ஜெயமோகனின் அறம்..!
இரா.மோகன்ராஜன்
தன்னைப் பற்றியும் பிறரைப்பற்றியம் சர்ச்சைகளை உருவாக்கிச் செல்வதில், உருவாக்கிக் கொள்வதில் ஜெயமோகனுக்கு எப்போதுமே அலாதியான ஈடுபாடு உண்டு. ஆனால் ஒரு நிபந்தனை – இரு துருவங்களிலும் தன்னைப் பற்றிய பேச்சாக அது இருக்க வேண்டும். மாறிக்கொள்ள வேண்டும். எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள் பேச்சு என்னைப்பற்றியதாகவே இருக்கட்டும். தன்னைச் சுற்றி ஒளிவட்டத்தைப்போல அந்தப் பேச்சுக்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் எழுத்தரசியல் . கொரோனா காலத்தில் உயிர் போகும் அவசரத்தில் போய்க் கொண்டிருப்பவர்களை தடுத்து நிறுத்தி தயவு செய்து என்னைப் பற்றி பேசுங்கள் என்பதாக இருக்கிறது அது.
கேரளாவில் பன்றிக்கு தேங்காய்க்குள் வைக்கப்பட்ட வெடிமருந்தில் சிக்கி கருவுற்ற யானையொன்று இறந்ததைப் பற்றி ஜெ.மோ என்ன சொல்லியிருக்கிறார்?. திசையன் விளையில் மின்சாரக் கம்பியில் விழுந்த பச்சை தென்னை மட்டைப் பற்றி ஜெ.மோ.வின் கருத்து என்ன என இன்றைய திகதியில் தேடிப் பார்க்கும் அவரது வாசக வட்டம், சினிமா கதாநாயகனின் ரசிக வட்டத்திற்கு இணையானது. ஜெ.மோவும் அவர்களை ஏமாற்றுவதில்லை. எல்லாவற்றுக்கும் கருத்து வைத்திருப்பவர் பச்சை தென்னை மட்டை மின் கம்பியில் விழுந்ததற்கு கருத்து வைத்திருக்கவில்லை என்றால் எப்படி?!.
ஆனால் இந்தக் கருத்தும் நிபந்தனைக்கு உட்பட்டதுதான். பொதுமுடக்க நாளில் கர்ப்பிணிப் பெண் மருத்துவ மனைக்கு அலைந்து இறந்து போனாள் என்பது ஒரு யானையின் பலிக்கு ஈடாகாது. அது குறித்து நீங்கள் தேடினால் ஏமாந்து போவீர்கள். தில்லியும் மும்பையும் பிடித்துதள்ளிய கூலித் தொழிலாளிகள் பல நூறு கி.மீ களை நடந்தே கடக்க முயன்று பசியிலும், வெயிலிலும், செருப்பணியாத கால்களுடன் தார்சாலைத் தகிப்பில் நின்றும், நடந்தும் செத்தும் வீழ்ந்தார்கள். தண்டவாளங்கள் நடுவே களைத்துத் தூங்கிய அவர்களை சரக்கு மட்டுமே ஏற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட ரயில்பெட்டிகள் ஏறி அரைத்துச் சென்றதும், சாலையோரத்தில் நடந்து சென்றவர்களை சுமையுந்துகள் மோதி உருட்டிக் கொன்றதுமாக இந்திய போக்குவரத்துச் சாலைகள் கைவிடப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் நனைந்து கொண்டிருந்த போது மாஸ்டர், தமிழ்கூறு நல்லுலகுக்கு இந்திய ஞான மரபில் நின்று கொரோனா பற்றிய வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
கொரோனா உச்சத்திலிருக்கும்போது, நாடு அதிஉயர் பதட்டத்திலும், பசியிலும், பட்டினியிலும் உயிர்விட்டுக் கொண்டிருக்கும்போது தன்னைப் பற்றி பேச அதன் வழி, பிறரைப்பற்றி பேச வேண்டி நேர்ந்திருக்கிறது. நேர்கிறது அவருக்கு.
இலக்கியத்தில் தூய்மைவாதம், புனித அழகியல் பேசுவோர் ஒரு வகை இலக்கிய நீரோக்கள்தாம். பெருந்தொற்று, பெருந்தெற்றின் சமூக பொருளாதார, அரசியல் ரோம் நகரைப் போன்று பற்றி எறிந்து கொண்டிருப்பது பற்றி இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. பேசப்போவதில்லை. கவலையில்லை. கரிசனமுமில்லை. அவை மக்களைப் பற்றியது. கலை, கலைக்கானது எனும்போது மக்களுக்கு அங்கு இடம் இல்லை. இவர்களது படைப்புக்கள் நீரோ இலக்கியம் என்று சொன்னாலும் தவறில்லை.
