கல்வியில் வன்முறையும், வன்முறைமயமாகும் சமூகமும் – நிகழ் அய்க்கண்
உலகளவில் எங்கெல்லாம் போர் நடந்தாலும் சரி ; தொற்றுநோய் பரவினாலும் சரி ; பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் சரி ; வலதுசாரி அடையாளஅரசியல் மேலோங்கினாலும் சரி ; உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் சரி, பாதிக்கப்படுவது கல்வியும் அதனோடு தொடர்புடைய எதிர்காலத்தூண்களாகிய மாணவர்களாகவே இருக்கின்றனர்.
உக்ரைன் –ரஷ்யாவிற்கு இடையிலான போரினால் 50 மில்லியனுக்கு மேலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் உக்ரைன் தேசத்தில் கல்வி பயின்றுவந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். இதேபோல், கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதினால் மாணவர்கள் கல்விபெறுவதென்பது தடைபட்டதுப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இதுமட்டுமல்லாது, ஆப்கன் மற்றும் வளர்ந்துவரும் சில ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி ஏற்பட்டாலோ, உணவுத்தட்டுப்பாடு நிலவினாலோ, அல்லது இலங்கை போன்ற நாடுகள் கடன் சுமையில் சிக்கித்தவித்தாலோ அல்லது மதவெறுப்பு அரசியலினைத்தூண்டினாலோ, அல்லது வாழ்வாதாரத்திற்காக, இடம்பெயர்வு, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களினாலோ கல்விதான் முதலில் பாதிக்கப்படுவதாக இருக்கின்றது.
வளர்ந்துவரும் நாடான இந்தியாவைப்பொருத்தமட்டில், ஒருபக்கம் மதவெறுப்பு அரசியலும், சந்தையினால், சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வும் ஏகத்துக்கு அதிகரித்துள்ளது.. இன்னொருபக்கம், நகரம் – கிராமம் எனவாறும் சமத்துவமற்றதாக பிரிந்து கிடக்கிறது. இதனால், பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீரான கல்வி கிடைப்பதென்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. இதற்குக்காரணம், ஆசிரியர்கள் பற்றாக்குறையும், சமத்துவமற்ற பாடத்திட்டமும், அரசு – தனியார் பள்ளிகள் என்கிற பேதம்தான். 2019 ஆம் ஆண்டின் யுனஸ்கோ அறிக்கையின்படி, இந்திய ஒன்றியம் முழுக்க 1.1 லட்சம் பள்ளிகளில் ஓராசிரியரே பணிபுரிகிறார். தேசமுழுக்க 11.19 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகக்கூறுகிறது. (டைம்ஸ் ஆப் இந்தியா, 06/10/2021). இதுதவிர, பாடத்திட்டமானது ஒன்றியத்திற்கென ஒன்றாகவும், மாநிலத்திற்கென பிறிதொன்றாகவும் தயாரிக்கப்படுவதாக இருந்தபோதிலும், ஒன்றியப்பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடைபெற்று சமத்துவமின்மையினை மேலும் ஊக்குவிப்பதாக இருக்கின்றது.
2020 க்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கொரோனா காலமாகிவிட்டதினால். மாணவர்கள் முறையான கல்வி பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுவிட்டது. நோய்த்தொற்றும் கணிசமாக குறைந்தபின், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோது, கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்துணர்வூட்டி, அவர்களது மனப்பாங்கினை இயல்புநிலைக்கு கொண்டுவந்து, அதற்குத்தகுந்தவாறு, பாடங்களை நடத்திச்செல்வதுதான் சிறந்தாக இருக்கமுடியும். ஆனால், ஒன்றியஅரசோ, அவ்வாறெல்லாம் செய்யாமல், நாட்டின் ஆணிவேராகயிருக்கும் பன்மைத்துவ கருத்தியல்களுக்கு மாறாகவும், குடிமக்களிடையே, பரந்த உரையாடலுக்கு வித்திடாமலும், அவசரகதியில் செயல்பட்டு பிராமணர்களின் மொழி, சடங்குகள் மற்றும் சாஸ்திரங்களை வலிந்துத்திணிக்கும் விதமாக இருக்கின்ற புதியக்கல்விகொள்கையினை அமல்படுத்தியுள்ளது. அத்தோடு நில்லாமல், அதனை பல்வேறு மொழிகள் பேசிவருகின்ற, மாநிலஅரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஒற்றைப்பார்வையுடன் நிர்பந்திக்கவும் செய்கின்றது
