1984
Big Brother is Watching You (பெரியண்ணன் உங்களைக் கண்காணிக்கிறார்)
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்
“பெரியண்ணன் உங்களைக் கண்காணிக்கிறார்” என்னும் வாசகம் உலக அரசியலில், இடம்பிடித்துத் தீயாகப் பரவியது. இரண்டாவது உலகப்பெரும்போர் முடிந்திருந்த சூழலில், 1949- ஆம் ஆண்டில் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய “1984” என்னும் புதினத்திலிருந்து கையாளப்பட்ட பல மேற்கோள்களில், இது முதன்மையானது. . இன்று, அரசியல், சமூகம், இலக்கியம் என்று பல துறைகளிலும் நாம் மிகச் சாதார்ணமாகப் பயன்படுத்தும், ‘பெரியண்ணன்’ (Big Brother) என்னும் சொல்லும் இந்த மேற்கோளில் இருந்தே வந்திருக்கவேண்டும்
தான் வாழ்ந்த காலத்திலிருந்து (1949), 35 ஆண்டுகள் முன்னோக்கிப் பார்த்து 1984-இல் உலக அரசியல் எப்படி இருக்கும் என்று ஆய்ந்தறிந்து, கற்பனைப் பாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பட்டது, ‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்துநாலு’ “1984” என்னும் புதினம். ஜெர்மனியில் ஹிட்லரின் ‘நாசிசம்’ மற்றும் சோவியத் ஒன்றியத்தில், ‘‘ஸ்டாலினிசம்’ ஆகியவற்றின் கொடுமைகளை மையமாக வைத்து இந்தப் புதினம் படைக்கப்பட்டிருக்கிறது என்பது நூல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
1984-ஆம் ஆண்டில், உலக நாடுகள் மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கும் என்பது ஜார்ஜ் ஆர்வெல்லின் கணிப்பு. அமெரிக்கா தலைமையிலான ஓசியானா (Oceana), ரஷ்யா தலைமையிலான யூரேசியா (Eurasia), சீனா தலைமையிலான ஈஸ்டேசியா (Eastasia) என்று மூன்று நாடுகளை அவர் கற்பனை செய்கிறார். அந்த மூன்று நாடுகளுமே, எதேச்சதிகாரிகளால் ஆளப்படும் மிகை-வல்லரசு நாடுகளாக (Totalitarian Super States) இருக்கும் என்றும் கூறுகிறார்.
கதைச்சுருக்கம்:
வின்ஸ்டன் ஸ்மித் (Winston Smith) என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை, பின்னப்பட்டிருக்கிறது. வின்ஸ்டன் ஸ்மித், 1984- ஆம் ஆண்டில் (எதிர்காலம் என்பதை நினைவு கொள்க) ஓசியானா நாட்டில், ‘இலண்டன்’ (London) நகரில் வசிக்கிறான். ஓசியானா நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் கட்சியில் வின்ஸ்டனும் ஓர் உறுப்பினர். ‘இங்லிஷ்-சோசலிசம்’ (Ingsoc – English Socialism) என்பது அந்தக் கட்சியின் கொள்கை. ஓசியானா வாரிசு அடிப்படையில் ஆளப்படும் குடும்ப ஆட்சிமுறையைக்கொண்ட (Oligarchy) நாடு.
ஆளுங்கடசி என்பது, ஆட்சியைக் கைவசம் வைத்திருக்கும் முதன்மை உறுப்பினர்களையும், ஓசியானா நாட்டின் மக்களைக்கொண்ட வழக்கமான உறுப்பினர்களையும் கொண்டது. கட்சிக்கு வெளியே, புரட்சியாளர்களும், வறுமையில் வாடும் எளிய மக்களும் உள்ளனர். கட்சித் தலைவர்தான், “பெரியண்ணன்”. (Big Brother). கருமையான தலைமயிரும், வெட்டிய மீசையுடனும்கூடிய “பெரியண்ணனின்” பெரிய அளவிலான படங்கள் இலண்டன் நகர் எங்கும் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் படங்களில், “பெரியண்ணன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்’ என்னும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் முதன்மையான மூன்று முழக்கங்கள் (slogans) :”போரே அமைதி”, ‘(War is Peace) சுதந்திரம் என்பது அடிமைத்தனம்’ (Freedom is Slevery) மற்றும் ‘ அறியாமையே வலிமை’ ( Ignorance is Srength) என்பனவாகும். இவற்றைப் பிரச்சாரம் செய்வதற்காகவே, ‘புதிய பேச்சுமொழி’ (Newspeak) என்று ஒரு மொழியும் ஓசியானா நாட்டு அரசால் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் சுயசிந்தனையை மழுங்கடித்து, அவர்களைக் குழப்பி, சிந்திக்கவிடாமல் செய்வதே அந்த மொழியின் நோக்கம்.
