மார்க்ஸியப் பார்வையில் மனித உரிமைகள்
எரிக் எங்கிள்
தமிழில் : வி.உதயகுமார்
எரிக்எங்கிள் ஹார்வார்ட் சட்டப்பள்ளியில் பேராசிரியர் டங்கன்கென்னடியிடம் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார்.
அறிமுகம்
முதலாளித்துவ சமூகத்தில் அடிப்படை உரிமைகள், தன்னுரிமைகள் என்பவையெல்லாம் அவை எந்தளவு தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான செயல்திறம் கொண்டவை என்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றன என்பது மார்க்ஸிய நிலைநோக்காகும்.மார்க்ஸைப் பொருத்தளவில் தாராளவாத ஜனநாயக சமூகங்களில் தன்னுரிமைகள் என்பவை பொய்யானவை. தாராளவாத ஆட்சிமுறைகள் முன்னிறுத்தும் தன்னுரிமைகள் என்பவை சந்தை மதிப்புகளே.
அடிப்படை மனித மேன்மையைப் பாதுகாப்பது என்பதை அவை மைய நோக்காகக் கொண்டிருப்பதில்லை.
மனிதத் தேவைகளை மேம்பட நிறைவேற்றுவது முதலாளித்துவ அமைப்புமுறையா அல்லது பொதுமை அமைப்பு முறையா என்பது ஒருவர் எவ்வகையான பங்கீட்டு நியாயத்தை ஏற்றுக் கொள்கிறார் என்ற மெய்ம்மதிப்புத் தேர்வைப் பொருத்து அமையும். முதலாளித்துவத்துவ முறையில் அமைந்த தனி மனிதச் செய்கைக்கான தன்னுரிமைகளா அல்லது பொதுமை முறையில் அமைந்த அனைவருக்குமான ஒட்டுமொத்தக் கூட்டுச் சமத்துவ உரிமைகளா என்ற தேர்வைப் பொருத்தது.
முன்னவை தனிமனிதச் செயல்முறைகளாக இருக்க, பின்னவை கூட்டுக் கோரிக்கைகளாக இருக்கின்றன. பொதுமை அமைப்புமுறையின் பங்கீட்டு நெறிமுறைகளாக இருப்பன : கூட்டாண்மை, சமூகவுடைமை, ஒருமைப்பாடு மற்றும் சமத்துவம். முதலாளித்துவத்துவ அமைப்புமுறையின் பங்கீட்டு நெறிமுறைகளாக இருப்பன : தனிமனிதவாதம், தன்னாண்மை, தன்தேவைப் பூர்த்தி மற்றும் தனியுரிமை, தற்போக்கு. இந்த இருவகையான மதிப்பீடுகளுக்குமே வலுவான வாதங்கள் இருக்கின்றன. தன்னுரிமை என்ற கருத்தையும் சமத்துவம் என்ற கருத்தையும் உடன்சேர்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கொண்டதாகவே எந்த அமைப்புமுறையும் இருக்கிறது.
தன்னுரிமைக்கும் சமத்துவத்துக்குமான இடைவினை என்பது மார்க்சிய மொழியில் சொன்னால், இயங்கியல் தன்மை கொண்டது. இந்த முரண்களில் ஒன்று மற்றொன்றை விஞ்சியே இருக்கும் என்ற போதிலும், இவை ஒன்றோடொன்று பிணை கொண்டவையாகவும் ஒன்றன் மீது மற்றொன்று தாக்கம் கொண்டவையாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவத்துவ அமைப்பு முறையிலோ, தன்னுரிமை என்ற கருத்துநிலைக் கோட்பாடே விஞ்சியிருக்கும். உள்ளியல்பான சமத்துவம் என்பதற்கு மாறான வெறும் பெயரளவிலான சமத்துவம் என்ற வகையில் ஒரு சிலவற்றைத் தவிர, வேறு சமத்துவ வாதங்கள் தற்கால சட்டவியல் சிந்தனையில் எடுபடுவதில்லை.
பொதுமை அமைப்பு முறையில் சமத்துவம் என்ற கருத்துநிலைக் கோட்பாடு விஞ்சியிருக்கும். வெறும் செயல்முறைச் சமத்துவம் என்பதல்லாமல் உள்ளியல்பான சமத்துவம் இருக்கும். மனித உரிமைகள் பற்றிய தாராளவாதக் கருத்து மீதான மார்க்ஸிய விமர்சனத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது இந்தக் கட்டுரை.
