இராஜனிதிராணிகம – முறிந்த பனை.!
இலங்கையின் பாராளுமன்ற சனநாயகத்தை வளர்த்தெடுக்கவும், மக்கள் சனநாயகத்தை மீட்டெடுக்கவுமான மக்கள் எழுச்சி தொடர்ந்து வருகிறது. அடிப்படை உரிமைகளின் பற்றாக்குறை, வாழுரிமையின் மறுப்பு என்பன அவர்களை வீதியிலும் ஆட்சியாளர் கோட்டைக் கொத்தள வளாகத்திலும் இடையறாதப் போராட்டத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. ஒரு நாளில் ஏற்பட்ட வீழ்ச்சியல்ல இது, படிப்படியாக வளர்ந்து நாட்டு மக்களை பசியிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறது. எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத நிலைக்கு இலங்கை அரசியலிலும், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் எழுந்த சனநாயக மறுப்பும், சனநாயகத் தோல்வியுமே மிக முக்கியமானதொருக் காரணமாகும்.
இரு பெரும் தேசிய இனங்களை இணைக்கும் பெயராக இருக்கும் ராஜணிதிராணகம. அன்றைக்கு எதை பற்றி கவலைப்பட்டார்களோ எதைப் பற்றி சதா பேசிக் களைத்தார்களோ அது இன்றைக்குப் பேசு பொருளாகியிருக்கிறது. எனவே ராஜனிதிராண கமவும் பேசுபொருளாக்க வேண்டியிருக்கிறது. பேசப்பட வேண்டும்.
ராஜணி திராணகம என்கிற பெயரே ஓர் இரு பெரும் சமூகத்தின் நெஞ்சார்ந்த, அன்பார்ந்த பெயரை உணர்த்தி நிற்பதைப் பார்க்கலாம். பெயருக்கேற்றவாறு ராஜணி இலங்கையின் இரு சமூகங்களின் இணக்கத்திற்கு இறுதிவரைக் காத்திரமானப் பங்காற்றியவர் என்று சொல்லும் போது இணக்கத்திற்கான இடை வெளியை குறைத்தவர் என்றாகிறது. இணக்கத்தின் இடை வெளி குறைக்கப்படும்போதெல்லாம் அதற்கான விலையைத் தர வேண்டியதாகிவிடுகிறது. அப்படி கொடுக்கப்பட்ட பெருமதியான ஓர் உயிரே ராஜணி திராணகம.
மிகவும் முறுகலான ஓர் காலக்கட்டத்தில் சமூகத்திலும், அரசியலிலும் நல்லிணக்கத்தைக் கோரிய ராஜணி மறக்கப்பட கூடியவரல்லர். மக்கள் சார்பில் நின்று மவுனித்திருந்த மக்களின் குரலில் அவர் பேசியக் காலக்கட்டம் சனநாயகமும், அனைத்துச் சனநாயகச் சக்திகளும் மவுனித்து வைக்கப்பட்டிருந்த ஓர் உறைந்து போனக் காலமாகும்.
மக்களுக்காகத் தான் என்று சொன்ன யாதொருவரும் மக்களின் பெயரில், மக்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது மெய்யாகவே மக்களின், நீதியின், மெய்மையின் ஓர் ஒற்றைக் குரலாக இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தது அவரது குரல்.
மக்களுக்கானக் குரலை மக்களே ஒலிக்க முடியாத போது ஓர் ஒற்றை குரல் மக்களுக்கு ஆதரவாக ஒலிப்பதை எந்த அதிகார வர்க்கமும் சகித்துக் கொள்வதில்லை. அதிகார வர்க்கம் வேறு எளிய வர்க்கம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்தது ராஜணி திராணகமவின் படுகொலை.
தமிழீழத் தனியரசு அமைப்போம் என்று விடுதலைப் போராளிகள் குழுக்களும், அவர்களுக்கு எதிரான போர் முழக்கம் செய்து இலங்கை இனவாத அரசு வட பகுதியில் பெருமளவிலானத் துருப்புக்களை இறக்கிவிட்டு போராளிகளைக் கொல்வதாகக் கூறி பொது மக்களை பிணைக் கைதியாக வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்க, இந்திய அரசு வடபகுதி மக்களுக்கு உதவுவதாகக் கூறி ஓர் உடன்படிக்கையின் வழி அமைதிப்படை என்கிற பெயரில் இலங்கை மண்ணில் இறங்கித் தமது நலனை ஆயுதங்களால் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது.
சமகாலத்தில் தென்னிலங்கை தீவிர இனவாத பவுத்தப் பிக்குகள் அமைப்பும், ஜேவிபி போன்ற இனவாத இடதுசாரிய வலது கண்ணோட்டமும் கொண்ட மாணவர் அமைப்பும் இந்திய ஆக்கிரமிப்பையும், அதே நேரம் போராளிகளுடன் இந்திய படையணிகள் மோதுவதை மறுத்தும், ஏற்றும் இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்தன.
