தானியா மற்றும் சேகுவேரா : காதலும் மரணமும்
யமுனா ராஜேந்திரன்
சே குவேராவின் பொலிவிய கெரில்லா யுத்தத்தைச் சிதைப்பதிலும், அவரது மகத்தான ஆளுமையைச் சிதைப்பதிலும், அவரது படுகொலையிலும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஈடுபட்டது என்பது சே குவேராவின் வரலாற்றை அறிந்த அனைவரும் அறிந்தவொரு உண்மை. சே குவேரா பற்றி அமெரிக்க சார்பு ஊடகங்களில் இரண்டுவிதமான பொய்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது உண்டு. பிடல் காஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான், பிடலுக்குத் தெரியாமல் கியூபாவிலிலிருந்து ரகசியமாக வெளியேறி சே குவேரா பொலிவியாவில் கெரில்லா யுத்தத்தைத் துவக்கினார் என்பது ஒரு பொய். இந்தப் பொய்யை குவேராவின் வரலாற்றை எழுதிய காஸ்டநாடாவும் வாந்தியெடுக்கிறார். அர்ஜன்டீனாவில் ஜெர்மனியப் பெற்றொருக்குப் பிறந்த தானியா எனும் பெண் கெரில்லா போராளி சேகுவேராவின் ரகசியக் காதலியாக இருந்தார் என்பது பிறிதொரு பொய். பொலிவியாவில் சே குவேராவினது கெரில்லாக் குழுவின் ஒரே பெண் போராளியான தான்யா எனும் தமாரா பங்க் ஒரே சமயத்தில் கியூபாவின் உளவாளியாகவும், சோவியத் மற்றும் கிழக்கு ஜெர்மன் உளவாளியாகவும் இருந்து, சே குவேராவைக் காட்டிக் கொடுத்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என்றும் கேவலமான கதைகளை அவர்கள் பரப்பி வந்தார்கள். அதனோடு சேர்த்து குவேரா குழுவின் போராளிகளோடு பாலுறுவில் ஈடுபட்ட தான்யா தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட புற்றுநோயினால் மரணமுற்றார் எனும் அறுவறுப்பான கதைகளைக் கூட அவர்கள் கட்டவிழ்த்துவிட்டார்கள்.
கம்யூனிச நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமான முரண்பாடு உச்சத்திலிருந்த தொண்ணூறுகள் வரையிலான உலகில் நிலவிய அரசியல் காரணங்களால், இந்த அறுவறுப்பான குற்றச்சாட்டுக்களின் பின் பல்வேறு போராளிகளின் வாழ்வும், கியூப அரசுசார்ந்த உலக கெரில்லா யுத்த அரசியல் ரகசியங்களும் இருந்ததால், இந்த அவதூறுகளுக்கு எல்லாம் கியூப அரசினால் அவ்வப்போது பதில்கள் தருவது சாத்தியமில்லாமல் இருந்தது. இரண்டு நிகழ்வுகள் இந்த தடையை முடிவுக்குக் கொண்டுவந்தன. 1989 ஆம் ஆண்டு துவங்கிய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளின் வீழச்சி தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 1997 ஆம் ஆண்டு நியூயாரக் டைம்ஸ் பத்திரிக்கையாளர் லீ ஆன்டர்ஸன் எழுதிய சே குவேராவின் வாழக்கை வரலாறு, சே குவேராவின் பொலிவியா யுத்தம் குறித்த முழு உண்மைகளையும் உலகுக்கு முன்வைத்தது. தொடர்ந்து பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகளில் வட அமெரிக்க எதிர்ப்பு இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சே குவேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களில் அவரது சக கெரில்லாவான தானியாவின் உடலும் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரையிலும் ரகசியமெனப் பாதுகாக்கப்பட்ட சோவியத்,கிழக்கு ஜெர்மன், கியூபா ஆவணங்கள் வெளியுலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டன. சே குவேராவிற்கும் தானியாவுக்கும் இருந்த கெரில்லா யுத்தம் சார்ந்த அனைத்து அவதூறுகளும் இதனால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
சே குவேராவின் மீதும் தானியாவின் மீதுமான, அதனோடு பிடல் காஸ்ட்ரோவின் மீதுமான வரலாற்றுக் கறைகள் அனைத்தையும் துடைத்தழித்தபடி 2005 ஆம் ஆண்டு தானியாவின் வாழ்வும் மரணமும் குறித்த ஒரு நூல் (Tania : Undercover with Che Guevara in Bolivia : 2005) ஆஸ்திரேலியப் பதிப்பகமான ஓசன் பதிப்பகம் வழி வெளியானது. தானியாவின் காதலரும், கியூப உளவுத்துறை அதிகாரியும், ஆப்ரோ கரீபியரும், கியூப விடுதலைப் போராளியும் ஆன யுலிசஸ் எஸ்ட்ராடா இந்த நூலினை எழுதியிருக்கிறார். 356 பக்கங்கள் கொண்ட இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் 162 பக்கங்கள் தான்யாவின் பிறப்பு முதல், சே குவேராவுடனான அவரது அரசியல் தோழமை ஈராக, அவரது மரணம் வரையிலான வாழக்கை வரலாற்றை முன்வைக்கிறது. பின்பகுதியிலான 194 பக்கங்கள் கியூப, சோவியத், கிழக்கு ஐரோப்பிய உளவுத்துறை ஆவணங்களோடு, தனது இரண்டு ஆண்டு கெரில்லாப் பயிற்சி தொடர்பாக தான்யா கியூப உளவுத்துறைக்கு எழுதிய அறிக்கைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணங்கள் திட்டவட்டமாக முன்வைக்கும் உண்மைகள் இதுதான் : 1967 அக்டோபர் 9 ஆம் நாள் பொலிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட, பொலிவிய யுத்தத்திற்கான முன்தயாரிப்பை சே குவேரா 1963 ஆம் ஆண்டிலேயே துவங்கிவிடுகிறார். சே குவேரா பொலிவியாவைத் தேர்ந்து கொண்டதற்கான காரணம் என்ன? இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக புவியியல் ரீதியில் பொலிவியா இலத்தீனமெரிக்கக் கண்டத்தின் மையமான நாடாக இருந்தது. இங்கு உருவாக்கப்படும் கெரில்லா யுத்தம் என்பது முழு இலத்தீனமெரிக்கக் கண்டத்திலும் பரவுவதற்கான வாயப்புக்கள் அதிகம். இரண்டாவதாக சே பொலிவியாவில் தனது நடவடிக்கைகளைத் துவங்குவதற்குத் தேர்ந்து கொண்ட மலைப் பகுதி தனது சொந்த நாடான அர்ஜன்டீனாவுக்கு அருகில் இருந்தது. சே குவேரா இலத்தீனமெரிக்க கண்டம் தழுவிய புரட்சியைத் திட்டமிட்டவர். அதனால்தான் அவரது பொலிவிய கெரில்லாக் குழு என்பது அனைத்து இலத்தீனமெரிக்கப் போராளிகளையும் கொண்டதாக அமைந்தது. பொலிவியாவுக்குப் புறப்படும் முன்பாக சே குவேரா தனது கியூப அரசுப் பதவிகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை, கியூபக் குடியுரிமையையும் அவர் விட்டுச் செல்கிறார். தேசம் சார்ந்த எல்லைகளைக் கடந்த உலகப் புரட்சியாளர் என்பதை நடைமுறையில் காட்டியவராக அவர் இருந்தார். இதே காரணத்திற்காகத்தான் ஆப்ரிக்காவுக்குச் சென்று தான்சானியாவிலும் காங்கோவிலும் அவர் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தவகையில் சே குவேரா ஒரு உதாரணமான சர்வதேசீயப் புரட்சியாளனாகத் திகழ்ந்தார்.
இலத்தீனமெரிக்கக் கண்டம் தழுவிய புரட்சிக்கான தயாரிப்புக்காக அவர் தேர்ந்து கொண்ட ஆளுமைதான் தானியா. தானியாவுக்கு எந்தவிதமான பொறுப்புக் கொடுக்கப்படப் போகிறது என்பதனை அறிவிக்காமலேயே, 1963 ஆம் ஆண்டு அவருக்கான உளவுத்துறைப் பயிற்சிகளையும், மாறுவேடத்தில் அடையாளமற்று உலகின் வேறுவேறு நகர்களில் திரிந்து உளவறியும் மனஅமைவையும், தற்காப்புக் கலையையும், தகவல் பறிமாற்றப் பயிற்சியையும் பெறுவதற்கு அவரைத் தேர்வு செய்தார் சே குவேரா.
இரண்டு ஆண்டுப் பயிற்சியின் பின்பாக 1964 அக்டோபர் மாதம் தான்யா பொலிவியாவினுள் நுழைகிறார். பொலிவியாவின் ஆளும் வர்க்கத்துடன், அதனது ராணுவ சர்வாதிகாரி பாரியன்டாசுடன், ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் தானியா பொலிவியப் படைவலிமை, அரசின் அரசியல் நகர்வுகள், பொலிவிய அரசியலிலும் ராணுவத்திலும், அமெரிக்க உவுத்துறையான சிஐஏவின் ஆதிக்கம் போன்றன குறித்த தகவல்களை குவேராவுக்குத் தருகிறார். அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குவேரா ரமோன் எனும் பெயரில், மாறுவேடத்தில் பொலிவியாவுக்குள் நுழைகிறார்.
தான்யா சே குவேராவை முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சேகுவேரா ஒரு வர்த்தகக் கண்காட்சிக்காக கிழக்கு ஜெர்மனிக்கு விஜயம் செய்கிறபோது மொழிபெயர்ப்பாளராக அவரைச் சந்திக்கிறார். கியூபப் புரட்சியினால் ஆகர்ஷிக்கப்பட்டுக் கியூபாவில் தன்னார்வ உழைப்பிற்காக 1961 ஆம் ஆண்டு அவர் கியூபா வருகிறார். சே குவேராவுடன் சேர்ந்து கட்டிடம் கட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஜேர்மன், ஸ்பானிஷ், ரஸ்ய, இத்தாலி மொழியில் தேர்ச்சி கொண்ட, ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளின் மகளான, அர்ஜன்டினாவில் பிறந்த, இலட்சியப் பிடிப்பு கொண்ட இந்த இளம் பெண் தனது உலகப் புரட்சிக்கான விதைகளை பொலிவியாவில் ஊன்றுவாள் எனும் நம்பிக்கையைப் பெறுகிறார். சே குவேரா இலத்தீனமெரிக்கப் புரட்சிக்காக ஆபரேஷன் பென்டாஷ்மா (Operaion Fantasma) எனும் திட்டம் வகுக்கப்படுகிறது. ஓன்று, இரண்டு, மூன்று வியட்நாம்களை உலகில் விதைக்கும் திட்டத்தின் பகுதியாக இலத்தீனமெரிக்காவில் அதனைத் துவங்க நினைக்கிறார் சே குவேரா. சேகுவேராவின் திட்டத்தினை நிறைவேற்ற அவரது கட்டளையை ஏற்று பொலிவியா சென்ற தானியா சே குவேராவிற்கு முன்பாகவே பொலிவிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்.
