பாலினச் சமத்துவம் குறித்து கார்ல்மார்க்ஸ்
டோபிரெய்னர்
தமிழில் : எஸ்.வி.உதயகுமார்
பாலினச் சமத்துவம் குறித்த கார்ல்மார்க்ஸின் பதிவு, ‘காலஞ்சென்ற எந்த ஒரு வெள்ளையின ஆண் சிந்தனையாளரையும் ’போலவேதான் இருக்கிறது என்று பொதுவில் நம்பப்படுகிறது. “அவருடைய கோட்பாட்டுத் திட்டத்தில் பாலின வேறுபாடு என்பது ஒரு முக்கியமான ஆய்வுப் பொருளாக இல்லை” என்கிறார்கள் (Carver, 1998:206). பாலினவேறுபாடு பற்றி எந்த ஒரு குறிப்பும் தராமலே அவருடைய சிந்தனைகளுக்கு முழுமையான உரைகளைத் தந்துவிடமுடியும் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஆல்வின்கோல்ட்னரின் (Gordner, 1980) ‘இரண்டு மார்க்ஸியங்கள்’ நூலின் பொருள் அட்டவணையில் ‘பெண்கள்’, ‘பாலினம்’, ‘பால்’, ‘பால்உறவுகள்’, ‘குடும்பம்’ அல்லது இது போன்ற எந்த ஒரு சொற்கூறும் இல்லை என்கிறார்கள். (இது மார்க்ஸின் அக்கறை என்பதை விடவும், கோல்ட்னரின் அக்கறை குறித்தது.)
மார்க்ஸ் பற்றிய இந்தக்கருத்து தவறான புரிதலைக் கொண்டது. ஆண்-பெண் உறவுகளில், குறிப்பாக திருமணம் என்ற சூழமைவில், உள்ள பிரச்சினை குறித்து மார்க்ஸ் அக்கறை கொண்டிருந்தார். இந்தப்பொருள் குறித்த அவருடைய குறிப்புகள் சிலவே ஆயினும், எங்கெல்லாம் அவை வெளிப்படுகின்றனவோ, அங்கே அவை பேரார்வம் கொண்டனவாக, தீர்க்கமானவையாக இருக்கின்றன.
வெறுமனே தனிச்சொத்தை ஒழிப்பதன்மூலம் முதலாளித்துவத்தின் கேடுகளைக் களைந்து விடமுடியும் என்று கருதிய ‘கொச்சைக் கம்யூனிஸ்டுகளைத் தாக்கி மார்க்ஸ் எழுதும்போது, திருமணம் என்பது “முற்றுரிமை வாய்ந்த ஒரு தனிச்சொத்து வடிவம் என்பதில் மறுபேச்சில்லை” என்று கூறுகிறார் (Marx, 1983-EPM:146-148). அடிமைத்தனம் என்பது குடும்பத்தின் உள்ளார்ந்த அம்சமாக இருக்கிறது என்று ‘ஜெர்மன் கருத்தியல்’ நூல் நெடுக வாதிடுகிறார் ((Marx and Engels, 1983-GI:165) . ‘முதல் உடைமை வடிவம்’ என்று மார்க்ஸ் கருதும் பழங்குடி உடைமை குறித்த அவருடைய விவரிப்பை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஜான் ஸ்டூவர்ட் மில் எழுதிய ‘பெண்களின் அடிமை நிலை’ என்ற நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த முக்கியமான பெண்ணிய எழுத்துக்களுள் ஒன்றாகக் கருதப்படுவது. அதன் முக்கியமான அம்சங்களுள் ஒன்று, குடும்பத்தில் பெண்களின் நிலைக்கும் சமூகத்தில் அடிமைகளின் நிலைக்கும் உள்ள ஒப்பீடு. “மனைவி என்பவள் உண்மையில் கணவனின் அடிமையே; சட்டப்படியான கடமைகளைப் பார்க்கையில் அவளது நிலை ஓர் அடிமையின் நிலைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல” என்பது மில்லின் வாதம் (Mill, 1989:147). இது ‘ஜெர்மன் கருத்தியலில் ’மார்க்ஸ் எழுதியுள்ளவற்றை ஒத்ததுதான். சொல்லப்போனால், இந்தக் கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாகவே இருந்தது.
‘கம்யூனிஸ்டு அறிக்கையில்’ முதலாளித்துவச் சமூகத்தின் குடும்பம் குறித்துத் தாக்கியே மார்க்ஸ் விமர்சனம் செய்திருக்கிறார். “உற்பத்திக்கான ஒருவெறும் கருவியாகவே” ஒரு மனைவி கருதப்படுகிறாள் என்றும், முதலாளித்துவச் சமூகத்தில் திருமணம் என்பது “உண்மையில் பொதுநிலைப்பட்ட மனைவிகளின் ஓர்அமைப்பு முறையே” என்றும் கூறியிருக்கிறார் (Marx and Engels, 1983-MCP:224). பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் பலரையும் போலவே மார்க்சும் பாலின அடையாளம் குறித்துப் பெரிதாக ஏதும் கூறவில்லைதான். ஆனாலும் மூலதனம் நூலின் முதலாம் தொகுதியில் பெண்ணினம் குறித்த ஒரு வளர்ச்சிப் பாங்கான வரைவை அளித்திருக்கிறார் (Marx, 1976:593-595).
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு பரந்துபட்ட சமூகப் போக்குகளைப் பிரதிபலிப்பதாக மார்க்ஸ் கருதினார். சொல்லப்போனால், அத்தகைய உறவுகளுக்கே உரித்தான “தனித்துவமான வடிவம்” என்பது “அமைப்புமுறை முக்கியத்துவம்” வாய்ந்தது என்று கருதினார் (Avineri, 1968:89). அதாவது, சோசலிசச் சமூகத்தில் நிலவவேண்டிய மனித உறவுகளுக்கான பொதுவான மாதிரி வடிவமாக அவற்றை (ஆண் – பெண்உறவுகள்) உருப்படுத்திக்காட்டமுடியும். மனிதர்களின் தவிர்க்கவியலாத பரஸ்பரச் சார்ந்திருப்பையும் மனித உறவுகளில் பிறர்நோக்கு என்பதையும் இத்தகைய உறவுகள் (ஆண்-பெண் உறவுகள்) மெய்ப்படுத்திக் காட்டுவதாலேயே இவை மாதிரி வடிவமாய் இருக்கத் தகுந்தனவாகின்றன (Avineri, 1968:91).
புரூதான் போன்ற கம்யூனிஸ்டுகள் வலியுறுத்திய திருமண ஒழிப்பை மார்க்ஸ் சரியான தீர்வாகக் கருதவில்லை. வெறும் தனிச்சொத்து ஒழிப்பு என்பது எவ்வாறு “பொதுச் சொத்தை அனைவருக்குமான சூறையாடலுக்கு ”உட்படுத்துமோ, அதேபோல திருமண ஒழிப்பு என்பது பெண்களை “அனைவருக்குமான பரத்தைகளாக” ஆக்கிவிடும் (Marx, 1983-EPM:147). தனிச்சொத்து ஒழிப்பு என்பது உழைப்பின் அந்நியமாதலை முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. ஏனென்றால் தன் உழைப்பின் விளைவான பொருளில் இருந்து உழைப்பாளி இன்னும் பிரிக்கப்பட்டவனாகவே இருப்பான் – சக உழைப்பாளிகளிடமிருந்து பிரிக்கப்படாமல் இருந்தாலும்கூட. அதைப்போலவே, திருமண ஒழிப்பு என்பது பெண்களை தனிப்பட்ட ஒருவரின் முற்றுரிமை வாய்ந்த தனிச்சொத்தாக இருப்பதிலிருந்து விடுவிக்கக்கூடுமே தவிர, ஆண்களின் சொத்தாகப் பெண்கள் பாவிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவராது.
ஆண்கள் – பெண்களுக்கு இடையிலான வேறுபாடுகளை முதலாளித்துவச் சமூகத்துக்குள்ளாகவே களைந்துவிட முடியாது என்று மார்க்ஸ் கருதினார். ஆனால் இதற்கு மாறாக, “முதலாளித்துவமே இந்தப்பிரச்சினையை வேகமாகத் தீர்த்துக்கொண்டு வருவதாக மார்க்ஸ் கருதியிருந்தார்” என்று ஐசாக்பல்பஸ் கூறுகிறார் (Balbus, 1982:63). ஆனால், பொது அரங்கிலிருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதைக்கூட முதலாளித்துவம் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று மார்க்ஸ் நம்பவில்லை. அப்படியிருக்க, ஆண்களின் சொத்தாக மனைவிகள் கருதப்படுவதை முதலாளித்துவம் மாற்றிவிடும் என்று அவர் எவ்வாறு நினைத்திருக்கமுடியும்? இம்மாதிரியான அநீதிகளை முடிவுக்குக் கொண்டு வருவது என்பதற்கு அடிப்படையான சமூகநிலை மாற்றம் தேவை என்றுதான் மார்க்ஸ்கருதினார். மாற்றம் கொண்ட சமூகத்தில் எவர் ஒருவரும் தன்னுடைய கூட்டாளியை வெறும் உற்பத்திக்கான கருவியாகப் பார்க்கமாட்டார்.
