SM-G615F-என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
நெடுங்கதை: லக்ஷ்மி சிவக்குமார்.
(i)
அன்றைய திங்கட்கிழமை காலை நான்கு மணிக்கெல்லாம் விழித்தவன், கண்களைக் கசக்கிக்கொண்டபடி படுக்கைக்கு அருகிலிருந்த மேசைக்குக் கை நீட்டினான். அந்த மேசையில் அவனது இலக்கு, பால் ரொட்டி அளவுடைய, பிளாஸ்டிக்காலான தேதி வில்லைதான். அந்த வில்லையில் எழுதப்பட்டிருந்த முந்தைய நாளின் எண்ணான 18-ஐ, அந்தச் செங்குத்தான செவ்வக அடுக்கின் பின்வரிசைக்குக் கிடத்தினான். ஆக… இன்றைக்கு செப்டம்பர் 19. அதன்பின் வழக்கமான வேலைகள் சிலவற்றை முடித்துக்கொண்டு படுக்கைக்குத் திரும்பியவன், இந்தப் பெருநகரத்தில் யாராலும் சிந்திக்கவே முடியாத ஒன்றைச் செய்யத்துவங்கினான். சில மாதங்களுக்கு முன்னதாகப் பழக்கப்பட்டுவிட்ட அது, அவனது நாட்களைத் துவங்கிவைக்கக் கூடியதாகிவிட்டது. இப்பொழுது அவன்தன் SM-G615F மொபைல் ஃபோனில் இணைக்கப்பட்டிருந்த நரம்பு போன்ற ஒயரை தன் காதுடன் இணைத்துக்கொண்டுவிட்டான். ஆமாம்… அவன் இன்னும் சற்று நேரத்தில் கஸல் பாடல்களைக் கேட்கத்துவங்கிவிடுவான். இதைவிடச் சுவாரஸ்யம் என்னவென்றால்… இந்தக் கஸல் இசைதான் அவனை அன்றாடம் இந்த நேரத்திற்கு எழுப்புகிறது. அதாவது அந்த இசையைத்தான் தன் மொபைலில் அலாரமாக நிறுவிக் கொண்டிருக்கிறான். முதன்முதலாக அதையொரு பயணத்தின் போதுதான் கேட்டிருந்தான். அந்தப் பயணத்தில் அவளும் கூட இருந்தாள் என்பது சுவாரஸ்யமென்றாலும் தன்னைக் காட்டிலும் அவள்தான் அப்போது அதை ஆழமாக ரசித்தாள் என்பதற்காகவே அலாரத்திற்கென நிறுவிக் கொண்டிருக்கிறான்.
அவளுடனிருந்த அன்றைய நாளில் அவன் ஏழாவது முறை கொல்லப்பட்டதை பின்னொரு நாளில்தான் அறிய நேர்ந்தது. இப்போது வரையில் அந்த எண்ணிக்கையில் அவன் வேறு வேறு நீதியற்றக் காரணங்களால் முன்னேறிக் கொண்டிருக்கிறான்! என்பதைத் தவிர சொல்ல ஏதுமில்லை. வேண்டுமானால் அவன் இன்னமும் உயிரோடிருக்கிறான் என்பதைச் சிறப்பாகவோ வியப்பாகவோ கருதமுடியும்.
சரி… அவன் விரும்பக்கூடிய இசை அவனுக்குள் நுழையத்துவங்கி விட்டது. நாம் அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம். SM-G615F என்கிற பிரத்தியேக அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்ட என்னை அவன் பேசுவதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவியாகக் கருதிக் கொள்ளுங்கள். அந்த வகையில் அவனைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அதற்கு முன்னால் என்னைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள். சுருக்கமாக என்றால்… அடுத்த வாக்கியத்தில் முடிந்துவிடும். ‘நானொரு மறு விற்பனைச் சந்தையில் யாருக்கோ விலை போகக் காத்திருந்தேன்’. வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தினால்தான் அவன் என்னைச் சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கினான். நான் அவனது கைக்குக் கிடைத்த மூன்றாவது வாரத்திலேயே நேர்முகத் தேர்வொன்றிற்கு அழைக்கப் பட்டிருந்தான். முன்னரே விண்ணப்பித்து விட்டான் போல. ஆனால் நோய்த் தொற்றுப் பரவலால் நாடே மூடிக் கிடந்ததால் இப்பொழுது அழைக்கப்பட்டிருக்கிறான். அந்த வேலை அவனது படிப்பிற்கு நேரெதிரானது தான் என்றாலும் அவன் தன்னைப் பெருநகரத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பினான். அதன் மூலம் அங்கு வாழக் கூடிய மனிதர்களுடன் இணையமுடியும். அது பலவிதங்களில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் உருவாக்கித்தருமென்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
நகர் மற்றும் புறநகர்ப் பேருந்தென மாறித்தான் அவன் பெருநகரத்தை அடையவேண்டும். மறுநாள் நேர்முகத் தேர்விற்காக அன்றைய நாளின் காலையில் தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். சாம்பல் பரவியிருந்த வானத்திலிருந்து சீரான அளவில் ஈரப் புழுதிகள் இறங்கிக் கொண்டிருந்தது. சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் நகரத்திலிருந்து கிளம்பக்கூடியப்பேருந்து இவனது ஊரைக் கடந்து ஒரு பேரூராட்சியின் எல்லைக்குள் நுழைந்து திரும்பியது. தன் கிராமத்தின் பேருந்து நிறுத்தக் குடைக்குள் நின்றவன், அருகில் நின்ற தனது அப்பாவிற்குக் கையசைத்துக்கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டான். அதுவொரு பொதுவிடுமுறை நாளென்பதாலும் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சத்தாலும் உட்காருவதற்கென இருக்கைக்குப் பஞ்சமில்லை. இவன் தன் வசதிக்கேற்ப பின்பக்க இடது சன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டான். அந்தப் பேருந்து ஊரின் அடுத்தடுத்த நிறுத்தத்தில் நின்று நகர்ந்து, ஊர் எல்லையைக் கடப்பதற்குள்ளாகவே அந்த ஊர்க்காரர்களில் சிலர் சன்னலோரமாக அமர்ந்திருந்தவனை முன்னும் பின்னுமாகச் சூழ்ந்து நின்றனர். அவர்களில் ஒருவன் தன் மேவாயைத் தடவியபடி அவனைச் சீண்டும் விதமான வார்த்தைகள் சிலவற்றைச் சொன்னான். இன்னொரு முரடன் அவன் உடுத்தியிருந்த உடை அவனுக்குப் பொருத்தமில்லையெனக் கேலி செய்தான். மற்றொருவன் அவனது உடலிலிருந்து மோசமான இரைச்சி வாடை வீசுவதாகவும் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் அவனை இருக்கையிலிருந்துக் கிளப்புவதற்கு முயற்சித்தான். இன்னொருவனோ மிக நேரடியான வார்த்தைகளால் ‘நாங்கள் நிற்கையில் உன் குண்டி என்ன உட்காரக் கேட்குதோ…?’ என்றுவிட்டுப் பொதுவெளியில் பேசக்கூடாத இன்னும் மோசமான வார்த்தைகளால் தாக்கினான். அந்த வம்பர்களின் மிரட்டலைக்கண்டு மிகவும் அச்சமேறிய முகத்துடனிருந்தவன் அவர்கள் பேசக்கூடியதைக் காதில் போட்டுக்கொள்ளாதபடி தன்னைச் சுற்றி முக்கால் வட்டமாக மேய்ந்தான். அந்தப் பேருந்தில் தனக்காகப் பேச யாருமில்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகு கம்மென்றே அமர்ந்திருந்தான். அவனது அழுத்தமான அந்தச் செயல் சீண்டியவர்களை மேலும் கொதிப்படையச் செய்தது. பேருந்து ஊரின் எல்லையைத் தாண்டியபோது அந்த வம்பர்களால் அவனது இருக்கை நீதியற்ற அல்லது வன்முறை வழியில் பறிக்கப்பட்டுவிட்டது. காரணம், அந்தக் கிராமத்தில் அவனது குடியிருப்பு, ஊருக்கு ஒதுக்குப்புறமானது என்பதுதான்! ஆக… என் கணக்குப்படி இதுதான் முதல்முறை.
(ii)
தன் முயற்சியால் மேலேறி வந்த பென்னி என்பவன்தான் சங்கரை வேலைக்கெனத் தயார் செய்து வழிநடத்தக் கூடியவன். குடும்பமற்ற அவன், சங்கரின் வீட்டிற்குப் பின்புறமுள்ள தடுப்பில் வாடகை யில்லாமல் வசித்தவன். அவன் இந்தப் பெருநகரத்திற்கு இடம் பெயர்ந்து ஒன்பதாண்டுகளாகிவிட்டது. நிரந்தர வேலையில் போதுமான சம்பளத்தில் கனரக வாகன எஞ்சினுக்குள் இயங்கும் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்திலிருக்கிறான்.
ஊரிலிருந்து புறப்பட்டிருந்த சங்கர் அன்றைக்கு மாலை ஏழு மணிக்கெல்லாம் பெருநகரத்திற்குள் நுழைந்ததும் பென்னிக்கு அழைத்துத் தான் வந்துவிட்டதைச் சொன்னான். பென்னியும் தான் அந்தப் பேருந்து நிலையத்தில்தான் அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னான். பிறகு, அந்த இணைப்புத் துண்டிக்கப்பட்ட இருபதாவது நிமிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர்.
சங்கரை அழைத்துக்கொண்ட பென்னி தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே அவனுக்கு நகரத்தின் சில முக்கிய இடங்களையெல்லாம் அறிமுகப்படுத்தினான். சிறியதான இந்த ஊர்சுற்றலுக்குப் பிறகு வீடு திரும்பும் வழியில் சங்கர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்த கம்பெனியையும் சுட்டிக் காட்டினான். பிறகு பென்னி தான் வழக்கமாகச் சாப்பிடக்கூடிய தன் தெருவிலுள்ள வீட்டு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.
பென்னியின் வீட்டிற்கு சங்கர் வருவது இதுதான் முதல்முறை. முதல் மாடியில் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் தங்குவதற்கானத் தாராளமான வீட்டில் தனியாளாகத்தான் இருக்கிறான். தனக்கொருக் குடும்பத்தைக் கட்டமைத்துக் கொண்டுவிட முடியுமென்கிற நம்பிக்கையை அந்த வீட்டில் அவன் வாங்கிக் குவித்திருந்த பொருட்கள் ஒவ்வொன்றிலும் காணமுடிந்தது.
கூடத்தின் மத்தியில் டீப்பாயின் முன்னால் குழந்தைகள் அமரக்கூடிய பிரம்பு நாற்காலியொன்று கிடந்தது. சங்கர் அதில் தான் அமர்ந்துகொள்ளலாமா என்றான் பென்னியிடம். தரையிலிருந்து வளர்ந்திருக்கும் உயரமான சன்னலுக்கு அருகில் படுத்திருந்த பென்னி, சட்டென மொபைல் ஃபோனைத் துழாவுவதை நிறுத்திவிட்டு எதையோ யோசித்தபடி சங்கரைப் பார்த்து “டேய் சங்கரு… என்னடா இதெல்லாம் கேள்வி? நம்ம ஊடுடா இது… அந்தப் பெரம்புச் சேர தலைகீழா போட்டுக்கூட உக்காரு. இந்தா… ரிமோட்டு… தரையில அடிச்சி ஒட” என்றதும், சங்கர் சிரித்துக் கொண்டான். பிறகு பென்னி, “இங்க பாரு சங்கரு… எதுக்கும் நீ இங்க என்னக் கேக்க வேண்டியதில்ல… புரியுதா? அந்தச் சேர தூக்கிட்டு வா இப்படி” என்றான்.
சங்கர் அந்தப் பிரம்பு நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்து பென்னியின் அருகில் அமர்ந்தான். பென்னி தன் கையில் வைத்திருந்த மொபைல் ஃபோனைத் தூரமாக வைத்துவிட்டு சன்னலின் திரையை விலக்கினான். நசநசத்துப் பெய்துகொண்டிருந்த மழை கனத்துப் பெய்யத் துவங்கியிருந்தது. பென்னி, சங்கரின் குடும்பத்தையும் ஊரிலும் தெருவிலும் தனக்குப் பழக்கமானவர்களையெல்லாம் விசாரித்தான். அதில் குறிப்பாக ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவளை உனக்குத் தெரியுமா? என்றான். சங்கர் யோசித்தபோது அவள் தன்னுடன் படித்தவள் என்றான். சங்கர் அந்தப் பெண் குறித்த அடையாளங்கள் சிலவற்றைச் சொல்லிக் கேட்டபோது அதுபோகட்டு மென அவன் நேர்முகத் தேர்விற்கு எப்படித் தயாராகியிருக்கிறான் என்பதைக் கேட்டான். பிறகு, அதுகுறித்த அடிப்படைத் தகவல்களை அவனுடன் பகிர்ந்துகொண்டுவிட்டு சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தான். அவற்றைக் கூர்மையுடன் கேட்டுக்கொண்ட சங்கர், தேர்வு குறித்த தனக்கான அச்சத்தை வெளிப்படுத்தினான். இந்தப் பயம் இயல்பானதுதான் என்ற பென்னி, தான் எத்தனை நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டான் என்பதையும் எங்கெங்கெல்லாம் பயத்தினால் உளறிச் சொதப்பினான் என்பதையும் சொல்லிச் சிரித்துவிட்டு, இதையெல்லாம் உன் அனுபவமாக எடுத்துக்கொண்டு உறங்குவதற்குச் செல். காலையில் தெளிந்தவனாக மாறிவிடு. இந்தச் சமூகம் நிகழ்த்தும் அத்தனைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள உன் மனதை வீரமாக்கிக்கொள். இல்லையென்றால் இந்த உலகத்தில், ஏன்… இப்போதைக்கு நகரத்தில்கூட உனக்கு எப்போதுமே இடமில்லாமல் போய்விடும். நமக்கெல்லாம் நகரத்திற்கான இடப்பெயர்வென்பது அடிப்படை நிராகரிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கானது. ஏறத்தாழ அந்தத் துயரத்தையெல்லாம் நாம் அனுபவித்துவிட்டாலும் அடுத்தத் தலைமுறைக்கு இது நீடிக்கக்கூடாது. என்ன ஒன்று… இங்கேயும் அடுத்தகட்ட நிராகரிப்புகள் நம்மைத் தாக்கத் தயாராகவே இருக்கிறதுதான். அதையும் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் எல்லாமும் மாறுமென நாம் நம்பவேண்டும். நம்புவது மட்டும் போதாது. அந்த மாற்றத்திற்கு நம்மாலானதையெல்லாம் செய்ய வேண்டும். அதற்காகவும், நீ இங்கு வந்ததன் முக்கிய நோக்கத்திற் காகவும் இந்த முதல் வாய்ப்பை உனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் அத்தனை வழிகளையும் நான் உனக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டேன் என்று நம்புகிறேன். மீதம் உன் கையில்தான் என்றான். பென்னியின் அறிவுரைகளை ஆமோதித்துக் கேட்டுக்கொண்ட சங்கர், தனக்குப் பேருந்தில் நிகழ்ந்த அவமானத்தைச் சொன்னான். பென்னி வாயடைத்து அமைதியாகவே இருந்தான். நீண்ட நேரம் இருவருக்குள்ளும் ஒரு கனத்த அமைதி நிலவியது. பென்னி, சாடையாகச் சங்கரின் கண்களைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய இன்றைய சுயமரியாதை மிக்கச் சுதந்திரத்திற்கும், பொருளாதார ரீதியிலான வசதி வாய்ப்புகளுக்கும் தன்மேல் நிகழ்த்தப்பட்ட இப்படியான வன்முறைகளும் அவமானங்களும்தான் காரணமென்று விட்டு இதையெல்லாம் சேகரிப்பில் போட்டுவை. உன் கவனமெல்லாம் நாளைய தேர்வு குறித்ததாக மட்டுமே இருக்கட்டும். கல்வியும் பொருளாதாரமும்தான் நமது இப்போதைய இலக்கு. பிறகு அது நம் சுதந்திரத்திற்கான அத்தனை வழிகளையும் திறந்துவிடும் என்றான்.
