மென்ரேநேக்ரோ – தேர்வு செய்யப்போகும் திசை வடக்கா, கிழக்கா?
சுவிசிலிருந்து சண் தவராஜா
முன்னைநாள் யூகோஸ்லாவிய நாடான மொன்ரேநேக்ரோவில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளுங் கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த 30 வருடங்களாக மொன்ரேநேக்ரோவின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த இந்தக் கட்சி தோல்வியைத் தழுவியமையானது, அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய அரசுத் தலைவருமான மிலோ யுக்கனோவிச் அவர்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது.
மிலோ யுக்கனோவிச்
தனது 29 ஆவது வயதில் 1991 ஆம் ஆண்டில் அரசுத் தலைவரான யுக்கனோவிச், ஐரோப்பாவின் மிக இளம் வயதில் அரசுத் தலைவரானவர் என்ற பெருமை பெற்றவர். 1990 களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவின் உடைவைத் தொடர்ந்து, சேர்பியாவுடனான ஒன்றியம், 2016 இல் சுதந்திர நாடு எனப் பல பரிமாணங்களை மொன்ரேநேக்ரோ சந்தித்த போதெல்லாம் யுக்கனோவிச்சும் அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் என்ற பல பரிமாணங்களைக் கடந்தும் நாட்டை வழிநடாத்தி வந்திருந்தார். ஆரம்பத்தில் ஒரு பொதுவுடமை வாதியாக விளங்கிய அவர் காலப்போக்கில் தேசியவாதியாக, பின்னாளில் மேற்குலக சார்பாளாராக எனப் பல உருமாற்றங்களைப் பெற்றார். சுதந்திரம் பெற்ற நாள் முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பைக் கொண்டிருந்த அவர் அதற்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் அதேவேளை, 2017 இல் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளுடன் (நேட்டோ) தனது நாட்டை இணைத்துக் கொண்டார்.
நேட்டோவுடனான இணைவு என்பது மொன்ரேநேக்ரோ மக்களில் பெரும்பான்மையோருக்கு உடன்பாடில்லாத ஒன்று. வெறும் 6,20,000 மக்கட் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் மூன்றிலொரு வீதமானோர் சேர்பிய மொழி பேசுவோராக உள்ளனர். அது மாத்திரமன்றி, மேற்குலகுடனான உறவை விட சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியவற்றுடனான உறவைப் பேணவே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நிலையில், சேர்பியன் பழமைவாத திருச்சபை தொடர்பாக நாடாளுமன்றில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டம் யுக்கனோவிச்சின் அரசியல் எதிர்காலத்தையே புரட்டும் விதமாக அமைந்துவிட்டது. ”குறித்த திருச்சபை தன்வசம் வைத்திருக்கும் காணிகளை அவை தனக்குரியவை என நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில் அவை அரசுடமை ஆக்கப்படும்” என்னும் சட்டம், திருச்சபையை மட்டுமன்றி அதனை ஆதரித்து நிற்கும் மக்களையும், இந்த மக்களோடு கலாசார மற்றும் வரலாற்று அடிப்படையில் பின்னிப் பிணைந்த சேர்பிய மற்றும் ரஸ்ய அரசாங்கங்களையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து திருச்சபையின் ஆதரவோடு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழத் தொடங்கின. மக்களின் மத சுதந்திரத்தில் அரசாங்கம் கைவைக்க அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மேற்குலக சார்புக் கொள்கைகளுக்கு எதிரான ஆத்திரமாக மாறியது.
வெகுமக்களின் பிளவுபட்ட அபிப்பிராயம்
மொன்ரேநேக்ரோ மக்களைப் பொறுத்தவரை அவர்கள் கொள்கையளவில் தமக்குள் மேற்குலகையும், கிழக்குலகையும் ஆதரிக்கும் கொள்கையில் பிளவுண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் சேர்பியாவுடனான ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பில் 55 வீதமான மக்கள் மாத்திரமே பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வேறு விதமாகச் சொல்வதானால் மிகச் சொற்ப பெரும்பான்மையினரே பிரிவனையை ஆதரித்தனர். மாற்றுக் கருத்தைக் கொண்ட 45 வீதமானோரின் உணர்வுகள் சேர்பியாவுடனும், ரஸ்யாவுடனும் தம்மை அடையாளப் படுத்துவதாகவே இருந்து வந்தது.