புதியக்கல்விக்கொள்கையானது, அந்தந்த மாநில மக்களின் சமூகம் மற்றும் கலாச்சார நடைமுறைகளைத் தழுவிய பாடத்திட்டமாக இருக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, ஒற்றையடையாளத்தை முன்மொழிவதாக இருப்பதை கவனிக்கமுடிகிறது. அதுமட்டுமல்லாது, கூட்டாட்சியின் விழுமியங்களை வளர்த்தெடுப்பதற்குப்பதிலாக, ஒருதலைபட்சமான நோக்கங்களை உள்நிறுத்திச்செயல்படுவதாகவும் இருக்கின்றது. பலவகையான சாதி, மதங்களைக் கொண்ட ஒருதேசத்தில், புதியக்கல்விக்கொள்கையின் மூலம், ஒவ்வொரு மாணவனும் தனது எட்டுவயதிலிருந்தே ஒருபக்கம் பிராமணர்களை முன்னிருத்தும் கருத்தியல்களையும், இன்னொருபக்கம் போட்டியையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
ஒன்றிய அரசானது, சமீபத்தில் கல்விகுறித்த அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படிப்பார்த்தால், நாடெங்கும் 1,18,274 பள்ளிகளில், 526,824 ஆசிரியர்கள், 34,01,158 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், இரண்டு முக்கிய அவதானிப்புக்களை கண்டறிந்துள்ளது. (தமிழ் ஹிந்து 30.05.2022 ) அதிலொன்று, மாணவர்களிடையே கற்றலுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. அடுத்து, கற்பிக்கப்படும் பாடங்களை புரிந்துகொள்வதில் மாணவர்கள் திணறுவதாகவும் கூறியிருக்கின்றது. இதுபற்றியெல்லாம் புதியக்கல்விக்கொள்கையின் பரிந்துரைகள் கவனத்தில்கொண்டதாகத்தெரியவில்லை. மாறாக, மேலிருந்து கீழ்நோக்கி வலிந்து திணித்து சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான நீதியை மறுப்பதாகவே இருக்கின்றன.
கொரோனாக்காலத்தில், பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டதினால், மாணவர்களுக்கான பாடங்கள் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் வழியாகவே நடத்தப்பட்டது. இதுதவிர, பொது இடங்களில் தடையுத்தரவு இருந்து வந்ததன் காரணமாக, மாணவர்களை விளையாடுவதற்கும் அனுமதிக்கப்படாத போது, மாணவர்கள் வேறுவழியின்றி, சமூகஊடகங்கள் ; கேளிக்கைகளில் அதிகநேரத்தினை செலவிடுவதற்கு ஒருவாய்ப்பாகிவிட்டது. இப்படியாக, தொடர்பு ஊடகங்களினால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் தங்களது நேரத்தினை ஓய்வின்றி தொடர்ச்சியாக செலவிட்டதின் பேரில், பெரும்பான்மையான மாணவர்களிடையே தற்போது, இரண்டுவித போக்குகள் வளர்ந்து நிற்பதை கவனிக்க முடிகிறது.
- வலதுசாரி அடையாளஅரசியலின் ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கானது, இளைஞர்களையும், மாணவர்களையும் ஆட்கொண்டதின் காரணமாக, நாடெங்கிலுமுள்ள பொதுத்தளமானது வரவர வன்முறைக்களமாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவருகின்றது. இது தவிர, ஊடகங்களின் வழியாக வெளிப்படும் வன்முறை மிகுந்த காட்சிகள் மற்றும் செய்திகளும் கூட அவ்விதமாகவே பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது. இப்படியான சூழல்கள்தான், மாணவர்களிடையே வன்முறை மிகுந்த மனநிலையை அதிகளவில் பெருக்கிடுவதற்கு தளம் அமைத்துத்தருவதாக இருக்கின்றன.
- டிஜிட்டல் மயம் அதிகரிக்க அதிகரிக்க மாணவர்களிடையே கவனச்சிதைவு என்பதும் தவிர்க்கமுடியாததாக ஆகிவிட்டது. இந்நெருக்கடியின் வெளிப்பாடாக, பாடப்புத்தகங்களின் வழியாக மாணவர்கள் கற்றுக்கொள்வதென்பதும், எழுதுவதென்பதும் குறைந்திருப்பதைக் கவனித்திருக்கமுடியும். இன்னும் கூடுதலாகச்சொல்லப்போனால், உயர்கல்வி பயிலுவதற்கும் வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் போட்டித்தேர்வின் மூலமே தகுதிபெறமுடியும் என்பது கூட மாணவர்களிடையேயான உளவியல் சிக்கல்களுக்கு காரணமாகிவிட்டிருக்கிறது.
