கண்டது மொழிதல்
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, சிலர் நேர்ப்பேச்சில் சொல்லுகிறார்கள், சிலர் கவிதை படைக்கிறார்கள், சிலர் கதையாகப் பதிவு செய்கிறார்கள். அருமை நண்பரும், பள்ளி ஆசிரியருமான கலைபாரதி என்னும் கலைச்செல்வன், கவிஞராகவும், கதைசொல்லியாகவும் இருந்தபோதிலும், கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ‘கண்டது மொழிதல்’ என்னும் இத்தொகுப்பில், 18 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் என்னைப் பாதித்த சில கட்டுரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த நூலை அறிமுகம் செய்யலாம் என்பது எனது விருப்பம்.
மன்னர்குடிக்கு, காந்தி வந்தபோது, அங்குள்ள தேசிய உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த மாணவர்கள் எவரும் சேர்க்கபடவில்லை என்பதை அறிந்து சினந்ததையும், அதே மன்னார்குடியில் பின்லே உயர்நிலைப்பள்ளியில் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்ந்து படித்ததை அறிந்து மகிழ்ந்ததையும், ‘காந்தி’ கட்டுரையில், அன்றைய நிலையைப் பதிவு செய்திருக்கிறார்.
“ஏன் மகனுக்குத் திலீபன் என்று பெயர் வைத்தீர்கள்? “என்னும் கேள்விக்கு, “புரட்சியாளர்களைத் தூக்கில்போட்டாலோ, சுட்டாலோ செத்துப்போவார்கள். செத்துப்போவது எளிது, செத்துக்கொண்டே இருப்பது அரிது. திலீபன் செத்துக்கொண்டே இருந்தவன்” என்னும் பதிலை பதிவுசெய்வதன் வழியே, தோழர் நெடுவாக்கோட்டை இராஜேந்திரனை அறிமுகப்படுத்துகிறார். தன்னை ஒரு கம்யூனிஸ்டாக நெறிப்படுத்தியவர் இராஜேந்திரனே என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார்.
‘முதுமையை வாட்டும் இளமை நினைவுகள்’ என்று, 2015 மே காக்கை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக்கட்டுரை, தொழுத்தலை விழுத்தண்டினார் பாடிய 243-வது புறநானூற்றுப் பாடலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஆற்றங்கரையில் உள்ள மருத மரத்தில் ஏறி, திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்து, அங்குக் குளித்துக்கொண்டிருக்கும் இளம் பெண்களின் கவனத்தை ஈர்த்த வாலிபப்பருவ நினைவுகளை நினைந்து, முதியவர் ஒருவர் கலங்கி கவலையுறுவதாக அமைந்தப் பாடல் அது.
“உயர்சினை மருதத்துறை உளந்தாழ்ந்து
நீர் நணிபடி கோடுஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்த மணற் கொண்ட கல்லா இளமை
அனிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இரும் இடை மிடைந்த சிலசொற்
பெருமூதான ரேம் ஆகிய எமக்கே. “ (புறம்–243, பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார் )
இது போலவே, ஆனால் இதற்கு நேர்மாறாக, ஒரு இளம்பெண் ஆற்றங்கரையில் உள்ள மருதமரக் கிளைகளில் ஏறி, அங்கிருந்து நீரில் பாயும் சாகசக் காட்சியை ஓரம்போகியாரின், ஐங்குறுநூறு பாடல் ஒன்றிலிருந்து நம் கண்ணுக்கு விருந்து படைக்கிறார் கலைபாரதி ‘மருதச்சி’ என்னும் கட்டுரையில்.
“விசும்புளித் தோகைச் சீர் போன்றிசினே…
பசும்பொன் அவிர் இழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணைப் பாய்வோள் தண்ணறும் அம்கதுப்பே “
“ஊர்ப்பொதுநிலைகளில் மரமேறிக் குதித்து விளையாடக் கட்டற்ற வாழ்வைப் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச்சமூகம். இதுவல்லவோ சமத்துவ சமுதாயம்” என்று கலைபாரதி குறிப்பிடுகிறார், எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலிலும், பெண்களின் அடிமைநிலையை முன்வைத்தே அவர் அப்படி கூறுகிறார் என்று நாம் புரிந்துகொள்ளமுடியும்.
நான் எனது கட்டுரையை எழுதும்போது, இந்தப் பாடலை அறிந்திருக்கவில்லை. தேடல் உள்ளோருக்கு, வாறிவாறி வழங்கும் வள்ளல்களாக சங்க இலக்கியப் பாடல்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகை இல்லை.
