தமிழுக்கு சமணத்தின் கொடை
(தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு நூலை முன்வைத்து)
வடக்கிலிருந்துத் தமிழகத்திற்கு வந்தவர்களில் பௌத்தர்களும், சமணர்களும் மட்டுமே தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருங்கொடை அளித்திருக்கின்றனர். அவர்களுடைய பங்களிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறுத்துவிடவோ, மறந்துவிடவோ இயலாது. தொல்காப்பியம் தொடங்கி, சமணர்கள், தமிழ் இலக்கியத்திற்கு அளித்த நூல்களையும், அவற்றின் காலத்தையும், அவைபற்றிய செய்திகளையும் ஆய்ந்து அறிந்து தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இந்நூலில் மிகவும் நேர்மையுடன் பதிவுசெய்திருக்கிறார். நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல அரிய செய்திகளையும் இந்நூல் நமக்குத் தருகிறது.
ஐரோப்பியர்களைப்போல, சமணர்களும் அந்தந்தப்பகுதி பொதுமக்கள் பேசிய
மொழியிலேயேத் தங்கள் சமயக் கருத்துகளை மக்களின் இளமைமுதல்
பரப்பியதால், அம்மக்களின் தாய்மொழியை வளர்த்த பெருமையும், ஆராய்ந்த
சிறப்பும் சமணர்களுக்கு உண்டு என்று தெ.பொ.மீ. கூறுவதில் மிகை இல்லை.
துறவிகளை ‘ஸ்ரமணர்’ என்பர் .அதுவே சமணர் என்றும், அமணர் என்றும்
தமிழில் மாறிவந்திருக்கிறது. கடவுள்நிலை அடைந்த ஜீனர்களை ‘அருகர்’ என்று
வழங்குவது தமிழின் சிறப்புவழக்கமாக இருந்திருக்கிறது. அதனால்
சைனர்களை, ‘ஆருகதர்’ என்று குறிப்பிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது.
ஒன்றிலும் தோயாதப் பற்றற்ற நிர்க்கந்த நிலையே – நிகண்ட நிலையே-கடவுள்
நிலையாகக் கருதப்பட்டு, சைன மதத்தினை நிகண்ட வாதம் என்றும்
அழைத்திருக்கின்றனர். அசோகம் அல்லது பிண்டி மரத்தின் அடியில்
இருப்பதாக அருகரைப் போற்றியதால், சைனர்களைப் ‘பிண்டியர்’ என்றும்
கூறியிருக்கின்றனர். இல்லறத்தை மேற்கொண்ட சைனர்கள், ‘சாவகர்’
எனப்பட்டிருக்கின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் தமிழ்நாடு வந்து, தமிழில் எழுதி,
தமிழிலேயேத் தங்கள் கொள்கைகளைப் பரப்பியிருக்கின்றனர்.. இன்று சமணம்
தமிழ்நாட்டில் அருகியிருந்தாலும், ஒருகாலத்தில் தமிழகம் முழுவதும் சீரும்
சிறப்புமாகப் பரவியிருந்தது என்பதற்கு, கல்வெட்டுக்களும், வயலோரத்திலும்,
மூலைமுடுக்கிலும் காட்சியளிக்கும் சமண விக்கிரகங்களும், அமணப்பாக்கம்,
அருகத்துறை, நமணசமுத்திரம், ஜீனாலயம், பஞ்சபாண்டவமாலை, அமணகுடி, சமணர்திடல், சமணமலை, அருகமங்கலம், பஸ்திபுரம் என்னும் இடங்களின்
பெயர்களும், சைன மடத்தின் பெயராகிய பள்ளி என முடியும் இடப்பெயர்களும்
சான்றுபகர்கின்றன. சம்பந்தரது காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டோடு
தமிழ்நாட்டுச் சைன வரலாற்றில் முதல் பருவம் முடிகிறது எனலாம்.