தான்யாவின் மரணத்தைப் பொலிவிய வானொலி அறிவிக்கிறபோது சே குவேரா முதலில் அதனை நம்ப மறுக்கிறார். சே குவேராவுக்கு முன்பாகக் கியூபாவை விட்டு பொலிவியா சென்ற, குவேராவுக்கு முன்பாகவே மரணத்தைத் தழுவிய தான்யாவிவின் உடல் – குவேரா இறந்து முப்பது ஆண்டுகளின் பின் கியூபாவுக்கு கொண்ட செல்லப்பட்ட ஓராண்டு கழித்து – தான்யா கொல்லப்பட்டு 31 ஆண்டுகளின் பின் – அவரது உடல் 1998 அக்டோபர் 13 ஆம் திகதி பொலிவியாவின் வெலிகிரண்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிவிய கெரில்லா யுத்தத்தில் தானியா கொல்லப்பட்ட போது அவருக்கு 29 வயதே ஆகியிருந்தது.
தானியா எனும் தமாரா பங்க் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி இலத்தீனமெரிக்க நாடான அர்ஜன்டின தலைநகர் புவனஸ் அயர்சில் பிறந்தார். எரிக் பங்க் அவரது தகப்பனார். நாடியா பிதர் அவரது தாயார். ஜெர்மனியைச் சேர்ந்த இவர்கள் நாசிகளின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டைக்குத் தப்பி 1933 ஆம் ஆண்டு அர்ஜன்டினா வந்தவர்கள். அர்ஜன்டினா வந்தவுடன் அவர்கள் தலைமறைவு அர்ஜன்டினக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டனர். தானியாவின் இளமை நாட்கள் என்பது கம்யூனிச இடதுசாரி அரசியல் பின்னணியில்தான் அமைந்தது. இட்லர் வீழ்ச்சியடைந்தததைத் தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மன் திரும்பிய அவர்கள் கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார்கள். கிழக்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்ற தான்யா உலக இளைஞர் மாநாடுகளுக்காக வியன்னா, பிராக் போன்ற நகரங்களையடுத்து, 1959 ஆம் ஆண்டு கியூபப் புரட்சி வாகை சூடியதனையடுத்து கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கும் விஜயம் செய்தார். ஜெர்மன், ரஸ்ய, ஸ்பானிய மொழிகள் அறிந்தவரான தானியா கியூபாவுக்கு விஜயம் செய்த உலக இளைஞர் அமைப்பின் தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
1960 ஆண் ஆண்டு கிழக்கு ஜெர்மனிக்கு விஜயம் செய்த சே குவேராவுக்கு தானியா ஸ்பானிய மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். கியூபப் புரட்சியால் ஆகர்ஷிக்கப்பட்ட தானியா கியூபாவின் சோசலிசக் கட்டுமானத்தில் பங்கு பற்றுவதற்கென 1961 ஆம் ஆண்டு கியூபாவுக்குக் குடியேறினார். ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு அர்ஜன்டினாவில் பிறந்த தான்யா சர்வதேசியப் புரட்சியாளராகிய பயணம் இவ்வாறுதான் துவங்கியது. நாட்டுப்பாடல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆய்வு விருப்பம் கொண்ட தானியா கியூப கிராமப்புறங்களில் பள்ளிக்கூடக் கட்டுமானங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் உடலுழைப்பு நல்குபவராக, தன்னார்வத் தொண்டராக ஈடுபடலானார். கியூபக் கல்வித் திணைக்களத்திலும், கியூபப் பெண்கள் அமைப்பிலும் பணியாற்றத் துவங்கினார். இதனது போக்கில் கியூப ஆயுதப் படையிலும் பயற்சி பெற்றுக் கொண்டார். கல்வி கற்பிப்பதிலும், மொழிபெயர்ப்பிலும், கிதார் வாசிப்பதிலும், தன்னார்வ உழைப்பிலும், நாட்டுப்புறவியலும் அவர் காட்டிய ஆர்வம் என்பது குறுகிய நாட்களிலேயே அவரைக் கியூபப் புரட்சியாளர்களின் நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கியது. அப்போது அவருக்கு 23 ஆண்டுகள் நிறைவெய்தி இருந்தன.
தானியாவின் அறிவாற்றாலும் புரட்சிகரக் கடப்பாடும் அவரது அர்ப்பணிப்பும் அவரை அறியாமலேயே அவருக்கு ஒரு புதிய கடமையைத் தரக் காத்திருந்தது. முழு இலத்தீனமெரிக்கக் கண்டம் தழுவிய புரட்சி பற்றிய ஆபரேஷன் பென்டாஸ்மா எனும் நடவடிக்கைக்கானத் திட்டத்தினை துவங்கியிருந்த சே குவேரா அந்தத் திட்டத்தின் அச்சாணியாவும் முதன்மைப் புரட்சியாளராகவும் ஒருவரைத் தேர்வு செய்ய விரும்பினார். அந்த ஒருவர் மிகச் சிறந்த திறன்கள் கொண்ட உளவுத்துறை சார்ந்தவராகப் பயற்றுவிக்கப்பட வேண்டும் என்பது சே குவேராவின் திட்டம். பிற இரு பெண்களோடு தானியாவையும் அதற்காகப் பரிந்துரைத்த சே குவேரா அவர்கள் மூவருக்கும் உளவுப் பயிற்சியளிக்குமாறும், ரேடியோ டிரான்ஸ்மிசன், குறிச்சொற்களை உருவாக்குவதும் பாவித்தலும், போன்றவற்றினோடு ஆயுதப் பயிற்சியளிக்குமாறும் கியூபாவின் ஆப்ரிக்க-இலத்தீனமெரிக்கப் புரட்சிகளின் பொறுப்பாளர்களுக்குப் பணித்தார். அவ்வாறு பணிக்கப்பட்டவர்களில் தானியாவின் பயிற்சிக்குப் பொறுப்பானவர்களில் ஒருவரான யுலிசஸ் எஸ்ட்ராடா எனும் ஆப்ரோ-கரீபியர்தான் பின்னாளில் தான்யாவின் தோழராகவும் காதலராகவும் ஆகினார்.
தானியாவுக்குப் பயிற்சியளிக்க நேர்ந்த அந்தக்காலத்தில் எஸ்ட்ராடா தனது மனைவியிடமிருந்து விவகாரத்துப் பெற்றுத் தனித்து வாழ்ந்து வந்தார். அவருடைய இரண்டு பெண் குழந்தைகள் மீது தானியா தணியாத அன்பு கொண்டிருந்தார் என்பதனை, தானியாவின் மரணத்தின் பின்பு எழுதப்பட்ட தான்யா குறித்த வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார் எஸ்ட்ராடா. தனக்குக் கொடுக்கப்பட்ட பொலிவியப் புரட்சிக் கடமைகள் முடிந்த பின்னால் கியூபா திரும்பி, எஸ்ட்ராடாவை மணந்துகொண்டு பற்பல முலாட்டாக்களை – வெள்ளைக் கறுப்பினக் கலப்புக் குழந்தைகளை – பெற்றுக் கொள்ளத் தனக்கு ஆசை என்பதாகத் தனது அன்னைக்கு தானியாவினால் எழுதப்பட்ட கடிதம் தானியாவின் மரணத்தின் பின் அவளது தாயின் மூலமே தனக்குத் தெரியவந்தது என்பதனையும் எழுதுகிறார் எஸ்ட்ராடோ.
1963 ஆம் ஆண்டு கியூபாவில் பயிற்சி முடிந்தபின், ஒரு ஐரோப்பியப் பெண் எனும் தோற்றத்தில் பொலிவியாவிற்குப் போகும் முன்பாக செக்கோஸ்லாவாக்கியத் தலைநகர் பிராக்கிற்குச் சென்று தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் தானியா, முதலில் மார்த்தா இரியாரட் எனும் அர்ஜன்டீனப் பெண்ணாக வேஷம் தரித்துக் கொண்டார். பிற்பாடாக ஒரு இத்தாலியப் பெண்ணாக பொலிவியாவில் நுழைவதற்காக விட்டோரியா பன்சினி எனும் பெயருள்ள பெண்ணாக வேஷம் தரித்துக் கொண்டார். பொலிவியாவில் தான் இருந்தாக வேண்டிய அடையாளத்துக்கு ஒப்ப, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, அப்பிரதேச மக்களுடனான அனுபவத்துடன், அர்ஜன்டீன நாட்டுப்பாடல் ஆய்வாளராக, இலத்தீனமெரிக்க நாட்டுப் பாடல்களை ஆய்வு செய்பவராகத் தானியா பொலிவியாவுக்குள் நுழைய வேண்டும் என்பதும், பொலிவியாவின் ராணுவ அரசியல் மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாட்டின் படைபலம், அரசியல் தந்திரங்கள் குறித்து சே குவேராவுக்கு தானியா அறிவிக்க வேண்டும் என்பதும்தான் திட்டம்.
தானியாவின் பல்வேறு மாறுவேடங்களுக்கான போலிக் கடவுச்சீட்டுக்களை செக்கோஸ்லாவிய உளவுத்துறையினர் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பதனையும் சே குவேரா முன்பாகவே பேசி வைத்திருந்தார். இத்தாலிய மொழியில் போதுமான துறைபோகிய ஞானம் தானியாவுக்கு வரவேண்டுமானால் மேலதிகமாக இன்னும் ஒரு வருடம் தானியா இத்தாலிய மொழி படிக்க வேண்டும் எனும் நிலையில் இத்தாலிய நாட்டிலிருந்து பொலிவியா செல்பவர் எனும் திட்டம் சாத்தியமில்லாமல் போனது. அர்ஜன்டீன பிரஜையாகவே பொலிவியாவுக்குள் நுழைவது எனத் தீர்மானமாகியது. லாரா குட்டியரஸ் பாவர் எனும் பெண்ணின் அடையாளத்துடன் அர்ஜன்டீனக் கடவுச்சீட்டும் கிடைத்தது.
1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பெரு நாட்டை வந்தடைந்த தானியா நாட்டுப்பாடல் ஆய்வாளர் எனும் அடையாளத்தில் பெருவிய எல்லை கடந்து, நவம்பர் 17 ஆம் திகதி பொலிவியாவுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் தான் தங்கியிருப்பதற்காக ஒரு மின்பொறியியல் மாணவரோடு போலித்திருமண ஏற்பாடும் செய்து கொண்டார். அதன் வழி பொலிவியக் குடியுரிமை எடுக்க முயன்றார். பொலிவியக் குடியுரிமை எடுக்க வேண்டுமெனில் கடவுச்சீட்டிலுள்ள கைரேகையை ஒத்ததாக தானியாவின் கைரேகையும் இருக்க வேண்டும். லாரா குடியரஸ் பாவர் எனும் பெண்ணின் கடவுச்சீட்டில் வந்ததால் கடவுச் சீட்டு தொலைந்துவிட்டது என அறிவித்த தானியா, தான் நாட்டுப்புறப்பாடல் ஆய்வாளர் எனும் அடிப்படையில், அரசிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று பொலிவியா முழுக்கப் பயணம் செய்தார். பிற்பாடு தனது கைரேகையுடனான அர்ஜன்டினா கடவுச்சீட்டை கியூபத் தோழர்கள் மூலம் தானியா பெற்றார். பொலிவியக் குடியுரிமை பெற்றவுடன் அவர் தனது போலித்திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, விவாகரத்துப் பெற்ற தானியா, அவரது ஏற்பாட்டுக் கணவரை தனது தொடர்புகளைப் பயளன்படுத்தி பல்கேரியாவுக்கு மேற்படிப்புக்குச் செல்லவும் உதவி செய்தார்.