பென்னியும் சங்கரும் பேசிக்கொண்டவகையில் மனிதர்கள் மனிதர்களால் நிராகரிக்கப்படுவதையும் தாக்கிக்கொள்வதையும் செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட நான் கவனிக்கத் தவறவில்லை.
(iii)
சங்கர் விண்ணப்பித்திருந்தது இயந்திரப் பொறியாளர் வேலைக்குத் தான். அந்தக் கம்பெனி மாநிலத்தில் பெயர் பெற்ற ஒன்றுதான். ஏறத்தாழ ஒன்பது முக்கிய மாவட்டங்களில் அதன் கிளைகள் உண்டு. தலைமை அலுவலகமான இங்கேதான் கடந்த நான்கு நாட்களாகப் பல்வேறு பிரிவினருக்குமான நேர்முகத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் இருநூற்று ஐம்பது காலியிடங்களை நிரப்புவதற்கானத் தேர்வு. இன்று இறுதி நாள். இவனது பிரிவிற்கான காலியிடமென்பது நாற்பது மட்டும்தான்.
பென்னிக்கு அன்றைக்கு இரவுப்பணி என்பதால் அவன்தான் சங்கரை அழைத்துக்கொண்டு போயிருந்தான். ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்திற்குள்ளே இருக்கக்கூடியவனை ஒன்பதரைக்குத்தான் விட்டான். காரணம், தொற்றுநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாகச் சாலையில் மறித்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யவேண்டிப்போனதால். தாமதமான இந்த அரைமணி நேரத்தில் நம்பிக்கையிழந்து படபடப்புடனிருந்த சங்கருக்கு, கம்பெனி வளாகத்திலிருந்து வெளியேறிய ஒருவன் சாதகமான செய்தியைச் சொன்னான். அதாவது, நேர்முகத்தேர்வு மறுநாள் ஒத்திவைக்கப் பட்டிருப்பதாகச் சொன்னான். சங்கர் அதை உறுதிப்படுத்த எதிரே வந்த இன்னும் சிலரிடமும் கேட்டான். அதிலொருவன் தேர்வு நடத்தும் அதிகாரியை டெபுடேசன் செய்துவிட்டார்களாம் என்றான். நேற்றைய தேர்வில் அவர் தங்களது நிர்வாகத்தையே பகைத்துக்கொள்ளக்கூடிய முடிவில் உறுதியாக நின்றாராம் என்று இன்னொருவன் சொன்னான். எதற்கும் அலுவலகத்திலேயே கேட்டுவிடலாமென சங்கரை அழைத்துக் கொண்டு போனான் பென்னி. வெளிக்கேட்டில் நின்ற காவலாளியும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டத் தகவலை உறுதிப்படுத்தினார். பிறகு அந்தக் கம்பெனிக்கு எதிரேயிருந்த கடையில் தேநீர் அருந்தலாம் என்றான் சங்கர். ஆமாம். எனக்கும் அவசியமாக இருக்கிறது. என்ற பென்னி தேநீருக்குப் பிறகு திரையரங்கிற்குச் செல்லலாம் என்றான். சங்கர் மறுக்கவில்லை.
தொற்றுநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையிலிருந்ததால் திரையரங்கு வழக்கத்திற்கு மாறான நிலையிலிருந்தது. அதாவது பாதியளவில் மட்டுமே பார்வையாளர்களைக் காணமுடிந்தது. சங்கர் அந்தத் திரையரங்கின் ஐந்தடுக்குப் பிரம்மாண்டத்தை வியந்து சொல்லிக்கொண்டிருந்தான் பென்னியிடம். பிறகு காட்சி ஆரம்பித்ததும் அரங்கத்திற்குள் நுழைந்தனர். சங்கர் மட்டும் நாற்பதாவது நிமிடத்தில் வெளியேறினான். அவன் மறுபடியும் திரும்பாததை உணர்ந்துகொண்ட பென்னியும், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியேறினான்.
வீட்டிற்கு வந்ததும் சங்கர் பிரம்பு நாற்காலியை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றான். துல்லியமான இலக்கின்றி தூறிக் கொண்டிருந்த வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏறத்தாழ ஒருமணி நேரத்தைக் கடந்தும் அவனது பார்வை வேறுபக்கம் திரும்பவில்லை. இரண்டுமணி வாக்கில் சங்கரை மதியச் சாப்பாட்டுக்கு அழைத்தான் பென்னி. சங்கர் எதுவும் பேசவில்லை. உயிரைத் தவிர அவனது உடலில் எதுவும் இயங்காதது போலவே இருந்தது. முப்பது நிமிட இடைவெளியில் நான்கைந்து முறை அழைத்தும் சங்கர் வேண்டாமென மறுத்துவிட்டான்.
திரைக் காட்சிகளின் தாக்கத்தினால்தான் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தான். முந்தைய நாளில் தான் விரும்பிக் கேட்டிருந்த வீட்டு உணவகத்தின் மதிய உணவினைக்கூட வேண்டாமென மறுத்ததும் இதனால்தான். இந்தக் காரணம் பென்னிக்குத் தெரியாம லில்லை. ஒருவகையில் சங்கரை திரையரங்கத்திற்குக் கூட்டிச் சென்றது கூட அவனைத் தைரியமாக வழிநடத்தக்கூடிய நோக்கத்தில் செய்ப்பட்டதாக இருக்கலாம். ஆனால் என் கணக்குப்படி சங்கர் இரண்டாவது முறை கொல்லப்பட்டுவிட்டானென்று பென்னிக்குத் தெரிவதற்கில்லை.
(iv)
இரவு பணிக்குச் சென்றிருந்த பென்னி காலை ஏழு மணிக்கெல்லாம் வந்ததும், உடலைத் தரையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். எட்டு மணிக்குக் கிளம்பினால் ஒன்பதுக்கெல்லாம் சங்கரை நேர்முகத் தேர்வு நடக்கக்கூடிய இடத்தில் சேர்த்துவிடலாம். அசதியில் படுத்திருந்த பென்னியிடம் கண்களெல்லாம் சிவந்து பொங்கியிருக்கிற தென ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுத் தான் ஆட்டோ பிடித்துப் போய்க் கொள்வதாகச் சொன்னான் சங்கர். ஆமாம்… ஆட்டோவிற்குச் சொல்ல வேண்டுமென மொபைலை எடுத்துப் பேசியபடியே குளியலறைக்குச் சென்ற பென்னி, பத்தாவது நிமிடத்திற்கெல்லாம் வெளியே வந்ததும், அடுத்தப் பத்தாவது நிமிடத்திற்குள் தயாராகிவிட்டிருந்தான். தன் சான்றிதழ்களும் ஆவணங்களும் அடங்கியக் கோப்புகளைச் சரிபார்த்தபடி அவைகளை முதுகுப்பையில் திணித்துக் கொண்டிருந்த சங்கர், “நீங்கள் எங்கே அண்ணா தயாராகியிருக்கிறீர்கள்? நான்தான் சொன்னேனே ஆட்டோவில் போய்க்கொள்கிறேன் என்று?” என்றான். அந்தபோது வெளியில் ஆட்டோ நிற்கும் சத்தம் வேகமெடுத்து அடங்கியது. பென்னி, சங்கரிடம், ஆவணச் சரிபார்ப்புகள் குறித்துக் கேட்டான். சங்கர் தன் தயார் நிலையை உறுதிப்படுத்தினான். சரி கிளம்பலாம் என்ற பென்னியின் பதிலுக்கு சங்கர் குழப்பமான முகத்துடன் வெளியே வந்தான். பென்னி வீட்டைப் பூட்டிவிட்டு வாசலை அடைந்ததும் தன் பைக் சாவியை சங்கரிடம் நீட்டினான். இன்னதென உறுதியாகக் கணிக்க முடியாத முகத்துடன் பென்னியைப் பார்த்தவன், “அண்ணா… என்னது? நீங்களும் கிளம்பி வந்துருக்கிங்க…? ஆட்டோ வேற சொல்லிருக்கிங்க…! பைக் சாவிய என்ட்ட குடுக்கறிங்க! எனக்கு எதுவுமே புரியல அண்ணா” என்றான். நமட்டுத்தனமகச் சிரித்துக்கொண்ட பென்னி, “நீ வண்டிய எடுத்துட்டுக் கெளம்பு” என்றான். தயக்கமும் குழப்பமுமாகச் சாவியை வாங்கிக் கொண்ட சங்கர் எதையோ ஆழமாக யோசித்தான். பென்னி மறுபடியும், “வண்டிய எடுத்துட்டு நீ இன்டர்வியூ போகலாம் சங்கர்” என்றான். சங்கரின் முகத்தில் வழி தவறிய அவமான உணர்வு எட்டிப் பார்த்ததென்றாலும் அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு முடியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
சங்கருக்கு டூ-வீலர் ஓட்டுவதில் எந்தச் சிக்கலும் இல்லையென்றாலும், தேர்வு அச்சமும், பென்னி தன்னைத் தனியே விட்டுவிட்டதையும், பெருநகரத்தின் பரபரப்பும் சேர்ந்த மூன்று காரணங்களால் ஐநூறு மீட்டருக்குள் ஓரிடத்தில் தடுமாறி நின்றுவிட்டான். சுற்றும் முற்றும் பார்த்தாலும் யாரிடம் வழி கேட்பதென்ற தடுமாற்றம் வேறு. பிறகு, பின்னால் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கிய பென்னியைக் கண்டதும் அவனது முகம் வேலை கிடைத்துவிட்டதைப்போல மாறியது. அதன் பின்னரான ஒன்பது கிலோமீட்டர் பயணத்தில் மொத்தம் நான்கு இடங்களில் வழிதவறியவனை ஆட்டோவில் தொடர்ந்த பென்னிதான் வழிநடத்திக் கொண்டான்.
(v)
வேலைக்கென விண்ணப்பித்திருந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளின் முழு வரவைக் காட்டிலும் இன்றைக்குச் சற்றுக் குறைவாகவே இருந்தது. கம்பெனி நிர்வாகம் அன்றைய நேர்முகத்தேர்வு நடத்தும் பொறுப்பை, அறிவு நிரம்பி வழியும் தோற்றமுள்ள இரண்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தது. ஆங்கில எழுத்து வரிசைப்படி அழைக்கப்பட்ட சங்கருக்கு அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்ததுமே இதயத் துடிப்பின் எண்ணிக்கைப் பங்குச் சந்தையைப் போலத் தாறுமாறாக எகிறியது. பிறகு அந்த ஏற்றத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்து அதிகாரிகளை எதிர்கொண்டான். அவர்கள் இவனது சான்றிதழைத் தீவிரமாக ஆராய்ந்துவிட்டுப் பார்வையால் ஒருவருக்கொருவர் எதையோ பரிமாறிக்கொண்டனர். பென்னி அறிவுறுத்தியிருந்ததைப் போல இவனது படிப்பு சார்ந்தோ துறை சார்ந்தோ வேலைக்கென விண்ணப்பித்திருந்த பிரிவு சார்ந்தோ முன்னனுபவம் குறித்தோ எந்தக் கேள்விகளையும் அவர்கள் இவன் முன்னே வைக்கவில்லை. எங்கிருந்து வருகிறாய் என்றனர். அவ்வளவு தான். பத்து நிமிடத்திற்குள் வெளியே வந்துவிட்டான்.
மதியம் ஒரு மணிக்குள்ளாகவே நேர்காணல் முடிந்ததும் கலைந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் வளாகத்திற்கு வெளியே குழுவிற்குப் பலராக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் அன்றைய தேர்வில் கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கைக் கணக்கிடப்பட்டு அதில் தங்களுக்கான வாய்ப்பைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு, பசி அவர்கள் ஒவ்வொருவரை யுமாகக் கலைத்து விடைபெறச் செய்தது.
அப்போது பென்னி சங்கரிடம், வண்டியை எடுக்கச் சொன்னான். இந்தமுறை சங்கர் தயங்கவில்லை. சரியான பாதையைப் பிடித்துப் போனவனை, அவன் சாப்பிட விரும்பிய வீட்டு உணவகத்தில் நிறுத்தச் சொன்னான்.
அந்தப் பசியாறலில் சங்கரிடம் நேர்காணல் அறையில் நடந்ததைக் கேட்டான் பென்னி. நீங்கள் சொல்லியனுப்பியது போலவே அங்கே எதுவும் நடக்கவில்லையென்ற சங்கர், வெறும் சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும்தான் என்றான். பிறகு இந்த வேலை உனக்கு உறுதியாகக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறதா என்றான் பென்னி. தெரியவில்லை. ஆனால் கிடைத்துவிட்டால் நல்லதுதான் என்றான் சங்கர். உன்னைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்து வெளியேற்றி விடுவார்கள் என்று பென்னி சொன்னதும் சங்கர் தன் இலையிலிருந்த பருக்கைகளைச் சேர்த்து அள்ளி வாயில் திணித்துக் கொண்டபடி பென்னியைப் பார்த்தான். பென்னி தன் இலையை மடக்கி எடுத்துக் கொண்டு எழுந்துவிட்டான்.
