கறுப்பு ஜுலையும், எழுச்சி ஜுலையும்..!
இலங்கையில் கடந்த 104 நாட்களாக நடைபெற்று வந்த மக்கள் எழுச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 14 ஆம் திகதி கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதையடுததுப் பாரளுமன்ற வாக்கெடுப்பின் வழி பிரதமராக இருந்த ரணில்விக்கரமசிங்க அதிபராகியிருக்கிறார். பிரதமர் ரணிலையும் விலக்கக்கோரி நடந்தப் போராட்டத்தின் நடுவில் தற்போது ரணில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். இம்முறை அதிபராக.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தற்போது நிராகரிக்கப்பட்டு, அதிபர்மாளிகையைக் கைப்பற்றிவைத்திருந்த போராட்டக்காரர்கள் தற்போது படையணிக் கொமோண்டோக்களின் உட்புகுதலை அடுத்துஅங்கிருந்து விலகிச் செல்ல வேண்டி வந்திருக்கிறது. அப்படி வெளியேறாதவர்களை படையணிகள் அடித்துத் துரத்துகின்றன.
சிலர் ரணிலுக்கு ஓர் வாய்ப்புக் கொடுத்துப் பார்க்களாமே என்கின்றனர். ஒரு வழியாகப் போரட்குழு பிளவுப்பட்டுவிட்டது. 22 ஆம் திகதி அதிகாலைப் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையைப் படைத் தரப்பு இரக்கமின்றி செயற்படுத்தத் தொடங்கியுள்ளது.
மக்களுக்காகப் பாராளுமன்றமா, பாராளுமன்றத்திற்காக மக்களா என்றால் ரணிலின் தெரிவு பாராளுமன்றத்திற்காகதான் மக்கள் என்றாகிறது. நாங்கள் கொடுப்பதே சனநாயகம் என்றே ரணிலின் தெரிவு சொல்கிறது.
ரணில் பிரதமராக அறிவிக்கப்பட்டதிலிருந்து நிலைமையில் எதுவித மாற்றமுமில்லை. பொருளாதரம் அந்தரத்தில்தாம் நிற்கிறது. ஒரே மாற்றம் ரணில் அதிபராகியிருப்பது மட்டுமே.
எல்லாம் இனி சரியாகிவிடும் நம்புங்கள், இடத்தைக் காலி செய்யுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதே அரசின் பதில். இதற்கும்மேல் அதிபர் மாளிகையிலோ, காலிமுகத்திடலிலோ தங்கியிருந்தால் என்ன ஆகும் என்பதை ஓர் குடிமகனாக மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர். அவ்வளவுதான் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதரச் சுதந்திரத்திற்கான வெளி.
தமிழர்களைக் கொன்று குவித்த, புலிகளை அடக்கி ஒடுக்கிய, ஜேவிபியின் ஆயுதங்களை இரு தடவைகள் மூர்க்கமாகப் பறித்தெடுத்தச் சிங்கள படையின், சிங்கள அரசின் அடக்குமுறைபற்றி எளிய இலங்கை வாழ் மக்கள் வரலாற்றிலிருந்து தெரிந்திருக்கக்கூடும். வேண்டும்.
தமிழரின் கடந்தகால நீதியானப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே சனநயாகத்தின் வெளி இன்று காலிமுகத் திடலைப் போன்று சிங்களருக்கும் வெறிச்சோடிக் கொண்டுள்ளது. சனநாயகத்தின் பெயரிலான நவதாரளத்தின் தரகர்களான பாராளுமன்ற அரசியல் தலைமைகளுக்குப் போராடுபவர்கள் எல்லாம் ஒன்றுதாம்.
தமிழர்கள், சிங்களருக்குமானச் சனநாயகத்திற்காகத்தான் போராடினார்கள் என்பதைக் காலிமுகத்திடல் உணர்த்தி நிற்கிறது. அன்றைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சனநாயக வழியிலான போராட்டங்கள் இதே காலிமுகத்திடலில் வைத்து அரசியல் காடையர்களாலும், காவல்துறையினராலும் நையப்புடைக்கப்பட்டது. அருகிலிருந்த ஏரியில் தமிழர் அடிப்படைச் சனநாயகக் கோரிக்கைகளும், வாழுரிமையும் அவர்கள் சடலத்துடன் சேர்ந்து மிதந்தன.
