வெர்னெர் ஹெர்சாக்கின் நோஸ்பரேட்டு த வேம்பயர் : காதலென்னும் நிழலின் துயரும் பயங்கரமும்
ப்ராம் ஸ்டோக்கரின் நாவலான ‘’ட்ராகுலா’’ ,’’விலாடிஸ்லாவ்ஸ்கி டீபிஸ்’’ என்னும் முன்பு ருமேனிய அரசனாக இருந்து பின் ஒரு ரத்தக் காட்டேரியாக ஆனவன் பற்றிய புனைவு ஆகும். அவனை விலாட் த இம்பேலர் என்றும் கூறுவர் ஏனென்றால் அவன் எண்ணிலடங்கா இறையியலாளர்களை கூராகச் சீவிய, நிலத்தில் பதித்த வலுவான ஸ்டேக்(stake) எனப்படும் கட்டைகள் மீது எறிந்து கொன்றவன் என்பதால்.இவ்வாறு அவன் ஒரு கடவுள் எதிர்ப்பாளனாக வாழ்ந்தவன். இப்புனைவு மத்திய காலத்தில் கடவுள் மறுப்பாளர்களின் தேடல் சார்ந்த விவாதங்களையும் ,கேள்விகளையும் உள்ளடக்கியது என்பதால் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து எண்ணற்ற திரைப் படங்கள் இதன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு வந்தவை.மேலும் இப்புனைவு கவுண்ட் ட்ராகுலாவின் காதலின் ஆழம் பற்றியதும் ஆகும்.
பொ .ஊ.1462 ஆம் ஆண்டில், விளாட் தி இம்பேலர், ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு எதிரான போர் ஒன்றில் நீண்ட காலம் ஈடுபடுகின்றான். பின் இறுதியாக அவன் வெற்றி பெற்றுத் திரும்புகின்றான். அவனது மனைவி எலிசபெட்டாவிடம் முன்பே ஒரு தகவல் வந்து சேர்கின்றது. அவன் போரில் இறந்து விட்டான் என. அவனது மரணம் உறுதியானதென எண்ணி அவன் மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். திரும்ப வந்து சேரும் வ்லாட் டிபிஸ் தன் மனைவியின் மரணம் குறித்து வினவுகின்றான். தேவாலயத்தில் உள்ள பாதிரியார் அவனுடைய மனைவியின் ஆன்மா தற்கொலை செய்துகொண்டதற்காக நரகத்திற்குச் சென்றதாகச் சொல்கிறார். கோபமடைந்த விலாட், ‘’நான் உன்னைக் காக்கும் புனிதப் போரில் ஈடுபடிருந்த போது நீ எவ்வாறு என்னுடைய மனைவியைக் காத்து நிற்காமல் போனாய்’’ என்று கடவுளிடம் சினத்தோடு பொருதுகின்றார். பின் தேவாலயத்தைப் பழிப்பதோடு கடவுளையும் துறக்கிறார். இருளின் அனைத்து சக்திகளுடனும் எலிசபெட்டாவின் மரணத்துக்குப் பழிவாங்க, கல்லறையில் இருந்து தான் மீண்டு வரப் போவதாக அறிவிக்கிறார். பின்னர் அவர் தேவாலயத்தின் கல்லால் ஆன சிலுவையைத் தனது வாளால் ஆழச் செருகி, அதிலிருந்து ஊற்றெடுக்கும் இரத்தத்தைக் குடித்துப் பின் காட்டேரியாக மாறுகிறார்.இதனால் அவர் சாகா வரம் பெற்றவராக, தன் மனைவியின் மறு பிறப்பு நிகழ்வதற்காகக் காத்திருக்கின்றார்.
இது ட்ராகுலாவின் தோற்றம் பற்றிய அடிப்படையான புனைவு.