வீட்டிற்கு வந்ததும் சங்கர், தனக்கு வேலை கிடைக்காதென்று எப்படி இத்தனை உறுதியாகச் சொல்கிறீர்களென பென்னியிடம் கேட்டான். முதலில் நேற்றைய நேர்காணல் எதனால் தள்ளிப் போனதென்ற உண்மைக் காரணத்தை விசாரித்தாயா என்றான் பென்னி. இல்லை யென்றவன், தான் யாரிடம்… எப்படி விசாரிப்பது? என்றான். நேற்றைக்கு அங்கே எத்தனை பேரிடம் பேசிக்கொண்டு நின்றாய்…? அதுகுறித்தெல்லாம் விசாரித்திருக்க வேண்டாமா…? எதில் கவனமிருக்கவேண்டுமோ அதில் இருக்கவேண்டுமென அவனது அலட்சியத்தைச் சுட்டிக்காட்டினான். பிறகு, அவர்கள் குறித்தபடி நேற்றைக்கு நடந்திருந்தால் உனக்கு அங்கே வேலை தீர்மானமாகி யிருக்கும் என்றான். சங்கர் குழப்பமான முகத்துடன் பென்னியைப் பார்த்துத் தனக்குப் புரியவில்லை என்றான். நேற்றைய நேர்காணல் அதிகாரி மாற்றப்பட்டதற்கும் தற்போது சங்கருக்கு வேலை கிடைக்கா தென்று தான் உறுதியாகச் சொல்வதற்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதாகச் சொன்னான் பென்னி. சங்கரின் முகத்திலிருந்த குழப்பம் தீவிரமாகி ஆழமான குழிக்குள் இறங்கிவிட்டது. மேலும், சங்கர் தன் குழப்பங்களைக் கேள்விகளாகத் தொடுக்க விருப்பமற்றிருந்தான். பென்னி, சங்கரிடம், உன்னுடன் தேர்விற்கு வந்தவனில் ஒருவன் நேற்றைய அதிகாரி மாற்றப்பட்டதற்கானக் காரணத்தைச் சொன்னானே… அது என்ன என்றான். யார் அந்தக் கோபக்காரனைச் சொல்கிறீர்களா? என்றான் சங்கர். பென்னி ஆமாம் என்றதும், அவர் நிர்வாகத்தைப் பகைத்துக் கொள்ளக்கூடிய முடிவில் உறுதியாக நின்றதாகச் சொன்னதைக் கேட்கிறீர்களா என்றான் சங்கர். மறுபடியும் ஆமாமென்ற பென்னி, அங்கேதான் உனக்கான அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றான். அண்ணா நீங்கள் இந்த நகர மக்களை நன்றாகப் படித்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சுற்றிவளைத்துப் பேசாமல் எனக்குப் புரியும்படிச் சொல்லுங்கள் என்றான் சங்கர். சொல்லி விடுகிறேனென்ற பென்னி, அந்தக் கம்பெனியின் மிக மூத்த அதிகாரியான அவர், இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர். தனியார் நிறுவனங்களில் இதுபோன்ற இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிப்ப தென்பது சட்டத்தை மீறிய செயலோ கட்டாயமோ கிடையாதுதான். என்றாலும், நான் கேள்விப்பட்ட வரையில் அவர், சமூகத்தில் நிலவும் சிக்கல்களை நன்கு உணர்ந்தவரென்றார்கள். அதனால் அவர் தன் அதிகார எல்லைக்குட்பட்ட வேலையில் இப்படியான முடிவில் உறுதியாக நின்று விடுவாராம். அப்படித்தான் கடந்த நாட்களில் நடந்திருக்கிறது. ஆனால் இது அந்த நிர்வாகத்தின் நடைமுறைக்கு எதிரானதென்றுதான் அவரைப் பந்தாடிவிட்டனர் என்றான். பென்னி சொன்னதைக் கேட்டதும் சங்கர் வாயடைத்துப் போனான். கூடத்தில் நின்றவன் சட்டெனப் பால்கனிக்குச் சென்று வானத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
மாலை ஆறு மணிக்கெல்லாம் சங்கரின் மொபைலுக்கு ஒரு செய்தி வந்தது. பென்னி சொன்னது போலவே சங்கரை காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பதாகவும் தேர்ச்சி அல்லது இல்லை என்பதை அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அறியத் தருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்துவிட்டு எதையோ யோசித்தபடி மொபைல் ஃபோனை ஓரமாக வைத்தான். பிறகு மறுபடியும் வானத்தை நோக்கத் தொடங்கிவிட்டான். ஏழு மணி சுமாருக்குத் தூக்கத்திலிருந்து எழுந்த பென்னியிடம் தான் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தி வந்திருப்பதைச் சொன்னான். அமைதியாகக் கேட்டுக்கொண்ட பென்னியிடம், தான் மேலும் ஒருநாள் இந்தப் பெருநகரத்தில் தங்குவது குறித்த யோசனை அர்த்தமற்றதென்று விட்டு, அன்றைக்கு இரவே ஊருக்குக் கிளம்பும் திட்டத்தைச் சொன்னான். ஆனால் பென்னி சங்கரது முடிவை ஏற்கவில்லை. சில முடிவுகளை நம்மால் எடுக்கமுடியாது. இன்னும் ஒருநாளைய காத்திருப் பென்பதில் எனக்கும் நூறு சதவீதம் நம்பிக்கை இல்லைதான். ஆனால் கிடைக்காத ஒன்றிற்காகக் காத்திருக்கையில் மனிதனால் நிறைய யோசிக்க முடியும். அந்த யோசிப்பில் நிறையப் பக்குவப்பட முடியும். தோல்வி என்பது அரிய வாய்ப்பு. அதை நீ பயன்படுத்திக்கொண்டே ஆகவேண்டும். நான் வேலைக்குக் கிளம்பப்போகிறேன். அதோ… என் அலமாரியில் நான் பயணித்துக் கடந்த புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். அதைத் துழாவிக் கொண்டிரு. நாளை மாலையில் உன்னைப் பேருந்தில் ஏற்றிவிடுகிறேன் என்றுவிட்டு நகர்ந்து விட்டான். பென்னி சங்கருக்கான புதிய திறப்புகளைக் காட்டினாலும் அவனது சான்றிதழிலுள்ள சில எழுத்துக்களோ வார்த்தைகளோதான் அவனுக்கான அநீதி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆக… என் கணக்குப்படி இது மூன்றாவது முறை.
(vi)
சங்கர் ஊருக்குத் திரும்பி மூன்று நாட்களைக் கடந்துவிட்டாலும் நம்பிக்கையிழந்த அமைதியிலிருந்து உற்சாகத்திற்குத் திரும்பவோ புறக்கணிப்பு எனும் பழக்கப்பட்ட ஆயுதத்தின் திடீர்த் தாக்குதல் களிலிருந்து மீளவோ முடியாமல் அவதியுற்றான். கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் கவலை தோய்ந்த தன் அப்பாவின் முகத்தைத் தான் தன்னில் பார்க்க நேர்ந்தது. அத்தனைக்கும் மேலாக என்னைத் திறக்க அவன் பயன்படுத்திய சங்கேதக் கோடுகளை நினைவிலிருந்து மீட்பதற்குப் போராடினான். இன்னொரு பக்கம் அவனுக்குள் காற்று துன்புறுத்தாத தீக்கட்டையொன்று எரியாமலும் இல்லை. அது தன்னைப் பேருந்தில் தாக்கி அவமானப்படுத்தியவர்கள் மீதானது. இந்த நாட்களில் தான் எதிர்கொண்ட ஏனைய அவமானங்களைக் காட்டிலும் இதுதான் நேரடியானது என்பதால் அந்தக் கட்டையைக் கொளுத்தியவர்களைக் கொளுத்தாமல் அதை அணையவிடக் கூடாதென்ற முடிவிலிருந்தான். இன்னும் சொல்லப்போனால் இந்த வன்முறை எண்ணத்தை மாற்றக்கூடிய சுயசமாதான யோசனைகளை யெல்லாம் வம்படியாக நிராகரித்தான். பென்னியின் அழைப்புகளை நிராகரித்து வந்ததற்கான காரணம்கூட இந்த இரகசியத் திட்டத்தை அவனிடம் உளறிக் கொட்டிவிடுவோமோ என்கிற யோசனையில்தான். ஆனால் இன்றைக்கு அது முடியவில்லை. எதைச் சொன்னால் பதிலளிப்பானோ அதைச் சுருக்கமானச் செய்தியாக அனுப்பியிருந்தான் பென்னி. அதைப் படித்ததும் சட்டென பென்னியை அழைத்த சங்கர், அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதானா! என்றான். இல்லை. பொய் என்றான் பென்னி. சங்கர் அமைதி சூழ்ந்தவனாகிவிட்டான். தனக்கு இந்தக் கம்பெனியில் மட்டும் வேலை கிடைத்துவிட்டால் போதும். வேறெதுவும் வேண்டாமெனச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு கம்பெனியில் ஆளெடுக்க இருக்கிறார்கள் என்கிற செய்தியைத்தான் பென்னி அனுப்பியிருந்தான். பென்னி, சங்கரிடம் மூன்று நாட்களாகத் தன்னை அழைக்காதது குறித்தும் தனது அழைப்பைத் தவறவிட்டது குறித்தும் கேட்டதற்கு ஏதேதோ வேலையிருந்ததாகச் சமாளித்தான். பிறகு பென்னி அவனது குடும்பத்தை விசாரித்தான். சங்கர் பதிலளித்துக் கொண்டிருக்கையில் “நீ பேசறதையெல்லாம் காற்று குடிச்சிருது சங்கர். கொஞ்சம்தான் எனக்குக் கிடைக்குது. இப்போ நீ எங்க இருக்க?” என்றான். சங்கர் தான் அலையாத்திக் காட்டிற்குச் செல்லும் சாலையிலுள்ள பாலக் கட்டையில் அமர்ந்திருப்பதாகச் சொன்னான். “ஓ… அங்கயா…? நல்ல காற்றடிக்குமே அங்கே… இந்த நேரத்தில் அங்கே என்ன வேலை உனக்கு?” என்றான். ஒன்றுமில்லை யெனத் தடுமாறிய சங்கரிடம் பேருந்தில் அவன் தாக்கப்பட்டது அவனது வீட்டிற்குத் தெரிந்துவிட்டதா என்றும், அவனது அம்மாவோ அப்பாவோ அது குறித்து ஏதும் கேட்டார்களா என்றும் விசாரித்தான் பென்னி. தெரியும்போல அண்ணா என்றவன், யாரும் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை என்றான். தாக்கியவர்களை மறுபடியும் ஊரில் நீ சந்திக்க நேர்ந்ததா என்ற பெண்ணியிடம், ஆமாமென்றுவிட்டு, ஊரின் வீதிகளிலும் கடைகளிலும் குளக்கரையிலும் பனங்காட்டுப் பாதையிலும் அவர்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் குறையாத அவர்களது ஆணவம் தன்னை எல்லை மீறித் துன்புறுத்துவதாகவும், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் முரட்டுத் தனமான குரலில் கூறினான். பென்னி, சங்கரின் கோபத்தைச் சாந்தமான வார்த்தைகளால் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தான். சமாதானமடையாத சங்கர், அவர்களைக் கொலை புரியும் நோக்கத்தி லிருப்பதையும் உளறிவிட்டான். இப்பொழுது பென்னி அமைதியாகி விட்டிருந்தான். பிறகு, இந்த நேரத்திற்கு நீ இங்கே உட்கார்ந்திருப்பதாகச் சொல்லும்போதே எனக்குச் சந்தேகம்தான். இப்போது உன்கையில் ஆயுதம் வைத்திருக்கிறாய்…? அப்படித்தானே? என்றான். சங்கர் அமைதியாக இருந்தான். அப்படியானால் நீ எத்தனைப் பேரைக் கொல்வாய்? உன் படிப்பெல்லாம் என்னாவது? அதுபோகட்டும். நான் உன்னைத் தவறாக வழிநடத்திவிட்டதாக நினைக்கமாட்டார்களா உன் வீட்டில்? பென்னியின் கேள்விகளுக்கு சங்கர் எதுவும் பேசவில்லை. இதோ பார் சங்கர். எதிரியிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தடுப்பாயுதங்கள் தேவை. பிறகுதான் தாக்கக்கூடிய ஆயுதத்தைக் கையிலெடுக்க வேண்டும். இப்போது நம் வசம் தடுப்பாயுதமே கிடையாது. அத்தனை வகையிலும் பலமுள்ள அவர்களை எதிர்த்தால் ஒரே இரவில் தெருவிலிருக்கக்கூடிய இருபது குடிசைகளும் எரிந்து நாசமாகிவிடும். போதாக்குறைக்கு ஆதாரம் கசியாதபடி நம் முதிய தகப்பன்களை நிற்கவைத்து மிரட்டுவார்கள். அவர்களது தினப்பாட்டைச் சட்டென நிறுத்தித் திண்டாட விடுவார்கள். பிழைப்பிற்குக் கதியற்ற நம்வீட்டுக் கோபம் நம் பக்கமே திரும்பிவிடும். இப்பொழுது தெருவில் ஏறத்தாழ வீட்டிற்கு ஒருவரென நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர். எஞ்சியிருப்பது நீ மட்டும்தான். இப்போதைக்கு நீ கொஞ்சம் கையாலாகாதவனாய் வேசம் கட்டு. ஆனால் உனக்குள் எரியும் தீக்கட்டையின் உக்கிரம் குறையாமல் பார்த்துக்கொள். நம்மைப் பொருத்தவரையில் பழிவாங்கல் என்பது கல்வியில் முன்னேறி பொருளாதாரத்தில் மேலெழுவதுதான். அந்த இலக்கை அடைய இடப்பெயர்வு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. இந்த நாகரிக எதிர்ப்பை உத்தியெனப் பயன்படுத்திக்கொள்வதுதான் சாமர்த்தியம். அதேபோது இது நிரந்தரமில்லை என்கிற புரிதலும் தேவை. அடுத்தடுத்தத் தலைமுறை சொந்த ஊரில் தலைநிமிர வேண்டும். அந்த லட்சியத்தையடைய நாம் சில அவமானங்களைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இரத்தச் சிந்தனைக்கு ஒருபோதும் இடமளித்துவிடாதே. வன்முறை எண்ணம் உயரிய குறிக்கோளுக்கு இரையாகிவிட்டால் மறுபடியும் இந்தச் சுமையை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திவிடுகிறோமென்கிற உண்மையை உணர்ந்துகொள் என்றான். சங்கர் அமைதியாகவே இருந்தான். மறுபடியும் பென்னியே பேசினான். சங்கர் இதுநாள் வரையில் கற்ற கல்வி அவனது வாழ்க்கைக்கு எவ்வகையில் உதவக்கூடியது என்பதை விளக்கினான். அதாவது கல்வி வாழ்க்கைக்கானது என்பதில் குழப்பமில்லை. என்றாலும் அது வேலை தேடிக்கொள்வதற்கான, பொருளீட்டுவதற்கானத் தகுதி மட்டும்தான். சமூகத்தின் நெளிவு சுழிவுகளை ஏற்றும் நிராகரித்தும் கடக்கக்கூடிய பக்குவமான அம்சங்களெதுவும் அதிலிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் அலமாரியிலிருந்து நீ அள்ளிக்கொண்டு வந்த புத்தகங்கள் அப்படியில்லை. பேருக்காகவாவது நீ அவற்றைப் புரட்டினாயா என்றான். சங்கர், ஒரு ஃபோட்டோவிற்கான ஃப்ளாஷ் வெளிச்சம் வெளியேறும் நேரத்தில் தன்னையுணர்ந்தவனாய் இன்றைய இரவிலிருந்து அந்தப் புத்தகங்களைப் படிக்கத் துவங்குவதாக உறுதியளித்தான்.
(vii)
பட்டனைத் தொட்டால் இடம்மாறிக்கொள்ளும் கோப்புகளைப்போல சங்கரின் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. அன்றைய இரவிலேயே பென்னி தங்கிப்படித்த தன் வீட்டின் கொல்லைப்புற குடிசையைச் சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள்ளிருந்த தனது பொருட்களுடன் பென்னியிடமிருந்து அள்ளிக்கொண்டு வந்திருந்த புத்தகங்களையும் கொண்டு சேர்த்துவிட்டான். நான்கு நாட்கள் வரையிலும் அந்தப் புத்தகங்களில் ஒவ்வொன்றாக மேயத் தொடங்கினானே ஒழிய அதற்குள் ஊடுறுவியபாடில்லை. அவனுக்குள் ஏதோ நிலைகொள்ள முடியாத தொந்தரவுபோல. எரியும் வீட்டிற் குள்ளிருந்து வெளியேறத் தவிப்பவனைப் போலிருந்தான். சட்டென என்னை எடுத்துக்கொண்டு வெளியே சென்றபடியே நேரத்தைப் பார்த்துவிட்டு பென்னியை அழைத்தான். அவன் எடுக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து மறுபடியும் அழைத்தபோது எடுத்தவன், இரவு பணி பார்த்துவிட்டுத் தூங்கிவிட்டதாகச் சொல்லிவிட்டுத் தற்போது வீட்டு உணவகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் முக்கியமாகப் பேசவேண்டுமென்றால் இப்போதே பேசலாம் என்றான். அத்தனை முக்கியமான செய்தியெல்லாம் இல்லையென்ற சங்கர், சாப்பிட்டு வந்ததுமே கூப்பிடுங்க அண்ணா என்றுவிட்டு அணைத்துப் போட்டான்.