இலத்தீனமெரிக்க நாடான பெருவை வந்து அடைவதற்கு முன்னால் எஸ்டராடாவின் சக தோழர் ஒருவருக்கும் தானியாவுக்கும் நடந்த உரையாடல் ஒன்றினை எஸ்ட்ராடா தனது நூலில் பதிவு செய்கிறார். தானியா கியூபாவை விட்டு பிராக் புறப்படும் முன்பாகத் தமக்கிடையிலான காதலுறவினால் தானியாவின் மாதவிடாய்க் காலம் தப்பிவிட்டதால், அவரது உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி தானியாவிடம் அறிவுறுத்துமாறு, தனது சக தோழரிடம் எஸ்ட்ராடா கேட்டுக் கொள்கிறார். தானியாவின் திட்டத்திற்கு அது தடையாகிவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. தானியாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களையும் வரைமுறைகளயும் மீறி தன்னுடன் இந்த உடலுறவு ஏற்பட்டிருந்ததை குற்றவுணர்வுடன் எஸ்ட்ராடா நினைவு கூர்கிறார். தனக்கு ஜூரம் கண்டிருந்த காரணத்தினால்தான் சரியான காலத்தில் மாதவிடாய் ஆகவில்லை என்றும், தான் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இப்போது சரியாகிவிட்டது என உனது நீக்ரோ நண்பனிடம் சொல், இப்போது என் கருவில் எந்தவித முலாட்டாவும் இல்லை, பிற்பாடு அதற்குத் தயாராக இருக்குமாறு உனது தோழனிடம் சொல் எனத் தானியா எஸ்டராடாவின் தோழனிடம் சொல்லியதையும் எல்ஸ்ட்ராடா தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்தக் குழந்தை உருவாகி இருந்தாலும் தனது புரட்சிகரக் கடப்பாட்டுக்கு அது தடையாக இருக்க விடமாட்டேன் என்பதனையும் தானியா வலியறுத்தியிருக்கிறார் என்கிறார் எஸ்ட்ராடா.
பொலிவியாவுக்குள் நுழைந்த தானியா பொலிவியக் கல்வித்துறை, அரசியல், ராணுவ மட்டத்தில் தனது மொழித்திறனாலும் ஆய்வத்திறனாலும் பல தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறார். பொலிவிய அரசுத்தலைவர் பாரியன்டோசுடனும் அவர் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார். சமகாலத்தில் செராமிக் ஓவியங்களிலும் நாட்டுப்பாடல் தொகுப்பிலும் அவர் ஈடுபாடு காட்டுகிறார். பொலிவிய அரசிலும் படையிலும் அமெரிக்க அரசினதும் உளவுத்துறையான சிஐஏவினதும் தீர்மானகரமான பாத்திரம் இருப்பதனையும், அதனது நிர்வாக அடுக்குகளையும் தானியா உளவறிந்து உறுதிப்படுத்திக் கொள்கிறார். தானியாவின் செயல்களைப் பாராட்டி கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அவர் சேரத்துக் கொள்ளப்படுகிறார். தானியாவின் சிறப்புத்தகுதி கருதி தானியாவின் உறுப்பினர் அட்டையில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி பிடல் காஸ்ட்ரோ தன் கைப்படக் கையொப்பமிடுகிறார். தானியாவிடம் இது தெரிவிக்கப்படும் போது, தன் மீது கியூபப் புரட்சியாளர்கள் கொண்ட நம்பிக்கைக்காகவும் நன்மதிப்புக்காகவும் தனது பேருவகையைத் அதிகாரபூர்வமான தனது உளவு அறிக்கையில் பதிவு செய்கிறார் தானியா.
கியூபாவின் புரட்சியாளர்கள் இலத்தின் அமெரிக்கக் கண்டம் எங்கும் பரவுகிறார்கள். மெக்சிக்கோ பிரேசில் அர்ஜன்டினா என தானியா பயணம் செய்கிறார். சே குவேரா திட்டமிட்டபடி ராமோன் பெனிட்டர் பெர்னான்டஸ் எனும் பெயரில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மாஸ்க்கோவிலும் சில காலம் இருந்து 1966 ஆம் ஆண்டு ஜூலை 19 அல்லது 21 ஆம் திகதிக்குள் கியூபா வந்து சேர்கிறவராக வேடமிடுகிறார். பிடலையும் தனது மனைவியையும் மாறுவேடத்தில் சந்தித்துவிட்டு, தனது குழந்தைகளிடம் கூடத் தனது அடையாளத்தை மறைத்துவிட்டு, கியூபாவிலிருந்து சே மறைகிறார். 1966 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி அடால்போ மெனாஸ் கொன்சலாஸ் எனும் பெயரில் உருகுவே கடவுச்சீட்டுடன் பொலிவியத் தலைநகர் லா பாஸை வந்து அடைகிறார் சே குவேரா. நவம்பர் 7 ஆம் திகதி நகாகுவாசு மலைப் பிரதேசத்தை வந்து அடைகிறார். பொலிவியன் டைரியின் முதல் பதிவு அன்றுதான் சே குவேராவினால் எழுதப்படுகிறது. சே குவேரா பொலிவிய ராணுத்தினால் கைது செய்யப்படும் அக்டோபர் 8 க்கு முதல் நாள், அக்டோபர் 7 வரையிலும் சே குவேரா பொலிவியன் டைரியை எழுதி வருகிறார். அவர் அக்டோபர் 9 கொல்லப்படுகிறார். 1966 நவம்பர் 7 முதல் தானியாவின் வாழ்வு சே குவேராவின் பொலிவியப் புரட்சி நடவடிக்கைகளளோடு பிணைக்கப்படது போலவே அவரது மரணமும் சேவின் மரணத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது.
இலத்தீனமெரிக்க வரலாற்றாசிரியர்களான அடிஸ் கபுல் மற்றும் புரோலியன் கொன்சலசின் ஆய்வுகளின்படி, 1966 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி பொலிவியாவில் நுழைந்த சே குவேரா அடுத்த நாள் நவம்பர் 4 ஆம் திகதி தானியாவைச் சந்திக்கிறார். பொலிவிய செய்தி இயக்குனரான கொன்சலஸ் லோபஸ் முனசிடம் தான் பொலிவியா எங்கிலும் சென்று வருமாறான ஒரு கடிதம் பெற ஏற்பாடு செய்யுமாறு தானியாவை சே குவேரா கோருகிறார். புனித அடோல்ப் மனா எனும் மறைபெயர் கொண்ட சேகுவேரா பொலிவிய நாட்டுப்புறப் பொருளாதார வளரச்சி குறித்த ஆய்வாளர் என்பதால் அவர் பொலிவியா எங்கும் போய்வர அனுமதிக்குமாறு அந்தக் கடிதம் அமைகிறது. என்றாலும் இத்தகைய கடிதத்தில் தான் கையொப்பம் இட்டதாகத் தனக்கு ஞாபகமில்லை எனத் தெரிவிக்கிறார் முனஸ். இந்தக் கடிதத்துடன் காலனியம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான நிறுவனத்தின் இன்னொரு கடிதத்தினையும் தானியா குவேராவுக்குப் பெற்றுத் தருகிறார் தானியா. குடிமைச் சமூக மற்றும் ராணுவ அதிகாரிகளை புனித அடோல்ப் மெனாவின் ஆய்வுகளுக்கு வேண்டிய அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தந்து உதவுமாறு அந்தக் கடிதம் கோருகிறது. இந்தக் கடிதங்களுடன் நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு நவம்பர் 7 ஆம் திகதி நகாகுவாசு பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள் சே குவேராவும் அவரது தோழர்களும். அந்தப் பண்ணைவீடு ஏற்கனவே திட்மிட்டபடி கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது. அங்குதான் பொலிவிய தேசிய ராணுவம், இஎல்என் எனப் பின்னாளில் அழைக்கப்பெறும் பொலிவிய புரட்சிகர ராணுவ நடவடிக்கைகளும் பயிற்சியும் துவக்கம் பெறுகிறது. கியூபாவிலிருந்து இந்தப் படையில் சேரவரும் தோழர்களை டிசம்பர் 19 அல்லது 20 ஆம் திகதிகளில் அழைத்துவரும் பொறுப்பு தானியாவுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் திகதி தானியா பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் மரியா மான்ஜோ அதனுடன் பெப்பி மற்றும் அந்தோனியோ ஜிமனஸ் டார்டியோ போன்ற தோழர்களை அழைத்துக்கொண்டு முகாமுக்கு வருகிறார தானியா. பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரது வருகை முகாமில் பதட்டத்தை உருவாக்குகிறது. ஆயுதப் போராட்டத்துக்குச் சூழல் கனியவில்லை எனும் அவர், அந்நியர்களால் நடத்தப்படும் இப்புரட்சிக்குப் பொலிவியர்கள் அங்கீகாரம் தரமாட்டார்கள் என்கிறார். விரும்பியவர்கள் இதில் பங்கெடுக்கலாம், ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்குத் தரும் மாதாந்த நிதி உதவிகளை நிறுத்திவிடும் என்கிறார்.
அடுத்த நாள் 1967 ஆம் ஆண்டு புத்தாண்டு. தானியாவை மிகுந்த உற்சாகத்தடன் சே குவேரா, துமா, இன்டி, அர்பானோ அரத்துரோ போன்ற கெரில்லா தோழர்கள் வரவேற்கிறார்கள் என்று எழுதும் பம்போ, தானியா கியூபப் பாடல்களின், பொலிவிய நாட்டுப்பாடல்களின் ஒலிப்பதிவுகளைத் தன்னுடன் கொண்டுவந்தார் எனவும், தோழர்களுக்குக் கைக்குட்டைகள், இனிப்புகள், டார்ச்லைட்டுகள், சிறிய விளக்குகள் போன்ற அன்பளிப்புகளையும் கொண்டுவந்தார் எனவும் எழுதுகிறார். அனைவரும் குடித்துப் பாடிக் களித்தோம், புத்தாண்டின் ஜீவனாக தானியா இருந்தார் என்றும் எழுதுகிறார் பம்போ. பொலிவிய கம்யூனிஸ்ட் தலைவரின் துரோகத்தினால் துயருற்ற செ குவேரா, பொலிவிய மாவோயிஸ்ட்டுகள் உள்பட பல்வேறு இயக்கத்தவர்களும் உள்ளிட்டதாக கெரில்லா அமைப்பை அகலிக்கிறார். அன்று முகாமல் தங்கும் தானியா கியூபாவின் தலைமையிடம் தொடர்பு கொள்வதற்காக சில சங்கேத வார்த்தைகளை உருவாக்கி பெப்பி மற்றும் பம்போவிடம் பகிர்ந்துகொள்கிறார். அன்று தான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றைக் கழுவி இறுதி செய்கிறார். சே குவேரா அன்றைய தினம் தானியாவுடனான சந்திப்பினைத் தனது பொலிவியன் டைரியில் குறிக்கிறார். தானியா அங்கிருந்து அர்ஜன்டினா சென்று அர்ஜன்டின கம்யூனிஸ்ட் தலைவர் எட்வர்டோ ஜொசாமியைச் சே குவேரா சந்திப்பதற்கான ஏற்பாடு செயவதற்காகப் பணிக்கிறார். ஜனவரி 2 முதல் மார்ச் 19 வரையிலான பல்வேறு நகர்ப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தானியாவின் முழுமையான நடவடிக்கைகள் குறித்த செய்திகளைத் தன்னால் திரட்ட முடியவில்லை என எழுதுகிறார் தானியாவின் காதலரும் தோழருமான யுலிசஸ் எஸ்ட்ராடா.