தாராளவாத முதலாளித்துவத்துவ மனித உரிமைகள் பற்றிய மார்க்ஸிய விமர்சனம்
தாராளவாத மனித உரிமைகள் மீதான மார்க்ஸிய விமர்சனம் மிகவும் தீவிரமானது. அடிப்படை மனித உரிமைகள் என்ற கருத்துக்கு மார்க்ஸியத்துக்கு நிகராக எதிர்ப்பைத் தெரிவித்தது பாசிஸம் மட்டுமே. இவை இரண்டுமே நிச்சியமான கருத்தியல்களாக இருந்த போதிலும் மார்க்ஸியத்தைப் பாசிஸத்தோடு ஒப்பிடுவது சரியுமல்ல, முறையுமல்ல.
மார்க்ஸைப் பொருத்தளவில் வரலாறு தீர்மானிக்கப்படுவது பொருண்மை இயங்கியலாலும் (சமூகக் கட்டுமானங்களைத் தீர்மானிக்கும் பொருளாதார உற்பத்தி இயக்காற்றல்கள்) வர்க்கப் போராட்டத்தினாலும் ஆகும். ஆனால் பாசிஸ்டுகளுக்கோ வரலாறு என்பது உயிரியற்சாதிகளுக்கு இடையிலான போராட்டமாகும். அது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் அல்ல. பொருண்மை இயங்கியல் என்பது பாசிஸ்டுகளைப் பொருத்தளவில் ஒரு மாயையே. உயிரியற்சாதிகளுக்கு இடையில் இயற்கையாகவே ஏற்றத்தாழ்வு உண்டு என்ற தற்கோளை அடிப்படையாகக் கொண்டது பாசிஸம். இதற்கு நேர்மாறாக மார்க்ஸியம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.
இவ்வாறு மார்க்ஸியத்துக்கும் பாசிஸத்துக்கும் இடையில் மிக நிச்சயமான வேறுபாடுகள் உண்டு.
முதலாளித்துவ அரசுகள் ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளையும் மாண்பையும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதே தாராளவாத அரசுகளின் மீதான மார்க்ஸியத்தின் விமர்சனமாகும். தாராளவாத அரசுகள் மீது பாசிஸத்துக்கும் விமர்சனம் உண்டு. அவை போர்முனைப்புப் பண்புகளை நிலைநாட்டுவதில்லை என்ற காரணத்தால்.
மனித உரிமைகள் என்பவற்றை சார்நிலையற்ற வெறும் பெயரளவிலான நயப்பான்மைகளாக மார்க்ஸியம் கருதுவதில்லை. மாறாக (தாராளவாத முதலாளித்துவம் போன்றல்லாமல்) பொருண்மை உலகில் அர்த்தமுள்ள கோரிக்கைகளாக (தாராளவாத முதலாளித்துவம் போன்ற) உலக உண்மைகளால் சார்நிலைப்படுத்தப்பட்டனவாக மார்க்ஸியம் உறுதிபடக் கூறுகிறது.
மார்க்ஸிய மனித உரிமைகள் என்பவை வர்க்கப் போராட்டத்தினாலும் வரலாற்றினாலும் அதாவது பொருண்மை வரலாற்றால் சார்நிலைப்படுத்தப் படுவனவாக இருக்கின்றன.
முதலாளித்துவக் குடியரசுகளின் உரிமைகளும் தன்னுரிமைகளும் முற்றிலும் பெயரளவிலானவை. அதிகம் போனால் வெற்று நடைமுறை சார்ந்தவை. எனவே பொய்மையானவை என்பதே மனித உரிமைகள் பற்றிய மார்க்ஸிய விமர்சனமாகும். மார்க்ஸியர்களைப் பொருத்தளவில் பாட்டாளி வர்க்கத்தினர் (இன்று வெளிப்பணிப்பின் காரணமாக இவர்கள் பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்) தமது உரிமைகளைச் செயற்படுத்திக் கொள்வதற்கான பொருளாதார வசதிகளோ அறிவாக்கமோ அற்றவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு பாட்டாளிகள் ‘வை ராஜா வை’ என்ற இலங்கர் கட்டை விளையாட்டின் பலியாட்களாக இருக்கிறார்கள்.
