நோய்மையின் அரசியல்..!
வெட்டப்படும் கட்டைவிரல்- நூல் மதிப்புரை
‘நோய் நாடி நோய் முதல் நாடி அதன் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்பது வள்ளுவம். நோய்க்கானக் காரணங்களை நாடி அதற்கேற்ப மருத்துவம் பார்த்தல் என்பது அதன் உள்ளார்ந்தப் பொருள். இது நோய்க்கு மட்டுமல்லச் சமூகச் சுணக்கத்தின் அத்துனைக் காரணங்களுக்குமான அணுகுமுறை, தெரிவு முறை இப்படித்தான் இருக்க முடியும் என்பதையே மருத்துவர் ச.மருதுதுரை அவர்களின் கட்டுரைகள் அடங்கிய முழுத் தொகுப்பையும் ஒருசேர வாசிக்கும் போது தோன்றுகிறது.
இதில் 10 கட்டுரைகள் மருத்துவச் சூழலின் சவால்கள் குறித்தும், சுற்றுச் சூழல், மதம் குறித்தனச் சிலவும், சமத்துவமற்ற சமூகத்தின் இன்னபிற அவலங்கள் பற்றியும் பேசுவனவாக இருக்கின்றன.
இன்றைக்கு மனிதன் நுகர்வுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளான். நோய்மைகள் அடங்கியப் பொதியாக அவனது உடல் கிடத்தப்பட்டுள்ளது. நோய்மையற்ற மனிதன் முழு மனிதனாக இருக்க முடியாது. மனிதனின் உடலம் சகல வணிக அரசியல் வன்முறையையும் நிகழ்த்தும் நுகர்விடமாக இருந்து கொண்டுள்ளது. ஓர் மருத்துவனுக்கும் நோயாளிக்குமிடையிலான உறவு என்பது அவர்கள் இருவரும் தீர்மானிப்பதில்லை. சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களே நிர்ணயிக்கின்றன என்பதே முக்கியமானதாகும். மருத்துவர் ச.மருதுதுரை அவர்கள், நோயாளியின் உடலத்திற்கு அப்பால் அவனது இரத்தமும் சதையுமான வாழ்வை நோக்கி நகர்கிறார். அவனது இதயத்திற்கும், வயிற்றிற்கும், மூளைக்குமிடையிலானத் தொலைவுகளின் சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை கூரிட்டுப் பார்க்கிறார். உடலைக் கடந்தும், உள்ளார்ந்தும் செல்லும் அரசியலைச் சொல்கிறது தொகுப்புக் கட்டுரைகள்.
மெய்யாகவே நோயாளிகளின் உடல் இன்றைக்கு நோயாளிகளின் உடல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அது அவனது உடலமும் அல்ல என்பதையே இத்தொகுப்பின் மருத்துவச் சூழல் கட்டுரைகளின் ஆதாரச் செய்தியாக உள்ளது. ஒவ்வொரு உடலமும் ஒரு வானுயர்ந்த மருத்துவ மனையுடனும், மருந்துகளுடனும், மருத்துவனுடனும் பினைக்கப்பட்டுள்ளது. ஆயுள் வரையிலுமான உறவு அது. கட்டாய உறவு அது. வன்முறையான உறவு அது. இந்த நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்க்கும்போதெல்லாம் நமக்குத் தோன்றும் அய்யம் என்னவென்றால் நோய்களுக்காக மருத்துவமனையா? அல்லது மருத்துவமனைகளுக்காக நோய்களா? என்பதே.
சகல மருத்துவ நுண்கருவிகளுடனும் வானுயர்ந்து நிற்கும் தனியார் மருத்துவமனைகள், அதற்கு நேர் எதிர் திசையில் குறைந்த வசதிகளுடன் இயங்கும் அரசு மருத்துவமனைகள். சேவைக்கும், வணிகத்திற்குமான முரண்பாடுகள் மட்டுமல்ல மனிதத்திற்கும், அ மனிதத்திற்குமான, (மனிதத் தன்மையாற்ற) இடைவெளியின் முரண்பாடுகளாகும். இதயத்திற்கும் சட்டைப் பைக்கும் இடையிலான தொலைவாகும். இது சமூகத்தின் இரண்டு வகையான மருத்துவத்தை மட்டுமல்ல, இரண்டுவகைக் கட்டடங்களை மட்டுமல்ல, இரண்டு வகை மருத்துவர்களை மட்டுமல்ல, இரண்டு வகை நோயாளிகளை மட்டுமல்ல இரண்டு வகை சமூகத்தின் குறியீடாகும். வசதியின்மை-வசதிகள், இருப்பவன்- இல்லாதவன், மேல்-கீழ் என்ற சகல சமூக பொருளாதார, அரசியல் முரண்பாடுகளின் குறியீடுகளாகும். சமூக நோய்மையின் நிரந்தரக் குறியீடாகும்.
