தப்பிப் பிழைக்குமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
சுவிசிலிருந்து சண் தவராஜா
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் முடிவுகள் எழுப்பியுள்ள கேள்விகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் எவ்வாறு அமையக் கூடும் என்பதுவும் ஒன்று. கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ் மக்களின் விருப்புக்குரிய ஒரு கட்சியாகவும், தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற ஒரேயோரு கட்சியாகவும் இருந்துவந்த கூட்டமைப்பு இன்று மிகப் பாரிய வாக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற பேச்சுக்கள் ஒருபுறமும், தமிழ் மக்களின் ஏகோபித்த குரல் கூட்டமைப்பு அல்ல என்னும் பேச்சுக்கள் மறுபுறமும் எழுந்துள்ளன. உள்ளும் புறமும் சிக்கல்களைச் சிந்தித்து நிற்கும் கூட்டமைப்பு மீண்டு எழுமா? பழைய வல்லமையைப் பெறுமா?
பழையன கழிவது அவசியமா?
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில, கால வகையினானே” என்கிறது தமிழர்களின் பண்டைய இலக்கியமான புறநானூறு. இயற்கையின் இயங்கியல் நியதிகளுள் அதுவும் ஒன்று என்கிறது அறிவியல். ஈழத் தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியத்தின் தோற்றம் எவ்வாறு ஒரு வரலாற்றுத் தேவையோ, அது போன்று கூட்டமைப்பின் மறைவிற்கும் ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருக்கின்றதா எனப் பார்ப்பது அவசியம்.
ஆயிரம் வேலைகள் இருக்கையில் – செத்துப் போன அல்லது சேடமிழுக்கும் -கூட்டமைப்பு தொடர்பில் கதைத்து நேரத்தை வீணாக்க வேண்டுமா என ஒரு சாரார் யோசிக்கலாம். தமிழ்க் கட்சிகள் கூட்டாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, அத்தகைய ஒரு கூட்டை உருவாக்கப் பாடுபட்ட கிழக்கிலங்கைச் செய்தியாளர்களுள் ஒருவனாக அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமும் அவசரமும் இருப்பதானாலேயே இந்தப் பத்தியை எழுதுவதற்கு நான் முனைகிறேன்.
தமிழர் அரசியலில் கூட்டமைப்பின் வகிபாகம்
தமிழ் மக்களின் இருப்பு ஈழ மண்ணில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிய காலகட்டத்தில் பல்வேறு ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாகி, சகோதர யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலிகள் மாத்திரமே நிலைத்து, சுமார் 3 தசாப்த காலமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்தினார்கள் என்பதையும், தமிழ் மக்களின் துயரங்கள் துன்பங்களை உலகறியச் செய்து, தமிழீழ மண்ணில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை உலக மன்றங்களில் ஓங்கி ஒலித்தார்கள் என்பதுவும் வரலாறு. இந்த வரலாற்றில் குறுகிய காலமேனும் பங்கு கொண்டிருந்த ஒரேயொரு அரசியற் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. களத்திலே போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அங்கீகரித்த ஜனநாயகக் குரல் அவர்களுடையது.
அது மாத்திரமன்றி, 2004 ஆம் ஆண்டுத் தேர்தல் வெற்றியின் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு இணையாக மக்கள் மன்றங்களிலும் உலக மன்றங்களிலும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளைத் தீவிரவாதம் எனக் கூறித் தட்டிக் கழித்தோரால் கூட, கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைகளை செவிமடுத்தே ஆகவேண்டி ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பயங்கரவாதம் என வரையறுத்துப் புறமொதுக்க முனைந்த சிறி லங்கா அரசாங்கம், நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டிய தேவை இருந்தது. மக்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், கைதுகள் என அரசாங்கத்தை நோக்கிப் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கினார்கள்.
கூட்டமைப்பு தந்த விலை
இத்தகைய போக்கைச் சகிக்க முடியாத அரசாங்கம் யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், க.சிவநேசன் என 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அ. சந்திரநேரு, க. சிவமகாராஜா என இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காவுவாங்க வேண்டிய நிலை உருவானது. இது தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிதான தாக்குதல்கள், கொலை முயற்சிகள், கைதுகள், உறவினர்களைக் கடத்துதல் என அச்சுறுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
அரசாங்கமே குற்றம் சுமத்தும் அளவிற்கு ~விடுதலைப் புலிகளின் கையாட்கள்| போன்றே செயற்பட்டுவந்த கூட்டமைப்பு தமிழ் மக்களின் மிகுந்த அபிமானத்தைப் பெற்ற கட்சியாகவே 2009 வரை விளங்கியது. அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கொண்டாடப் பட்டார்கள். அவர்கள் பணி மாத்திரமன்றி, விடுதலைப் புலிகளை அவர்கள் உயர்த்திப் பிடித்ததும் இதற்குக் காரணமானது. ஒருபுறம் அவர்களது நிலைப்பாடு கடுமையான விமர்சனங்களுக்கு இலக்கான போதிலும் மக்கள் மனதில் அவர்கள் கதாநாயகர்களாகவே இருந்தார்கள்.