1967 ஜனவரி 21 ஆம் திகதிய சே குவேராவின் பொலிவியன் டைரிச் செய்திகளின்படி தானியா அர்ஜன்டின கம்யூனிஸ்ட் நடவடிக்கையாளர்களைச் சந்திப்பதற்காக கிளம்பிச் செல்கிறார். வெற்றிகரமாக அந்தத் தொடர்பையும் உருவாக்கிக் கொடுக்கிறார். ஜனவரி-மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் சதித்திட்டங்கள் தீட்டுவது சம்பந்தமான பயிற்சிகளைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கிறார் தானியா. மார்ச் 19 ஆம் திகதி மீளவும் தானியாவைச் சந்தித்தது குறித்து சே குவேரா தனது பொலிவியன் டைரியில் பதிவு செய்கிறார். கெரில்லா நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட பயணங்களை முடித்துவிட்டு அன்று தனது முகாமுக்குத் திரும்பும்போது அங்கு தானியா இருப்பதைப் பார்த்துத் தான் ஆச்சர்யமுற்றதாகச் சே குவேரா எழுதுகிறார். பெருவியத் தோழர் ஒருவரையும் ஒரு மருத்துவரையும் அன்று தானியா முகாமிக்கு அழைத்துவருகிறார். சில நாட்கள் கழித்து பிற இருவரையும் அவர் முகாமுக்குக் கூட்டிவருகிறார். அவர்கள் பிரெஞ்சு அறிவுஜீவியான ரெஜிஸ் டெப்ரே மற்றும் சிரோ ரோபர்ட்டோ புஸ்டோஸ் எனும் பத்திரிக்கையாளர். இவர்கள் இருவரும் பிற்பாடு அன்று புரட்சியில் தாம் ஈடுபாடு கொண்டது குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்கள் என்பதையும் சேர்த்து எழுதுகிறார் எஸ்ட்ராடா.
தானியா திரும்பத் திரும்பத் தோழர்களை கெரில்லா முகாமுக்கு அழைத்து வருவதற்காகப் பொலிவியத் தலைநகரிலிருநது பயணம் செய்து முகாமுக்கு வந்து போவதில் சே குவேரா சந்தோஷம் கொண்டிருக்கவில்லை. தானியா நேரடியிலாக கெரில்லாக்களை அழைத்துவருவது என்பது ஆபத்து எனவும், அவர் பொலிவிய அதிகாரவர்க்கத்தவரின் இடையில் இருந்து கொண்டு கெரில்லாக்களுக்கு உதவும் வேலைகளையும், காயம்பட்ட தோழர்களை நகரத்தில் வைத்துக் காப்பாற்றுவது மற்றும் செய்திகளைக் கொண்டுதருவது எனும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது எனும் அளவில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார். நம்பகத்தன்மையுள்ள ஒருவர் பொலிவிய அதிகாரமட்டத்தில் உறவுகளைப் பேணியபடி இருக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த அவர், தானியா நேரடியிலாக இவ்வாறு அடிக்கடி கெரில்லா முகாமுக்கு வந்துபோவது ஆபத்தானது என்பதால், அவர் அடையாளம் காணப்படலாம் என்பதால் அதனைத் தான் விரும்பவில்லை என்பதனையும் தானியாவிடம் தெரிவித்தார். மார்ச் 21 ஆம் திகதி கூட்டத்திற்குப் பிறகு தானியாவை வாழ்த்தி விடைபெற்ற சே குவேரா, அன்று முகாமில் நிலவிய நிலைமையினால் கவலை கொண்டவராக இருந்தார். மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இருவர் முகாமை விட்டோடி பொலிவிய ராணுவத்தினிடம் சரணடைந்து தகவல்களைத் தந்ததால் கைது செய்யப்பட்ட தம் தோழர் ஒருவர் குறித்துக் கலக்கம் கொண்டவராக அவர் இருந்தார். அதனோடு ராணுவம் அப்பிரதேசத்தில் மையம் கொண்டிருந்தததையும் உணர்ந்திருந்த அவர் உடனடியாகவே டெப்ரே, புஸ்டாஸ், தானியா போன்றவர்கள் அங்கிருந்து பத்திரமாகச் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கருதினார்.
தானியாவை அடிக்கடி முகாமுக்கு வரவேண்டாம் என சே குவேரா அறிவுறுத்திய பின்னும் தான் அதனை மீறவேண்டியிருந்த நிலைமை குறித்து தனியா சே குவேராவுக்கு விளக்கினார். தான் அந்தத் தோழர்களை முகாமுக்கு இட்டுவரவில்லையானால் அந்தத் தோழர்கள் முகாமுக்கு வந்துசேர நீண்ட நாள் காத்திருக்கு வேண்டியிருந்திருக்கும் என்பதனாலும், இந்தப் பொறுப்பான காரியத்தில் பயிற்றுவிக்கப்படவர்கள் அதிகம் இல்லாததினாலுமே தான் இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது எனவும் தானியா சொன்னார். தனது பாதுகாப்பை விடவும் கெரில்லாக்களின் தேவைகளையும், கெரில்லா நடவடிக்கையில் அவர்களது அவசியத்தையும் முன்னிறுத்தித் தான் செயல்பட நேர்ந்ததாலேயே சே குவேராவால் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளையும் மீறி இவ்வாறு நடக்க வேண்டியிருந்ததாக அவர் விளக்கினார்.
தானியாவின் இந்த நடவடிக்கைகள் குறித்த எத்தகையை மதிப்பீடுகளை எவர் மேற்கொண்டாலும், இந்தக் கெரில்லாத் தோழர்களுக்கும் சே குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு என்பது கெரில்லா யுத்த நடவடிக்கைகளின் விரைவுக்கு அவசியம் என அவர் விரும்பியதாலேயே இதனைச் செய்தார் என்பதனை மறுக்க முடியாது என எழுதுகிறார் எஸ்ட்ராடா. அதனோடு அவ்வாறு செய்வதன் மூலம் கெரில்லாப் போராட்டத்தில் தான் நேரடியாக ஈடுபட விரும்பிய தன் விருப்பத்தையும் தானியா நிறைவேற்றிக் கொண்டார் எனவும் எஸ்ட்ராடா பதிவு செய்கிறார். 1962 ஆம் ஆண்டு நிகரகுவா விடுதலை இயக்கமான எப்எஸ்எல்என் ஸ்தாபகரான கார்லோஸ் பொன்சேகாவுடன்தான் நேரடியாக கெரில்லா யுத்தத்தில் ஈடுபட விரும்புகிறேன் எனத் தன் விருப்பத்தை தானியா வெளியிட்டிருக்கிறார் எனவும் எஸ்ட்ராடா பதிவு செய்கிறார்.
1967 மாரச் 23 ஆம் திகதி சர்வதேச கெரில்லா புரட்சியாளர்கள் முதன் முதலாகப் பொலிவியப் படையினருடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். 14 படையினர் கைதிகளாகப் பிடிக்கப்படுகிறார்கள். தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. பிடிபட்ட படையினரிடமிருந்து அவர்களது சப்பாத்துக்களையும் ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளும் கெரில்லாக்கள், தமது இலட்சியம் குறித்து அவர்களுக்குத் தெரிவித்துவிட்டு அவர்களை விடுவிக்கிறார்கள். மார்ச் 25 ஆம் திகதி தமது தோழர்களை மூவரை மலையுச்சிக்கு அனுப்பி ஆற்றைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டு தமது முகாமைக் காக்கும் பணியில் கெரில்லாககள் ஈடுபடுகிறார்கள். அப்போது ஒரு கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. தானியா அப்போது அவர்களுடன் முகாமில் இருக்கிறார். தானியாவை சே குவேரா அவர் அங்கிருந்து சென்றுவிடுமாறு கோருகிறார். மார்ச் 27 ஆம் திகதி நிலைமை முற்றிலும் மாறுகிறது. கெரில்லா யுத்தம் சே குவேராவின் தலைமையில் நடைபெறுகிறது எனும் பிரச்சாரத்தை பொலிவிய அரசு மேற்கொள்ளத் துவங்குகிறது. இச்சூழலில் தானியா படையினரால் அடையாளம் காணப்பட்டுவிட்டார் எனும் முடிவுக்கும் வருகிறார் சே குவேரா. தானியாவின் ஐந்து ஆண்டுகள் கடின உழைப்பு சார்ந்த உளவறிவு தானியாவின் நடவடிக்கையினால் விரயமாகிப்போனது என்னும் முடிவுக்கும் சேகுவேரா வருகிறார்.
தானியாவின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலைமை குறித்து அன்றைய பொலிவிய அமைச்சரவையில் இருந்த அன்டோனியா அர்குடஸ் பின்னாளில் இவ்வாறு பதிவு செய்கிறார் : காமிரியில் ஒரு வாகனத்தரிப்பிடத்தில் விடப்பட்ட தானியா வந்த ஜீப்பிலிருந்த ஒரு சூட்கேஸிலிருந்து ஒரு சாதாரணப் பெண்ணின் உடுப்புகளும், தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்ட ஒரு கையடக்கக் குறிப்புப் புத்தகமும் கைப்பற்றப்பட்டது. லாரா குட்டியரஸ் பாவர் எனும் பெண்ணுடையவை என அவைகள் அடையாளம் காணப்பட்டன. அந்தக் குறிப்புப் புத்தகத்தில் அடையாளம் காணப்பட்ட யோலான்டா ரிவாஸ் எனும் பெண் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டு அவளது வீடு சோதனையிடப்பட்டது. அவர் லாரா குடியரஸ் குறித்து தான் அறிந்ததைத் தெரிவித்தாள். லாராவின் வீடு சோதனையிடப்பட்டது. எளிமையாக அவள் வாழ்ந்து வந்திருந்தாள். பொலிவியாவின் அரசுமட்டத்தவர் பலருடன் அவர் இருந்த புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அந்தப் புகைப்படங்களில் ஒன்றில் லாரா, ஒரு விவசாயிகளின் சந்திப்பொன்றில் ஜனாதிபதி பாரியன்டோசுடனும், பொலிவிய ராணுவத் தளபதி ஜெனரல் ஒவான்டோவுடனும் இருப்பது காண்டுபிடிக்கப்பட்டது. அவரது கணவருக்கு அவர் எழுதிய கடிதங்கள் இருந்தன. என்றாலும் இந்த ஆதாரங்களில் இருந்து அவர் ஒரு கெரில்லா என்கிற அடையாளம் எதுவும் பெறப்பட இல்லை. அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகையான ஒலிப்பேழைகளை அமெரிக்க உளவுத்துறையினர் ஒன்றரை நாட்கள் கேட்டார்கள். அவைகள் அனைத்தும் நாட்டுப்புறப் பாடல்களின் ஒலிப்பதிவுகள். அதிலிருந்து அவர்களால் எதுவும் கண்டபிடிக்கப்படவில்லை. தானியா ஒரு கொரில்லா என்பதனை அறிவித்தவர்கள் கெரில்லாக் குழுவிலிருந்து ஓடிய இரண்டு மாவோயிச பொலிவியர்கள். வின்சன்ட் ரிக்கபார்டோ மற்றும் பாஸ்டர் பெராரோ என்பது அவர்களது பெயர். அவர்கள் கெரில்லா அமைப்பில் தாம் இணைந்தது பற்றியும், காமிரிக்கு அவர்கள் வந்தது பற்றியும் சொன்னார்கள். காமிரிக்கு வந்தவுடன் தானியா எவ்வாறு பிறிதொரு பெண்ணாக, கெரில்லாவாக மாறிப்போனார் என்பதையும் அவர்கள் அரசுக்கு அறிவித்தார்கள்.