ஒரு நோயாளியின் அல்லது ஓர் பொதுச் சமூகத்தின் அலோபதி மருத்துவன் பற்றிய முந்தயச் சித்திரம் என்பது என்னவாக இருந்தது? ஒரு ஹெர்குலிஸ் சைக்கிளில் வாணிடி பாக், அதில் சில மருந்துகள். கரைசல்கள். வீடு தேடிவந்து நோயாளியின் நாடி பிடித்து ‘ஸ்டெதெஸ்’ வைத்துப் பார்த்துவிட்டு நோயாளிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டுச் செல்பவராக இருப்பார். அநேகமாக அந்த குடும்பத்தின் இன்ப, துன்பங்கள் அறிந்தவராகவே இருப்பார். நோயாளிக்கு எதிரே சிகிச்சைக்கானத் தொகையை வாங்கிக் கொள்ளாமல் வாசலுக்கு வெளியே கொடுக்கும் தொகையை வாங்கிக் கொண்டு அதிகமாக இருந்தால் மிகுதியையும் கொடுத்துவிட்டுச் செல்பவராக இருந்தார். நமது மருத்துவர். கவனிக்க ‘நமது மருத்துவர்!’. இது மரபாக சித்தா, மற்றும் ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்தவர்கள் ஆண்டாண்டு காலம் பின்பற்றிய முறையை அடியொற்றிய ஓர் மருத்துவப் பண்பாடாக இருந்தது. இன்றைக்கு அவற்றை ஏதோ ஒரு ‘பிளாக் அண்ட் ஒயிட்’ சினிமாவிலோ அல்லது ஒரு சில முதியவர்களின் நினைவுகளில் உறைந்துவிட்ட கனவாகவோ இருக்ககூடும்.
உலகமயம், நவீன பொருளாதாரக் கொள்(கை)ளைகளுக்குப் பிறகு மருத்துவச் சேவை என்பது தொழிலாகவும், மருத்துவன் அதன் முதலாளியாகவும், நோயாளி ஓர் நுகர்வாளனாகவும் புரிந்து கொள்ளப்படுகிறான். நோயாளியை மருத்துவன் சார்ந்து இருந்தது போய், நோயாளி மருத்துவனைச் சார்ந்து இருக்கும் அரசியல் இன்றைக்கு நோயாளியை மட்டுமல்ல, அனிதா, சரவணகுமார் போன்ற எதிர்கால மருத்துவர்களையும் சாகடித்துக் கொண்டுள்ளது.
நலவாழ்வு( HEALTH) என்பது மருத்துவத்தோடு மட்டுமே தொடர்புடையச் சொல் அல்ல. சமூக நீதியின் மறுபெயரும் அதுவே என்று ஆசிரியர் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். மருத்துவம் ஓர் கலை(THE ART OF MEDICINE) என்றும் சுட்டிக் காட்டுகிறார். கலைகள் கலைக்காக மட்டுமே என்பதையும் பார்க்கிறோம்.! மருத்துவம் என்பது மனித உடலத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல அதற்கு வெளியேயும் உள்ளது என்பது மருத்துவ அறிவியல் அதாவது சுற்றுச்சூழல் சுகாதாரம், சத்துணவு என்று அது தொடர்புடைய காரணிகள் விரிவடைந்தாலும் அதற்கு அப்பால் மனதுக்கும், உடலுக்கும் தொடர்புடையதானச் சமூக அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே தனிமனித உடலும் உள்ளமும் பிசிராந்தையார் கேசத்தைப் போல நரைக்காது என்றும் இளமையுடன் காணப்படும். சமூகக் காரணிகளான அரசியல், பொருளாதார, விடுதலையின் போதே, -விடுதலையிலேயே நோயாளியின் அல்லது தனிமனிதனின் விடுதலையும் தங்கியுள்ளது. அதனால்தான் ஆயுதப் பொதியா? மருந்துப் பொதியா? என்று வந்த போது மருந்துப் பெட்டியைச் தெரிவு செய்தார் செகுவெரா. அதுதான் நலவாழ்வின் குறியீடு. சேகுவெராவின் குறியீடு. புத்தனின், ஏசுவின், முகமது நபியின், வள்ளாலரின், சித்தர்களின் புரட்சிக் குறியீடு!