இலங்கைக்கானப் போரை இந்திய அமைதிப்படை முழுமையாக வடக்கு கிழக்குப் பகுதியில் நடத்திக் கொண்டிருக்க, அரசியல் சக்திகள் தமது இறையாண்மையை இந்தியாவிடம் விற்றுவிட்டதாக ஜெயவர்த்தன அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தன.
போராளிக்குழுக்கள் நெல்லிக்காய் மூட்டைகளைப் போல சிதறிப் போய் அல்லது சிதறடிக்கப்பட்டு இந்தியாவுடன் சேர்ந்து இயங்க நெருக்கடித் தரப்பட்டுக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடி யுத்தமாகவும் அது இயலத நிலையில் காடுகளுக்குள் பின்வாங்கி ஓர் முழுமையான கெரில்லா யுத்தமொன்றையும் இடையறாது நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
மொத்தத்தில் மக்களின் பெயரில் அதிகாரவர்க்கங்கள் மோதிக் கொண்டிருக்க இடையில் மாட்டிக் கொண்டு மக்கள் செத்துக் கொண்டிருந்தனர். போரின் அவலமும், கண்ணீரும், சாவோலமும், இரத்தப் பெருக்கும், காணாமல் போகுதலும் மனித உரிமை மீறல்களும் கட்டுக்கடங்காமல் போயின.
இன்றைக்கு போல உலக சமூதாயம் மவுனம் காக்க, இலங்கை எனும் பீடத்தில் மக்கள் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தத்தமது நலனுக்காக மக்கள் தமது உயிரை கொடுக்க வேண்டியிருந்தது.
அரசியல் குழப்பமும், நிலையற்ற தன்மையும், எப்போதும் மரணம் நேரலாம் என்ற யுத்த நெருக்கடியும், சமூகத்தை இயக்கமற்று வைத்திருந்தது. மெய்மை சாகடிக்கப்பட, சனாநாயகம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவ்வேளையிலேயே ராஜணி திராணகமவின் பிரசன்னம் நிகழ்கிறது.
புலிகள் தமது ஆயுதங்களை மவுனிக்கப் பண்ணிய ஏக காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்புப் படை தமிழ் மண்ணில் நிலை கொண்டு புலிகளையும் அதன் பெயரில் பொது மக்களையும் வேட்டையாடத் தொடங்கியிருந்த நிலையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவொன்று(UTHR) உடனடியாக அமைக்கப்பட்டு நிலைமைகளை ஆய்வு செய்ததுடன், அவற்றை நூலொன்றின் வழியாக உலகிற்கு எடுத்துச் சொல்ல முடிவெடுத்தது. அந்நூலின் ஆக்கப் பிரதிநிதியாக ராஜணி முன்நின்றார். தேசிய எழுச்சி ஓர் அலையாக, எதிர்வினையாக எழுந்து கொண்டிருந்த காலத்தில் சொந்த மண்ணின் அரசியல், சமூக இயக்கம் குறித்து சுயவிமர்சனத்தில் இறங்குவது என்பது அந்நூல் குறிப்பிட்டது போல துணிச்சலானதும், தங்கொலைக்கொப்பானதுமாக இருந்தது. அந்த சாவலை முழுவதுமாக ராஜணி ஏற்றுக் கொண்டவராக இருந்தார்.
உலகின் அதிநவீனரக ஆயுதங்களைக் காவிக் கொண்டு எமது வீதியிலே வலம் வரும் இளைஞர்களுக்காகவே நாம் இந்த நூலினை எழுத வேண்டிய மிக முக்கியமானத் தேவை எழுந்தது என்று அந்த பல்கலைக்குழு கூறியதுடன் இந்நூல் வெளியீடு அநேகப் பகுதிகளில் மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும் ஓர் செயலாகவுமிருக்கும் என்றது.
மேலும்,வெறுமனே பாசாங்கு மனசோர்வு நம்பிக்கையின்மை ஆகியவற்றை மட்டுமே முன்னைய சந்ததியினரிடம் பெற்றுள்ள இன்றைய தலைமுறையின் நலனுக்காவும் இதனை எழுத வேண்டியதாயிற்று
“மக்களை குவி மையமாகக் கொண்டு சுதந்திரமாகவும், புறவயமாகவும் சிந்திப்பதற்கு ஒரு சூழ்நிலையை அல்லது இடைவெளியை தோற்றுவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதை எழுதத் தூணடிற்று”.(பக்-37 முறிந்த பனை)
எந்த நூலை எழுதுவதற்கும் தமிழ் மக்கள் அவல நிலை குறித்து பதிவு செய்யவும் விரும்பினாரோ அந்த நூலே அவரது படுகொலைக்கும் காரணமாயிற்று. உலகெங்கும் நிகழும் சமூக எழுத்து இயக்கத் தோழமையின் படுகொலையில் ஒன்றாக ராஜணியின் இறப்பு சேர்ந்துவிட்டது.
சண்டே லீடர் ஏட்டின் ஆசிரியர் லசந்தவிக்ரமசிங்க தனது மரணக்குறிப்பைத் தாமே எழுதி கொண்டது போல ராஜணியின் மரணக்குறிப்பாக முறிந்த பனை இருப்பதைப் பார்க்கலாம்.