அனைத்துக் காலங்களிலும் யாரோ ஒருசிலரிடம் ‘மனிதம்’ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக ‘தொடரும் தோழமை’ கட்டுரை அமைந்துள்ளது.. பெருமழைக்காலம் ஒன்றில், பாமினிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. எதிர்பார்த்தது போலவே அதன் கரைகளில் உடைப்பெடுக்கின்றது. கோரையாற்று வெள்ளமும் சேர்ந்துகொண்டது. வெள்ளம், ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வானப் பகுதிகளில் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் நொச்சியூர், பாலவாய், செருபட்டாக்கரை, கும்மட்டித்திடல், புத்தகரம் ஆகிய ஊர்களைச் சூழ்ந்துவிட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்த மக்கள் இரவோடு இரவாக, வீடுகளைக் காலிசெய்துகொண்டு பக்கத்து ஊரான ஏ.கே.எஸ். நகர்ப் பள்ளிக்கூடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டனர். அந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவி செய்த நண்பர் மன்னார்குடி சா.தமிழ்ச்செல்வன் பற்றி நன்றியுடன் நினைவுகூர்கிறார். அடித்தட்டு ஏழை மக்கள் இயற்கைப் பேரிடர் காலங்களில் படும் துன்பங்களையும் சேர்த்தே பதிவு செய்கிறார்.
‘அட கடுதாசி எழுதுவோமா?’ என்னும் கட்டுரையில், மாதவி, கோவலனுக்கு எழுதிய மடல், பாரதி, கண்ணமாவுக்கு எழுதியது, பெரியார் நாகம்மைக்கு எழுதியது ஆகிய கடிதங்களோடு, அமைச்சரவையில் பதவிகேட்ட தனது ஆசிரியருக்கு ஔரங்கசீப், எழுதிய சுவாரசியமான கடிதம், ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் பற்றியும் பேசப்படுகின்றன. “உன் வயது குழந்தைகள் ஒரு துண்டு ரொட்டிக்காக முதுகு வளைக்கிறார்கள். அவர்கள் உனக்கும் சேர்த்தே உழைக்கிறார்கள் என்பதை அவனிடம் சொல்லுங்கள். அவன் அதைக் கேட்டுக் குற்ற உணர்வு கொள்ள நேரிடும். பரவாயில்லை. அந்த உணர்வு காலம் முழுவதும் அவனைவிட்டு நீங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம், குற்ற உணர்வே இல்லாமல் வளரும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம்.
தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி, தனது தோழிக்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறாள். பசித்த அரக்கனுக்கு, உணவளிக்கும் கதை.
அண்டா அண்டாவா சோறாம்
அண்டா அண்டாவா கறியாம்
அண்டா அண்டாவா இட்லியாம்
அண்டா அண்டாவா தோசையாம்
இப்படிக் கதை சொல்லிகொண்டிருப்பதை, ஆசிரியர் பரிதி அவதானித்துக் கொண்டிருக்கிறார். உணவூட்டும் கதை விளையாட்டு முடிந்த உடன், அந்த பிஞ்சுக் குழந்தையை அழைத்து, வீட்டில் என்ன சாப்பிட்டாய் என்று ஆசிரியர் கேட்கிறார். பழைய சோறு என்று குழந்தைப் பதிலளிக்கிறது. இட்லி, தோசையெல்லாம் என்றுமே கிடையாது என்று மற்றொரு கேள்விக்குப் பெருமூச்சுடன் பதிலளிக்கிறது. அந்த ஏக்கம்தான் அரக்கனுக்கு அண்டா அண்டாவாகா இட்லியும், தோசையும் கொடுக்கும் கதையாக விரிகிறது. அதன் பிறகு, அந்த ஆசிரியர் வீட்டில் என்றெல்லாம் இட்லியோ அன்று கூடுதலாக அவரது கேரியரில் நான்கைந்து இட்லி இருக்கும் என்று கலைபாரதி சொல்வதிலிருந்து அவரது பரிவைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஒன்பது ஆண்டுகளாகப் பள்ளியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பவராக பள்ளி ஆசிரியர் பரிதி, இருந்திருக்கிறார். பரிதி, கவிஞர், கதைசொல்லி, கட்டுரையாளர், பத்திரிகை நடத்துபவர், பெட்டிக்கடைகூட சிலவேளைகளில் நடத்தியிருப்பவர். ஆனாலும் தன்னை ஒரு ஆசிரியன் என்று சொல்வதில் பெருமகிழ்வு கொள்பவர்.
