தமிழகத்தில் விநாயகர் வழிபாடு
ஒரு நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், அகழாய்வுகள்,
இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் நமக்குக் கிடைத்திருக்கும்
சங்க இலக்கியங்கள், பழந்தமிழர் வரலாற்றை , அவர்தம் வாழ்வியலை அறிய துணை நிற்கும்
பெருங்கொடையாகும்.
சங்க இலக்கியப்பாடல்களில் நீத்தார் நினைவான நடுகல் வழிபாடு, முருகு, அணங்கு, பேய்
மீதான நம்பிக்கை, வேலன் வெறியாட்டு இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. என்றாலும்,
சங்க காலத்திலும், சங்கம் மருவியக் காலத்திலும் கடவுளருக்காகக் கோயில்கள்
எழுப்பப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை என்றே சொல்லலாம். எனில், இன்று தமிழ்
நிலப்பரப்பெங்கும் நிமிர்ந்து நிற்கும் கோபுரங்களோடுகூடிய கோயில்கள் சங்க காலத்திற்குச்
சில நூற்றாண்டுகளுக்குப் பின்பே எழுப்பப்பட்டிருக்கவேண்டும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த கோயில்களும், அவற்றில் உறைந்திருந்த கடவுளரும்,
சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூரெடுத்த காதைப்பகுதியிலிருந்து தெரியவருகின்றது..
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
மறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வலளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபிற் றிமுறை யொருபால்
நால்வகைத் தேவரு மூவாறு கணங்களும்
பால்வகைத் தெரிந்தபகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
அறவோர் பள்ளியு மறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
துறவோ ருறைக்குஞ் செயல்திறந் தொருபால்”
அதே காலகட்டத்தில், பாண்டியரது தலைநகராகிய மதுரையில் இருந்த கோயில்கள்,
“நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயிர்த்தோன் நியமும்
மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும்
கோழிச்சேவல் கொடியோன் கோட்டமும்”
என்னும் வரிகளிலிருந்துத் தெரியவருகின்றது. இப்பாடல் வரிகளிலிருந்து, கடைச்சங்க
காலத்தில் காவிரிப்பூம்பட்டினம், மதுரை ஆகிய இருபெரும் நகரங்களிலும் சிவன், முருகவேள்,
திருமால், பலதேவர் என்னும் நாற்பெரும் கடவுளர்க்கும் கோயில்கள் இருந்தன என்பதை
அறியமுடிகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரன் கோயிலும், அருகர் பள்ளியும், புத்தர் பள்ளியும்
இருந்ததையும் அறியமுடிகிறது. ஆனாலும், விநாயகர், பிள்ளையார், கணபதி என்றெல்லாம்
அழைக்கப்படும் யானைமுகக்கடவுள் பற்றிய குறிப்பு இல்லை என்பது கூர்ந்து
கவனிக்கத்தக்கது. மாத்திரமல்ல, ஆயுவுக்கும் உரியது..
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பார்ப்பனப்பெண் மாலதி, தன் மாற்றாள் குழந்தைக்குப் பால்
புகட்டும்போது விக்கல் வந்து குழந்தை இறந்துவிடுகிறது. தன்மீது பழிவந்து சேரும் என்று
அஞ்சிய மாலதி, அக்குழந்தையை உயிர்ப்பிக்கவேண்டி, அமரர்
தருக்கோட்டம்,வெள்யானைக்கோட்டம்,ஊர்க்கோட்டம்,வேற்கோட்டம்,வச்சிரக்கோட்டம்,புறம்ப
ணையான்வாழ்க்கோட்டம், நிக்கந்தக்கோட்டம், நிலாக்கோட்டம், உள்ளிட்ட கோயில்களுக்கு
எடுத்துச்சென்றதாக சிலப்பதிகாரம் கனாத்திறமுறைத்த காதையில் குறிப்பிடப்படுகிறது.