இவர்களது இலக்கியம் என்பதும் கலை கலைக்காவே எனும் பெருங்குரலும் நீரோவின் பிடிலும், அதில் எழும் நாரசாரமுமே.
இந்திய ஞானமரபின் ஞானக் கண்கள் வழியே ராமர் கோவிலைப் பார்க்க முடியுமானால் ஜெமோவின் நீதியின் குரலைக் கேட்க முடியும். ராமர் ஞானமரபின் குறியீடு. ராமர் கோயில், பிரதமர் வழிவந்தோரின் 500 ஆண்டுகால கனவாக இருக்கலாம். ஆனால் ராமர் என்பது ஞான மரபின் தொடர்ச்சியென்றால் அது சுமார் கி.மு. பத்தாயிரத்துக்கு மேலாக செல்லும். ராமர் வேதமரபின் தொடர்ச்சி. இந்த கனவு பிரதமரின் 500 ஆண்டுகால கனவை கடந்து செல்லக்கூடியது. இதுதான் ஜெ.மோவின் கனவும் கூட.
பிரதமர் பாவம் ஒரு அரசியல்வாதிதான். அவரது கனவு என்பது கடந்த கால அரசியல் எல்லை வரையில்தான். படைப்பிலக்கிய வாதிகளின் கனவு அப்படியானதாக இருக்க முடியாது. அது எல்லையற்றது. ‘ராமர் கோவில் பற்றி பேசினாலே அவர் வேதகால நீதி உணர்வுக்கு சென்றுவிடுவார்” என்துபோல அவரது முன்னாள் நண்பர், இதழாசிரியர் ஒருவர் பதிவு செய்கிறார்
ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடிலைப்பற்றி எழுதுவதா அதிலிருந்து எழும் நாதவெள்ளம் பற்றி எழுதுவதா அல்லது மக்களின், மக்களின் மரண ஓலம், அவலக் குரல் பற்றி எழுதுவதாக என்பதற்கு தெளிவான கலை இலக்கிய புனித வரையறைகள் ஜெமோவுக்கு உண்டு.
ஏனெனில் பிடிலின் மரபும், இசையும் ரோம்நகரைவிட அதன் மக்களைவிட மிகப் பழமையானதாகும். அவற்றைவிட நீரோ இன்னும் பழமையானவர்.
இலக்கியத்திலும் நீரோக்கள் இருக்கிறார்கள். புனைவிலக்கிய நீரோக்களுக்கு தீ பற்றுவதோ, பெருந்தொற்றுக்கள் மனிதர்களை வீழ்த்துவதோ, விழுங்குவதோ தெரிய வேண்டுமென்பதில்லை. புனைவில் வாழ்தல் அதனை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அல்லது வாழ்தலின் புனைவிற்கு அவை தேவைப்படுவதில்லை.
எனவே புனைவின் ராமனுக்கு கோவில் எழுவதே புனைவின் நீதி. புனைவின் பெயரால் இடித்துத்தள்ளுவதும், படுகொலைபுரிவதும் அப்படியே. புனைவு பவுதீகத்தன்மை பெறுவது என்பதே அடிப்படை நியதி. பவுதிகத்தின் மெய்மையை அகலோகவாதிகளின் ஏற்பு இப்படித்தான் இகலோத்தில் மெய்யுறும்.
புனைவை நிறுவுவதற்கு எல்லா புனைவுகளையும் நீதிபடுத்துவது முக்கியம். ஜெ.மோ. ராமர் கோவிலை நீதிபடுத்துவதன் வழி அவரது புனைவை நீதிபடுத்திக் கொள்வது இப்படித்தான். தன்னை நீதி படுத்திக் கொள்வது இப்படித்தான்.