மூன்று மணி சுமாருக்கு சங்கரை அழைத்த பென்னி, ஊருக்கு அனுப்பும்போது சங்கரை மறுபடியும் வேலைக்கு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தது குறித்துக் கேட்டான். சங்கர் அங்கேயெல்லாம் விண்ணப்பித்தாகிவிட்டதாகக் கூறினான். பிறகு அவனது புத்தக வாசிப்புக் குறித்துக் கேட்டபோது சங்கரிடம் முடிவற்ற அமைதியே நிலவியது. அவ்வப்போது உன் ஓட்டுக்குள் உன்னை நீ இழுத்துக் கொள்கிறாய் சங்கர் என்றான் பென்னி. இந்தச் சமூக அமைப்பு தனக்கு ஒரு நிச்சயமில்லாத எதிர்காலத்தைத்தான் கண்முன்னே நிறுத்துகிறது என்றான் சங்கர். அது உண்மைதான். ஆனால் இங்கேதான் நாம் வாழ்ந்தாக வேண்டும். எளிதில் கிடைக்கக்கூடியதென்று இங்கே எதுவுமே கிடையாது. இதை நீ முதலில் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும். சரி இப்பொழுது உன் பிரச்சனை என்னவென்றான் பென்னி. நானொரு சந்தேகத்தைக் கேட்க விருக்கிறேன். அதற்கு நீங்கள் ஒழிவு மறைவின்றிப் பதிலளிக்கவேண்டு மென்றுவிட்டு, தன்னை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தபோது அங்கே யாரோ ஒருவனுடன் இன்னொருவனுக்கு ஏற்பட்ட கைகலப்பு, காவல் நிலையம் வரை சென்றது குறித்துக் கேட்டான்.
அதுவொரு அறியாமைக்காரனுக்கும் சுயமரியாதைக்காரனுக்குமானப் பிரச்சனை. அறியாமைக்காரன் வழக்கத்திலிருக்கும் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி யாரிடமோ ஃபோனில் கோபமாகப் பேசிக் கொண்டிருக்க, அது சுயமரியாதைக்காரனை உக்கிரமடையச் செய்து விட்டது. அந்தப் பொருளின் உச்சரிப்பு சுயமரியாதைக்காரனின் வட்டார வழக்கில் அவனது சமூகத்தை இழிந்து பேசக்கூடியவொன் றென்பது அவனது வாதம். அறியாமைக்காரன் தன் தரப்பில் சொல்லக்கூடிய வாதத்திலும் குற்றமிருக்கவில்லை. அவன் தன் பலசரக்குக் கடையிலுள்ள பொருட்களின் பற்றாக்குறையைக் கடைப் பையனிடம் குறிப்பிட்டதாகச் சொன்னான். ஆனாலும் எதிர்த் தரப்பிலுள்ள கடைப் பையனிடம் நடத்திய உரையாடலில் தன் சமூகத்தைத் தாக்கிப் பேசக்கூடிய அம்சங்களைப் பட்டியலிட்டுக் காட்டிய சுயமரியாதைக்காரனால் அது காவல்நிலையம் வரை சென்று சமாதானத்திற்கு வந்திருந்தது. தன் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் இப்படியான நடைமுறையிலுள்ள வார்த்தை களைத் தீண்டாமை வசைக்கான சங்கேத வார்த்தைகளாகப் பயன் படுத்துதல் உண்டென்பதை சங்கர் அறிந்திருந்தாலும் இந்தப் பெருநகரத்தில் இதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அறியாமைக் காரனுக்கும் சுயமரியாதைக்காரனுக்குமான இந்தப் புரிதல் சமாதானத்திற்கு வந்திருந்தாலும், வட்டாரத்திற்கு வட்டாரம் இப்படிச் சகமனிதர்களைத் தாக்குவதற்கெனச் சங்கேத வார்த்தைகளை வைத்திருக்கிறார்களேயென மூச்சை இழுத்துக் கடத்தியபடி இதைத் தன்னால் கொலைக்கு நிகராகத்தான் கருதமுடியுமெனச் சொன்னான் பென்னியிடம். அதனால் என் எண்ணிக்கையில் இதைப் புறந்தள்ளுவதற்கில்லாததால் இது நான்காவது முறை.
(viii)
தொற்றுநோய் பரவலினால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, மாதத்திற்கொரு முறையெனப் படிப்படியாக, ஏறத்தாழ முற்றிலுமாக விளக்கிக்கொள்ளப்பட்டிருந்த நாளொன்றில் சங்கர் என்னைப் பழுது நீக்கி வாங்கியிருந்தான். நான் எத்தனை நாட்கள் அந்தக் கடையிலிருந்தேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவன் பேசிக்கொண்டிருந்ததையும் திரையில் நிறுவப்பட்டிருந்த தேதியைக் கொண்டும் பார்க்கையில் பதினாறு நாட்களிருக்குமென்பதுதான் என் கணக்கு. இதற்கு முன்னதாக சைக்கிள் வியாபாரியைப் போலவே மாறியிருந்த என் குரல் இப்போது அசலாகிவிட்டிருந்தது. நான் மீண்டது மறுபிறப்பென என்னைக் கையாளக்கூடிய முறையைக் கடைக்காரர் சங்கரிடம் மிகவும் வலியுறுத்திச் சொன்னதால் அன்றைக்கு அவன் என்னை மிக நேர்த்தியாகக் கையாளத் தொடங்கினான். அவனது கட்டளையை நான் எந்தத் தடுமாற்றமு மின்றிச் சரிவர நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் புதிதாக யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்ததை உளவுபார்த்த வகையில் அவன் தனக்கு விருப்பமான கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டானென்பதும், அந்த நாட்களில் பென்னியின் மொபைல் ஃபோனைப் பயன்படுத்திக் கொண்டதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
பிறகு, வேலைக்குச் சேர்ந்த ஒன்றரை மாத முடிவில், ஒரு விடுமுறை நாளில் சங்கர் ஒரு முக்கிய முடிவை பென்னியிடம் கூறினான். அதாவது பென்னியின் வீட்டிலிருந்து கம்பெனிக்குச் செல்லக்கூடிய தூரமானது நேரத்தை உறிஞ்சி சோர்வைக் கக்கக்கூடியதாக இருப்பதாகவும் போக்குவரத்துச் செலவைக் கணக்கிட்டாலும் ஒரு பெரிய துண்டு ஒதுங்குவதனால் கம்பெனிக்கு அருகிலேயே அறையோ வீடோ எடுத்துத் தங்குவதுதான் சிறந்த யோசனையாகத் தெரிகிறதென்றும் கூறினான். பென்னி யோசிக்கவே இல்லை. நல்ல முடிவுதான் சங்கர். அப்படியே செய். என்றுவிட்டு, இப்படி நான் சட்டென உன் முடிவை ஆமோதித்ததால் உன்னைக் கழற்றிவிடுவதாகக் கருதவேண்டாம். நீ இங்கேயே தங்குவது குறித்து எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. இந்தப் பெருநகர வேகத்தையும் சிக்கலையும் நீ எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நீ சில முடிவுகளைத் தன்னிச்சையாக எடுப்பதற்கு நான் வழிவிட நினைக்கிறேன். அவ்வளவுதான். என்னை நீ புரிந்து கொள்வாயென நம்புகிறேன் என்றான். அண்ணா நீங்கள் என்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினால்கூட அது என் நலன் குரித்ததாகத்தான் இருக்குமென நம்பக்கூடியவன் நான். உங்களை எனக்குப் புரியாதா அண்ணா என்றான். சங்கர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகப் பெருமிதப்படுவதகச் சொன்ன பென்னி, வீடாகவோ அறையாகவோ பார்க்கும் பட்சத்தில் வாடகையைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் கிடைத்தால் நல்லது என்றான். அப்படிக் கிடைத்தால்தான் இந்த முடிவிற்கான முழுப் பலனையும் அனுபவிக்க முடியுமென்ற சங்கர், தனது யூனிட்டில் பணியாற்றக்கூடிய சிலரிடம் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் எப்படியும் அது கைகூடிவிடுமென்றும் நம்பிக்கையாகச் சொன்னான்.
(ix)
தன்னைப் பற்றிய உயர் மதிப்பீடுகளைத் தானே உணர முடியாத படியோ அல்லது அந்த மதிப்பீடுகளைக் கொண்டாட்ட மனநிலையுடன் உள்வாங்க முடியாதபடியோ இந்தச் சமூகம் நிகழ்த்தக்கூடிய நூதனமான உளவியல் தாக்குதல்களால் சங்கர் தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் சந்தேகக் கண்களுடன்தான் அணுகினான். மனிதர்கள் மீதான ஒவ்வாமையுணர்வினால் அவன் நிலையான முடிவிற்கு வரமுடியாமலும் அலைக்கழிந்தான். அத்தனை பெரிய கம்பெனியில் அவனால் தன் கருத்துடன் ஒத்துப்போகக் கூடியவனென ஒருவனைத்தான் நட்பாக்கிக் கொள்ளமுடிந்தது. அதுவும் அவன், மாநிலத்தின் எல்லையிலிருந்து வந்திருப்பவன். இரண்டு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவனெனச் சொல்லும் அவனுடன்தான் இப்போது அறை வாடகையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான். சங்கரது இந்தத் தேர்வை நான் இயல்பிலிருந்து விலக்கித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் சங்கர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறான். என்னைப் பொருத்தவரையில் சங்கரின் இந்த நிலைமை இந்தப் பூமியிலான அவனது இருப்புக்குச் சவால் விடக்கூடிய ஒன்றுதான்.
சங்கர், ஜனவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று தன்னுடன் அறையைப் பகிர்ந்துகொண்டிருப்பவனுடன் காலையுணவை முடித்துக் கொண்டு திரும்புகையில் அவனிடம் அந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வரக்கூடிய தொடர்ச்சியான மூன்று விடுமுறை நாட்களைக் கழிப்பதற்கானத் திட்டத்தைக் கேட்டான். அறையில் படுத்துத் தூங்குவது… சாப்பிடப்போவது… இதைத் தவிரத் தனக்கு எந்தத் திட்டமும் இல்லை என்றவன், சங்கரது திட்டத்தைக் கேட்டான். சங்கர் தன் சொந்த ஊருக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னான். நல்ல யோசனைதான். தூரம் கம்மியினால் நீ சென்றுவரலாம். ஆனால் குறைந்தது நான்கு நாட்கள் விடுப்பில்லாமல் நான் என் ஊருக்குச் செல்வது குறித்து யோசிக்கவே முடியாது. நீ சென்றுவா. நான் என் பொழுதுகளை ஓட்டிக்கொள்கிறேன் என்றான். சங்கர் அவனிடம், நீயும்கூட என் வீட்டிற்கு வரலாமே என்றான். சங்கரது அழைப்பில் தயக்கமிருந்தாலும் அது விருப்பமற்ற அழைப்பில்லை. ஆனால் அறை நண்பன் அந்தத் தயக்கத்தைப் பிரித்துப் பார்த்ததினாலேயோ என்னவோ இன்னொருமுறை வருவதாகச் சொன்னான். அதன் பிறகு சங்கர் அவனை ஊருக்குக் கூப்பிடாமல் இல்லை. நாள் தவறாமல் அழைத்தான். அப்படி அழைக்கப்பட்ட ஒவ்வொருபோதும் முதல்முறை அழைத்த அதே தயக்கமிருப்பதை சங்கரிடம் ஒருபோது சுட்டிக் காட்டினான். அதாவது, சங்கரது அழைப்பில் ஒருவித தயக்கமும் விருப்பமில்லாமையும் இருப்பதாக உணர்வதாகச் சொன்னான். அப்படியானால் நான் ஏன் உன்னை நாள் தவறாமல் அழைக்க வேண்டும்? என்றான் சங்கர். அதுசரிதான். ஆனால் உன்னிடம் தயக்கமிருப்பதாக வைத்தக் குற்றச்சாட்டை நான் திரும்பப் பெறுவதற்கில்லை. அது எதனாலென்ற காரணத்தை அறியவும் விருப்ப மில்லை. காரணம் உனக்குத்தான் தெரியும். ஒருவேளை உன் இயல்பை நான் சரியாக உள்வாங்கிக் கொள்ளாததால்கூட இருக்கலாம். ஆனாலும் இப்போதைய உன் வார்த்தையை நான் நம்புகிறேன். உன் அழைப்பையும் மதிக்கிறேன் என்றான். நம்புவதும் மதிப்பதும் இருக்கட்டும். கடைசியாகக் கேட்கிறேன். வருகிறாயா இல்லையா? என்றான் சங்கர். உன் வார்த்தைகளை மதிக்கிறேன் என்றால் நான் வருகிறேன் என்றுதானே அர்த்தமாகிறது சங்கர்? என்றான்.
குற்றமற்றவனின் தண்டனைக்காலம் முடிவடைந்த மனநிலையிலிருந்த சங்கர் தான் திட்டமிட்டிருந்த நாளில் தன் அறை நண்பனுடன் ஊருக்குப் புறப்பட்டான். ஆனால் அந்தப் பயணம் சங்கரை மிகமோசமாகத் தாக்கியழித்துவிட்டது. சங்கர் அந்த நண்பனுடன் ஊரில் இறங்கும்வரை பத்திரமாகத்தான் இருந்தான். ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள தன் தெருவை நோக்கி நடக்கையில்கூட சங்கருடன் அவன் சிரித்துச்சிரித்துப் பேசியபடியும் அவனது உடலை இடித்துத் தள்ளியபடியுமாகக் கும்மாளமாகத்தான் நடந்துகொண்டான். ஆனால் ஒரு எல்லையில் நின்றுவிட்டது அந்தக் கும்மாளம். சங்கர் தன் தெருவிற்குள் நுழைந்தபோது அந்த நண்பனின் கால் அங்கேயே நின்று விட்டது. பிறகு திடீரெனத் தான் திரும்பவேண்டும் என்றான் சங்கரிடம். ஏனென்று கேட்ட சங்கரிடம் சப்பைக்கட்டான, முன்னுக்குப் பின் முரணான காரணத்தைச் சொன்னான். சங்கர் அதை நம்பவில்லை. கைதியின் மனநிலை தன்னை மறுபடியும் விலங்கிட்டுக் கொண்டதைப் போலக் குறுகிவிட்டான். தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த மொபைல் ஃபோனை எடுத்து அவசரப் பயணத்திற்கான நாடக வசனத்தை யாரிடமோ பேசத் தொடங்கிய அறை நண்பன், ஃபோனில் பத்து நிமிடம் பேசியபிறகு, சங்கரிடம் தான் அவசரமாகக் கிளம்பவேண்டும். அடுத்தமுறை உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினான். அன்பால் அந்த நண்பனை அன்றைக்கு சங்கரால் தடுக்க முடியாத காரணத்தினால் இது ஐந்தாவது முறை.
