மின்-மகிழுந்து (electric car or e-car)
எலெக்ட்ரிக் கார், பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்று சொன்ன உடன், அது இப்போதுதான் புதிதாக வருவதுபோன்ற உணர்வு பலருக்கும் வருவது இயல்புதான். காரணம், ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பம் அன்றாடம் வந்துகொண்டிருக்கும் அறிவியல்-தொழில்நுட்பப் புரட்சிக்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். .
ஆனால், 1884-ஆம் ஆண்டிலேயே லண்டனில் தாமஸ் பார்க்கர் (Thomas Parker) என்பவரால் மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யம் வகையிலான மின்கலங்களால் (re-chargeble batteries) செயல்படும் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுவிட்டது. எலெக்ட்ரிக் கார்களில், லித்தியம் பேட்டரிகள் (Lithium-ion battery) பயன்படுத்தப்படுகின்றன
,பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களைவிட,, எலெக்ட்ரிக் கார்களின் பல்வேறு நிறைகள் (advantages) காரணமாக, 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், அவை பிரபலமாகின. 20-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் மட்டும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 30,000-த்தைத் தொட்டது.
1897-ஆம் ஆண்டிலேயே, எலெக்ட்ரிக் கார்கள் வணிகப்பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இரைச்சல் குறைவாக இருந்ததும், கியர் மாற்றங்கள் தேவைப்படாமல் இருந்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைவிடவும் எலெக்ட்ரிக் கார்கள் விரும்பப்பட்டதற்கான கரணங்களாகச் சொல்லப்பட்டன..
அதே காலகட்டத்தில், ‘அக எரிப்பு இஞ்சின்களைக்’ கொண்ட (internal combustion engines) பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் இஞ்சின் வடிவமைப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. இன்றைய இரண்டுசக்கர வாகனங்கள் அனைத்தும், முன்பு காலால் உதைத்துக் கிளப்பும் (kick-starter) வகையில்தான் இருந்தன. . இப்போதுதான், பேட்டரியால் இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பது பல இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும்.
அதுபோலவேதான், ஆரம்பக்காலங்களில், நான்குசக்கர வாகனங்களும், மனித உழைப்பைக்கொண்டே ஆரம்ப இயக்கத்தைப் பெற்றன (started). காருக்கு முன்னால் நின்றுகொண்டு, ஒரு கம்பியை வைத்துச் சுழற்றி, மோட்டாரின் ஆரம்ப இயக்கத்தை (start) ஏற்படுத்தினார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களைப் பார்த்தாலே, இது புரியும். (எங்கள் தலைமுறையினர் நேரிலேயே அதனைக் கண்டதுண்டு)
இப்படிப்பட்ட சூழலில்தான் 20-ஆம் நூற்றாண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் ஆரம்ப இயக்கத்திற்கு, பேட்டரியில் செயல்படும் ‘தானியங்கி மோட்டார் (self starter motor) வடிவமைத்துப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, எலெக்ட்ரிக் கார்களை விடவும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களையே மக்கள் பெரிதும் விரும்பி வாங்கும் சூழல் ஏற்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு எரிபொருள் நிரப்பும் நேரம் குறைவாக இருந்ததும், அவற்றின் விலை, எலெட்ரிக் கார்களை ஒப்பிட, குறைவாக இருந்ததும். கூடுதல் காரணங்களாகும்.
சுற்றுச்சூழல் :
நாம் பூமியில் உயிர்த்திருப்பதற்கு, பூமியைச்சுற்றி, வளிமண்டலத்தில் அமைந்திருக்கும் பசுமைஇல்ல வாயுக்கள் (green-house gases) நிறைந்த வளையமே காரணம். இரவில், பூமி சுழி டிகிரிக்கும் (zero degree) கீழ் போய்விடாமல், இந்த வெப்பவளையமே பாதுகாக்கிறது.
என்றாலும், தொழிற்சாலைகள், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் இருந்து வெளிப்படும் அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு கூடுவதால், வளிமண்டலம் மாசுபடுவதோடு, புவி வெப்பமயமாவதும் நிகழ்கிறது.. பூமியின் சராசரி வெப்பநிலை கூடுவதால், பல இயற்கை சீர்கேடுகளுக்கும் அது காரணமாகின்றது. மாத்திரமல்ல, சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி, நம்மைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுவதற்கும் காரணமாகின்றது.
இப்படிச் சுற்றுச்சூழல் பிரச்சினைக்குக் காரணமாகும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைத் தவிர்க்கவேண்டுமானால், அதிக அளவில் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் உலக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவேதான், இடையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு மீண்டும் மவுசு கூடிக்கொண்டிருக்கிறது.
பல நாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றாக ஒழித்துவிடும் திட்டங்களுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நார்வே, 2025-இல், சைனா, மற்றும் ஜெர்மனி, 2030-இல், ஃப்ரான்ஸ், மற்றும் பிரிட்டன் 2040-இல் என்று இலக்கு வைத்திருக்கின்றன. இந்தியாவும் 2030-இல் முழுவதும் எலெட்ரிக் கார்களுக்கு மாறிவிடும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இயக்கம் மற்றும் செயல்திறன்:
காரை இயக்குவதற்குத் தேவையான வழிமுறைகள் (driving controls) பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப்போன்றே எலெக்ட்ரிக் கார்களிலும் உள்ளன.
