உலக மாந்தரைக் கொன்றொழிக்கத் தயராகும் கொரோனா
கொவிட்-19 தீநுண்மிக்கு எதிராக உலகில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து மக்கள் பாவனைக்கு விடப்படுவதாக ரஸ்யா அறிவித்துள்ள நிலையில், குறித்த மருந்தை அலட்சியம் செய்துள்ள மேற்குலகம் மிகப் பாரிய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். முதலாவது அலைத் தாக்குதலை ஊரடங்கு, உள்ளிருப்பு ஆகிய தந்திரோபாயங்கள் மூலம் சமாளித்து விட்டோம் எனக் கூறி மார்தட்டிய உலக நாடுகள், இரண்டாவது அலைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத சூழலில் மாட்டித் தவிப்பதையும் காண முடிகின்றது. தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாத் தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய போக்கு கட்டுப்படுத்தப்படாது போனால் இந்த வருட முடிவில் மிகப் பாரிய உயிர் அழிவை உலகம் சந்திக்கலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சடுதியாக உயரும் தொற்று வீதம்
செப்டெம்பர் 4 ஆம் திகதிய புள்ளி விபரங்களின்படி உலகில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை அன்று 3 இலட்சத்தைத் தொட்டது. டிசம்பரில் கொரோனா தீநுண்மி கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதலாக இன்றுவரை தொற்றுக்கு ஆளாகியோரின் மொத்த எண்ணிக்கை 28 மில்லியனைக் கடந்துள்ளது. முதல் 10 மில்லியன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டது யூன் 27 ஆக இருக்கையில், 20 மில்லியன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை ஓகஸ்ற் 9 ஆம் திகதியே உலகம் கண்டு கொண்டது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கையில் சில வேளைகளில் நாம் 30 மில்லியன் தொற்றாளர்களைக் கடந்திருப்போம்.
செப்டெம்பர் 9 ஆம் திகதிய புள்ளிவிபரங்களின் படி உலகில் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 27,930,498. மொத்த மரணங்கள் 905,340. ஐரோப்பாவில் தொற்றுக்கு ஆளாகியோர் 3,906,975. மரணங்கள் 211,136. ஆசியாவில் தொற்றுக்கு ஆளாகியோர் 8,094,442. மரணங்கள் 157,119. ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. அன்றைய நாளில் மாத்திரம் 95,529 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 1,168 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. வட அமெரிக்காவில் தொற்றுக்கு ஆளாகியோர் 7,760,787. மரணங்கள் 283,228. தென் அமெரிக்காவில் தொற்றுக் ஆளாகியோர் 6,813,630. மரணங்கள் 221,169. ஆபிரிக்கக் கண்டத்தில் தொற்றுக்கு ஆளாகியோர் 1,324,356. மரணங்கள் 31,861. அவுஸ்திரேலியா அடங்கலான ஓசியானியா பிராந்தியத்தில் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 29,587. மரணங்கள் 812.
காத்திருக்கும் பயங்கரம்
தற்போதைய நிலை தொடருமேயானால் எதிர்காலத்தில் என்ன நிகழும் எனக் கணக்கிடப் பட்டதில் திடுக்கிடும் செய்திகள் காத்திருக்கின்றன.
இந்த வருடம் டிசம்பர் முதலாந் திகதிவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படாத நிலை நீடிக்குமானால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1.92 மில்லியனைத் தாண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாளொன்றுக்கான மரண வீதம் ஒக்ரோபர் 1 முதல் சடுதியாக அதிகரித்து, நவம்பர் 1 வரை உயர்ந்து டிசம்பர் 1 ஐ அடையும் போது தினசரி மரணங்களின் எண்ணிக்கை 26,870 ஐ அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. டிசம்பரில் கொரோனா நோயளிகளைப் பராமரிக்க 1.87 சாதாரண கட்டில்களும், 399,463 அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டில்களும், 340,307 செயற்கைச் சுவாசக் கருவிகளும் தேவைப்படும்.