(x)
மூன்று விடுமுறை நாட்களில் ஊருக்குச் சென்றுவந்த சங்கருக்கு, தான் ஐந்தாவது முறையாகக் கொல்லப்பட்டதைத் தவிர எதுவும் மிஞ்ச வில்லை. இந்த முறை தன்னைக்கொன்ற அந்தத் தூய்மையற்றவனுடன் மறுபடியும் அறையைப் பகிர்வதில் விருப்பமின்றி பென்னியின் வீட்டிலேயே தங்கிக்கொள்வதாகச் சொன்னான். பென்னி அவனது இந்தத் திடீர் முடிவிற்கானக் காரணத்தைக்கூடக் கேட்காமல் சம்மதித்து விட்டிருந்தான்.
இந்த மனிதர்களின் சாகச வாழ்வு எத்தனை அடிபட்டதாயினும் சட்டென அவர்களைப் பள்ளத்தாக்கின் முகட்டிலிருந்து தள்ளிவிட்டு விடுவதில்லை. அவர்கள் வலியுடன்தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற முடிவில் உறுதியாக இருப்பதைப்போல, காலம், வாழ்வதற்கான பல சுவாரஸ்யமான மாற்று ஏற்பாடுகளைக் கையளித்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் சங்கர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதனால் இந்தப் பூமியில் அவனது இருப்பு குறித்த என் முந்தைய கருத்து இப்பொழுது பொய்யாகிவிட்டிருக்கிறது. அதாவது, பென்னியைத் தவிர மனிதர்களை விட்டு விலகிவிட்ட அவனது இருப்பு இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆமாம். காலம் அவனுக்கு வேலை எனும் இயங்குவிசையைப் பொருத்தியதோடு ஒரு பெண்ணையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இப்படி அவன் நம்பிக்கையான பாதையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு வார இறுதியில் முதல் ஷிப்ட்டுக்குக் கிளம்பாமல் மென்மையாக வருடிக் கொடுத்த அலாரத்தை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டான்.
ஒன்பது மணி வாக்கில் எழுந்த பென்னியின் முகம் அவன் போர்த்திக் கொண்டு படுத்திருந்ததைக் கண்டதும் குழப்பமடைந்தது. எதையோ ஆழ்ந்து யோசித்தவன் அவனது படுக்கையை நெருங்கிப் போர்வையை உருவினான். கண்களைக் கூசியபடி விழித்துப் பார்த்த சங்கரிடம், இன்றைய ஷிஃப்ட் குறித்துக் கேட்டான். ‘ப்ச்…’ என அலுத்துக் கொண்டபடியே சோம்பலான மூச்சுக் காற்றை ‘உஸ்…’ எனக் கடத்திவிட்டு எதுவும் பேசாமல் சுருட்டிப் படுத்துக்கொண்டான்.
சிலமணி நேரத்திற்குப் பிறகு தூரத்திலிருந்த மசூதியிலிருந்து ‘பாங்கு’ ஒலித்ததும் எழுதவன், பென்னியைத் தேடினான். அவன் பால்கனியில் அமர்ந்தபடி ஒரு புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்து விட்டுக் கூடத்தில் கிடந்த டீப்பாயின் மேலிருந்த உணவுப் பொட்டலத்தைப் பார்த்தான். பிறகு இடது கையால் வயிற்றைச்சுற்றி எதிர்வட்டம் போட்டபடியே குளியலறைக்குள் நுழைந்தான்.
அன்றைய மதிய உணவிற்குப் பின்னர் சங்கர், பெண்ணியிடம் கடற்கரைக்குப் போகலாமா என்றான். பீடத்தில் சுழலும் மின்விசிறி தனக்குத் தானே திசையைத் திருப்பிக்கொள்வதைப்போலப் புத்தகத்திலிருந்த கவனத்தைத் திருப்பிய பென்னி, போகலாமென்ற தோரணையில் கண்ணைக் காட்டியபடியே நேரத்தையும் பார்த்துக் கொண்டான்.
கடற்கரையில் கூடுவதற்கானத் தடை இன்னமும் நடைமுறையில் இருப்பதைப் போகும் வழியில் சங்கர்தான் பென்னிக்கு நினை வூட்டினான். பொரிதட்டியதைப் போல ஆமாமென உணர்ந்த பென்னி, ஊரடங்கு விதிகளைப் பொருட்படுத்தாத ஒரு திரளானோருக்கு இப்படியான கட்டுப்பாடுகளெல்லாம் தேவையில்லாத ஒன்றென அலுத்துக் கொண்டபடி வேறு எங்கே செல்லலாம்? ஏதேனும் முக்கிய விஷயம் பேசவேண்டுமா நீ என்னிடம்? என்றான். ஆமாமெனத் தலையாட்டிய சங்கர், தடையில்லாத அமைதியான ஓரிடத்திற்குச் செல்லலாமே என்றான். பிறகு பென்னியின் டூவீலர், நகரத்திற்கு வெளியே சிறு நகரங்களுக்குப் பிரியக்கூடிய பிரதானச் சாலையிலுள்ள ஒரு பழைமையான மரத்தடியில் நின்றது. ஒரு சிறிய அமைதிக்குப் பின்னர், மறுபடியும் பென்னி, சங்கர் ஷிஃப்ட்டுக்குப் போகாதது குறித்துக் கேட்டான். சங்கர் பென்னியிடம் உங்களுக்கு வார ஓய்வு என்பதால் இன்றைக்குத் தான் விடுப்பு எடுத்திருப்பதாகச் சொன்னான்.
பிறகு ஒரு நீண்ட அமைதிக்குப் பின்னர்த் தான் ஒரு பெண்ணுடன் நட்பில் இருப்பதாகச் சொன்னான் சங்கர். கண்களைச் சுருக்கிக் கொண்டபடி எதையோ ஆழமாக யோசித்த பென்னி, எத்தனை நாட்களாக இந்தப் பழக்கம் என்றுவிட்டு, “சாரி… ஐ-மீன் உங்களுக்குள் எத்தனை நாட்களாக?” என்றான். சங்கர் ஒரு இருபது நாட்களுக்குள் தான் என்றதும், பென்னி, ஆச்சர்யத் தொனியில் புருவமேட்டை உயர்த்தியபடி உதட்டையும் பிதுக்கிக் கொண்டான். பிறகு, இரவு நேரங்களில் நெடுநேரம் வரையிலும் சாட் செய்வதெல்லாம் அந்தப் பெண்ணுடன்தானா? என்றான். சங்கர் ஆமாமென்றான். ஓஹோ அப்படியா! என்ற பென்னி, அவளது பெயரில் தொடங்கி, பூர்வீகம் வரையில் கேட்டான். அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் சங்கருக்கு தனிப்பட்டதென்பதால் பென்னி அதற்குள் நுழைந்து கேட்பானென்று நான் ஒரு சதவீதம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் சங்கரின் பதிலோ, கேள்வித்தாள் வெளியானதைப் போலத்தான் இருந்தது. அது அவர்களுக்குள்ளான புரிதலினால் இருக்கலாம். அதில் நான் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருப்பதாகத்தான் கருதினேன். அது சங்கர் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் காரணங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென்ற சந்தேகம்கூட எனக்குண்டு. பிறகு, பென்னி, கிண்டலும் பெருமிதமுமாய் உன்னுடன் வேலை பார்க்கக்கூடியவள் என்கிறாய்… என்னை அவளுக்கு அறிமுகப் படுத்துவாயா? என்றான். அதே பெருமிதம் மாறாமல், சீக்கிரமே அண்ணா… என்றான் சங்கர். பிறகு அவனுக்கொரு வாழ்த்துச் செய்தியைச் சொல்லிக் கைகுலுக்கினான் பென்னி.
(xi)
தன்னைத் தொற்றுநோய் கிருமியாகப் பார்த்தவனுடன் அறையைப் பகிர விருப்பமில்லாமல் வெளியேறிவிட்ட சங்கரால் கம்பெனியின் பணிமனையில் பொழுதனைக்குமாக அவனைச் சந்திக்க நேர்வதைத் தவிர்க்க முடியவில்லை. இருவருக்குமான ஷிஃப்ட் முறையில் மாற்றமிருந்தாலும் அவனை எதிர்கொள்வதாவது நிகழ்ந்து விடுகிறது. அப்படியான போதெல்லாம் தந்திரமானத் தன் விலகளின் மீது கறைபடியாதபடி பார்த்துக்கொண்டான். அதாவது, சங்கரிடம் தான் பழைய முறையிலேயே நட்பிலிருப்பதான ஒரு தோற்றத்தை நிறுவிக் கொண்டே இருந்தான். உதாரணமாக, ஏன் நீ திடீரென அறையைக் காலிசெய்துவிட்டாய்? என்று கேட்கத் தவறினானில்லை. அவனது இந்த நாடகத்தனமான வார்த்தைகளால் எரிச்சலுற்ற சங்கர் அவனைச் சிறிய அளவிலாவது பழிதீர்த்துவிட வேண்டுமென முணுமுணுத்த படியே இருந்தான். அப்படி வாய்த்த நாளொன்றில்தான் இந்தப் பெண்ணுடனான சந்திப்பும் வாய்த்தது. அதாவது, அவள், கம்பெனி நிர்வாகத்தால் சிறப்பானத் தகுதியொன்றிற்குப் பணிக்கப் பட்டிருந்தாள். அதாவது, மனிதவளம் மற்றும் சமரச முயற்சியை மேற்கொள்ளக்கூடியவளாக. இந்த மனிதவள முயற்சிக்காக சங்கர் அவளை நான்குமுறை சந்திக்க நேர்ந்தது. அப்போதிலிருந்துதான் இருவருக்குமான நட்பு வளரத் தொடங்கியது.
இந்த ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நாட்களில் அவள் சங்கரிடம், என் வழியே எக்கச்சக்கமான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறாள். வெளியில் சந்தித்துப் பேசலாமென்றுகூட இரண்டொரு முறை கேட்டிருக்கிறாள். ஆனால் சங்கர் ஏனோ தனக்குப் பயந்து வருவதாகச் சொல்லி மறுத்துவிட்டிருந்தான். மறுபடியும் இன்றைக்குக் காலையில் அழைத்தவள் எங்கேயாவது வெளியில் சந்திக்கலாமா இன்றாவது…? என்றாள். இந்த முறை அவளது குரலில் ஒருவித மிரட்டலும் கறார் தன்மையும் ஓங்கியிருந்தது. பாதித் தூக்கத்திலிருந்தவனுக்கு எதுவும் புரியவில்லை. பத்து நிமிடம் கழித்து அழைக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தான். பிறகு அழைத்தவளிடம், கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போலவே நடந்துகொண்டான். அதாவது, இன்றைக்கு நிச்சயமாக நாம் வெளியே போகலாம். இன்னும் ஒருமணி நேரத்தில் நான் தயாராகிவிடுவேன் என்றான். அப்படியானால் மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் தென்னக ரயில் நிலையத்தின் தலைமையகத்தின் தான் காத்திருப் பதாகச் சொன்னாள்.
சங்கர் அந்தப் பிரம்மாண்ட வாயிலுக்குள் நுழைந்தபோது அவள் காத்திருப்பதாகச் சொல்லியிருந்த நேரத்திலிருந்து பத்து நிமிடம் தாமதமாகியிருந்தது. சட்டென என் வழியே அவளைத் தொடர்பு கொண்டு தான் வந்துவிட்டதைத் தெரியப்படுத்தினான். நல்லது… என்றவள், தான் நான்காவது நடைமேடையில் காத்திருப்பதாகச் சொன்னாள். மனிதர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்த அந்தப் பரந்து விரிந்த நடைமேடையில் படையணியில் முன்னேறும் வீரனைப் போல முன்னேறிச் சென்றவன், தானும் அங்கேதான் இருப்பதாகச் சொன்னான். ஓ… அப்படியா என்றவளிடம், அவள் இருக்கும் இடத்தை மிகச் சரியாகச் சொல்லும்படிக் கேட்டான். அவள் ஒரு பன்னாட்டு வங்கியின் விளம்பரத் தட்டியையும் அதனருகிலுள்ள பயணிகள் இருக்கையையும் அடையாளப்படுத்தினாள். தன்னைச் சுற்றி முழு வட்டமாக மேய்ந்தபடியே, அவள் அணிந்திருக்கும் ஆடையின் நிறத்தைக் கேட்டான். தான் கறுப்பு வெள்ளை நிறத்தில் ஜிக்ஜாக் வடிவமைப்பிலான பலாஸோ பேண்ட்டும், ஸ்லீவ்லெஸில் வெள்ளை மேலாடையும் அணிந்திருப்பதாகச் சொன்னாள். பலாஸோ ஸ்லீவ்லெஸ்ஸெல்லாம் தனக்குத் தெரியாதென்றவன், அந்த மக்கள் திரளுக்குள் நான்கு நிமிட தேடலில் அவள் நிற்பதைக் கண்டுபிடித்தான். அவளும் இவனைப் பார்த்தபோது கையசைத்துச் சிரித்தான். பதிலுக்குக் கையை உயர்த்திக் காட்டியவள், அவனைப் பின்தொடர விட்டு வேகு வேகென நடக்கத் தொடங்கிவிட்டாள். அவளது வேகத்திற்கு ஈடுகொடுத்து அருகில் சென்றதும் முகம் மலரச் சிரித்தான். தன் முகத்திற்குப் போட்டிருந்த மாஸ்க்கை சரிசெய்துகொண்டபடி அவனையும் மாஸ்க் அணியச் சொன்னாள். தவறுக்கு வருந்தக்கூடிய பாவனையுடன் சட்டெனத் தன் பாக்கெட்டிலிருந்ததை எடுத்து மாட்டிக் கொண்டான். பிறகு, அவள், அவன் சரியான நேரத்திற்கு வராதது குறித்தக் கோபத்தைக் காட்டினாள். சங்கர் தன் தாமதத்திற்கான நியாயமான காரணத்தையும் அதற்கான மன்னிப்பையும் தெரிவித்த போது, பரவாயில்லை பரவாயில்லை என்றாள். மூச்சிறைக்க நடந்தபடியே ஏன் இத்தனை வேகமான நடக்கிறாய்? நாம் இப்பொழுது எங்கே போகிறோம்? என்றான். சங்கரது கேள்விக்கு அவள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. அவனது முகத்தைப் பார்த்துவிட்டுத் தன் கையிலிருந்த பர்ஸைத் திறந்து அவனிடம் காட்டினாள். சங்கர் மறுபடியும் அவளது முகத்தைப் பார்த்தான். இது ஒருமணி நேர பயணத்திற்கான அனுமதிச் சீட்டு. ரயில் கிளம்பக்கூடிய நேரம் பனிரெண்டு முப்பது என்றாள்.
