சாகித்திய அகாதமி – விருதும் நானே.. விருதாளனும் நானே…!
விருது என்றாலே சர்ச்சையும், சர்ச்சை என்றாலே விருது என்று பொருள் கொள்ளுமளவிற்கு அளவில் இணைபிரியாத இரட்டையர்களாக விருதுகளும் அதன் சர்ச்சைகளும் இருந்துவிடுகின்றன.
பொருத்தமானவருக்கு விருது கிடைத்தாலும், பொருத்த மற்றவருக்கு கிடைத்தாலும் சர்ச்சை சர்ச்சைதான். ஆனால் பொருத்தமானச் சர்ச்சை பொருத்தமற்ற சர்ச்சை என்ற வகையில் அவற்றை வேறுபடுத்திக் கொள்ளலாம். பொதுவான விருதுகள், வலது, இடது விருதுகள் என விருதுகளை வகைமைபடுத்திக் கொண்டால், சர்ச்சையும் இனம் பிரித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.
வலதுசாரிக் கருத்தாளர்கள் தரும் வலதுசாரி விருதுகள், இடதுசாரிக் கருத்தாளர்கள் தரும் இடதுசாரி விருதுகள், இவை இரண்டிலும் கலந்த கலக்காத(!) பொதுவான விருதுகள், கலந்துக் கட்டின விருதுகள் என அவற்றில் உண்டு. போலவே சர்க்கார் அமைத்தக் குழுக்களைக் கொண்டு அரசு தரும் விருதுகள் இந்தக் கலந்து கட்டின அல்லது பொதுவான, நடுவு(!)நிலை விருதுகள். பெரும்பாலும் இவைதான் ஆகப்பெரிய சர்ச்சையகா விவாதத்திற்குள்ளாகின்றது.
வலது கருத்தாளருக்குக் கொடுக்கும் போது இடது கருத்தாளர்களும், இடது கருத்தாளர்களுக்குக் கொடுக்கும் போது வலது கருத்தாளர்களும் விருதுக் குறித்தக் காத்திரமான எதிர்வினையை ஆற்றுகின்றனர்.
ஆனால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடியச் சாத்தியங்கள் உண்டு.
சாகித்திய விருதுகள் பெரும்பாலும் ‘லாபி செய்தும்’, லாபியை உருவாக்கியும் பெற்றுக் கொள்வது உண்டு. அதாவது விருது வாங்குவதென்பது ‘வாங்கு’வதாக இருக்கிறதே தவிரப் பெறுவதாக இருப்பதில்லை என்பது அகாதமி விருதுகளின் துயரமாகவே நீடிக்கிறது.
விருதுகளால் படைப்பாளிகள் தகுதி பெறுவதும், படைப்பாளிகளால் விருதுகள் தகுதி பெறும் காலம் ஒன்றும் இருக்கவே செய்தது.
வல்லிக் கண்ணனின் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்,(1978) , தொ.மு.சி.ரகுநாதனின் பாரதிகாலமும் கருத்தும்(1983)
என்று விருதுகள் தகுதி பெற்றகாலங்கள் ஒன்று இருந்தது.
1958 இல் ராஜகோபாலச்சாரிக்கு வழங்கப்பட்டது. லெட்சுமி என்ற திரிபுரசுந்தரிக்கு(1984)வழங்கப்பட்டது என சர்ச்சைக்குறிய எழுத்துக்களும் எழுத்தாளர்களும் ஏராளம்.
ஒன்றிய அரசின் ஆதரவுப் பெற்ற தேர்வுக்குழு எழுத்தாளர்கள், அவர்கள் தெரிவு செய்யும் எழுத்தாளர்கள் என வரிந்துக் கட்டிக் கொண்டு உடன்பட்டும், எதிர்பட்டும், தெரிவு செய்யப்பட்ட நூல்களின் அரசியல் விருதுகளைவிட நீண்டவை.
தமிழன்பனுக்கு(2004) சாகித்திய விருது கொடுத்தபோது பிரிவிணை வாதிக்கு விருதா என்றார்கள். சு.வெங்கடேசனின் காவல்கோட்ம் புதினமே இல்லை என்றார்கள். போகட்டும். ஒன்றிய அரசை நத்திப் பெறாதவரைக்கும் விமர்சனங்களும் ஓர் வெகுமதியே!