பிராந்திய அடிப்படையிலான மரணங்களின் எண்ணிக்கையில் தெற்காசியப் பிராந்தியமே முன்னிலை வகிக்க உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தினமும் 9,716 மரணங்கள் வீதம் மொத்தம் 404,016 மரணங்கள் நிகழக் காத்திருக்கின்றன. அடுத்ததாக, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் 406,204 மரணங்கள் நிகழக் காத்திருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் தினமும் 5,441 எனத் தொடரும் மரணங்கள் டிசம்பரை எட்டும் போது 9,670 ஆக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அடங்கலான வட அமெரிக்காவில் 339,647 மரணங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் தினசரி மரண வீதம் 3,137 ஆக இருக்கும். கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் தினசரி மரண வீதம் 4,820 ஆகத் தொடர்ந்து மொத்தம் 131,736 பேர் மரணிக்க ஏதுநிலை உள்ளது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய தீவுகளில் மொத்த மரண என்னிக்கை 478,124 ஆக இருக்க தினசரி மரண வீதம் 1,600 ஆக இருக்கும். வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் 113,839 மரணங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தினசரி நிகழக் கூடிய மரணங்கள் 1,671 ஆக இருக்கையில் டிசம்பர் நடுப்பகுதியில் இது துரிதமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
துணை சகாரா ஆபிரிக்கா எனப்படும் பிராந்தியத்தில் 50,033 மரணங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தினமும் 809 மரணங்கள் நிகழக் கூடும் என்கிறது அறிக்கை.
திணறும் இந்தியா
தற்போதைய நிலையில் உலகின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா. இந்த நாட்டில் தினசரி தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும், மரணத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கையும் வெகு அதிகமாக இருந்து வருகின்றது. செப்டெம்பர் 6 ஆம் திகதியத் தகவல்களின் பிரகாரம் இந்தியாவில் அன்றைய தினம் 91,723 புதிய தொற்றாளர்கள் கண்டறியப் பட்டுள்ளார்கள். தினசரி இறப்போரின் தொகை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் இந்தப் போக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையைக் காண முடிகின்றது. தொற்றுக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது இந்தியா பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கின்றது. மரணங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவின் கிராமங்களில் அடிப்படைக் கட்டுமான வசதிகளோ அன்றி முறையான மருத்துவ வசதிகளோ இல்லாத நிலை உள்ளதால் மரணங்களின் எண்ணிக்கை கிடைக்கும் புள்ளிவிபரங்களை விடவும் அதிகமாக இருக்கலாம் என்பது நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
ஏற்கனவே பல தடவைகளில் சுட்டிக் காட்டியதைப் போன்று ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கு, அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறை என்பவையே இந்தியாவின் இந்த மோசமான நிலைக்குக் காரணம் எனலாம். கொரோனாவை ஒழிப்பதற்காக விளக்கேற்றுதல், கை தட்டுதல் எனச் சில்லறைத்தனமான ஆலோசனைகளை வழங்கி மக்களை பிரச்சனையில் இருந்து திசை திருப்பிய மோடி அரசாங்கம் தற்போது ‘கொரோனா இறைவனின் செயல். எதுவும் செய்ய முடியாது” என்று கூறி விடயத்தில் இருந்து நழுவ முயற்சிக்கின்றது. அயல் நாடும், கொரோனத் தாக்குதலுக்கு முதன் முதலில் இலக்காகிய நாடும், உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடுமாகிய சீனாவில் கொரோனாக் கொடூரத்தை வெற்றிகரமாக வெற்றி கொண்டதைப் பாராட்டி விழாக்கள் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா இவ்வாறான மோசமான நிலையில் இருப்பதற்கு ஆட்சியாளர்களின் தவறு என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
ஸ்புட்னிக் – வி
மனிதகுல அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லின் பெயர் ஸ்புட்னிக். உலகின் முதலாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக்-1, 1957 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 4 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமாக இன்றளவும் திகழும் அந்த செயற்கைக் கோளின் பெயரையே ரஸ்யா தான் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்துக்கும் இட்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் நிலவிய பனிப் போரின் போது எவ்வாறு அமெரிக்க வல்லரசை முந்தி விண்வெளியில் சோவியத் ஒன்றியம் சாதனை படைத்ததோ, அதைப் போன்ற ஒரு சாதனையே கொரோனாவுக்கான் முதல் தடுப்பு மருந்து என்பதை நினைவூட்டும் வகையில் ஸ்புட்னிக் என்ற பெயரை தனது தடுப்பு மருந்துக்கு ரஸ்யா இட்டிருக்கின்றது.
