இலங்கை மக்களின் சனநாயக எழுச்சி!
ஒரு குருங்காணொளி; ஒர் ஆள் தனது மிதி வண்டியைச் சாலையோரம் நிறுத்திவிட்டு நிதானமாகச் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று எங்கிருந்தோ இருசக்கர மோட்டார் வண்டியில் வேகமாக வரும் இளைஞன் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மிதி வண்டியை எடுத்துக் கொண்டுச் செல்கிறார். இலங்கையின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு இப்படியானக் காணொளிகள் பகிரப்படுகின்றன. இலங்கையின் இன்றைய நிலையை இதைவிடத் தெளிவாகச் சொல்விட முடியாது. இடுக்கன் வரும்போது நகுதல் என்பது இதுதான் போலும்.
இந்த நூற்றாண்டில் இப்படியொரு மக்கள் எழுச்சியை வரலாறு கண்டிருக்க முடியாது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டப் பொதுமக்கள், பல்கலைக்கழகக், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் என சகல மக்களும் தலைநகர் கொழும்புவில் ஒன்று கூடி ஆயிரக்கணக்கில் அதிபர், மற்றம் பிரதமர் மாளிகையின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தன்னெழுச்சியான இந்தப் போராட்டம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுத் தீயிட்டும், சூறையாடியும் உள்ளே புகுந்து நாட்டின் முதல் குடிமகனின் சொகுசு மாளிகையைச் சுற்றி வந்து தமது அறச் சீற்றத்தைத் தணிக்க முயன்றனர். அதிபரின் சொகுசு படுக்கையில் படுத்தும், நீச்சல் குளத்தில் குளித்தும், அவர்கள் பயன்படுத்தும் உடற்பயிற்சிக் கருவிகளில் தாமும் பயிற்சி செய்தும், உண்டும், உறங்கியும் களித்துப்பார்த்தனர்.
அதிபர் மாளிகளையின் பல கமுக்க அறைகளை உடைத்து கட்டுக்கட்டாகப் பணத்தையும் நகைகளையும் அள்ளிப் பதுகாப்பாக அவற்றை படையணிவசம் ஒப்படைத்தனர். இன்னும் பல திறக்கப்படாதக் கதவுகளை வியப்புடனும், சீற்றத்துடனும் வெறித்துப் பார்த்தனர்.
மின்சாரம், குடிநீர், உணவு என அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்க இடைநிற்காத மின்சாரம், குடிநீர் என அதிபர் மாளிகை உச்சபட்ச வசதிகளுடன் இருப்பதைப் பார்த்த அவர்களுக்கு இனம் புரியாதக் கோபம் தலைக்கேற பிரதமர் ரணில் தங்கியிருக்கும் மாளிகைக்குத் தீவைத்தனர்.
மக்கள் பொங்கியெழுந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட வரும் காட்சியை கேள்விபட்டு உலகின் சர்வாதிகாரிகள் வழிவழியாக என்ன செய்வார்களோ அதையே கோத்தபயவும் செய்தார். முதலில் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தப் படைத்தரப்பிற்கு உத்திரவிட்டுவிட்டு அவர், அவர்களது உதவியுடன் உடனடியாகத் தலைமறைவானார்.
மக்கள் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. அசரவில்லை. படையணிகளின் ஆயுதங்கள் அந்த நாட்டில் முதன் முறையாக மவுனித்தன. மடை திறந்த மக்கள் போராட்டத்தை அவர்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை.
சிறிது நேரம் அங்கு நடந்தது மக்களாட்சி. மக்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொது சொத்துக்களுக்குப் பெரிதும் சேதம் நேரா வண்ணம் அவர்கள் தமது சீற்றத்தைத் தணிக்க முயன்றனர். காவல் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் தமது உடைகளைக்க களைந்துவிட்டு மக்களுடன் கைக் கோர்த்துக் கொண்டனர். கண்ணீர்ப் புகைக்குண்டு, தண்ணீர் பீச்சியடிக்கும் காவலர்கள், ஆயுதம் தரித்தப் படையணியினர் தமது கைகளைக் கட்டிக் கொண்டனர். மக்கள் ஆட்சியை அவர்கள் மரியாதையுடன் ஏற்றனர்.