இன்றைக்கு நோய் ஒரு பக்கமாகவும், அதைத் தீர்ப்பதாகச் சொல்லும் மருந்துகள் ஒருபக்கமாகவும் திறப்பும், பூட்டும் போல வெவ்வேறாக வந்து இணைந்து நமது உடல்களை கொள்ளையிடுகின்றன. மருந்து நிறுவனங்களின் வணிக அரசியல் நிச்சயம் நோயாளியின் கருணைக்கான தல்ல. நோய்கள் தீர்க்கப்பட வேண்டியவையும் அல்ல. அவர்களுக்கு நோயும் வேண்டும், நோயாளியும் வேண்டும். மனித உடல்கள் நுகர்ந்து வீசப்படும் தேநீர் கோப்பையாக மாற்றப்பட்டுள்ளது. பயத்தை விதைத்து, பயத்தை அறுவடை செய்யும் இடமாக வணிக மருத்துவம் சார் நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளன. தடை செய்யப்பட்ட மருந்துகளின், தயார் செய்யப்படும் மருந்துகளின், அந்நிய மருந்து நிறுவனங்களின் ‘ஆய்வக எலிகளாக’ இந்திய விளிம்பு நிலை மனிதர்கள் மாற்றப்படும் அரசியல் குறித்து யோசிக்கத்தான் வேண்டும்.
ஆதி மருத்துவனின் கையில் சவரக் கத்தியைக் கொடுத்த அரசியல்தான் இன்றைக்குப் போலி மருத்துவன் என்று சொல்லி விலங்கை மாட்டுகிறது. நவீன மருத்துவத்தின் அரசியல் என்பது நோயாளியை பிழைக்க வைப்பதற்கானதல்ல. நோயாளியை தக்க வைப்பதற்கானதாகும். நோயாளியின் கண்கள் தேவைபடும் அளவிற்கு அவனது கண்ணீர் தேவைபடுவதில்லை. அவனது இதயம் தேவைபடும் அளவிற்கு அவனது அன்புத் தேவைபடுவதில்லை. மொத்தத்தில் அவனது உடல் தேவைப்படும் அளவிற்கு அவன் தேவைபடுவதில்லை. மனிதன் தேவைபடும் அளவிற்கு மனிதம் தேவைபடுதில்லை. நவீன மருத்துவத்தின் அரசியல் சொல்வதும் முன் நிபந்தனை என்பதும், மனிதனாக இருக்கக்கூடாது என்பதுதான். எல்லாம் நவீன ம(ா)யம்!
எப்படி மீனவனுக்கானக் கடற்சார் கொள்கை வகுப்போர் மீனவனைக் கேட்பதில்லையோ, உழவனுக்கானக் கொள்கை வகுப்போர் உழவனைக் கேட்பதில்லையோ அவ்வாறே மருத்துவக் கொள்(கை)ளைகளைத் தீர்மானிப்போர், திட்டமிடுவோர் மருத்துவர்களைக் கேட்பதில்லை. ஏனெனில் அது கொள்கை வகுப்போருக்கானத் திட்டங்களாகவே அவை இருந்துவிடுகின்றன. இந்த கொள்கைகள், கடலிலிருந்து மீனவனையும், நிலத்திலிருந்து உழவனையும் பிரிப்பதுப் போல நோயாளியிடமிருந்து மருத்துவனையும் பிரித்துவிடச் செய்கின்றன. ஓர் மருத்துவர் என்பவர் மருந்து நிறுவனத்தின் பகுதி விற்பனையாளராக மாற்றப்பட்டுள்ள நிலையில் அறம் சார் மருத்துவத்தின் நிலை கேள்விக்குள்ளாகின்றது. அரசின் கொள்கை வகுப்போர் அரசு மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகளை வரவிடாமலும், அதே சமயம் அரசு மருத்துவர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள விடாமலும் தனியாரை நோக்கி உந்திவிடும் அரசியலே இந்த கொள்கைகள் வழி செயல்படுகின்றன.
இதன் முழு விளைவுகளையும், ஒவ்வாமையையும் அரசு மருத்துவர்களே எதிர் கொள்ள நேர்கிறது என்பதே நமது மருத்துவத் துயரமாக நீடிக்கிறது. நோயாளியை நுகர்வோனாகப் பார்க்கச் சொல்லும் நமது மருத்துவக் கொள்கையாலேயே குழுமூர் செவ்வராஜ் தொடங்கி, அதே குழுமூர் அனிதாவரையிலும் பலனற்ற சிகிச்சைக்கு ஆளாக வேண்டி வந்தது
அரசு மருத்துவமனைகளையும், மருத்துவரையும், மக்களையும் இணைக்கும் மக்கள் நலஅரசுகளே இன்றைய நமது தேவையாக இருக்கின்றன. சேவை மனப்பான்மையுடன் வரும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சரி, மருத்துவமனைகளும் சரி விளிம்புநிலை மக்களுக்கான மருந்தும், மருத்துவமும் அவர்களிடமேயுள்ளன. அறம் சார் மருத்துவத்தின் எஞ்சிய வாரிசும் அவர்களாகவே இருக்கிறார்கள் இடம் கிடைத்த அனிதாக்களும், இடம் கிடைக்காத அனிதாக்களும் இங்கிருந்துதான் வரமுடியும், வந்தார்கள். இனியும் வருவார்கள். எனவே அரசின் பெயரில் தனியாருக்குக் கொள்கை வகுத்துக் கொடுப்பதற்கான ஓர் மருத்துவக் கொள்கை அமைச்சு நமக்குத் தேவைபடுவதாக இருக்கவில்லை.