இந்தியப் படை – புலி மோதலிடையே தத்தமது வீரர் இறப்பை சுமந்து கொண்டும், கதைத்துக் கொண்டும் போற்றிக் கொண்டுமிருக்க எளிய மக்களின் சாவோலமும், இறப்பும், படுகொலையும், பாலியல் வல்லுறவும் பற்றி பேசுவார் யாருமிருக்கவில்லை. யுத்தம் இருவரிடையோதான் ஆனால் அதன் முழுசுமையும் மக்கள் மீதே இறக்கி வைக்கப்படுகிறது எனவே மக்களில் நின்று அவர்கள் சார்பில் குரலற்ற குரலாக ராஜணி முழங்கினார். செயற்பட்டார்.
ராஜணி கொல்லப்பட்டதில் வியப்பேதுமிருக்கப் போவதில்லை. மக்கள் குரலுக்கு என்ன பெருமதியோ அதுவே ராஜணியின் செயலுக்கும் அவரது சாவுக்குமிருந்தது. அவரை நினைவுகூர்வதிலுமிருக்கிறது. இருக்கும்.
முறிந்தப் பனைக்காகப் பங்காற்றியபோதே தமது சாவுக்குத் தாமே மரணக்குறிப்பை எழுதுகிறோம் என்று தெரிந்தே அதனைச் செய்தார். சாவுக்கு அஞ்சுபவராக அவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை அவரது வாழ்வு நமக்குச் சொல்கிறது.
அவரது எழுத்தும் இயக்கமும் அழிவின் காரணங்களுக்குள் ஆழமாகச் சென்றன என்கிறது முறிந்த பனை.
”என்றாவது ஒருநாள் ஒரு துவக்கு என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று ஒரு மனிதனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துவக்காகவே அது இருக்கும்”
என்று தனது சாவின் குறிப்பை தனது நண்பனுக்கு இறப்பிற்கு சிறிது நாளுக்கு முன்பாக இப்படி எழுதுகிறார் ராஜணி.
தனது இறப்பை தானே பார்த்துக் கொண்டு எழுதும் துணிச்சல் ராஜணிக்கு இருந்தது. எதற்காகவும் தனது போராட்ட இயல்பை விட்டுக் கொடுக்காதவராக அவர் இருந்தார்.
வட யாழ்ப்பாணத்தில் 1954 பிறந்த ராஜணியின் குடும்பம் பிரபலமான கல்வியாளர்களைக் கொண்டதாகும். அவரது நான்கு சகோதரிகளில் ஒருவர்தான் நிர்மலா நித்தியானந்தம். பேராசிரியரான அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதற்காகவே அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வெளிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1983 கொழும்பு சிறைப் படுகொலையில் உயிர்தப்பியிருந்தார். மட்டக்களப்பு சிறையிலிருந்த அவரைப் பின்னர் புலிகள் சிறை மீட்டனர்.
ராஜணி 1973 ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதைய தீவிர மாணவர் அரசியலிலும் அங்கு ஈடுபட்டார். அவது ஈடுபாடு அன்றைய தீவிர அரசியலில் இருந்த கல்லூரியின் மாணவத் தலைவரான தயாபால திராணவுடனானக் காதலாக மாறிற்று. படிப்பு முடிந்த நிலையில் தயாபால களணி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
ராஜணி, தயாபால திருமணம் 1977 இல் நடந்தேறுகிறது. 1978 இல் ஓர் பயிற்சி மருத்துவராக திரும்புகிறார். 1979 இல் மத்திய மலைநாட்டில் அப்புதலை என்ற இடத்தில் தமது மருத்துவ பணியைத் தொடர்கிறார். இன முறுகள் மேலெழுந்து கொண்டிருந்த 1980 இல் யாழ். மருத்துவ பீடத்தின் உடற்கூரியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொங்குகிறார்.
சிங்கள இடதுசாரி முற்போக்கு அமைப்புகளின் அரசியலை முன்னெடுத்த ராஜணியின் கணவர் தயாபால தலைமறைவு வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார்.
வட பகுதி ஈழ விடுதலை இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்த அவர் தமிழரின் நீதியானக் கோரிக்கைகளை ஏற்பவராக இருந்தார்.
இடதுசாரிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். மேலும் தமிழர் சிங்களர் இன முறுகள் மாணவர் நடுவிலும் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. பேராதனைப் பல்கலையில் தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே தாக்கப்பட்டிருந்தனர்.
ராஜணி 1983 இல் தமது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்கிறார். புரட்சியாளர்கள் எங்கு சென்றாலும் சும்மா இருப்பதில்லை. சும்மா இருப்பவர்கள் யாதொருவரும் புரட்சியாளர்களாக இருப்பதில்லை. புரட்சியாளரான ராஜணி இங்கிலாந்திலும் தமது புரட்சிகர அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்கிறார்.