1897 ஆம் ஆண்டில், வழக்கறிஞர் ஜொனாதன் ஹார்க்கரின் வாடிக்கையாளராக, டிரான்சில்வேனியாவைச் சேர்ந்த கவுண்ட் டிராகுலா ஒரு நில விற்பனை ஒன்றுக்காக ஒப்ப்ந்தம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவருடைய சக ஊழியர் ரென்ஃபீல்டிடம் இருந்து அவர் இதற்கான ஆவணங்களைப் பெற்று ட்ராகுலாவைச் சந்திக்கச் செல்கின்றார். ரென்ஃபீல்ட் இப்போது டாக்டர் ஜாக் சீவார்டின் மன நலக் காப்பகத்தில் கைதியாக இருக்கிறார். லண்டனில் டிராகுலாவின் ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை மேற்கொள்ளச் செய்வதற்காக ஜொனாதன் ஹார்க்கர் டிரான்சில்வேனியாவுக்குச் செல்கிறார். ஜொனாதன் டிராகுலாவை சந்திக்கிறார், அவரது வருங்கால மனைவி (லூசி)மினா முர்ரேயின் படத்தை ட்ராகுலா ஜொனாதன் மாட்டியிருக்கும் டாலரில் இருந்து அங்கு காண நேர்கிறது. மேலும் ட்ராகுலா அவர் எலிசபெட்டாவின் மறுபிறவி என்று நம்புகிறார். டிராகுலா ஜொனாதனை அவரது ராணிகளின் கவனத்தில் விட்டு விட்டு அதே சமயம் அவர் டிரான்சில்வேனியாவின் மண் நிரம்பிய சவப் பெட்டிகளுடன் இங்கிலாந்துக்குச் செல்கிறார்.ரென்ஃபீல்டின் ஆழ் மன உணர்வுகள் ட்ராகுலாவின் வருகையை முன்னறிவிக்கின்றன.இது ட்ராகுலாவுக்கும் ஜொனாதனுக்குமான தொடர்பு பற்றி அனைத்துத் திரைப் படங்களிலும் அடிப்படையாக உள்ள புனைவு. இனி ஹெர்சாக் திரைப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.
திரைக் கதைச் சுருக்கம்: ஜொனாதன் ஹார்க்கர் ஜெர்மனியிலுள்ள விஸ்மர் என்ற ஊரில் வாழ்ந்து வரும் ஒரு நில விற்பனையாளர் மற்றும் வழக்கறிஞர். கவுண்ட் டிராகுலா என்ற பிரபு விஸ்மரில்(ஜெர்மனி) ஒரு சொத்தை வாங்க விரும்புவதாகவும், கவுண்ட் ட்ராகுலாவிடம் அவர் வசிக்குமிடம் சென்று இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க ஹார்க்கரை நியமிப்பதாகவும் அவரது முதலாளி, ரென்ஃபீல்ட் அவருக்குத் தெரிவிக்கின்றார். விஸ்மரில் தனது இளம் காதலி,மனைவியாகப் போகும் மினாவை விட்டுவிட்டு, ஹார்க்கர் ட்ரான்சில்வேனியாவுக்கு, கவுண்ட் டிராகுலாவின் கோட்டைக்கு, நான்கு வாரங்கள் நீடிக்கும் பயணத்தில், சொத்தைக் கவுண்டிற்கு விற்கத் தேவையான பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்கிறார். ஹார்க்கரின் காதலியும் வருங்கால மனைவியுமான லூசி/மினா இப்பயணத்துக்கு அதன் அபாயம் கருதி ஒப்புக் கொள்வதில்லை.அவரது பயணத்தில், இடையில் ஹார்க்கர் ஒரு கிராம விடுதியில் தங்க நேர்கின்றது. அங்கு உள்ளூர்வாசிகள் அவரைச் சபிக்கப்பட்ட,ட்ராகுலா கோட்டையிலிருந்து விலகி இருக்குமாறும் அங்கு செல்வது ஆபத்து மிக்கதாகவும் கூறிக் கெஞ்சுகிறார்கள்–அவருக்கு டிராகுலாவின் ரத்தப் பசி பற்றியும் ட்ராகுலா ஒரு மானுடன் அல்ல, ஒரு காட்டேரி என்றும் அது பற்றிய விவரங்களை வழங்குகிறார்கள். இது அவர்களின் மூடநம்பிக்கை என கிராமவாசிகளின் வேண்டுகோள்களைப் புறக்கணித்துவிட்டு, அவருக்காகக் காத்து நிற்கும் ஆட்கள் யாரும் செலுத்தாத, ஓநாய்கள் செலுத்தும் வண்டியில் ஏறி அவர் கோட்டைக்குச் செல்கிறார். ஹார்க்கர் இவ்வாறு தனது பயணத்தைத் தொடர்கிறார். போர்கோ கணவாயில் கால்நடையாக ஏறி இறுதியில் டிராகுலாவின் கோட்டைக்கு அவர் வந்து சேருகிறார், அங்கு அவர் பெரிய காதுகள், வெளிர் தோல், கூர்மையான பற்கள் கொண்ட விசித்திரமான, கூர்மையான விலங்குகளைப் போன்ற பற்கள் மற்றும் நீண்ட விரல் நகங்கள் கொண்ட ஒரு மனிதனைச் சந்திக்கிறார்.