நல வாழ்வின் எல்லை விரிகிறது. நலவாழ்விற்கு ஒழுங்கு அவசியமானதல்லவா? அந்த நலவாழ்வு என்பது நமது பொறுப்புடன் இணைந்த ஒன்றாகும் என்பதை ‘ஒழுங்கே உயிர் காக்கும்’ என்ற கட்டுரையின் பொருளாகிறது. சாலை என்பது பயணிப்பதற்கு மட்டுமேயானதாகும். சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கி என்பார்கள் ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை அவை ராஜ பாட்டைகள். அவை எல்லாம் மருத்துவமனை நோக்கியே செல்வதாக இருக்கின்றன. ஆக எல்லா சாலைகளும் மருத்துவமனைகளின் சாலைகளாகவே இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சாலையின் ஒழுங்கீனம் என்பது நமது பொறுப்பின் ஒழுங்கின்மை என்பதாகும். நமது சகல பொறுப்புகளையும் எதிரில் வருபவனே சுமக்க வேண்டும் என்ற நமது இந்திய மனோபாவத்தின் அலட்சியம் சாலைகளில் குருதிகளாககச் சிதறிக் கிடக்கின்றன. நமது ஒழுங்கின்மையின் அத்தனை வடிவங்களையும், இயல்புகளையும் நமது சாலைகள் கொண்டிருக்கின்றன. ஏனெனில் நாம் நமது மண்ணை பிரதிபலிக்கிறோம், சாலை நமது மண்ணை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
சாலைகளை பாவிக்கும் மனப்பான்மையோடு அணுகாமல் அதை ஆக்கிரமிக்கும் மனப்பான்மையுடன் அணுகுவதே விபத்து ஏற்படுவதற்கான காரணங்களாக இருப்பதைக் கட்டுரை ஆசிரியர், பாவிப்பதற்கும்-ஆக்கிரமிப்பதற்கும் இடையிலான பொருளின் வழி நமது பொறுப்பின்மையை சுட்டிக் காட்டுகிறார். முதல் கோணல் முற்றும் கோணலாக விபத்துக்கள் ஏற்படுவதற்கானக் காரணங்கள் சாலைகளில் இல்லை!, நமது மனதில் இருக்கின்றன என்பதை சொல்கிறது.
சாலை விபத்துக்கள் என்றில்லை. சகல விபத்துக்களும் நமது சமூகம் என்னும் சாலையில், தினசரி தார்ச் சாலையின் அதே மனோபாவத்துடன் அணுகுவதை, அணுகப்படுவதைப் பார்க்கலாம் கல்வியில் ஏற்படும் பிழைகள், நமது மதங்களில் ஏற்படும் பிழைகள், நமது ஆன்மிகத்தில் ஏற்படும் பிழைகள், நமது குடும்பங்களில் ஏற்படும் பிழைகள் எல்லா ஆக்கிரமிப்பின் பின் நிகழும் விபத்துக்கள். யாதொன்றும் மருத்துவர் முன்பாக உடலங்களாக வந்து சேர்கின்றன. தற்கொலைக்கு முயலும், தற்கொலை செய்து கொண்டு, கொலையுண்ட, வன்முறைக்கு உள்ளான எல்லா உடல்களும் சமூகத்தைச் சரியாகப் பாவிக்கத் தெரியாத விபத்துக்களினால் ஆனாவை. மருத்துவரின் சிகிச்சைக்கென வருபவை. உடலத்தைச் சரி செய்யலாம். செய்ய இயலாமலும் போகலாம் சமூகத்தை மருத்துவர்கள் என்ன செய்ய இயலும்.?
ஆனால் நாம் பார்க்கலாம் உலகெங்கும் மருத்துவர்கள் போராளிகளாகவும், போராளிகள் மருத்துவர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம். சேகுவெரா தொடங்கி திலீபன் வரை அவர்கள் சமூகத்திற்கு சத்திரச்சிகிச்சை அளிக்கத் தம்மை முன் உவந்தவர்கள். அனிதாவும், சரவணகுமாரும் பிறிதொருவகையில் அதைச் சொன்னார்கள். நமது மருத்துவரும் சொல்கிறார். இத்தொகுப்பும் சொல்கிறது அதை.
