பிரதாப் போத்தன் – எண்பதுகளின் மென்நாயகன்.!
தமிழ்த் திரையில் கதாநாயகனைப் பார்ப்பது என்பது ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகள் எப்படி தீர்மானகரமானவையோ, கதைக்களம், நிகழ் காட்சிகள் என ஊகிக்கத் தக்கதானவை. சில ஓரங்க நாடகத் தொடர்ச்சி போல செல்லுலாய்டில் உறைந்து போயிருக்கும். பாத்திரங்கள் நாடகீகமானவையாக இருந்த காலம் முடிவுக்கு வந்த ஒருநாளில் ஓர் நகரப்பேருந்திலிருந்து அந்த இளைஞன் இறங்கினான்.
80களின் பாப் கட்டிங். ஆனால் அது ஒழுங்கற்று காற்றின் போக்கில் அலைந்து கொண்டிருக்க, தனது கண்களுக்குச் சற்றே பெரிய கண்ணாடியை மூக்கில் மெல்ல அழுத்தியபடி வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி தோல் பையும், அளவான பட்டை அல்லது மெல்லிய கோடுள்ள மேல் சட்டை; வாத்தின் கால்களைப் போல அகல வைத்துத் தைக்கப்பட்ட 70, 80 களின் பெல்பாட்டம் பாண்ட்டில் சட்டையை உள்விட்டு பெரிய பக்கிள்ஸ் வைத்த பெல்ட்டுன் இறங்கும் திரைக் கதாநாயகன்கள் அன்றின் இளைஞர்களின் கனவு நாயகர்கள். ஆனால் இந்த முழு அறிமுகத்திலும் தன்னை முழுமையாக இயல்பாகப் பொருத்திக் கொண்டு முதல் ப்ரேமிலேயே, காட்சியிலேயே பார்வைகளை உறுத்தாமல் ஏற்கும் ஒருவராக பிரதாப் போத்தன் இருந்தார்.
மெல்லிய அவரது புன்னகையைப் போன்ற ஒரு மொழி வசீகரம், கூர்த்த ஆனால் மூக்குக் கண்ணாடியிலிருந்து திருத்தமாகப் பார்க்கும் கண்கள். வாசிப்பும், தெளிவும், பகடியுமானக் கண்கள். நகரத்தின் வீடொன்றின் மாடிப்படிகளில் அமர்ந்து தீரா சாலைக்காட்சிகளைப் பார்த்தபடி பெரிய புத்தகமொன்றை வாசித்தபடியிருக்கும் இளைஞனின் சாயல் போத்தனுக்கேயுரியது. முழுமையும் பொருந்திப் போகக்கூடியது.
தமிழ் திரை ஒளிப்பதிவுக் கருவிகள் அவரை அப்படியும் புரிந்து வைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும். காமிராவுக்கு உறுத்தாத முகத்திலிருந்து போத்தன் தனது மெல்லிய புன்னகையைத் தொடங்குவது இப்படித்தான்.
நகரத்தின் சந்தொன்றில் இருக்கும் வீடு ஒன்றின் எதிர் வீடாக, பக்கத்துவீடாக போத்தன் இருக்க வேண்டும். எப்போதாவது வெளியில் வந்து தெரு குழந்தைகளைக் கொஞ்சிவிட்டு, யாரும் பார்க்காத போது பஞ்சுமிட்டாய், கமர்கட் வாங்கித் தின்று கைகளைத் துடைத்துக் கொண்டு ஒரு சாயா அருந்தும் நேரத்தில் அன்றைய செய்தித்தாளை மேய்ந்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிடும் சில நாட்களின் தெருப் பையனாக போத்தன் இருக்கக்கூடும்.