இரவு உணவு அவருக்கு அங்கு மிகச் சிறப்பாக அமைகின்றது என்றாலும் பழத்தை வெட்டும் போது ஹார்க்கரின் கையில் கத்தி பட்டுக் காயம் ஏற்படுகின்றது.அப்போது பேராசையுடன் ட்ராகுலா அவரின் கையில் வடியும் உதிரத்தை அவரது கையை வலுக்கட்டாயமாக இழுத்து உறிஞ்சுகின்றார்.பின் இச்செய்கைக்கு அவர் வருந்துகிறார்.இரவு உணவு முடிந்ததும் அவர் உறங்கும் போது அவரது டாலரில் உள்ள மினா– Mina Murray யின் படத்தைப் பார்த்து ட்ராகுலா அவள் மீது பெரும் காமம் கொள்கின்றார்.
கவுண்ட் மினாவின்/லூசியின் அந்தச் சின்ன உருவப்படத்தால் மயங்கி, உடனடியாக விஸ்மரில் இருக்கும் சொத்தை வாங்க ஒப்புக்கொள்கிறார், குறிப்பாக அவரும் லூசியும் அண்டை வீட்டாராக மாறுவார்கள் என்ற கனவுடன். ஜொனாதன் ஹார்க்கர் இந்த ஒப்பந்தங்கள் சார்ந்த நடவடிக்கைகளை நன்கு முன்னெடுக்கும் போது இரத்தக் காட்டேரியால் துன்புறுவது போன்ற கனவுகளை அவர் அன்று இரவு காண்கின்றார்.அதில் மெய்யாகவே அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டுத் துன்புறுகின்றார். அவ்வாறே அவர் இரவில் வேட்டையாடப்படுகிறார். அதே நேரத்தில், விஸ்மரில், லூசி/மினா இரவு நேரக் கொடிய உணர்வுகள், பயங்கரங்களால் துன்புறுத்தப்படுகிறார், வரவிருக்கும் அழிவின் காட்சிகளால் அவர் பாதிக்கப்படுகின்றார். ரென்ஃபீல்ட் இத்தருணத்தில் ஒரு பசுவைக் கடித்து விடுகின்றார். பிறகு, அவர் முற்றிலும் பைத்தியம் பிடித்ததாகக் கூறப் பட்டுக் கைது செய்யப் படுகின்றார். அவரோ மீண்டும் மீண்டும் ‘தன் தலைவன் வருகிறான்’ என்று பிதற்றுகிறார். அந்நிலையில் ட்ரான்சில்வேனியாவில் ஹார்க்கர் ,கவுண்ட் எப்போதும் ஒரு சவப்பெட்டியில் தூங்குவதைக் கண்டு திடுக்கிடுகின்றார். டிராகுலா உண்மையில் ஒரு காட்டேரி என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்கிறார். அன்றிரவு டிராகுலா தான் வசதியாக நித்திரை கொள்ளும் சபிக்கப்பட்ட பூமியின் மண் நிரப்பப்பட்ட பல சவப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு விஸ்மருக்குப் புறப்படுகிறார். ஹார்க்கர் தான் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, படுக்கை விரிப்பினைக் கிழித்து வடிவமைக்கப்பட்ட ஒரு தற்காலிகக் கயிறு கொண்டு ஜன்னல் வழியாகத் தப்பிக்க முயற்சிக்கிறார். கயிறு போதுமானதாக இல்லை, ஜொனாதன் ஹார்க்கர் கீழே விழுந்து தன்னைக் கடுமையாகக் காயப்படுத்திக் கொள்கிறார். மறுநாள் காலை, அவர் ஒருவாராகத் தப்பிக்கின்றார்;அப்போது ஒரு இளம் ரோமானியச் சிறுவன் வயலின் வாசிக்கும் சத்தத்தால் தூண்டப்பட்டு முழுமையாக அவ்விடம் விட்டு வெளியேறினாலும்,அவர் மனப் பிறள்வு கொண்டதாகக் கருதப் பட்டு இறுதியில் ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். அவர் மருத்துவர்களிடம் அவர்கள் வியப்புக்கு உள்ளாகுமாறு ‘கருப்பு நிறச் சவப்பெட்டிகள்’ பற்றி ஆவேசமாகக் கூறுகிறார்.