சே குவேரா இவைகள் எதனையும் அறிந்திருக்கவில்லை. தனது தொடர்ந்த அவதானிப்பினால் தானியா அடையாளம் காணப்பட்டுவிட்டார் எனும் முடிவுக்கு அவர் வந்தார். ரெஜி டெப்ரெவையும் பிற பத்திரிக்கையாளரையும் தானியாவையும் கெரில்லாக் குழுவினருடன் வைத்துக் கொள்வது எனும் முடிவுக்கும் அவர் வந்தார். காகுவாசு முகாமை விட்டு வெளியேறுவது எனும் முடிவையும் எடுத்தார். மார்ச் 31 ஆம் திகதி தானியா சே குவேராவினால் நேரடியாகத் தலைமைதாங்கப்பட்ட மத்தியப் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். தான் முழுமையான கெரில்லாப் போராளியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அந்த நிகழ்வை, தனது வாழ்வில் மிக முக்கியமானதானதொரு நிகழ்வாக தானியா உணர்ந்தார். சே குவேராவின் கீழ் கெரில்லாவாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அவருக்கு எம்-ஒன் ரைபிள் ஒன்றும் தரப்பட்டது. ஏப்ரல் 17 வரை மத்தியப் படையணியில் இருந்த தானியா அதன் பின் பிற 12 பேருடன் சேர்த்து ஜேக்வின் எனும் கியூபக் கெரில்லாவின் தலைமையிலான அணியில் தானியா இணைக்கப்பட்டார். கெரில்லாக்களுக்கு பின்னணியாக இக்குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டது. சே இந்த முடிவை எடுக்கக் காரணம், இந்தக் குழுவிலிருந்த பெரும்பாலுமானவர்கள் காயம்பட்டவர்கள் அல்லது உடல்நசுகவீனமுற்றவர்கள். தானியாவுக்குத் தரப்பட்ட சப்பாத்து அவரது கால் அளவுக்குப் பெரிதாக இருந்த காரணத்தினால், காலில் புண்பட்ட தானியாவுக்கு 102.2 பாரன்ஹைட் டிகிரி ஜூரம் இருந்ததால் சே குவேரா இந்த நிலைபாட்டை எடுத்ததாக பம்போ தனது குறிப்பேட்டில் பதிவு செய்கிறார்.
என்றாலும் பிற எல்லா கெரில்லாக்கள் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என தானியா விரும்பினார். தனக்குச் சிறப்புரிமை அழிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. தான் உடல் நலமற்று இருக்கிறோம் என்கிற விடயம் கூட சே குவேராவிடம் சொல்லப்படுவதை தானியா விரும்பியிருக்கவில்லை. தானியாவுக்கு இந்த நிலைமையிலும் இரு கடமைகள் தரப்பட்டன. வானொலிகளைக் கேட்டுத் தகவல் சேகரிப்பது அவரது முதல் பணி. கிழிந்துபோன கெரில்லாக்களின் உடுப்பக்களைத் தைப்பது அவரது இரண்டாவது பணி. இதனோடு உணவு விநியோகிப்பதும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுமான பணியினையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 14 முதல் ஆகஸ்ட் 31 தான் மரணமுறும் வரையிலும் வரை, தானியா ஜேக்வின் குழவில் செயலாற்றினார். ஏப்ரல் 17 ஆம் திகதி ஜேக்வின் குழு சே குவேரா குழுவிலிருந்து பிரிந்தது என்பதனையும், இறுதி வரையில் அவர்கள் சே குழுவினரைச் சந்திக்காமலேயே மரணமுற்றார்கள் என்பதனையும் இங்கு குறித்துக் கொள்வோம்.
1967 ஆம் ஆண்டு இரு குழுக்களும் சந்திப்பதற்கான அருகாமையில் இருந்துபோது ஹனரொட்டா ரோஜாஸ் எனும் பொலிவிய விவசாயியின் காட்டிக் கொடுபபினால் இந்த இரு குழுவினரும் சந்திக்க முடியாமல் போனது. சே குவேரா குழுவிலிருநது ஜோக்வின் குழு பிரிந்த மூன்று மாதங்களிலும் தானியா பிற கெரில்லாக்களிடம் ஒரு தாயைப் போன்ற பரிவுடன் நடந்துகொண்டு அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டினார் என சக கெரில்லாக்கள் எழுதுகிறார்கள். தானியா விதவிதமான நிறங்களில் உள்ள சிறுகற்களைச் சேகரிப்பதில் ஈடுபாடு கொண்டவர் எனவும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். கெரில்லாக் குழவினரிடம் போரிடுவதற்கான மனநிலை குன்றியபோதெல்லாம், அவர்களிடம் ஆற்றலை ஏற்படுத்தியவராகத் தானியா திகழந்தார் எனவும் அவரது சக கெரில்லாக்கள் எழுதுகிறார்கள்.
1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பகல் பொழுதில், தனது 10 தோழர்களுடன் ரியா கிரான்டோ ஆற்றைக் கடக்கும்போது, நடு ஆற்றில் வைத்து, 35 பொலிவியப் படையினர் தானியாவின் தோழர்களுடன் அவரைச் சுட்டுக் கொன்றனர். ஆகஸ்ட் 31 ஆம் திகதி ரியோ கிரான்டோ ஆற்றின் கரைக்கு வரும் ஜேக்வின் குழவினர் சேகுவேராவின் குழவினரைத் தேடிக் கண்டுபிடிப்பது எனும் முயற்சியில் ரியோ கிரானடோ ஆற்றைக் கடந்து செல்ல முடிவு செய்கிறார்கள். தமது குழுவிலுள்ள தானியாவும் அலஜான்ட்ரோ எனும் தோழரும் மிகுந்த உடல்நலிவற்ற நிலையில் அவர்களை அங்குள்ள விவசாயியான ஹனரொட்டோ ரோஜாஸ் இல்லத்தில் விட்டுச் செல்வது எனவும் ஆரம்பத்தில் நினைக்கிறார்கள். ஹனரொட்டொவின் வீட்டுக்குச் செல்லும் அவர்கள் தாம் உண்பதற்காகச் சில பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு, ஆற்றை எந்த இடத்தில் கடந்தால் ஆபத்தற்று இருக்கும் என்பதையும் ரோஜாஸிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு, அன்று மதியம் ஆற்றைக் கடப்பதாகவும் முடிவு செய்துகொள்கிறார்கள். கெரில்லாக்கள் ஹனரொட்டோவைச் சந்திக்க வந்தபோது, அவரை அச்சுறுத்தி அவரது வீட்டில் சுகவீனமற்றவன் போல் படுத்திருந்த படையினனும், உத்தரத்தில் பதுங்கியிருந்த படையினனும் உடனடியாக இந்தச் செய்தியை பொலிவியப் படையதிகாரிகளிடம் தெரிவிக்கிறார்கள். பொலிவிய ராணுவம் ஹனரொட்டோவின் மனைவியையும் மகளையும் பிணைகைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, ஹனரொட்டோவினைச் சித்திரவதை செய்து, கெரில்லாக்களின் குறிப்பான பயண ஏற்பாட்டைத் தெரிந்து கொண்டு, அவர் அவர்களுக்குச் சைகை செய்ய நேரும் நேரம், ஆற்றில் இறங்கும் கெரில்லாக்களைச் சுட்டுக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
ஹனரொட்டோவுக்கும் கெரில்லாக்களுக்கும் இடையிலான புரிதலின்படி, ஹனரொட்டோவின் சைகையைத் தொடர்ந்து 10 பேர் கொண்ட ஜேக்வின் குழவினர்அன்று மதியம் ரியோ கிரான்டா ஆற்றினுள் ஒருவர் பின் ஒருவராக இறங்குகிறார்கள். ஆற்றின் நடுவில் 10 பேர்களும் நகர்ந்த பின்பாக, இரண்டு கரைகளிலும் மறைந்திருந்த, 35 பேர் கொண்ட பொலிவியப் படையினர் கெரில்லாக்களைச் தானியங்கியத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுவீழத்துகிறார்கள். 10 பேரில் 7 பேர் உடனடியாக மரணமடைகிறார்கள். 3 பேர் தப்புகிறார்கள் ஏழு பேரில் உருவராக தானியா கொல்லப்படுகிறார். எதிரியிடமிருந்து முதல் வேட்டுச்சத்தம் கேட்டவுடன் தானியா தனது கைகளை உயர்த்தி துப்பாக்கியை இயக்குகிறார். அவர் துப்பாக்கியை இயக்க முடிந்ததா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை. வர்கஸ் எனும் பொலிவியப் படையினன் துப்பாக்கி வேட்டு தானியாவின் மூச்சுக் குழுலினை கிழித்துச் சென்றது. ஆற்றுநீரில் வீழ்ந்த அவரது உடல், 7 நாட்களின் பின் அவரது முதுகுப்பையுடன், வேட்டை நாய்களின் உதவியுடன் மீட்கப்பட்டது. ஜேக்வின் குழவினரில் ஆற்றில் இறங்கிய 10 பேரில் 7 பேர் உடனடியாகக் கொல்லப்பட, இருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுப் பின் கொல்லப்பட, பெக்கோ எனும் கெரில்லா மட்டுமே அந்தச் சம்பவங்களை உலகின் முன் சொல்வதற்கு உயிருடன் மீந்தார். செப்டமபர் 3 ஆம் திகதி ஜேக்வின் படையினர் கொல்லப்பட்டதான செய்திகள் பரவின. செப்டம்பர் 7 ஆம் திகதி வரை அது உறுறதிப்படுத்தப்படாமலேயே இருந்தது. செப்டம்பர் 7 ஆம் திகதி சே குவேரா தனது பொலிவியன் டைரியில் இவ்வாறு எழுதிச் செல்கிறார் : தானியாவின் உடல் ரியோ கிரான்டா நதியின் கரையில் ஒதுங்கியதாக லா கிரஸ் டல் சர் வானொலி அறிவித்தது. நீக்ரோவின் மரணச் செய்தி போல இந்தச் செய்தியும் உண்மை போல ஒலிக்கவில்லை. அந்த வானொலிச் செய்தியின்படி தானியாவின் உடல் சாந்தா குருஸ்சிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் நடந்த பின் 1967 செப்டம்பர் 2 ஆம் திகதி சேகுவேரா ஜேக்வின்-தானியா குழுவினரை பொலிவிய ராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்த விவசாயியான ஹனரொட்டா ரோஜாஸின் இருப்பிடத்திற்குச் சென்றிருக்கிறார். எவரோ வந்துபோன சுவடுகளை அவர் அவதானித்தாலும் கூட, அவரால் தனது தோழர்களின் மரணத்தில் ஹனரொட்டாவின் பாத்திரத்தினை அறிந்திருக்க முடியவில்லை.
ஜேக்வின் படையணியினர் அழிக்கப்பட்ட பின் செப்டம்பர் 26 ஆம் திதி பிறிதொரு தாக்குதலில் தனது பிற 3 கெரில்லாத் தோழர்கள் கொல்லப்பட்டதனையும் சே அறிகிறார். தாம் ஆபத்தான நிலைமையில் வைக்கப்பட்டிருப்பதை உணரும் சே குவேரா, உடனடியாக அந்த இடத்திலிருந்து அகன்று வேறு இடத்தினைச் தேட வேண்டும் எனக் கருதுகிறார். என்றாலும், 1967 அக்டோபர் 8 ஆம் திகதி மதியம், சைமன் கியூபா சராவியா எனும் பொலிவியப் படையினன் சே குவேராவைக் கைது செய்கிறான். கைது செய்யப்பட்ட வேளையில் சே குவேராவின் ஒரு காலில் காயம்பட்டிருக்கிறது. அவரது ரைபிள் செயலிழந்துவிட்டிருந்தது. அவரது கைத்துப்பாக்கியில் ரவைகள் முடிந்துவிட்டிருந்தது.