இந்திரனது கற்பகத்தருவிற்கு ஒரு கோயிலும், ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு ஒரு
கோயிலும் குறிப்பிடும் இளங்கோவடிகள், யானைமுகக்கடவுளுக்குக் கோயில் இருந்ததாகக்
குறிப்பிடவில்லை என்பதையும் பார்க்கவேண்டும். இந்நாளில் இருப்பதுபோல அந்நாளில்
விநாயகர் வழிபாடு இருந்திருந்தால், இளங்கோவடிகள் அதனையும் குறிப்பிட்டிருப்பார்
என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. எனவே, சிலம்பு காலகட்டம் வரையிலும்கூட
தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லை என்னும் முடிவுக்கு வரலாம்.
நக்கீரனார் பாடிய 56-வது புறப்பாட்டில்,
“கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
பகழொத் தீயே, இகழுநனர் அடுநனை
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின் “
என்னும் வரிகளிலிருந்து, சிவன், பலதேவன், திருமால், முருகவேள் என்னும்
நாற்பெருந்தெய்வங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அறியலாம். .
எட்டுத்தொகையில் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றின்
கடவுள் வாழ்த்துப் பாடல்கள், சிவனைப் பற்றியன ஆகும். நற்றிணை கடவுள் வாழ்த்துத்
திருமாலுக்கும், குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து முருகவேளுக்கும் உரியனவாக உள்ளன. சங்க இலக்கியங்களை இயற்றிய சான்றோர் எங்குமே விநாயகர்பற்றி குறிப்பிடவில்லை என்பதால்
அக்காலத்தில் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லாதிருந்தது என்று உறுதியாகக் கூறலாம்.
சோழமண்டலத்தில், நன்னிலம் வட்டத்தில் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஒரு கோயிலின்
பெயர் ‘கணபதீச்சுரம்’. இது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
“ பொன்னம்பூங் களிக்கானற்
புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள்
அகன்றும் போய் வருவீர்கா|ள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன்
கணபதீச்சுரம் மேய
இன்னமுதன் இணையடிக்கீழ்
எனதல்லல் உரையீரே”
என்னும் திருஞானசம்பந்தரின் பாட்டிலிருந்து முதல் கனபதி வழிபாடு நடந்த இடம்
தெரியவருகிறது. தமிழ் நிலப்பரப்பில் கணபதிக்கு முதன்முதல் எழுப்பப்பட்டக்கோயில்
என்பதால் ‘கணபதீச்சுரம்’ எனப்பட்டது. இக்கணபதிப் படிமமே மிகவும் தொன்மை வாய்ந்தது.
மற்றெல்லா இடங்களிலும் காணப்படும் பிள்ளையார் படிமங்கள் அனைத்தும், இக்கணபதியின்
நகல்களே.
இந்த விநாயகர் படிமம் எங்கிருந்து, எப்படி, யாரால் கொண்டுவரப்பட்டது என்னும்
கேள்விகளுக்கு விடைகாண முற்பட்டால், அது, ஒரு போர் வரலாறாக அமைகிறது. மராட்டிய
மானிலத்தில், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபியைத் தலைநகராககொண்டு, மேலை
சளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி ஆட்சிசெய்துவந்தான். அந்த இரண்டாம்
புலிகேசிக்கும், பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனுக்கும் கி.பி.642-இல் ஒரு போர் நிகழ்ந்தது.
அப்போரில் பல்லவப் படைகளுக்குத் தலைமைதாங்கிச் சென்றவன் பரஞ்சோதி. இந்தப்
பரஞ்சோதிதான் பின்னர் ‘திருத்தொண்ட நாயனார்’ ஆனது.
புலிகேசியைப் போரில் வென்ற பரஞ்சோதி, வாதாபியை அழித்து, அங்கிருந்த விநாயகர்
படிமங்களில் சிலவற்றைப் போர் வெற்றிச் சின்னமாகத் தன்னுடன் கொண்டுவந்தான்.
வாதாபியில் ஒரு வெற்றித்தூண் நிறுவி, தனது பெருமையை அதில் பொறித்துவைத்தான்.
அக்கல்வெட்டின் ஒரு பகுதி இன்றும் காணக்கிடைக்கிறது. இதே செய்திகள்
பெரியபுராணத்திலும் உள்ளன.