தமிழகத்தில், நடப்புக்கல்வியாண்டில், 10, 11, 12 வகுப்புக்களுக்கான ஆண்டுத்தேர்வுகளை எழுதாதவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்திருக்கிறது. அதாவது, பத்தாம்வகுப்பில், 2.25 லட்சம் பேரும், பதினோராம் வகுப்பில் 2.58 லட்சம் பேரும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1.95 லட்சம் பேரும் தேர்வினை எழுதவில்லை என்கிறது கல்வித்துறை. மாணவர்களின் கற்கும்திறனை மேம்படுத்தி, தேர்வினை எதிர்கொள்ளத்தக்க வழிமுறைகளை கண்டடையும் போதுதான், இடைநிற்றலையும் தவிர்க்கமுடியும். இதனோடு கூட, நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்.
அரசுப்பொதுத்தேர்வுகளுக்குத்தான் இந்த நிலையென்றால், தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணையம் சமீபத்தில், வேலைவாய்ப்பிற்காக நடத்தப்பட்ட குரூப்-2 தேர்விலும்கூட, லட்சக்கணக்கானோர் போட்டித்தேர்வினை எழுத முன்வரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த பின்னணிகளையும் ஆய்ந்து, அதனையும் களைய வேண்டியுள்ளது.
மேற்கூறியுள்ள கூற்றுக்களை உறுதிசெய்து கொள்வதற்கு, சில புள்ளிவிபரங்கள் நமக்கு உதவிடுகிறது. அது என்னவெனில், 2021 ஆம் ஆண்டு, கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்திலிருந்த சமயத்தில், ’கூகுளில்’ இந்தியமக்கள், எதுபற்றி அதிகமாகத் தேடியிருக்கின்றனர் எனப்பார்த்தால், அவைகள் கால்பந்து, கிரிக்கெட், ஐ.பி.எல். ஒலிம்பிக், திரைப்படங்கள், புகழ்பெற்றவர்கள் ( ஆர்யன்கான், நீரஜ் சோப்ரா), கோவிட் தடுப்பூசி, மற்றும் பரபரப்பாக பேசப்படும் செய்திகளாகவே இருந்திருக்கின்றது. ( ஹிந்து ஆங்கிலம். 04.01.2022) மாணவர்களிடையே கல்வி தடைபடுவதற்கு மேற்சொன்னவைகளும் ஒரு காரணம் என கூறிடலாம். ஊடகங்களின் மீதுள்ள அளவற்ற மோகத்தின் பிரதிபலிப்பாக, தமிழகத்திலும் பார்க்க, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறுசிறு மோதல்கள் உருவாகி சட்டென அடங்கிவிடுவதையும் கவனிக்கமுடிகிறது. மாணவர்களிடையே வெறுப்பு அரசியலினை உருவாக்கி, அவர்களைப் பிளவுபடுத்தி அதற்குள் குளிர்காய வலதுசாரிகளும் சமயம் பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, சமூகநீதியில் அக்கறையுள்ளோர்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
.
கொரோனா காலத்தில், பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டிருந்ததின் விளைவால், ஏற்பட்டிருக்கிற இழப்புகளிலிருந்து மாணவர்களால் இன்னும் மீண்டிட முடியவில்லை. நிலைமை இப்படியிருக்க, அதற்குள், பள்ளிகளும் கல்லூரிகளும் திறந்தவுடனேயே, வலதுசாரி கருத்தியல்கள் பரவலாகியுள்ள நாடுகள் (அமெரிக்கா) மற்றும் அது ஆட்சிசெலுத்தும் நாடுகளில் ( இந்தியா) சிறுபான்மைச்சமூகத்தின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, அம்மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதினாலும், பாடத்திட்டத்தில் மதவெறியினை கலப்பதினாலும் கல்வி பெறுவதென்பது பொதுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஜனநாயகத்தின் அழிவுக்கு பெயர்போன,அமெரிக்காவில், டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள உவல்டேயில் உள்ள பள்ளியொன்றில், வெள்ளை இனவெறியானது 19 குழந்தைகளை துப்பாக்கிச்சூடு நடத்தி பலிவாங்கியிருக்கின்றது. அதேபோல், ஜனநாயகத்திற்கு அச்சாக விளங்கிவந்த இந்தியாவிலும், வலதுசாரி அடையாள அரசியலின் நஞ்சுக்கருத்துக்கள் மாணவ அமைப்பின் வழியாக, கர்நாடக மாநிலத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளின் வழியாகப்புகுந்து, இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து பள்ளி, கல்லுரிகளுக்கு வரக்கூடாது என போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். இச்செயல்களானது ஒருவகையில், அரசியல்சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள சிறுபான்மையினர்களுக்கான உரிமைகளை பறித்துக்கொள்வதாக இருக்கிறதென கருதமுடிகிறது. இப்படியான செய்கைகளினால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவவென்பது சிதைந்து எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்பது மட்டுமின்றி, நல்லிணக்கத்திற்கெதிராக பிளவு எண்ணமும் உருவாகியிருக்கின்றது. இந்தகொதிப்பு ஆறி அடங்குவதற்குள், கர்நாடக மாநில அரசானது, பள்ளிப்பாடத்திட்டத்தில் ஏற்கனவே இருந்துவந்த சமூக நீதிக்காவலர்களான பசவண்ணா, நாராயண குரு, அம்பேத்கர், மற்றும் பெரியார், ஆகியோரின் பாடங்களை திருத்தவும், வெட்டவும், நீக்கவும் செய்திருக்கின்றனர். இதற்குப்பதிலாக, பன்மைத்துவ கருத்துக்களுக்கு எதிரான சனாதனக்காவலர்களின் பாடத்தினை சேர்க்கவும் செய்துள்ளனர்,
கர்நாடகாவைப்போன்று, தமிழகத்திலும் மாணவர்களிடையே துருவ அரசியலின் மூலம், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் எதனையும் பரபரப்பாக்கிச் செயல்பட வலதுசாரிகள் முனைந்து வருகின்றனர். அதில், குறிப்பிடத்தக்க ஒன்றுதான் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள, ஒரு கிறித்துவ கல்வி நிறுவனத்தின் மீது ‘மதமாற்றச் சாயம்’ பூசியது. தற்போது அவ்வழக்குங்கூட விசாரணையில் உள்ளது.