ஓசியானா நாட்டில் முதலாளித்துவம் அழிக்கப்பட்டு, ‘இங்கிலாந்து சோசலிசம்’ உருவாக்க நடைபெற்ற புரட்சி காலத்தில், வின்ஸ்டன் தனது பெற்றோரையும், தங்கையையும் இழக்கவேண்டியதாயிற்று. அதனால், அவன் ஆளுங்கட்சி நடத்தும் அநாதை விடுதியில் சேர்க்கப்பட்டு , வளர்க்கப்பட்டான். அதன் காரணமாக அவன் கட்சி அமைப்பிற்குள் ஒருவனாகிவிட்டான்.
அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும், ‘உண்மைக்கான அமைச்சகத்தில்’ (Ministery of Truth) பத்திரத்துறையில் (Records Department) அவனுக்கு பணி தரப்பட்டது. அது, கட்சியின் பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் உருவாக்கும் துறை. ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்சிக் கொள்கைகளை மாற்றுவதே முதன்மையானப் பணியாகும். அப்படி மாற்றிவிடுவதால், கட்சியின் கடந்த காலத்தைப் பற்றி எவருமே கேள்வி எழுப்ப முடியாத நிலை ஏற்படும். அப்படி கடந்தகால வரலாற்றைத் திரிக்கும்போது, சில முதன்மையான நபர்களின் பெயர்கள் வரலாற்றிலிருந்து நீக்கப்படும். பிழையான தகவல்கள் சேர்க்கப்படும். இப்படி உண்மைக்குப் புறம்பான செய்திகளை உருவாக்கும் துறைக்கு, :உண்மை அமைச்சகம்’ (Ministry of Truth) என்று பெயர்.
மேலும் மூன்று அமைச்சகங்கள் இயங்கிவந்தன. கைதிகளைக் கொடுமைப்படுத்தும், ‘அன்புத் துறை’ (Ministry of Love), போர்வெறிகொண்டு, அதற்கான காரியங்களை முன்னெடுக்கும், ‘அமைதித்துறை’ (Ministry of Peace) மற்றும் வெற்றி சிகரெட் (Victory Cigarette), வெற்றி ஜின் (Victory jin), வெற்றி காப்பி (Victory coffee) என்று தரமான பெயர்களில், மிகமிக தரம்குறைந்த பொருட்களை மக்களுக்கு வழங்கும் ‘தாராளத்துறை’ (Ministry of Pleanty).
கட்சி, ‘சிந்தனைக் காவலர்களைக்’ கொண்டு (Thought Police) மக்களைக் கண்காணிக்கிறது.. அதற்காக, அனைத்து இடங்களிலும் காட்சித் திரைகளை (Tele-screens) அமைக்கிறது.
வின்ஸ்டனுக்கு, அரசுக் கொள்கைகளில் உடன்பாடில்லை. அவன் தனிமை (privacy), துணைமை (intimacy), விடுதலை (freedom), மற்றும் அன்பு (Love) வேண்டினான். ஆனால், இவற்றில் எது ஒன்றையும் பொதுவெளியில் வெளிக்காட்ட முடியாது. இப்படிப்பட்ட எண்ணங்கள், ‘சிந்தனைக் குற்றம்’ (Thought Crime) ஆகும். அதற்கு, கைது செய்தல், சிறையில் அடைத்தல், சித்திரவதை செய்தல் தண்டனையாகக் கிடைக்கும். சிலவேளைகளில் மரண தண்டனையும் தரப்படும். எனவே வின்ஸ்டன் உள்ளுக்குள் பயந்துகொண்டிருக்கிறான்.