பரஞ்சோதி, திருச்செங்காட்டாங்குடியைச் சேர்ந்தவன் என்பதால், தான் கொண்டுவந்த
விநாயகர் படிமங்களில் ஒன்றைத் தனது சொந்த ஊரில் எழுந்தருளச்செய்தான். அதன்பிறகு
மற்ற படிமங்களை அருகில் உள்ள ஊர்களுக்குக் கொடுத்தான். அப்படி பரஞ்சோதி விநாயகர் படிமங்களை வழங்கிய அருகாமை ஊர்களில் முதன்மையானவை திருப்புகழூரும், திருவாரூம்
ஆகும்.
தமிழ் மன்னர்கள் , தமிழ்நாட்டிற்கு வெளியே பிறநாடுகளின்மீது போர்தொடுத்து, வென்று
திரும்பும்போது, அங்கிருந்த கடவுளர் சிலைகளைக் கொண்டுவந்து, கோயில்களை எழுப்பி,
வழிபாடுசெய்திருக்கின்றனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
1 கம்பன்மணியனாகிய விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்னும்
சோழநாட்டுப்ப்டைத்தலைவன், சேர நாடுமீது படையெடுத்துச்சென்று, வென்று திரும்பும்போது
மரகதத்தேவர் படிமத்தை எடுத்துவந்து, அதனை முதல் ராஜராஜ சோழனிடம் பெற்று,
திருப்பழனத்தில் உள்ள ஆலயத்தில் கி.பி. 999-இல் எழுந்தருளச் செய்ததாக அவ்வூர் கல்வெட்டு
கூறுகிறது.
2 கங்கைகொண்ட சொழன் மகனாகிய விஜயராஜேந்திர சோழன், மேலைச்சளுக்கியரது
நகரமாகிய கல்யாணபுரத்தை வென்று அங்கிருந்து துவாரபாலகர் படிமத்தைக்
கொண்டுவந்ததாகக் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் கல்வெட்டு ஒன்று
கூறுகிறது.
பேரழகு வாய்ந்த அத்துவாரபாலகர் படிமம், தாராசுரம் கோயிலிலிருந்து தஞ்சை அரண்மனை
ஆலயக் கண்காணிப்பாளரும், கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சருமான J.M. சோமசுந்தரம்
பிள்ளையால் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டு, பெரியகோயிலில் உள்ள சோழர் பொருட்காட்சி
நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
3 மூன்றாம் குலோத்துங்க சோழனது ஒரு படைத்தலைவனான அரையன் தேவுந்திருவும்
உடையார் பொத்தப்பிச் சோழன் , வீரபாண்டியனுக்கு உதவும் பொருட்டு பாண்டி நாட்டுமீது
படையெடுத்துத் திரும்புங்கால், தன் வெற்றிச்சின்னமாக கூத்தாடுந்தேவரையும் ( நடராசர்),
நாச்சியாரையும் கொண்டுவந்து சீர்காழியில் அமைந்திருக்கும் திருத்தோணியப்பர் கோயிலில்
நிறுவியதாக அக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து புலப்படுகிறது.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கல்வெட்டு சான்றுகளிலிருந்தும், தமிழ் மன்னர்கள்,
தமிழகத்திற்கு வெளியே படைசெலுத்தி, போர்செய்து, வென்று திரும்புங்கால், அங்குள்ள
கடவுளர் படிமங்களைத் தங்களது வெற்றிச்சின்னமாகக் கொண்டுவந்து, கோயில்களில்
எழுந்தருளச் செய்திருக்கின்றனர் என்பது புரிகிறது. எனவே, திருத்தொண்ட நாயனார்
எனப்படும் பரஞ்சோதி வாதாபியிலிருந்து கணபதி படிமத்தைத் தமிழகத்திற்கு முதன்முதலாகக்
கொண்டுவந்தார் என்று நம்பலாம். அப்படிக்கொண்டுவந்த கணபதி படிமங்களை இங்குள்ள
சிவாலயங்களில் எழுந்தருளச் செய்ததோடு, வழிபாட்டிற்கு நிபந்தங்களும் விட்டிருக்கிறார்
என்னும் முடிவுக்கும் வரலாம்..