‘படைப்பதினாலே நான் இறைவன்’ என்றான் கண்ணதாசன். அந்த படைப்புத்திறன் உள்ளவர்கள் கதை சொல்லியாக மாறுகிறார்கள். கதைக்கான கற்பனை மட்டுமல்ல, அதை சொல்லும் விதத்திலும்தான், கதை மக்களிடம் போய்ச் சேர்கிறது. என்றாலும், ஒரு பிஞ்சுக் குழந்தையின் உணவுசார்ந்த ஏக்கம், ஒரு கதையாக உருமாறுகிறது என்பதை வாசிக்கும்போது, ‘பரந்து கெடுக உலகியற்றியான்” என்று வள்ளுவர் சொல்லியிருப்பது எத்தனை உண்மை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதே உலகில்தான், விருதுக்காக அனைத்தையும் அடமானம் வைக்கும் கதைசொல்லிகளும் இருக்கிறார்கள் !
குறித்த நேரம் போனாலும் பரவாயில்லை, தனது போற்றுதலுக்குரிய தலைவனின் முன்னிலையில்தான் தனது மகனின் திருமணத்தை நடத்துவேன் என்று அடம் பிடித்து, காலையில் நடைபெறவேண்டிய திருமணத்தை மாலையில் நடத்திய ஒரு முரட்டு தொண்டனின் பதிவும் உள்ளது.
அந்த முரட்டு தொண்டர், , நீண்ட காலம் ஊரட்சிமன்றத் தலைவராகவும் இருந்த, தீவிர கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பொன்னுச்சாமி என்றும் தவிர்க்க முடியாத கரணத்தால் காலதாமதமாக வந்த தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.ஜி. எம். (முருகையன்) என்றும் நமக்குத் தெரியவருகின்றன.
இலட்சுமணன் என்னும் பாசக்காரப் பழைய மாணவனைத் தற்செயலாகச் சந்திக்கிறார், கலைபாரதி. அப்போதும் அடையாளம் மறந்துபோன கலைபாரதிக்கு, அவன்தான் தன்னை அறிமுகப்படுத்துகிறான். அவன் சைக்கிளில் பாய் வியாபாரம் செய்கிறான். பேச்சு முடிவில், பாய் என்ன விலை என்று கேட்கிறார். ஜோடி 300 ரூபாய் என்று விலை சொல்கிறான். ‘ நான் உனக்கு ஆசிரியர். எனக்கும் அதே விலையா? 200 ரூபாய்க்குக் கொடு’ என்று இவர் கேடக, அவன் சொன்ன பதில் உழைக்கும் சமூகத்திற்கானது. “ஒங்களுக்கென்ன… நாற்காலியில் ஒக்காந்துக்கிட்டு சம்பளம் வாங்குறீங்க, நான் அப்படியா, கால்வலிக்க சைக்கிள் மிதிச்சுல்ல வித்துட்டு இருக்கேன்” என்கிறான். அதில் உறுதியாகவும் இருக்கிறான். ‘எதிர் பாராத அவனது முரட்டுத் தாக்குதலில் தடுமாறிப்போனேன். பின்னர் 300 ரூபாய்க்குப் பாய் வாங்கினேன்” என்று மிகவும் நேர்மையாகப் பதிவு செய்யும் கலைபாரதியையும் பாராட்டலாம்.
பாரதிராஜாவின் ஒரு நேர்காணலை சமீபத்தில் பார்த்தேன். ‘உங்களது சில படங்களில் உச்சகாட்சியை பாக்கியராஜ் மாற்றியதாகச் சொல்லப்படுகிறதே,” என்று கேட்கப்படுகிறது. உச்ச காட்சி, சோகக் காட்சியாக இருந்தால் அதை முற்றிலும் சோகமாகக் காட்டக்கூடாது; கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லவேண்டும். அதுபோன்ற படங்கள்தான் வெற்றிபெறும் என்னும் பாடத்தை நான் பாக்கியராஜிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்” என்று பாரதிராஜா பதிலளிக்கிறார், அப்படித்தான், கலைபாரதியும், மனதை ஆழமாகத் தொடும் நிகழ்வுகளையும், அங்கத சுவையுடன் போகிறப்போக்கில் சொல்லிச்செல்கிறார். நூல் எளிமையானதுபோலத் தோன்றினாலும், அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கனமானவை.
நூல் விபரம்:
கண்டது மொழிதல்
ஆசிரியர் : கலைபாரதி
நிகழ் பதிப்பகம், நீடாமங்கலம் -614 404
பேசி ;9786102329
பக்கம் 96
விலை 130-