகச் சூழலில் கூட 1950-களுக்குப் பிறகு எழுந்தது.
புரட்சியிலோ போராட்டத்திலோ அல்லது அக்காலகட்டத்திலோ இதுபோன்ற போட்டி உயிரை விடுவதில், சொத்தை சுகத்தை இழப்பதில், சிறைக்கு செல்வதில் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்பட்டிருக்குமா? இல்லை. சிறுபான்மையான எண்ணிக்கையிலான முன்னணித் தோழர்கள் மத்தியில் மட்டுமே இந்த போட்டி இருந்திருக்கும். போராட்டக் களத்தில் பலர் தியாகிகளாகவும் ஆகியிருப்பார்கள். ஆனால் அறுவடைக் காலத்தில் பலனை அனுபவிக்கும் காலத்தில் பின்னணியில் இருந்தவர்கள் எல்லாம் கட்சிக்குள் நுழைந்து கட்சியின் பகுதி அதிகாரங்களைக் கைப்பற்றிப் பலனை அனுபவிப்பதில் போட்டிபோடுகின்றனர். இவர்களுக்கு இயக்க வரலாறும் தெரியாது அது தேவையும் இல்லை.
இவர்கள்தான் இயக்கங்களில், கட்சிகளில் நந்தியைப் போல் உட்கார்ந்து கொண்டு வழியை மறைத்துக் கொண்டுள்ளனர். கொள்கையால் ஈர்க்கப்பட்டு புதிதாக நுழைபவர்கள் இந்த நந்திகளால் நசுக்கி விரட்டப்படுகின்றனர். கொள்கையின்றி பிழைப்புவாதிகளாக வருபவர்கள் இந்த நந்திகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகின்றனர். அல்லது இப்போது தாமுள்ள இயக்கத்துக்கு நேர்மாறான கொள்கையைக் கொண்ட மாற்று இயக்கத்தில் வெற்றிடம் இருப்பதாகத் தெரிந்தால் எவ்விதக் கூச்சமும் இன்றி அங்கு சென்று நந்திகளாக மாறுகின்றனர்.
ஆக, சமூக மாற்றத்தை வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்பாத, பழைய சமூக அமைப்பின் எச்சங்களான இந்த ஒட்டுண்ணி வர்க்கத்தினர், ஜாதிப் பெருமிதமும் ஆதிக்க மன நிலையும் கொண்ட தர்மகர்த்தாக்களைப்போல் நடந்துகொள்ளும் இவர்களால் தான் இன்று கட்சி / இயக்கத்திற்கு அவப்பெயர் உண்டாகிறது. ஏன் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?
நடப்பு சமூக அமைப்பிற்குள் தாங்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களில் இருந்து விடுதலை பெறுவதற்காக கட்சியை இயக்கத்தை தேடி வந்ததாக இவர்கள் கருதுவதில்லை. மாறாக சமூகத்தில் உயர்நிலையில் உள்ள தாங்கள் பிறருக்கு குறிப்பாக ஜாதியிலும் வர்க்கத்திலும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்வதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
இதற்கு அவர்களது பிறப்பு வழி ஜாதி இந்து மனநிலையும் ஓர் காரணமாக அமைகிறது. தன்னுடைய விடுதலைக்கான இயக்கம் அல்லது கட்சி என்று கருதினால் அனைவரையும் ஒன்றிணைத்து போகவும் தோழமை பாராட்டவும் ஐக்கியப்படவும் முடியும். மாறாக ஜாதிப் படிநிலையிலும் பொருளாதாரத்திலும் உயர் நிலையில் தான் இருப்பதாகவும் நிலவுகின்ற சாதிய வர்க்க சமூகத்தில் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. தன்னை விட கீழ் நிலையில் வாடுகின்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மையில் இயங்குபவர்களால் சக தோழர்களுடன் சமத்துவமாகவும் தோழமையோடும் நடந்துகொள்வோ, கட்சி / இயக்கம் கொள்கை வளர்ச்சியில் அக்கறை செலுத்தவோ முடியாது.
தன்முனைப்பும் தன்னகங்காரமும் தற்புகழ்ச்சியும் கொண்ட இவர்களே தோழமைக்கும் அய்க்கியத்திற்கும், கட்சி வளர்ச்சிக்கும், மக்களது அன்பைப் பெற்று இயக்கம் / கட்சி வலிமை அடைவதற்கும் எதிரானவர்கள். சமகால சமூக அரசியல் பற்றியோ கொள்கை கோட்பாடு பற்றியோ ஒரு பத்து நிமிடம் கூட விவாதிக்க விரும்பாதவர்களால், எப்போதும் தங்களை முன்னிறுத்தி கடந்தகாலப் பெருமை பேசுவதில் ஆர்வம் காட்டுபவர்களால் பிறரை குறை கூறுவதில் மிகுந்த அக்கறை காட்டுபவர்களால் எவ்வாறு இயக்கத்தை / கட்சியை வளர்த்தெடுக்க முடியும்?