சாகித்ய காதமியின் மெழிப் பெயர்ப்புக்கான விருது, யுவபுரஸ்கார் போன்றவையும் இதே கதையாடல்களுடன்தான் இருக்கின்றன.
கீழவெண்மணி நிகழ்வின் பின்னணியில் வெளிவந்த இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல். கீழவெண்மணி நிகழ்வில் அதிகாரவர்க்கத்தை நீதிபடுத்தி எழுதப்பபட்ட அந்த நாவலுக்கு விருது கிடைத்தது. ஆக ஆளும் அரசின் வர்க்கத்துடனான ஒத்தக் கருத்தியல் அவற்றுடன் எழுத்தாளனின் வர்க்கப்பின்னணி லாபி என எல்லாமுமாக இருக்கிறது விருதரசியல். அல்லது அரசியல் விருது.
இதில், இறப்புக்குப் பிந்தயக் காலத்தில் இன்குலாப் க்குக் கிடைத்த சாகித்ய விருதை (காந்தள் நாட்கள்-2017) அவரதுக் குடும்பத்தினர் புறக்கணித்ததைப் புரிந்து கொள்ள முடியும். இன்குலாப் இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றாலும். விருதை அவர் ஒரு போதும் யாசிக்கவில்லை. இப்படியானவர்களாலேயே விருதும் தகுதி பெறுகிறது.
தீவிர இலக்கியத்தில் பங்காற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலருக்கு அவர்களது வாழ்நாளில் இப்படியான விருதுகளைக் கொடுத்துக் கவுரவிக்க வேண்டும் என்று சாகித்திய அகதமிக்கும் அதன் குழு உறுப்பினர்களுக்கும் ஓர் மனத் தவிப்பு இருக்கவே செய்கிறது. தமிழ் இலக்கிய சூழலில் நியாயம் செய்ய வேண்டியிருக்கிறது. குழுவில் சரியான நபர்கள் வரும்போது சரியான எழுத்தாளருக்கு விருது வழங்கப் பரிந்துரைக்கின்றனர். இதில் ஒத்தக் கருத்து ஓர் எழுத்தாளருக்கும், அவரது படைப்புக்கும் கிடைத்துவிடுவதில்லை. கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். அது எந்த படைப்பு, எத்தகையப்படைப்பு என்றெல்லாம் தேர்வுக் குழுவினர் சில சமயங்களில் பார்ப்பதில்லை இதனால் என்ன ஆகிறது என்றால் விருதாளரைச் சரியாகத் தெரிவு செய்திருப்பினும் விருதுக்கெனத் தெரிவு செய்யப்படும் படைப்புகள் சரியானதாக இருந்துவிடுவதில்லை.
பல நேரங்களில் படைப்பாளரும், படைப்புமே சரியாக இருந்துவிடுவதில்லை என்பது வேறு ஒரு சிக்கல்.
தீவிர இலக்கியமோ, பொழுது போக்கு இலக்கியமோ அது முக்கியமல்ல லாபி செய்ய முடியுமா? அரசியல் செல்வாக்கு, சொல்வாக்கு இருக்கிறதா விருதை வாங்குவதா பெறுவதா என்ற கேள்விகள் பொருள் நிறைந்தவையாக இருக்கின்றன. இருக்கும்.
சாகித்திய குழுக்கள் அமைக்கப்பட்டு அவை 22 மொழிகளுக்குரியப் பல்வேறு தளத்திலானப் படைப்புகளைத் தெரிவு செய்கின்றன. எழுத்தாளர்களைக் கொண்டக் தேர்வுக்குழுக்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அந்த குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றன. அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாதக் குழுக்கள், குழு தனிநபர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்படியானவர்களாயே மெய்யானப் படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேர்ந்து விருதுகள் தகுதிப் பெறுகின்றன.
தற்போது ஊடகவியலாளர் மாலனுக்குக் கிடைத்திருக்கும் அகாதமி விருதானது இதிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்டதாகும்.