இதற்கிடையில், டிராகுலாவும் அவரது சவப்பெட்டிகளும் கருங்கடல் துறைமுகமான வர்னா வழியாகக் கப்பலில் விஸ்மருக்குப் பயணிக்கின்றன, அங்கிருந்து போஸ்பரஸ் மற்றும் ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக மேற்கு ஐரோப்பிய அட்லாண்டிக் கடற்கரையைக் கடந்து பால்டிக் கடலுக்குச் செல்கின்றன. அவர் கப்பலின் முழுக் குழுவினரையும் திட்டமிட்டுக் கொன்றுவிடுகிறார், அவர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போல் இதனைத் தோன்றச் செய்கிறார். பேய்க் கப்பல் அதன் சரக்குகளுடன் விஸ்மருக்கு வருகிறது, அங்கு மருத்துவர்கள் – ஆபிரகாம் வான் ஹெல்சிங் உட்பட – கப்பலின் விசித்திரமான நிலைமையை ஆராய்கின்றனர். பிளேக் நோயால் அவர்கள் உணர்ந்த துன்பத்தைக் குறிப்பிடும் ஒரு கப்பலின் பதிவை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஏற்றவாறு ,அங்கு எலிகளால் கப்பல் நிரம்பி உள்ளது. டிராகுலா தனது சவப்பெட்டிகளுடன் விஸ்மருக்கு வருகிறார், மேலும் நகரம் முழுவதும் மரணங்கள் நடக்கின்றன. தீவிர நோய்வாய்ப்பட்ட ஜொனாதன் ஹார்க்கர் இறுதியாக வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறார், ஆனால் அவர் இறுதியாக வரும் போது ,தனது மனைவியை அடையாளம் காண முடிவதில்லை. மினா பின்னர் கவுண்ட் டிராகுலாவைச் சந்திக்கிறார்.நோய்வாய்ப்பட்ட மினா சோர்வு பெருகி, மற்றும் சிறிது சிறிதாக உயிர் பிரியும் நிலையில் ட்ராகுலாவிடம் அவள் ஜொனாதனுக்கு கொடுத்த அன்பில் சிலவற்றைக் கோருகிறார், ஆனால், டிராகுலாவோ இதனால் திகைப்படைகிறார். முன்பு அமைதியான நகரத்தில் ஏற்பட்ட மரணத்திற்கு பிளேக் அல்லாத வேறு ஏதாவது காரணம் உள்ளது என்பதை இப்போது அறிந்த மினா, நகரவாசிகளை நம்ப வைக்கத் தீவிரமாக முயற்சிக்கிறாள். டிரான்சில்வேனியாவில் உள்ள இறையியலாளர்கள் ஜொனாதனுக்கு வழங்கிய புத்தகத்திலிருந்து ஒரு முக்கியக் கருத்தை அவள் காண்கின்றாள். விடியும் வரை டிராகுலாவின் தீமையைத் திசை திருப்புவதன் மூலம்—அவனது கவனத்தைத் திருப்புவதன் மூலம் ,அவளால் அவனைத் தோற்கடிக்க முடியும் என்பதே அது.விடியல் நேரத்தில் எழும் சூரியனின் கதிர்கள் அவனை அழித்துவிடும் என்பதை அவள் கண்டறிந்தாள். அன்று இரவு, அவள் கவுண்ட் ட்ராகுலாவை அவளது படுக்கையறைக்கு அழைத்துச் செல்கிறாள், அங்கு அவன் அவளுடைய இரத்தத்தைக் குடிக்கத் தொடங்குகிறான்.மேலும் மேலும் அவள் அவளது உதிரத்தைப் பருக, அதன் மூலம் அவன் விடிந்து கொண்டிருப்பதை மறக்க அவள் தூண்டுகிறாள்.