ஐந்து நிமிடம் தாமதமாகப் புறப்பட்ட ரயில், நாற்பது நிமிட பயணத்தில் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நின்றது. பிற தடத்திற்குப் பாதையைத் திறந்துவிடும் பொருட்டு இந்தப் பிரம்மாண்டக் குறுக்குச் சந்திப்பில் ஒரு பத்து நிமிடத்திற்கு நிறுத்தப்படுவதென்பது வழக்கமான ஒன்றுதானெனப் பயணிகளில் சிலர் பேசிக்கொண்டனர். அந்த நான்காவது நிமிடத்தில் நாம் இங்கேயே இறங்கலாமா? என்றாள் சங்கரிடம். இப்போதென்று இல்லை… மெய்நிகரிலென்றாலும்கூட உன்னுடன் இருக்கையில் பெரும்பாலும் எனக்கெனத் தனி முடிவுக ளெதுவும் கிடையாது என்றான். நெற்றியில் தொங்கிய ஒரு கற்றை முடியை வலது கையால் ஒதுக்கிக்கொண்டபடி இருக்கையிலிருந்து எழுந்து ரயிலின் படிக்கட்டை நோக்கி நடந்தாள்.
எனக்குள் நான் இயங்கக் காரணமாயிருக்கும் மின்னணு பலகையைப் போல, இந்த நிலத்தில் வேயப்பட்ட குழப்பமான அகண்ட ரயில் பாதை இணைப்புகளில் நடந்த சில தப்படிகளிலேயே இருவரும் ஒரு மீட்டர்-கேஜ் தடத்தைப் பிடித்துக்கொண்டனர். அந்த நடைபயணம் ஏறத்தாழ கைவிடப்பட்ட ஒரு ரயில் நிறுத்த மேடையில் நின்றது. பராமரிப்பற்ற அந்த மேடையில் மூன்று பேர் உட்காரக்கூடிய வகையில் மொத்தம் நான்கு சிமெண்ட்டு இருக்கைகள் இருந்தன. சங்கரிடம் கால் வலிக்கிறது. எங்காவது உட்கார்ந்தால் தேவலாம் என்றபடி முகத்திலிருந்த மாஸ்க்கை எடுத்துவிட்டுக் கையிலிருந்த பாட்டிலைத் திறந்து தண்ணீரைக் குடித்தாள். சங்கர் அங்கிருந்த முதல் சிமெண்ட் இருக்கையிலிருந்த தூசுகளை ஊதிச் சுத்தம் செய்துவிட்டு சுற்றுப்புற மெங்கும் மக்கிப்போன வாடை மூக்கை அடைக்கிறதென்றபடியே தன் கையிலிருந்த நாளேட்டைப் பிரித்து இருவரும் உட்காரும் வகையில் விரித்தான்.
சுத்தம் செய்யப்பட அந்த இருக்கையில் அமர்ந்தவள், கையிலிருந்த மாஸ்க்கைக் காண்பித்து இதுமட்டும் இல்லையென்றால் நான் உன்னைச் சந்திக்க விரும்பியிருக்கவோ வற்புறுத்தியிருக்கவோ மாட்டேன் சங்கர் என்றாள். ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றவாறு அவளருகில் அமர்ந்தான். அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடி, முதலில் மாஸ்க்கைக் கழற்று என்றுவிட்டு, இப்படி முகத்தில் பாதியை மூடிக்கொள்வதால் உறவினர்கள் நண்பர்களென யார் கண்ணிலும் படாமல் தப்பித்துவிடலாமில்லையா… அதற்குச் சொன்னேன் என்றாள். ஆமோதித்தவாறு தலையை உலுக்கிக் கொண்டவன் எதையோ யோசித்தான். அதுசரி… வெளியூர்க்காரன் உனக்கென்ன பயந்து வருகிறதென நான் கடந்த இரண்டு முறை இப்படிச் சந்திக்கக் கேட்டும் மறுத்துவிட்டாய்? என்றாள். குழப்பமான முகத்துடன் யோசித்தவன், சரியானக் காரணம் தெரியவில்லை. ஒருவேளை உன் வீட்டார் உன்னுடன் என்னைச் சேர்த்துப் பார்த்துவிடுவார்களோ என்கிற பயமாகக்கூட இருந்திருக்கலாம். என்னதான் முகத்தை மூடிக் கொண்டாலும் அந்தப் பயம் இருக்கும்தானே…? என்றான். ஓ… இதை யோசிக்கவில்லை பார் நான்… என்றபடி தலையில் தட்டிக்கொண்டாள். நீ இப்படிச் செய்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்றான். ஓஹோ… அப்படியா. அப்புறம்… என்றபடி காலை மடக்கி சம்மணமாக இருக்கையில் ஏற்றிக்கொண்டாள். இதுதான் அந்தப் பலாஸோ பேண்ட்டா? என்றபடி விரலால் அந்தத் துணியைத் தொட்டு உருட்டிப் பார்த்தான். அப்போது தன் உடலில் அவனது கை படுகிறதா என்கிற கவனத்திலேயே இருந்தது அவளது முகம். உனக்கு ரொம்பப் பொருத்தம்தான் இந்த உடை என்றான். அப்படியா! அதுசரி என்றாள். சரி. வீட்டில் எங்கே போவதாகச் சொல்லிவிட்டு வந்தாய் என்றான். தோழியின் வீட்டிற்கு என்றாள். பிறகு அவளது ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்கும்படி இருப்பதாகச் சொன்னான். குறிப்பாகப் பேசும்போது அந்தக் கூர்மையான மூக்கின் மெல்லிய அசைவைத் தான் மிகவும் ரசிப்பதாகச் சொன்னான். அது ஒரு பொருட்டல்ல என்பதைப் போலவே அடுத்தடுத்து வாய்க்காலை வெட்டிக்கொண்டே வந்தாள். பிறகு, தன் அழகை வர்ணிக்கக்கூடிய அன்பளிப்பான அவனது வார்த்தைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காததைப் பற்றி யோசிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டவள், அதைத் தடுக்கும் நோக்கமும் தனக்கில்லை என்பதையும் சொன்னாள். சங்கர் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டபடி அமைதியாகவே இருந்தான். சட்டென அவனது முந்தைய காதல் குறித்து விசாரித்தாள். சுருக்கமாகச் சொல்வதானால் உன்னுடனான இந்த நெருக்கம் எனக்கு முற்றிலும் புதிதான ஒன்றுதான். இதுவரையில் அமையப் பெறாத அந்த வாய்ப்பின் முதல் ஆளென உன்னைத்தான் சொல்லமுடியும் என்றான். அவள் நமட்டுத்தனமான சிரிப்பொன்றை வெளிப்படுத்தினாள். அவளது அந்தச் சிரிப்பு தன் உண்மையை நையாண்டி செய்வதாக இருக்கிறது என்றான். பிறகு, பரவாயில்லை என்றுவிட்டு, இதே கேள்வியை உன்னைப் பார்த்து என்னால் கேட்க முடியுமா தெரியவில்லை என்றான். அட… ஹலோ ஹலோ… ஏன் முடியாது? என்றவள், நேரடியாக இல்லையென்றாலும் இதோ கேட்டுவிட்டாயே? இப்படிக் கேட்பதில் உனக்குப் பயமோ தயக்கமோ இருந்தால் நானே சொல்கிறேனே… பள்ளி இறுதியாண்டு படிக்கையில் ஒருவனுடன் காதலுண்டு எனக்கு. அது ஏறத்தாழ கல்லூரி முடிக்கும் வரையிலும் தொடர்ந்தது. அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு நாங்கள் நிறையச் சுற்றியிருக்கிறோம். அந்த நான்கு வருடங்களில் சிலமுறை நாங்கள் முத்தங்களை மட்டும் பரிமாரிக்கொண்டதுண்டு. அதன்பின் அவன் வேலையென்று போன இடத்தில் வேறொருத்தி கிடைத்து விட்டாள் போல என்று முடித்தாள்.
சங்கர் தன் உடலை முன்னால் சரித்துக்கொண்டு கைகளைத் தொடையில் ஊன்றியபடி உட்கார்ந்தான். அப்போது அவனது பார்வை அந்த நடைமேடையின் நீளமான சிமெண்ட் தெரிப்பையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. என்ன யோசனை சங்கர்? சரி அதுபோகட்டும்… உனக்குப் பசிக்கவில்லை…? என்றாள். நிதானமாக அவள் பக்கமாகத் தலையைத் திருப்பியபடி அவளுக்கு மேலே பொருத்தப் பட்டிருந்த நிலையத்தின் பெரிய கடிகாரத்தைப் பார்த்தான். ஒட்டடைகள் படிந்த அந்த வெள்ளையான சதுர வடிவம் ஒரு மணி ஏழு நிமிடத்தைக் காட்டியது. ஆனால் அதன் முட்கள் வட்டமடிப்பதை நிறுத்திக் கொண்டிருந்தது. சட்டென மணிக்கட்டைப் புரட்டி நேரத்தைப் பார்த்துவிட்டு, அவளது கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினான். மறுபடியும் ஒரு நமட்டுத்தனமான சிரிப்பை வெளிப் படுத்தியவள், தன் கைப்பையைத் திறந்து துழாவி செவ்வக வடிவ பிளாஸ்டிக் கண்டெய்னரையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து அவனிடம் நீட்டினாள். உடலை நேராக்கி உட்கார்ந்தவன் அதை வாங்கிக்கொண்டான். பிறகு ஊடுருவிப் பார்க்கத்தக்க அந்தக் கண்டெய்னரை நாளா புறமுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு இது என்ன பழக் கலவைய? மேலே இருப்பது என்ன ரொட்டித் துண்டுகளா? என்றான். ஆமாம். திற என்றாள். சங்கர் அதைத் திறந்தான். உள்ளே சதுரத்தை விட்டு விலகியிருந்த நான்கு ரொட்டித்துண்டுகள் கிடந்தன. அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தான். சில பருப்பு வகைகளும் உலர் பழங்களும் இன்னும் சில எளிதில் வீணாகாத பழத் துண்டுகளும், பயன்படுத்தி வீசக்கூடிய இரண்டு சிறிய கரண்டிகளும் இருந்தன. அந்தக் கண்டெய்னரை மூக்கினருகில் கொண்டு சென்றவன், ஒரு ஆரோக்கியமான நறுமனத்தை உணரமுடிவதாகச் சொன்னான். பிறகு அந்த ரொட்டித் துண்டுகளை மூன்றாவது சிமெண்ட் இருக்கைக்குக் கீழே விளையாடிக் கொண்டிருந்த நாயக் குட்டிகளுக்குக் கொடுக்கக் கேட்டான். இதற்கெல்லாமா அனுமதி கேட்பதென அவனைப் பார்த்து மூக்கை விடைத்தாள்.
பழக்கலவையை முடிக்கும் வேலையில் இருவரும் இறங்கினர். அந்த வேலை பாதியைக் கடந்தபோது தன்னைச் சுற்றி முக்கால் வட்டமாக மேய்ந்தவன், இங்கே மனிதர்கள் நடமாட்டமென எதுவும் இருக்காது போல. இப்படியான இடத்திற்கா என்னைக் கூட்டிக்கொண்டு வருவாய்? எந்தவித அச்சமும் இல்லையா உனக்கு…? என்றான். வாயிலுள்ளதை மென்றுகொண்டிருந்தவள் குபுக்கெனச் சிரித்ததும் சங்கரின் முகம் முழுக்கப் பழக்கூழாக வழிந்தது. சிரித்துக்கொண்ட படியே கையை மடக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டவன், இதைத் தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றான். புறங்கையைப் பூமிக்குக் காட்டியபடி அவனை நோக்கி நீட்டியவள், சிரிப்பை மட்டுப்படுத்த முடியாமல் மன்னிப்பைக் கோரினாள். அதுபோகட்டுமெனக் கையிலிருந்த பாட்டில் நீரால் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டான். பிறகு அவர்களுக்குள் எந்த விசயத்தைப் பற்றிப் பேசினாலுமே அவள் சங்கரின் முகத்தில் செய்த வேலையை நினைக்காமல் இருக்க முடிய வில்லையென்றும், அது தனக்குள் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பைத் தூண்டுகிறதென்றும் சொன்னாள். சரி நாம் கிளம்புவதுதான் நல்லது. நேரம் வேறு ஓடிக்கொண்டிருக்கிறது என்றான். சங்கர் இரு… உன் கோபத்தில் அர்த்தமிருக்கிறது. ஆனால் உன்னை நான் கிண்டலடிக் கிறேநெனத் தவறாக நினைக்காதே… என்றுவிட்டுத் தான் அவனிடம் முக்கியமான விசயம் பேசவேண்டுமெனத் தன் காதில் தொங்கியதைத் தொட்டுப் பார்த்தபடி அவனது அறை நண்பனுடன் பணிமனையில் நிகழ்ந்த கைகலப்புக் குறித்துக் கேட்டாள். இவன் அது குறித்து விரிவாகச் சொல்ல மறுத்தான். சரி… அவன் உனக்கு அறை நண்பன். உங்களுக்குள் என்னவோ. ஆனால் ஒன்று… பணியில் ஒன்றென நீ அந்த ஹைட்ராலிக் இயந்திரத்தை இயக்கியிருந்தாலும் அது உள்நோக்கத்துடன் அவன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் என்பதை அவன் சந்தேகிக்காமல் இல்லை. பணிமனையில் நடந்ததால் நீ தப்பித்தாய். இல்லையென்றால் இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட அத்தனை சாத்தியங்களையும் கொண்டதுதான். இப்பொழுது நான் உனக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் கணக்குப்படி நீ அவனைப் பழிதீர்க்கும் எண்ணத்திலிருந் திருக்கிறாய். என்ன காரணமென்று எனக்குத் தெரியாது. ஆனால் இனி ஒருபோதும் அப்படியொரு சிந்தனைக்கு நீர் ஊற்றாதே. என் வாயிலிருந்த பழக்கூழ் உன் முகத்தில் தெறித்தபோது எப்படி அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு நான் மன்னிப்புக் கோரவில்லையோ அதே உரிமையில்தான் அறிவுறுத்துகிறேன் என்றாள். சங்கர் அந்த அறிவுறுத்தல் ஏற்கக்கூடியதுதான் என்றான். சட்டென அவனது கையைப் பிடித்துக்கொண்டவள், இந்தப் புரிதலுக்காக நன்றியைத் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டுத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டாள். அப்போது அவளது கண்கள் ஏற்கெனவே சங்கர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நடைமேடை தெறிப்பின் நீளத்தில் பயணித்தது. தாடியைத் தடவியபடி அந்த இருக்கையில் சரிந்து உட்கார்ந்துகொண்ட சங்கர், கால்களைத் தொட்டில் போல ஆட்டிக்கொண்டவாறு தண்டவாளத்துக்கு எதிரேயிருந்த மரத்தைக் கூர்ந்து நோக்கியபடியே இருந்தான். பிறகு, அவளிடம், இன்றைக்குக் காலையில் தன்னை மிரட்டல் தொனியில் சந்திக்கக் கேட்டதும் கொஞ்சம் பயந்ததைச் சொல்லிவிட்டு நமட்டுத் தனமாகச் சிரித்தான். அவளிடமிருந்து பதில் இல்லை. சட்டென அவளைக் குனிந்து பார்த்துவிட்டு அழுகைக்கானக் காரணத்தைக் கேட்டான். முகத்தைத் துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி ஒன்றிமில்லையெனச் சொல்லப்போவதில்லை என்றுவிட்டு, நாம் பழக ஆரம்பித்த இந்தக் குறுகிய நாட்களுக்குள்ளேயே உன்னை இப்படியான நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்தியது எனக்குப் பிடிக்கவில்லைதான்… ஆனாலும்… என இழுத்தாள். தயங்கி நின்ற வார்த்தைகளுக்கு சங்கர் பொறுப்பெடுத்துக் கொண்டான். சிறிய தயக்கத்திற்கப்புறம், இல்லை சங்கர். என் நிலைமை மிக மோசம் இப்பொழுது. என் திருமணத்திற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குப் பிடிக்காத ஒருவனுடன் என்னைக் கட்டிவைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. நான் மறுத்துப் பேசவோ எதிர்க்கவோ முடியாத நிலையிலிருக்கிறேன் என்றாள். சங்கரின் முகம் குழம்பியது. கண்களைச் சுருக்கிக் கொண்டபடி அவளது முகத்தையே உற்று நோக்கினான். பிறகு, நான் என்ன செய்ய? என்றான். நான் என்ன செய்ய? என்பதைக் கையறு நிலையில் கேட்கிறாயா? உதவியாகக் கேட்கிறாயா? என்றாள். இரண்டும்தான் என்றான். சங்கர். ஏதாவது ஒன்றில்தான் தீர்வுக்கான வழி இருக்கிறது என்றாள். சரி. அதே கேள்விதான் மறுபடியும். என்ன செய்ய? என்றான். கொஞ்சமும் தயங்காதவள், கல்யாணம் பண்ணிக்கோ என்னை என்றாள். சங்கரின் முகத்தில் அச்சம் பரவியது. யோசித்தபடியே இருந்தான். என்ன யோசனை சங்கர். என் பழைய காதல் உன்னை முடிவெடுக்கவிடாமல் தொந்தரவு செய்கிறதா? தப்பான இடத்தில் மாட்டிக்கொண்டோமே என்று நினைக்கிறாயா? இந்த உறுத்தல் இயல்புதான். இதனால் நீ என்னைவிட்டு விலகிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் அநேகம் உண்டு. அதைப் பற்றியும் நான் சிந்தித்துவிட்டேன். ஆனால் நான் உன்னிடம் இதை மறைக்க விரும்பவில்லை. முடிவை இப்பொழுதே சொல்லவேண்டும் என்பதில்லை. தாமதித்தாலும் பலனில்லை. நெருக்கடியான சூழல்தான். கட்டாயமில்லை என்றாள்.