இன்றைக்கு நுகர்வு உலகத்தின் முன்நிபந்தனையாக அ-மனிதம் (மனிதத் தன்மையற்ற) இருக்கிறது. எல்லாம் நுகர்வு மயம்.! மதம், ஆன்மிகம், கல்வி, சுகாதாரம், எழுத்து, பேச்சு, நடமாடும் உரிமைகள் இன்னும் மனிதனின் ஆதாரப் பண்புகள், குணநலன்கள் எல்லாம் வணிகமாகிவிட்டன. வணிகத்திற்குள் அடங்கிவிட்டன. மனிதனே மனிதனுக்கானச் சவலாக மாறிக் கொண்டுள்ளான். மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் சகல அரசியலும் அரங்கேறிக் கொண்டுள்ளன.
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதை புண்ணியம் என்று சொன்னார்கள். இன்றைக்கு புண்ணியமும் சரி, தண்ணீரும் சரி வணிகமாகிவிட்டன. தார்சாலையின் அதே பொறுப்பின்மை நமது நீர்ச் சாலையிலும் நிகழ்வதை ஆசிரியர் ‘மிகப்பெரியத் தோல்வி’ கட்டுரையில் தீரா தாகத்துடன் முன் வைக்கிறார். ஒழுங்குகள் சாலைகளில் மட்டுமேயானதல்ல. நீரும், குருதியைப் போல ஓர் கொடை. அது ஓர் நீலக் குருதி! அதை தேவையில்லாமல் சிந்தக்கூடாது. புவி அளிக்கும் நன்நீர்க் குருதியை உயிர் காக்க மட்டுமே பயன்படுத்தும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒழுங்குகள் தவறுமிடங்களில் நிகழும் விபத்துக்கள் சாலைகளில் மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை என்பதைத்தான் நீர் குறித்தக் கட்டுரை சொல்கிறது. நீரால் நமது குழாயடித் தொடங்கி அரசு அகிலங்களுக்கடையே வரையிலும் போருக்கானச் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதையே இக்கட்டுரையின் நீராலானச் சொற்கள் விவரிக்கின்றன. எச்சரிக்கின்றன.
மருத்துவர் முன்பு ஓர் உடல் வரும் போது அல்லது, ஓர் நோயாளி வரும்போது அது உடலம் மட்டுமே. அவர் நோயாளி மட்டுமே. ஆனால் சமூகத்தில் அந்த உடலுக்கு பல அரசியல் பெயர்கள் இருக்கின்றன. பல மத, சாதி பெயர்கள் இருக்கின்றன. தீண்டும் உடல், தீண்டப்படாத உடல், புனித உடல் அ-புனித உடல் என உடல்கள் பல கூறுகளாகப் பிளவுண்டு கிடக்கின்றன. புனித அரசியல் மனிதத் தோலைவிடப், பசுவின் தோல் உயர்ந்தது என்கிறது. பசுவின் தோலைக் காப்பாற்றுவதற்கு மனிதத் தோலை உரிக்கச் சொல்கிறது. மதத்தின் தோல்கள் மரத்துப்போய்விட்டன அவை மனிதத் தோலை உரிப்பதாகத் தனது மத அரசியல் தோலையே உரித்துக் கொண்டுள்ளன. கட்டைவிரல் மட்டும் வெட்டப்படவில்லை. மனிதத் தோல்களும் தொடர்ந்து இங்கே வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கல்வி, கட்டை விரலைக் கேட்கிறது. மதம், தோலைக் கேட்கிறது. சாதி, உயிரற்ற ஒட்டுமொத்த உடலைக் கேட்கிறது.
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு ‘பசுப்புனிதம்’ என்று பெயர். இந்த சொல்லை ஆங்கில மொழியின் வழி உலகிற்கு ஏற்றுமதி செய்த பெருமை நமக்கே சேரும். பசுத் தோலை உரிப்பவர்களை, உரிக்கும் உரிமை உடையவர்களைக் கேள்வி கேட்ககூடாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. மியான்மரில் அதையே பவுத்தர்கள் வேறுவிதத்தில் சொல்ல முயல்கின்றனர். அங்கு ரோகியாங் இசுலாமியர் ஏதிலியாக்கப்படுகின்றனர். உலகெங்கும் மதவாதிகள் தமது அன்பையும், கருணையையும் வன்முறையாகளால் சொல்ல முயல்கின்றனர். போதனையால் அன்பும், கருணையும் மிகுதியாகிறதோ இல்லையோ அதை சார்ந்த வன்முறைகள் பெருகிவிட்டன. மதமும் வெறியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற விவேகானந்தரின் ‘விவேகக் குரல்’ மதத்தின் பெயரிலான அடையாள அரசியலுக்கு பொருத்தமானதாகும். இன்றைக்கு அன்பு நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களாகவே மதங்கள் இருக்கின்றன. மதத்தின் பெயரிலான ஒவ்வொரு வன்முறையும் கடவுளைவிட மனிதனே ஆகப் பெரியவன் என்று நிறுவ முயல்கின்றனவாக இருக்கின்றன.