பிரதாப். ஆம் அவரது முதல் படமான அழியாத கோலங்களில் அப்படித்தான் அறிமுகமாகிறார். பிரதாப்பாகவே வருகிறார். மற்ற பலரும் அவ்வாறே தமது அசல் பெயருடன் வந்தாலும் அவர்தாம் அசலான பெயருடன் இருக்கிறார். இது ஷோபாவுக்கும் பெருந்தும். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவுக் கருவி பிரதாப்போத்தனின் கலைந்த ஒழுங்கற்ற ஆனால் அழகான தலைக் கேசத்தை காலை, மாலை ஒளியில் பதிவு செய்யும் மொழி அழகானது. அதனாலேயே போத்தனின் தலை முடிக்கும் தனியானதொரு பாத்திரம் இருந்தது.
ஒரு கிராமத்து நாயகனாக போத்தனைக் கற்பனை செய்வது மிகவும் கடினம். அதே சமயம் கிராமத்தின் இயற்கை எழிலைத் தனது அளவான மூக்குக் கண்ணாடியின் வழி முதன் முலாக தரிசிக்கும் போத்தன் திரையில் வசீகரமானவர்.
எழுபதுகளின் இறுதியில் ஆனந்தவிகடனில் வந்த சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ தொடர்க்கதைக்கு சித்திரக்காரர் ஓவியர் ஜெயராஜ்(ஜெ…) வரைந்த கதாநாயகன் ஏறக்குறைய போத்தனுக்குப் பொருத்தியது விசேடமானது. அந்தக் கதையின் நாயகனைத் திரையில் போத்தனுக்குப் பொருத்திய வாசகர்கள், ரசிகர்களை போத்தன் ஏமாற்றவில்லை.
கரையெல்லாம் செண்பகப்பூ ஒரு த்ரில்லர் வகை கிராமத்துப் படம். கிராமத்தில் இருக்கும் ஒரு தனியான மாளிகையில் நடக்கும் புதிரான நிகழ்வுகள், அங்கு புதையல் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதை திருடிச் செல்லவரும் நகரத்துப் பெண் கதாநாயகி(சுமலதா). அந்தக் கிராமத்தில் இருக்கும் வள்ளி, மருதமுத்து. மருதமுத்துவுக்கு ‘குறிச்சப் பொண்ணு’ வள்ளி. ஆனால் கதையில் மருதமுத்துவுக்கும் நகரத்துப் பெண்ணுக்குமானக் காதல் கல்யாணராமன் என்ற பிரதாப் போத்தனுக்கும் கிராமத்துப் பெண் வள்ளிக்குமான மையல் என்று கதை வேறுபட்டுச் சுழலும்.
தனது அறிமுகப்படமான அழியாதக் கோலங்களில் பேருந்திலிருந்து அலட்டிக் கொள்ளாத உடல்மொழியுடன் இறங்கும் அதே பிரதாப் கரையெல்லாம் செண்பகப்பூவில் இரயிலிலிருந்து இறங்கும் முதல் காட்சி இடம் பெறும்.
கிராமத்து வயல், வரப்புகளில் நடந்து பரிச்சயமற்ற போத்தனுக்கு இயல்பான நடை அதை சாத்தியப்படுத்துவதுடன் திரைக்காட்சியில் இயல்பாகப் பொருந்திவிடுவதைக் காணலாம்.
நாட்டுப்புறப்பாடல் ஆராய்ச்சிக்காக அந்தக் கிராமத்துக்கு வரும் கல்யாணராமனின் பெட்டியை ரயிலில் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வள்ளி(சிறிபிரியா) தலையில் சுமந்து கொண்டே கல்யாணராமன் தேடிவரும் தனது கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் வரும் உரையாடலில், “சாரு நகரத்துச் செட்டிமாருங்களா ?!”என்பாள் வள்ளி. கல்யாணராமன் அவளை உற்றுப்பார்த்துக் கொண்டே மெல்ல ஏன்.. நா பாப்பான் என்பான். இது திரை உரையாடலில் இடம்பெறாதிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் பார்ப்பான் முகமாக, பார்ப்பானாக நாம் போத்தனை எப்படிக் கற்பனை செய்து கொள்ள முடியும்? சுஜாதாவைப் போல. ஓர் அறிவுசீவி முகம் பார்ப்பானுக்குரியதாகச் சொன்னாலும் பிரதாப் பார்ப்பான் அல்லவே. மேலும் திரை ரசிகர்களுக்கு, வாசகனைப் போன்று சுஜாதா குறிப்பிடுவது போல ஒரு பார்ப்பான் தேவைப்படுவதில்லை. தேவை சாதிகடந்த ஓர் பொது முகம். அது போத்தனுக்குரியது. திரைக்கும் உரியது.