மினாவின் அழகும் தூய்மையும் டிராகுலாவை விடியலில் ,சேவலின் அழைப்பைக் காண்பதில் இருந்தும் திசை திருப்புகிறது, மேலும் பகல் முதல் வெளிச்சத்தில்,ட்ராகுலா தரையில் சரிந்து இறந்து விடுகின்றான். தான் வெற்றி பெற்றதைக் கண்டறிய வான் ஹெல்சிங் அங்கு வருகிறார். மினாவின் தியாகம் வீண் போகவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் கவுண்டின் இதயத்தில் ஒரு கூரிய மரத் தண்டு(stake) ஒன்றைச் செருகுகின்றார். ஜொனாதன் தனது நோயிலிருந்து விழித்துக்கொள்கின்றார், இப்போது இரத்தக் காட்டேரி, என்னும் கவுண்ட் டிராகுலாவைக் கொன்றதற்காக வான் ஹெல்சிங் கைது செய்யப் படுகிறார்.
இது ஜெர்மானிய ட்ராகுலாவின் கதை. இதில் மினா என்று நாயகியின் பெயர் உள்ளதை லூசி என்று மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள். மினா என்ற பெயர் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் வேம்பயர் படத்தில் கையாளப்படுவது. ப்ராம் ஸ்டோக்கரின் பாத்திரமும் அதுவே.
ஹெர்சாக்கின் கதையாடல்கள் அனைத்திலும் அமைந்துள்ள பொதுப் பண்பு, ஒரு நிகழ்ச்சி அல்லது நடவடிக்கை அங்கு முன்னும் பின்னும் ஆழ்ந்த மௌனங்களில் இருந்து துவங்குகிறது என்பதே.உதாரணமாக, நோஸ்பரேட்டில் ஹாக்கர் தன்னுடைய எஜமானரால் ட்ராகுலாவிடம் அனுப்பப்படுகிறார்.அகையர்(Aquire,the wrath of God) கதையிலும் ஒரு விபத்து என ஒரு குழு மறைந்த நகரைத் தேடிப் புறப்படுகிறது.(Signs of life) சயின்ஸ் ஆஃப் லைஃப்பில் ராணுவ வீரன் ஸ்டார்ஸ்கி இவ்வாறே ஒரு பயணத்தை துவக்குகிறான். இந்த எல்லாக் கதைகளிலும் கதையின் நடுவந்தரமான பாத்திரம் அல்லது நாயகன் ஒரு தரகன் அல்லது ஏஜெண்ட் என்கின்ற பானியிலேயே அமைந்து விடுகிறார்கள். அகையர், தன்னைக் கடவுளின் தூதன் மெசஞ்சர் என்று பன்முறை அழைத்துக் கொள்கிறான். குறிப்பிட்ட செய்திகளைக் கொண்டு செல்வது, குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பது என்பதே எல்லாப் பாத்திரங்களிலும் அடிப்படைக் கூறாக அமைந்துள்ளது. ஆனால் இந்த வேலையைத் தான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியை அவர்களும் கேட்பதில்லை, நாம் கேட்டாலும் அதற்கு பதில் இல்லை. ஹாக்கர் ஏன் ட்ராகுலா உடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்? அது அவனுக்கு இனித் தனக்கென ஒரு சொத்து சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் என்றாலும் அது அதற்கு மேல் இன்னும் நுட்பமான பொருள் அந்நடவடிக்கையில் என்ன என்று விளங்கவில்லை. ஒரு உரைநடையின் துவக்கம் மற்றும் வளர்ச்சி ஹெர்மன்யுடிக்ஸ் என்னும் ஆதி அந்தமற்ற நடவடிக்கைகளால் பின்னப்படுகிறது என்று சொல்வார் பார்த். ஹெர்மன்யுடிக்ஸ் (Hermeneutics) என்பது பொருள் கோள் இயல் என்று தமிழில் அழைக்கப் படும். பொருள் கோள் இயலில் புதிர்கள் வாசகனின் முன்பாக நீக்கப் படவேண்டியன. வாசகனின் கேள்விகளை இப்புதிர்களை நீக்கிப் படைப்பாளன் விளக்க முற்பட வேண்டும்.எனினும் இவை படைப்பின் புதிர்கள் ஆகையால் வாசகன் மற்றும் படைப்பாளி இருவரின் தேடலுக்கு உட்பட்டவை.இது படைப்பின் உறை நிலை.காலம் இங்கு அதே கதியில் உள்ளது;அசைவற்றதாக.