திராவிட சங்கம்:
கன்னட நாட்டில் அரசையே நிலைநாட்டியவர்கள் சைனர்கள். அவர்கள்,
களப்பிரர் ஆட்சியோடு தமிழகம் வந்து பெருகியதாக நம்பலாம். கி.பி. 470-இல்
வச்சிர நந்தி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்னும் செய்தி,
கி.பி. 933-இல் வெளிவந்த தேவசேனரின் தர்சனசாரம் என்னும் நூலில்
காணப்படுகிறது. திராவிட சங்கத்தில், தேவர், சேனர், வீரர் (சிம்ஹர்), நந்தி
என்ற பெயருடையவர்களெல்லாம் வாழ்ந்தார்கள் எனச் சம்பந்தர், சுந்தரர்,
முதலியோர் பாடல்களால் அறியப்படுகிறது. திருப்பாதிருப்புலியூர், பாடலிபுரம்
என்ற பெயருடன் அப்பர் காலம் வரையிலும் சிறந்திருந்தது. அங்குள்ள சமண
நிலையத்தில், ,கி.பி. 458-இல் காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் காலத்தில்
சர்வ நந்தி என்பவர் லோகவிபாகம்’ என்ற நூலை எழுதியதாக தேவசேனரின்
‘தர்சனசாரம்’ நூல் கூறுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டோடு, தமிழகத்தில்
சமணத்தின் முதல் பருவம் முடிவுக்கு வரலாயிற்று. அதன்பிறகு, திராவிட
சங்கம் தலைமை பெறாது ஒடுங்கியதால், கன்னட நாடு சமணத்தின்
உயிர்நிலையாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து பலர் சிரவனபெள்குளத்திற்குச் சென்றனர்.. திராவிட சங்கம்,
திராவிட கணம் என்னும் அளவில் சுருங்கிவிட்டது. அர்த்தபலியின்
மானவர்களான பூதபலி, புட்பதந்தர் என்போரும், சிந்தாமணி, சூளாமணி
ஆசிரியர்களும் சிறப்போங்கியமையால், தமிழ்நாட்டில் மீண்டும் சமணம்
சிறப்படைந்தது. அதனால், திராவிட கணம், மீண்டும் திராவிட சங்கம் என்று
பேசப்படலாயிற்று.
பௌத்த சங்கம், சமண சங்கம் என்பவை அந்தந்த மதத்துறவிகளின்
கூட்டத்தைக் குறிப்பனவாகும் தமிழ்ச்சங்கம் என்னும் வழக்காறும் இதனை
ஒட்டி எழுந்ததாக நம்பலாம்.
திராவிட சங்கம் என்ற ஒன்று கன்னட நாட்டுக் கல்வெட்டில் காணப்படுகிறது.
அங்கே அது திரமிள சங்கம் என்று குறிக்கப்பட்டுள்ளது (E.car.Vol.V HassanTq 131.
Epecarn Vol. IV Gundlowpet tq. No. 27 & page 40).
கி.பி. 470-இல் வச்சிர நந்தியால் மதுரையில் உருவாக்கப்பட்ட திராவிட சங்கம்,
பழைய தமிழ்ச்சங்கம் அன்று. ஆயினும், இந்த சமணச்சங்கம் தமிழை
வளர்த்ததால், தமிழ்ச்சங்கம் என்று கூறத்தக்கதே என்கிறார் தெ.பொ.மீ.
திருவள்ளுவரும், சமணமும்:
திருக்குறளில் காணப்படும் பல கருத்துகள் அப்படியே சங்க இலக்கியங்களில்
காணப்படுகின்றன.. சான்றாக “செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென்” என்பது
புறப்பாட்டு. “உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது குறள். “ ஈன்ற
ஞான்றினும் பெரிது வன்” என்று பாடுகிறார் நச்செள்ளையார். “ஈன்ற பொழுதிற்
பெரிதுவக்கும்” என்பது குறள். இதுபோல பல சான்றுகளைச் சுட்டிக்காட்டி,
திருவள்ளுவரின் காலம், சங்கம் மருவிய காலம் என்றும், தேவர், நாயனார்
என்பன வள்ளுவரைக் குறிக்கும் சமணப்பெயர்களே என்றும் சொல்லி,
திருவள்ளுவரைச் சமணர் என்று அடையாளப்படுத்துகிறார் தெ.பொ.மீ.