பெயரளவிலான சமத்துவமும் சட்டத்துவமும் உண்மையில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளைத் திரையிட்டு விடுகின்றன. மார்க்ஸியத்தைப் பொருத்தளவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவை வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையில் நிகழும் போராட்டத்தின் எதிரொளிப்புகளே. இவ்வாறு மார்க்ஸைப் பொருத்தளவில் வர்க்க வேறுபாடுகளை ஒழிப்பது மட்டுமே ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி அனைவரும் முழுமையான ஈடேற்றத்தை அடைய வழிவகுக்கும்.
மார்க்ஸின் விமர்சனம் குறிப்பாக பிரெஞ்சு மாதிரியைச் சுட்டுவதாக இருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக நாம் காண்பது என்னவென்றால், மனித உரிமைகள் என்று அழைக்கப்படுபவை, குடிமக்கள் உரிமைகளுக்கு மாறாக வைக்கப்படும் மனித உரிமைகள் என்பவை, முதலாளித்துவச் சமூக உறுப்பினரின் உரிமைகளே அன்றி வேறல்ல. அதாவது தன்னல மனிதனின் உரிமைகள், சக மனிதனிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் பிரிந்துபோன மனிதனின் உரிமைகள்.
சமத்துவம் என்பது அதன் அரசியல்நீக்கம் பெற்ற அர்த்தத்தில் மேலே சொன்னதைப் போன்ற சம உரிமையே அன்றி வேறல்ல. அதாவது ஒவ்வொரு மனிதனுமே சமவலு பெற்றவனாக தன்னைத் தானே சார்ந்த ஒற்றை உயிரணுவாகக் கருதப்படுகிறான். 1795 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் சமத்துவம் என்பதை அதன் முக்கியத்துவத்துக்கேற்ப பின்வருமாறு வரையறை செய்கிறது:
சட்டப்பிரிவு 3 : (1795 ஆம் ஆண்டு அரசியல் சட்டம்) – சமத்துவம் என்பது என்னவென்றால், சட்டம் என்பது – பாதுகாப்பு அல்லது தண்டனை தருவதால் – அனைவருக்கும் ஒன்றே என்பதாகும்.
சட்டப்பிரிவு 3 : (1795 ஆம் ஆண்டு அரசியல் சட்டம்) – பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரது உடல், உரிமைகள் மற்றும் சொத்தைக் காத்துக் கொள்வதற்காக சமூகத்தால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும்‘
பாதுகாப்பு என்பதுதான் முதலாளித்துவச் சமூகத்தின் மிகப்பெரிய சமூகக் கருத்தாக்கம், காவல்துறை என்ற கருத்தாக்கம். எந்த ஒரு சமூகமும் இருப்பது தனிமனிதனின் உடல், உரிமைகள் மற்றும் சொத்தைப் பாதுகாப்பது. இந்த அர்த்தத்தில்தான் முதலாளித்துவச் சமூகத்தை தேவைக்கும் புரிதலுக்குமான அரசு என்றார் ஹெகல். இவ்வாறு தாராளவாத அரசுகளைப் பற்றி உலகார்ந்த விமர்சனத்தை வைக்கிறார் மார்க்ஸ்.
மார்க்ஸைப் பொருத்தளவில், அரசு என்பது முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பது. தொழிலாளர்களின் நலன்களைப் புறக்கணிப்பது. மார்க்ஸியர்களைப் பொருத்தளவில் சுதந்திரம் என்பது சமூகத்தால் சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டுமானம். இந்தச் சமூகக் கட்டுமானம் உருவாவது சில குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில்.
சுதந்திரத்துக்கும் தேவைக்கும் இடையிலான உறவைத் தீர்க்கமாக வெளிப்படுத்தியவர்களில் முதலானவராக ஹெகல் இருந்தார். அவரைப் பொருத்தளவில் சுதந்திரம் என்பது தேவையை ஆய்ந்தறிவதாகும். எந்தளவு தேவை புரிந்து கொள்ளப்படவில்லையோ அந்தளவே அது மறைபட்டதாக இருக்கிறது. சுதந்திரம் என்பது இயற்கை விதிகளிலிருந்து விடுதலை பெறுவது குறித்த கனவில் இருப்பதல்ல. மாறாக அந்த இயற்கை விதிகள் பற்றிய அறிவிலும் அந்த நோக்கங்களுக்காக அவற்றை முறைப்படி பயன்படுத்துவதற்கான வாய்ப்பிலும் இருப்பது. இயற்கையின் புறவுலக விதிகளாகட்டும், மனிதனது உடல், மன இயக்கங்களை நடத்தும் உள்ளார்ந்த விதிகளாகட்டும், இதுவே உண்மை. இந்த இரு வகையான விதிகளையும் நாம் அவற்றின் வெளிப்பாட்டைக் கொண்டு வேறுபடுத்தலாமே தவிர, அவற்றின் உண்மைநிலையில் அல்ல. எனவே விருப்பாற்றலின் சுதந்திரம் என்பது மிக அறிவார்ந்த தேர்வுகளைச் செய்வது என்பதற்கு அப்பால் வேறெதையும் குறிப்பதில்லை.