கிழக்கில் செல்வாக்கு மிகுந்த பழமைவாத கத்தோலிக்கம்
கிழக்கு ஐரோப்பாவில் வாழும் மக்களில் அநேகர் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றினாலும் கூட அவர்கள் வத்திக்கானில் உள்ள திருச்சபையைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் கிழக்கின் மிகப் பெரிய நாடான ரஸ்யாவில் பின்பற்றப்படும் பழமைவாத கத்தோலிக்கத் திருச்சபையைப் பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். கிழக்குப் பழமைவாதத் திருச்சபை அல்லது பழமைவாத கத்தோலிக்கத் திருச்சபை என அழைக்கப்படும் இந்தத் திருச்சபையின் கீழ் 22 கோடிப் பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். வழமையாகக் கொண்டாடப்படும் கிறிஸ்தவ பண்டிகைகளை அவர்கள் வேறு நாட்களிலேயே கொண்டாடி வருகின்றனர். தமக்கென தனியான நாட்காட்டியைக் கூட அவர்கள் பயன்பாட்டில் வைத்துள்ளனர். தற்போது நாம் பாவித்துவரும் கிரகோரியன் நாட்காட்டிக்கு முந்திய வடிவமான யூலியன் நாட்காட்டியை அவர்கள் பாவனையில் கொண்டுள்ளனர். (இந்த நாட்காட்டி பொதுவான நாட்காட்டியில் இருந்து 13 நாட்கள் பிந்தியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.)
கலாசார, பண்பாட்டு, மத அம்சங்களில் ரஸ்யா மற்றும் சேர்பியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள மொன்ரேநேக்ரோ மக்கள் தமது பழமையான நெருக்கத்தைப் பேண விரும்புகையில் அவர்களை மேற்குலகை நோக்கி இழுத்துச் செல்ல முனையும் யுக்கனோவிச்சின் செயற்பாடுகள் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன. இத்தகைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் யுக்கனோவிச்சிற்கு எதிராக வாக்களிக்குமாறு மொன்ரேநேக்ரோ திருச்சபை விடுத்த அழைப்பை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. வழக்கத்தை விட அதிகமாக 76.69 வீதமான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.
பொதுத்தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகளின் படி யுக்கனோவிச் தலைமையிலான சோசலிச ஜனநாயகக் கட்சி 35.12 வீதமான வாக்குகளையும், எதிர் கட்சியான ஜனநாயக முன்னணி 32.51 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ளன. சோசலிச ஜனநாயகக் கட்சியே அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக இருப்பினும் தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அந்தக் கட்சிக்கு இல்லை. தேசத்தின் அமைதிக்கான கூட்டணிக் கட்சிகள் 12.5 வீதமான வாக்குகளையும், பசுமைக் கட்சியான ஐக்கிய சீரமைப்பு நடவடிக்கைக் கட்சி 5.53 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. யுக்கனோவிச்சுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரியுள்ளன. மொத்தமுள்ள 81 நாடாளுமன்ற ஆசனங்களில் 41 ஆசனங்களை இந்தக் கூட்டணி தக்கவைத்து உள்ளது. சோசலிச ஜனநாயகக் கட்சி 30 இடங்களை வெற்றி கொண்டுள்ள நிலையில் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையே திரட்டும் நிலையில் உள்ளது.
சேர்பிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னணியின் தலைவர் ஸ்ட்ராவ்கோ கிரிவோகபிச் புதிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
தற்போது அரசுத் தலைவராகப் பதவியில் உள்ள யுக்கனோவிச்சின் பதவிக் காலம் 2022 ஆண்டிலேயே முடிவடைய உள்ள நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டு அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. அது மாத்திரமன்றி மொன்ரேநேக்ரோவின் எதிர்காலம் மேற்கு நோக்கியதாக அமையுமா அல்லது அது கிழக்கு நோக்கிச் சாயுமா என்ற கேள்வியும் எழுப்பப் படுகின்றது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் சந்தித்துக் கொண்ட கிரிவோகபிச் மற்றும் அவரின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ”தாம் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப் போவதாக” அறிவித்துள்ளனர். எனினும் கூட்டணிக் கட்சிகள் இடையே பொதுவான கொள்கை முரண்பாடுகள் இல்லாமலும் இல்லை. சர்ச்சைக்குரிய பழமைவாத கத்தோலிக்க திருச்சபையின் சொத்துகள் தொடர்பான சட்டத்தை திரும்பப் பெறுவது என்னும் விடயத்தில் மூன்று கட்சிகளும் ஒத்த கருத்தில் இருந்தாலும், சேர்பியா மற்றும் ரஸ்யா சார்ந்து வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அமைப்பதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தவிர, தற்போதைய அரசுத் தலைவர் யுக்கனோவிச் இன்னும் இரண்டு வருட பதவிக் காலத்தைக் கொண்டுள்ள நிலையில், இத்தகைய ஒரு கொள்கை மாற்றத்திற்கு அவர் அனுமதி தருவாரா என்றொரு கேள்வியும் இருக்கிறது.