எம்.ஜி.ஆர்., நக்சல்களை ஒழித்து எப்படி புட்சித்தலைவர் ஆனார். அக்காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தக் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் நடவடிக்கைக்கு என்ன எதிர்வினையாற்றினார் என்றெல்லாம் ஜெ.மோ இன்றைக்கு எடுத்துப்பேசுவதில் வியப்பில்லை. ஏனெனில் கடந்த கால வரலாறுகள் அது ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும் கவலையில்லை புனைவை இலக்கியத்துக்குள்ளும், அரசியலுக்குள்ளும், வரலாற்றுக்குள்ளும் வைத்து பேசுவதற்கு ஆவணங்கள் ஒரு பொருட்டாக இருக்கத் தேவையில்லை. அதைத்தான் அவர் தொடர்ந்து செய்கிறார். அதேசமயம் ஆவணங்கள் ஒரு அறிவு ஏற்பாடாக இருந்த போதிலும் அதை இடம்மாற்றி வைக்கும்போது புனைவைவிட சுவாரசியம் மிக்கதாக, தனியான ஒரு கதை ஒன்றை சொல்வதாக அமைந்துவிடுகிறது. அதைத்தான் அவர் அரசியலிலும், வரலாற்றிலும் செய்கிறார்.
கருணாநிதி அன்றைக்கு நக்சல் ஒழிப்புத் தொடர்பாக என்ன பேசியிருந்தாலும் அது தேவைப்படப் போவதில்லை. இன்றைக்கு அவரது புனைவு திமுகவிற்கும், பொதுவுடைமையாளர்களுக்குமிடையே என்ன செய்கிறது என்பது பற்றியதாகத்தான் இருக்கிறது. விஷ்ணுபுரமும், பின்தொடரும் நிழலின் குரலும் ஒருவகையில் கடந்தகால வரலாற்றை புனைவுபடுத்தி இன்றின் சாதக பாதகங்களை எதிர்பார்க்கும் அரசியல் தன்மை வாய்ந்தவையாகும்.
வரலற்றை, புனைவை ராமர் கோவிலாக மாற்றும் ரசவாத அரசியல்தாம் புனைவிலக்கிய அரசியலில் ஜெ.மோவுடையதாகும்.
இருப்பதை இடம்மாற்றி வைப்பதன் வழி அதை அரசியல் புனைவாக அல்லது புனைவு அரசியலாக மாற்றுகிறார் ஜெ.மோ. அதை அவதூறு என்று சொல்பவர்கள் திகைத்து நிற்பவர்களாகிறார்கள்.
இந்த புனைவைதான் இடம்மாற்றி வைப்பதன் வழி இலக்கியம், அரசியல், சமூகம் என்று எல்லா கதையாடல்களுக்குள்ளும் கொண்டுவருகிறார் அவர்.
அண்மையில் பாசெ விவகாரத்தில், ஜெ.மோ.வை கண்டித்து இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள் என திரண்டு கைச்சாத்திட்டபோது கோவை ஞானிதான் தமது கண்டனத்தை முதல் கைச்சாத்தாகப் பதிவு செய்திருந்தார்.
இக்காலத்தில் ஞானியைத் தனது ஞான குருவாக பாவனை செய்யும் ஜெ.மோ. இறுதியில் தனது ஆசான் தனக்கு எதிராகத் திரும்பிய வரலாறு ஈரம் காயமலிருக்கிற போதும், அதுபற்றி கிஞ்சித்தும் கவலையின்றி தமது புனைவரசியலை ஞானியை நோக்கி இன்றைக்குத் திருப்பிக் கொண்டுள்ளார்.
இப்போது அவருக்கு ஞானி என்ன சொன்னார், என்பதோ, அல்லது ஞானி என்ற அடிப்படை மார்க்சியரோ அவருக்குத் தேவைப்படப் போவதில்லை. அவர் கடவுள் பற்றி வந்தடைந்த இடத்தை, பண்பாட்டு அரசியலில் அவரது ஏற்பை, நிராகரிப்பை ஞானி கண்களற்று தமது அறிவு புலத்தில் தடுமாறிய இடங்களை, அல்லது மவுனித்திருந்த இடங்களை இடம் மாற்றி வைத்துவிட்டால் போதுமானது.
இந்த புனைவின் அவசியம் என்பது வழமைபோல ஞானியை உட்செரித்தலேயாகும். ஞானியை உட்செரித்தல் என்பது அவரது எழுத்துக்களை புனைவுபடுத்திவிடுவது. ஞானியை தமது ஞானமரபின் தொடர்ச்சியாக்கிவிடுவது. அல்லது தமது மரபின் ஆகப்பெரிய அவதாரமாக்கிவிடுவது. புத்தரை உட்செரித்த மரபின் ஞான நீட்சி அது. இது பற்றி தனியே எழுத வேண்டியிருக்கிறது. கேட்பதற்கோ, மறுப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ ஞானி இல்லை என்பது ஜெ.மோவிற்கு ஒரு வசதியாக இருக்கிறது. ஞானி இப்போது ஜெ.மோவின் அறத்தின் படி எதிர்பார்ப்பின் படி, ஒரு புனைவாகிவிட்டார்.