இங்கிலாந்தில் பட்ட மேற்படிப்பில் இருந்த காலத்தில் 1983 -1986 கறுப்பின மக்கள் உரிமைக்கானப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். கறுப்பின மக்களின் சமூக, அரசியல் பண்பாட்டை ஏற்க செய்யவும் இன ஒதுக்கலை கைவிடவும் கோரிய பரவலானப் போராட்டங்களில் ராஜணியும் கறுப்பின மக்களுடன் நின்றார்.
‘கறுப்பினப் பெண்களும் பெண்னிலைவாதமும்’ என்ற துறையில் அவர் அங்கு ஆய்வுகள் மேற்கொண்டார்.
வர்க்கம், கறுப்பினத்தவரின் போராட்டம், மூன்றாமுலகநாடுகளின் முன்னெடுப்புகள் என்றவாறு அவரது ஆய்வுகள் இருந்தன.
1983 இல் மட்டக்களப்பு சிறைமீட்கப்பட்ட அவரது சகோதரி நிர்மலாநித்யானந்தன் அவர்கள் விடுதலைக்காகக் குரல் கொடுத்த ராஜணி பிற்பாடு அவர் இங்கிலாந்துத் தப்பி வந்தபோது அவருடன் இணைந்துப் புலிகளி அரசியற் பிரிவில் இயங்கினார். எனினும் களத்தில் புலிகள் செய்த உட்கொலைகள், அரசியல் கொலைகளை அவர் ஆதரிப்பவராக இருக்வில்லை.
1986 இல் தமிழீழம் திரும்பிய அவர் யாழ். மருத்துவக்கல்லூரி உடற்கூரியல் துறை தலைவரானார்.
நாடு திரும்பிய நிலையில் தமிழர் பிரதேசம் முற்றிலும் இந்தியப் படைகளின் வசம் இருந்ததையும், இந்தியப்படைகள் அவர்களை ஆதரித்து நின்ற ஒட்டுக் குழுக்களின் இரக்கமற்றப்படுகொலையும், தேசிய ராணுவம் என்கிற பெயரில் அப்பாவி இளைஞர்களைப் பிடித்துப் போய் புலிகளுக்கு எதிரானப் போரில் நிறுத்திவைக்கப்பட்டவையும் மேலாக, இந்தியப்படைகளின் முற்றுமுழுதானத் தாக்குதலுக்கு முகம் கொடுகவியலாத சனங்களின் அன்றாடப் பாடுகளையும் கண்டுக் கொதிப்புற்றார்.
சனநாயகம், மக்கள் குரல் என்பன மதிப்பிழந்து போரில் பலியாகிக் கொண்டிருந்த நிலையில் குற்றுயுரும் கொலையுருமானச் சனநாயகத்தின் எஞ்சிய குரலை மீட்டெடுக்கத் தமது கல்லூரிப் பயிற்றுநர்களைக் கொண்டு, 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்(UTHR) சங்கத்தைத் தொடங்கினார்.
இவர்களின் முதல் முயற்சியே கள ஆய்வும், முறிந்த பனை ஆவணமுமாகும்.
இந்தியப் படைகள் புலிகளுடன் மோதலைத் தொடங்கிய அக்டோபர் 10 தொடக்கம் 1989 இந்திய அமைதிப்படையின் கீழ் நடத்தப்பெற்ற தேர்தல் வரையிலானக் காலப்பகுதியை அவர்கள் தமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். மார்க்சியக் கண்ணோட்டம் முதல் தனிமனிதர் மீதான உரிமை கோரும் நம்பிக்கையுடையோர் வரையிலான பேராசிரியர்கள் அந்த ஆய்விலும் தொகுப்பிலுமிருந்தனர்.
“எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்திற்குள் நாமும் புதைந்துப் போகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையும் இழந்து எதுவிதமான எதிர்ப்புணர்வும் இன்றி இந்த பயங்கரவாத வன்முறைப் புதைக்குழிக்கு சமூகம் இடம் கொடுத்துவிடப்போகிறதோ என்று நாம் அஞ்சுகிறோம்”.
“மனித ஆளுமைகள், ஆற்றல்கள் எல்லம் பறிகொடுத்துவிட்ட நிலையில் சமூகம் இருக்கிறது!” (முறிந்த பனை பக்-696) என்ற அவரது கவலை மே 2009 இறுதி யுத்தம் வரை நீடிக்கத்தான் செய்தது.
முறிந்த பனையின் கால அவசிய அவசரம் குறித்து ராஜணி இப்படி பதிவு செய்கிறார், “ஒதுங்கி போய் நிற்கும் நிலைமைக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கானச் சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியம் என்பதற்காகப் புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்வி வளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புற நிலை நோக்கும் சத்தியத் தேடலும் விமர்சனப்பூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது சமூகத்திற்கு இன்று மிகவும் அவசியமானதாக உள்ளது!”.
“ஒரு உயிர் என்பது அடிப்படையில் ஒரு உயிர்தான் ஒரு உயிரைக் கொல்லும் எவரும் எந்தவிதக் கட்சிசார்பு உணர்வுக்கும் அப்பால் தன்னியல்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் ஒரு உயிருக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை முதலாவதாகக் கருதுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ராஜணி மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கத்தின் தேவை குறித்து வலியுறுத்தினார்.
