ரெட்டைச்சங்கு
சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவற்றை இயற்றிய புலவர்கள், அன்றிருந்த நிலப்பரப்பை, அதில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை, மற்ற உயிரினங்களை, சுற்றுச்சூழலைப் பதிவுசெய்திருப்பதுதான். அகப்பாடல்கள் ஆனாலும், புறப்பாடல்கள் ஆனாலும், இதனைப் பொதுப்பண்பாகக் காணமுடிகிறது.
யாதொரு புலவரும், தனது மேட்டிமைத்தனத்தைக் காட்டுவதற்காக மட்டுமே கவிதைபடைக்காமல், அன்றைய தமிழ் நிலப்பரப்பபையும், அதில் வாழ்ந்த தமிழ் மக்களின் அன்றைய வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தையும் பதிவுசெய்யும் விதத்திலேயே, கவிதைகளை எழுதியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பாடல்கள்வழியே நாம் அறியமுடிகிறது.
‘கலை, கலைக்காகவே’ என்றும், அதில் அரசியல், சமூகம் சார்ந்து பேசத்தேவையில்லை என்றும், இன்று ஒருசில கவிஞர்கள் வறட்டுத்தனமாகப் பேசியும் எழுதியும் வருவதுபோல், அன்றைய புலவர்கள் நினைத்திருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் வரலாறு நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.
சங்கஇலக்கியங்கள் காட்டும் எத்தனையோ பழக்கவழக்கங்களில் ஒருசில, இன்றளவும் நம்மிடம் வழக்கில் இருந்துவருகின்றன. அவற்றில், ஆண்குழந்தை இறந்தால், அந்தக்குழந்தையின் காதுகளில் ஓட்டையிட்டு, அதன்பிறகு புதைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது என்பதும் ஒன்று.. இந்த வழக்கம் எப்படி வந்திருக்கும் என்று சிந்தித்தால், அதற்கான விளக்கம் ஒரு புறநானூற்றுப் பாடலில் உள்ளது.
“குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்
‘ஆஅள் அன்று’ என்று வாளில்தப்பார்“ (புறம்: 74)
ஆண் என்பவன் போரில் கலந்துகொண்டு விழுப்புண்களைத் தாங்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே, இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டமாகப் பிறந்தாலும், அதனை வாளால் கீறியபிறகே புதைத்திருக்கிறார்கள். என்று சொல்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.
மரணமடைந்தவர்களைக் கள்ளிக்காட்டில் வைத்து எரித்திருக்கிறார்கள் என்னும் செய்தியைப் புறநானூற்றுப் பாடல்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
“யாங்குப் பெரிது ஆயினும், நோயளவு என்னத்தே,
உயிர்செருக் கல்லா மதுகைத்து அண்மையின்?
கள்ளிபோகிய களறியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப்பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே! “ ( புறம் – 245. )
நோயில் இறந்த மனைவியை எரியூட்டிய பின்னே, மன்னன் வருந்திப் புலம்புவதாக அமைந்தப் பாடல் இது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் விளக்கு ஏற்றவேண்டும் அல்லது, விளக்குக் கொளுத்தவேண்டும் என்பது பேச்சுவழக்கு. ஆனால் எங்கள் ஊர்களில், ‘விளக்குப் பொருத்தவேண்டும்’ என்பது வட்டாரவழக்கு.. இந்தப் பொருத்தமற்ற சொல் எங்கிருந்து வந்தது என்பது புரியாமல் இருந்துவந்தது. ஆனால் புறநாநூற்றின் இந்தப்பாடலைப் படித்தபிறகு (கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து – புறம் 247), ‘பொத்திய’ என்பதற்குக் கொளுத்திய என்பது பொருளாகும் என்பது புரிந்தது. இந்தப் ‘பொத்திய’ என்னும் சங்கத் தமிழ்ச்சொல்தான், விளக்குப் பொருத்தல் என்று மருவியிருக்கவேண்டும் என்பதும் புரிந்தது.
சங்ககாலம்தொட்டு, மரணித்தவர்களுக்கான ஈமச்சடங்குகள் செய்வது, தமிழ்மக்களிடம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வழக்கமாக இருந்துவருகிறது.
பிணங்களை எரித்ததன் காரணமாகவே, பெரும்பாலும் சுடுகாடுகள், ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஓடைக்கரைகளில் அமைந்திருக்கின்றன. எரியூட்டியபிறகு, சாம்பலை அருகில் இருந்த நீர்நிலைகளில் கரைத்திருக்கிறார்கள். நீர்நிலைகளில் தலை முழுகி நீராடியும் இருக்கிறார்கள். பிணங்களை எரித்த இடம், ‘சுடுகாடு’ என்றும், புதைத்த இடம், ‘இடுகாடு’ என்றும் அழைக்கப்படலாயின.