குடும்பம் குறித்த மார்க்ஸின் துண்டெழுத்துகள்
குடும்பம் என்ற விஷயத்தோடு மார்க்ஸைத் தொடர்புபடுத்திப் பார்க்கப் பெரிதாய் ஒன்றும் இல்லை என்றுதான் எடுத்தவுடனே ஒருவருக்குத் தோன்றும். ஆண்கள் – பெண்களுக்கு இடையிலான உறவுகள் குறித்து அவர் அபூர்வமாகவே எழுதினார். எனவே அவரை விளக்குபவர்கள் அத்தகைய உறவுகள் குறித்து அவர்நாட்டம் கொண்டிருக்கவில்லை என்று கூறுகிறார்கள். அல்லது அவை பிரச்சினைக்குரியவை அல்ல என்று அவர் கருதியதாகக் கூறுகிறார்கள். அல்லது முதலாளித்துவத்தின் எழுச்சியில் அவை மறைந்துபோகும் என்று அவர் கருதியதாகக் கூறுகிறார்கள். அல்லது அவரும் ஒரு வழக்கமான ஆணாதிக்கச் சிந்தனையாளர்தான் என்று கூறுகிறார்கள். சொல்லப்போனால், எளிதில் பெறக்கூடிய விவாகரத்துக்கு இளம்மார்க்ஸ் ‘Rheinische Zeitung’ செய்தித்தாளில் காட்டிய எதிர்ப்பு, டிபொனால்டு, மோஸர் போன்ற பழமைவாதிகளின் சிந்தனையை ஒத்ததாக இருந்ததே தவிர, விவாகரத்து உரிமையில் ஆர்வம் காட்டிய மில் போன்ற அபூர்வமான சிந்தனையாளர்களோடு ஒத்ததாக இல்லை என்றும் கூறப்படுகிறது (Marx, 1983-DDL:83-87 –Moser, 1997:70-74; De Bonald, 1997:123-133)). மேலும், ‘ஜெர்மன் கருத்தியல்’ நூலில், வேலைப் பிரிவினை என்பது பாலினச் செயல்பாட்டின் வேலைப் பிரிவினையிலிருந்து உருவாகி, இயல்பான மனச்சாய்வினால் தன்னிச்சையாகவும் இயல்பாகவும் வளர்ந்தது என்று மார்க்ஸ் கூறுகிறார் (Marx and Engels, 1983-DI:174-175). இது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இயற்கையாக அமைந்த வேறுபாடுகளை சமூகவேலைப் பிரிவினையோடு தொடர்புபடுத்தி கேள்விக்குரியனவாக ஆக்காமல், இயற்கையில் வழங்கப்பட்டனவாகவே மார்க்ஸ் எடுத்துக்கொள்வதாகக் கருத இடமளிக்கிறது.
மார்க்ஸ் குறித்த ஒரு வழக்கமான விளக்கமாக இருப்பது பல்பஸின் வாதம். ‘முதலாளித்துவத்துக்கு முற்பட்ட, பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஆணாதிக்கம் போன்ற, பொருளாதாரம் தவிர்த்த பிற கட்டுத்தளைகளை எல்லாம் முதலாளித்துவமே கிழித்துப் போட்டுவிடும்; இவ்வாறாக, மூலதனத்தின் ஆதிக்கம் ஆண்களின் ஆதிக்கத்தைப் போக்கிவிடும்’ என்று மார்க்ஸ் கருதியிருந்ததாக பல்பஸ் கூறுகிறார் (Balbus, 1982:65).
‘கம்யூனிஸ்டு அறிக்கையில் ’மார்க்ஸ் கூறுவதை பல்பஸ் சுட்டிக்காட்டுகிறார். “உழைப்பாற்றலின் பிரதிநிதிகளாக ”மனிதப் பிறவிகளைக் குறுக்கிவிடுவதன் மூலம், பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினையை முதலாளித்துவம் சாத்தியமற்றதாக்கிவிடுகிறது; பொருளாதார அடிப்படையிலான பிரிவினையை மட்டுமே அது உறுதிப்படுத்துகிறது (Balbus, 1982:65).
“அனைத்து நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க, சௌகரிய உறவுகளுக்கும் முதலாளித்துவம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மனிதனுக்கு அவனுடைய ‘இயற்கையான எஜமானர்களுடன்’ இருந்த நானாவிதப் பிணைப்புகளையும் கிழித்துப் போட்டுவிட்டது. பட்டவர்த்தனமான சுயநலத்தைத் தவிர, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறு எந்தவிதமான உறவையும் அது விட்டுவைக்கவில்லை” என்று கூறுகிறார் மார்க்ஸ் (Marx and Engels, 1983-MCP:206). மனிதஉறவுகள் அனைத்தையும் பரிவர்த்தனை விதிகளுக்கு உட்படுத்தியதன் மூலம், பாலினச் சமத்துவமின்மை என்பது வர்க்க முரணுக்குள் அடங்கவேண்டிய கட்டாயத்தை முதலாளித்துவம் உறுதிப்படுத்தியது.
“குழந்தை வளர்ப்புப் பொறுப்புகள் முற்றிலும் பெண்களுக்கே உரித்தானவை எனும் தொன்று தொட்ட பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினைச் சட்டகத்துக்கு உள்ளேயே முதலாளித்துவம் நிலவுகிறது; இந்தப் பொறுப்புகள் பெண்களை வீட்டோடு கட்டிவைக்கின்றன; எனவே பணியிடத்திலிருந்து பெண்களைத் தள்ளிவைப்பதை முதலாளித்துவம் சுவீகரித்துக்கொண்டுள்ளது” என்ற உண்மையைக் காண மார்க்ஸ் தவறிவிட்டார் என்கிறார் பல்பஸ் (Balbus, 1982:65 – Carver, 1998:206-207).
இந்தப் பிரச்சினை குறித்து மார்க்ஸ் குறைவான கவனமே செலுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம், முதலாளித்துவத்தின் தொடர்ந்த வளர்ச்சியில் இந்தப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று அவர் கருதியதல்ல. மாறாக, முதலாளித்துவத்தையே ஒழிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விடமுடியாது என்று கருதியதுதான்.
“முதலாளித்துவ உற்பத்தி முறையானது உற்பத்தி இடத்துக்கும் நுகர்வு இடத்துக்கும் இடையில், பணியிடத்துக்கும் வீட்டுக்கும் இடையில் ஆழமான பிரிவை ஏற்படுத்துகிறது” என்ற பல்பஸின் (Balbus, 1982:67) கருத்தை மார்க்ஸ் ஒப்புக் கொண்டிருக்கக்கூடும். முதலாளித்துவத்தில் பெண்களை நுகர்பொருட்களாக ஆண்கள் காண்கிறார்கள் என்பதையும் அவர் நிச்சயம் ஒப்புக் கொண்டிருந்திருப்பார். “ஆணாதிக்கத்தின் விதி முதலாளித்துவத்தின் விதியோடு பிரிக்கவியலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது” (balbus, 1982:67) என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார். சரியாக இந்தக் காரணத்தாலேயே மார்க்ஸ் ஆண்கள்-பெண்களுக்கு இடையிலான சமத்துவமின்மை குறித்து அதிகம் எழுதவில்லை. அதற்கான தீர்வுக்கு பரந்துபட்ட சமூகநிலைமாற்றம் தேவை.
பொதுவில் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் பாலின விஷயத்தில் அதிக சமத்துவப் பார்வையை மார்க்ஸ் கொண்டிருந்தார் என்பதற்கான துப்பாக Rheinische Zeitung’ செய்தித்தாளில் வெளிவந்த அவருடைய கட்டுரை அமைந்திருப்பது ஆச்சரியமானது. இது ஏன் ஆச்சரியமானது என்பதற்கு அவருடைய வாதங்களைச் சற்று விரிவாகக் காணவேண்டும். 1842ல் பிரஷ்யாவில் விவாதிக்கப்பட்டு வந்த விவாகரத்து மசோதா குறித்த ‘அந்தச் செய்தித்தாளின் நிலைப்பாடு முற்றிலும் புறிக்கணிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற போதிலும், அது ஏற்புக்குரியதன்று என்று எவரும் நிரூபிக்கவில்லை’ என்று அந்தக்கட்டுரையைத் தொடங்குகிறார் மார்க்ஸ். அதுவரை நிலவிவந்த, விவாகரத்து வழங்குவதற்கான எண்ணற்ற அற்பமான அடிப்படைகள் அனுமதிக்கப்பட முடியாதன என்ற அளவில் அந்த மசோதாவோடு ஒத்துப்போவதாக மார்க்ஸ் கூறுகிறார் (Marx, 1983-DDL:83). இதனாலேயே, திருமணத்தின் புனிதத்தன்மையை உயர்த்திப்பிடிக்கும் பழமைவாதிகளில் ஒருவராக மார்க்சும் விவாகரத்து குறித்துக் கருத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றக்கூடும்.
