அன்னதாதாக்களின் டில்லி சலோ
2000 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுமைக்கும் ஏறத்தாழ 225000 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் (National Crime Records Bureau of India) புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது1
2000 முதல் 2011 வரை பஞ்சாபில் மட்டும் ஏறத்தாழ 6926 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது2
ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என வலுவான ஒருமைப்பாட்டை வலிந்து திணிக்கும் முயற்சிகளுக்கிடையே விவசாயிகளின் தற்கொலை மட்டும் யாருமே திணித்திராத வலுவான இந்திய ஒற்றுமையாகத் திகழ்கிறது. காஷ்மீர் முதல் பஞ்சாப், விதர்பா, கேரளா வழி கன்னியாகுமரி வரை ஒருமுழக் கயிற்றில் தொங்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் ஆன்மாக்கள் மட்டுமே, 1990 முதல் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உலகமய, தாராளமய, கார்ப்பொரேட்மயங்களின் சாட்சியங்களாக விளங்கிக் கொண்டிருகின்றன.
தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரை விவசாயிகளின் தற்கொலை குறித்த சிறப்புக் கட்டுரைகளை நீங்கள் Economic and Political Weekly இதழ்களில் தேடிப் படிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையும் விவசாயிகளின் உயிருக்கு விலையாகப் பேசப்பட்ட அனைத்து கொள்கைகளையும் உங்களுக்குச் சொல்லும். புள்ளியியல் அட்டவணைகள் உங்களுக்குக் காணக் கிடைக்கும். அதில் நீங்கள் கூர்ந்து பார்த்தீர்களேயானால், 1990 தொடக்கம், அதாவது உலகமயக் கொள்கைகள் நரசிம்மராவ் அரசினால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த ஆண்டிலிருந்து இன்று வரை தற்கொலை செய்து கொண்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்திருக்கும். பல்லாயிரக்கணக்கான விதர்பா பருத்தி விவசாயிகள் எப்படி தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை அப்போது இந்து பத்திரிகையின் சாய்நாத் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை தந்துகொண்டே இருப்பார். அப்போதெல்லாம் சாய்நாத் கட்டுரைகளைப் பார்த்துவிட்டால் அன்று அப்பத்திரிகையை கண்ணீர் நனைப்பது நிச்சயமாகவே இருக்கும். இது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.
அரசியலுக்குள் மதத்தைத் திணித்த சுகம் தீர்வதற்குள்ளாகவே தங்களுக்கும், தங்களின் முதலாளிமார்களுக்கும் (கார்ப்பொரேட்டுகள்) வேண்டிய அனைத்தையும் சாதித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆட்சியாளர்களின் கனவில் இப்போது மண் விழுந்திருக்கிறது. பஞ்சாப் உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் இப்போது அதை சாதித்திருகிறார்கள். மதவாத அரசியலுக்கும் அப்பால் வர்க்கப்போராட்டம் என்ற ஒன்று உண்டு என்பதை ஆட்சியாளர்களின் மொழியில் சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த ஜூலை 2020 இல், நடைபெற்ற USIBC India Ideas Summit என்னும் சர்வதேச முதலீட்டாளர் நிகழ்வில் மோடி பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது: ” 2025 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலர்(அரை ட்ரில்லியன் டாலர்) அளவை எட்டும் “. இப்போது புரிகிறதா? மோடி சர்வதேச முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படிதான் இப்போதைய மோசமான வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.3
தற்போதைய வேளாண் சட்டங்களின் பெயர்களை நீங்கள் உற்று நோக்கும்போது அது விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தோன்றும். அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களின் பெயர்களும் இதுதான்.:
1. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)
2. விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020
3. அத்யாவசியப் பொருட்கள் திருத்த சட்டம்.
மேற்கண்ட மூன்று சட்டங்கள் குறித்த தெளிவான பார்வையை தோழர் அருண் நெடுஞ்செழியனின் கட்டுரையில் 4 இருந்து நீங்கள் பெறமுடியும்.
காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய வேளாண் சட்டங்கள் வரை எல்லாமும் நம்முடைய விவசாயத்தை, விவசாயிகளை, நிலத்தை, காடுகளை, மலைகளை, ஆறுகளை, தண்ணீரை பன்னாட்டு கார்ப்பொரேட்டுகளிடம் அடமானம் வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இச்சட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இச்சட்டங்கள் அனைத்தும் கார்ப்பொரேட்டுகளுக்கு சேவை செய்யவே கொண்டுவரப்பட்டவை. இன்னமும் இதுபோன்று ஏராளமான சட்டங்கள் கொண்டுவரப்படவும்கூடும். கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். ஆனால் அம்பானி, அதானி வகையறாக்களின் சொத்து மதிப்பு 5 மட்டும் இக்காலத்தில் உயர்ந்ததெப்படி? கோடிக்கணக்கான தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க எந்த முடிவையும் எடுக்க மறுத்த மோடி அரசு, அத்தொழிலாளர்கள் கால்நடையாகவே நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, கார்ப்பொரேட்டுகளின் முதலீட்டாளர்கள் நிகழ்வுகளில் மட்டும் எப்படி முடிவெடுக்க முடிகிறது? கட்சிகளின் கொள்கைகளும், கோட்பாடுகளும் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டு இருந்தாலும், கட்சிகளுக்கிடையே எவ்வளவுதான் முரண்பாடுகள் இருந்தாலும் இந்தியாவை ஆளும் அத்தனை ஆளும் கட்சிகளுக்கும் இடையே கார்ப்பொரேட் விசுவாசத்தில் மட்டும் துளியும் வேறுபாடு இருப்பதில்லை. இந்தியத் தேர்தல்கள் மிகப்பெரும் செலவை அரசியல் கட்சிகளிடம் கோரி நிற்கிறது. அரசியல் கட்சிகளின், தாதாக்களின் பெருவரியான நேரடிச் செலவுகளையும், மறைமுகச் செலவுகளையும் கார்ப்பொரெட்டுகள் மட்டுமே ஈடுசெய்யமுடியும்.
பதிலீடாக கார்ப்பொரேட்டுகளின் எல்லாத் தேவைகளும் ஆளும் அரசியல் கட்சிகளால், அதிகார வர்க்கத்தால் ஈடு செய்யப்படும். நிலம், வேளாண்மை, சுரங்கம், கல்வி, வங்கிகள், அலைக்கற்றைகள் உள்ளிட்ட அனைத்தும் இப்போது கார்ப்பொரேட்டுகளின் சொத்துகள். நிலமும், காற்றும், தண்ணீரும் கார்ப்பொரேட்டுகளால் நாசமாக்கப்படும்போது பொதுமக்கள் எழுப்பும் சிறுசிறு முணுமுணுப்புகளும்கூட அதிகாரவர்க்கத்தால் முடக்கப்படும். மக்களிடம் கிளம்பும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நீதிமன்றங்கள் தலையிடும். அதனால்தான் ஒரு மாதத்திற்கு மட்டும் ஆலையை இயக்கிக் கொள்கிறோம் என்ற ஸ்டெர்லைட் வேதாந்தாவின் வேண்டுகோளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்களும், அதன் வீரியமும் உச்சநீதிமன்றத்திற்குத் தெரியும். உச்சநீதிமன்ற உத்தரவை இப்படித்தான் பார்க்கமுடியும்.
அரசின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகாரமான சட்டங்களுக்கு எதிராகவும், கார்ப்பொரேட்டுகளின் கொடுமைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழும் வெகுமக்களின் போராட்ட உணர்வுகளுக்கு முன்பு எந்த அதிகாரவர்க்கமும் நிலைத்து நின்றதில்லை. வெகுமக்களை உள்ளடக்கி நடக்கும் அனைத்துப் போராட்டங்களும் தன்னெழுச்சியானப் போராட்டங்களே. இப்போது தில்லியில் நடக்கும் போராட்டங்களை வர்க்கப்போராட்டங்களாக வகைப்படுத்தமுடியுமா எனத்தெரியவில்லை. 500 க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திவருகின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் தில்லியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் களத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு எங்கள் போராட்டங்களில் இடமில்லை என்று போராட்டத்தலைமைகளில் இருப்போர் அறிவித்திருக்கிறார்கள். அப்படியானால் வர்க்கப்போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்கூட அங்கே இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட போராட்டக்காரர்களில் பெரும்பாலோர் இடது சார்பானவர்களாகவே இருக்கக்கூடும். நிலத்தைக் காக்கும் போராட்டத்தில், தங்களின் உரிமைகளைக் காக்கும் போராட்டத்தில் தீரமிக்க வீரத்தோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் என்பதற்காக நாம் அவர்களை இடது சார்பாளர்கள் என்கிறோம். கட்சிகளில் இல்லாமல் போனாலும் உண்மையான இடதுசாரிகள் இவர்கள். இந்த வர்க்கப் போராளிகளையும் ஒருங்கிணைத்துப் போராடும் மூலோபாயத்தை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கவேண்டும். ஒரு வர்க்கப்போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரம் செல்லுபடியாகும் சூழலை கம்யூனிஸ்ட் கட்சிதான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள், குறிப்பாக தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம், மோடி அரசுக்கெதிரான முதலாவது மதச்சார்பற்ற வெகுஜன அணிதிரட்டல் என பஞ்சாப் மாநிலத்தின் சமூக, அரசியல் ஆய்வாளராக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திகழும் ஜக்தார் சிங் குறிப்பிடுகிறார். போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று குற்றம் சுமத்துவதை அவர் நிராகரிக்கிறார்.