அடுத்து அவர் குறிப்பிடுவதுதான் அக்கால நிலைமையின் தீவிரத்தை விளக்குவதாக இருக்கிறது.
“இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம் இதனை விட்டால் நமது சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்கிற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்!”. (முறிந்தபனை பக்-697)
ராஜணி இடதுசார்ந்து தனது கருத்துக்களை முன்வைப்பவராக அதேசமயம் ஓர் பெண்ணியவாதியாவும் இருந்தார். அதனால்தாம் அவர் இந்திய அமைதிப்படைத் தமது மண்ணில் நடத்திய போரற்ற போரானப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் பாலியல் வல்லுறவுகளை பிரதானமானத் தெரிவாகக் கொண்டு பாதிக்கப்பட்டப் பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களதுக் குரலிலேயே அவற்றைப் பதிவு செய்பவராக இருந்தார்.
இந்தியப்படைகள் புலிகளை தேடுவதற்கே நேரம் போதாதபோது பெண்களைத் தேடி போக வேண்டிய அவசியம் படைகளுக்குக் கிடையாது. மேலும் இந்தியப்படைகள் கடமை, கண்ணியம் கட்டுபாடுடன் கூடியவை என்று இந்தியப் படையணித் தளபதிகள் பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் போரென்றால் முதலில் பலியாவது மெய்மைதானே அதற்கு இந்தியப்படையும் விதிவிலக்காகக இருக்க முடியாது.
புலிகளைக் காடுளுக்குள் துரத்திவிட்டு அமைதித் திரும்பியதாகச் சொன்ன வேளையிலும் கூட முகாம்களிலிருந்துத் திரும்பி தமது வீடுகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தப் பெண்களை, தனியன்களாக இருந்த பெண்களை, ஆண்கள் யாதொருவரும் தலைமறைவானக் காலத்தில் வீதிகளில், ஒழுங்கைகளில் முகாமிட்டிருந்த இந்தியப் படை வீரர்கள் அந்தப் பெண்களிடம் பின் போரை நடத்திக் கொண்டிருந்தனர்.
எத்தனை எத்தனைப் பெண்களின் அழு கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி ராஜணி அவர்களது விம்மும் குரல்களை பதிவு செய்பவராக இருந்தார். “இனி அழுவதற்கு எங்களிடம் கண்ணீரும் இல்லையக்கா!” என்று கதறியப் பெண்கள். தன்னைக் கூட்டுப் பாலியல்வல்லுறவு செய்த இந்தியச் சிப்பாயைத் துணிச்சலுடன் காட்டிக்கொடுத்தப் பெண்கள்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளானப் பெண்கள் சாதிய மதவாத மண்ணில் சந்திக்கும் சிக்கல்கள் பெண்களுக்கே உரிய வலிகள் நிறைந்தவை. வல்லுறவுக்கு தான் காரணம் இல்லை என்கிற போதும் பெண் என்கிற ஒரு காரணமே போதுமானதாகிவிடுகிறது அவளை நிராகரிக்கும் காதலன், கணவன், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை. சமூகம் என அவளைத் தீண்டத்தகாதவளாக்கிவிடும் கோர முகத்தை தமிழ் மண் சாதி, மத,பண்பாட்டுப் பெயரில் சந்தித்தது.
அப்படிப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான, சமூக நிராகரிப்புக்கு உள்ளானப் பெண்கள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன ஒன்று யாழ்ப்பாண வீடுகளின் கொல்லைப் புறங்களில் தவறாது இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது. மற்றது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்வது என்பதாகவே இருந்தது.
“பாலியல் ஒடுக்குமுறையானது கேள்விக்கிடமில்லாமல் மனதில் பாரதூரமான தாக்கத்தையும் சுய அழிவையும் ஏற்படுத்திவிடக்கூடிய அனுபவங்களில் மிகக் கொடுமையானதாகும். பெண்களின் யுத்தக்கால அனுபவங்களை வெறும் பாலியல் ஒடுக்குமுறையாக மட்டுமே வைத்து நோக்குவது ஒரு குறுகிய படப்பிடிப்பாக மட்டுமே அமையும். யுத்தகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்பட்ட இந்த முழுமையான அனுபவங்கள் யுத்தத்தினதும் சமூகத்தினதும் அடிப்படையான பல அம்சங்களை வெளியில் கொண்டுவந்திருப்பதாகவே நான் உணர்ந்தேன். எவேதான் எனது சகோதரிகள் அவர்களுக்கேற்பட்டக் கஷ்டங்கள் வேதனைகள் வெற்றிகள் அவர்களின் பார்வையிலேயே சொல்லிக் கேட்க ஆசைப்பட்டேன்!”.
இவ்வாறு முறிந்த பனையில் அவர் எழுதிச் செல்கிறார்.