இவர்கள் வாழ் நிலையில் நமது அக்கம் பக்கமாகவோ அல்லது நமக்கும் சற்று மேலாகவோ இருக்கக்கூடியவர்களானாலும் இவர்களது சிந்தனையோ, அல்லது தங்களை பற்றிய சுயமதிப்பீடோ மிகவும் பிற்போக்கானதாகும் அதாவது பண்ணையார் தனமானதாகும். இந்த மனப்போக்குதான் பிற சக தோழர்களுடன் ஒன்று கலப்பதைத் தடுத்து விடுகிறது.
இது மட்டுமல்ல இந்த சிந்தனைப் போக்கு தான் பழமைவாதத்திற்கு எதிராக கட்சி / இயக்கம் மேற்கொள்ளும் போராட்டங்களை வேறுவழியின்றி இவர்கள் நடத்தினாலும் கூட தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மிக நளினமாகவும், பெரிய மனிதர்களின் மனம் நோகாமலும், நாசுக்காகவும் நடத்த வைக்கிறது.
கட்சி / இயக்க வேலையை ஒரு கட்டத்திற்கு மேல் நகராமல் பார்த்துக் கொள்கிறது நடைமுறை வேலைகளில், நிர்வாகத்தில், நிதி சேகரிப்பில் திறமை வாய்ந்த இவர்கள் தங்களது பிற்போக்கான சிந்தனைகளால் கட்டுப்படுத்தப் படுகின்றனர்… ஆனால் வரலாற்றுச் சக்கரம் ஓரிடத்தோடு நின்று விட வேண்டும் என்ற இவர்களது விருப்பம் எப்படிச் சாத்தியமாகும். அது இயற்கைக்கும் அறிவியலுக்கும் புறம்பானதாகும்.
வரலாற்று இயக்கப் போக்கிற்கு குறுக்கே வந்து நின்று அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இவர்கள் முயன்றால் இவர்கள் மீது ஏறி நசுக்கி எறிந்துவிட்டு வரலாறு முன்னோக்கி நகர்ந்து போயே தீரும்.
@
சரி இவர்களை எவ்வாறு சரிப்படுத்துவது? இவர்களை ஒடுக்கி வைக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகாரத் தலைமையை சிலர் முன் மொழிகின்றனர். அமைப்புக்குள் தலைவரைத்தவிர வேறு எவருக்கும் அதிகாரம் கூடாது! மற்ற அனைவரும் அடிமைகள் தான் எனும்போது பகுதி அதிகாரப்போட்டிகள் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர்.
மற்றும் சிலர் தலைமை இவர்களை எல்லாம் அழைத்துப்பேசி முரண்பாடுகளைத் தீர்க்கும் விதமாகப் பஞ்சாயத்துப் பண்ணவேண்டும், தவறு செய்பவர்களை எச்சரிக்கவேண்டும் என்கின்றனர். இவையெல்லாம் சரியான தீர்வாகாது என்றே தோன்றுகிறது…
நமது சமூகம் எவ்வாறு ஜாதிகளாகவும் வர்க்கங்களாகவும் இன்னும் பல்வேறு கூறுகளாகவும் பிளவுபட்டு முரண்பட்டுக் கிடக்கிறதோ அவ்வாறே கட்சி/இயக்கத்திற்குள்ளும் அது பிரதிபலிக்கிறது. அது இயல்பானதும் கூட. இந்த முரண்பட்ட கூறுகளையெல்லாம் ஓரணியில் திரட்டி நிறுத்தியே கட்சி / இயக்கம் பொது எதிரியை எதிர்த்து வீழ்த்த வேண்டும்.
ஆக இன்றைய காலகட்டத்தின் பொது எதிரிக்கும் இயக்கம் / கட்சிக்கும் இடையிலான முரணை அதிகரிப்பதும், எதிரிக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை அதிகரிப்பதனூடாகத்தான் அணிகளைப் பயிற்றுவித்து சமூக அரசியல் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதன் வாயிலாக குறுகிய அற்பத்தனமான போக்குகளை விட்டொழிக்கச் செய்ய முடியும். மேலும் மலையில் தோன்றும் ஆறு கீழ் நோக்கிப் பாய்ந்து பரந்து விரிந்து பயன் தந்து இறுதியில் கடலில் கலப்பதே இயற்கை நியதி.
அதே போல் அதிகாரமும் மேலிருந்து படிப்படியாக கீழிறங்கி அடிமட்டம் வரை சென்று பரவ வேண்டும் என்பதே நீதி. மாறாக ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நிறுத்தி கீழிருப்பவர்களை அதிகாரமற்றவர்களாக வைத்துக் கொள்ள நினைப்பது சமூக அநீதி என்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஒரு சில பிற்போக்காளர்கள், சமூக நீதியை விரும்பாதவர்கள், இதனை மறுத்து எதிரிகளோடு கூட கைகோர்க்கலாம். பெரும்பான்மையோர் நீதியை ஏற்கவே செய்வர். ஆக சமூக விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டக் களத்திலேயே நடைமுறையோடு கூடிய அரசியல் பயிற்றுவிப்பின் மூலமாகவே அற்பத்தனம் எனும் அதிகார நோய் தீர்க்கப்படும்!.
@