கூட்டமைப்பின் தடுமாற்றம்
ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் துயர முடிவைச் சந்தித்ததன் பின்னான காலகட்டத்தில் கூட்டமைப்பு திசைதெரியாத கப்பலானது. விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் உட்பட்டிருந்த கூட்டமைப்பை வழிநடத்த யாருமற்ற நிலை உருவானது. எதிர்பாராமல் உருவான இந்த நிலைமையால் ஏற்பட்ட தடுமாற்றம், கடந்தகாலத்தில் தாம் கையாளப்பட்ட முறைமை தொடர்பாகத் தலைவர்கள் மனதில் இருந்த அதிருப்தி, ஆயுத பலமற்ற நிலையில் சிங்களப் பேரினவாதத்தை முன்னரைப் போன்று எதிர்ப்பதில் உருவான அச்சம், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து அரசியல் செய்ய முனைந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் தோன்றிய இடைவெளி எனப் பல காரணங்கள் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு வழி சமைத்தன.
பின்னடைவுக்கான காரணங்கள்
மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியைத் தகவமைத்துக் கொள்ளாமை, உள்ளிருந்தும், வெளியே இருந்தும் கட்சியைப் பிளவுபடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறையாகக் கையாளாமை, அரசியல் அபிலாசைகளோடு கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற முன்வந்த இளையோரை அரவணைத்துச் செல்லத் தவறியமை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை உரிய மரியாதை தந்து அரவணைத்துச் செல்ல முன்வராத தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கப் போக்கு, அனைத்துக்கும் மேலாக நீண்டநாள் கோரிக்கையான கூட்டமைப்பை ஒரு கட்சியாக வடிவம் கொடுக்க முன்வராமை என உள்நாட்டைப் பொறுத்தவரை பல காரணங்களைக் கூற முடியும்.
20 வருடங்களாக உயிர்ப்போடு இருந்துவரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை வழிகாட்டல் குழு என அறிஞர் பெருமக்கள் நிறைந்த ஒரு குழு இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர இடைநிலைத் தலைவர்கள் என யாரும் இல்லை. ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட கட்சியின் நெருக்கத்தில் இருந்து படிப்படியாக ஊடகர்களும், ஊடகங்களும் விலகிச் சென்ற போதிலும், அதனைச் சீராய்வு செய்து, அவர்களின் அணுக்கத்தைத் தக்கவைக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு கட்சி மக்கள் அபிமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஊடகங்களின் அணுக்கம் மிக முக்கியம். அது மாத்திரமன்றி அன்றாட விவகாரங்கள் தொடர்பில் மக்களுக்குப் புரியக் கூடிய வகையில் விளக்கங்கள் தரப்படவும் வேண்டும். விவகாரங்களைச் சிக்கலாக்கும் நோக்கத்துடன் ஊடகங்கள் கேள்விகளை முன்வைக்கும் போது ஊடகங்களின் கண்ணியில் சிக்காமல் பதிலளிக்கக் கூடிய சாதுரியம் இருக்கவும் வேண்டும். கூட்டமைப்பைப் பொறுத்தவரை கடந்தகாலங்களில் இவை பெரிதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் வகிபாகமும், அவர்களின் தியாகமும் சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்கின்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளல் அவசியம்.
மக்களின் வெறுப்புக்கான ஆளான விடயங்கள்
2009 இன் பின்னான காலகட்டத்தில் கூட்டமைப்பு மேற்கொண்ட ஒருசில நடவடிக்கைகள் மக்களின் வெறுப்பிற்கு பெரிதும் ஆளாகின. குறிப்பாக கிழக்கு மாகாணசபையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து – நிபந்தனைகள் எதுவும் இன்றி – ஆட்சியமைத்தமை. தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாடு வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு இன்றியமையாதது. மிகவும் முற்போக்கான இந்த விடயம் தொடர்பில் முடிவை எட்டுவதற்கு முன்னர் மக்களுடனோ, கட்சி நிர்வாகிகளுடனோ எந்தவொரு கருத்துக் கேட்பும் நடைபெற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் இது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு முறையான பதிலோ, விளக்கங்களோ கூடத் தரப் பட்டிருக்கவில்லை. ~முஸ்லிம் விஸ்தரிப்பு வாதம்| என்கின்ற பேச்சாடல் இடம்பெறும் கிழக்கில், கூட்டமைப்பின் முடிவு தொடர்பான விளக்கங்கள் கண்டிப்பாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்த விடயம் ஜெனீவா மனித உரிமைச் சபை சம்பந்தப்பட்டது. ஐ.நா. மனித உரிமைச் சபை ஒரு பலமான பன்னாட்டு அமைப்பு போலவும், அது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்பது போலவும் ஒரு மாயத் தோற்றம் தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய ஒரு மாயநிலை உருவாக கூட்டமைப்பும் ஒருவகையில் காரணம் எனலாம். ஜெனீவாவில் நீதி நிலைநாட்டப்படாது என்பது தெரிந்தும், வருடாவருடம் அங்கே படையெடுப்பவர்களுள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். மனித உரிமைச்சபையின் செயற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும், சபையிலே சிறி லங்கா அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டதில் கூட்டமைப்புக்கும் பங்கு இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் நம்பும்படியாக ஒரு சாரார் பிரசாரம் செய்து விட்டார்கள். மனித உரிமைச் சபையின் விடயங்களில் பங்கெடுத்துக் கொண்டு, அது ஒரு பிரயோசனமற்ற சபை என்று கூற முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்ட கூட்டமைப்பு, மக்களுக்குப் புரியாத வசனங்களில் கொடுத்த விளக்கங்கள் யாவும் புறக்குடத்தில் ஊற்றிய நீராகின.