புதினம் ஆரம்பிக்கும்போது, வின்ஸ்டன் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அரசுக்கட்டிடத்தில் அமைந்த வசதிகுறைவான வீட்டில், மதிய இடைவேளையில் ஓய்வெடுப்பதற்காக வந்திருக்கிறான். பழைய புத்தகக் கடையில் கிடைத்த பழைய வரலாற்றை குறிப்பேட்டில் எழுத விரும்புகிறான். ஆனால், அவனது அந்த அறையில் ஒரு ‘தொலைக்காட்சித்திரை இருந்தது. அது கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கு என்று சொன்னாலும், உண்மையில் வேவுபார்ப்பதற்குமாகும். ஓசியானா நாட்டில், மக்களுக்கு தனிமை (privacy) என்பதே இல்லாமல் இருந்தது. என்றாலும், மரண பயத்தை ஒதுக்கிவிட்டு, ‘சிந்தனைக் காவலர்களிடம்’ மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும் அறையில் இருந்த ஒரு சிறிய மறைவிடமான மூலையைப் பயன்படுத்தி வின்ஸ்டன் எழுதத் துவங்கினான்.
தன்னுடைய கடந்தகால வாழ்க்கை பற்றியும், கட்சியின் கொடுஞ்செயல்கள் குறித்தும் எழுதுகிறான். “ பெரியண்ணன் ஒழிக” (Down with Big Brother) என்று கொட்டை எழுத்துகளில் மீண்டும் மீண்டும் எழுதுகிறான். பிறகு பணிக்குத் திரும்புகிறான்.
ஜோன்ஸ், ஆரோன்சன், ரூதர்ஃபோர்டு ஆகிய மூவரைப் பற்றிய குறிப்புகள் அவன் கண்ணில் படுகின்றன. அவர்கள் மூவரும் குற்றமற்றவர்கள் என்பது தெரிகிறது. அப்படியானால், கட்சி தவறிழைக்கிறது என்பது புரிகிறது. பழைய நிகழ்வுகள் திரிக்கப்படுகின்றன என்பதற்கு அதனைத் திடமான சான்றாக அவன் கருதுகிறான். அவன் அந்த குறிப்புகளை அழித்துவிடுகிறான். ‘உண்மை அமைச்சகத்தில், வின்ஸ்டன் எப்போதுமே கட்சி விசுவாசிகளால் சூழப்பட்டிருப்பான். அவனுடைய உண்மையான எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த ஏற்பாடு.
ஒவ்வொரு நாளும், பணி நேரத்தில், ‘ வெறுப்பு இரண்டு நிமிடங்கள்’ (Two Minutes Hate ) கடைபிடிக்கப்படும். ஓசியானாவின் எதிரி நாடான யூரேசியா மற்றும் அரசுக்கு எதிரான புரட்சி அமைப்பின் தலைவர் கோல்ஸ்டினுக்கு (Goldstein) எதிராகவும் முழக்கங்களை எழுப்புவார்கள். சந்தேகம் வராமல் இருப்பதற்காக, வின்ஸ்டனும் இணைந்துகொள்வான்.
புரட்சியாளர்கள் எவரையேனும் சந்தித்தால், புரட்சிக்கு முன்பான வாழ்க்கையை அறிந்துகொள்ளலாம் என்னும் சிந்தனையோடு வின்ஸ்டன் சாலைகளில் அலைந்து திரிகிறான். பணியின்போதும், நடக்கும்போதும், கருமைநிற முடியைக்கொண்ட இளம்பெண்ணை அடிக்கடி சந்திக்கிறான். அவள், ‘சிந்தனைக் காவலராக’ இருக்கக்கூடும் என்று அச்சமடைகிறான். ஒரு நாள் பணி நேரத்தில் அவள், அவனிடம் ஒரு குறிப்பை இரகசியமாகக் கையளிக்கிறாள். அதில், “ நான் உன்னை விரும்புகிறேன்” (I love you) என்று இருக்கிறது.