இந்தக் காலத்தின் உறைவு திடீரென்று பனிப்பாளத்தில் இருந்து சிதறிய பெருவெள்ளம் போன்ற எழுச்சி கதையாக மாறுகிறது இதனை ‘’ஷாமன் உணர்ச்சி, கதை சொல்பவன் மறைந்து கதை மட்டுமே தங்கும் நிலை’’ என்று பார்த் மேலும் கூறுவார். இதனுள் மாயங்கள் தம்மை உடன்படுத்திக் கொள்ளும் பொழுது ஹெர்சாக்கின் கதைகள் பிறக்கின்றன. தான் திரைக்கதையை வடிவமைப்பதற்குப் பிரமாதமான நோக்கம் எதுவும் இல்லை என்று ஹெர்சாக் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். ‘குழப்பமோ அல்லது ஒட்டுமொத்த உணர்ச்சிகளோ ஏதோ ஒன்று தன்னை ஒரு படைப்பை மேற்கொள்ளச் செய்கிறது’ என்றும் அவர் கூறுவார். எல்லாக் கதையாளர்களின் மையங்களும் கெர்னல்ஸ்(kernals) ஒரு பயணத்தின் துவக்கமாக அவரிடம் உள்ளன. அகையரில் எல்டரோடவை தேடிப் பயணம். நோஸ்ஃபெரேட்டுவில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பயணம். தேடிச் செல்லுதல் ஒரு முக்கியமான விடயமாக இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதனைப் புதிய உலகைக் கண்டுபிடிக்கும் அல்லது ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் ஒன்று,அல்லது பசுமையான உணர்வாக ஒன்று வரலாற்றுப் படுத்தப்படுவது அவைகளின் தன்மையாக இருப்பதை உணரலாம். பயணத்தை மேற்கொள்கின்ற ஒரு நபர் வெளியுலகில் இருந்து வருபவன். ஆகவே அவன் அந்நியன் அல்லது வழிப்போக்கன். மனிதன் உலகத்தைப் பற்றிய முதல் அறிவினைப் பெறுவது கதைகளின் மையக்கருவாக அமைந்துள்ளது. மெகல்லனின் உலகைச் சுற்றிய பயணம் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் முதலாவதாக அமைந்ததை இங்கு சொல்லலாம். மனிதர்கள் உலகைச் சுற்றி வரப் புறப்படுவது குறிப்பிடப்படுவது இதனை உறுதி செய்கிறது. பயணங்கள், ஹெர்சாக்கின் படங்களில் முழுக்க மனிதனின் ஆழமான அறிவியல் நுட்பங்களைத் தேடுவது குறித்த உள்ளடக்கம் மற்றும் அவற்றின் பிரச்சினைகள் சார்ந்ததாகும். தொலைதூரத்தைக் கண்ணூர்வது, தொலைதூரத்தை நோக்கிப் பயணம் செய்வது ஆகியன அறிவு தாக்கத்தின் முக்கியமான நடவடிக்கைகள். தொலைதூரத்தைப் பார்ப்பது ,தொலை நோக்கு என்ற வகைமை திரைப்படங்களில் லாங் ஷாட் மூலமாக விளக்கப்படுகிறது. இதனை அவருடைய எல்லாத் திரைப்படங்களிலும் காணலாம். ஷாட் என்பது தொலைநோக்கு மட்டுமல்ல, அது காலம் சுட்டி நிற்பதையும் காணலாம். இதனை நாம் டயக்ரணி(diachrony)என்ற வகைமையில் இல்லாமல்,காலம் சுட்டாமல் , காலம் வரலாற்றுப் பார்வையில் அல்லாத நிலையில் இருப்பது என்று புரிந்து கொள்ளலாம். மேலும் கையாளப்பட்டிருக்கிற அதீத எதார்த்த யுக்தி(surrealistic) எந்தக் காலத்தையும் துவக்குவதில்லை. பெரும்பாலும் கனவுகள் சம்பந்தப்பட்ட மனநிலை, எழுச்சி ஆகியனவே இவரது படைப்புகள் ஆதலால் காலம் உறைந்தே கிடக்கிறது. பெரும்பாலான படங்களில் காட்டும் நாட்டுப் பாடல், இன்று கதைகளில் வரும் சடங்குகள் அல்லது வழிபாடுகளைப் குறிப்பிடப் பயன்படுகிறது என்றாலும், அவை சினிமா என்கின்ற தளத்தில் காட்சிப் படிமங்கள் உடன் ஒன்றி விடுவதால் காலத்தைக் காட்டுவதில்லை.