ஆனால், அவர்களுக்கும் மார்க்சுக்கும் இடையில் மிக ஆழமான வேறுபாடு இருக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விவாகரத்தை எதிர்ப்பவராக மார்க்ஸ் இருக்கவில்லை. மாறாக, விவாகரத்தை “அதனளவிலேயே” எதிர்ப்பவராக இருந்தார். “உண்மையான அரசு”, “உண்மையான நட்பு”என்பவற்றைப் போலவே “உண்மையான திருமணமும்” கரைத்தழிக்கப்பட முடியாதது (Marx, 1983-DDL:85). எனினும், நடைமுறையில் உள்ள ஒரு திருமணம் முடிவுக்கு வரக்கூடும் – அது நடைமுறையில் செயலற்றுப் போயிருக்குமானால். அத்தகைய சூழ்நிலைகளில், விவாகரத்து என்பது திருமணத்தின் முடிவுகுறித்த ஓர் அறிவிப்பாகவே அமைகிறது (Marx, 1983-DDL:86). பிரஷ்யச் சட்டமன்றத்தினரின் தவறு என்னவென்றால், திருமணத்தின் இயல்பைத் தவறாகப் புரிந்திருந்ததுதான். அவர்கள் அதை ஒரு “மத நிறுவனமாகப்” பார்த்தனர். ஆனால் உண்மையில் அது ஒரு “நெறிமுறை நிறுவனமாகும்”. விளைவாக, “திருமணத்தின் உலகியல் தன்மையை அவர்கள் காணத் தவறினர்” (Marx, 1983-DDL:83).
விவாகரத்துக்குக் குறிப்பிடத்தக்க அளவில் தடைகள் இருக்கவேண்டும் என்று மார்க்ஸ் கருதினார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால், திருமணம் என்பதை அவர் “ஒருநெறிமுறை உறவாக” வரையறுத்திருந்தார். நட்புடனும் ஹெகலின் இலட்சிய அரசுடனும் திருமணத்தை ஒப்பிட்டிருந்தார் (Marx, 1983-DDL:85). ஒரு ஹெகலிய அரசு சமத்துவமானதாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. நட்பு குறித்த மிகப் பிரபலமான அரிஸ்டாட்டிலின் தத்துவ விளக்கம் சமமானவர்களுக்கிடையில் நட்பு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தவில்லை; சமமில்லாதவர்களுக்கு இடையிலான நட்பையும் அது விவரிக்கிறது (Aristotle, 1998:218-219). ஹெகலிய அரசு என்பது ஒரு “நன்னெறிச்சமூகம்” ஆகும். அது “நேர்மையையும்” “நற்பண்பையும்”கோருவது (Hegel, 1991:193-194). எப்படிப் பார்த்தாலும், மார்க்ஸ் இலட்சியமாகக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நன்னெறிச்சமூகத்திலோ அல்லது நெறிமுறையான உறவிலோ அடிமைத்தனம் என்பதற்கு எந்த இடமும் இருக்க வாய்ப்பில்லை. இது உணர்த்துவது என்னவென்றால், நடைமுறையில் உள்ள திருமணம் (அதாவது ‘ஜெர்மன் கருத்தியல்’ நூலில், திருமணம் என்பது அடிமைத்தனத்தைத் தன் உள்ளார்ந்த அம்சமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளபடி) ஓர் உண்மையான திருமணமாக இருக்கமுடியாது. அது ஒரு மதமார்ந்த திருமணமாக இருக்கலாம், ஆனால் நெறிமுறையான திருமணமாக இல்லை. எனவே, ‘யூதப்பிரச்சினை குறித்து’ என்ற நூலில் மார்க்ஸ் எழுப்பிய அதே ஆட்சேபங்களுக்கு இதுவும் உள்ளாகும்; அத்திருமணம் “மனிதவிடுதலைக்கு” உதவுவதாக இருக்கமுடியாது (Marx, 1983- OJQ: 114). மதமார்ந்த திருமணங்கள் மனிதர்களுக்கு “கற்பிதமான மகிழ்ச்சியைத்” தரலாம், ஆனால் “உண்மையான மகிழ்ச்சியைத்” தந்து விடமுடியாது என்று ‘ஹெகலின் உரிமைத்தத்துவம் குறித்த விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு’ நூலின் முன்னுரையில் கூறுகிறார் மார்க்ஸ் (Marx, 1983- CCHPR : 115).
மார்க்ஸைப் பொருத்தளவில், நிலவிவரும் திருமணங்களுக்கும் “உண்மையான” திருமணத்துக்கும் இடையில் வேறுபாடு உண்டு. உண்மையான திருமணம் என்பது நெறிமுறைப்பட்ட உறவு. இந்த நெறிமுறைப்பட்ட உறவின் தன்மை பற்றி ‘பொருளாதார தத்துவக் கையெழுத்துப்படிகள்’ நூலில் சற்று விரிவாகக் கூறுகிறார். பாலின உறவுகள் தேவையானவை, அதேவேளை இயல்பானவை. “பிற மனித-நோக்கு என்பதைத் தனிச் சிறப்பாகக் கொண்டவை. பாலின உறவில் மனிதனுக்கு ஒருகூட்டாளி தேவைப்படும் காரணத்தாலேயே ஒருவருடைய நிறைவு என்பது அடுத்தவரின் நிறைவைப் பொருத்ததாக இருக்கிறது. வரையறையின் படியே, பாலின உறவுகள் பரஸ்பரமானவை” (Avineri 1968:89). பரஸ்பரமற்ற உறவு என்பது உறவாகவே இருக்காது. ஏனென்றால் அதில் ஒருவர் மற்றவரை தனக்கு ஆட்பட்ட பொருளாகக் கருதிச் செயல்படுகிறாரே தவிர, தன் கூட்டாளியாகக் கருதிச் செயல்படுவதில்லை (Avineri, 1968:89). ஒரு கூட்டாளியின் நலம் என்பது மற்ற கூட்டாளியின் நலத்தைச் சார்ந்ததாகவும், ஒருவர் மற்றவரிடம் நாடுவது என்பது இருவருக்குமே, அந்த உறவுக்கே ஒட்டுமொத்தமாகப் பயனளிப்பதாகவும் இருப்பதுதான் உறவு என்பது.
ஆக, முதலாளித்துவச் சமூகத் திருமணத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது பொதுநிலையில் பெண்களைச் சொத்தாகவும், மனைவிகளை உற்பத்திக்கான கருவிகளாகவும் பாவிக்கிறது என்பது (Marx and Engels, 1983-MCP:224). விளைவாக, முதலாளித்துவச் சமூகத்திருமணம் உண்மையான திருமணமாக இருப்பதில்லை; அது ஓர் உண்மையான உறவாகவும் இருப்பதில்லை. எந்த உறவில் கூட்டாளி ஒருவர் (அல்லது இருவருமோ) பொருளாக்கப்படுகிறாரோ, அது உறவாகவே இருக்கமுடியாது. மாறாக அது ஒரு பரிவர்த்தனையாக, வணிகச் செயல்பாடாகவே இருக்கும்.
புரூதானின் கம்யூனிசத்தில் உள்ள பிரச்சினையும் அதுதான். அது திருமணத்துக்குப் பதிலாக கூட்டாளிகளைப் பொதுவில் பகிர்ந்து கொள்வதை முன்வைக்கிறது. ஆனால் ஆண்கள்-பெண்களுக்கு இடையிலான உறவுகளில் வேறு எந்தமாற்றத்தையும் முன்வைப்பதில்லை. தனிப்பட்ட ஆண்களின் முற்றுரிமை வாய்ந்த தனிச்சொத்தாகப் பெண்களைப் பயன்படுத்துவதை இந்த வகையான கம்யூனிசம் முடிவுக்குக் கொண்டுவரும். ஆனால் பெண்களைப் பொதுச் சொத்தாக்கிவிடும். “திருமணம் என்ற நிலையிலிருந்து அனைவருக்குமான பரத்தைகள் என்ற நிலைக்கு பெண்களைத் தள்ளிவிடும்” (Marx, 1983-EPM:147).
பெண்களை “சமூகக் காமத்திற்கான இரைகளாக, பணிவிடைக்காரிகளாகப்” பார்ப்பதன் மூலம், முதலாளித்துவமும் சரி கொச்சைக் கம்யூனிசமும் சரி, ஒரு சமூகத்தின் “எல்லையற்ற சீரழிவையே” வெளிப்படுத்துகிறார்கள். அந்தச் சமூகத்தில் ஒருமனிதன் “தனக்காக மட்டுமே வாழ்கிறான்” (Marx, 1983-EPM:148). முதலாளித்துவச் சமூகத்தில் உள்ளதைப் போல பரிவர்த்தனைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட திருமணம், அல்லது பிரஷ்யச் சட்டமன்றம் முன்வைத்த மசோதாவில் உள்ளபடி மதத்தை அடிப்படையாகக் கொண்ட திருமணம் என்பது உண்மையான திருமணம் என்பதற்கு வெகு தொலைவானது. விடுதலையை அடைய மனிதர்களுக்கு உதவுவதாக இல்லாமல் “கடையாந்தரமான கேலிக்கூத்தாகி” விட்டது (Avineri, 1968:90). திருமணத்தை ஒழித்துவிட்டுக் கூட்டாளிகளைப் பொதுவில் பகிர்ந்துகொள்வது என்பதும் இதே போன்றதுதான்.