மதத்தின் பெயரால் அரங்கேறும் வன்முறைகளைப் பற்றிக் கேள்விக் கேட்ககூடாது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் ‘பத்வா’ அறிவிக்கப்படும். மதத் துறவிகளே சீனத்தின் பழம்பெரும் ‘நெஞ்சா’ வித்தைகளுடன் களம் இறங்கிச் சோடா பாட்டில் வீசுவார்கள். நினைவிருக்கட்டும் ஒரு சோடா பாட்டிலால்தான் இங்கு மதங்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மதங்கள், சாதியை காப்பாற்ற வேண்டும், சாதி, மதங்களைக் காப்பாற்ற வேண்டும். இரண்டும் சேர்ந்து கடவுளை காப்பாற்ற வேண்டும். மனிதனுக்கு கடவுள் தேவைபடும் அளவிற்கு கடவுளுக்கு மனிதன் தேவைபடுகிறாராத் தெரியவில்லை. ஆனால் மத அரசியலுக்கு அவர் நிச்சயம் தேவைப்படுகிறார். கடவுளின்பெயரால் நிகழும் சகல வன்முறைகளின் சாட்சியாகவும் அவர் தேவைப்படுகிறார்.
மருத்துவர் ச.மருதுதுரை அவர்களின் கட்டுரைகள் அல்லது எழுத்துக்கள் எல்லாம் ஒருவிதத்தில் மனிதத்தை, மனிதனிடம் கோருபவையாக இருக்கின்றன. மனிதனைப் பேசும் மனிதத்தைக் கோருபவை. வேண்டுபவை. அவரது மாந்த நேயம் என்பது பெரியாரின் மாந்த நேயம்தான் ‘காக்கையின் கடவுள் ஒரு காக்கை’யாகத்தான் இருக்க முடியும். அது போல பெரியாரின் கடவுள் மதமற்றவராகத்தான் இருக்கமுடியும். மதமற்ற கடவுள் சாதியற்றவராகவும்தான் இருக்க முடியும் மத அரசியல்வாதிகள் கைவிட்ட கடவுள், படோபத்திற்கு எதிரான எளிமையை, மெய்மையை முன் வைக்கும் கடவுள். கறுப்புக் கடவுள். நாத்திகத்தின் கடவுள். தன்னிலிருந்து தன்னைப் பார்க்கும் கடவுள். தானேயானக் கடவுள். பெரியாரின் கண்கள் இப்படித்தான் பார்க்கும். கட்டுரை ஆசிரியர் பெரியாரின் கண்களிலிருந்து பார்க்கிறார். பெரியாரின் கண்களால் ஆனவை இக்கட்டுரைகள்.!
வணிக அறங்கள் கோலோச்சும் காலத்தில் மனித அறங்கள் பற்றி சதா பேசும் சொற்கள் இந்த கட்டுரை முழுமையும் நீரோட்டமாகத் தழுவிச் செல்கின்றன. மனிதன் அவனது பெயராலேயே சந்தைப்படுத்தப்படுதலுக்கு எதிராகக் காலத்தின் கலகக்குரலாக உரத்து ஒலிக்கின்றது இத்தொகுப்பு.
இந்த கட்டுரைகள் எல்லாம் நமது கூட்டுப் பொறுப்பையும், தனி மனித அன்பையும், ஒரு சேரக் கோருவதாக இருக்கின்றன. இரத்தமும் சதையுமான மரத்துப்போய்விட்ட ஆன்மாவைக் கோருவதாக இருக்கின்றன. ஓர் அறுவை சிகிச்சைக்கு மரத்துப்போகும் ஊசியை மருத்துவர்கள் போடுவார்கள். ஆனால் நமது மருத்துவர் விழிப்பதற்கும் உணர்வுத் திரும்புவதற்குமான ஊசியை, மருந்தை இக்கட்டுரைகளில் வைத்துக் கொண்டுள்ளார். எந்த உணவை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்களின் அறிவுரையை இன்றைக்கு மதஅரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். எனவேதான் நமது மருத்துவர், தோல்களின் அரசியல் பற்றித் தோலுரிக்க வேண்டியிருக்கிறது. கலிலியோவைக் கொன்றதும் மதம்தான், ஒளி காட்டுவதாகச் சொன்ன எடிசனின் ஒளிரும் விளக்கை அணைத்தது. வழிகாட்டுவதாகச் சொல்லும் மதங்கள்தாம். எல்லா சாலைகளையும் அடைத்து வைத்துக் கொண்டுள்ளன. போகத ஊருக்கு வழி சொல்வதும் அவைதாம். ஓர் அறுவை சிகிச்சைக்குத் தேவையான அத்துணை உபகரணங்களையும் கொண்டிருக்கிறது நமது மருத்துவரின் எழுத்து.