நாட்டில் வெகுமக்கள் கிளர்ந்தெழும்போதெல்லாம் அப்போராட்டத்தை நசுக்கிட, பிரித்தாளும் சூழ்ச்சிகளை ஆளும் வர்க்கம் எப்போதும் தயாராகவே வைத்திருக்கும். இப்போதும் அப்படியே. அகில இந்தியா முழுவதிலும் விவசாயிகளின் போராட்டங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்திருக்கும் சூழலில், போராடும் விவசாயிகளை பஞ்சாப் விவசாயிகள் என்றும், போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றும் குற்றம் சுமத்தி பிரித்தாளும் சூழ்ச்சித் திறம் குறித்து விவசாயிகள் அறிந்தே இருக்கிறார்கள். போராடும் விவசாயிகள் மீது அரசு கடும் அடக்குமுறைகளை தொடுத்து வருகிறது. விவசாயிகளின் போராட்ட வலிமையை குலைக்க அனைத்து வழிமுறைகளையும் அரசு செய்துகொண்டிருக்கிறது.
தில்லியில் போராடும் விவசாயி ஒருவரை போலீஸ் ஒருவர் தடி கொண்டு தாக்கும் புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படச் செய்தியாளரான ரவிசௌத்ரி எடுத்திருந்தார். அப்புகைப்படத்தை ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்குக் கண்டனமும் தெரிவித்திருந்தார். இப்படம் உண்மையானதல்ல, திரிக்கப்பட்டது என தெரிவித்து வீடியோ பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் பிஜேபியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா. அந்த வீடியோவில் அந்த போலீஸ்காரர் தடியை அந்த விவசாயியை நோக்கி விசுறுவது போலவும், தடியானது அந்த விவசாயியின் மீது படாமல் இருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. இரு போலீஸ்காரர்கள் அந்த விவசாயியைத் தாக்க முயற்சிக்கிறார்கள். முதல் போலீஸ்காரரின் தடி அவரது காலைத் தாக்க, இரண்டாவது போலீஸ்காரரின் தடிக்குத் தப்பித்து அந்த விவசாயி ஓடுகிறார். இரண்டாவது போலீஸ்காரரின் தடியைத்தான் அமித் மால்வியா பதிவிட்டிருக்கிறார். தடியானது தன்னைத் தாக்கியது என அந்த விவசாயி பேட்டி அளித்திருக்கிறார். இப்போது அமித் மால்வியாவின் வீடியோ பதிவை “திரிக்கப்பட்ட பதிவு” என ட்விட்டர் அறிவித்திருக்கிறது. பிஜேபியின் புரட்டுகளை இப்போது சமூக ஊடகங்களின் தலைமைகளும் எதிர்க்க ஆரம்பித்திருக்கின்றன.
குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்கிட ஒரு புதிய சட்டத்தை அரசு கொண்டுவரும் பட்சத்தில் விவசாயிகளும் தங்களின் தில்லி முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக்கொள்ளக்கூடும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான நான்காவது சுற்றுப்பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருக்கிறது. தனக்கு எந்த ஈகோவும் இல்லை என மோடி அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அரசு சொல்லும்போது அதன் ஈகோ எட்டிப்பார்க்கிறது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நடக்கும் உணவு வேளைகளில் அரசு வழங்கும் உணவை விவசாயிகள் நிராகரிக்கிறார்கள். விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் உணவுப்பொருட்கள் சேகரிப்பதிலும், உணவைத் தயாரித்து வழங்குவதிலும் தீரத்துடன் ஈடுபடுகிறார்கள். விவசாயிகளின் தீரமும், வீரமும், போராட்டக்குணமும் வெளிப்பட்டது இன்று நேற்றல்ல..கடந்த பல நூறு ஆண்டுகளாக ஆளும் வர்க்க அதிகாரங்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்தவர்கள் அவர்கள். தங்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு எடுத்துக்கொண்டு அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை நமக்கும் உண்டு. போராடும் விவசாயிகளுக்கும் உண்டு.
- https://www.hindustantimes.com/punjab/farmer-suicides-no-relief-despite-altered-compensation-policy/story-IBuOKbJPskeTWC3jy8M0MM.html
- https://www.hindustantimes.com/punjab/farmer-suicides-no-relief-despite-altered-compensation-policy/story-IBuOKbJPskeTWC3jy8M0MM.html
- https://www.livemint.com/news/india/pm-narendra-modi-addresses-india-ideas-summit-live-updates-usibc-building-better-future-latest-news-11595429456031.html
- http://peoplesfront.in/2020/09/25/21%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/
- https://timesofindia.indiatimes.com/business/india-business/mukesh-ambani-with-73-rise-in-net-worth-stays-indias-richest-for-13th-year/articleshow/78549917.cms