இதற்கான மாற்று என்பது குறித்து மார்க்ஸிடமிருந்து விவரமாக ஏதும் வெளிக்காட்டப்படவில்லை. ஆனால், அதனாலேயே அவருக்கு அது முக்கியத்துவம் வாயந்ததாய் இருக்கவில்லை என்று கூறமுடியாது. பொதுவாக கம்யூனிசச் சமூகத்தின் தன்மைகள் குறித்த விவரிப்பே குறைவுதான். எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கவேண்டிய நெறிமுறையான உறவு குறித்து அவர் கூறியிருக்கிறார். இருமனிதப் பிறவிகளுக்கு இடையே உள்ள “உடனடியான, இயல்பான, அவசியமான உறவு” என்று அதை அவர் விவரிக்கிறார் – அதாவது, மனித இனத்தின் “இயல்பான இன உறவு” (marx, 1983-EPM:148). காதல் உறவுகளில் மற்ற மனிதப்பிறவிகளுடன் நாம்கொள்ளும் உறவு இயற்கையுடன் கொள்ளும் உறவைப்போல் இருக்கிறது – ஏதோ அந்தக்காதல் உறவின் மூலம் நமது இயற்கையான செயல்நோக்கத்தை நிறைவேற்றி இனஉயிரியாக ஆவதைப் போல.
இந்த உறவுகள், முதலாளித்துவச் சமூகத் திருமணத்திலிருந்தும் கொச்சைக் கம்யூனிசம் முன்வைக்கும் ‘பெண்களைப் பொதுவில் பகிர்ந்துகொள்தல்’ என்பதிலிருந்தும் வேறுபட்டன. மார்க்ஸின் இலட்சியப்படி, நமது தேவைகள் என்பன மனிதத்தேவைகள். எனவே நமது கூட்டாளி நமது தேவைகளில் ஒன்றாகிறார் என்பது அவர் ஒரு மனிதப்பிறவி என்ற காரணத்தினால்தானே தவிர, அவரிடமிருந்து நாம் சுகம் பெற்றுக்கொள்ளலாம் என்ற காரணத்தினால் அல்ல. “ஒருவன் தனிமனித இருப்பைக் கொண்டிருக்கும் அதேநேரம், எந்த அளவு ஒரு சமூகப் பிறவியாகவும் இருக்கிறான்” என்பதை இது காட்டுகிறது (Marx, 1983-EPM:149). வேறுபடி சொன்னால், ஓர் உண்மையான உறவில் மனிதப் பிறவிகள் பிறமனிதர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அத்தியாவசியமான, தவிர்க்கவியலாத சார்ந்திருப்பையும் தனிமனிதப் போக்கின் போதாமைகளையும் இது வெளிப்படுத்துகிறது.
ஆக, மார்க்ஸைப் பொருத்தளவில் திருமணம் என்ற நெறிமுறை உறவு பரஸ்பரச் சார்ந்திருப்பை இயல்பாகக் கொண்டது; ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் கட்டுப்பாட்டைக் கொண்டதல்ல. முதலாளித்துவச் சமூகத் திருமணத்தில், நம்முடைய கூட்டாளியை ஒருசொத்து வடிவமாகப் பார்த்து அவர் மீது கட்டுப்பாட்டை விழைகிறோம். “உண்மையான” திருமணத்தில், மனிதப் பிறவியாய் இருப்பதன் சாராம்சத்தைத் தேடும் முகமாக நமது கூட்டாளியின் மீது நமது சார்ந்திருப்பை உணர்கிறோம்.
திருமணம் என்பதைத் தேவையற்ற ஒன்றாகக் கருதாமல், இன உயிரிகளாக நமது இயல்பை உணர்ந்து கொள்ள, அதாவது “மனித விடுதலையை” அடைய, தேவைப்படும் ஓர் இன்றியமையாத கூறாக மார்க்ஸ் கருதுகிறார் (Marx, 1983-OJQ:114). கூட்டுறவான பரஸ்பர உறவுகளில் ஈடுபடும்போதே மனிதவிடுதலை என்பது சாத்தியம்.
பிறகு ஏன் அதைக் குறித்து அவர் மிகக் குறைவாகவே எழுதினார்? இதற்கான விடை, கொச்சைக் கம்யூனிசம் குறித்து அவர் மேற்கொண்ட விமர்சனத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த விமர்சனத்தைப் புரிந்துகொள்ள, அந்நியமாக்கப்பட்ட உழைப்புப்பற்றி மார்க்ஸ் கூறுவதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால், அதே போன்றதொரு பகுப்பாய்வைக் கொண்டதாக இந்த விமர்சனம் இருக்கிறது. திருமணத்தை ஒழிக்க வேண்டுமென்று புரூதானும் பிறகொச்சைக் கம்யூனிஸ்டுகளும் கூறுவதை மார்க்ஸ் ஏன் நிராகரித்தார் என்பதற்கான காரணங்கள், முதலாளித்துவச் சமூகத்திற்குள்ளாகவே உண்மையான திருமணத்தையும் காதல் உறவையும் நிறுவமேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் பொருந்தும்.
மார்க்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவத்தில் உழைப்பாளிகள் நான்கு விதங்களில் அந்நியமாதலுக்கு ஆளாகிறார்கள். முதலில் தங்களது உழைப்பில் விளைந்த பொருளில் இருந்து அந்நியப்படுகிறார்கள். அதாவது, ஒருவனுடைய உழைப்பினால் விளைந்த ஒரு பொருள் “ ஏதோ ஓர் அந்நிய உயிரியைப் போல, உருவாக்கியவனிலிருந்து விலகி தன்னிச்சையான வல்லமையாக அவனுக்கு வெளியே இருந்தபடி அவனை எதிர்கொள்கிறது. உழைப்பில் விளைந்த பொருள் என்பது உழைப்பையும் மூலப்பொருளையும் உள்ளுறையாகக் கொண்டு உருவெடுத்தது. அது உழைப்பின் புறவுருவாக்கம்” (Marx, 1983-EPM:133). முதலாளித்துவத்தின் கீழ் எதையாவது உருவாக்கும்போது, உழைப்பாளிகள் தங்களைப் புறவுருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. பிறர் வாங்குவதற்காகவும் நுகர்வதற்காகவும் உருவாக்கித் தரவேண்டியிருக்கிறது. தான் உருவாக்கிய பொருளை இழந்து போவதால், “வாழ்வதற்கு மட்டுமல்ல, உழைப்பதற்கே கூடத் தேவையான மிக அத்தியாவசியமான பொருட்களை தொழிலாளி பறிகொடுக்கிறான்” (Marx, 1983-EPM:133). அதனால்தான் முதலாளித்துவத்தில் வேலைகளைப் பெறுவது என்பது தொழிலாளர்களுக்குக் கடினமானதாக இருக்கிறது. அதனால் தான், குறைந்தது மார்க்ஸின் காலத்திலாவது, குறிப்பிட்ட காலங்களில் முறை தவறாமல் வேலையின்மைக்குத் தொழிலாளர்கள் ஆட்படுத்தப்பட்டனர். எந்த அளவு தொழிலாளர்கள் அதிகமாகப் பொருட்களை உருவாக்குகிறார்களோ, அந்த அளவு குறைவான பொருட்களையே அவர்கள் சொந்தம் கொள்கிறார்கள், அந்த அளவு அதிகமாக அவர்கள் மூலதனத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் (Marx, 1983-EPM:133). மார்க்ஸியப் பகுப்பாய்வின்படி, தனிச் சொத்து ஒழிப்பு, திருமண ஒழிப்பு போன்றவை இந்த வகையான அந்நியமாதலை முடிவுக்குக் கொண்டுவருமே தவிர, அந்நியமாதலையே முடிவுக்குக் கொண்டுவராது.
இது ஏனென்றால், “அந்நியமாதல் என்பது விளைவில் மட்டுமே, அதாவது உருவாக்கப்பட்ட பொருளில் மட்டுமே வெளிப்படுவதாக அல்லாமல், அதை உருவாக்கும் செயலிலும் இருப்பதுதான்” (Marx, 1983-EPM:136). இது இரண்டாவது வகையான அந்நியமாதல் – உற்பத்திச் செயலில் இருந்து தொழிலாளி அந்நியமாக்கப்படுவது. உருவாக்கப்பட்ட பொருள்மட்டுமல்லாது, உருவாக்கும் நிகழ்முறையும் தொழிலாளிக்குப் புறமாக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தில் தொழிலாளிகள் தங்களுக்கான “உடல் மற்றும் மன ஆற்றலை” வளர்த்துக் கொள்ளமுடிவதில்லை (Marx, 1983-EPM:136). உருவாக்கும் நிகழ்வு என்பது அவர்கள் மீது விதிக்கப்பட்டதாக, திணிக்கப்பட்டதாக இருப்பதால் அந்நிகழ்வில் அவர்கள் சுதந்திரமாக இல்லை. சொல்லப்போனால், உழைப்புச் செயலைக் காட்டிலும் “சாப்பிடுதல், குடித்தல், புணர்தல்” போன்ற “விலங்களவிலான செயல்களிலேயே” அதிகச் சுதந்திரமாக உணர்கிறார்கள் (Marx, 1983-EPM:137). இங்கே புணர்தல் என்பதையும் சேர்த்திருப்பதால், அச்செயலில் ஈடுபடும் இணைகள் அதில் அந்நியப்படுவதில்லை என்று மார்க்ஸ் கருதியிருந்ததாகத் தோன்றும். விஷயம் என்னவென்றால், உழைப்பாளிகள் சாப்பிடும்போதோ, குடிக்கும் போதோ, புணரும்போதோ சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதல்ல, அவ்வாறு உணர்கிறார்கள் என்பது. மேலும், மார்க்ஸ் கூறும் நெறிமுறையான உணர்வீடுபாட்டோடு கூடிய காதல்உறவு என்பது வெறும் புணர்தல் அல்ல.