தமிழர் அரசியல் போராட்டத்தின் நீதியை அறிதலின் வழியேதான் சிங்களர் தமது சனநாயகத்தைச் சிங்கள அரசியல் பாராளுமன்ற வாதிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இயலும். ஏனெனில் கடந்தக் காலங்களிலும் எளிய சிங்களர் மூளையில் இனவெறி ஏற்றியே அவர்கள் தமக்கான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். இன்றைக்கு ஆட்கள், ஆட்சிகள் மாறியிருக்கின்றன. அதே ஆசனங்கள், கதிரைகள், காட்சி மாறிவில்லை.
தமிழர் சனநாயக உரிமையில் சிங்களர் உரிமையும் சேர்த்தே இருந்தது தமிழர் ஒட்டுமொத்தமாக நந்திக்கடலில் அழிக்கப்பட்டபோது சிங்களர் உரிமையையும் அது காவு வாங்கிக் கொண்டது. பாராளுமன்றம் என்பது வானளாவிய அதிகாரமுடையதாக மாறியது. அது மக்களுக்கானதல்ல அதிகாரவர்க்கத்திற்கானது. சிங்கள எளிய மக்களுக்களுக்கு இனவெறியும், தமக்குப் பதவியும் என்ற எளிய கணக்கின் அரசியலே இலங்கைப் பாராளுமன்றம். சிங்களருக்கு அது என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதுவே நேற்று இனவெறியின் பெயரால் தமிழருக்குச் செய்தது.
தமிழர் எழுச்சியின் இதே போன்றதொரு ஜுலை திங்களில், 1983 ஆம் ஆண்டு ஜுலையில் என்ன நடந்தது என்ற வரலாற்றைப் பேசலாம்.
ஆங்கிலேயர் இலங்கைத் தீவை விட்டுச் செல்லும்போது அந்நாட்டை சகல தேசிய இனங்களையும் உள்ளடக்கிய ஓர் சனநாயக பொறிமுறையின் கீழ் விட்டுச் செல்லவில்லை. மாறாக பெரும்பான்மை இன, மத மொழி தேசியத்தின் பொறுப்பின் கீழாகவே விட்டுச் சென்றனர்.
பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வகையில் அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை என்றாலும் தேசிய இனங்கள், மொழி பான்மையினர் அல்லது இனத்துவ வரலாற்றை அவர்கள் அறியாமலில்லை. ஏனெனில் பிரித்தானியர். டச்சு, ஒல்லாந்தர் போன்றவர்கள் இலங்கைக்கு வரும்போது தமிழர் சிங்களர் என்ற இரு பெரும் அரசு, நிலம், பொருளாதாரம், என இரு பெரும் பல்சக்கரங்கள் ஒன்றையொன்று பொருந்தாது சுழன்று கொண்டிருந்ததைக் கண்டனர். சுரண்டலுக்கும், ஆட்சியதிகாரத்திற்காகவுமே அவர்கள் அந்த இரண்டு தேசிய இன நில பரப்பை ஒன்றாக்கிக் கொண்டனர்.
வரலாற்று வழியில் இரண்டு முரண்பட்டத் தேசிய இனத்தை ஒன்றை ஒன்று நெருங்கி சுழலச் செய்து தமக்கான வளங்களைப் பெற்றுக் கொண்டனர். இதற்காக இரு தேசிய இனங்களையும் தமக்குத் தேவையெனில் சமரசத்திற்கும், போரிட்டும் தமக்குக் கீழ் வைத்துக் கொண்டனர்.
இறுதியாக நாட்டைவிட்டுச் செல்லுமுன் வழமை போல பெரும்பான்மை இனத்திடமே அவர்கள் இலங்கையைக் கையளித்தனர். இது சிறுபான்மைப் பொரும்பான்மை என்கிற வகைமைகளுக்கு அப்பால், இன, மத, மொழி முரண்களுக்கு ஊடே எதிர்காலத்தில் தமது இருப்பைத் தமது காலணிய நாடுகளில் தக்கவைத்துக் கொள்வதற்குப் பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஒரு வகை அரசியல் உத்தி என்றும் சொல்லலாம். எதிர்கால அரசியலுக்கான முதலீடு என்றும் சொல்லாம்.