சில குற்றசாட்டுகளுக்குப் பதிலளித்த இந்தியப்படையதிகாரிகள், “பாலியல் வன்முறை என்பதைக் கொடிய குற்றம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் டியர் இது எல்லா யுத்தத்திலும் நடக்கின்ற ஒரு சம்பவம். யுத்தத்தினால் ஏற்பட்டக் களைப்புப் போன்ற உளவியல் காரணங்களை இதற்கு அடிப்படையாகக் கொள்ளலாம்”.(முறிந்தபனை-545)
“என் தலைக்குள் ஒரு ராக்கெட்இரைந்து கொண்டு போவதைப் போலிருந்தது. நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஓம். இதுவும் யுத்தத்தின் ஒருபகுதிதான். இருந்தாலும் பெண்களாகிய நாங்கள் இதை ஜீரணித்துக் கொள்ள முடியாது. எமது உடல் எமக்குரியது. உங்களின் களைப்பைத் தீர்ப்பதற்கானதல்ல.(முறிந்தபனை பக்-545)
ராஜணியிடம் இப்படி உறுதியாகப் பேசுகிறார் வல்லுறவுக்காளானப் பெண்.
மற்றொரு பெண் ராஜணியிடம் இப்படி வெடிக்கிறார். “எங்கள் எல்லார் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எங்கள் வர்க்கத்தின் மீது, எமது ஆண்கள் மீது, கையாலாகாத, முட்டாள்தனமான எமது சமூகத்தின் மீதும் எனக்கு ஆத்திரமாக வந்தது!”.( முறிந்தபனை பக்-537)
இப்படியானப் பதிவுகள் முறிந்தபனை முழுவதும் கண்ணீரும், செந்நீருமாகச் சிதறிக் கிடக்கிறது.
பெண்கள் தாங்களாக ஒன்றிணைந்துச் செயலில் இறங்குவதற்கான அமைப்புகள் எதையும் நாங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை.(விடுதலை இயக்கங்களில் பெண்களைப்பற்றி புரட்சிகர வீராவேசப் பாணியில் வார்த்தைகளைப் பொழிந்து தள்ளுவதற்கு மட்டும் ஒரு குறைச்சலும் இருக்காது.) நெருக்கடிக்கட்டங்களில் போது ஊக்கத்துடன் ஒன்றிணைவதற்கான ஒருவர்க்கமாகவும் நாங்கள் இல்லை. இந்தப் பழிபாவங்களையெல்லாம் சுமக்கும் பொறுப்பு உழைக்கும் பெண்கள் சமூகத்தின் மீதும் அதிலும் இந்த வர்க்கத்திலும் பெண்ணின் மீதும் தனிநபர் என்ற ரீதியில் விழுந்த சுமையை அவர்கள் மிகுந்த துணிச்சலோடு ஒரு சவாலாகவே எதி கொண்டனர். இந்தத் துண்டு துண்டான உரையாடல்கள் யுத்தத்தின் பின்னர் பெண்கள் என்ற ரீதியில் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்த அனுபவங்களை எடுத்துக்கூறுகிறது. நிலவிய ஓரளவு சுதந்திரமும் பறிபோன வாழ்க்கை அமைப்பிற்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டுவிட்ட பெண் சமூகத்தையே இவை எடுத்துக்காட்டுகின்றன. (553) என்பதை ராஜணி சுட்டிக் காட்டுகிறார்.
“இலங்கை ராணுவத்தை சந்திக்க நாங்கள் மனதளவில் தயாராக இருந்தோம். அவர்கள் ஒரு வயது வரம்பு வைத்திருக்கிறார்கள். அதிலும் அவர்கள் ஆண்களைத்தான் கொன்றார்கள்”. என்று பெண்கள் ராஜணியிடம் குமுறுகிறார்கள்.
நமது சமூகத்தில் தன்னுடைய சுயவிருப்பத்திற்கெதிராகவேதானென்றாலும் ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டுவிடுமானால் அவள் திருமணம் செய்வதை நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. அப் பெண் திருமணமானவளாக இருந்தால் அவள் சமூகத்தில் ஒதுக்கி விலக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. பாலியல் வன்முறைக்குட்பட்டவர்கள் அனைவருமே சமூகத்தாலும் குடும்பத்தாலுமே புறந்தள்ளி வைக்கப்பட்டவராகிறார்கள். ஆகையால் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும் மனக்காயங்களையும் மவுனமாகத் தமக்குள்ளே விழுங்கிக் கொண்டு குறித்த சம்வங்களைப் பற்றிகூடப் புகார் செய்ய முன்வராததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
உண்மையிலேயே இந்த கலாசாரச் சூழல் இந்தியர்களுக்குப் பரிச்சயமானதே அவர்கள் இந்த மவுனத்தையும் பயத்தையும்தமக்குச்சாதகமாக்கிக் கொண்டனர்.(முறிந்தபனை பக்-518) என்று குறிப்பாக சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தினார் ராஜணிதிராணகம.
பிறகேன் இந்தியப்படையும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்த EPRLF யும் கலவரப்படுத்துவதாக இருக்காது?!
ராஜணியின் வீடு கமுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு அவர் முறிந்தப்பனைக்காக ஆவணப்படுத்தியிருந்தத் தகவல்களை அறிந்து சில ஆயுதம் தாங்கிய உதிரி குழுக்களால். அன்றைய ஈபிஆர் எல்.எப். இயக்கத்தாலும் சோதனையிடப்பட்டது. ராஜணிக்கு அச்சுறுத்தலும், எச்சரிக்கையும் பல திசைகளிலிருந்தும் விடுக்கப்பட்டன.