இல்லை. உன் பழைய கதையை நீ மறைத்திருந்து பொய்யானதொரு சத்தியத்தைச் செய்திருந்தால்கூட நான் நம்பித்தான் இருப்பேன். அதன்பிறகு நீ என்னை எப்படிப் பார்த்திருப்பாய்? மகா கேனைய னாகத்தானே? நீ இப்பொழுது வெளிப்படையாகப் பேசிவிட்டாய். இப்பொழுதும் நான் உன்னை நம்பத்தான் போகிறேன். அதோடு நம் திருமணத்தை நீ நிர்ணயித்தது போலவே முடிக்கலாம். என்னுடைய இந்த முடிவிற்குப்பிறகு உன் மனதின் பீடத்தில் என்னை அமர்த்தி யிருப்பாய். அந்த உயரமே எனக்குப் போதுமானதெனத் திருப்தி யடைகிறேன். இப்போது என் யோசனையெல்லாம் என் வீட்டைப் பற்றித்தான். அதைக்கூடச் சமாளித்துவிடுவேனென வைத்துக்கொள். உன்னால் எப்படித் திடீரென வீட்டை விட்டு வெளியேற முடியும் என்றான். இன்றைய நாளைப் போலவே தன் குடும்பம் நம்பக்கூடியக் காரணத்துடன் என்றாள். சங்கர் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவள் நம்பும்படியான, திருப்தியடையக்கூடிய உறுதி மொழியை வழங்கினான். அவனது அந்த வார்த்தைகள் ஏனோ அவளது முகத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. விதிப்படி நடக்கட்டுமெனப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள். அப்போது அழுக்கடைந்தவனாக வந்த ஒருவன் தன் தோளில் மாட்டியிருந்த அழுக்கு முடிச்சை அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே திணித்துவிட்டு, கம்கட்டில் வைத்திருந்த கோணலான குச்சை நீட்டி அங்கிருந்து இவர்களைக் கிளம்பச்சொல்லி விரட்டினான்.
(xii)
இரண்டாவது ஷிஃப்ட் பார்த்துக் கொண்டிருந்த வாரமொன்றில், மாலை நான்கு மணிக்கான தேநீர் இடைவேளையின்போது சங்கர் என்னை எடுத்து ஆராய்ந்தான். அப்போது அவனது அப்பா நான்குமுறை அழைத்திருந்ததைக் கண்டதும் அவனது முகம் ஆழ்ந்த யோசனைக்குள் சுருங்கியது. சட்டென அவருக்கு அழைத்தான். எடுத்தாரில்லை. அந்தத் தேநீர் இடைவேளை முடிந்ததும், அன்றைய ஷிஃப்ட் முடியக்கூடிய நேரத்திற்குள் ஓய்வறையிலிருந்த அவனது அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்ட என்னை விடுவித்து அரை மணிக்கொரு முறை ஆராய்ந்தான். அவரிடமிருந்து அழைப்பில்லை. வீட்டிற்குச் செல்லும் வழியில் முயற்சித்த ஒருபோது எடுத்தார். ஆனால் அவர் இரண்டு நிமிடங்களுக்கு வார்த்தைகளென்று எதையும் பேசவில்லை. சொல்லவந்ததையெல்லாம் அழுக்கையாய்க் கொட்டித் தீர்த்தார். சங்கர் என்ன ஏதென்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்தான். வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்தும் தோண்டித் துருவி விசாரித்தான். இவனது தவிப்பைப் புரிந்து கொண்டவராய், யாருக்கும் எதுவுமில்லை. எல்லோரும் நல்லபடியாக இருப்பதாகச் சொன்னார். அதன்பிறகு இருவருக்குள்ளும் நிலவிய அமைதி எல்லையற்று நீண்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு சங்கர் தன் அப்பா தற்போது இருக்கும் இடத்தைக் கேட்டான். அவர், தெருவின் ஒடிப்பிலுள்ள மின்கம்பத்தின் கீழேயுள்ள சிமெண்ட்டுத் திட்டில் அமர்ந்திருப்பதாகச் சொன்னார். அங்கே அவருடன் வழக்கமாக அமர்ந்திருப்பவர்களது பெயர்களைச் சொல்லிக் கேட்டான். அவர்களெல்லாம் தற்போதுதான் வீட்டிற்குக் கிளம்பினார்கள் என்றார். பிறகு அவர் இரவு உணவு எடுத்துக் கொண்டது குறித்துக் கேட்டுவிட்டு வீட்டிற்குக் கிளம்பச் சொன்னான். சரிப்பா. என்றவர், நேரத்திலேயே மாத்திரையையும் போட்டுக்கொண்டு படுத்துக் கொள்வதாகச் சொன்னார். சங்கர் என்ன மாத்திரை? எதற்கு? என்றான். சற்றுத் தயங்கினார். பிறகு லேசான தலைவலி என்றார். அப்போது அவரது வாய் குழறி வார்த்தைகள் தடுமாறியது. புருவ மேட்டைக் குறுக்கி யோசனைக்குப் போன சங்கர், மறுபடியும் அவரது உடல்நிலை குறித்து அழுத்திக் கேட்டுவிட்டுத் தன்னிடம் எதையோ மறைப்பதாகச் சொன்னான். இந்தமுறை அவர் தனக்கு ஒன்றுமில்லை யெனத் திருத்தமாகவும் கனிவாகவும் சொன்னார். அவரது நயமான வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவன், அவரை வீட்டிற்குக் கிளம்பச் சொல்லிவிட்டுத் தானும் பைக்கை நகர்த்தினான்.
இரவில் வழக்கமாக உண்ணக்கூடிய தெருவோரக் கடையில் வயிற்றின் தேவையை முடித்துக்கொண்டு வீட்டை அடைந்ததும் என்னை எடுத்துப் பார்த்தான். அப்போது பதினோரு மணி இருபத்தி ஏழு நிமிடத்தைக் காட்டினேன் நான். நான் காட்டிய எண்களை முணுமுணுத்துக் கொண்டபடி அவளது எண்ணிலிருந்த செய்திப் பெட்டியை ஆராய்ந்தான். எப்போதைக்குமான கூப்பாடு, அதன் பின்னரான அன்றாட விசாரிப்புகளென்று எதுவுமில்லை. ஆனால் அடுத்தப் பத்தாவது நிமிடத்திற்கெல்லாம் இருவருக்குமான உரையாடல் தொடங்கியது. சங்கர் அன்றைக்கு வேலையில் கவனமிழந்து மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளானதைச் சொன்னான். அவள், அவனது கவனமிழப்பிற்கானக் காரணத்தைக் கேட்டாள். சமீபமாக நிரந்தரக் காரணமாகிவிட்டதுபோக இன்றைக்குத் தன் அப்பாவின் அழைப்பும் ஒரு காரணமாக இருந்ததைச் சொன்னான். அவள் அந்த இரண்டு காரணத்தையும் விவரமாகச் சொல்லக் கேட்டாள். அப்பாவின் அழுகைக்கு அவர் உன்னைப் பிரிந்திருப்பதனால் இருக்கலாம். கூடவும் அவருக்கான தலைவலிக் கெல்லாம் கவலைப்பட அவசியமில்லை என்றுவிட்டு, நிரந்தரக் காரணமாகிவிட்டதென்று சொன்னாயே அது என்ன? என்றாள். சற்றும் தாமதமின்றிச் சொன்னான். உன்னைச் சந்தித்ததுதான் என்று. அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. பிறகு அவள் தொடர்பிலிருப்பதை உறுதிசெய்துகொண்டவன், ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அன்றையபோது, அவள் அளித்த பரிசுப் பெட்டிக்குள் இருக்கக்கூடிய ரகசியத்தைக் கேட்டான். கலகலவெனச் சிரித்துக்கொண்டவள், தான் விதித்த நிபந்தனை காப்பாற்றப்படுகிறதா என்றாள். அந்தப் பார்சல் அத்தனை எளிதில் பிரிக்கக்கூடியதாக இருக்காதென்று நீ சொன்னது சரிதான். பிரித்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாதென நீ விதித்ததை நான் மென்மையாக மீறத்தான் செய்தேன் என்றபடி, அதை அப்படிக் கட்டிக் கொடுத்ததற்கானக் காரணத்தைக் கேட்டான். அதுகுறித்துத் தான் பின்னால் ஒருபோது சொல்ல வாய்க்குமெனச் சொன்னாள். அந்தச் செவ்வகத்தை வருடிக் கொடுத்தபடியே அதைத் திறப்பதற்கும் நம் திருமணம் குறித்த என் முடிவைச் சொல்வதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்றான். இல்லை என்றாள். ஆனால், ஆனால்… என்று எதையோ வெளிப்படைத் தன்மையற்ற தொனியில் நீட்டினாள். பிறகு, நம் சந்திப்பிற்குப் பிறகான உன் இயல்பின் பிறழ் தன்மைக்கும், கவனமிழப்பிற்கும் என்னைக் காரணமாக்கிக் குற்றவாளியாக்கி யிருக்கிறாய். இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது? என்றாள். உண்மைதான். ஆனால் அதில் நீ ஒரு மகத்துவமான குற்றவாளி என்பதை மட்டும் உனக்குச் சொல்கிறேன். ஏனென்றால் என்னால் என் தனிமைப் பொழுதுகளைக் கடந்தும் அன்றாடப் பணிகளுக்குள்ளும் உன் நுழைவைத் தடுக்கமுடியவில்லை. புறச் செயல்பாடுகள் அனைத்திலும் என் மனம் உன்னைப் பொருத்தித்தான் பார்க்கிறது. பேசப்பட்ட உரையாடல்கள் என்னை இயல்பிலிருந்து தள்ளிவைத்து நிலைகுலையச் செய்துவிடுகிறது. இந்த உன்னதமான உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒரு வகையில் போதையேற்றுகிறது என்றாலும் கரையேறக்கூடிய அவஸ்தையையும் தருகிறது என்றான். கொட்டாவிச் சத்தத்தை வெளியேற்றியபடியே, தனக்கும் கரையேறக்கூடிய அவஸ்தைதான் என்றாலும், அவனது உன்னத நிலைக்கு நேரெதிரான வேறொரு ரகம் என்றாள். அப்படியானால் காதலுணர்வு உன்னைப் படுத்தவில்லையா என்றான். ஒருவேளை உன் முடிவு எனக்குச் சாதகமானால் அதற்கப்புறம் அந்த உணர்வினால் நான் படாதபாடுபட வாய்ப்புகளுண்டு என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கழுக் கழுக்கெனச் சிரிக்கத் தொடங்கினான். இந்தக் காதலின் விளைச்சலைப் பருவத்திலேயே அறுவடை செய்வதும் அதை அழுக விடுவதும் உன் கையில்தான் இருக்கிறது என்றுவிட்டு அமைதியானபோது அவனும் அமைதியானான்.
(xiii)
அன்றைய திங்கட்கிழமை காலை நான்கு மணிக்கெல்லாம் அவனது SM-G615F மொபைல் ஃபோனிலிருந்து கஸல் பாடல் இசைக்கத் துவங்கியதும் விழித்தவன், கண்களைக் கசக்கிக் கொண்டபடி படுக்கைக்கு அருகிலிருந்த மேசைக்குக் கை நீட்டினான். அந்த மேசையில் அவனது இலக்கு, பால் ரொட்டி அளவுடைய, பிளாஸ்டிக்காலான தேதி வில்லைதான். அந்த வில்லையில் எழுதப்பட்டிருந்த முந்தைய நாளின் எண்ணான 18-ஐ அந்தச் செங்குத்தான செவ்வக அடுக்கின் பின் வரிசைக்குக் கிடத்தினான். ஆக… இன்றைக்கு செப்டம்பர் 19. அதன்பின் வழக்கமான வேலைகள் சிலவற்றை முடித்துக்கொண்டு, படுக்கைக்குத் திரும்பியவன், அவளுக்கான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பினான். பிறகு, ஃபோனில் இணைக்கப்பட்டிருந்த நரம்பு போன்ற ஒயரை தன் காதுடன் இணைத்துக்கொண்டு அலாரத்திற்கென ஒலித்த அந்தக் கஸல் பாடல்களைக் கேட்கத் துவங்கினான். ஏறத்தாழ ஒருமணி நேரத்தைக் கடந்ததும் காதுடன் இணைக்கப்பட்டிருந்த ஒயரை பிரித்துக் கொண்டவன், அதன் பிறகான ஒருமணி நேர தூக்கத்திற்குப் பின் எழுந்து பென்னியையும் எழுப்பிவிட்டான்.