எனவே, ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றிய ஒரு மனிதனின் மதிப்பீடு எந்தளவு சுதந்திரமானதாக இருக்கிறதோ அந்தளவு அந்த மதிப்பீட்டின் பொதுவான அர்த்தத்தைத் தீர்மானிக்கும் தேவையும் இருக்கும்.
எனவே சுதந்திரம் என்பது நமது சாம்ராஜ்யத்தில் உள்ளது. புற இயற்கை உலகின் மீதானது. இயற்கையான தேவைப்பாடுகள் குறித்த அறிவை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது நிச்சயமாகவே வரலாற்று வளர்ச்சியின் ஒரு விளைவாக இருக்கிறது. ஆனால் நாகரிகத்தின் எந்த ஒரு முன்னேற்றமும் சுதந்திரத்தை நோக்கி வைக்கப்படும் ஒரு காலடிதான்.
இவ்வாறு மார்க்ஸிய விமர்சனம் என்பது சார்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. வரலாற்று வளர்ச்சி என்று பார்க்கும்போது முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள குறைவான மனித உரிமைப் பாதுகாப்பு என்பதுகூட முன்பு இருந்த நிலவுடைமைக் கட்டத்தைக் காட்டிலும் மேலானதே. இருந்தாலும் மார்க்ஸைப் பொருத்தளவில் நாகரிகத்தின் அடுத்த முன்னேற்றத்தை எட்ட வேண்டுமானால் அனைத்து உடைமை உறவுகளும் சிறிது சிறிதாக நசுக்கப்பட்டு மனித உறவுகள் நிறுவப்பட வேண்டும்.
மனித உரிமைகள் பற்றிய மார்க்ஸிய விமர்சனம் பெரும்பாலும் தனிச்சொத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிய விமர்சனமாக இருக்கிறது. சொத்தின் மூலமாகவே சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது என்று தாராளவாதம் வாதிடுகிறது. மாறாக, ஒடுக்குமுறையின் இறுதி இயக்குமுறையாக தனிச்சொத்து இருக்கிறது என்றும் மனிதர்களுக்கு இடையில் பிரிவினையை (அந்நியமாதலை) ஏற்படுத்துகிறது என்றும் மார்க்ஸியம் கருதுகிறது.
மார்க்ஸைப் பொருத்தளவில் அரசை இல்லாதொழித்து அதற்குப் பதிலாக குடிமைச் சமூகத்தை நிறுவும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக, ஒரு தற்காலிகமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு புரட்சியின் மூலமே சொத்துடைமையில் வெளிப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வு ஏற்படும்.
சோவியத் ஆட்சியின் அத்துமீறல்களுக்கும் பிறழ்ச்சிகளுக்குமான காரணங்களில் ஒன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகளைத் தீர்மானிக்கத் தவறியது.
முதலாளித்துவத்தில் உள்ள மனித உரிமைகள் மீதான மார்க்ஸியர்களின் விமர்சனம் என்னவென்றால், அவை முற்றிலும் சம்பிரதாயமானவை. நடைமுறையில் சாரமான அர்த்தம் ஏதும் இல்லாதவை. மேலோட்டமான பொய்யான முறைசார் சமத்துத்தைக் கொண்டு ஏற்றத்தாழ்வை மறைத்து நிற்பவை என்பதே. தாராளவாத மனித உரிமைகள் வெறும் சம்பிரதாய நடைமுறை சமத்துவத் தன்மை கொண்டவை என்ற மார்க்ஸிய விமர்சனத்தின் ஏற்புடைமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மார்க்ஸியத்தின் சில அடிப்படையான கருத்தாக்கங்களைப் புரிந்துகொண்டு மார்க்ஸியக் கோட்பாட்டின்படி மனித உரிமைகளை வரையறுக்க வேண்டும்.