மண்ணின் மைந்தர்களும், காவி அரசியலும்.!
தமிழக அரசியலில் ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் முதல்வராகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணை முதல்வராகவும் இருப்பதைக் கற்பனை செய்து கொள்வது எவ்வளவு துயரகரமானதோ அவ்வளவுக்கு அது கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாததிலும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இன்றைய அதிமுகவை எப்படி கற்பனை செய்திருக்க முடியாதோ அவ்வாறே மாகாராட்டிரத்தில் பால்தாக்ரே தனக்கு பிறகான சிவசேனாவின் இன்றைய அரசியல் நிலைமையை கற்பனைச் செய்திருக்க முடியாது.
பால்தாக்ரேவின் மகனும் சிவசேனாக் கட்சியின் முதல்வருமான உத்வ்தாக்ரே ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டது.
பாஜக மத அரசியல் தாக்ரேயின் காவி வேட்டியை உருவி தனதாக்கிக் கொண்டுவிட்டது.
உத்தவ்தாக்ரே முன்னெச்சரிக்கையாக பாண்ட் போட்டுக் கொண்டுவிட்டார். காவி அரசியல் குறித்து அவருக்குச் சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. அதுவே அவரது கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்து கொண்டிருந்தன.
மேலும் கடந்த 2019 தேர்தலில், பாஜக ஆதரவில் பதவியேற்ற சிவசேனா சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாததால் கூட்டணி உடைந்து குடியரசுத்தலைவரின் கீழ் மாநில ஆட்சி கொண்டு வரப்பட்டது.
2019 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் வழி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துக் கொண்டது சிவசேனா. உத்தவ்தாக்ரே மீண்டும் முதல்வரானார். அஜித்பவார் துணைமுதல்வரானார்.
தற்போது சிவசேனாவின் மூத்தத் தலைவரான ஏக்நாத் சிண்டேவுக்கு சிவசேனாவின் 38 உறுப்பினர்கள் ஆதரவளித்ததைத் தொடர்ந்து பெரும்பான்மையை உறுதிப்படுத்த இயலாத நிலையில் உத்தவ் பதவி விலகினார்.
உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவில் தலையிட மறுத்துவிட்ட நிலையில் ஆட்சி அமைக்க சிண்டே தரப்பு உரிமை கோரியது. அதே நேரம் பாஜகவும் ஆட்சிக்கு உரிமைகோரியது.
பிறகு இருதரப்புப் பேச்சுவார்த்தையை அடுத்து பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திரப்பட்னாவிஸ் துணைமுதல்வராகப் பொறுப்பேற்க இசைந்தார்.
பாஜகவிடம் அதிக எம்.எல்.ஏ.கள் இருந்த போதிலும் அவர் முதல்வர் பதவியை விட்டுத் தந்திருப்பதாகப் பட்னாவிஸ் குறித்து நெகிழ்கிறார் சிண்டே.
எப்படி பார்த்தாலும் மாநிலத்தில் நடக்கப்போவது பாஜக ஆட்சி என்பதுதான். சிண்டே ஆர்.எஸ்.எஸ். இன் முன்னாள் ஊழியர், உறுப்பினர்.
சிவசேனாவின் மூத்தத் தலைவர் ஆனந்த்திக்கேயுடன் அரசியல் கையாகி அவரது மறைவுக்குப் பிறகு படிப்படியாக சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாநில அமைச்சராகவும் ஆனார்.
பாஜகவுக்கு நேரடியான ஆட்சி என்று சொல்லிக் கொள்வதில் தயக்கமிருக்கிறது. சிவசேனாவின் செல்வாக்கை முற்றிலும் துடைத்தழிக்கும் வரையில் அது நேரடி ஆட்சிக்குக் காத்திருக்கவே செய்யும்.
சிண்டேயை முதல்வராக்கியதன் வழி தனது முன்னய ஆர்.எஸ்.எஸ். ஊழியருக்கு நியாயம் செய்துள்ளதுடன் அவரை முதல்வராக்கி ஒருவகையான பாஜக ஆட்சியை நிறுவிக் கொண்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் பாஜகவினரும் இடம் பெற உள்ளனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது மகாராட்டிர அரசியலை நேர்மையாகக் கைப்பறியிருப்பதுபோல பாஜக காட்டிக்கொள்கிறது. பாஜக மீது சிவசேனா தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வெறுபேற்பாடா வகையில் அது காய்களை நகர்த்த முயற்சிக்கிறது.
அமித்சா சொன்ன வாக்கை காப்பாற்ற தவறிவிட்டதாக உத்தவ் தாக்ரே இப்போதுக் குற்றம் சாட்டியிருயிருக்கிறார்.
மண்ணில் மைந்தர்கள் என்ற கோசத்துடன் மாராட்டிய சாம்ராஜியத்தைக் மீளக் கட்டியமைக்கும் கனவுடன் அரசியலில் நுழைந்தவர் பால்தாக்ரே. மாராட்டியத் தேசியத்தை பிற தேசிய இனங்களை வெளியேற்றுவதன் வழி தேர்தல் அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடித்தெடுத்தார். தமிழர்களைத் தாராவியிலிருந்து விரட்டியடிப்பது தொடங்கி தென்னிந்தியர்ளை வெளியேற்றுவது வரையிலுமான தூய ராஷ்டிரத்தை அமைக்க முயன்றார். மாராட்டிய இனதேசிய வழிப்பட்டோரின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், வட இந்தியப் பகுதியைப் பகைத்துக் கொள்ளாமல் பரந்துபட்ட தேசிய அடையாளமாக அவர் இந்துத்துவ அரசியலை ஏற்றார்.