அரசு, ஓர் குடிமகனுக்கு இலவசமாகத் தருவதாகச் சொல்லும் யாதொன்றும் இன்றைக்கு தனியாரிடம் சென்றுவிட்டன. செல்ல வேண்டும் என்பதுதான் வணிக அரசியல். கல்வி, சுகாதாரம், குடிநீர் எல்லாம் மக்கள் நல அரசுகளால் தனியாரிடம் விற்கபட்டுவிட்டன. யாதொன்றும் வணிகத்திற்குட்பட்டவையே. வணிகமே. அரசு என்பது ஓர் ஒடுக்கும் கருவி என்பார் மார்க்ஸ். அரசு என்பது மேட்டுக் குடிகளின் அரசு என்பது எவ்வளவு மெய்யோ அவ்வளவுக்கு அரசு என்பது இன்றைக்கு வணிக நிறுவனங்களின் அரசு ஆகும். எனவேதான் பிணம் திண்ணும் சாத்திரங்கள். நாம் பார்க்கலாம் இக்கட்டுரைகள் எல்லாம் நிறுவனமயத்திற்கு எதிரான சொற்களையே அடுக்கிக் கொண்டுள்ளன என்பதை. நிறுவனம் எந்த சொற்களை எல்லாம் வெளியேற்றுமோ அவற்றாலேயே இவை கோர்க்கப்பட்டுள்ளன.
ஓர் தனி மனிதனுக்கு, அவனது நிறுவனங்களுக்கு, சாதிகளுக்கு, மதங்களுக்கு, அரசுகளுக்குமான நினைவூட்டும் சொற்களை இவை கொண்டிருக்கின்றன. இந்த சொற்களில்தான் தபோல்கர் பேசினார், கல்புர்கி பேசினார். கவுரி லங்கேஷ் பேசினார். லசந்தவிக்கரமசிங்க பேசினார். இன்றைக்கு கன்யாகுமார் பேசுகிறார், மேவானி பேசுகிறார். நமது மருத்துவரும் பேசுகிறார். நாமும் பேசுகிறோம். இருக்கும்போதே இல்லாது போகும் வாழ்வின் இருந்தலுக்காகப் பேசுகிறோம் அடிப்படை உரிமைகளில் ஒன்றானவற்றிலிருந்து சற்றே உரக்கப் பேசுகிறோம். செவி உள்ளவர் கேட்க கடவென்று பேசுகிறோம். இத்தொகுப்பு இப்படித்தான் பேசுகிறது. இவை செல்லுமிடமும் இப்படித்தான் பேசக்கூடும். பேசுவார்கள். பேசட்டும்.!
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதி மன்றத் தீர்ப்பு ஒன்று தண்ணீர் வைத்திருப்பவர்கள் அதிகம் குடிக்கவும், தாகமுள்ளோர் குறைத்துக் குடிக்கவும் கடவர் என்கிறது. ‘நீர் அரசியல்’ முதலில் காவிரியைப் புட்டியில் அடைத்தது. நீர் கேட்போரைச் சிறையில் அடைத்தது. டெல்டாவின் ஒட்டகப் பயணம் வெகுதூத்தில்லை. கர்நாடக காதாநாயகன் ராஜ்குமார் வீரப்பனால் கடந்தப்பட்டப் போது ‘சிரித்துக் கொண்டே நீ வருக’ என்று தினமணியில் இந்த கட்டுரையின் தொகுப்பாசிரியர் எழுதினார். ராஜ்குமார் விடுதலை ஆனார். ஆனால் காவிரி நீர் இன்றுவரை விடுதலை ஆகவில்லை. காவிரி குறித்த தீர்ப்பானது வழக்கம்போல இறுதி தீர்ப்பாக இருக்கப்போவதில்லை. இருப்பதில்லை. இருந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஒன்று வாடும் பயிர்கள் காப்பாற்றப்படும் இரண்டு, இக்கட்டுரை முன் வைக்கும், ஆதாரக் கவலைகளில் ஒன்று நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டதாக இருந்திருக்கும். உலகின் நன்நீர் அரசியலுடன் தொடர்புடையதாகவே நீரின் தேவை யை இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கும்.