திருவள்ளுவர் ஏலேலசிங்கரது ஆசிரியர் எனவும், வள்ளுவர் அருளால் ஏலேல
சிங்கரது கப்பல்கள் கரையேறின என்றும், “ஏலேலோ, ஏலரா” என்று இன்றும்
வண்டி இழுப்பவர்கள் பாடி வருவது இதனாலே என்றும் கதைகள்
வழங்குகின்றன. பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் கொள்கைப்படி ஏலாசிரியர்
என்ற சமண முனிவரே திருக்குறளை இயற்றினார் என்று சமணர்களிடையே
பரம்பரையாகச் சொல்லப்பட்டுவரும் கதையும் உண்டு. வள்ளுவர் காலம் கி.பி
இரண்டாம் நூற்றாண்டு என்று கணிப்போரும் உளர்.
“எல்லா மதங்களின் முரணில்லா முழு நிலையும், எல்லாச் சமயங்களின்
குறைவு இல்லா நிறைவும் ஒருங்கு தோன்றுமிடம் திருக்குறளேயாம். இங்கு
அன்பே உயிர்நிலை என அமைந்து இல்லற வாழ்வை இயக்குகிறது” என்கிறார்
தெ.பொ.மீ.
“அரசியல் சூழ்ச்சி எல்லாம் அறிவார் வள்ளுவர். ஆனால், வெற்றி ஒன்றே
கருதி அறத்தினை மறுக்கும் இழிதகைமை இங்கில்லை. முடிவே போல
முடிவினை நோக்கிச் செல்லும் வழியும் தூயதாதல் வேண்டும்.
வினைத்தூய்மை என்று ஓர் அதிகாரமும் உண்டு”
“காம சாத்திரத்தை உயர்ந்த குறிக்கோளுடையதாக வேறு யாரும்
எழுதினாரில்லை. பழைய தமிழர் கூறிய பரத்தை வாழ்வில் எழும்
பிணக்கினை மருதமாகக் கூறாமல், வெவ்வேறு வளர்ந்த இரண்டு உள்ளங்கள்
படிப்படியே ஊடாடித் தட்டுத்தடுமாறி ஒன்றாய்க் கூடுவதனையே மருதமாகக்
கூறி புதியதொரு புரட்சி செய்துள்ளார், வள்ளுவர்”
பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சமண நூல்கள்:
சமண இலக்கியப் போக்கு மூன்றுவிதமாக அமைந்திருந்தது.
தொல்காப்பியம்போல, இலக்கணத்தைத் தமிழ் கற்போர் புரியும் வண்ணம்
எழுதுவது ஒரு போக்கு. இரண்டாவது போக்கு, பாச் செய்யுளும், உரைச்
செய்யுளுமாகப் படிப்போர் உள்ளத்தைக் கவரும் விதத்தில் உண்மையான
இலக்கியம் படைத்தல். மூன்றாவது இலக்கியப் போக்காக, சமணர்கள்
தங்களின் அடிப்படைக் கொள்கையான அறத்தை எடுத்துரைக்கும்
அறநூல்களைப் படைத்தலைச் சொல்லலாம்.
பின்னாளில் தோன்றிய ஔவையார் பாடல்கள், நன்னெறி, நீதிநூல், நீதிநெறி
விளக்கம் போன்றவை சமண அற நூல்களின் அடிச்சுவட்டில் எழுந்தவையேயாம்.
நெடுங்கணக்கு, கணக்காயனார், சமயக்கணக்கர் முதலிய வழக்குகளில், நூல்
என்ற பொருளில் கணக்கென்ற சொல் பயன்படுவதை உணரலாம்.