மேலும், முதலாளித்துவத்தில் தொழிலாளியானவன் தன்னிலிருந்தே அந்நியப்பட்டவனாக இருக்கிறான். மனிதப்பிறவிகள் இயற்கையில் “இனப்பிறவிகள்” ஆவர். நம்மை ஒட்டுமொத்தமான மனிதஇனமாகக் கருதுகிறோம். “இனமுழுதளாவியவர்களாகவும், அதனாலேயே சுதந்திரப் பிறவிகளாகவும்” கருதுகிறோம் (Marx, 1983-EPM:137-138). இது முதலாளித்துவத்தில் சாத்தியமற்ற ஒன்று. “இனவாழ்வு என்பதை முதலாளித்துவம் தனிமனிதவாழ்வு என்பதற்கான வழிமுறையாக, கருவியாக மாற்றிவிடுகிறது” (Marx, 1983-EPM:138-139). தனிமனித நலத்தையே மனிதச்செயல்பாட்டின் நோக்கமாக ஆக்கிவிடுகிறது. மனித இனத்தின் இயல்பான சமூகத்தன்மையை அது வளர்ப்பதாக இல்லை.
இனஉயிரி என்ற நிலையிலிருந்து அந்நியமாக்கப்படும் அதேமுறையில், ஒரு தொழிலாளி தன்னுடைய சகமனிதர்களிடம் இருந்தும் அந்நியமாக்கப்படுகிறான். தனிமனித நலத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டியிருப்பதால், ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். தங்களது இயல்பான கூட்டுறவுச் செயல்பாடு என்பது, கூடிவாழ்தல் என்பது அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதாக இருக்கிறது. மற்ற வகைகளைக் காட்டிலும் இந்த வகையான அந்நியமாதலே தனிச்சொத்து ஒழிப்பினாலோ, திருமண ஒழிப்பினாலோ, முதலாளித்துவத்துக்குள்ளாகவோ தீர்க்கப்பட முடியாததாக இருக்கும். குடும்பம் பற்றி மார்க்ஸ் ஆழமான அக்கறை கொண்டிருந்தபோதிலும் அதுகுறித்து அதிகம் எழுதாமல் விட்டதற்கு இது ஒரு காரணம்.
இதைப் புரிந்துகொள்ள கொச்சைக் கம்யூனிசம் மற்றும் திருமணஒழிப்பு குறித்த மார்க்ஸின் ஒப்பீட்டை நாம் காணவேண்டும். ‘பொருளாதார தத்துவக் கையெழுத்துப்படிகளில்’ கம்யூனிசத்தை வரையறுக்கும்போது, அது “தனிச்சொத்தின் முற்றொழிப்பு”, “மனித சுயஅந்நியமாதலின்முடிவு”, “மனிதஇயல்பை உண்மையாகவே பெறுதல்” ஆகியவற்றைக் கொண்டது என்று மார்க்ஸ் கூறுகிறார் (Marx, 1983-EPM:149). கொச்சைக் கம்யூனிசம் முதலாவதை மட்டுமே கவனத்தில் கொண்டது. அந்நியமாதல் என்பது மக்கள் தாங்கள் உருவாக்கிய பொருட்களிலிருந்து பிரிக்கப்படுவதால் மட்டும் நேர்வதல்ல; உற்பத்திச் செயலிலிருந்து பிரிக்கப்படுவதாலும் பிறமனிதர்களிடமிருந்தும் பிரிக்கப்படுவதாலும் நேர்வது (Marx, 1983-EPM:136-138). தனிச்சொத்து ஒழிப்பு உற்பத்திப் பொருளிலிருந்து அந்நியமாதலை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் சமூகம் என்பது, “சமூகம் என்ற அனைத்தளாவிய முதலாளியால் சம ஊதியம் வழங்கப்படும் உழைப்பாளிகளைக் கொண்ட சமூகமாகவே” மிஞ்சியிருக்கும் (Marx, 1983-EPM:148). உழைப்புச் செயலிலிருந்தும் பிற மனிதர்களிடமிருந்தும் அந்நியப்படுவது என்பது தொடர்ந்து இருந்துவரும். “மனிதன் என்பவனே” எப்போது “சமூகத்தன்மை கொண்டவனாக, அதாவது உண்மையான மனித உயிரியாகத் திரும்புகிறானோ”, அப்போதுதான் அந்நியமாதல் என்பதை உள்ளபடி முழுதாய் வெற்றிகொள்ளமுடியும் (Marx, 1983-EPM:149). தனிச்சொத்து என்பது ஒழிக்கப்பட வேண்டியதல்ல, கடந்து செல்லப்படவேண்டியது (Marx, 1983-EPM:151). அதாவது, அதற்கான தேவை நமக்கு இல்லாத நிலையை உருவாக்குவது.
திருமண ஒழிப்பு என்பதிலும் இதுவே பொருந்தும். அதை ஒழித்தபிறகும் ஆண்கள்-பெண்கள் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டவர்களாக இருப்பர். தங்களை இன உயிரிகளாகக் காணாமல் இருப்பர். திருமணத்தை ஒழித்துவிடுவதால், நுகரப்படும் பொருட்களாகப் பெண்கள் கருதப்படுவது ஒழிந்துவிடாது. தனிச்சொத்து ஒழிப்பு என்பது சமஊதியத்துக்கு வழிவகுக்கும். ஆனால் உற்பத்திமுறைகள் பற்றிய தீர்மானங்கள் தொழிலாளர்களின் கைகளில் இருக்காது. அதைப்போலவே திருமண ஒழிப்பு என்பது பெண்களின் விதியை ஒருகுறிப்பிட்ட ஆணின் பிடியிலிருந்து விடுவித்து அனைத்து ஆண்களின் பிடிகளுக்குள்ளும் சிக்க வைத்துவிடும்; பெண்களை அனைவருக்குமான பரத்தைகளாக மாற்றிவிடும். அங்கே, ஆண்கள்-பெண்களுக்கு இடையிலான உறவுகள் பரஸ்பரத் தேவைகளின் அடிப்படையில் அமைந்த உண்மையான நெறிப்பட்ட உறவுகளாக இருக்காது. தனிச்சொத்து ஒழிப்பின் பிறகும் ஒருவரை ஒருவர் சார்ந்த சமூகப்பண்பு கொண்ட இனஉயிரிகளாக இருக்க முடியாமல் அந்நியப்பட்டு இருப்பதைப் போலவே, திருமண ஒழிப்பின்பிறகும் ஆண்களும் பெண்களும் அன்னியோன்யம் கொண்ட இனஉயிரிகளாக மலரமுடியாமல் அந்நியப்பட்டே இருப்பார்கள்.
குறிப்பிட்ட பிரச்சினைகளில் சட்டரீதியான மாற்றங்களின் பயனின்மையை எடுத்துக்காட்டுவதற்காக தனிச்சொத்து ஒழிப்பு மற்றும் திருமண ஒழிப்பை ஒப்பிட்டுக் காட்டுகிறார் மார்க்ஸ். சமூக விஷயங்கள் “உணர்வார்ந்த வெளிப்பாட்டைத்” தன்மையாகக் கொண்டவை (Marx, 1983-EPM:150). சட்டங்களை மாற்றுவதால் மட்டும் அவற்றை மாற்றிவிட முடியாது. “உணர்வார்ந்த மனிதச்செயல்பாடு”, “நடைமுறை” மற்றும் “புரட்சிகரமான” அல்லது “நடைமுறைத்திருத்தம்” கொண்ட செயல்பாடு ஆகியவையே மாற்றம் காண்பதற்குத் தேவையானவை (Marx, 1983-TF:155). ஜனநாயக சோசலிஸ்டுகள் செய்வதறியாது கனவுகண்டு கொண்டிருக்க, வெகுஜனச் செயல்பாடும் புரட்சியுமே கம்யூனிசத்துக்கான பாதை என்று மார்க்ஸ் கூறினார். அதைப்போலவே உண்மையான திருமணத்திற்கான பாதை என்பது சட்டரீதியான மாற்றங்களுக்கு மிகவும் அப்பாலானது. அது கம்யூனிசப் புரட்சியோடு சேர்ந்ததாகவே இருக்கும்.