கல்வியானது, செயல்முறை சார்ந்த சிந்தனை முறையிலிருந்து, தற்போதைய காலத்தில் உள்ளடக்கம் சார்ந்ததாக மாறிப்போயுள்ளது. ஜனநாயகக்குடியரசு தேசத்தில், கல்வியில் விமர்சனப்பார்வையை வளர்த்தெடுக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் அதன்மூலம் ஜனநாயகத்தினை வளர்த்தெடுக்கமுடியும். இல்லையெனில், வலதுசாரி அடையாள அரசியல் உட்புகுந்துவிடும். ஆனால், இங்கோ, கார்ப்பரேட் நலனுக்கு வசதியாக, விமர்சனச்சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்தெடுப்பதற்குப்பதிலாக, தரவினை பகுப்பாய்வு செய்வதென்பதாக மாறி நிற்கிறது. இப்படிச்செய்வதன் மூலம், சமூகச்சிந்தனையென்பது குறைந்துபோய், நாளடைவில் போராட்ட உணர்வும் மழுங்கிவிடக்கூடும்.
”ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்படும் சமமான கல்வியானது, சமூகஆரோக்கியத்திற்கும், தேசநலனுக்கும் பலனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.” ஆனால், வலதுசாரி அடையாள அரசியலோ மற்றும் கார்ப்பரேட்டுகளோ, தங்களது சுயநலப்போக்கால், பாடத்திட்டத்தினை அப்படியெல்லாம் இருக்க விடுவதில்லை. எது எப்படியிருப்பினும், இன்றைய சந்தைமய – வலதுசாரி அடையாள அரசியல் ஆட்சிக்காலத்தில், பொது நிதியிலிருந்து வளர்த்தெடுக்கபடும் கல்வியானது ஒருபக்கம் கார்ப்பரேட் நலன் காப்பதாகவும், இன்னொருபக்கம் வலதுசாரிகளின் அடையாளத்தைக் காப்பதாகவும் மாறி இருப்பதுதான் யதார்த்தமாக இருக்கின்றது.
ஒவ்வொரு மாணவரும் தங்களை விற்பனைக்குரிய பண்டமாக ஆக்கிக்கொள்ளுவதற்கும், கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதற்கும் வலதுசாரிகள் அனுமதிக்கின்றனர். அதேசமயம், சிறுபான்மையின – விளிம்புநிலை மாணவர்கள் கல்வி பயிலவோ அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும்போதோ வெறுப்பு அரசியலானது இடம்கொடுக்க மறுக்கிறது. ஜனநாயக தேசத்தில் சமூகத்தின் உயரடுக்கிலுள்ளவர்களிடையே இப்படியொரு குரோத மனநிலை. அனைத்து சமூக மக்களையும் மேலும் ஆளுமைமிக்கவர்களாகவும், திறன்படைத்தவர்களாகவும் ஆக்கிட, ஜனநாயகத்தின்ஆற்றல் மிக்கக் கூறுகளை பரவலாக்கி அதன்மூலம் நிறைவேற்றிட வேண்டுமே ஒழிய, சமூகத்திற்குள் பிளவினை ஏற்படுத்தி வன்முறைக்களமாக ஆக்கி, அதற்குள் குளிர்காயக்கூடாது. புதியக்கல்விக்கொள்கையானது அனைவருக்கும் சமநீதி என்று கூறி, சமூக நீதியை மறுக்க முனைகிறது. இச்சமயத்தில், சமூகநீதியை உயர்த்திப்பிடித்து அறிவாற்றலில், திறனில் சமநீதியை அடைவது அவசியம்.