அதிபர் கோத்தபயராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தங்கள் பதவியைவிட்டு விலகும் வரை அவர்களது மாளிகையைவிட்டு விலகப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெளிவாக அறிவித்துவிட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகையில் கூடி சமைத்துச் சாப்பிட்டு உண்டு உறங்கித் தமது போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டுள்ளனர்.
நாட்டின் தேசிய இனங்களைச் சேர்ந்தச் சகல மக்களும் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். பெரும்பான்மைச் சிங்கள இனத்துவர்களுடன் இந்த எழுச்சியில் கைக்கோர்த்தனர். பொருளாதார வீழ்ச்சிச் சகல இனங்களின் ஒற்றுமையைக் கோருவதாக இருந்தது. இருக்கிறது.
“அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு வரும்போதுதான் எளிய மக்களின் புரட்சி நடந்தேறும்” என்பார் மாமேதை லெனின். கடந்த இரண்டாண்டுகளாகப் படிப்படியாகச் சரிந்து வந்த இலங்கைப் பொருளாதாரத்தின் வீழ்சி எளிய மக்கள் தொடங்கி அதிகாரவர்க்கத்தின் மேல்தட்டு மக்கள் வரையிலும் ஒர் சூறாவளிப் போன்று அன்றாட வாழ்க்கை முதல் அடிப்படைத் தேவைகளை வரை சூறையாடிச் சென்றது. கடந்த மே திங்கள் 9 ஆம் திகதி மக்கள் திரளின் பெரும் போராட்டத்தினிடையே ராஜபக்ச தனதுப் பிரதமர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சியில் ஒர் தலைவராகக் கூட இல்லாத முன்னய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமாராக்கிய அதிபர் கோத்தபய பதவி விலக மறுத்தார்.
வெறும் ஆட்சி மாற்றம் காட்சி மாற்றமாக இருந்ததேயொழிய பொருளாதார மந்த நிலையை, வீழ்ச்சியை தூக்கி நிறுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான எந்த ஒரு திட்டமும் ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.
அதிபர் “கோத்தபய வீட்டுக்கு போ!” என்ற முழக்கம் அவர் பதவிவிலகக் கோரி மீண்டும் ஜுலை 9 ஆம் திகதி தொடங்கி ஆகப்பெரிய எழுச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைகளை முற்றுகையிட்டிருப்பதையடுத்து அவர்களது குடும்பத்தினர் பெருமளவிலான நகை பணம், சொத்துப் பத்திரங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிக் கொண்டுள்ளனர். பசில் ராஜபக்ச விமானநிலையத்தில் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இறுதியில் பசில் ராஜபக்சவும் இலங்கையைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்.
அதிபர் கோத்தபய ராஜபக்ச 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் விமானம் வழி மாலத்தீவுக்குத் தப்பியதாக பி.பி.சி. செய்தி தெரிவித்தது. அதை மாலத்தீவு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மாலத்தீவில் இலங்கை மக்கள் திரண்டு அவருக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தனக்கு ஏற்பட்டுவரும் நெருக்கடியை உணர்ந்த கோத்தபய தற்போது அங்கிருந்து சிங்கப்பூரும் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதால் நாடாளுமன்ற அவைத்தலைவர் மகிந்தயாபா பொறுப்பிற்கு வருகிறது. அதிபர் கோத்தபய வரும் 13 ஆம் திகதி தாம் பதவி விலகுவதாகத் தன்னிடம் தெரிவித்திருப்பதாக யாபா தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபர் பதிவி வகிக்கும் அதே நேரம் 30 நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்திப் புதிய அதிபரைத் தேர்ந் தெடுக்க வேண்டும்.