மார்க்ஸைப் பொருத்தளவில், மன்பதையின் விதி என்பது மறுக்கமுடியாதபடி கூட்டுச் செயல்பாடுகளால் ஆனது. நாம் ஒன்றாகவே வளம்படுகிறோம், ஒன்றாகவே துயர்ப்படுகிறோம். மாற்றங்கள் என்பன தம்மளவில் முழுமையானவையாகவும், அனைவருக்குமான புரட்சிகரமான மாற்றங்களாகவும் இருக்கவேண்டும். சமூகவாழ்வின் “ஒட்டுமொத்த மெய்ப்பாடான ஒருமையை” மார்க்ஸிய இயங்கியல் அழுந்தக்கூறும். ஒட்டுமொத்த அளவில்தான் அதை மாற்றமுடியுமே தவிர, படிப்படியாக அல்ல (Lukacs, 1968:6-9). ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு என்பது பரந்துபட்ட சமூகப்போக்குகளைப் பிரதிபலிப்பதாக, தனித்துவமான வடிவம் கொண்டதாக, அமையவிருக்கும் சோசலிசச் சமூகத்தில் நிலவவேண்டிய மனிதஉறவுகளுக்குப் பொதுவான மாதிரிவடிவம் என்ற அளவில் அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றதாக இருந்தபோதிலும், இயல்பான உறவும் உண்மையான திருமணமும் சோசலிசச் சமூகத்தில்தான் சாத்தியமானவை என்று கருதியதால், அச்சமூக அமைப்பிற்கு அடிப்படையான வர்க்க நடவடிக்கை குறித்தே அவர் அதிகம் எழுதினாரேயன்றி, நிலவிவந்த திருமணம் என்ற நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகளில் அவர் அதிக நாட்டம் கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கவேண்டிய இயல்பான உறவில் உள்ள பரஸ்பரத்தன்மையும் பிறமனித-நோக்கும் அமையவிருக்கும் சோசலிசச்சமூகத்துக்கு அடிப்படையாய் இருக்கத்தகுதி பெற்றவை. காதல்உறவு என்பது ஏதாவது ஒருவடிவத்தில் மனிதஇருப்பின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்துகொண்டே இருக்கும்.
மார்க்ஸ், மில், நீச்சா
பாலின உறவுகள் என்ற விஷயத்தில் எந்தவொரு காலஞ்சென்ற, வெள்ளையின, ஆண் கோட்பாட்டாளரையும் போலவே மார்க்சும் கருத்துக் கொண்டிருந்தார் என்பது உண்மை அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டு வெள்ளையினச் சிந்தனையாளர்களோடு இங்கே மார்க்ஸை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒருவர் பாலினப்பிரச்சினை பற்றி குறிப்பிடத்தகுந்த அளவு எழுதியவர். மற்றவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனைப் போக்கின் பண்புருவாய் இருந்தவர்.
தன்னுடைய காலத்தின் “இரு மாபெரும் பிரச்சினைகளில் ஒன்றாக” பாலினச் சமத்துவத்தை மில் கருதியதாக டல்லாக் கூறுகிறார் (Tulloch, 1989:199). மற்ற பிரச்சினை, கூட்டுறவு முறையிலான உற்பத்தி (இதுவும் கூட மார்க்சுக்கும் மில்லுக்கும் இடையிலான ஒத்த சிந்தனைப் போக்கை எடுத்துக்காட்ட உதவும்). இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய கருத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் சமகாலத்தவர் எவரும் செய்யாத வகையில், தன்னுடைய சிந்தனையின் மீது தன்னுடைய மனைவி செலுத்திய பாதிப்பை வெளிப்படையாக அறிவித்தவர் மில்(Mill, 1989:4). ‘பெண்களின் அடிமைநிலை’ என்று ஒருநூலையே எழுதியவர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆண்களுக்கு நிகரான முறையில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று முயன்றவர். பொதுவாகக் கருதப்படுவதுபோல் அல்லாமல், இதுவிஷயமாக அவருக்கும் மார்க்ஸ§க்கும் இடையில் பொதுமைகள் இருக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் நிலவிவந்த திருமணம் அடிமைத்தனத்தைத் தன்னகத்தே கொண்டதாக இருந்தது என்ற கருத்தை இருவருமே கொண்டிருந்தார்கள். முன்பே கூறியபடி, ‘ஜெர்மன் கருத்தியல்’ நூல் நெடுக மார்க்ஸ் இக்கருத்தை வெளிப்படுத்துகிறார். இதையே தன்னுடைய ஆய்வின் மையமான கருத்தாக மில்லும் கொண்டிருக்கிறார். ‘பெண்களின் அடிமை நிலை’ நூலில் இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் “மனைவி என்பவள் உண்மையில் கணவனின் அடிமையே; சட்டப்படியான கடமைகளைப் பார்க்கையில் அவளது நிலை ஓர் அடிமையின் நிலைக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல” என்று கூறுகிறார். அக்கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதுவாக நிலவிவந்த ஒன்று தான். நம் கவனத்தை மிகக்கவரும் ஒற்றுமை என்னவென்றால், உண்மையான திருமணத்தின் இயல்பு குறித்த அவர்களது பார்வை. திருமணம் என்பது கணவன் மனைவி இருவரும் சமத்துவத்தோடு கொள்ளும் நெறிமுறையான உறவு, அதன் மூலம் அவர்கள் சமூக உயிரிகள் என்ற நிலையை எட்ட முடிகிறது என்று மார்க்ஸ் கருதியதைப் போலவே, மில்லும் “தோழமைத்திருமணம்”என்ற கருத்தை உருவாக்கினார் (Mill, 1989:22). ஒரே மாதிரியான கருத்துக்களையும் பரஸ்பரம் பொருந்தக்கூடிய தகுதிகளையும் பெற்ற இருவர் (ஆணும் பெண்ணும்), தங்களுடைய ஆற்றல்கள் பரஸ்பரம் பங்களிப்பதாகவும் குறை நிரப்புவதாகவும் இருக்கும் வகையில், மேற்கொள்ளும் கூட்டுப்பாங்காண்மையே இறுதியாய் அடைய வேண்டிய இலட்சியம் என்று மில் கருதினார் – அதாவது “மிகச் சிறந்த சமத்துவஉறவு” (Mill, 1989:211). இதை எவ்வாறு எட்டுவது என்பதில் அவர் மார்க்ஸிடமிருந்து வேறுபட்டிருக்கலாம். சட்டத்தின் முன் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமைகளை மில் வலியுறுத்தினார் (Mill, 1989:159). ஆனால் இலட்சியம் ஒன்றுதான். சமமானவர்களுக்கிடையே காதல் உறவு இருக்கவேண்டும், பரஸ்பரச்சார்பு இருக்கவேண்டும். பாலின வேலைப் பிரிவினையை முற்றிலுமாக ஒழித்துவிடமுடியாதுதான் – குறைந்தது, அதற்கான தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படும் வரை. ஆனால் இந்த வேலைப்பிரிவினை இருவருக்கும் (ஆண்-பெண்) இடையில் பிளவை, போட்டியை உருவாக்குவதாக இல்லாமல், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள பரஸ்பரச் சார்ந்திருப்பின் அடிப்படையில் உண்மையான சமூகத்தன்மையைக் கொண்டதாக, கூட்டுறவைக் கொண்டதாக மாற்றியமைக்கமுடியும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமமின்மைகள், மனிதஇனம் தன் உள்ளார்ந்த திறங்களை உற்றறிய முடியாமல் தடுப்பன என்ற மார்க்ஸின் கருத்தை மில்லும் பகிர்ந்து கொள்கிறார். அவை மனிதவிடுதலையை எட்டவிடாமல் தடுப்பன என்று மார்க்ஸ் குறிப்புக்காட்ட, அவை இருபாலாருக்குமே பாதகமானவை என்று மில் குறிப்புக்காட்டுகிறார். தொழில் மேற்கொள்ளலில் பெண்களுக்கு உள்ள தடைக்கட்டுகள் அநீதியானவை மட்டுமல்ல, செயற்திறமற்றவையும் ஆகும். ஏனெனில் மிகத் தகுதிவாய்ந்த ஒருவரை (பெண்ணை) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பணியமர்த்துபவர் இழக்கிறார். தங்களுடைய வளர்ப்பிலும் கல்வியிலும் ஒப்பீட்டளவில் பாதகங்களையே எதிர்கொண்ட போதிலும், “ஆண்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளிலும் வெற்றிகரமாகவும் போற்றத்தக்க முறையிலும் தாங்கள் செயல்படமுடியும் என்று பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் மில் (Mill, 1989:167).