மனிதர்களின் பிணங்கள், மற்ற உயிரினங்கள்போல் கழுகுக்கும், காக்கைக்கும், நாய்க்கும், நரிக்கும் இரையாகிவிடக்கூடாது என்பதற்காகவே, மனிதர்கள் கூடி எரியூட்டியிருக்கிறார்கள். அதன்பொருட்டு செய்யப்பட்ட சிலசெயல்கள், பிற்காலத்தில் சடங்குகளாக மாறியிருக்கக்கூடும்.
அப்படி ஒரு ஈமச்சடங்குதான், இழவுவீட்டில், ரெட்டைச்சங்கு ஊதுவது யாராவது இறந்துவிட்டால், அவருக்கான இழவுச்சடங்குகளின்போது, மரண அறிவிப்பாக அலரும், இந்த ரெட்டைச்சங்கு.
மார்கழிமாதத்தில், பண்டாரங்கள் தெருவில்வந்து, ஒற்றைச்சங்கை ஊதிக்கொண்டு ‘தர்மம்’ கேட்பார்கள். அது கேட்பதற்கு இதமாக இருக்கும். அதற்குமாறாக, இந்த ரெட்டைச்சங்கு எழுப்பும் ஒலி, கேட்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அது மனிதர்களின் மரணத்தோடு தொடர்புடையது என்பதுமட்டுமே அதற்கான காரணமாக இருக்கமுடியும்.
மரணச்சடங்குகளை, அந்தந்த ஊர்களில் உள்ள நாவிதர்களே (மருத்துவ சமூகத்தினர்) .செய்துவந்தார்கள். முடிதிருத்தும் வேலையைச் செய்ததோடு, பண்டுவம் (மருத்துவம்) பார்த்ததும்,, ஈமச்சடங்குகளைச் செய்ததும் அவர்கள்தான். மாத்திரமல்ல, மகப்பேறுபார்த்த மருத்துவச்சி நாவிதர்குடியைச் சேர்ந்தவரே. இப்படி, பிறப்புமுதல் இறப்புவரை அனைத்துச் சடங்குகளிலும் பங்கெடுத்து வந்ததும் அந்த நாவிதர் சமூகமே.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படைப்புகளில், மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுவருகிறது, ‘சுளுந்தீ’ நாவல். அந்த நாவலின் நாயகனான ராமன்பண்டுவன், எந்தெந்த சமூகத்தினருக்கு எந்தவிதமாக ஈமச்சடங்குகளைச் செய்யவேண்டும் என்று அவனது மகன் செங்குளத்துமாடனுக்குக் கூறுவதாக, ஈமச்சடங்குகள்பற்றி அழுத்தமாகவும், விரிவாகவும் பதிவுசெய்திருக்கிறார் அதன் ஆசிரியர் இரா.முத்துநாகு.
அந்தப்பதிவை, வெறும் புனைவாகக் கடந்துசெல்ல முடியாது.. அதற்கான காரணமாக ஒருநிகழ்வைக்கூறலாம். ‘சுழுந்தீ’ நாவலில் குறிப்பிடப்படும் ‘இடைச்சவரம்’ என்பதை இன்றைய இளைஞர்கள் கேட்டுகூட அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால், எங்களுடைய சிறுவயதில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் திருமணங்களில், இளைஞர்கள் தாடிவைப்பது நாகரீகமாகக் (fashion) கருதப்படுகிறது. ஆனால், எங்கள் காலங்களில், திருமணத்திற்கு முன்தினம், மணமகனுக்கு முகச்சவரம் செய்வதோடு, மணமகனுக்கும், மணமகளுக்கும் ‘இடைச்சவரமும்’ செய்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆணுக்கு நாவிதரும், பெண்ணுக்கு அவரது மனைவியான மருத்துவச்சியும்தான் செய்தார்கள். நாங்களே நேரடிசாட்சி என்பதால், எங்கள் தலைமுறையினரால், சுளுந்தீ நாவலின் பலதரவுகளை வரலாறாக ஏற்பதில் தயக்கம் ஏற்படுவதில்லை.
அந்தக் காலங்களில், பெண்பார்க்கும் நாளில், மாப்பிள்ளையின் உடன்பிறந்தாள், பெண்ணுக்கு சேலைகட்டிவிடுவது என்னும் வழக்கம் இருந்தது. அது வெறும் சடங்கு மட்டுமே அல்ல. அப்படிச் செய்வதனால், மணப்பெண்ணின் உடல்கூறுகளை மணமகன் வீட்டார் அறிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது.