வின்ஸ்டனுக்கு அது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனாலும், திருமணங்களுக்கு கட்சியின் ஒப்புதல் வேண்டும்.. மற்ற ஆண்-பெண் பாலியல் ஈர்ப்பு மற்றும் அதுசார்ந்த இன்பம்’ கட்சிக்குப் பிடிக்காத ஒன்று என்பதால் எச்சரிக்கையோடு இருக்கிறான்.,
வின்ஸ்டன் தன்னை எங்கு, எப்படி சந்திக்கவேண்டும் என்று அவள் தெரிவிக்கிறாள். அதன்படியே ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வின்ஸ்டன் பயணித்து, மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் அவளைச் சந்திக்கிறான். ., அவளது பெயர் ஜூலியா. இருவரும் மனம்விட்டுப் பேசுகின்றனர். அவர்கள் இருவருக்குமே கட்சிமீது வெறுப்பு இருப்பது தெரியவருகிறது. அதன்பிறகு, பொது இடங்களில் அடிக்கடி சந்திக்கின்றனர். அவர்களது காதலும் ஆரம்பமாகிறது.
கட்சியைத் தூக்கி எறிந்துவிடலாம் என்பதில் வின்ஸ்டனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஜூலியாவோ, மனதிற்குள் கட்சியை வெறுப்பதோடு, கட்சிக்கு விசுவாசமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் ‘இரட்டைவாழ்க்கை’ (Double Life) வாழலாம் என்று நம்புகிறாள். அதன்படியே வாழ்கிறாள். பாலியலுக்கு எதிரான குழுவிலும் (Anti-Sex League) இருக்கிறாள், விசுவாசத்தைக் காட்டும் ‘இரண்டு நிமிட வெறுப்பு’ கூட்டத்திலும் (Two Minutes Hate) கலந்துகொள்கிறாள். இதற்கிடையில், வின்ஸ்டன், ஒரு அறையை வாடகைக்கு எடுக்கிறான். அந்த அறையில் அவர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர்.
பணி நேரத்தில், ‘உண்மை அமைச்சகத்தில்’ பனிபுரியும் ஓ’பிரியன் (O’Brien) என்பவர், அவராகவே வந்து வின்ஸ்டனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கிறார். தன்னை, கட்சிக்கு எதிரானவராகக் காட்டிக்கொள்கிறார்.. ஓ’பிரியன் தனது வீட்டு முகவரியைக் கொடுத்துத் தனது வீட்டிற்கு வந்து ’புதிய மொழி’ (Newspeak) அகராதியின் பத்தாவது வெளியீட்டுப் பிரதியைப் பெற்றுச் செல்லுமாறு கூறுகிறார்..
சில நாட்களுக்குப் பிறகு வின்ஸ்டனும், ஜூலியாவும், ஓ’பிரியன் வீட்டிற்குச் செல்கின்றனர். ஓ’பிரியன் கட்சியின் உள்வட்டதைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வீடு பலவசதிகளுடன் காணப்படுகிறது. தொலைக்காட்சித் திரையை அணைத்துவைக்கும் உரிமையும்கூட அவருக்கு உண்டு. வின்ஸ்டனும், ஜூலியாவும் கட்சிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துகின்றனர். கட்சிக்கு எதிராக இயங்கும் ‘தோழமை ‘ அமைப்புடன் (Brotherhood) இயங்குவதற்குத் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கின்றனர். எந்தவிதத்திலும், வின்ஸ்டனும், ஜூலியாவும் சந்திப்பதற்கு அது இடையூறாக இருக்கக்கூடாது என்றும் சொல்கின்றனர். ஒரு விருந்துக்குப் பிறகு, வின்ஸ்டனும், ஜூலியாவும் பிரிந்து செல்கின்றனர்.
வெறுப்பு வாரத்தில்’ (Hate Week), யூரேசியாவை விடவும், ஓசியானாவின் முதன்மை எதிரியாக ஈஸ்டேசியா மாறிவிடுகிறது. அதனால் ஓசியானாவிற்கும், ஈஸ்டேசியாவிற்கும் போர் ஏற்படும் சூழல் உருவாகிறது அது தொடர்பான வேலைகளில் வின்ஸ்டன் மூழ்கியிருக்கிறான். ஒரு மனிதன், வின்ஸ்டன் தவறவிட்டதாகச் சொல்லி ஒரு பெட்டியைக் கொண்டுவந்து கொடுக்கிறான். அதற்குள் புரட்சிக்குத் தலைமைதாங்குபவரான கோல்ட்ஸ்டின் (Goldstein). எழுதிய புத்தகம் இருக்கிறது.