எனினும் இருவருக்கிடையில் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. மில்லைப் பொறுத்தளவில், சமத்துவத்தை ஏற்படுத்த சட்ட ரீதியான மாற்றங்கள் தேவை. மார்க்ஸைப் பொறுத்தளவில், சோசலிசப் புரட்சி தேவை. இது விஷயமாக மில் ஒரு முழுநூலையே எழுதியிருக்கிறார். மார்க்ஸின் எழுத்துகள் துண்டு துணுக்கானவை. இந்த வேறுபாட்டுக்கான முக்கியக்காரணம் இருவருக்கும் இடையில் பெருமளவில் இருந்த தத்துவார்த்தப் பிளவுதான். சட்டரீதியான மாற்றங்கள் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்று நம்பிய மில் நிறைய எழுதினார். சோசலிசப் புரட்சி அல்லாது மாற்றம் சாத்தியமில்லை என்று நினைத்த மார்க்ஸ், இது குறித்து குறைவாகவே எழுதினார். குறைவாக எழுதியதால் ஆர்வமற்றவராக இருந்தார் என்றோ, முக்கியமானதாகக் கருதவில்லை என்றோ பொருள் அல்ல. துண்டுதுணுக்கான மாற்றங்களில் நம்பிக்கை கொண்டிருந்த மில், தனியான விஷயத்தில் ஒரு நூலையே எழுதினார். ஒட்டு மொத்த மாற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்த மார்க்ஸ் அதேவிஷயத்தில் துண்டுதுணுக்காய் எழுதினார். சோசலிசம் குறித்த மில்லின் கருத்தை நோக்கினால், இது குறித்த ஐயம் தீரும். மார்க்ஸ் அளவுக்கு சோசலிச இயக்கம் குறித்து மில் கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும், அப்போது “நிலவிவந்த பொருளாதார அமைப்பு முறைக்கு” எதிரான சோசலிஸ்டுகளின் கருத்து “வாதவலிமை” கொண்டதே என்று அவர் ஏற்றுக்கொள்கிறார் (Mill, 1989:279). ஆனால் “மனிதகுலத்தின் அடிப்படையான கருத்துக்களில் மாபெரும், நிரந்தர மாற்றங்களை திடீர்த்தாக்குதல் மூலம் ஏற்படுத்தக்கூடாது என்பதை பிற ஐரோப்பியச் சகோதரர்களைக்காட்டிலும் ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தினர் நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்றுஆங்கிலேயத் தொழிலாளர்களை அவர் பாராட்டுவது, தேவைப்படும் மாற்றம் மிகவும் அத்தியாவசியமானது ஆதாரமானது என்ற போதிலும், நிலவும் அமைப்பு முறைக்கு உள்ளாகவே செயல்படவேண்டும் என்ற அவருடைய தேர்வை எடுத்துக்காட்டுகிறது (Mill, 1989:226). அவருடைய தனிமனிதவாதமும் சமூகவிவகாரங்களின் ஒட்டுமொத்தத்தன்மை குறித்த கருத்தின்மையுமே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து அதிககவனத்தைச் செலுத்தத்தூண்டின. பாலினம் மற்றும் குடும்பம் குறித்து மார்க்ஸைவிட மில் அதிக அளவில் எழுதினாரே தவிர, மார்க்ஸைவிட அதிக ஈடுபாட்டுடன் எழுதிவிடவில்லை.
பொதுவாகக் கருதப்படுவதுபோல குடும்பம் குறித்த விஷயத்தில் மில்லின் பார்வையிலிருந்து மார்க்ஸின் பார்வை மாறுபட்டதல்ல என்று கண்டோம். பாலினச் சமத்துவம் குறித்துப்பேசும் போது தற்காலத்திய பெண்ணியக்கோட்பாட்டாளர்களுக்கு மில்லைக் குறித்து விமர்சனம் இருந்தாலும், அவரை காலஞ்சென்ற, வெள்ளையின, ஆண் கோட்பாட்டாளர் என்று கூறிவிட முடியாது. இவ்விஷயத்தில் தனித்துவம் வாய்ந்த மில்லோடு ஒப்பிட, எழுதிய அளவில் குறைவெனினும் அதிக ஈடுபாட்டுடனும் தீவிரத்துடனும் மார்க்ஸ் எழுதியுள்ளார். தன் சமகாலச் சிந்தனையாளர்களிலிருந்து அவர் உண்மையாகவே வேறுபட்டிருந்தார்.
இனி இவ்விஷயத்தில் நீச்சாவுடன் மார்க்ஸை ஒப்பிட்டுப் பார்ப்போம். பெண்கள் பற்றி நீச்சா கூறியிருப்பது மணிமொழிகளாக அவருடைய நூல்களில் பரவலாகச் சிதறிக் கிடப்பன. திருமணம் என்ற விவாதப்பொருளை அவர் மார்க்ஸைப்போல் ஒழுங்கமைவான முறையில் அணுகவில்லை; மில்லோடு ஒப்பிட்டுக்கூறவே வேண்டியதில்லை. பெண்கள் குறித்த நீச்சாவின் கூற்றுகளிலிருந்து உடனடியாகத் தெரியவருவது என்னவென்றால், திருமணம் என்பது ஒரு நெறிமுறையான அல்லது தோழமையான உறவாக இருக்கக்கூடும் என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது. எடுத்துக்காட்டாக, ‘நன்மை தீமைக்கு அப்பால்’ நூலில் அவர் குறிப்பிடுகிறார்: “ஒருபாலினம் குறித்து மற்ற பாலினம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது – ஏனெனில், அடி மனதில்அவர்கள் தங்களை மட்டுமே மதிக்கவும் நேசிக்கவும் செய்கிறார்கள்… எனவே பெண் அடக்கமானவளாக இருக்கவேண்டும் என்று ஆண் விரும்புகிறான் – ஆனால் பெண் தன்னுடைய சாராம்சத்திலேயே அடக்கமற்றவள்” (Nietzsche1989:87). ஆண்களும் பெண்களும் அடிப்படையிலேயே மாறுபட்ட இயல்பைக் கொண்டவர்கள் என்று கூறுவது மட்டுமல்ல (சாராம்சத்திலேயே என்பதற்கு நீச்சா தரும் அழுத்தத்தைக் காண்க), அந்த உறவுகள் காட்டுவது என்னவென்றால் “அவர்களுக்கிடையே அதியாழமான பகைமை இருக்கிறது” என்றும் அவர் கூறுவதைக் கவனிக்கவேண்டும் (Mill, 1989:166). நீச்சாவைப் பொறுத்தளவில், பெண்களுக்குச் சமவுரிமை என்பது சாத்தியமற்றது. மட்டுமல்ல, அது “உயிராற்றல் நலிந்து போவதைக்காட்டும் நோய்க்குறியாகும்” (Nietzsche, 1994:121).
இதற்கு அவர் கூறும் காரணமோ, பாலினம் குறித்த விவாதத்தில் மார்க்சுக்கும் அவருக்கும் இடையிலுள்ள பிளவை இன்னும் அதிகமாக ஆழப்படுத்துவதாக இருக்கிறது. நீச்சாவின் கருத்துப்படி, ஓர் ஆணுக்கு “உள்ளறிவுத்திறத்தில் ஆழமென்று” ஏதாவது இருக்குமானால், அவன் பெண்ணை “உடைமையாகவே, பூட்டிவைக்கத்தக்க சொத்தாகவே, பணிவிடை புரியவென்றே விதிக்கப்பட்ட ஒருத்தியாகவே, அதிலேயே தன்னுடைய முழுநிறைவைக் காண்பவளாகவே கருதவேண்டும்” (Nietzsche, 1989:167).
வர்க்கச் சமூகத்தில் தனிப்பட்ட ஆண்களின் முற்றுரிமை வாய்ந்த தனிச்சொத்து என்றாயினும் சரி, கொச்சைக் கம்யூனிசத்தில் அனைத்து ஆண்களுக்குமான பொதுச்சொத்து என்றாயினும் சரி, இவை இரண்டுமே பெண்களைப் பொருளாக்கி ஆண்களின் சொத்தாகப் பாவிக்கின்றன. இது, பரஸ்பரச் சார்ந்திருப்புக் கொண்ட சமூகஉயிரிகள் என்ற உண்மையான விடுதலையை மனிதகுலம் எட்டவிடாமல் தடுப்பது என்று மார்க்ஸ் கருதுகிறார். நீச்சாவோ பெண்களை அப்படிப் பொருளாக்குவதை தவிர்க்கவியலாதது என்று மட்டுமல்ல, விரும்பத்தக்கது என்றும் கருதுகிறார்.
பெண்களைப் பணிவிடைக்காரிகளாகப் பார்ப்பது சமூகவாழ்வின் எல்லையற்ற சீரழிவைக் காட்டுகிறது என்ற மார்க்ஸின் கருத்தை ஏற்கெனவே பார்த்தோம். நீச்சாவோ அறிவுள்ள எவனும் பெண்களைப் பொருட்களாகவே, பணிவிடைக் காரிகளாகவே பார்ப்பான் என்பதோடு, பெண்களுக்குச் சமவுரிமை என்பது உயிராற்றலின் சீரழிவைக் காட்டுகிறது என்கிறார்.
தன்னுடைய தலைமுறையில் ஆண்கள் பெண்களை முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிக மரியாதையோடு நடத்துவதாகவும், அதனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த மரியாதையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் “ஆணிடம் கொள்ளவேண்டிய அச்சத்தை மறந்து விடுவதாகவும்” நீச்சா புலம்புகிறார் (Nietzsche, 1989:167). இவ்வாறு நடந்துகொள்வதன் மூலம், பெண்கள் தங்களது பெண்மையைத் துறந்து விடுகிறார்கள்; ஏனென்றால் ஆணிடம் கொள்ளவேண்டிய அச்சம் என்பதே “அதி பெண்மையான இயல்புணர்ச்சி” ஆகும் என்கிறார் அவர் (Nietzsche, 1989:167-168).