போலவே, ஆணுக்கு இடைச்சவரம் செய்யும் நாவிதருக்கு, அந்தஆணின் ஆண்மையை அறியும் வழியாகவும் இருந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பாகவே, ஆண் மற்றும் பெண்ணின் திருமணம்சார்ந்த உடற்தகுதிகளைக் கண்டறிவதற்காகவே இப்படிப்பட்ட சடங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பிற்காலத்தில் எல்லாமே வெற்றுச்சடங்குகள் ஆகிவிட்டன.
அன்றைய காலங்களில், எங்கள் ஊர்களில் நாவிதர் மற்றும் வண்ணார் சமூகத்தினருக்கு, அன்றாடக்கூலி இல்லை. ‘பூக்கொத்து’ கொடுப்பார்கள். ‘பூ’ என்பது ஒரு அறுவடைக்காலம் ஆகும். அறுவடைக்கூலியைக் ‘கொத்து’ என்பார்கள். .ஒவ்வொரு அறுவடையின்போதும், நாவிதர், வண்ணார் போன்ற தொழிலாளிகளுக்கு, நெல் அளந்து கொடுப்பார்கள்..
அதனால், ஒரு வீட்டில் எத்தனைபேர் என்றாலும் எத்தனைமுறை என்றாலும் முடிதிருத்திக்கொள்ளும் கொடுமையும் நடந்தது. துணிவெளுப்பதும் அப்படித்தான். ஒருவிதத்தில் அது வன்முறையும்கூட. நிலம் இல்லாதவர்கள் காசுகொடுப்பார்கள். அதனை அந்தத் தொழிலாளிகளும் விரும்புவார்கள்
கூலி இல்லை என்பதால், நாவிதர் மற்றும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலும், மாலையிலும் சோறு வாங்குவதற்காக வீடுவீடாக வருவார்கள். ‘சட்டிச்சோறு’ என்று அதனைச் சொல்வதுண்டு. வைத்துக்கொண்டே, இல்லை என்று சொல்பவர்களும் இருந்தார்கள். புளித்து ஊசிப்போன கஞ்சியை ஊற்றியவர்களும் இருந்தார்கள். இந்த விதமான சாதியக்கொடுமைகளை எங்கள் காலத்திலேயே பார்த்ததுண்டு.
பிராமணர்களுக்கு அடுத்தபடியாக, நாவிதர்களுக்கு மட்டுமே பயிர்செய்யும் வகையில், நஞ்சைநிலம் இனாமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாக, சுழுந்தீ நாவலில், குறிப்பு வருகிறது. அதாவது, நாவிதர்கள் நிலவுடமைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். எனில், பதினெட்டாம் நூற்றாண்டிற்குப்பிறகு, அந்தச்சமூகம் உணவுக்காக, வீடுவீடாகச்சென்று கையேந்தும்நிலை எப்போது, யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் ஆய்வுக்குரியதாகும்.
நெல்லைமாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பாபனாசம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது சிவந்திபுரம் என்னும் ஊர். நாயக்கர்காலத்தில், திருவாவடுதுறை மடத்திற்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட எட்டு ஊர்களில், சிவந்திபுரம் முதன்மையானது என்று தமிழ்த்தாத்தா உ.வெ.சா ‘என்சரிதை’ நூலில் (பக்.449) பதிவு செய்திருக்கிறார். அதனால், அவ்வூர் ‘இனாம்சிவந்திபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது.
சிவந்திபுரத்தில், திருவாவடுதுறைக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய மடமும் உள்ளது. உ.வெ.சா அந்தமடத்தில் 42 தினங்கள் தங்கியிருந்திருக்கிறார், எட்டு மரபுச்செய்யுட்களும் இயற்றியிருக்கிறார். .அந்த சிவந்திபுரம்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர்.