எழுத்துக்களை வரிசையாக நெடுக எழுதும் அரிச்சுவடியை
நெடுங்கணக்கென்பர். பல அடிகளாலன்றி, சிறு செய்யுட்களாக
வருவனவற்றைச் சாத்திரம் போலவோ கதை போலவோ தொடர்ந்து வராமல்
ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வொரு கருத்து முடிவதாக அமைந்தவற்றைக்
கீழ்க்கணக்கென்பர். அடி நிமிர்ந்து வருவனவற்றைப் பன்னிருப் பாட்டியல்
மேற்கணக்கென்று வழங்கினர்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் என்று கூறிக்கொள்வதோடு, பதினெண் கீழ்க்கணக்கில்
பாடிய புலவர்களில் பெரும்பாலோர் மதுரையில் வாழ்ந்தோ, மதுரையில்
கல்விகற்றோ, பாண்டிய நாட்டில் கல்விகற்றோ வந்தவர்கள் என்பதாகவேத்
தோன்றுகிறது.
திரிகடுகம், நான்மணிக்கடிகை, நாலடி, பழமொழி, இன்னா நாற்பது
முதலியவற்றை முன்னெழுந்த நூல்களென்றும், மற்றவைப் பின்னெழுந்தவை
என்றும் சிலர் கொள்வதுண்டு.
நாலடி நானூறு சைன முனிவர்கள் பலர் எழுதியவற்றைத் தொகுத்ததே. கருப்பு
வந்தபோது, பாண்டியனைப் பிரிந்து செல்லும் துறவிகள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பாட்டு எழுதியதில், அழிந்தவை போக நின்றவையே ‘நாலடி
நானூறு’. இதன் சிறப்பினைப் பாராட்டிய போப் இதனை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திருக்கிறார்.
பல்லவதரையர் என்பதுபோல பாண்டியதரையர் என்று வருதலால் தமிழ்
நாட்டு மூவேந்தரையும் உள்ளிட்டு முத்தரையர் என்றொரு பட்டம்
வழங்கிவந்துள்ளது.
பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி உள்ளிட்ட கீழ்க்கணக்கு நூல்களும்
உள்ளன. இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடுகை,
ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, முதலியன சமணர்களால்
செய்யப்படவில்லை என்றாலும், சமணக்கொள்கைக|ளைப் பொதுநோக்காகக்
கொண்டு எழுதப்பட்டவை எனலாம்.
இந்நூல்களில் காலத்தின் கொடுமையைக் காணமுடிகிறது. “தோற்கன்று காட்டிக்
கரவாற் கறந்தபால் பாற்பட்டார் உண்ணார்” என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
கருச்சிதைத்தலும், குழவி இறத்தலும் அந்நாளைய வாழ்வின் நெருக்கடியால்
நிகந்ததுபோலும். “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” என்னும் இனியவை
நாற்பதும், “ஈன்றெடுத்தல், சூல் புறஞ்செய்தல்” , “கலங்காமைக் காத்தல்
கருப்பஞ் சிதைந்தால்” என வரும் சிறுபஞ்சமூலம் வரிகளும் அன்றைய
நிலையை உனர்த்துகின்றன.