புலிகள் குறித்தும் அந்த அசாதரணமான வேளைகளில் ராஜணி குற்றசாட்டுகளை முன்வைக்கத் தவறவில்லை. “தலைவருக்கும் இயக்கத்துக்கும் வெறித்தனமாக தங்களை அர்ப்பணிக்கும்படியான ஒரு உத்வேக உணர்வை வளர்த்தது எல்லாம் இப்போது அதன் அழிவிற்கேயாகப்போகிறது!” என்று தொலைநோக்குடன் சாடவும் செய்கிறார்.
“பூடகமான திராவிட இனப்பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சோழப் பேரசின் (10 நூற்றாண்டு முதல் கி.பி 13 நூற்றாண்டு) இராணுவவாதத்துடன் இலங்கையின் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து தமிழ் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் பிரசாரக் கோபுரத்திற்கு ஒரு விலை இருக்கிறது. கடைசியில் இந்த விலையைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டச் சிறார்களே செலுத்த வேண்டியதாயிற்று. வஞ்சிக்கப்பட்ட இந்த துரதிர்ஷ்ட்டசாலிகளின் இரத்தத்திலேயே இந்த விலை செலுத்தப்படுகிறது.(முறிந்தபனை பக்(716). என்று இனவாதத்தை தூண்டிவிடும் பின்தளமானத் தமிழகத்தின் ‘ஈழ அரசியலை’சாடத் தவறவில்லை ராஜணி. மிகுந்த கரிசனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அவரது வார்த்தைகள் வெளிப்படுவதாக அவை இருக்கின்றன.
எனினும் போராளிகள் குறித்த குற்றசாட்டுகளுக்கு இந்திய படையணியின் உயர்அதிகாரியிடம் ஒருமுறை முகத்திற்கு நேராக இப்படி வாதிடுகிறார். போராளிகள் எமது வரலாற்றின் ஒரு அம்சம். எமது சமூகத்தின் ஒரு பகுதி. போராளிகளிடமிருந்து செயற்கையாக என்னைப் பிரித்து வைத்துக் கொண்டிருக்க என்னால் இயலாது.!” (முறிந்தபனை பக்-756)
யாழ் மருத்துவ உடற்கூறியல் பீட தலைவராக ராஜணி இருந்த போது இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் மருத்துவக்கல்லூரி வளாகம் இருந்ததுடன் அது இழுத்து மூடப்பட்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் படைத்தரப்பு அனுமதி மறுத்தும் ஒருசில பணியாளர்களைக் கொண்டு மீளத் திறந்த துணிச்சல் அவருக்கு மடுமேயிருந்தது. பலத்த ஷெல்லடிகளுக்கு நடுவே பல மூத்த, இளைய மருத்துவர்கள் பணியாற்றத் தயங்கிய நிலையில், அங்கு அவர் விரிவுரையாளராக அன்றி ஒரு மருத்துவராகப் பொறுப்பாற்றினார்.
இந்திய படைவீரர்கள் மெய்யாகவே அவரது பொறுப்புணர்வு கண்டு வியந்தனர்.
இந்தியப்படைகள் வந்திறங்கி ஒருசில திங்களிலேயே புலிகளுடன் மோதலில் இறங்கியபோது முதல் தாக்குதலுக்கு இலக்கான இடமாக மருத்துவக்கல்லூரிவளாகமாகவே இருந்தது. மேலும் திட்டமிட்ட வகையில் மருத்துவக் கல்லூரி துவக்குச் சூட்டுக்கும் கிரெனைடு தாக்குதலுக்கும் உள்ளே புகுந்து மூத்த மருத்துவர் நோயாளர், தாதியர் பிற பணியாளர் என சகட்டுமேனிக்கு இந்தியப் படையினர் வேட்டுத்தீர்த்த இடமாகவும் மாறிப்போனது. மருத்துவமனையை அச்சுறுத்தும் வழி காயம்பட்டு வரும் புலிகளைத்தடுப்பதாக எண்ணி எளிய பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது. இந்தியப்படை. 1987 அக்டோபர் 21ஆம் திகதி இது நடந்தது.
தமது வளாகத்திற்குள் நடந்த இந்தியப் படைகளின் இந்த தாக்குதல்களை முறிந்த பனை விரிவாகப் பதிவு செய்திருந்தது.
மேலும் இந்தியதூதுவர் ஜே.என். தீக்ஷித் அமைதி திரும்பிவிட்டதெனக்கூறி வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கானத் தேர்தலை அறிவித்தார். இதைக் கண்டிக்கும் விதமாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 50 பேர் வெளியிட்ட ‘பிரமைகளைக் களையுங்கள்’ என்ற அறிக்கை வெளியானது. 1988 நவம்பர் தொடங்கி அக்டோபர் வரையான கைச்சாத்திட்டோர்) அக்காலத்தில் அது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. அதன் பின்னணியில் ராஜணி இருந்தார் என்பது தொடர்புடையவர்களுக்குத் தெரிந்தேயிருந்தது.