முரண்பாடுகளில் குளிர்காய்ந்து கொண்டே தமது நலன்களைப் பேணிக் கொள்ளும் பிரித்தானிய வல்லாதிக்க அரசு இலங்கையில் அப்படியாக விட்டுச் செல்லும் நிலையில் சிறுபான்மையினருக்கானச் சில பாதுகாப்புச் சட்டங்களை அரசியல் யாப்புகளில் உறுதிப்படுத்தியிருந்தது. (சோல்பரி ஆணைக் குழு 1946 பிரவு-29)
தமிழர்-சிங்களர் முரண் அரசியல் மேலெழுந்தக் காலத்தில் இலங்கை அரசு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்தது. மேலும் இனங்களைத் தேசியமாகக் கருதாமல் சிறுபான்மை என்ற வகைமைக்குள் வைத்து வரலாற்று வழியிலான மரபார்ந்த கூறுகளைக் கலைத்துப் போட்டது.
படிப்படியான இன உரிமைப் பறிப்பு தமிழர்கள் முன்னெடுத்தப் பாராளுமன்ற அரசியல் வழியிலானப் போரட்டங்கள் யாவும் நூற்றாண்டின் அரைபாதியில் கழிந்து செல்லப் பிறகானக் காலத்தில் இளைஞர்கள் முன்னுக்கு வந்து ஆயுத வழியிலான உரிமைகளைக் கோரத் தொடங்கினர்.
அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, சமூகம் என்ற வகையில் மொழிக்கான இடம் மறுப்பு, கல்வியில் இனவிகிதாச்சாரம், வேலை வாய்ப்பில் பாகுபாடு என சிங்கள இனவெறி தேசிய அரசியல் தமிழ் தேசிய இனத்தினரைத் திட்டமிட்டவகையில் மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்க முனைந்தது. பாராளுமன்ற அரசியலில் வடக்குக் கிழக்கு பிரதிநிதிகள் சிங்களப் பெருந்தேசிய கட்சிகளை முண்டு கொடுக்கும் ஒன்றாகவே இன்றைக்குப் போலவே அன்றைக்கும் சிங்களத் தலைமைகள் பயன்படுத்திவந்தன. தமிழர் அடிப்படை உரிமை சார்ந்த எந்த ஒரு சிக்கலையும் பேசவோ, தீர்மானமாகக் கொண்டுவரவோ இயலாத சூழலில் தமிழ் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத் தமிழரிடம் குறிப்பாக தமிழ் இளைஞர்களிடம் செல்வாக்கிழக்கத் தொடங்கினர்.
கறுப்பு யூலை என்று வர்ணிக்கப்படும் 1983 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முழுமையும் நாடெங்கும் தமிழர் மீது நடத்தப்பெற்ற சிங்கள இனவாதிகளின் இன வழியிலான வெறியூட்டும் தமிழர் அடையாள அழிப்பு இன்றளவும் நினைவு கூரத்தக்கதாக இருந்து வருகிறது.
இலங்கைத் தீவில் ஜுலை திங்கள் இன்றைக்கு இன வேறுபாடற்ற பாராளுமன்ற அரசியல் ஊழல், மற்றும் மோசடிக்கு எதிரான அரசியல், சமூக எழுச்சி நினைவுகூரப்படும் நிலையில் மறு வளமாக நாம் கறுப்பு யூலையை நினைவு கூர வேண்டியவர்களாக இருக்கிறோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று ஒன்றை ஒன்று தாங்கி இருவேறு விளைவுகளின் சாட்சியாக இந்த ஜுலை திங்கள் இருக்கின்றது. ஒன்று மற்றதின் விளைவென்றால் மிகையன்று.
தமிழ் தீவிர ஆயுதம்தாங்கியத் தேசியக் குழுவொன்றின் தலைவரானத் தங்கதுரையின் கைதும் அவர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் ஆற்றிய உரையும் தமிழர் மீது இலங்கைத் தீவில் ஓர் தேசிய இனமாகக் குறிக்கபெற்று நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு ஏதுவாகியது.