தாமிரபரணி பாசனத்திற்குட்பட்ட, இருபோகம் நெல்விளையும் நஞ்சைநிலங்கள் ஏராளமாக உண்டு. அத்தனையும் மடத்திற்குச் சொந்தம். மடத்திற்கு ‘பாட்டம்’ அளக்கவேண்டும். கதிரடிப்புக் களத்திற்கே வந்து, மடத்துக்காவலர்கள் நெல்லை அளந்து எடுத்துச்செல்வார்கள். சரியான விளைச்சல் இல்லாதபோது, பாட்டம் அளந்ததுபோக, விவசாயிக்கு எதுவுமே மிஞ்சாது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகும் இது தொடர்ந்தது.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து, அந்த ஊரில் இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்விளைவாக, மடத்திற்குப் பாட்டம் அளப்பது நின்றது. விவசாயிகள் முழுமையாகப் பயனடைந்தார்கள். வீட்டுமனைகளைச் சொந்தமாக்குவதற்காக, இன்றும் மடத்திற்கும், குடிமக்களுக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
சிவந்திபுரத்தில்(கஸ்பா), நாவிதர்குடியைச் சேர்ந்த கணபதி மற்றும் அவரது தம்பி சங்கரன் என்று இருவர் இருந்தார்கள். அருகில் உள்ள கோடாரங்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே ஈமச்சடங்குகளைச் செய்வார்கள். ஆனாலும், அண்ணன் கணபதிதான் ரெட்டைச்சங்கு ஊதுவார்.. தாமிரபரணிக்கரையில் உள்ள சுடுகாடு வரை சங்கு ஊதிக்கொண்டே செல்லவேண்டும். சங்குசத்தம் கேட்ட உடன், எதிரில் யாரும் வரமாட்டார்கள். அந்தக்காலங்களில், நெடுஞ்சாலைகளில் பிண ஊர்வலம் வரும்போது, எதிரில் வரும் வாகனங்களை நிறுத்தி, ஊர்வலம் கடந்துசெல்லும்வரை எஞ்சின்களையும் அணைத்துவிடும் வழக்கம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக இருந்தது. அப்படி ஒரு மரியாதை கொடுக்கப்பட்டது.
அவர்களுக்குப்பிறகு வந்தவர்கள் ஈமச்சடங்கு செய்கிறார்கள். ஆனால், ரெட்டைச்சங்கு ஊதுவதில்லை. அதற்குப்பதிலாக மணியை ஆட்டி ஒலியை எழுப்பிக்கொண்டே செல்கிறார்கள். அதில் ஒரு வசதியும் உள்ளது. பயிற்சி எல்லாம் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் மணிஆட்டலாம்.
கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாகப் பலஊர்களுக்கு, பலருடைய மரணங்களுக்கும் சென்றுவருகிறேன். எங்குமே இந்த ரெட்டைச்சங்கை நான் பார்த்ததும் இல்லை, அதன் ஒலியைக் கேட்டதும் இல்லை.
ஆனால், சிலதினங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரது மரணத்திற்காக, தெற்குவள்ளியூர் (திருநெல்வேலிமாவட்டம்) சென்றபோது, அங்கு ஒருவர் அதிலும் குறிப்பாக இளைஞர், ரெட்டைச்சங்கை வைத்திருந்ததும், ஊதியதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
அதுதான் ரெட்டைச்சங்கு பற்றி பதிவுசெய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியது. என்ன ஒரு வேறுபாடு என்றால், அந்த இளைஞருக்கு மூச்சடக்கி, கூடுதல் நேரம் ஊதமுடியவில்லை. நாவிதர் கணபதி மூச்சடக்கி, ரெட்டைச்சங்கில் உரத்து ஒலிஎழுப்பிக்கொண்டே, நூறடிதூரம் வரையிலும் நடந்துசெல்ல அவரால் முடிந்தது.
இப்போதெல்லாம், பலஊர்களில், ரெட்டைச்சங்கு ஊதுவதற்கு மட்டுமல்ல, ஈமச்சடங்கு செய்யவே ஆட்கள் இல்லை. அவற்றைச் செய்துவந்த நாவிதர் குடும்பங்களில் அடுத்தடுத்தத் தலைமுறையினர், அந்தத்தொழிலை விட்டே வெளியேறிவிட்டனர். ஒருசிலர் முடிதிருத்தும் தொழிலை மட்டும் செய்தாலும், ஈமச்சடங்கைச் செய்வதில்லை. மிகச்சிலரே, முடிதிருத்துவதோடு ஈமச்சடங்கையும் செய்துவருகின்றனர். அவர்களும் ரெட்டைச்சங்கு ஊதுவதில்லை.
அடுத்துவரும் காலங்களில், ஈமச்சடங்குகளைச் செய்வதற்கான ஆட்கள், நாவிதர் சமூகத்தில் இருக்கமாட்டார்கள். ஒன்று மற்றசமூகத்தினர், மூடச்சடங்குகளைக் கைவிடவேண்டும், அல்லது அவரவரே, அவரவர் இழவுச்சடங்குகளைச் செய்துகொள்ளும் நிலை ஏற்படும். .
காலம் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. இப்படி சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு, இழிதொழிலாகக் கருதப்படும் கண்மூடிவழக்கங்கள், மண்மூடிப்போகும் காலமும் வரும், வரவேண்டும்.