தகப்பனின் பொருள் அவன் பிள்|ளைக்குப் போகின்ற முறையானது, சமணர்கள்
வழியாகவே தமிழ்ச்சமூகத்திற்கு வந்திருக்கவேண்டும் என்று யூகிக்க இடம்
உள்ளது. சமணர்கள், பௌத்தர்களைப்போலவே, மக்களுக்கு உண்டியும்,
உறையுளும், கல்வியும் கொடுத்ததோடு, பிணி தீர மருந்தும் வழங்கி
வந்திருக்கின்றனர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போலவே, மேலும் பல சமண நூல்கள் அறம்
உரைத்திருக்கின்றன. சிறுவர் இலக்கியம் என்று இப்போது நாம் பேசி
வருகிறோம். ஆனால், அப்போதே சமணர்கள் குழந்தைகளுக்கான அறம்
உரைக்கும் நூல்களைப் படைத்திருக்கின்றனர். கிளி விருத்தம், எலி விருத்தம்,
நரி விருத்தம் ஆகிய நூல்கள் சிறுவர்களுக்கு அறம் உரைக்கும் சமண நூல்கள்
என்பது தேவாரத்திலிருந்துத் தெரியவருகிறது.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்:
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், கோவலனும் சாகும் வரையிலும் சமண
வாழ்வு வாழ்கின்றனர். இவர்களது வாழ்வைக் கண்காணிக்கவரும் கவுந்தி
அடிகளும் சமண வாழ்வு வாழ்கிறார். சாரணர் நிகழ்த்தும் நீண்ட உரையும்
சமணக்கொள்கைகளே. இளங்கோவடிகள் அருகன் கோயிலில் அரசு துறந்து
இருந்தார் என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார். எனவே
சிலப்பதிகாரத்தைச் சமண காவியம் என்றும் சொல்லலாம்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளின் தொடரே மணிமேகலைக் காப்பியம்
எனலாம். பொதுமகள் குலத்தில் தோன்றிய பெண் உலகினை உய்விக்கும்
துறவியாய் உயர்வதனை மணிமேகலைக் காப்பியத்தில் காணலாம். நாளந்தாப் பல்கலைக்கழகத் தலைவர்களான திங்நாகரும், தருமபாலரும் கண்ட தருக்க
நெறியின் மொழிபெயர்ப்பாக வரும் பகுதிகளும் மணிமேகலையில் உண்டு.
வாத காப்பியங்கள்:
குண்டலகேசி பௌத்த நூல். ஆனாலும் அது நீலகேசி போன்ற சமண நூல்கள்
எழுவதற்குக் காரணமாய் இருந்திருக்கிறது. மணிமேகலை பிற மதத்தாரோடு
வாதம் செய்யாமல் ஒதுங்கி விடுகிறாள். ஆனால் அதற்குப் பின்பு எழுந்த
நூல்களான குண்டலகேசி, பிங்களகேசி, நீலகேசி என்று ‘கேசி’ என முடியும்
காப்பியங்கள் அனைத்துமே பிற மதத்தாருடன் வாதம் செய்யும் காப்பியங்களே.
குண்டலகேசியை மறுப்பதற்காக எழுதப்பட்டதே நீலகேசி. குண்டலகேசி,
வளையாபதி, பெருங்கதை,, சீவகச்சிந்தாமணி, சூளாமணி போன்ற
சமணக்காப்பியங்கள் பெரும்பஞ்சக் காவியங்கள் எனப்படுகின்றன.
சிறுகாப்பியங்கள்:
யசோதர காவியம்,, சிறு புராணம், சாந்தி புராணம், ,நாரத சரிதை, மேரு மந்திர
புராணம்.
சமணப் பெண் கவிகள்:
குரத்திகள் என்று சமணப் பெண் துறவிகள் அழைக்கப்பட்டதாகக்
கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. ஆயாங்கனைகள்,
இயக்கிகள், கவுந்திகள் என்ற பெயர்களும் இவர்களுக்கு இருந்திருக்கிறது.
இப்பெண் துறவிகளுக்கு ‘ஔவை’ என்னும் பெயரும் இருந்ததாக
சிந்தாமணியிலிருந்து அறிய முடிகிறது. தமிழில் ஔவையார் பாடல்கள் என
வழங்கும் அற நூற்களில் சில இப்பெண் துறவிகளின் பாடலாகவும்
இருந்திருக்கலாம்.
கந்தி, அம்மை, கன்னி, பைம்மை, சாமி, பெருமாட்டி, ஆசான், தலைவி, ஐயை
என்பன சமணப்பெண் துறவிகளின் பிற பெயராகும்.