அந்த நீண்ட நெடிய உரையானதுத் தமிழரை ஓர் இறைமை மிக்க தேசிய இனமாக வரையறுத்தது. தீவு நாட்டில் தனக்கென பண்பாடு, நிலவியில், பொருளாதரக் கட்டமைப்புடன் செம்மாந்த வாழ்வுக்குரிய இனமாகச் சுட்டிக்காட்டியது. ”நாம் வான்முறையின் மீது காதல் கொண்ட மனநோயாளர் அல்ல. எமது உரிமையை யாசித்துப் பெற வேண்டி வரவில்லை. எமது உரிமையைப் போராடிப் பெறுவோம் என சூளுரைத்தத் தங்கதுரையின் உரை வீச்சு தமிழ் இளைஞரிடையே பகத்சிங் போன்றதொரு எழுச்சியைக் கோரியது.
இவ்வுரையின் கொதிநிலையிலேயே யாழ் உள்ளிட்ட வடபகுதிகளில் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனவால் நடத்தப்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரபாகரனின் தமிழீழவிடுதலைப் புலிகள் மக்களிடம் கோரிக்கை வைத்தனர். அதே நேரம் தமிழர் பாராளுமன்ற கட்சிகளின் கூட்டணியானத் தமிழர் விடுதலைக்கூட்டணி துணிந்து போட்டியிட்டது. அதிபரின் கட்சியான அய்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் தமிழ் இளைஞர்களால் சுடப்பட்டனர்.
தமிழ் மக்கள் உள்ளூராட்சித் தேர்தலை 99 சதவீதம் புற்கணித்தனர் இது சிங்கள, தமிழ் பாராளுமன்றத் தலைமைகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தலைமை இடம் மாறுவதையும், சிங்கள பாராளுமன்ற அரசியலிலிருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய அரசியலுக்குள் நுழைவதையும் சகித்துக் கொள்ளாத சிங்கள அரசு, அரசியல், சமூக தீவிர தேசிய இயக்கங்கள் தமிழரைத் தீவிரப் பிரிவினைவாதிகளாக அடையாளம் கண்டனர்.
சிங்கள தேசிய இனம், தமிழ் தேசிய இனத்தை வன்முறை இனமாக அடையாளப்படுத்தி அடிப்படை உரிமைகளை நசுக்கத் தொடங்கிற்று. தமிழர் வதியும் இடங்களில் படைநிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கத் தொடங்கிற்று. தமிழர் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர்.
சிங்கள இனவெறி தேசியம், புத்தப் பிக்குகள் தொடங்கி, இடதுசாரிகள் எனப்பட்ட ஜனதாவெமுக்திப் பெரமுனா இயக்கம் வரையிலும் தமிழரை ஓர் தேசிய இனமாக அடையாளம் கண்டு ஒதுக்கவும், உடைக்கவும், ஒழிக்கவுமான அரசியலை முன்னெடுக்கத் தொடங்கிற்று.
பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்கு இனவாதம், மொழிவாதம் ஓர் அறுவடைக் கருவியாக மாறிற்று. முன்னயை பல அதிபர்களைக் காட்டிலும் ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அதை நன்கு பயன்படுத்துபவராக ஆனார்.
1983 யூலை திங்கள் இவற்றிகானக் கொதிக்களமாக மாறிற்று.
அரைத் தசாப்தக் கால அரசியல் நெருக்கடி, சமூக நெருக்கடியாக மாறியதுடன், இன முரண்கள் முற்றியக் காலமாகவும் அது இருந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் ஜெ.ஆர். தலைமையிலான அரசுக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக இருக்கக்கோரும், பிரிவினைத்தடைச் சட்டம் இயற்றபட்டிருந்தது.