குறித்த தடுப்பு மருந்து முதலாம், இரண்டாம் கட்டப் பரிநோதனைகளின் பின்னர் ஓகஸ்ற் 11 ஆம் திகதியன்று முறையாகப் பதிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது இறுதிக் கட்டப் பரிசோதனைகள் செப்டெம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகின. முன்னர் சிறிய எண்ணிக்கையான நபர்களில் பரிசோதிக்கப்பட்ட மருந்து மூன்றாம் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேரில் பரிசோதிக்கப்பட உள்ளது. இதற்கென தலைநகர் மாஸ்கோ நகரவாசிகளிடம் இருந்து தொண்டு அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டதில் இதுவரை 35,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற் கட்டத் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு 21 நாட்களின் பின்னர் இரண்டாம் கட்ட மருந்து ஒன்று ஏற்றப்படும். இலவசமாக வழங்கப்படும் இந்தத் தடுப்பூசி தொடர்ந்து இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மொஸ்கோவில் வசிக்கும் அனைவருக்கும் கிட்டும் என மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மாற்றம் இல்லாது போனால் அடுத்த வருடம் கோடை காலத்தில் கொரோனாவை வெற்றி கொண்ட முதல் நாடாக ரஸ்யா விளங்கும் என ஸ்புட்னிக்-வி மருந்தைத் தயாரிக்கும் கமலேயா இன்ஸ்ரிரியூட் இன் தலைவர் அலெக்சாண்டர் கின்ஸ்ற்பேர்க் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்குமா உலகம்?
ரஸ்யா கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து தொடர்பான செய்திகள் உலகில் வெகு சிலரது கவனத்தையே கவர்ந்திருக்கின்றது என்பதே உண்மை. மருந்து கண்டு பிடிக்கப்பட்டது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அது தமது விருப்புக்கு உகந்ததல்லாத ரஸ்யாவால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியே மேற்குலகம் சார்ந்த நாடுகளுக்கு வெறுப்புக்கு உரியதாக இருந்து வருகின்றது. அதனால், குறித்த தடுப்பு மருந்து தொடர்பில் ஐயத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளைச் கசிய விடுகின்றன. ‘`முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பரிசோதனைகள் வேகவேகமாகச் செய்து முடிக்கப் பட்டன. எனவே அவை நம்பகத் தன்மையற்றவை” என்பது அந்த நாடுகளின் வாதம்.
ஆனால், பிரித்தானியாவின் மருத்துவ இதழான `லான்செற்“ வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து நூறு வீதம் பாதுகாப்பானது எனவும், தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட 76 வீதமானோரில் கொரோனத் தீநுண்மிக்கு எதிரான பிறபொருளெதிரிகள் கண்டறியப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப பட்டுள்ளது.
கொரோனாத் தீநுண்மிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ள மற்றொரு நாடான சீனா, தான் கண்டு பிடித்துள்ள மருந்தை ஆயுதப் படையினருக்கு வழங்கிப் பரீட்சிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தடுப்பு மருந்தான பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் கண்டு பிடிப்பு மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கடந்த வாரம் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகள் இடைநிறுத்தப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதற்கு குறைந்தது 20 வருடங்களாவது தேவை என்பதே அறிவியல் நிலைப்பாடாக உள்ளது. தவிர, இதுவரை தொற்றுநோய்களில் முழுவதுமாகத் துடைத்தளிக்கப்பட ஒன்றாக விளங்குவது பெரியம்மை மாத்திரமே. இந்த நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க மனித சமூகத்திற்கு 200 வருடங்கள் தேவைப்பட்டிருந்தது. எனவே, அவசர அவசரமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தோம் அதனை மக்களுக்கு அறிமுகம் செய்தோம் எனக் கூறுவது அறிவியல் பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றே. அதற்காக, அரசியல் காரணங்களை முன்னிறுத்தி ஒரு மருந்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் நியாயம் அல்ல.
(13.09.20 அன்று வீரகேசரி வார இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபிரசுரம்)