பரணிகள்:
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்திலே வென்ற வீரனைப் பாடும் நூலே
பரணி ஆகும். சோழர்கள் வெற்றியை எல்லாம் கொப்பத்துப் பரணி, கூடல்
சங்கமத்துப் பரணி, குலோத்துங்க சோழன் காலத்தில் கருணாகரத்
தொண்டைமான் கலிங்கத்தின் மேல் படையெடுத்து வென்ற கலிங்கத்துப்
பரணி, விக்ரம சொழன் கலிங்கம் வென்ற கலிங்கத்துப் பரணி எனப் பலப்
பரணிகள் பாடப்பட்டுள்ளன. அவற்றுள், ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே, இன்றும் நின்று நிலவும் பரணி ஆகும். ஜெயங்கொண்டார் தீபங்குடியைச் சேர்ந்த சமணர்.
பிரபந்தங்கள் – பக்திப் பாடல்கள்:
பல்லவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் பக்திவெள்ளம் எங்கும் பரந்தோடியது.
சைவமும், சமணமும் சம காலத்தில் வளர்ச்சிகண்டிருக்கின்றன. தேவாரம்,
நாலாயிரம் போன்ற பக்தி இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. சமயப்
பிணக்குகள் எழுந்திருக்கின்றன. என்றாலும் அக்காலகட்டத்தில், மேனாட்டு
சமயப்போர் போல இங்கு எதுவும் எழவில்லை. திருநாவுக்கரசர் சமணராக
இருந்து, பின் சைவராக மாறியவர். சமண மத அடிப்படைக்கொள்கை எல்லாம்
திருநாவுக்கரசர் பாட்டில் சைவக் கருத்துகளாக மாறியுள்ளன.
விஜயநகர ஆட்சியில், வீர சைவர்களும், சமணர்களும் தம்மிடையே பல
தகராறுகள் எழுந்தபோதும், ,, ஒத்து வாழ்ந்ததோடு, வீர சைவர்கள் சமணர்களை
எதிர்த்தவர்களை சிவனுக்கும், சங்கமர்களுக்கும் துரோகிகள் என்று
முடிவுசெய்ததாக ஒரு கல்வெட்டு (EC.Vv/128) கூறுகிறது. சைவ விக்கிரகங்களும்,
சமண விக்கிரகங்களும் ஒருங்கு அமையத்துவங்கின. (Mysore E.R. 1925 p15 )
பல சமணப் பெரியோர்கள் பழைய தமிழ் நூல்களைப் போற்றிப் பாதுகாத்து
வந்தார்கள். வைதிக அந்தணரான நச்சினார்க்கினியர் சமணராய்ச் சிந்தாமணிக்கு
பொருளறிந்து உரை எழுதினார் என்னும் செய்தியும் வழங்கி வருகிறது.
இந்தப்பரம்பரை, தமிழ்நாட்டில் தொடர்ந்து விளங்கி வந்துகொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இந்நாளையப் பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார்
விளங்குகிறார், அவருடைய தந்தையார் அப்பாசாமி நயினார் வழியேதான்
சாமிநாத ஐயர் முதலியோர் சைனப் பெருநூல்களையும், விளக்கங்களையும்
பெற்றார்கள்.
சைனப் பெண்மணிகளும் சம|ண இலக்கிய அறிவில் தலைசிறந்து
விளங்கினார்கள் என்றும், கணவனோடு கும்பகோணத்தில் வாழ்ந்த ஓர்
அம்மையாரிடம் இருந்து, தாம் பல நுட்பங்களை அறிந்துகொள்ள
முடிந்ததென்றும் சாமிநாத ஐயர் கூறுகிறார். சைன இலக்கிய ஆராய்ச்சிக்கு
தாமோதரம் பிள்ளையும், சாமிநாத ஐயரும் செய்த உதவியை மறக்க முடியாது.
வசனம், இலக்கணம், நிகண்டு:
கிறித்துவர்கள் எழுதத்தொடங்கிய பிறகே, தமிழில் வசன நூல்கள்
இலக்கியமாக அமைந்தன. ஆனாலும், கி|றித்துவர்கள் எழுதத்தொடங்கிய
காலத்திற்கு முன்பே ஸ்ரீ புராணம் என்னும் சமண உரைநடை நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்திருந்தது.