காவி உடையும், உருத்திராட்ச மாலையும் குங்குமப் பொட்டும் பால்தாக்ரேவின் அடையாளமாக மட்டுல்ல இந்துத் தேசிய அடையாளமாகவும் மகாராட்டிரத்தில் அமைந்தது. தேர்தல் அரசியலுக்குள் மத உடையுடன் முதலில் நுழைந்தவர் பால்தாக்ரே. இன்றைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் போன்றவர்களுக்கு முன்னவராக அவர் இருந்தார்.
மராட்டியர்சேனா என்ற பெயரும், இனவழிப்பட்ட அரசியலும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் சத்ரபதி சிவாஜி கண்ட இந்து ராஜியமாவது எஞ்சியிருக்கும் ஆனால் பாஜகவின் இந்துத்துவ அரசியலையும் ராமராஜியத்தையும் முன்னெடுக்க சிவசேனா என்ற இன்னொரு பாஜக அரசியலில் தேவைப்படவில்லை என்பதையே சிவசேனாவின் ஆட்சி கவிழ்ப்புக் காட்டுகிறது.
அரை இந்துத்துவா, அரைப் பார்ப்பனியக் கட்சிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையே!
காவிக்கும், இந்துத்துவ அரசியலுக்கும் உரிமைக்கோர முற்றுரிமைக் கோர பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்கபரிவாரங்கள் இருக்கும்போது, புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனைகள் இனி தேவையில்லை என்ற மனநிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளதன் உபவிளைவே சிவசேனாவில் உள்ள இந்துத்துவர்கள் ஆட்சி கவிழ்ப்புக்குறித்து சற்றும் முனகாததாகும்.
மேலும் சிவசேனாவுக்குள் உள்ள இந்துத்துவா ஆதரவாளர் களாலேயே இந்தக் கவிழ்ப்பு அரசியலும் சாத்தியமா கியிருக்கிறது.
இனமா? மதமா? என்ற அரசியலில் மதம் வென்றிருக்கிறது.
சிவசேனா தனதுக் கட்சிக்குள் இனத்தை, அதாவது மண்ணின் மைந்தர்கள் என்ற இனத்துவத் தேசியத்தை அல்லது மத சார்பற்ற கொள்கையை முன்னிலைப்படுத்த, முன்னெடுக்கத் தவறியதன் விளைவு இது.
எப்படியாவது ஆட்சியில் இருந்தால் போதும் என்ற அதன் நிலைப்பாடு. தத்துவ ஊசலாட்டம். என சிவசேனாவின் எதிர்காலம் மக்களிடமிருந்து விலக்கி வைக்கவே உதவும்.
“எப்படியென்றாலும் பாஜக ஆட்சி அமைக்கவோ, முதல்வராகவோ முடியவில்லை. சிவசேனாவின் ஏக்நாத் சிண்டேதான் பதவியேற்றிருக்கிறார் இதில் என்ன மகிழ்ச்சியிருக்கிறது பாஜகவினருக்கு?” என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார் உத்தவ்.
சிவசேனாவின் இளைய தளபதியான உத்தவ்தாக்ரே மகனின் எம்.பி பதவியும் சிக்கலில் இருக்கிறது. இதற்காகவே மாநில பாஜக குடும்ப அரசியலை ஒழிக்கும் கோசத்தையும் முன்னெடுக்கிறது.
இருபுறத் தாக்குதலையும் சமாளிக்க வேண்டியவராக இருக்கிறார் உத்தவ்தாக்ரே.
இந்துத்துவாத் தன்னை வஞ்சித்துவிட்டதாகவும், மராட்டியத் தேசியத்தை முன்னெடுக்காமல் விட்டுவிட்டதற்காகத் தாம் வருந்துவதாகவும் உத்தவ் தாக்ரே பற்றியச் செய்தி ஒன்று உலவுகிறது.
“நான் ஒரு பக்கா இந்து. தீவிர இந்து (Staunch hindu) இப்படிச் சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். திமுக வுக்கும் சிவசேனாவுக்கும் உள்ளே வித்தியாசங்களில் இதுவும் ஒன்று. சிவசேனாவிலுள்ள நாங்கள் இந்துக்கள். திமுகவினர் அப்படிக்கூறிக் கொள்வதில்லை”. பால்தாக்ரே ஒருமுறை விகடனுக்கு(19.08.1973)அளித்த நேர்காணலில் இப்படிச் சொல்லியிருந்தார்.
பால்தாக்ரே குறிப்பிடும் இந்த வேறுபாடே திமுக வை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை உத்தவ் தாக்ரேயேயாவது புரிந்து கொண்டிருக்கிறாராத் தெரியவில்லை.
இதற்கிடையே தமிழகப் பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜகவே எடப்பாடிப் பழனிச்சாமியை முதல்வராக்கியதாக இப்போதுச் சொல்கிறார். அதாவது அதிமுக ஆட்சியைப் பாஜக நடத்தியதாகப் பொருள்.
பாஜக தலைவர் அண்ணாமலையாரோ ஒருபடி மேலே நின்று தமிழகச் சட்டசபை பிறிதொரு சிண்டேவுக்குக் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
சிண்டே அதிமுகவில் ஏற்கனவே இருக்கப்போகத் தற்போது அவர் திமுக குறித்துப் பேசுவதாகவே தோன்றுகிறது. அண்ணாமலை அவர்களின் கனவு பகல் கனவா என்பதைக் காலம்தான் உறுத்திபடுத்துவதாக இருக்கும்.