எலெக்ட்ரிக் காரில், மோட்டாரை ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனியே இணைத்து, காரை முன் நகர்த்துவதற்கும் (propulsion), நகரும் காரை நிறுத்துவதற்கும் (brake) என்று இரண்டு செயல்களையும் ஒருசேரச் செய்யமுடியும்.
பேட்டரிகளின் எடை காரணமாக, எலெக்ட்ரிக் காரின் எடை கூடுகிறது. இதன் காரணமாக, காரின் புவியீர்ப்பு மையம் (centre of Gravity) தாழ்கிறது. இது, விபத்துகளின்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் காரின் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
என்றாலும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் போலவே, விபத்துகளின்போது தீப்பிடிக்கும் ஆபத்தும் இல்லாமல் இல்லை.
பேட்டரி மின்னேற்றம் செய்தல்:
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு, எரிபொருள் தீர்ந்த உடன் எரிபொருள் நிரப்புவதுபோல, எலெக்ட்ரிக் கார்களுக்கு, அவற்றின் பேட்டரிகளை மின்னேற்றம் (charging) செய்யவேண்டும். அதற்காக கார் வைத்திருப்பவர்களின் வீடுகளிலேயே, சிறிய அளவில் ஒரு ‘மின்னேற்ற நிலையம்’ (charging station) நிறுவும் வசதி உள்ளது. அங்கு இரவு நேரங்களில் பேட்டரிகளை மின்னேற்றம் செய்யலாம். 240 வோல்ட் மின்னழுத்ததில், எட்டுமணிநேர மின்னேற்றம் என்பது, கார் 288 கி.மீ. பயணம் செய்யப் போதுமானதாக இருக்கும்.
வணிகப்பயன்பட்டிற்காக நிறுவப்பட்டிருக்கும் அதிவிரைவு மின்னேற்ற நிலையங்களில், 45 முதல் 50 நிமிடங்களிலேயே 80% மின்னேற்றம் செய்ய இயலும். பாதுகாப்பு காரணமாக, கடைசி 20%, மின்னேற்றம், மொபைல் போன்களைப் போலவே மிக மெதுவாகவே நிகழும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டு, ஓடிக்கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள், 2,00,000 கி.மீ. பயணித்த பிறகும், அவற்றின் பேட்டரிகளில் குறையொன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியஒளியில் செயல்படும் கார்களும் (solar cars) அடிப்படையில் எலக்ட்ரிக் கார்களே. ஒரேஒரு வேறுபாடு, அவற்றில் உள்ள ஒளிமின்கலங்கள் (photo-voltaic cells) சூரியஒளியால் மின்னேற்றம் செய்யப்படுவதுதான்.
எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள்:
டிசம்பர் 2018 முடிவில், உலகமெங்கும், 180 வகையான (models) எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தன.
தி அலையன்ஸ் குளோபல் ஆல் எலெக்ட்ரிக் வெகிக்கிள்ஸ் (The Alliance global all electric vehicles ) 725,000 கார்கள் (2010 முடிய)
டெஸ்லா (Tesla) 530,000 கார்கள் (2018 முடிய)
நிசான் லீஃப் (Nissan Leaf) 400,000 கார்கள் (2019 முடிய)
எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் அளவைப் பொறுத்து, உலகின் பல்வேறு நாடுகள், புதிய எலெக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கு நிதி உதவியும், வரிவிலக்கும் அளித்துவருகின்றன.
இந்தியாவிலும், ஆடி, PMW, ஃபோர்டு, ஜாகர், மகிந்திரா, மாருதி சுசுகி நிசான் லீஃப், ரெனால்ட் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பேட்டரிக்கான லித்தியம் கையிருப்பு:
4 பில்லியன் (400 கோடி) எலெக்ட்ரிக் கார்களை அதாவது பேட்டரியில் இயங்கும் அனைத்துவிதமான வாகனங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான லித்தியம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும், பிற்காலத்தில், லித்தியம் தேவை அதிகரிக்கக்கூடும். அன்று லித்தியம் தாதுக்கள் நிறைந்திருக்கும் நாடுகளை நோக்கி மற்ற நாடுகள் செல்லும் நிலை ஏற்படக்கூடும்.
சிலி, பொலிவியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் பெரிய அளவிலும், அவற்றிற்கு அடுத்தபடியாக சைனா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல், பிரேசில், கனடா, சிம்பாவே, அமெரிக்கா போன்ற நாடுகளில் செறிவாகவும் லித்தியம் தாதுக்கள் உள்ளன.
லித்தியம் அதிக அளவில் இருக்கும் நாடுகளில் சில, அவர்களின் இயற்கை வளங்கள் பிறரால் சுரண்டப்படுவதை விரும்பாதவர்களாக உள்ளனர்.. வேறுசில நாடுகள் அரசியல் நிலைத்தன்மை இல்லாதனவாக இருக்கின்றன.,
பிற்காலத்தில் லித்தியம் தட்டுப்பாடு வருமானால்,. அப்போது, இன்று மத்திய கிழக்கில் எண்ணை வளங்களுக்காக, அங்குள்ள நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையை. வளர்ந்த நாடுகளும், வல்லரசுகளும் குலைத்துப் போட்டிருப்பது போன்றதொரு நிலையும் லித்திய வளத்தைக்கொண்ட நாடுகளுக்கு ஏற்படலாம். அதன்பொருட்டு தேவையற்ற போர்களும் நிகழக்கூடும் என்பதை எலெக்ட்ரிக் கார்களின் மறுபக்கமாகப் பார்க்கவேண்டியுள்ளது.