தன்னை மாஸ்ட்டராகப் பாவித்துக் கொள்ளும், பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஜெ.மோ, மாஸ்டர் என்பவருக்குத் தரும் விளக்கத்தையே நாம், பிற இலக்கியவாதிகள் பற்றிய ஜெமோவின் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ள முடியும். “மாஸ்ட்டர் ஒருவர் மட்டும்தான் இருக்க முடியும். ஒரு மாஸ்ட்டருக்கு பிறிதொரு மாஸ்ட்டரை பிடிக்காததற்கு காரணம் அவரை முந்திச் செல்வதுதான்” என்றொரு விளக்கம் அளிக்கிறார். இலக்கிய உலகில் தாம் முந்தி செல்வதால் ஒப்பமிட்ட அத்தனை பேருக்கும் ’மாஸ்ட்டர் ஜெ.மோ’ மீது பதட்டம் ஏற்படுவதாக ஜெ.மோ பார்வையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
ஞானியின் ஒப்பமிடலையும் அவர் அப்படியேதான் எடுத்துக் கொள்கிறார். ஞானியை பிறிதொரு ஞானி கடந்து செல்வதுதான் ஞான மரபின் நீதியாக இருக்க முடியும். அதுவும் ஞானி வாழும் காலத்திலேயே அவரை கடந்து செல்கிறார் ஜெ.மோ. ஞானிக்கு இப்போது துரோணர் கோபம், வரத்தான் செய்யும் அதனால்தான் ஞானியின் கைச்சாத்து முதலாவதாக இருக்கிறது. ஏகலைவனின் கட்டைவிரலை கேட்டு ஞானி கைசத்திட்டுருக்கிறார். ஜெ.மோவின் புனைவு இப்படியெல்லாம் பேசக்கூடியது.
ஜெ.மோவின் எள்ளல் எல்லாவற்றையும் புனைவாகப் பார்க்கும் ஒருவித வினோதமான மனநிலையிலிருந்து கலவையாக எழுகிறது. காலத்தை இடம்மாற்றி வைத்து அவர் விளையாடுகிறார். வினையாற்றுகிறார். கலைத்து இடம்மாற்றி வைத்துவிட்டு ஓடிபோய் ஒளிந்து கொண்டு குழந்தையின் தடுமாற்றத்தை ரசிக்கும் ஒருவித மனநிலை அது.
வலது, இடது எழுத்துக்கள் தெளிவான வகைமைப் பாட்டுடன் கருத்துப் பாட்டுடன் இருக்கின்றன. இதில் ஜெ.மோவை முந்திச் செல்லவோ, பிந்திச் செல்லவோ ஒன்றும் இல்லை. வலதுகளில் அப்படி யாரேனும் மாஸ்ட்டர்கள் இருக்கக்கூடும், வேண்டுமானல் தனது புரிதலுக்காக ஜெ.மோ வலது மாஸ்ட்டர், இடது மாஸ்டர் என்று வகை பிறித்துக்கொள்ளலாம் . விஷ்ணுபுரம் நாவல் குறித்து அவரது முன்னாள் ஆசான் சுந்தரராமசாமி கருத்து தெரிவித்த போது, அவர் வேறொரு உலகிலிருந்து தனது நாவலுக்குள் நுழைய முயல்கிறார் என்று குற்றம் சாட்டினார். இது, வலதிலிருந்து இடதுக்குள் மூக்கை நுழைக்கும் ஜெ.மோ வுக்கும் பொருந்தும். அவரது பார்வை மற்றும் இலக்கியக் கோளாறுகள் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
அதனால்தான் பா.செ – வை அவர் போலி எழுத்தாளர் என்று சொல்ல முடிகிறது. இதற்கு பாசெ அவர்கள் நக்கீரன் வார இதழுக்கு (மின்னிதழ் -ஜுன்-10-12) முற்றிலும் அறிவு நேர்மையுடன் அளித்துள்ள நேர்காணல் பொருத்தமாக இருக்கிறது. மக்களின் வாழ்க்கையை எழுதாமல், போலித்தனமாக கட்டுமானங்களின் அடிப்படையில் உருவான புராணங்கள் சார்ந்த புனைவுகளைச் சித்தரிக்கும் அவர்தான் உண்மையிலேயே அந்த பட்டத்துக்குச் சொந்தக்காரர் என்கிறார் பா.செ. யதார்த்தம் சார்ந்த எழுத்துக்கு, கருத்துக்கு, வாழ்வுக்கு தனது புனைவு சார்ந்த எழுத்தின், வாழ்வின் அளவுகோலை பிடிவாதமாக நீட்டுகிறார் ஜெ.மோ.