நிரல் துவக்கக் குறியீடு (Proairetic code)என்பது குறிப்பிட்ட கேள்விகளை நேரடியாக எழுப்பாமல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இருப்பது. இது வெறுமனே முந்தைய நிகழ்வால் ஏற்படும் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் ஒரு செயலாகும்.
ஒரு வழியில் துவங்கி இன்னொரு வழியில் நிறைவுறும் பயணம் இடையில் உள்ள பல்வேறு இருப்பிடங்களில் நிறைந்து கிடைக்கிறது. ஆனால் இடங்கள் மட்டுமே இங்கே காலத்தைச் சொல்லக்கூடியதாக உள்ளன. ஹார்க்கர் பயணங்களின் நடுவே பல்வேறு மாயத் தன்மையுள்ள இடங்களைக் கடந்து செல்கின்றான். மேலும் இடைவெளிகள், ஓடுகின்ற காட்டாறுகள், தொடர்ந்த யுத்தம், எக்காலத்திற்கும் மேலாக அழியாத வேட்கை போன்ற உணர்ச்சிகளாலும் இத்தகைய பயணங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. எந்த இடத்திலும் இறந்த காலம் என்று ஒன்றே இல்லை. இது போன்ற யுக்தி மணி கவுலின் படங்களில் நிழல் பிம்பங்களாக வெளியிடப்படுகின்றன. காட்சிப் படிமங்கள் மற்றும் நிலம் சார் பிம்பங்கள் குறிப்பிடத்தகுந்தவை. படத்தில் குறிப்பாக சோகம் மற்றும் தனிமை உணர்ச்சி கருப்பு வெள்ளை நிறத்தாலும், மழை சூழ்ந்த ஒளி குறைவான ஒளி குறைந்த இடங்களாலும் ,நகரின் பழைய கற்கால கோட்டைகளாலும், விஸ்மர் படகுத்துறையின் பனி படர்ந்த காட்சிகளாலும் இன்னும் டிராகுலாவின் சோகத்தாலும் இவை சித்தரிக்கப்படுகின்றன. படத்தில் ஹாக்கரின் பயணம் எல்லாச் சிக்கல்களையும் துவங்குகிறது. ஆகவே அது கெர்னல் என்னும் முடிச்சு. டிராகுலாவை அவன் சந்திப்பது கதையின் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றது. அதுவே ,பிளேக் நோயால் நகரில் பல இளம் பெண்கள் கொல்லப்படுவது ,திருச்சபையின் இறையியல் சர்ச்சைகள்,கருத்து மற்றும் பொருள் முதல்வாத முரண்கள் அத்தனைக்கும் இட்டுச் செல்கிறது.
இடது புறம், இடது பக்கம் ஆகிய வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவரது தொலை நோக்குக்காட்சிகளில் உள்ளன. உதாரணமாக காயம் அடைந்த இடது பசுக்களின் கண்கள்.போலவே, இடது பக்கம் இருந்து இறுதிக்காட்சியில் ஹாக்கர் குதிரை மேல் ஏறிப் பயணம் செய்கின்றான். இவைகளை லாங் ஷாட்டில் கொடுக்கும் பொழுது ஒரு தொலைநோக்கு இங்கே வெளிப்படுகிறது என்றாலும் இதனை ஒரு நேர்கோட்டுக் காட்சி அமைப்பாகச் சொல்வதை விட அதன் உள்ளடக்கம் டயக்ரானி என்ற குத்துக் கோட்டுக் காட்சியாகக் தான் சொல்ல வேண்டும்.