ஆனால் தற்போது பிரதமர் ரணிலே அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சில கட்டளைகளைப் பிறப்பிக்கிறார். நாட்டைவிட்டு வெளியேறுமுன்னர் ரணிலிடம் சில பொறுப்புகளை கோத்தபய விட்டுச் சென்றுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே அவர் கட்டளைகளைப் பிறப்பிப்பதாகவும் கூறப்படுகிறது. அவசரநிலையும் அப்படி பிறப்பிக் கப்பட்டதாகவே ஊடக வல்லுநர்கள் கணிக்கின்றனர். (அதிபர் கோத்தபய மின்னஞ்சலில் தனது ராஜினாமாவை அனுப்பியிருக்கிறார். பிரதமர் ரனில் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.)
அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு தற்போது படையணியினரின் கட்டுப்பாட்டிற்குள் நாடு கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுமாறு படைத்தரப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுவோரைக் கைது செய்ய ரணில் கட்டளையிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் இனி ஒடுக்கப்படலாம். மூர்க்கமானத் தாக்குதல்களைப் படைத்தரப்பு மேற்கொள்ளும். முப்படைத்தளபதி அமைதியாக மக்களைக் களைந்துச் செல்ல வேண்டுகோள் வைக்கிறார். 58வது படையணியின் கட்டளைத்தளபதியான சல்வேந்திர திசில்வா புலிகளை ஒடுக்கியதில் பெயர் பெற்றவர். அதனால்தான் அவருக்கு அந்தப் பதவி. இப்போது சொந்த இனத்து மக்களை நசுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறார். ரணில், கோத்தபய இன்னும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்கும் ஆயுதம் சல்வேந்திரா. ஒடுக்குதல் என்று வந்துவிட்டால் சொந்த இனம் என்று ஒன்றிருப்பதில்லை. அதிகாரவர்க்கத்தினருக்கு. ஒடுக்குவோர்; ஒடுக்கப்படுவோர் இரு இனம்தான்; இருதரப்பினர் அவ்வளவுதான்.
நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப் பெற்று புதிய அதிபரைத் தெரிவு செய்வது, தற்போதையச் சிக்கல்களுக்குத் தீர்வுக்காண எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து படைத்தரப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ரணிலின் அவசரநிலை அறிவிப்பின் பின்னரும் அச்சமடையாத மக்கள் அவரது மாளிகை அலுவலகம் போன்றவற்றை தீக்கிரையாக்கியதுடன் அங்கேயே முற்றுகையிட்டுள்ளனர்.
கண்ணீர் புகைக் குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்படுகின்றனர். இதில் ஒருவர் பலியாக மேலும்83 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது நிலமையை மோசமடையச் செய்தாலும் பொதுமக்கள் கைபற்றியிருந்த அதிபர் மாளிகை மற்றும் அரசின் தொலைக்காட்சி நிலையமான ரூபவாஹினி போன்றவற்றை கைவிட்டு விலகிச் செல்வதாக அண்மைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஓர் மக்கள் எழுச்சியில் அதிகாரவர்க்கத்தின் நிறுவனங்களை இலங்கையில் மக்கள் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.