வின்ஸ்டனும் ,ஜூலியாவும், ஒரு மதிய வேளையில் அவர்களது அறைக்கு ஓய்வெடுக்கச் செல்கிறார்கள். ஓசியானாவின் பழைய வரலாற்றைச் சொல்லும் அந்த புத்தகத்தை வின்ஸ்டன் வாசிக்கிறான். வின்ஸ்டன், ஜூலியா இருவருமே உறங்கிவிடுகிறார்கள். கண்விழித்த பிறகு, ஜன்னல் அருகே செல்லும் வின்ஸ்டன், எப்போதும் சொல்வதுபோல, “ நாங்கள் இறந்தவர்கள்” (We are the dead) என்கிறான். அதற்கு மறுமொழி சொல்வதுபோல் சுவர், “ நீங்கள் இறந்தவர்கள்” (You are the dead) என்கிறது.
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சித்திரத்திற்குப் பின்னால் தொலைக்காட்சித் திறை மறைந்திருந்தது அப்போதுதான் வின்ஸ்டனுக்குத் தெரியவருகிறது. காவலர்கள் வருகிறார்கள். வின்ஸ்டனும், ஜூலியாவும், கைதுசெய்யப்பட்டு, பிரிக்கப்பட்டு, தனித்தனியே சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
சிறையில், மற்றவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை வின்ஸ்டன் பார்க்கிறான். பலர் வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில், வின்ஸ்டனுக்கு, மிகக்கடுமையான சித்திரவதைகள் கொடுக்கப்படுகின்றன இறுதியாக, ஓ’பிரியன் வருகிறார். அப்போதுதான், தான் சிக்கவைக்கப்பட்டிருப்பது வின்ஸ்டனுக்குப் புரிகிறது. ஓ’பிரியன் ‘அன்பு அமைச்சகத்தில்’ (சிறைத்துறையில்) பணியாற்றும் முதன்மையான நபர் என்பதும் புரிகிறது. மாத்திரமல்ல, ஓ’பிரியன், ஏழு ஆண்டுகளாக வின்ஸ்டனைப் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததும் தெரிகிறது.. ஓ’பிரியன் வந்த பிறகு சித்திரவதை குறைகிறது.
வின்ஸ்டனின் பழைய ஞாபகம் என்பது பிழையானது என்றும் அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓ’பிரியன் வாதிட்டு மூளைச்சலவை செய்கிறார். ஆனாலும், வின்ஸ்டன் ஏற்க மறுக்கிறான். அவனது தவறான மனநிலைக்கு எதிராக அவனே போரிட்டு வெல்லவேண்டும் என்று ஓ’பிரியன் கூறுகிறார். அடிப்பது, பட்டினிபோடுவது, மின் அதிர்ச்சி கொடுப்பது என்னும் வழக்கமான சித்திரவதைகள் வின்ஸ்டனுக்கும் கொடுக்கப்படுகின்றன. 2+2=5 என்று அரசு சொன்னால் அதுதான் சரி என்று வின்ஸ்டன் சொல்லவேண்டும் என்று ஓ’பிரியன் வகுப்பெடுக்கிறார்.
தண்டனைகளால் உருக்குலைந்துபோன வின்ஸ்டன் ஒரு கட்டத்தில் ‘புதிய பாடம்’ (re-education) படிப்பதற்கு ஒப்புக் கொள்கிறான். அதன்பிறகு அவனை அடிப்பதில்லை, அவனுக்கு சரியான உணவு வழங்கப்படுகிறது. உறங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக வின்ஸ்டன் கட்சி விசுவாசியாக மாறிவருகிறான். என்றாலும் ஜூலியா மீதான அவனது காதல் உள்ளுக்குள் உறைந்திருக்கிறது. ஒரு நாள் இரவு, கனவுகண்ட வின்ஸ்டன், “ ஜூலியா, எனது அன்பே’ என்று கத்துகிறான். அது அவனது ‘மானுட நேயத்தை (humanity) வெளிப்படுத்துகிறது.