தமிழர் கட்சிகள் பாராளுமன்றத்தினுள் வாய் திறக்க இயலாத அளவில் சனநாயகம் நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. தமிழர் பகுதிகளில், காவல்துறை, காடைக் கும்பல்கள் சிறு சிறு சச்சரவுகளில் ஈடுபட்டவாறிருந்தன. அவற்றிற்கெதிரானக் குழுவாக அன்றி தனிநபராக யாழ் இளைஞர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டு யாழ்குடா இளைஞர்கள் கைதுக்கும், காவலுக்குமுள்ளாகினர். பலர் திடீரென்று காணம லடிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை குறைந்த நிலையில் அங்கு ஜெ.ஆரின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். யாழ்.கந்தர் மடம் வாக்குச்சாவடி அருகே வீடுகளும், கடைகளும் எரியூட்டப்பட்டன. இந்தக் கலவரம் கிழக்கிலும் பரவி திருகோணமலைப் பகுதியில் சிங்களர் செரிந்து வதியுமிடங்களிலிருந்துத் தமிழர் குடியிருப்புக்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதன் எதிர்வினையாக 1983 யூலை ஒன்றாம் திகதி யாழ்குடா முழுவதும் கடையடைப்பிற்குச் சில அரசியல், பொது மக்கள் குழுக்கள் அழைப்புவிடுத்தனர். இது பெருமளவிற்குப் பலனளித்தது. அன்றைய தினம் யாழ் தேவி தொடர்வண்டி அடையாளம் தெரியாதவர்களால் கோண்டாவில்லில் வைத்து எரியூட்டப்பட்டது. இதனையடுத்துக் கோவை மகேசன் போன்ற கடையடைப்புக்குக் காரணமானவர்களைக் காவல்துறை கைது செய்து கொழும்பு வெளிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றது.
இது மேலும் யாழ்குடாவில் பதட்டத்தை அதிகரிக்கச் செய்யவே அரசு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சுதந்திரன் மற்றும் சாட்டர்டேரெவ்யூ போன்ற பத்திரிகைகளைத் தடை செய்து அலுவலகங்களைப் பூட்டிவைத்தது.
இததெற்கெல்லாம் உச்ச நிகழ்வாக யூலை இருபத்து மூன்றாம் திகதி இலங்கைப் படையணித் தொடர் மீதானத் தமிழீழவிடுதலைப்புலிகளின் தாக்குதல் அமைந்துவிட்டது.
யாழ்.திருநெல்வேலி தபாற்பெட்டிச் சந்தியில் புலிகளால் வைக்கப்பட்டக் கண்ணிவெடியில் சிக்கிய இலங்கைக் கடற்படையின் காவல் அணியினர் 13 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். இலங்கைப் படையணியில் ஒட்டுமொத்தமாக இவ்வளவு பேர் கொல்லப்பட்டது வரலாற்றில் முதன் முறையாக நிகழ்திருந்தது.
இலங்கைப் படையணிகளில் படிப்படியாகத் தமிழர் குறைக்கப்பட்டிருந்தனர். மேலும் இலங்கை படையணி சிங்களப் படையணியாகக் கட்டப்பட்டிருந்தது. எனவே இத்தாக்குதலில் கொல்லப்பட்ட படைவீரர்கள் பலரும் சிங்களராக இருந்தது பெரும்பான்மை சிங்கள இனத்தினரிடையே கடும் சினத்தை ஏற்படுத்தியது.
இறந்தப் படையணியினர் உடல்களைப் படைத்தரப்பு தோல்வியின் சடலமாகப்பார்த்து. யாழ்பாணத்திலேயே இறந்தவர் உடல்களை எரியூட்ட முயன்றது. ஆனால் ஆளும் ஜெயவர்த்தன அரசு அப்படியிருக்க விரும்பவில்லை. அது பிணத்தில் அரசியல் செய்ய விரும்பியது. இறந்த 13 படையணியினரையும் விமானம் வழி கொழும்பிற்கு எடுத்து வர கட்டளையிட்டு அந்த வீரர்களை விமான நிலையத்திலிருந்து கொழும்பின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் விட்டு கனத்தை மயானத்தில் வைத்து எரியூட்டியது.
இந்த ஊர்வலமும், அது ஏற்படுத்தியக் கொதி நிலையும் ஏககாலத்தில் கொழும்பில் தமிழர் வதியும் முக்கிய இடங்களில் கலவரத் தீயை மூட்டியது அல்லது மூட்டிவைக்கப்பட்டது.
ஜுலை 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள தமிழர் நிறுவனங்கள், வணிகத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொருட்கள் சூறைக்குள்ளாகின. பல பெரும் இந்திய தொழில் அதிபர்களும், யாழ் தமிழர்களும் ஒரே நாளில் உயிர், உடைமை, வணிக தலங்கள் என யாவற்றையும் இழந்தனர். ஏதிலிகளாக்கப்பட்டனர். அவற்றை விவரிக்கின் இது ஆகப்பெரியக் கட்டுரையாக அமைந்துவிடும்.