ஹாக்கர் சந்திக்கும் இடைவெளிகளில் ஹாக்கருடன் சம்பந்தப்பட்டவை வெறும் இயற்கையே. அங்கெல்லாம் காலம் இயக்கமாக உறைந்து கிடைக்கிறது. காலம் அங்கு நிகழ் தன்மை கொண்டு இயங்குகின்றது, அதற்கு எந்த வரலாறும் இல்லை.ஏற்கனவே கூறியது போல காட்சிகள் மனதின் உருவகத்தைப் பிரதிபலிக்கவே செய்கின்றன, அவை காட்சிகளின் தொடர்ச்சியாக ,இயக்கமாக இல்லை. உதாரணமாக ஹாக்கர் ஒரு அருவியைக் கால்நடையாகக் கடந்து செல்கிறார். அவ்விடத்தில் நீர்வீழ்ச்சியானது வெந்நிறப் புடவைகள் ஒவ்வொன்றாகக் தொடர்ந்து கீழே விழுவதைப் போன்ற ஒரு உருவகமாகக் கிடைக்கிறது. இது நீர்வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் படம் பிடித்ததால் ஏற்பட்டதா இல்லை அதன் இயல்பே அது தானா என்று ஐயத்தைக் கிளப்புகிறது. மேலும் மேகங்கள் ஒரு நேர்கோட்டில் நகர்கின்றன.இக்காட்சிகள் காலத்தின் தொடர்ச்சியை வலியுறுத்துவதில்லை. படத்தில் எந்த விதமான பேன் ஷாட் உத்திகளும் இல்லை அதனால் இயக்கத்தை அங்கு படம் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்று தெரிகிறது. பாஸ் ஃபைண்டர் இடம் காணப்படும் காலத்தின் இயக்கம் இவரிடம் இல்லை .கேமரா ஒரு பேராசை கொண்டு காட்சிகளை உள்வாங்க முயல்வதற்கு இதுவே காரணம். ஒரு காட்சி மற்றொரு காட்சி நகர்த்தும் யுக்திகள் இவரது படங்களில் நிச்சயமாக இல்லை.படத்தின் துவக்கம் ஒன்றும் முடிவு ஒன்றும் உள்ளது.இது காலத்தைக் காட்டுகின்றது என்றாலும் இடையில் உள்ள காட்சிகள் தம்மளவில் உருவகமாகப் பொருள் தருகின்றன.இதனை நாம் காலம் என வகைப் படுத்த முடியாது.
ஆனால் ஒரு இடத்தில் காலம் தன்னை தன்னுடைய இருத்தலைக் காண்பிக்க முற்படுகிறது. அதாவது ஹாக்கர் ஊருக்குத் திரும்ப முற்படும்பொழுது அவர் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உடனே அடுத்த காட்சி அவர் வந்து சேருவதைக் காட்டுகிறது.இங்கு காலம் உள்ளது.இறுதிக் காட்சியில் அவர் ஒரு குதிரையில் ஏறி வேகமாகச் செல்கிறார். அது ஒரு பரந்த வெளி அந்த இடத்தில் பாத்திரம் இடப்புறம் இருந்து வலப் புறம் செல்கின்றது. இது ஒரு லாங் ஷாட். நோஸ்பரேட்டுவில் பல்வேறு விதமான டிராகுலா வடிவங்கள் படத்தின் துவக்கத்தில் காண்பிக்கப்படுவதால் அது ட்ராகுலாவின் அழகியலையும் கூறுகின்றது. வாக்னரின் இசை அரங்கு முழுதும் அப்போது நிரம்புகிறது. படத்தின் மொத்த கதையாடலும் அதில் இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். படத்தில் நிறைந்துள்ள ஒலிகள் கசியும் வண்ணம் உள்ளன. அவை நிச்சயமாக சோகத்தை வலியுறுத்துகின்றன.
வெர்னெர் ஹெர்சாக் ஜெர்மானியத் திரைப் படங்களை உருவாக்கிய மேதை. மூனிக்கில் இருந்து பாரிசுக்கு சினிமா வரலாற்றாசிரியரான லோட்டா ஐனரைச் சந்திப்பதற்காக 1974 ஆம் ஆண்டு கால் நடையாகவே இத்தூரத்தைக் கடந்தவர். கேன் திரைப்பட விருதுகளை இருமுறை வென்றவர். திரைப் படங்களை உருவாக்கக் கடினமான முயற்சிகளை மேற்கொண்டவர். உதாரணமாக நொஸ்ஃபெரேட்டு படத்துக்காக ஆயிரம் எலிகள் வெள்ளையடிக்கப்பட்டன. ஃபிட்ஸ்கரோல்டோவிற்காக உயர்ந்த பகுதியின் மீதில் கப்பல் ஒன்று இழுத்துச் செல்லப் பட்டது. இவர் திரைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்.