கடைசி முயற்சியாக, ஓ’பிரியன் வின்ஸ்டனை அறை எண் 101 க்கு நகர்த்துகிறார். அறை எண் 101 என்பது ஒவ்வொரு கைதிக்கும், அவனது அல்லது அவளது உளவியல் அடிப்படையில் கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். சித்திரவதைக்கூடமாகும். உலகில், வின்ஸ்டனுக்கு மிக அதிக அளவில் அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவது எலிகள் என்பது ஓ’பிரியனுக்குத் தெரியவருகிறது.
வின்ஸ்டன் ஒரு நாற்காலியோடு பிணைக்கப்படுகிறான். அவனது முகத்துக்கு நேராக, பட்டினியால் வெறிகொண்ட மாமிச உண்ணி எலிகள் நிறைந்த ஒரு பிரம்புக்கூடை கட்டித் தொங்கவிடப்படுகிறது. அந்தக் கூடை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்று ஓ’பிரியன் அச்சுறுத்துகிறார். வின்ஸ்டனால் அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மனதின் அடியாழத்திலிருந்து, “ஜூலியாவிற்கு இத்தண்டனையை வழங்குங்கள்” என்று கூச்சலிடுகிறான். ஜூலியாவைக் காட்டிக்கொடுத்தன்மூலம், அவனது மனிதநேயம் அழிக்கப்பட்டுவிட்டது. ஓ’பிரியன் வெற்றி பெறுகிறார், அவனை விடுதலை செய்கிறார்.
முற்றிலும் மாற்றமடைந்த வின்ஸ்டன் ஒருமுறை ஜூலியாவைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் அவர்கள் முன்புபோல் ஒருவர்மீது மற்றவர் காதல்கொண்டவராக இல்லை. இருவருமே, காட்டிக்கொடுத்தவர்கள்தான். வின்ஸ்டனுக்கு ஒரு சாதார்ண வேலை கிடைக்கிறது. ஆனால், நிறைய ஊதியம் கிடைக்கிறது. ஒரு காப்பிக் கடையில் (Chestnut Tree Café) ஜின் குடித்துக்கொண்டும், செஸ் விளையாடிக்கொண்டும் பொழுதைக்கழிக்கிறான். தனது சிறுவயது உண்மையான நினைவுகளைப் பொய்மையானவை என்றும் இன்றைய நிலையே உண்மையானவை என்றும் நம்பத்துவங்கிவிட்டான். ஓசியானாவுக்கும், யூரேசியாவுக்கும் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவந்த போரில், ஓசியானா வெற்றிபெற்ற செய்தி அனைத்து தொலைக்காட்சி திரைகளிலும் ஓடிக்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட செய்தி வரும் என்பது வின்ஸ்டனுக்குத் தெரியும். ‘அன்புத்துறையில்’ ‘அன்பாகக் கவனிக்கப்பட்ட’ பிறகு, வின்ஸ்டன் முற்றிலும் மாறிவிட்டான். ஜூலியாவை விரும்புவதை விட்டுவிட்டு, ‘பெரியண்ணனை’ (Big Brother) விரும்பத் துவங்கிவிட்டான் என்பதோடு கதை முடிவுக்கு வருகிறது.
நம் சமகால அரசியலுடன் பொருந்திப்போகும் “1984” :
ஏற்கனவே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் பயன்பாட்டிற்கு வந்திராத அந்த காலகட்டத்தில், எதிர்காலத்தில் தொலைக்காட்சித் திரைகளைப் பயன்படுத்தி, அரசும், அரசுசார்ந்த நிறுவனங்களும் மக்களை உளவுபார்க்க முடியும் என்று கணித்திருப்பது ஜார்ஜ் ஆர்வெல்லின் தொலைநோக்கு சிந்தனையைக் காட்டுகிறது.
அன்று, 1984-இல் ஓசியானா நாட்டில் எங்கும், எவரும், எப்போதும் ஓடி ஒளியமுடியாதவகையில் காண்காணிக்கப்பட்டனர் என்று புதினம் சொல்கிறது. இன்று, 2020-இல் திறன்பேசிகள், வலைத்தளங்கள், ஆதார்கார்டு போன்றவற்றால், அரசு மற்றும் காவல்துறையினரால் மட்டுமல்லாமல், கார்பொரேட் கம்பனிகளாலும் நாம் அனைவருமே ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்படுகிறோம் என்பதும்கூட உண்மை அல்லவா?