மாலன் வாங்கியிருக்கும் மொழிப்பெயர்ப்புக்கன விருதுப“ பெற்ற நாவலானது ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளிவந்துச் சாகித்திய விருதைப் பெற்றிருக்கிறது( 2015). தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி. விருது உட்பட பல விருதுகளை அந்நாவலின் ஆங்கில வடிவம் பெற்றிருக்கிறது. சைரஸ் மிஸ்ரி எழுதிய Chronicle of a corpse bearer என்ற நாவல் அதன் தமிழ் மொழிப்பெயர்ப்புக்கான விருதுதான் மாலனுக்குத் தரப்பட்டிருக்கிறது.
ஒரு ‘பிணந்தூக்கியின் வாழ்க்கை குறிப்பு’ என்ற அந்த நாவலின் மொழி பெயர்ப்பு விருது குறித்துத் தனது நேர்காணல் ஒன்றில் மாலன், “வெகுசன இலக்கியப்பரப்பில் எழுதுவோருக்கு இம்மாதிரியான விருதுகள் கிடைப்பதில்லை!” என்று பெரிதும் ஆதங்கப்பட்டிருக்கிறார். அலட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே லஷ்மி என்ற எழுத்தாளரும் வெகுசனத் தளத்தில் அறியப்பட்டவரே அவர் எழுதிய ‘ஒரு காவிரியைப் போல’ புனைவுக்குச் சாகித்திய விருது(1984) கிடைத்ததை மாலன் அறிந்திருக்கவில்லை போலும்.
இதில் வெகுசன இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் எழுதினாலும் தனதுத் தனித்தன்மையை, தீவிர இலக்கியத் தன்மையை விட்டுக் கொடுக்காதவர், பேணிக் கொள்பவர் திலகவதி. அவருக்கு 2005 ஆண்டு கல் மரம் நாவலுக்குச் சாகித்திய அகாதமி விருதுக் கிடைத்தது பொருத்தமானதே.
சுஜாதா போன்ற தீவிரம், அதீவிரம் இரண்டிலும் சேர்த்தியில்லாத எழுத்தாளர்களுக்குச் சாகித்திய விருதுக் கிடைக்காதது என்னவோ மெய் என்றாலும், காத்திரமான இலக்கியம் என்பது அது செயற்படும் கருத்துத் தளம், அது முன் வைக்கும் அறம், முற்போக்கு பண்பாட்டு, சமூக, அரசியல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ‘கலை கலைக்காகவே’ என்று சொல்லிக் கொண்டுப் பொழுது போக்கு இலக்கியம் படைப்பவர்களுக்கானத் தளமாக சாகித்திய அகாதாமியை அணுகுவோருக்கு விருது குறித்த ஏக்கம் நீடிக்கவே செய்கிறது.
பிறர் பெற்ற சாகித்திய விருதுகள் போலல்லாது மாலன் மீது கூடுதல் சர்ச்சை எழ காரணமே அவர் சாகித்திய அகாதமியின் தமிழ்பிரிவு ஆலோசனைக்குழுவில் இருந்து கொண்டே விருதைப் பெற்றிருப்பதாகும். மாலன் 2018 முதல் அக் குழுவில் இருந்துவருகிறார். தேர்வுக் குழுவில் பொன்னீலன், பாவைச் சந்திரன், சிவசங்கரி ஆகியோரும் உள்ளனர்.
தார்மீகமாக அவர் அக்குழுவிலிருந்து விலகிக் கொண்டோ அல்லது தேர்வுக் குழுவில் இடம்பெறாமலோ அவ்விருதைப் பெறுதலே அறம். நாகரீகம். பீடு.
எனினும் மாலனுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்கும் கிடைத்திருக்கிறது. குழு உறுப்பினர்கள் தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வதற்குச் சாகித்திய அகாதமி தேவையா என்பது ஒருபக்கம் இருக்க இப்படிக் குழு உறுப்பினர்களே விருதுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எழுதப்படாத விதிக்காகக் கூட இனி சாகித்திய அகாதமிக்கு ஒரு விருது கொடுக்கலாம் போல.