1967 செப்டம்பர் 7 ஆம் திகதி கரையொதுங்கிய தானியாவின் உடல் செப்டம்பர் 8 ஆம் திகதி வெலிகிராண்டாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கொல்லப்பட்ட கெரில்லாக்களின் உடல்களைப் பொதுப்புதைகுழியில் இட்டு மூடியதைப்போல, ஒரே ஒரு பெண் கெரில்லாவான தானியாவின் உடலையும் இட்டு மூடுவதற்கு உள்ளுர் ஆசிரியையான டோரா கார்டனாஸ் ஒப்பவில்லை. படையதிகாரி செலிக்ஸ் சவப்பெட்டி வாங்குவதற்கெல்லாம் அரசிடம் நிதிவசதியில்லை எனக் குரூரமாக மறுத்துவிட, பெண்கள் தமக்குள்ளாகவே பெண்கள் தமக்குள்ளாகவே நிதி வசூலித்து, மெழுகுவர்த்திகளும் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட மூடுதுணியும் வங்கினார்கள். பதட்டமான சூழ்நிவையில் பொலிவிய ஜனாதிபதி பாரியான்டோஸ் அங்கு வந்து தானியாவின் உடலைக் கண்ணுற்று அதனைப் புகைப்படமாகவும் பதிவு செய்தனர். கத்தோலிக்கச் சடங்குகளின் பின் தானியாவின் உடல் ஒரு சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படும் எனவும் பொலிவிய அரசு அறிவித்தது. பெண்கள் வசூலித்த நிதியினால் வாங்கப்பட்ட சடங்குப் பொருட்களுடன் தானியாவின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. மனிதாபிமானத்துடன், கிறிஸ்தவ முறைப்படி தானியாவைப் புதைத்ததாக வேஷம் தரித்த பாரியான்டோசின் படையினர் உடனடியாகவே தமது சுயமுகத்தைக் காண்பித்தனர். கைது செய்யப்பட்ட பெக்கோவை தானியாவுக்கும் சே குவேராவுக்கும் உடலுறவு இருந்தததாக ஒப்புதல் வாக்குமூலம் தரும்படி வறுபுறத்திச் சித்திரவதை செய்தார்கள். தானியாவின் சவக்குழி எங்கேயிருக்கிறது என்பதனை வெலிகிராண்டாவில் இருக்கிற எவரும் கண்டுபிடிக்க முடியாதபடியும் மறைத்தார்கள். வெலிகிரன்டா கல்லறைத் தொகுதியில் எங்கோ தானியாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது எனும் யூகம் மட்டுமே உலகெங்கிலும் பரவிக் கொண்டிருந்தது.
1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்கப் பத்திரிக்கையாளரும் சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ஜோன் லீ ஆன்டர்சனுக்கு வழங்கிய ஒரு நேர்முகத்தில், சே குவேராவினதும் அவரது தோழர்களினதும் உடல்கள் கைவிடப்பட்ட வெலிகிரன்டா விமான ஒடுபாதையில் புதைக்கப்பட்ட செய்தியினை ஒய்வுபெற்ற பொலிவிய ராணுவ ஜெனரல் மரியா வர்காஸ் சலினா தெரிவித்தார். 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 சே குவேராவினது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி தானியாவின் உடல் அதே வெலிகிரண்டாவில் கைவிடப்பட்ட படைமுகாமின் எல்லைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி ஜோக்வின் குழுவினரது அனைத்துப் போராளிகளது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரது உடல்களும், கியூபப் புரட்சியில் வெற்றி வாகை சூடி சே குவேரா நுழைந்த, கியூபாவின் சாந்தா கிரஸ் நகரிலுள்ள சே குவேரா நினைவாலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கிறது.
தானியா கொல்லப்பட்டதன் பின், வெலிகிரண்டா மலைக் பிரதேத்துக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலை பொலிவிய ஜனாதிபதி பாரியான்டோஸ் தமது படையினருடன் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உலகெங்கிலும் வெளியிடப்பட்டது. தானியாவின் மரணமும் தீரமும் பேசப்பட்டது போல உலகில் பிறிதொரு கெரில்லாப் பெண் போராளியின் வரலாறு பேசப்பட்டதில்லை. காரணம், சேகுவேராவினால் தலைமை தாங்கப்பட்ட பொலிவியக் கெரில்லா யுத்தக் குழுவின் ஒரேயொரு பெண்போராளி தானியாதான். இன்றும் உலகின் ஆயுத விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் ஆதர்ஷமாகப் பேசப்படும் கியூப விடுதலைப் போராட்டத்தில் சீலிய சாஞ்சஸ், ஹெய்டி சாந்தாமரியா போன்று நூற்றுக்கணக்கான் பெண் போராளிகள் ஈடுபட்டிருந்தார்கள். கியூபப் புரட்சியினால் ஆதர்ஷம் பெற்ற நிகரகுவா, எல் ஸால்வடோர், ஜபடிஸ்டா போன்ற கெரில்லா இயக்கங்களிலும், ஈழவிடுதலைப் போரிலும் பெண்போராளிப் படைப்பிரிவுகளே இருந்தன. இவற்றில் ஈடுபட்ட பெண் போராளிகள் அனைவரும் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். தானியா இவர்களிலிருந்தெல்லாம் வேறுபட்ட பண்புகள் கொண்டவர். நாசிகளிடமிருந்து தப்பி அகதிகளாக அர்ஜன்டினா வந்த ஜெர்மானியக் கம்யூனிஸ்ட்டுகளான பெற்றோருக்குப் பிறந்து, இட்லரின் வீழச்சியின் பின் மறுபடி கிழக்கு ஜெர்மன் திரும்பி, சே குவேராiவைச் சந்தித்த பின் கியூபப் புரட்சியின் பின்னான புதிய சோசலிசக் கட்டுமானத்தில் ஈடுபடும் நோக்கோடு தன்னந்தனியாக கியூபாவுக்கு வந்து, பிற்பாடாக உலகு தழுவிய புரட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, உலகெலாம் அதன்பொருட்டு அலைந்து, தனது 29 ஆவது வயதில் இறுதியில் பொலிவியாவில் கொல்லப்பட்ட தானியா, அதனது முழுமையான அர்த்தத்தில் சர்வதேசீயவாதியாகத் திகழ்ந்தவர். பெண் போராளிகளின் முழு வரலாற்றிலும் இது ஒரு அபூர்வமான நிகழ்வு.
கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பியப் பெண் என்பதாலும், பல்லாண்டுகள் தம்மை வெற்றிகரமாக ஏமாற்றி உளவறிந்தவர் என்பதாலும், தானியாவின் மீது பற்பல அவதூறுகளை பொலிவிய அரசும், அதனைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறையும் பரப்பி வந்தன. கியூபா எனும் நாட்டின் அரசுத் தலைவரான பிடல் காஸ்ட்ரோ-அரசுகள் கடந்த சர்வதேசியப் புரட்சியில் ஈடுபட்ட சே குவேரா என இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளையும், சே குவேராவுக்கும் சமாதான சகவாழ்வுக்குக் கொள்கையை முன்வைத்து ஆயுதவிடுதலைப் போராட்டங்களை மறுத்த சோவியத் யூனியனுக்கும் இருந்த முரண்பாடுகளையும் முன்வைத்து, இயல்பாகவே ஒரு கெரில்லா யுத்தத்தில் ஏற்படக் கூடிய தவறுகளை தத்தமது அரசியல் வியாக்யானங்களுக்கு உட்படுத்த முயன்றவர்கள், தானியாவை சே குவேராவைக் கொல்வதற்கெனவே பிடல் காஸ்ட்ரோ அனுப்பி வைத்தார் என அவதூறுகள் பரப்பினார்கள். தானியா ஒரே சமயத்தில் கியூபா-கிழக்கு ஜெர்மனி-ரஸ்யா போன்ற நாடுகளின் உளவாளியாக இருந்தார் எனவும், அவரே பொலிவியப் படைகளுக்கு சே குவேராவைக் காட்டிக் கொடுத்துக் கொல்லக் காரணமாக இருந்தார் எனவும் அவதூறுகள் பரப்பப்பட்டன. சே குவேராவின் ரகசியக் காதலியாக இருந்ததோடு மரணமுறும் தருவாயில் சே குவேராவின் மூன்று மாதக்கருவை தானியா சுமந்து கொண்டிருந்தார் எனவும், கெரில்லாக்களின் பாலியல் துணையாகவே அவர் வாழ்ந்தார் எனவும், பொலிவிய அரசியல் தலைவர்களோடும், செல்வமிக்க முதலாளிகளோடும் அவர் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு: திரிந்தார் எனவும் அவதூறுகள் பரப்பப்பட்டன. வன்முறையையும் பாலுறவையும் வைத்துக் காசுசேர்த்துக் கொண்டிருந்த அமெரிக்க-மேற்கத்தியக் கலாச்சாரச் சீரழிவாளர்களுக்கு ஆயுத விடுதலைப் போராட்டமும் அதில் ஈடுபட்ட பெண்களையும் வன்முறையின் பிம்பங்களாகவும், பாலியல் அடிமைகளாகவும் மட்டும்தான் பார்க்க முடிந்தது. இன்னும் கெரில்லா வாழ்வு தரும் தனிமையையும், வனங்களின் இடையிலான இயற்கை சார் அவர்களது வாழ்வையும் வைத்துப் பாலுறவு விழைச்சைக் கட்டற்றுத் துய்த்தவர்கள் கெரில்லாக்கள் எனும் உக்கிரமான சிருங்காரக் கற்பனைகளே அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மிஞ்சின. தானியாவின் மரணத்தின் பின்பு, தானியாவின் வாழ்வை முன்வைத்து கொச்சையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. தானியாவின் வாழ்வை வைத்து திரைப்படங்கள் தயாரிக்க ஹாலிவுட் முதலாளிகள் திட்டமிட்டார்கள்.
தானியா கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டில் தானியா கிழக்கு ஜெர்மன் அரசின் உளவாளி எனும் கட்டுக்கதையை முதலில் அவிழ்த்துவிட்டவர் கிழக்கு ஜெர்மன் பாதுகாப்புச் சேவையில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்று, கம்யூனிச எதிர்ப்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட குந்தர் மென்னல் என்பவர். 1963 ஆம் ஆண்டு செக்கோஸ்லாவாக்கியத் தலைநகர் பிராகில் தானியா உளவுத்துறைப் பணிகளில் பயிற்சி பெற்றபோது, செக்கோஸ்லவாக்கியாவில் இருந்த சே குவேராவும் தானியாவும் திருமணம் மீறிய பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் அவுதூற்றை அவர் பரப்பினார். இதனை அப்படியே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் பொலிவிய உளவுத்துறையும் காவிக்கொண்டது. குந்தர் மென்னல் குறிப்பிடும் காலகட்டத்தில், முழு இலத்தினமெரிக்க விடுதலைத் திட்டமான ஆபரேசன் பென்டாஸ்மா பணிகளுக்காக சே குவேரா செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்தார். தானியா பிராக் நகரத்திற்கு வெளியில் ஒரு பண்ணையலிருந்தபடி உளவுத்துறைப் பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். என்றாலும், அவர்கள் பிராக் நகரத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு போதும் இருக்கவில்லை என்பது பிற்பாடு நிருபிக்கப்பட்ட பின்னால், அந்தக் கட்டுக்கதை இல்லாமல் போனது. இதே குந்தர் மென்னல்தான் தானியா கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை ஏஜன்டாக இருந்தார் எனும் கட்டுக்கதையையும் பரப்பினார். கிழக்கு ஜெர்மன் உளவுத்துறையும், ரஸ்ய உளவுத்துறையும் சேர்ந்து தானியாவை குவேராவைக் கொல்ல அனுப்பியது எனவும், சே குவேரா மீது கொண்ட காதலால் தானியா தனது மனதை மாற்றிக் கொண்டு சே வின் கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு மரணமுற்றார் எனவும் இந்தக் கதைகள் பிற்பாடு கால் கை முளைத்த பொய்களாகப் பரவின.