பிரதாப் தனக்கென்று ஒரு முகத்தை, கேரக்டரை நிலையாக வைத்தக் கொள்ள விரும்பவில்லை. அவர் திரையிலும் அதற்கு வெளியில் திரைப்படங்களை இயக்குவதிலும் ஈடுபாடு காட்டினார். ஆனால் அவரது வெகுசனத் திரை ரசிகனுக்குரியதாக இருந்ததேயொழிய போத்தனுக்குரியதல்ல.
ஆனால் பல படங்கள் வெற்றியடைந்தன. சில தோல்வியைத் தழுவின. அவருக்கு முற்றிலும் பரிச்சயமற்ற அவரது முகத்தைப்போன்றே கிராமத்து சாயல் கொண்ட கிராமப்புறங்களை அறிந்திராத அவரால் சீவலப்பேரிப் பாண்டியை ஓர் வெற்றிப்படமாகக் கொடுக்க முடிந்ததற்கு காரணம் அது வழமையான சினிமா மொழியில் இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு காதல் கதை அவருடைய மொழியில் இருந்தது. அவரது சினிமா மொழி ஒரு கலைப்படப் பாணியிலானது. அவரும், அவருடைய நடிப்பும், முகமும் அப்படியானதே.
அவருடை முகமும், பாணியும் பிறகானக் காலத்தில் அல்லது சமகாலத்தில் கமல்ஹாசன், நடிகர் மோகன் போன்றோர் சுவீகரித்துக் கொண்டார்கள். ஆனால் போத்தனால் ஒரு சாகச வீரனாகத் திரையில் தோன்ற முடியாமல் போனது. காரணம் அவரது இயல்பு இயல்பான மனிதத் தன்மை கொண்டிருந்தது. அசாதாரணம் என்று சொல்லும்போது மனிதன் தனது இயல்பை மீறும் தருணங்களைக் கொண்டது. அதாவது பிறழ்வு நிலை. மனப்பிறழ்வு கொண்ட மனிதனாகப் பிரதாப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஏனெனில் பிரதாப்பால் மனிதனை அந்தளவுக்குத்தான் தன்னளவில் மீறக்கூடிய மனிதராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
பிற்காலத்தில் அவர் கோமாளியாக, தனது முட்டைக் கண்களை உருட்டும் வில்லனாக வந்தாலும் அமைதியும் புன்னகையும், அறிவிசீவித்தனமும், அப்பாவிக் குழந்தை முகமான அவரை வில்லனாகச் செரித்துக் கொள்வதில் திரை ரசிகனுக்கு மிகுந்த உளைச்சல் இருந்தது.
கரையெல்லாம் செண்பகப்பூ வில் கிதாரோடு வரும் பிரதாப் மூடுபனியில் அதை இசைத்துப் பாடும், தனிமையில் தனது மனதுடன் போராடும் ஒர் தனியனாகத் துணைக்கு ஓர் கிதாருடன் மட்டுமே இருட்டறை ஈசிச்சேரில் சிகரெட் புகை சுழல முடங்கிக் கிடப்பவனாகக் காணும்போது அவரது உடல் மொழி ரசிகனுக்குப் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
ஆங்கில சைக்கோ திரைப்பட நாயகர்களைப் போன்று இயல்பான ஆனால் தனது இயல்புக்கு மீறின குணாதிசயங்களை இருளும் ஒளியும் சூழ்ந்த வெளியில் தனது உடல் மொழி வழி வெளிப்படுத்தவதில் பிரதாப் தனது நடிப்பின் வழி உடலைக் கடந்தார்.