இதுதான் புனைவை, புனைவுடன் மட்டுமே எதிர் கொள்ளும் நீதி, அறம் ஜெயமோகனுடையது. அதாவது மெய் நிகர் மெய்மட்டுமே போதுமானது. மெய் என்பது ஒரு புனைவே அவரைப் பொறுத்தவரை. எனவே புனையப்பட்ட மெய்யுடனான சொற்களுடன் பேசுவதே அவரைப் பொறுத்த அறம்.
தமது நூல்கள் குறித்துப் பேசும் இலக்கிய விமர்சகளை ’இரும்பு மூளைக்காரர்கள்’ என்பார். இவர்களிடம் எதையும் விவாதிக்க முடியாது என்பார். அதே சமயம் இன்குலாப் போன்றவர்களின் கவிதைகளை, கவிதைகளே அல்ல என்பார். ஓவ்வொருவரும் ஜெ.மோவின் ஞானக் கண்கள் வழியே, பூனைக் கண்கள் வழியே மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற வேட்கையுடைய ஜெ.மோ. ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு கருத்து அவர்களது பார்வை சார்ந்து இருக்கும், கொள்கை சார்ந்து இருக்கக்கூடும் என்பதைப் புறந்தள்ளக்கூடியவர்.
புனைவை வாழ்வாகவும், வாழ்வை புனைவாகவும் மாற்றும் ஜெ.மோவின் ஞானமரபிற்கு, மரபு ஞானத்திற்கு, ஞான அரசியல் மரபிற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அதுதான் இன்று ஜெ.மோவின் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது. இருக்கும். புனைவிற்கு உள்ளேயும், வெளியேயும் அதுதான் தொடர்ந்து அவரை இயக்கிக் கொண்டுள்ளது. உள்ளே வெண்முரசாக ஒலிக்கும் அது வெளியே ராமஜெமன்ம பூமியாக மலர்கிறது.
“நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும் படைப்பாளி.-மாஸ்ட்டர். அதை நீங்கள் உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத் தொடங்கவில்லை. நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள!”; என்று தன்னை வசைபாடும் இளைஞர்களை நோக்கி இப்படித் தொடங்கும் ஜெ.மோவின் பிரகடனம், வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்குமாக ஒருசேர எச்சரிக்கை விடுகிறது. தடுமாறச் செய்கிறது.
“மாஸ்டர்களுடன் இணைந்து கொண்டால் நீங்கள் ஒரு காலக்கட்டத்தின் படைப்புச் செயல்பாட்டுடன், அறிவார்த்தத்துடன் இணைந்து கொள்கிறீர்கள்”.
“அவர்களுக்கு எதிரான ஒவ்வாமைகளுடன் இணைந்து கொண்டால் அக்காலக் கட்டத்தின் சிறுமைகளுடன் இணைந்து கொள்கிறீர்கள்!”.
ஆம், இந்த குரல் எங்கோ கேட்டது போல இருக்கிறதா. அது அரசியல் உலகில் அமெரிக்க மேனாள் அதிபர் ஜார்ஜ் ஜுனியர் புஷ்ஷினுடைய குரல். இலக்கிய உலகில் இங்கு ஜெ.மோவுடைய குரல். “நீங்கள் எங்கள் எங்களுடன் இல்iயென்றால், பயங்கரவாதிகளுடன் இருக்கிறீர்கள!”. “நீங்கள் ஜெயமோகனுடன் இல்லையென்றால் இலக்கியவாதியுடன் இருக்கவில்லை. அதற்கு எதிரானவர்களுடன், இலக்கியச் செயல்பாட்டுக்கு எதிரானவர்களுடன் இருக்கிறீர்கள!” கலை கலைக்காவே என்பவர்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். சொற்கள் வெவ்வேறானவையாக இருக்கலாம். பாசிசம் ஒன்றுதான்.