தானியா குறித்த இந்தக் கட்டுக் கதையை வெறொரு விதத்தில் வியாக்யானப்படுத்தியவராக சே குவேரா குறித்த வரலாற்று நூலை எழுதிய மெக்சிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் காஸ்டநாடா இருப்பதாக தனது கார்டியன் பத்திரிக்கைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார், தானியா குறித்த எஸ்ட்ராடவின் நூலுக்கு விமர்சனம் எழுதிய பாப் பிரிட்டன். எஸ்ட்ராடாவும் தானியா குறித்த தனது நூலில் காஸ்டநாடாவின் திரிபுகள் குறித்துக் குறிப்பிடுகிறார். காஸ்டநாடா, தானியா கிழக்கு ஜெர்மன் சமூகத்தில் வாழப்பிடிக்காமல், சோசலிசத்திற்குத் துரோகமிழைத்த கிழக்கு ஜெர்மன் சமூகத்திலிருந்து தப்பி, இலத்தீனமெரிக்கா போக முடிவெடுத்தார் எனவும், கியூபப்புரட்சியை அவர் நம்பினார் எனவும், சே குவேரா அதனை பிற இலத்தீனமெரிக்க நாடுகளுக்கும் எடுத்துச் சென்று சோசலிசக் கொள்கைகளுக்கு நேர்மையாகச் செயல்படுகிறார் என நம்பியே அவர் கியூபா வந்தார் எனவும் எழுதுகிறார் எனக் குறிப்பிடுகிறார் பாப் பிரிட்டன். கிழக்கு ஜெர்மன் உளவுப்பிரிவான ஸ்டாசியும், ரஸ்ய உளவுப்பிரிவான கேஜிபியும் சே குவேராவின் இயக்கத்தில் ஊடுறுவி அதைச் சிதைப்பதற்காக அவரை அனுப்பியது எனவும் காஸ்டநாடா எழுதுகிறார் எனவும் குறிப்பிடுகிறார் பாப் பிரிட்டன். குந்தர் மென்னல் முதல் காஸ்டநாடா வரை தானியாவின் மீது முன்வைக்கும் ஸ்டாசி-கேஜிபி குற்றச்சாட்டினை என்றென்றைக்கும் பொய்யானது என நிரூபித்திருக்கிறார் தானியாவின் அன்புத் தாயான நாடியா பங்க். இதற்காக 1997 ஆம் ஆண்டு அவர் ரஸ்ய-ஜெர்மன் உளவுத்துறை ஆவணக்காப்பகங்களுக்குப் பயணம் செய்தார். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 மற்றும் 22 ஆம் திகதியிட்டு இரு கடிதங்களை ரஸ்ய உளவுத்துறை நாடியாவிடம் கையளித்தது. தானியாவுக்கும் கேஜிபிக்கும் உறவு இருப்பதற்கான எந்த ஆவணப்பதிவுகளும் தகவல்களும் ஆதாரங்களும் இல்லை என்பதனை அந்தக் கடிதங்கள் உறுதி செய்திருக்கின்றன. அதைப் போலவே 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதியிட்டு ஜெர்மன் உளவுத்துறை ஆவணக் காப்பகமும் ஒரு கடிதத்தினை நாடியாவிடம் கையளித்தது. தானியாவுக்கும் ஸ்டாசிக்கும் உறவு இருப்பதற்கான எந்த ஆவணப்பதிவுகளும் தகவல்களும் ஆதாரங்களும் இல்லை என்பதனை அந்தக் கடிதம் உறுதி செய்திருக்கிறது. இதனோடு, முதன் முதலாக, எண்ணற்ற ஆபரேசன் பென்டாஸ்மோ தொடர்பான கியூப உளவுத்துறை ஆவணங்களும், தானியா தனது கியூப, செக்கோஸ்லாவாக்கிய, பொலிவியப் பயிற்சி மற்றும் அனுபவங்கள் தொடர்பாக கியூப உளவுத்துறைக்கு எழுதிய அதிகாரபூர்வ அறிக்கைகளும், தானியாவின் பயிற்சி தொடர்பாக நியமிக்கப்படட்டவர்களான கியூப உளவுத்தறை அதிகாரிகள் பதிவு செய்த கியூப உளவுத்துறை அறிக்கைகளும் எஸ்ட்ராடாவின் புத்தகத்தில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் தர்க்கபூர்வமாக 1962 ஆம் ஆண்டு முதலே சே குவேராவினால் பொலிவிய அயுதப் போராட்டம் தொடர்பான திட்டம் தீட்டப்பட்டதையும், சேகுவேரா பொலிவியபவுக்குள் இறங்கிய 1966 ஆம் ஆண்டு நோக்கி அது வளர்ந்த முறையையும் சொல்கிறது. 1961 ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனிக்கு சே விஜயம் செய்தபோது ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளராக சே குவேராவைச் சந்தித்த தானியா, 1961 ஆம் ஆண்டு அவருடன் கியூபக் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்ட தானியா, அதன் பின்பாக 1966 ஆம் ஆண்டுதான் சே குவேராவை பொலிவியாவில் சந்திக்கிறார். இடையில் சே குவேராவைத் தனிமையில் அவர் சந்தித்ததற்கான சான்றுகள் என்பது முற்றிலும் இல்லை.
சே குவேராவும் தானியாவும் திருமணம் மீறிய பாலுறவு கொண்டிருந்த காதலர்கள் என குந்தர் மென்னல் துவங்கிய வைத்த பிரச்சாரம், 1997 ஆம் ஆண்டு உருகுவே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் அந்தோனியா பிரீடல் ஜப்பாட்டா ஜெர்மன் மொழியிலும், பிற்பாடு 1999 இல் ஸ்பானிய மொழியிலும் வெளியிட்ட ‘தானியா, சே குவேராவைக் காதலித்த பெண்’ எனும் நூலினையடுத்து மறுபடியும் பரபரப்பான விஷயமாக ஆனது. இந்த நூல் வெளியான தருணத்தில்தான் சே குவேராவினதும் தானியாவினதும் உடல்கள் பொலிவிய வெலிகிரன்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதனையும் நாம் ஞாபகம் வைத்துக் கொள்வோம். ஜோஸ் அந்தோனியாவின் நூல் வெளியானதை அடுத்து தானியாவின் அன்னையான நாடியா பங்கின் நேர்முகம் 1998 ஆம் ஆண்டு மார்ச் 7-8 ஆம்திகதி வெளியான ‘ஜூங் வெல்ட்’ எனும் ஜெர்மானியச் சஞ்சிகையில் வெளியானது. அதனது ஆங்கில மொழியாக்கத்தினையும் எஸ்ட்ராடாவின் நூல் பிண்ணினைப்பாககக் கொண்டிருக்கிறது. அந்தோனியாவின் நூலின் தலைப்புக்கு ஆதாரமாக அந்த நூலின் உள்ளே அரை வாக்கியம் மட்டுமே இருப்பதாக நாடியா குறிப்பிடுகிறார். 1960 ஆம் ஆண்டு சேகுவேரா கிழக்கு ஜெர்மனிக்கு சில வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திட வருகிறார். இரண்டு நாட்கள் மட்டுமே அங்கே இருந்துவிட்டு பிற்பாடு புகையிரத வண்டியில் போலந்துக்குச் சென்று விடுகிறார். வியாபார ஒப்பந்தம் சம்பந்தமான சந்திப்புக்களில் சே குவேராவுக்கு ஸ்பானிய மொழிபெயர்ப்பாளராகத் தானியா செயலாற்றுகிறார். இதுபற்றிச் சொல்லும்போதுதான், தானியா சே குவேராவுடன் நெருக்கமாக (intimately involved) இருந்தார் என எழுதுகிறார் அந்தோனியோ. இந்த முழுநூலிலும் தானியா சே குவேராவைக் காதலித்தார் என்பதற்கு இதுதான் ஆதாரம் இதுதான் என்கிறார் நாடியா.
தானியா பொலிவியாவில் இருந்த நாட்களில் பொலிவிய தூரதரக அதிகாரிகள், ஜனாதிபதி பாரியன்டோஸ், ராணுவ ஜெனரல், ஓவியர்கள், நாட்டுப்புற ஆய்வாளர்கள் எனப் பலருடன் பழக்கம் கொண்டிருந்தார். ஜெர்மன், ஸ்பானிய மொழிகளில் புலமை, தொல்பொருளியலிலும், இனவரைவியலிலும், நாட்டுப்புறவியலிலும் அவருக்கு இருந்த புலமை போன்ற அவரது ஆளுமைப் பண்புகளே அவர்பால் பலரையும் ஈர்த்தன. உளவறியும் தனது அரசியல் செயல்பாட்டுக்காக அதனை தானியா பயன்படுத்திக் கொண்டார். இதனை வெறுமனே பாலுறவுச் சாகசமாகக் குறுக்கிப் பார்த்திருக்கிறார் அந்தோனியோ என்கிறார் நாடியா. தனது புதல்வியின் மீது ஆதாரமற்ற அவதூறுகள் கொண்டது இந்தப் புத்தகம் என நூல் பதிப்பாளர் மற்றும் நூலாசிரியர் மீது வழக்குத் தொடுத்தார் நாடியா. 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது. 75 பிரதிகளே மிச்சமிருக்க விற்றுத்தீர்ந்திருந்த அந்தப் பதிப்பின் பின், ஆதாரமற்ற அவதூறுகள் நிறைந்த புத்தகம் எனும் காரணத்திற்காக அந்நூல் முழுமையாகத் தடை செய்யப்பட்டது. பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் 5 இலட்சம் மார்க் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத்தண்டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட் அந்த நூல் வெளியிடப்படவேயில்லை. தானியா, சே குவேரா உள்பட பொலிவியாவில் தனது அரசியல் செயல்பாட்டுக்காக போலித் திருமணம் (மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்) செய்து கொண்ட பொலிவிய மாணவன் உள்பட, தானியா எவரையும் காதலிக்கவில்லை எனும் நாடியா, ஆப்ரோ கரீபியரான யுலிசிஸ் எஸ்ட்ராடாவைத் தான் காதலிப்பதாகவும், பொலிவியக் கடமை முடிந்து கியூபா திரும்பிய பின் அவரை மணந்துகொள்ள விருப்பதாகவும், தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். அந்த எஸ்ட்ராடாதான் 2005 ஆம் ஆண்டு தானியா குறித்த குறிப்பிட்ட வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். இவ்வகையில், தானியா காதலித்ததும், அவர் உடலுறவு கொண்டதும், தனது பொலிவியக் கடமை முடிந்த பின்னால் கியூபா திரும்பி, மணந்துகொண்டு பற்பல முலாட்டோ கலப்பினக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பியதும் எஸ்ட்ராடாவுடன்தான் என்கிறது தானியா குறித்த வரலாற்று நூல்.