ராஜேந்திரக்குமாரின் நாவலான மூடுபனியில் மனம்பிறழந்த நாயகன் தனது அம்மாவின் இறந்த உடலை சவப்பெட்டியில் வைத்து அதனுடன் தினமும் உரையாடுவான்.
சோபாவை தனது தனிமைச் சூழ்ந்த மாளிகைக்கு அழைத்து வந்து தனது அம்மாவைக் காட்டுவதாகச் சொல்லி வினோதமான ஒரு நிலையில் சோபாவைத் துரத்தத் தொடங்குவார். அப்போது அந்தப் பெட்டி இறுதியில் உடைத்துத் திறந்து கொள்ளும்போது பிரதாப் கதறும் காட்சி பார்வையாளர்களின் மனதில் கருமேகங்கள் சூழ்ந்து மனதை அழுத்துவதுப் போன்றிருக்கும்.
தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப்போடச் சினிமா பார்க்க வரும் பிரதாப் பாவ மன்னிப்பு படத்தைப் பார்க்கிறார். அதில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதிக்கமுயலும் சாவித்திரியைத் தடுத்து நிறுத்தி, “ஆற்றைக் களங்கப்படுத்தாதே, படைப்பைக் களங்கப்படுத்தாதே!” என்பார் சிவாஜி. படத்தின் இடைவேளையில் கான்டினில் சேன்ஞ்ச் கிடைக்காமல் யாரிடம் மாற்றிக் கொள்ளலாம் என்று தேடும் ஷோபா, சட்டென்று மாடிப்படி ஓரத்தில் சிகரெட் புகைத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் பிரதாப்பைச் சந்திப்பார். சின்னப் புன்னகை. தனது சட்டைப்பையைத் துளாவி பிரதாப் எடுத்துக் கொடுப்பார். மீண்டும் நட்பானச் சிறு புன்னகை. வழக்கமானக் கதாநாயக அறிமுகமெல்லாம் ஒன்றுமேயில்லை. கிடையாது. அது பிரதாபிற்குப் பொருந்திப்போவது இன்னும் அழகு.
பி.வாசு(வாசுபரத்)வின் பன்னீர்புஷ்பங்கள் படத்தில் பள்ளி ஆசிரியராக விடலைக் காதலுக்கிடையே நடந்து செல்லும் பாத்திரம்.(அசோக்குமார் ஒளிப்பதிவு) கொடைக்கானல் பின்னணியில் கொஞ்சம் பாலன்ஸ் தவறினாலும் விழுந்துவிடக்கூடிய பகுதி. பாத்திரம். பிரதாப் நினைவில் நிற்க சாத்தியமானத் திரை அமைப்பு.
ரகுவரன், பிரதாப் போன்றவர்கள் தமிழ்சினிமாவில் தனக்கெனக் கொடுக்கும் பாத்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள். ஆனால் தமிழ் சினிமா அவர்களது மதிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தாம் ஒரே பாத்திர அமைப்பைக் கொடுத்து அவர்களை திரைக்கு வெளியே தள்ளிவிட்டுவிடுகின்றன.
பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களைப் பந்தாடும் டிஸ்யூம் டிஸ்யூம்கள் கைவரப்பெறாத நடிகன். ஆனால் கதாநாயகன். சராசரிகளின் திரைமுகம். அதனாலேயே பிரதாப் நினைவுகூரப்படுபவராகத் திரையிலும் அதற்கு வெளியிலுமிருப்பார்.
போத்தன் ஆங்கிலம், நவீன மலையாளம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் மீது தீவிர வாசிப்புக் கொண்டவர். படைப்பாளிகளுடனும் தொடர்பிலிருந்தவர்.
மலையாளம், தமிழ் சினிமாவிற்கு ஓர் புதிய அடையாளத்தைக் கொடுக்க முயன்றவர்.
தனது மூக்குக் கண்ணாடியையும் முகத்திலொரு உறுப்பாக்கி நடிப்பில் மிளிர வைத்தவர்.
பிரதாப்போத்தன் நடிகர்களில் ஓர் தனித்த மினுங்கும் ஒற்றை நட்சத்திரம்.