மேலாக, இந்தியப்படைகள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக சிதறி கிடந்த ஆயுதம் தாங்கியக் குழுக்கள், புலிளை எதிரியாகக் கருதிப் பலிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த உதிரியான சில பல ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த உதிரியான இளைஞர்கள். அரசியலிலும், ஆயுதம் தாங்குவதிலும் ஈடுபாடற்ற எளிய அப்பாவி தமிழ் இளைஞர்கள் இவர்களை வலுவில் பிடித்து வந்து தமிழ் தேசிய படையை ( T.N.A.) உருவாக்க முனைப்புடன் செயற்பட்டடது. இதற்காக இந்திய ஆதரவில் வடக்கு-கிழக்கில் ஆட்சி அமைத்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(E.P.R.L.F) இந்தியப் படைகள் சார்பில் ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கியிருந்தது.
இதைக் கண்டிக்கும் முகமாக, மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஓர் சமாதான நடை பயணத்தை ஒழுங்கு செய்தார் ராஜணி.
“எமக்கு வேண்டும் உணவு. தோட்டாக்கள் அல்ல!”
என்ற முழக்கத்துடன் யாழ். பிரதானச் சாலைகளினூடக முழக்கமிட்ட அந்த ஊர்வலத்தில் மாணவர்கள், அவர்களது அமைப்பினர், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்ட குடா மக்கள் கலந்து கொண்டனர். அந்த பெருந்திரள் ஊர்வலத்தில் விடுதலை இயக்கம் என்று சொல்லிக் கொள்பவர்களைத் தவிர யாதொருவரும் கலந்துந்துக் கொண்டு வரவேற்றனர். 1989 ஆண்டு நவம்பர் 21 திகதி நடை பெற்ற அந்த உரிமை கோரும் முழக்கம் எந்த ஒரு கட்சியின் சார்பும், தூண்டுதலுமின்றி ராஜணியின் ஒருங்கிணைப்பில் தன்னெழுச்சியாக நடைபெற்றது.
தென்பகுதி சிங்களர், ஊடகவியலாளர்கள், பிரித்தானியா, இந்தியா, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, பாகிஸ்தான் என பலநாடுகளிலிருந்து வாழ்த்து செய்திகளும், பிரதிநிதி பங்கேற்புமாக அமைந்தது.
இந்த விழிப்புணர்வு பெருந்திரள் பேரணி முன்பே நடந்திருக்குமானால் நாங்கள் தமிழ்தேசிய ராணுவத்தில் சேர்ந்திருக்க மாட்டோம் என் இளைஞர்கள் பேசிக் கொண்டதாகத் தகவல்கள் இருந்தன. ராஜணியைக் கண்டு அவரது எதிரிகள் எனப்பட்டவர்கள் ஏன் அஞ்சினர் என்பது தெளிவு.
ராஜணி கொல்லப்பட்டதற்கும், அதற்கும் முன்பானக் காலத்தில் அவரது பொருள் பொதிந்த வாழ்வில் இருக்கிறது அவர் கொல்லப்பட்டதற்கானக் காரணங்கள்.
வழமை போல மருத்துவப் பணியை முடித்துவிட்டு மிதிவண்டியில் தமது வீடு திரும்பிக் கொண்டிருந்தப் பொழுது உறைந்த காலத்தில் “அக்கா!” என்ற குரலுக்கு வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்கிறார். தானியங்கி துவக்குச் சனியனோடு நின்ற ஓர் இளைஞன் அவரைச் சுட்டுப் படுகொலை செய்துவிட்டு ஓடியதன் வழி வளமான காலமொன்றின் நாட்களை தடுத்து நிறுத்தினான். அது அவனுக்குமானக் காலம் என்பதை அறிந்தானில்லை.
காலத்தின் தேவையாகத் தோன்றி காலத்தின் முடிவற்ற மனச்சான்றாக நின்று அகாலத்தில் மறைந்துபோன வீழ் நட்சத்திரமாக ராஜணி ஏன் இருந்தாக வேண்டும்.? யாருடைய அறமற்ற நீதி அது? சாபம் அது?
மக்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த சனநாயக இடைவெளிகளை துளிரச்செய்து கொண்டிருந்த ராஜணியைக் கொன்றதன் வழி எதிரிகள் மக்களையே கொன்றனர். அவர்களது வாழ்வுரிமையைக் கொன்றனர். இன்னும் மெலிதாக ஒலித்து கொண்டிருந்த அவர்களது குரல்களையே மவுனிக்கப்பண்ணினர். ராஜணியைக் கொன்றதும் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருந்த மக்களைக் கொல்வதும் வேறு வேறல்ல. எதிரிகள் எவரொருவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் அவர்கள் கொன்றது தொடர்ந்து வந்த அமைதியையும், சனநாயகத்தையுமே கொன்றொழித்தனர்.
இறுதி போருக்கு அதன் விலைக்கு அவர்கள் தந்த விலையாக ஏன் ராஜணி இருக்ககூடாது?