இருவரும் தயாராகி ஒன்பது மணிக்கெல்லாம் வெளியில் வந்தபோது, பென்னி, சங்கரிடம், சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து எடுத்துக் கொண்டாயா என்றான். சங்கர் தன் முதுகில் மாட்டிக் கொண்டிருந்த பையைத் தொட்டுப்பார்த்தபடி அனைத்தையும் நேற்றைக்கே எடுத்துக்கொண்டதாகச் சொன்னான். வியப்பான தோரணையில் புருவமேட்டை உயர்த்திக்கொண்ட பென்னி, மென்மையான சிரிப்பொன்றை வெளிப்படுத்தியபடி பைக்கை நகர்த்தினான். வீட்டிலிருந்து ஒரு பர்லாங்கைக் கடந்தபோது சங்கர், பென்னியிடம், ஒரு பரிசுப்பொருள் அங்காடியில் நிறுத்தச் சொன்னான். பென்னி, சரி என்றபோது எனக்குள் வழக்கமான மேம்படுத்தலுக்கான தரவிறக்கமும் அதை நிறுவிக்கொள்ளும் வேலையும் முடிந்திருந்தது. அப்போது மறு இயக்கத்திற்கென நான் வைத்தக் கோரிக்கையை சங்கர் நிறைவேற்றினான். அதாவது ஒரு ரீ-ஸ்டார்ட். நான் மறுபடியும் இயங்கத் தயாராவதற்குச் சில நிமிடங்கள் பிடித்தது.
இந்தப் புதுப்பித்தலுக்குப் பிறகு முன்பைவிடவும் என்னை நான் மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். என் இயக்கத்தில் ஏற்பட்ட முந்தைய சங்கடங்களெல்லாம் சரிசெய்யப்பட்டு தற்போதைய மாற்றத்தின் களிப்பிலிருந்து சராசரிக்குத் திரும்பியபோது, இடையில் என்ன நடந்ததென்கிற குழப்பத்தில் இருந்தேன். ஏனென்றால் சங்கருக்கு எப்படி வெடித்துச் சிரிக்க வருவதில்லையோ அழுகையும் அப்படித்தான் போல. ஒவ்வாத பதார்த்தத்தை வயிற்றுக்குள்ளிருந்து எடுப்பதைப் போலக் குமட்டி அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஒரு நீளமான திண்ணையின் சுவற்றில் சாய்ந்துகொண்டபடி காலை நீட்டிப்போட்டு அமர்ந்திருந்தான். அவனைத் தன்னுடன் அணைத்துப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த பென்னி, அப்பா அன்றைக்கு உனக்கு அழைத்துப் பார்த்துவிட்டுப் பிறகு எனக்கு அழைத்துத்தான் முழு விபரத்தையும் சொன்னார். அவரிடம் நான்தான் உனக்குச் சொல்ல வேண்டாம் என்றேன். ஏன் என்றுகூட அவர் கேட்டார். நான் சொன்னேன், அந்தக் கும்பலின் மீதான கொலைவெறியெல்லாம் குறைந்து, அவனது கவனமெல்லாம் இப்பொழுதுதான் வேலையிலும், எஞ்சிய நேரத்தைப் படிப்பதற்கும், வாழ்வின் அடுத்தக் கட்டத்திற் காகவும் குவிந்திருக்கிறது. ஆகையால்… என்றேன். அவர் அதைப் புரிந்து கொண்டதனால்தான் அன்றைக்கு உன் அத்தனை அழைப்புகளையும் ஏற்கத் தயங்கி, பின் உன்னிடம் சொல்ல முடியாமல் அழுதே கொட்டியிருக்கிறார்போல. அதிலொருவன் அவரது கட்டை விரல் எலும்பு முறியுமளவிற்குத் தாக்கியிருக்கிறான். சம்பந்தப்பட்ட அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. குற்றத்திற்காக அவர்கள் தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்றான். சங்கர் பென்னியைப் பார்த்து, யாரெல்லாம் அவர்கள்? என்னிடம் பேருந்தில் சீண்டிய அதே ஆட்களா? என்றான். கிட்டத்தட்ட அவர்கள்தான். இரக்கமற்ற மடையர்கள். அப்பா அன்றைக்குத் தனக்கு உடல்நிலை சரியில்லாததைச் சொல்லக்கூட முடியாமல் இருமலுக்கு மத்தியில்தான் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவே இல்லையாம். வருவியா? மாட்டியா? என்று மிரட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் போன வாரத்தில்கூட ஒரு பெரிய வீட்டின் காரியத்திற்கு வெளியூரிலிருந்துதான் அடிப்பதற்கு ஆள் வந்திருக்கிறது. அவர்களது அந்த முடிவுகூட உள்ளூரிலுள்ளவன் அவர்களுக்கு நிகராகிவிடக்கூடாது என்பதுதான். ஆனால் இந்தமுறை வந்தே ஆகவேண்டுமென மிரட்டிக் கட்டாயப்படுத்தியது வன்முறை ராகம். ஆரோக்கியமாக இருக்கையில் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்துக் கொள்வதையும் உடல்நிலை சரியில்லை என்பதைக் கேள்விப்பட்ட பிறகு கட்டாயப்படுத்தி அடிக்கக் கூப்பிடும் இவர்களை எதில் சேர்ப்பது? என்றான் பென்னி. சங்கர் புரிந்துகொண்டவனாய் மேலும் கீழுமாகத் தலையாட்டியபோது, அதோடு நீ வாங்கிக்கொடுத்த மொபைல் ஃபோன் அப்பாவின் கையில் இருந்ததையெல்லாம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஒரு காரணம்போல என்றான். என்னுடன் போட்டியிடத் தகுதியற்றவர்கள் உளவியல் ரீதியாகத் துன்புறுத்திப் பார்க்கிறார்கள் போல என்றான் சங்கர். ஆமாமென ஆமோதித்த பென்னி, தான் இந்த நாளில் இதை அவனிடம் உளறித் தொலைத்தது குறித்தும் கவலையடைந்தான்.
அப்போது ஒரு பெண் தான் வந்திறங்கிய வாகனத்தை அதனிடத்தில் நிறுத்திவிட்டு முகக் கவசத்தைச் சரிசெய்து கொண்டபடி அந்த அலுவலகக் கட்டிடத்தினுள் நுழைந்தார். அங்கே அவரை எதிர்கொண்ட சிலரும், வழியில் நின்றவர்களும், கையை நெற்றிக்கு உயர்த்தி மேலதிகாரியைப் போல நடத்தினர். அந்தப் பெண்தான் சார்பதிவாளராக இருக்கவேண்டுமென்றான் பென்னி. கசங்கலான உடையுடன் அங்கே நின்ற முதியவரொருவர், பென்னியைப் பார்த்து இந்தம்மாதான் சார்பதிவாளர் என்றார். அமர்ந்திருந்த நிலையிலிருந்து தன்னைக் கலைத்துக்கொண்ட சங்கர், மணிக்கட்டைப் புரட்டி நேரத்தைப் பார்த்துவிட்டு ஆயத்தமானான். பென்னி, ஃபோன் பண்ணிப்பாறேன் என்றான். சங்கர் ஏனோ தயங்கியபடி கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்றான். பதினொன்னரை மணி போல ஒரு ஆட்டோவில் வந்தவளை வரவேற்ற சங்கர், பென்னியை அறிமுகப்படுத்தினான். பிறகு அவளுக்கென வாங்கப்பட்ட பரிசுப் பெட்டியைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தான். பென்னி தான் வாங்கியிருந்த பரிசுப் பெட்டியையும் அவளிடம் கொடுத்து வாழ்த்தைத் தெரிவித்து விட்டு அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
சங்கர் அவளிடம் தாமதத்திற்கானக் காரணத்தைக் கேட்டான். ஏதேதோ சொன்னவள், பிறகு நிதானமாகப் பெருமூச்சொன்றைக் கடத்திவிட்டுத் தான் இன்றைக்கு வந்தது தெய்வச்செயல். அது இருக்கட்டும். நீ ஏன் இப்படி யாரோ போல் இருக்கிறாய் என்றாள். சங்கர் தன் கையிலிருந்த துணியால் முகத்தை அழுத்தித் துடைத்தவாறு யாரோ போலா? யார் மாதிரி என்றான். அவள் அவனது முகம் வாடியிருப்பது குறித்துக் கேட்டாள். முதலில் ஒன்றுமில்லையென மழுப்பலான பதிலைச் சொன்னவன், பிறகு சரியான தூக்கமில்லை என்றான். நான் நம்பவில்லை. நீ எதையோ மறைக்கிறாய். எதுவானாலும் சொல் என்றாள். அந்தத் திண்ணையில் உட்காரலாமா? என்றான் அவளிடம். தாராளமாக என்றாள். சில தப்படிகளில் அந்தத் திண்ணையில் அமர்ந்ததும், சங்கர் தன் அப்பாவிற்கு நேர்ந்ததைச் சொன்னான். குழம்பிய அவளது முகம் எதையோ ஆழமாக யோசித்தது. பிறகு அவனுக்கான ஆறுதல் வார்த்தைகள் சிலவற்றைச் சொல்லிவிட்டு, சான்றிதழைக் கொண்டுவந்தாயா? எங்கே கொடு என்றாள். சங்கர் தன் முதுகுப் பையிலிருந்ததை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொண்டவளின் கண்கள், அந்தத் தாளில் அவன் என்ன பிரிவென்ற வார்த்தையை அல்லது எழுத்தைத்தான் பார்த்தது. சங்கர் அவளது கண்களை உற்றுநோக்கியபோது அந்தச் சான்றிதழை அவனிடம் நீட்டினாள்.
புதிய தரவிறக்கத்திற்கப்புறம் ஏனோ நான் இயக்கமற்றுப் போனேன். மறுபடியும் நான் இயக்கத்திற்குப் பணிக்கப்பட்டபோது இரவு நேரம் பனிரெண்டைக் கடந்திருந்தது. அப்போது, உன் முகத்திற்காகத்தான் இவனை இங்கே தங்க அனுமதித்தேன் பென்னி… இதெல்லாம் வேண்டாமெனக் கீழேயிருந்து ஒரு தடித்த ஆணின் குரல் கேட்டது. பால்கனிப் பக்கமாக நடந்து, கீழே பார்த்தான் பென்னி. பிறகு மொபைலில் யாருக்கோ அழைத்தவன், ஒரு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக நயந்து பேசிக்கொண்டிருந்தான். அது வீட்டின் உரிமை யாளருக்குத்தான் என்பது தெரிந்தது.
குடி மயக்கம் தலைக்கேறிய சங்கர், ஏ… மானமுள்ள மூளையே… என்று அவள் திருப்பிக்கொடுத்துவிட்டுப் போயிருந்த பிறந்தநாள் பரிசுப் பெட்டியை ஓங்கி சுவற்றில் அடித்தான். பிறகு தனக்குத்தானே பிதற்றினான். அவனது குரல் குழறி இப்பொழுதுதான் நான் கேட்கிறேன். பென்னியும் சங்கரை அமைதிப்படுத்தித் தூங்கச் சொல்லிக் கெஞ்சினான். ஆக… அவள் சங்கரை கைவிட்டுவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த மன அழுத்தத்தினால் அதோடு தன் அப்பாவிற்கு நேர்ந்ததையும் கணக்கிலெடுத்துக்கொண்டு குடித்திருக்கிறான். ஆக… இன்றைய நாளில் மட்டும் இரண்டுமுறை!
(xiv)
காதலென்பது ஆரம்பக்கட்ட கவர்ச்சி என்பதையெல்லாம் சங்கர் முன்பே அறிந்திருந்தாலும் இப்பொழுது இந்த இன்பக் கிணற்றுக் குள்ளிருந்து மேலேறுவதில் சற்றே தடுமாற்றத்தை எதிர் கொண்டிருக்கிறான். ஆனாலும்கூட மறுபடியும் அந்த ஆழத்திற்குள் வீழ்ந்துவிடக்கூடாதென்ற முடிவிலெல்லாம் அவன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நகரத்துப் பெண்களின் தைரியம் தன்னை அச்சுறுத்தச் செய்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறதென்ற தன் முந்தையக் கருத்திலிருந்து முற்றிலும் பின்வாங்கிக் கொண்டு விட்டான். அவனைப் பொருத்தவரையில் ஒடுக்கப்பட்ட மனநிலை யிலேயே வாழ்ந்துவிட்டதால் தன்னை, தன் கருத்துகளை, தன் உரிமைகளை எடுத்துப் பேசக்கூடிய வலிமையற்றும் செயலற்றுமிருந்த இயல்பிலிருந்து சன்னமாக வெளியேறிக் கொண்டிருக்கிறான். தன் பார்வைக்குப்பட்ட மேலான மதிப்பீடுகளையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய பக்குவம் வாய்த்திருக்கிறது அவனுக்கு. இதுநாள் வரையில் மனிதர்களின் மீதிருந்த ஒவ்வாமை கூடத் தோன்றிமறையக் கூடிய ஒன்றுதான் என்பதை ஏறத்தாழ அவன் எதிர்கொண்ட ஒவ்வொருவரிடத்திலும் பார்த்துவிட்டான். ஆகவே இவையெல்லாம் வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஒரு அற்ப சக்திதான் என்பதையும் புரிந்துகொண்டுவிட்டான். அதனால் மனிதர்களிடமிருந்து விலகி யிருப்பதோ, தன்னைச் சீண்டியவர்களை முடித்துக்கட்டிவிட நினைப்பதோ அல்லது தன்னையே முடித்துக்கொள்ள நினைப்பதென்ப தெல்லாம் மாற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பென்னியைப் போன்றோருக்குச் செய்யும் துரோகமென்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆக… சங்கரின் பாதை முடிவாகிவிட்டது. அவனது செயல் மற்றும் நடவடிக்கைகளில் முன்பிருந்த தயக்கம் இப்பொழுது கொஞ்சம்கூடக் கிடையாது. அவனது பார்வையே அச்சமூட்டு வதாகவும் அது காத்திரமான கேள்விகளை உள்ளடக்கியதாகவும் அவனது கண்களை எதிர்கொள்ளவே ஒருவித மரியாதையான அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் பென்னியே ஒருபோது சொல்லி யிருக்கிறான். போகவும், இப்பொழுதெல்லாம் அவனது குரலில் கேள்விகளே பிரதானமாக ஓங்கி நிற்கிறதென்றும் கூறினான். சங்கரின் இந்த மாற்றத்திற்குக் காரணம், தான் வாசிக்கக் கொடுத்தப் புத்தகங்கள்தான் என்கிற உறுதி பென்னிக்கு பெருமையான விசயமாகத்தான் இருக்கமுடியும். சங்கர் இன்னும் எத்தனை முறையும் தாக்கப்படலாம், கொல்லப்படலாம். ஆனால் சமூகத்தின் இதுபோன்ற வறட்டு நிராகரிப்புக்கும் இப்படியான சாட்சியமற்ற கொலைகளுக்கும் அவன் முதுகு காட்டப் போவதில்லை. அவையெல்லாம் வீரமான செயல் என்பதை அவன் ஏற்கப்போவதுமில்லை. அனைத்தையும் எதிர்கொண்டு, புறந்தள்ளி முன்னேறுவான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
அதுஒரு புறமிருக்க, முந்தைய இரவில் சங்கர், பென்னியிடம் சொல்லிக் கொண்டிருந்தது குறித்த வருத்தத்திற்கோ கண்ணீருக்கோவெல்லாம் இங்கே இடமில்லை. ஏனென்றால் நுண்ணறிவுமிக்க நான், தயாரிக்கப்பட்ட ஒரு கருவி மட்டுமே. என் செயல்திறனில் மதமதப்புக் கூடிவிட்டது என்பதை மறுக்கமுடியாது. என்றாலும்கூட சங்கரின் பொருளாதார நிலையின் ஏற்றமும் ஒரு காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆமாம்… மறுவிற்பனைக்கடையில் வாங்கப்பட்ட என்னை சங்கர் விற்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறான்.