மொன்ரேநேக்ரோவின் எதிர்காலம்
மொன்ரேநேக்ரோ அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் பதவியேற்க வேண்டும். ஆனால், அரசுத் தலைவர் யுக்கனோவிச்சின் மனதில் வேறு எண்ணங்கள் எதுவும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னான வெற்றிக் கொண்டாட்டங்கள் சிலவற்றின் போது சிறியவகை வன்முறைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டங்களை இடைநிறுத்துமாறு கிரிவோகபிச் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களின் பேரணி ஒன்றிற்கு அரசுத் தலைவர் யுக்கனோவிச் அழைப்பு விடுத்திருக்கின்றார். ”மொன்ரேநேக்ரோ முதலில்” என்ற பெயருடன் கூடிய இந்தப் பேரணி எதற்கான கட்டியம் எனப் புரியாத நிலையே நிலவுகின்றது. தனது தரப்பு ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டே குதிரை பேரம் நடத்தி எதிரணியில் இருந்து யாரையாவது தனது பக்கம் வளைத்துப் போட்டு ஆட்சியைப் பிடிக்க அவர் திட்டம் வைத்திருக்கின்றாரா என்ற ஐயம் எழுப்பப் படுகின்றது.
உலகில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க, ஐரோப்பாவின் ஒரு மூலையில் உள்ள ஒரு குட்டி நாட்டைப் பற்றி, அதுவும் உலக வரைபடத்திலே எங்கே இருக்கின்றது எனத் தெரியாத ஒரு நாட்டைப் பற்றி எதற்கு இத்தனை முக்கியத்துவம் எனச் சிலர் சிந்திக்கக் கூடும். அண்மைக் காலமாக ஐரோப்பாவில் எழுச்சி பெற்றுவரும் ரஸ்யாவிற்கு ஆதரவான அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான உணர்வலைகளின் ஒரு வெளிப்பாடே மொன்ரேநேக்ரோ விவகாரம். உள்நாட்டில் கட்சிகள் மோதிக் கொண்டாலும், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டாலும் பின்னணியில் கிழக்கும் மேற்கும் செயற்பட்டு வருவதை மறைப்பதற்கில்லை. இந்தப் பலப் பரீட்சை தற்போது முன்னாள் சோவியத் நாடுகளான கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.
1990 களில் சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னான காலப்பகுதியில் கிழக்கு மேற்கு முகாம்களுக்கு இடையிலான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டதாக உலகம் நம்பியது. ஆனால், தற்போது அது மீண்டும் வேறுவடிவில் இடம்பெறத் தொடங்கி விட்டது என்பதற்கான காட்டியே, ரஸ்யாவைச் சூழ உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளை வளைத்துப் போட ஐரோப்பிய ஒன்றியம் முயல்வதும், அதனைத் தடுத்துவிட ரஸ்யா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும். சேர்பியா, ஜோர்ஜியா, தெற்கு ஒசற்றியா, அப்காசியா, கொசோவா, உக்ரைன், பெலாரஸ், மொன்ரேநேக்ரோ என இந்தப் பனிப்போர் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வெகுமக்களின் விருப்புக்கு மாறாக, பாரம்பரிய சரித்திர, கலாசாரப் பண்புகளை மறந்துவிட்டு மேற்குலகின் பக்கம் சாயும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் போக்கு இந்தப் பிராந்தியத்தில் பெரிய நாடான ரஸ்யாவை பலம்குறைந்த, பாதுகாப்பற்ற ஒரு உணர்வை உண்டாக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதன் விளைவே இன்றைய பிரச்சனைகள். இத்தகைய ஒரு நிலை நீடிப்பதையே மேற்குலகம் விரும்புகின்றது. மேற்குலகின் செல்நெறியைத் தீர்மானிக்கும் போர்வெறியர்களும், ஆயுத வியாபாரிகளும் தேர்வு செய்துள்ள பாதையும் அதுவாகவே இருந்து வருகின்றது. இத்தகைய பின்னணியில் சமாதானத்தையும் அமைதியையும் நேசிக்கும் மக்களின் குரல்கள் அமுங்கிப் போவதையே பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
(இன்று(06.09.20) வீரகேசரி வார இதழில் வெளிவந்த கட்டுரையின் மறு பிரசுரம்)