தானியாவின் அன்னை நாடியா 2003 ஆம் ஆண்டு மரணமுறுவதற்கு முன்னால், 2002 ஆம் ஆண்டு அந்தோனியா பென்டராஸ் சே குவேராகவும், நிகோல் கிட்மேன் தானியாவாகவும் நடித்துத் தயாரிக்கப்படவிருந்த ஒரு ஹாலிவுட் படத்திற்கு எதிராகப் போராடி அதனைத் தயாரிப்பதனைத் தடை செய்தார். ‘தானியா’ எனும் பெயரிலேயெ அந்தப்படம் தயாரிக்கப்படவிருந்தது. குந்தர்மென்னலின் அதே பொய்களின் அடிப்படையில் அந்தப்படம் தயாரிக்கப்படவிருந்தது. தானியா கிழக்கு ஜெர்மன் உளவாளியாக இருந்து அந்த நாட்டின் மாணவர்களை உளவு பார்த்தார் எனவும், பொலிவிய சென்ற அவர் பொலிவிய ஜனாதிபதியுடனும், ராணுவ ஜெனரல்களுடனும், வசதியான தொழில்முதலாளிகளுடனும் படுக்கையில் புரண்டு திரிந்த கடின இதயம் கொண்ட ஒரு சாகசக்காரி, ஒரு புரட்சிப் பைத்தியக்காரி என்பதாகத் தானியா அப்படத்தில் சித்தரிக்கப்படவிருந்தார். ஹாலிவுட் வசூல் பார்முலாவான மட்டுமீறிய இரத்தம் தெறிக்கும் வன்முறை, துப்பாக்கிச் சமர்கள், நீலப்படவகைப் பாலுறவுக் காட்சிகள் நிறைந்ததாக அப்படம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆதாரமற்ற பொய்களின்மீது கட்டப்பட்ட, தனது புதல்வியைக் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை என்றென்றும் தயாரிக்கப்பட முடியாதபடி செய்துவிட்டுக் கண்மூடினார் நாடியா.
மறுபடி மறுபடி ஆவணங்களும் ஆதாரங்களும் குவிந்தாலும் அவதூறுகள் என்றும் நிற்பதில்லை. புரட்சியாளர்களை அவமானப்படுத்துவதிலிருந்து ஏகாதிபத்திய-முதலாளித்துவ ஊடகங்களும் ஓய்வதில்லை. தானியாவின் அன்னையினது மரணத்தின் பின், யுலிசிஸ் எஸ்ட்ராடாவின் தானியா குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்களின் அடிப்படையிலான நூல் வெளியாகி மூன்று ஆண்டுகளின் பின், பிரித்தானியாவின் டைம்ஸ் பத்திரிக்கை அதனது 2008 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இதழ் மறுபடியும் அதே அவுதூறுகளுடன் வெளிவந்தது. இந்த முறை கியூப-பொலிவியப் புரட்சிகளில் முக்கியமான பங்காற்றிய பெனிக்னோவின் நேர்முகத்தின் வழியில் அது முன்வைக்கப்பட்டது. பெனிக்னோ பிடல் காஸ்ட்ரோ வரிசைப் புரட்சியாளர்களில் ஒருவர். ஆபரேசன் பென்டாஸ்மோ திட்டத்தின்படி தானியாவிற்கு பயிற்சி வழங்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவர். சே குவேராவுடன் பொலிவியாவிற்குப் போராடப்போன ஒரு கெரில்லாப் போராளி அவர். சே குவேராவும் தானியாவும் கொல்லப்பட்ட பின் பொலிவியாவிலிருந்து தப்பிய சொற்பமான போராளிகளில் ஓருவர். சிலி ஜனாதிபதியான அலண்டேவினால் காப்பாற்றப்பட்டுப் பின் கியூபா வந்தடைந்த பெனிக்னோ, கியூப சோசலிச நடைமுறையில் முரண்பட்டு பாரிசில் நாடு கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். சே குவேரா மீதும், கியூபப் புரட்சி இலட்சியங்கள் மீதும் நம்பிக்கை தெரிவிக்கும் பெனிக்னோ, பிடலின் கியூபா ஜனநாயகமற்ற, சிறைச்சாலைச் சமூகம் என்கிறவர். அவரிடம் டைம்ஸ் பேட்டியாளர் தானியா குறித்துக் கேட்கிறார் : தானியாவுக்கும் சே குவேராவுக்கும் இருந்த காதல் குறித்து, தானியா மரணமுறும்போது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறித்து அவரிடம் கேட்கிறார். பெனிக்னோ அவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் எனப் பதில் சொல்கிறார். அதற்கு அவர் சொல்கிற ஆதாரம், அவர்கள் பேசிக்கோள்ளும் போது யாருக்கும் கேட்காதவாறு மெதுவாகப் பேசிக்கொள்வார்கள் என்பதுதான். கர்ப்பம் பற்றிக் கேட்கும்போது அதனை அவர் மறுக்கிறார். அப்படியே இருந்தாலும் அது சே குவேராவின் கருவாக இருக்காது. மாறாக, ஒரு ஆப்ரோ கரீபியருடையதாக இருக்கலாம் என்கிறார். தானியா, நினைப்பது போலக் கடுமையானவர் அல்ல எனச் சொல்லும் பெனிக்னோ, தானியா பெண்மைப் பண்புடன் இருப்பதை விரும்பியவர் எனவும், தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் எனவும் சொல்கிறார். படிப்பறிவற்ற வெள்ளைமனம் கொண்ட ஓரு விவசாயியாக, பெண்கள் குறித்த மரபார்ந்த விவசாயிகளின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவராக பெனிக்னோவை நாம் புரிந்தகொண்டால், தானியாவின் மாதவிடாய் இரத்தப் போக்கிற்கு நாப்கினாகத் தனது மேல்சட்டையைக் கிழித்துக் கொடுத்தேன் எனும் அவரது வார்த்தைகளையும் புரிந்து கொண்டால், டைம்ஸ் பத்திரிக்கையாளரின் கிளரச்சியூட்டும் கேள்விகளுக்கான உடனடியான எதிர்வியைப் பாங்கிலான மேலோட்டமான பெனிக்னோவின் பதில்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒரு பெண்ணாக தானியா குறித்துப் பேசும் பெனிக்னோ, ஒரு கடப்பாடுள்ள புரட்சியாளராகத் தானியாவின் மீது தனது பெருமதிப்iயும் வெளியிடுகிறார். பெனிக்னோ கியூப எதிர்ப்பாளர்களான மியாமி வகை வலதுசாரிகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள மறுக்கிற, கியூபப் புரட்சி குறித்த, குறிப்பாக பிடலின் கியூபா குறித்த விமர்சனங்கள் கொண்டவர் எனும் அளவிலேயே நாம் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களும், பொலிவிய ஜனாதிபதி பரியான்டோசும் தானியாவின் மீது இவ்வளவு வெறுப்பும் அறுவறுப்பும் கொள்ளக் காரணம்தான் என்ன? இன்றளவிலும் திரும்பத் திரும்ப ஏன் இவர்கள் சே குவேராவின் மீதும் தானியாவின் மீதும் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்? சே குவேரா பொலிவியாவில் மரணமுறுவதற்கு முன்னால் தனது மனைவி அலீடா மார்ச்சுக்கு எழுதிய காதல் ததும்பும் கவிதைகளை அவர் வெளியிட்ட பின்பும், தானியா யுலிசிஸ் எஸ்ட்ராடாவுடன் காதலுறவு கொண்டிருந்தார் என ஐயம்திரிபற்று நிலைநாட்டப்பட்ட பின்பும், இவர்களுக்குச் சே குவேரா-தானியா காதலுறவை இட்டுக்கட்ட வேண்டிய அவசியம்தான் என்ன? காரணம் ஒன்றே ஒன்றுதான். உளவுத்துறைப் பயிற்சியிலும் உளவு பார்ப்பதிலும் தாம் மட்டுமே கெட்டிக்காரர்கள் எனும் மமதையை தானியா என்றென்றும் உடைத்தெறிந்திருக்கிறார். விடுதலைப் போராட்டங்களைச் சிதைத்து, லுமும்பா முதல் சே குவேரா வரை விடுதலைப் போராட்டத் தலைவர்களையும் உளவறிந்து கொன்ற அமெரிக்க உளவுத்துறைக்கே துர்சொப்பனமாக, அதுவும் பெண்ணாக இருந்து ஏகாதிபத்தியப் பெருவல்லமையின் மீது காறி உமிழந்த பெண் புரட்சியாளராக தானியா திகழ்கிறார். அதுவும், வட அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலத்தினுள், அதுவும் அவர்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே பொலிவியாவினுள் இருந்தபடி மூன்று ஆண்டுகள் அவர்களது கண்களில் மண்ணைத்தூவியபடி முழு இலத்தீனமெரிக்கக் கண்ட நாடுகளிலும் புரட்சிகளைத் தூண்டும் நோக்கில் கியூப உளவாளியாக வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் தானியா. இறுதி வரையிலும் தானியாவின் அடையாளத்தை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கெரில்லா இயக்கத்திற்குத்துத் துரோகமிழைத்து ஓடிய இருவரே தானியாவை பொலிவிய ராணுவத்தினரிடமும் சிஐஏவிடமும் காட்டிக் கொடுத்தார்கள். இதுவே தானியாவின் மீது தீராத ஆத்திரத்தை அவர்களிடம் தோற்றுவித்திருக்கிறது.
அமெரிக்க-மேற்கத்திய உளவுத்துறை என்பது என்றும் பெண்களின் பாலுறவுக் கவர்ச்சியை தமது எதிரிகளுக்கு எதிரான ஆயுதமாகவே பாவித்திருக்கிறது. பாலுறவுக் கவர்ச்சி உள்படப் பாவித்து பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல 601 முறை தாம் முயற்சி செய்ததாக சிஐஏ தெரிவித்திருக்கிறது. தானியாவிடம், அவரது புரட்சிகர சர்வதேசிய உணர்விடம், உலகின் மிகப்பெரும் வல்லரசுகள் தோற்றிருக்கின்றன. இந்த வரலாற்றுத் தோல்வியை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆகவே தான் இன்றும் ஜேம்ஸ்பான்ட்டையும் உளவறியக் காமக் கணைவீசம் கவர்ச்சிக் கன்னிகளையும் பிம்பங்களின் வழி உலகின் மீது ஏவிக் கொண்டிருக்கும் மேற்கத்திய அரசகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதே ஆயுதங்களைத்தான் தானியாவும் கொண்டிருந்து வென்றார் எனும் அவதூறுகளை ஏவி, அவரைக் கொச்சைப்படுத்த சளையாது முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
தானியா தனது தகத்தகாயமான, உலக நாடுகளின் எல்லைகள் கடந்த விடுதலை வேட்கையினால், அனைத்து அவதூறுகளையும் வென்று உலகப் புரட்சியாளர்களின் மனங்களில் நிரந்தரமாகக் கனன்றபடியிக்கிறார்.
ஆதாரங்கள்
1. Campanero : Life and Death of Che Guevara : Jeorge Castaneda : 1998
2. Mother fights Che film over ‘Lover’ claims : By Tony Paterson in Berlin and Oliver Poole in Los Angeles : The Daily Telegraph : 17 Mar 2002
3. Tania : Undercover with Che Guevara in Bolivia : Ulises Estrada : Ocean Books : Australia : 2005
4. Tania : Undercover with Che Guevara in Bolivia : Book Review by Bob Briton : The Guardian : 26 January 2005
5. Haydée Tamara Bunke Bider : The woman who died with Che Guevara : An Interview with Benigno by Cristine Tomey : Sunday Times : 10 Auguest 2008