தமிழர்களுக்கு இப்படியானச் சனநாயகவெளி மறுக்கப்பட்டதை இத்துடன் சேர்த்து பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
தற்போது கோத்தபய நாட்டைவிட்டுத் தப்பினாலும் அதிபர் பதவியை விட்டு இன்னமும் விலகாததால் எழுச்சிக்கூட்டம் தனது போராட்டத்தைக் கைவிடவிரும்பவில்லை. அவர்கள் மீண்டும் தீவைப்பு, மாளிகை, அரசு அலுவலகங்கள் என்று தமதுப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரணிலின் வீட்டில் அவரது சேகரிப்பில் இருந்த மூன்று தலைமுறை புத்தகள் பத்தாயிரமளவில் போராட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டதாக கவலைத் தெரிவித்துள்ளார். அந்த புத்தகங்கள் மற்றும் அவரது வீடு சிறிலங்கா ராயல் கல்லூரிக்கு அவரால் வழங்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் எரியூட்டப்படுவது புதிதல்ல. ஏற்கனவே தமிழருக்கெதிரான கலவ ரங்களின்போது யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் நூலறைகள் சிங்கள இனவாதிகளால் இப்படித்தான் எரியூட்டப்பட்டன.ஒருலட்சம் புத்தகங்கள் வரை அன்றைக்கு தீயில் கருகின. பொது சொத்து அறிவுக்கருவூலம் என்று கற்பிக்கப்பட்டிராத தலைமுறை இனவெறி அப்படி செய்தது. இன்றைக்கு அவர்கள் வழி வந்தவர்கள் மீண்டும் அதை செய்திருக்கிறார்கள். நெருப்புக்கு இன வேறுபாடு இருப்பதில்லை. யார் கையில் இருக்கிறது என்பதே முக்கியமானது.
போராட்டத்தினிடையே தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளத் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டப் பல்வேறு அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ரணிலும் பதவி விலகவேண்டும் என்று ஏற்கனவே நிபந்தனை வைத்தனர்.
தற்போது போராட்டக்காரர்கள் அரசுக்கு மேலும் சில நிபந்தனைகளை முன் வைக்கின்றனர். இடைக்காலக் கூட்டரசு, இனங்களிடையே சமத்துவத்துக்கான அரசியல் முன்னெடுப்பு, இன முறுகலுக்கான நிரந்தரத் தீர்வு என்பன முக்கியமானதெனக்கொள்ளலாம்.
ஆனால் இனத்துவ முரண்களில் குளிர்காய்ந்தவர்கள் அவர்கள் பின் நின்றவர்கள் முடிந்தவரை நாட்டைக் கொள்ளையிட்டுத் தப்பிக் கொண்டுள்ளனர்.
கோத்தபயராஜபக்ச ஏற்கனவே அமெரிக்கக்குடியுரிமைப் பெற்றவர். அதிபர் தேர்தலின் போது தான் அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்துவிட்டதாகக் கூறிக் கொண்டார். ஆனால் அவர் தற்போதும் அமெரிக்கக் குடிமகனே. மாலத்தீவு வழியாக அவர் அமெரிக்கா செல்லக்கூடும் என்றே அரசியல் கூர்நோக்காளர் கருதுகின்றனர். மாலத்தீவில் கோத்தபயவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. முதலீடுகள் இருக்கின்றன எனவேஅந்நாட்டு அரசின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. எனவேதான் அவருடன் அவரது மனைவி பாதுகாவலர் உள்ளிட்டோரை அந்நாட்டரசு அனுமதித்துக் கொண்டுள்ளது.
சொந்த இனத்தால் போற்றப்பட்டதும், தூற்றப்பட்டதுமான வரலாறு நிறைய உண்டு பக்ச சகோதர்கள் அவற்றில் முதன்மையான இடத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடும்.
இனவழிப்பின் வழி பதவியைப் பிடித்தவர்கள் மீண்டும் இனவழியில் ஆதரவுத் திரட்ட இயலாதத் தோல்வியுடன் நாட்டை விட்டு ஓடித்தப்புகின்றனர். இனவழி அரசியலுக்கு இனி இடம் தரக்கூடாது என்ற அடிப்படையில் மத அரசியலை; அரசியல் நீக்கம் செய்வதுதான் இலங்கை அரசியல், பொருளாதார, சமூகச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
மனுஷின் இந்தக் கவிதை இங்குப் பொருத்தமுடையது.
வரலாற்றில் ஒவ்வொரு முறையும்
புரட்சிகள் நிகழும்போது
முன்வாசல் வழியாக
அரண்மனைக்குள் நுழையும்
மக்கள்
ஒன்றை மறந்து போகிறார்கள்
அரசர்கள் தப்பியோடாதபடி
பின்வாசலை
அடைக்கமறந்துவிடுகிறார்கள்
-மனுஷ்யபுத்திரன்.