மாத்திரமல்ல, ஒவ்வொரு ஊரிலும், அனைத்துத் தெருக்களிலும், ஆற்றங்கரைகளிலும்,
குளத்தங்கரைகளிலும் , பெருவழிகளிலும் விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது அப்புதிய
கடவுள்வழிபாட்டை எங்கும் பரவச்செய்ததற்குக் கையாண்ட முறைகளாகும்.
ஆக, இலக்கியச்சான்றுகளிலிருந்தும், கல்வெட்டுச் சான்றுகளிலிருந்தும், கி.பி. 642-இல்
பரஞ்சோதி வாதாபியிலிருந்து கணபதி படிமத்தைக்கொண்டுவந்த பிறகே தமிழ்நாட்டில் எங்கும்
பரவி விநாயகர் வழிபாடாக நிலைத்துவிட்டது என்றும் கூறலாம்.
நம் சமகாலத்தில், கோயில்களில் ஆன்மிகம் என்னும் பெயரில் அறிமுகமாகி விரைந்து
பரவியிருக்கும் விளக்கு பூசை, பிரதோஷம், விநாயகர் விசர்ஜனம் என்னும் பெயரில்
பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்தல்
ஆகியவற்றைப் பார்க்கும்போது, வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர்
படிமங்களை, அவற்றின் வழிபாட்டை தமிழ்மக்கள் பக்தி என்னும் அடித்தளத்தில்
ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகப் புரியும்.
இந்தியத்துணைக்கண்டத்தில், விநாயகர் வழிபாடு, மராட்டிய மாநிலத்தில் மிகவும்
சிறப்புடையது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அங்கிருந்து போர்
வெற்றிச்சின்னமாகக் கொண்டுவரப்பட்ட விநாயகர் படிமங்கள் இன்று இந்துமத அடையாளம்
ஆகி, இந்துமத அடிப்படைவாதமாக உருமாறி, பிறமத வெறுப்புக்குக் காரணமாகி
நிற்கின்றன. வாதாபியை அழித்துத்தானே, பரஞ்சோதி விநாயகர் படிமங்களைத் தமிழகம்
கொண்டுவந்தார். வாதாபியின் அழிவுக்குக் கணபதியின் பழிவாங்கும் நடவடிக்கையோ
என்னும் சந்தேகமும் வரத்தான் செய்கிறது !
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், தமிழ் நிலப்பரப்பில், குறிப்பாகத் தென்தமிழகத்தில்
எங்கும் பரவியிருந்தது, குறிஞ்சிநிலத் தமிழ்க்கடவுளான முருகு வழிபாடே. ஆனால் இந்துமத
அடிப்படைவாத அமைப்புகள், தமிழகத்தில் காலூன்றி வேர்பிடிப்பதற்கு விநாயகரைக் கையில்
எடுத்தபிறகு, முருகு வழிபாடு அருகிவிட்டது. அப்பாவி மக்கள் சூழ்ச்சிக்குப் பலியானதே
அதற்குக் காரணம்.
கோயில்களில் ஆரம்பித்து, வீதிக்கு வந்த விநாயகர் படிமங்கள் வீடுகளிலும்
இடம்பிடித்துவிட்டதை இன்று நாம் பார்க்கிறோம். குறிஞ்சி நிலக்கடவுளான முருகனை,
விநாயகருக்கு தம்பி என்று ‘ திருதராட்டின ஆலிங்கனம் ‘ செய்து, முருகு வழிபாட்டைப்
பின்னுக்குத்தள்ளி, விநாயகர் வழிபாடு முன்னுக்கு வந்ததும்கூட, உண்மைத் தமிழர்களுக்குக்
கவலையளிக்கும் ஒரு கூறாகும். புத்தர் படிமங்கள் எல்லாம் அரசமரத்தடியிலேயே
அமைந்திருந்தன. விநாயகர் படிமங்கள் அனைத்துமே அரசமரத்தடியில் அமைந்திருப்பது
தற்செயல்தானா என்னும் சந்தேகமும் வரத்தான் செய்கிறது.
( சான்று :
இலக்கியமும், கல்வெட்டுகளும் – வை. சதாசிவப்பண்டாரத்தார்)