எவ்வளவு இழப்பின் பின்னும் தமிழர் தம் மீது நடத்தப்பெற்ற தாக்குதலுக்கானக்கான நீதியானக் காரணங்களை கேட்டு அன்றைக்குக் கொழும்பில் திரண்டுத் தமது சனநாயக வழியிலான அமைதியானப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க முடியவே இல்லை அந்தளவிற்கு இனவெறியானது சனநாயகத்தின் சகல வழிகளையும் அடைத்து நின்றது.
கொழும்பில் மட்டுமல்ல நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் குரல் ஒலிக்க இயலவில்லை.
கொழும்பு வெளிக்கடைச் சிறைச்சாலையில் நடத்தப்பெற்ற இரண்டு நாள் தாக்குதல்கள்(ஜுலை 25, 27) உலகை உலுக்கின. அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலைச் செய்யப்பட்டனர். தங்கத்துரையும் அங்கு வைத்தான் கொல்லப்பட்டிருந்தார்.
அரசும், நிர்வாகமும், நீதித்துறையும் அசைவற்றிருந்தன. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு தமிழர் உயிர் இனத்தில் பெயரால் பறித்தெடுக்கப்பட்டன.
அந்த இனவெறியில் வளர்த்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல் தலைமைகளின் வாரிசுகள்தாம் இன்றைக்குச் சொந்த இனத்தின் மீது அடக்குமுறையை ஏவிக் கொண்டுள்ளனர். தமது சொந்த வளர்ச்சிக்கு நவ தாராளம் என்றாலும், சிங்கள இனவெறி மத மேலாண்மை வாதமென்றாலும் அவற்றை அரசியலின் பெயரால் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்கள் என்ற புரிதலை சிங்கள எளிய மக்கள் வந்தடையவும் இன்னும் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் பல சனநயாகக் கதவுகளைத் திறக்கவும் வேண்டியிருக்கும். வேண்டியிருக்கிறது.
நேற்றைய ஜுலைத் தமிழருக்கெதிரானதாக இருந்தது. இன்றைய ஜுலை சிங்களருக்கெதிராக இருக்கிறது. இரண்டு போராட்டங்களும், வாழுரிமை, சனநாயக உரிமை என்பதாக இருக்கிறது. இரண்டையும் மக்களின் பெயரால் கையில் வைத்திருக்கும் பாராளுமன்ற அரசியல் அவற்றை தமது சொந்த மக்களுக்கு மறுக்கிறது.
1983 இல் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தமிழர் கொல்லப்பட்டிருந்தனர். பத்தாயிரங் கோடி ரூபாய் மதிப்பிலானப் பொருட்கள் சேதமடைந்திருந்தது. ஜுலை இறுதிவாரத்தில் இன்றைக்கு சிங்களமக்களால் கைப்பற்றபட்டிருந்த அதே அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினியில் தோன்றி பேசிய ஜெயவர்த்தன அன்றைக்கு, தமிழருக்கெதிரானச் சிங்களர் கலவரம் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் இயல்பான எதிர்வினை என்றார்.
இன்று பெரும்பான்மையினரின் எதிர்வினை என்பதால் அதிகாரவர்க்கம் பணிந்து போய்விடவில்லை. அதுதான் அதிகாரவர்க்கத்தின் இயல்பு. அதைத்தான் 22ஆம் திகதி நள்ளிரவு போராட்டக்காரர்களை படைத்தரப்பு வல்லடியாக அகற்ற முனைந்தபோது. செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்களில் சிலர் 83 ஆம் ஆண்டின் வன்முறையையும், சிங்கள அரசியலர், படையினரின் அட்டூழியங்களையும் நினைவு கூர்பவர்களாக இருந்தனர். சுட்டிக்காட்டுபவர்களாகவிருந்தனர்.
அன்று ஜெ.ஆர்.ஜெயவர்த்தன தமிழருக்கெதிராக அதைச் செய்தார். இன்றைக்கு அவரது மருமகன் ரணில் சகல மக்களுக்கு எதிராகவும் செய்கிறார். நிறைவேற்று அதிபர் என்பதும், மையத்தில் குவிக்கப்பட்ட ஒற்றை அதிகாரம் என்பதும் இப்படித்தான் இருக்க முடியும். இருக்கும்.