தமிழோடு பிறமொழி கலந்து எழுதுவது, மணி பிரவாளம் ஆகும்.
தமிழுக்கு இலக்கணப் பெருமையைத் தந்தவர்கள் சமணர்களே எனலாம்.
நிகண்டுகள் ஒரு மொழியை அறிவார்க்குப் பெரிதும் துணைசெய்வன. இந்தத்
துறையிலும் தமிழை வளர்த்தவர்கள் சமணப்பெரியோரே என்று கூறலாம்.
கணக்கு, சோதிடம்:
தமிழில் கணக்கு, சோதிடம் பற்றிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும்.
கணக்கதிகாரம் போன்ற நூல்கள் ஒருசிலவே நம் கைக்கு எட்டியுள்ளன.
எண்ணைப் பற்றிய நூலிலிருந்து எடுத்துக்காட்டு ஒன்று மயிலைநாதர்
தருகிறார். இந்த வகையில் சமணர்களின் ஆராய்ச்சியின் பயனெல்லாம்
நமக்குக் கிட்டவில்லை என்பதே உண்மை. சினேத்திரமாலை என்னும் நூல், நமக்குக் கிடைத்திருக்கும் சமணர்களின் சோதிட ஆராய்ச்சி நூலாகும்.
பிரிக்க முடியாத தமிழும் சமணமும்:
சமணர்கள் எல்லாத் துறைகளிலும், தமிழை வளர்த்து, தமிழை வாழச்செய்து,
தமிழ் ஆழத்தைத் தம்மைப்போல் பிறரும் அறியப் பெரும்
பங்காற்றியிருக்கின்றனர். எத்தனையோ துறைகளில் அறிவு ஆராய்ச்சி செய்து
தமிழ்நாட்டுப் பண்பாட்டைச் சமணர்கள் வளர்த்திருக்கின்றனர்.
ஒன்றைக் கூறாமல் கட்டுரையை முடிக்க முடியாது. வடக்கிலிருந்து வந்து
கடைவிரித்த ஆரிய வேதம் இன்றுவரையிலும் தமிழ்நாட்டு மக்களைக்
கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள்
மொழியான தமிழைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை வலிந்து திணித்து
வருவதையும், ஆன்மிகம் என்னும் போர்வையில் தமிழ் மொழியை, தமிழர்
பண்பாட்டைச் சிதைத்துவருவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதே வேளையில், தமிழ்நாட்டிற்கு மதம் பரப்பவந்த கிறித்துவ மிஷனரிகள்,
தமிழ் கற்று தமிழ் வளர்த்தனர். பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும்
கட்டி, தமிழ் மக்களுக்குக் கல்வியும், மருத்துவமும் கொடுத்தனர். அவர்களைப்
போலவே, அவர்களது வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
கருநாடகம் வழியாகத் தமிழ்நாட்டிற்கு வந்த சமணர்கள், வடக்கிலிருந்து
வந்தவற்றில் பௌத்தம்போல், இங்குள்ள மக்கள் மொழியான தமிழ் கற்று,
அம்மொழியிலேயேத் தங்கள் அறக்கருத்துகளை மக்களிடம் எடுத்துச்
சென்றிருக்கின்றனர். மக்கள் மொழியில் பேசியதும், அவர்களுக்கு கல்வியும், மருத்துவமும் வழங்கியதும், சமணம் தமிழ்நாடு எங்கும் பரவி சிறந்து
விளங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
(‘சமணத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின்
இந்நூலை திருச்சி பெரியார் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர்
மு.அருணாச்சலமும் தஞ்சை சரபோஜிக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர்
இராஜாவரதராஜாவும் (திருக்காட்டுப்பள்ளி அரசுக்கல்லூரி முதல்வர்) இணைந்து
பதிப்பித்துள்ளனர். அவர்களுடையப் பணியைப் பாராட்டலாம்.)
நூலைத் தரவிறக்கம் செய்ய :
சமணத் தமிழ் இலக்கிய வரலாறு – தெ.பொ.மீ.