ஆண்களிடம் பெண்கள் கொண்டுள்ள அச்சம் குறையும்போது, பெண்களது செல்வாக்கும் குன்றுகிறது என்கிறார் நீச்சா (Nietzsche, 1989:168). இது எதனால் என்று அவர் சரியாகக் குறிப்பிட்டுக் காட்டவில்லை. ஆனால், ஒன்று தெளிவு: நீச்சாவைப் பொருத்தளவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவமான உறவுகளோ, தோழமையான உறவுகளோ சாத்தியமில்லை.
பெண்கள் பற்றிய ஆண்களின் மனப்பாங்கு குறித்த நீச்சாவின் சாராம்சவாத ஊகங்களுக்குப் பொருந்தவே, ஆண்களைப் பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்ற அவருடைய சிந்தனைகளும் இருக்கின்றன. பெண் என்ற முறையில், ஒரு பெண் ஆணிடம் அச்சம் கொண்டிருக்கவேண்டும் என்பதிலேயே இது குறிப்பாகத் தெரியவருகிறது என்றபோதிலும், பெண் கவர்ச்சி பற்றிய அவருடைய சிதறலான கருத்துக் குறிப்புகள் இதுகுறித்து இன்னும் அதிகமான ஒருமுகப்பட்ட பார்வையை வழங்குகின்றன. நீச்சாவின் கூற்றுப்படி, “கவலையற்றவர்களாக, பரிகாசம் புரிபவர்களாக, ஆவேசமானவர்களாக” இருக்கும்படி ஞானம் நம்மைக் (ஆண்களை) கோருகிறது. ஏனென்றால் “அவள் (ஞானம்) ஒருபெண். ஒரு வீரனைத்தான் அவள் எப்போதும் விரும்புகிறாள்” (Nietzsche, 1994:72). ஆண்கள் பெண்களை உடைமைகளாகப் பார்க்கவேண்டும் என்பதைப் போலவே, பெண்கள் ஆண்களைத் துணிச்சல் மிக்கவர்களாக, வெற்றி கொள்பவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாகப் பார்க்கவேண்டும்; ஆணின் அடக்கம் என்பது “பெண்ணின் மனதை வெற்றிகொள்ள ஒவ்வாத வழிமுறை” என்கிறார் நீச்சா (Nietzsche1989:1). தங்களுக்கு இருந்த அடக்கத்தினால்தான் தத்துவஞானிகள் உண்மையைப் பிடிகொள்ள இயலாதவர்களாகிப் போனார்கள் என்கிறார். அவருடைய கூற்றுப்படி, ஞானத்தைப் போலவே உண்மையும் பெண்ணாக இருக்கிறது.
பாலினம் குறித்த நீச்சாவின் சிந்தனைகள் ஏதோ தற்செயலாய் முக்கியத்துவமற்று நேர்ந்து விட்டவை அல்ல. குருட்டுத்தனமான பழங்கருத்துக்களைத் தாக்குவதற்குத் தன்னுடைய மையமான கோட்பாட்டுத்தளமாக பாலினத்தைப் பயன்படுத்தினார் அவர். அவருடைய ஒட்டுமொத்த தத்துவத் திட்டத்துக்கே இது மையமானது.
மார்க்சும் மில்லும் பாலினச் சமத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். மில் ஒரு நூலையே எழுதியிருந்தாலும், அவருடைய பார்வை துண்டானது; அவருடைய மாற்று, சட்டச்சீர்திருத்தத்தைக் கோருவது. மார்க்சும் நீச்சாவும் பாலினம் குறித்துச் சிதறலாகவே எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார்கள்.
சமூக ஏற்றத்தாழ்வே இயல்பானது; அதை வலியுறுத்த ‘இயல்பான’ பாலின ஏற்றத்தாழ்வைச் சிலாகித்தும் எடுத்துக்காட்டாக்கியும் தன்னுடைய தத்துவத்தின் மையமாக பாலின உறவை அமைக்கிறார் நீச்சா.
சமூக உயிரிகளாய் வாழ்வதே இயல்பானது; இது சமூக சமத்துவத்தைக் கோருவது. பரஸ்பர இயல்பான பாலின உறவு, அமையவிருக்கும் சோசலிசச்சமூகத்தின் மனித உறவுகளுக்கு மாதிரி வடிவமாகத் திகழும் தன்மை கொண்டது என்று பாலின உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார் மார்க்ஸ்.
முடிவாக :
பாலின விஷயத்தில் மார்க்ஸ் அக்கறையற்றிருந்தார் என்பது தவறான கருத்து. மனித விடுதலையை அடைவதற்கு, ஆண்-பெண் உறவு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருதினார். பாலினஉறவுகள் வர்க்க உறவுகளைக் காட்டிலும் அதிக அடிப்படையானவை. ஏனெனில், வர்க்க உறவுகள் சோசலிசப் புரட்சியால் வெல்லப்படும். ஆனால் பாலினஉறவுகள் அவ்வாறானவை அல்ல. அவற்றின் உண்மையான தன்மையில், நம்மை இன உயிரிகளாக உயர்த்தும் ஆற்றல் படைத்தவை. பாலினம், குடும்பம் குறித்த மார்க்ஸின் சிந்தனைகள் மறு விளக்கமளிக்கப்பட வேண்டும்.
பெண்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்வதை பிளேட்டோவைப் போலவே புரூதானும் சிந்தித்துப் பார்த்தார். மார்க்ஸ் அதை நிராகரித்தார். சோசலிசச் சமூகத்தின் தன்மை குறித்து மார்க்ஸ் அதிகமாக எழுதவில்லை. இருந்தாலும், திருமணம் குறித்த அவருடைய சிந்தனைகள் காட்டுவது என்னவென்றால், தனிப்பட்ட மனிதஉறவுகளை சோசலிசம் ஒழித்துவிடாது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலானது போன்ற ஏனைய தனிப்பட்ட உறவுகளும் இல்லாமல் போய்விடாது என்பதை இது உணர்த்துகிறது.
காலையில் வேட்டையாடுவதும், மதியம் மீன் பிடிப்பதும், இரவு உணவுக்குப்பின் விமர்சனங்களை மேற்கொள்வதும் என மார்க்ஸ் கனவு கண்ட சுதந்திரமான மனிதவாழ்வுக்கு கூட்டுழைப்பும், பரஸ்பர அங்கீகாரமும், இனஉயிரிகள் என்ற இயல்புணர்வும் அவசியம். அப்போதுதான் நாம் உருவாக்கியவற்றிலிருந்தோ, உருவாக்கத்திலிருந்தோ, சகமனிதர்களிடமிருந்தோ, இனஉயிரி என்ற நிலையிலிருந்தோ அந்நியப்படாமல் வாழ்வோம்.
நூற்கோவை
Aristotle (1998) The Nicomachean Ethics (Oxford World’s Classics), Oxford University Press, Oxford.
Avineri S. (1968) The Social and Political Thought of Karl Marx, Cambridge University Press, Cambridge,
Balbus I. (1982) Marxism and Domination: A Neo-Hegelian, Feminist, Psychoanalytic Theory of Sexual, Political and Technological Liberation, Princeton University Press, Princeton.
Carver T. (1998) The Postmodern Marx, Pennsylvania State University Press, University Park.
de Bonald L. (1997) “On Divorce”, in J.Z. Muller. Ed. Conservatism: An Anthology of Social and Political Thought from David Hume to the Present. Princeton: Princeton University Press, 1997.
Gouldner A. (1980) The Two Marxisms: Contradictions and Anomalies in the Development of Theory, Seabury Press, New York.
Hegel G. W. F. (1991) Elements of the Philosophy of Right, Cambridge University Press, Cambridge.
Lukacs G. (1968) History and Class Consciousness: Studies in Marxist Dialectics, MIT Press, Cambridge.
Marx K. (1976) Capital: Volume 1, Penguin, London.
Marx K. (1983-DDL) “Contribution to the Critique of Hegel’s Philosophy of Right” in E. Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. (1983-DDL) “The Draft Divorce Law” in E. Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. (1983-EPM) “Economico-Philosophical Manuscripts of 1844” in E. Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. (1983-OJQ) “On the Jewish Question” in E. Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. (1983-TF) “Theses on Feuerbach” in E. Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. and Engels F. (1983-GI) “The German Ideology” in Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Marx K. and F. Engels (1983-MCP) “Manifesto of the Communist Party” in Kamenka, Ed, The Portable Karl Marx, Viking Penguin Inc, New York.
Mill J. S. (1989) On Liberty: With ‘The Subjection of Women’ and ‘Chapters on Socialism’, Cambridge University Press, Cambridge.
Möser C.f. J. (1997) “On the Diminished Disgrace of Whores and Their Children in Our Day”, in J.Z. Muller. Ed. Conservatism: An Anthology of Social and Political Thought from David Hume to the Present, Princeton: Princeton University Press, 1997.
Nietzsche F. (1989) Beyond Good and Evil, Vintage Books, New York.
Nietzsche F. (1994) On the Genealogy of Morality, Cambridge University Press, Cambridge.
Tulloch G. (1989) Mill and Sexual Equality, Harvester Wheatsheaf Hemel, Hempstead.