இந்தப் புதினம் படைக்கப்பட்ட (1949) காலம், அமெரிக்காவிற்கும், அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் ‘பனிப்போர்’ (Cold War) நடந்துகொண்டிருந்த காலகட்டம், ஆனால், பிற்காலத்தில், அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியத்தோடு, சீனாவும் ஒரு மிகைவல்லரசாக (Super Power) மாறும் என்பதும், ஒரு கட்டத்தில், அமெரிக்கா மற்றும் சீனா என்னும் இரு துருவ அரசியலுக்குள் உலக நாடுகள் தள்ளப்படும் என்பதும் ஆகிய ஜார்ஜ் ஆர்வெல்லின் கணிப்புகள் அப்படியே பலித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து, இன்று அமெரிக்கா X சீனா என்னும் இருதுருவ அரசியல் நடைபெற்று வருவதை நாம் வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது.
புதினம் சொல்லும் ஓசியானா நாட்டில், எதிர்க்கருத்து சொல்பவர்கள், ‘தேச விரோதிகள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலடைக்கபட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். சிலருக்கு மரணதண்டனைகூட வழங்கப்பட்டிருக்கிறது. அவையெல்லாம், ஜார்ஜ் ஆர்வெல்லின் கற்பனை மட்டுமே என்று ஒதுக்கிவிடமுடியாத அளவிற்கு இன்றைய அரசியல் நிகழ்வுகள் உள்ளன என்பதுதான் புதினத்தின் வெற்றியாகும். எதிர்க்கருத்து சொல்லும் சாதார்ண மக்களை ‘தேசவிரோதிகள்’ என்றும், கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும் ‘அர்பன் நக்சல்கள்’ என்றும் சொல்லி, கைது செய்து, அவர்களை சிறையில் அடைப்பதையும், ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களால் தபோல்கர், கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா?
அன்றும்சரி, இன்றும்சரி, வரலாறு நெடுகிலும், ‘பெரியண்ணன்கள்’ (Big Brothers) ஓராயிரம் மந்தையாளர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் ஒரு சிந்தனையாளனைப்பற்றிக் கவலைகொள்கிறார்கள், கண்காணிக்கிறார்கள். களையத்துடிக்கிறார்கள்.
ஓசியானா நாட்டில், பழைய வரலாறு சிதைக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது. நாட்டிற்காக உழைத்தவர்களின் பெயர்கள் மறைக்கப்படுகின்றன. இதை செய்வதற்கென்றே ஒரு துறை, அதற்குப்பெயர் ‘உண்மைத்துறை” (Ministry of Truth). வரலாறு மட்டுமல்ல, மொழியும்கூட சிதைக்கப்படுகிறது. ஓசியானாவில் நடப்பதுபோன்றே ஆட்சியாளர்களால், உண்மை வரலாறு மறைக்கப்பட்டு, பொய்யான புதிய வரலாறுகள் எழுதப்படுவதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா? நாட்டு விடுதலைக்காக உழைத்துத் தியாகம் செய்தவர்களின் பெயர்களை மறைப்பதும், துரோகிகளைத் தியாகிகளாகச் சித்தரித்துக் கொண்டாடுவதும் இன்று நம் கண்முன் நடப்பதையும் பார்க்கிறோம்தானே. காந்தி மீண்டும் மீண்டும் கொல்லப்படுவதும், கோட்சே கொண்டாடப்படுவதும் அப்படித்தானே நிகழ்கிறது !.
புதிய பாடத்திட்டம் என்னும் பெயரில், பள்ளிக்குழந்தைகளுக்கான பாடங்களும் உண்மைகளைப் புறக்கணித்து, பொய்மைகளைத் திணிக்கும் முயற்சியாக, ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதும்கூட ‘1984’ புதினம் முன்னுரைத்தபடியேதான் நடக்கிறது அல்லவா?
1984-இல் எப்படியெல்லாம் நடக்கும் என்று ஜார்ஜ் ஆர்வெல் முன்னுரைத்தாரோ (predict) அப்படியெல்லாம்தான், உலக அளவிலான அரசியலிலும், இந்திய அரசியலிலும் 2020-இல் நடந்துகொண்டிருப்பதை நாம் சாட்சிகளாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம் !
‘படைப்பு’ என்பது, வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, ‘புரட்டிப் போடவும்தான்’ என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ புதினம்.