கூட்டைமைப்பில் இருந்து மக்கள் விலகிச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றியது நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவே. எதற்காக இந்த ஆதரவை நல்குகிறோம் என்பது கூட்டமைப்பில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலருக்கே புரிந்திராத நிலையில் வெகுமக்களுக்குப் புரிவது எங்கனம்? அதிலும், தமிழ் மக்கள் தமது உரிமைக்காக ஏங்கி நிற்கும் வேளையில் நிபந்தனையற்ற ஆதரவு என்பது கூட்டமைப்பின் பெயரைப் பழுதாக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்தது.
சர்ச்சைக்குரிய பேச்சாளர்
கூட்டமைப்பில் சர்ச்சையின் நாயகன் என்றால் அது கட்சியின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் சுமந்திரனே. இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையான நானே பெரியவன் என்ற அகங்காரத்தின் விளைவைத் தமிழினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சுமந்திரன் எது சொன்னாலும் அது சர்ச்சையாகின்றது அல்லது சர்ச்சையாக்கப் படுகின்றது. கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துக்களுக்கு விளக்கம் அளிப்பதிலேயே சோர்ந்து போய் விடுகின்றார்கள். இந்த நிலை தொடர்ச்சியாக நீடிக்கின்ற போதிலும் அதனைத் திருத்திக் கொள்வதற்கு கட்சித் தலைமை முன்வரவில்லை. கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய நிலையிலாவது கட்சிப் பேச்சாளர் தொடர்பில் ஒரு முடிவிற்கு வந்தேயாக வேண்டிய நிலை உள்ளது. புதியவர் ஒருவர் அந்த இடத்தைப் பிரதியீடு செய்ய வேண்டும். அது சாத்தியமல்லாதவிடத்து கூடுதலாக ஒருவரையாவது நியமிப்பதே சிறந்தது.
உரிமை அரசியல் பயன்தரக் காலம் எடுக்கும் என்பதே யதார்த்தம். அதற்கான புறச்சூழல் சாதகமாக அமைய வேண்டிய தேவை உள்ளது. அதேவேளை, உரிமை அரசியல் என்பது பொருண்மிய அரசியலைப் புறந்தள்ளியதாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே நாடாளுமன்றம் செல்கிறோம் எனக் கூறிக் கொண்டாலும், அன்றாடப் பிரச்சனைகள் தொடர்பிலும், அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தக் கூடாது எனப் பொருள்கொள்ளல் தவறானது. அடிப்படை விடயங்களைக் கோருதல் எவ்வாறு உரிமை சார்ந்த விடயமோ அதைப் போன்றே அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவையும் உரிமை சார்ந்த விடயங்களே. இது தொடர்பில் கூட்டமைப்பு தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பின் பின்டைவுக்கு இன்னும் எத்தனையோ காரணங்களை எடுத்துக்காட்ட முடியும். எங்களைப் போன்றவர்களை விடவும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கே காரணங்கள் புரியும். ஆனால், காரணங்களை அலசி ஆராய்ந்து, அவற்றைத் திருத்திக் கொண்டு முன்னோக்கி நடைபோடுவதற்கான விருப்பும், மனவுறுதியுமே அவர்களிடம் குறைவாக உள்ளது. நல்ல கருத்துக்களை, ஆலோசனைகளை யார் சொன்னாலும் கேட்கின்ற மனப்பக்குவம் தேவை.
அது மாத்திரமன்றி கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் அவசியம். பங்காளிக் கட்சிகளின் உள்ளேயும், கூட்டமைப்புக்கு உள்ளேயும் உட்கட்சி ஜனநாயகம் அறவே இல்லை என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.
மெத்தத்தில் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்துவரும் பீனிக்ஸ் பறவை போன்று கூட்டமைப்பு பழைய மிடுக்கோடும், கம்பீரத்தோடும் வீறுநடை போடவேண்டும் என்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் தமிழ் மக்களின் விருப்பு. அந்த விருப்பை கூட்டமைப்பு நிறைவேற்றுமா அல்லது பழைய பாதையிலேயே பயணித்து மேலும் அழிவைத் தேடிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
(இக்கட்டுரை 16.08.2020 அன்று வீரகேசரியில் முதலில் வெளிவந்தது)