நீண்ட இடைவெளியின் பின் வருவதாகத் தோன்றா உயிர்ப்புடன் இருக்கும் இத்தொகுப்பும், இக்கட்டுரைகளும், இதன் கரிசனம் மிகுந்த சொற்களும் அதன் ஆசிரியர் எழுப்பும் சகல நீதிக்குமான கேள்விகள், தேவைகள் இன்றும் நீடிப்பதே இவைப்பற்றி இன்றும் பேசுவதற்குப் போதுமானவையாக இருக்கின்றன. நாளையும் பேசுவதற்கு நம்மிடம் சொற்கள் இருக்கலாம் மானுடம் கசியும் இச் சொற்களில் இருந்துதான் இவ்வவுகிற்கான விடுதலை நிரந்தரமாக எழுதப்படுகின்றன. எழுதப்படும்.
இந்த கட்டுரைத் தொகுப்பிற்கு ‘குழுமூர் செல்வராஜ் தொடங்கி குழுமூர் அனிதா வரை’ என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. குழுமூர் செல்வராஜுன் மருத்துவப் படிப்பு இடைநின்றபோது, ‘வெட்டப்படும் கட்டைவிரல்கள்’ என்கின்ற கட்டுரையினூடான ஆசிரியரின் ஆதங்கத்திலும், எச்சரிக்கையிலும், கரிசனத்திலும் அனிதாவிற்கானச் செய்தி அதில் இருந்திருக்கவே செய்தது. நேற்று செல்வராஜின் கட்டை விரல் இன்று அனிதாவின் கட்டைவிரல் என வெட்டப்பட்ட, வெட்டப்படும் விரல்கள் பற்றி சுட்டும் விரல்களாக நமது கட்டுரையாசிரியரின் கட்டுரைகளே அமைந்துவிட்டது வினோதமே. மெய்மையைப் பேசும் கட்டுரைகள் யாதொன்றும் எதிர்வுகூறல்களாகவே அமைந்துவிடுகின்றன. அமைந்துவிடும். அப்படியானக் கட்டுரைகளின் தொகுப்பே இது.
இச் சமூகம் பற்றிய, மனிதன், மனிதம் பற்றிய ஆசிரியரின் நேயமும், கரிசனமும், நம்பிக்கையும் மிகுந்த எழுத்தையே இக்கட்டுரைகளில் தரிசிக்கின்றோம். அதே சமயம் மெரினாவில் எழுந்த இளைஞர்களின் தைப்புரட்சியை இவ்வெழுத்துக்களுடன், இச் சொற்களுடன், இந்த நம்பிக்கைகளுடன் சேர்த்துப் பார்க்கும் போது இக் கட்டுரைகளின் உள்ளார்ந்தச் செய்திகளுக்கு நிச்சயம் உயிரூட்டுவதாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது. அதுபோலவே மெரினாவிற்கான எதிர்காலப் புரட்சி விதைகள் இக்கட்டுரைகளில் எங்கேனும் ஓர் சொற்களுக்குள், செய்திகளுக்குள், இருந்திருக்க வேண்டும். இருக்கும். இக்கட்டுரைகள் மெரினாவிற்கு உயிரூட்டியதா? அல்லது மெரினா, இக்கட்டுரைகளுக்கு உயிரூட்டுகிறதா என்பதற்கும் அப்பால் இத்தொகுப்பு எதிர் நோக்கும் பயணமும், இலக்கும் எதுவோ அதுவே பிரிதொரு வகையில் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாக உறுதியாகச் சொல்லலாம். சொல்வோம்.!
இந்த கொரோனா சமர் காலத்தில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் முக்கியமானவை. முன்களப் போராளிகளாக அவர்கள் நோயுற்று வீழினும், வீழ, எழுந்து பணியாற்றவே செய்கின்றனர். அலைஅலையென எழும் பெருந்தொற்றின் பேரலையைச் சந்தித்தபடியே அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. கட்டுரை ஆசிரியர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவராக அல்லாமல் கடை நிலை ஊழியர் போன்று களத்தில் நின்று தம்முயிர் பற்றியக் கரிசனத்தையும் கவலைகளையும் தள்ளி வைத்தவிட்டுப் புதிய தொற்றையும், புதிய சவால்களையும் ஒரு சேரச் சந்தித்துக் கொண்டுள்ளதானது இத்தொகுப்பின், இதிலுள்ளக் கட்டுரைகளின் ஒவ்வொரு எழுத்தையும், தேவையையும், சவால்களையும், மெய்மையையும் மட்டுமல்லாது ஒரு மருத்துவராக இக்கட்டுரை ஆசிரியரையும், அவர்களைப் போன்றோரையும். என்றென்றைக்குமாக் கூடவே இணைத்துப் பார்க்கச் செய்கிறது. செய்யும்.
ஆசிரியர்-ச.மருதுதுரை
வெளியீடு-அகரம்
முகவரி-மனை எண்1, நிர்மலா நகர்
தஞ்சாவூர்-613 007
தொ.பே.-04362 239289
விலை-125