பேரறிவாளன்- கூண்டுப் பறவையின் விடுதலை.! – இரா. மோகன்ராஜன்
கூண்டு திறக்கப்பட்ட பறவை ஒன்றின் சிறகசைப்பைப் போன்று இருக்கிறது பேரறிவாளனின் உடல் மொழி. காற்று நுழையாதச் சிறை சுவற்றுக்கு வெளியே வந்து நன்கு மூச்சிழுத்துவிடும் நபராகக் காட்சியளிக்கிறார் பேரறிவாளன்.
31 ஆண்டுகள் வாழ்வைத் தனிமைச் சிறை தின்றுவிட்டது. திருப்பித்தர இயலாத நாட்களை குற்றவாளி என்ற சொல் கிழித்தெறிந்துவிட்டது.
மரணத்தைச் சுமந்து கொண்டிருந்தவனின் துயரத்தை யாதொருவராலும் பகிர்ந்து கொள்ளமுடியாது. பேரறிவாளன் பறையடித்து தனது விடுதைலையின் பாடலைத் தொடங்கியிருக்கிறார்.
கட்சி, குழு வேறுபாடின்றி தலைவர்களை, தனது விடுதலைக்காகப் போராடிய தோழர்களை நண்பர்களை சந்தித்து தனது நன்றியைப் பகிர்கிறார்.
பெரியாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர், பெரியாரியர். தமிழீழ ஆதரவாளர். மனித நேயர் அதற்காககவே அவர் சிலுவைச் சுமந்தவர்.
காவலில் வீட்டுக்கு வரும் காலங்களில் கூட செய்தியாளர் கேள்விகளுக்கு அவரது தாயார் மட்டுமே பதிலளிக்க வேண்டியராக இருப்பார். பின்னணியில் சிறைக் கூண்டின் சாட்சியாக நம்பிக்கை முகத்துடன் அவர் நின்றிருப்பார். சட்ட சிக்கல்கள் காரணமாக அவர் பேசுவதில் தயக்கமிருந்தது. சிறை கொட்டடியிலிருந்தும், தூக்கு மேடையிலிருந்தும் அவரது எழுத்துப் பூர்வமான பதில்கள் மட்டுமே அவரது மனதின் குரலாக ஒலித்தன. அவையும் அவரதுச் சட்டத்தரணிகள் வழியாகவே ஊடகங்களை அடைந்தன.
முதன் முறையாக விடுதலைக்குப் பிறகுதான் அவரது அசல் குரலைத் தமிழகம் காதுத் தீட்டிக் கேட்டது.
சிறையிலிருந்தவர், வதைகளுக்குட்படுத்தப்பட்டவர் என்று அவரது உடல் உபாதைகள் சொன்னாலும், செய்தியாளர்களையும் அவர்களது கேள்விகளையும் நிதானமாகவே எதிர்கொள்பவராக இருந்தார். மென்மையானப் புன்னகையுடன் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தன்னறிவுடன் தெளிவாகப் பதட்டமின்றி உரையாடினார். “இப்போதுதான் வெளியே வந்திருக்கிறேன் ஆசுவாசப்பபடுத்திக் கொண்டு தனித் தனியே உங்களிடம் பேசுகிறேன் என்று ஊடகங்களிடம் சொன்னார்.
எனது விடுதலைக்காககப் போராடிய எனது தாயின் தியாகம், போராட்டம் மிகப் பெரியது. ஆரம்ப காலங்களில் நிறைய அவமானம், புறக்கணிப்புக்களைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.
எனது குடும்பத்தினரின் போராட்டம் குறிப்பாக தங்கை செங் கொடியின் தியாகத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதினார்கள் அதற்கு நன்றி.
எங்கள் பக்கம் இருந்த உண்மை நியாயம்தான் எங்களுக்கு வலிமைச் சேர்த்தது என்றார்.
எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். பறித்தெடுக்கப்பட்ட வாழ்வின் பகுதியைத்தான் அவர் வாழ்ந்தாக வேண்டும் என்ற பதைப்புக்கூட அவரிடம் இருக்கவில்லை.
வன்மம் மிகுந்த சிறை வாதைகளை அவர் அனுபவித்திருக்கிறார். கைதான இரவிலிருந்தே(ஜுன்13,1991) சிறப்புப் புலனாய்வுக் குழு காவலில் கடுமையாக வதைக்குள்ளாக்கப்பட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம் பெறும் வரையில் காவல் சிறையில் வைத்து விதவிதமான வதைக்கு உட்படுத்தப்பட்டதுடன் விசாரணையில் ராஜீவ் படுகொலையில் தனது பங்கை ஒப்புக் கொள்ளவைக்க பல வழிகளில் எஸ்.ஐ.டி. முயன்றது.
குற்றத்தை தெளிவாக விளக்க முடியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் வழி சிறையில் தள்ளிய புலனாய்வுத்துறை அவரது வாழ்வை முடக்கிப்போட்டதுதான் மிச்சம். சதியில் பேரறிவாளனின் நேரடி பங்கை அவர்கள் இறுதி வரை நிரூபிக்கவேயில்லை.
விரல்களிடையே குச்சிகள் அல்லது பென்சில்களை வைத்து அழுத்தியும். சுவற்றுடன் நிற்கவைத்து கால்களை அகட்டியும் அவரது 19 வது வயதிலேயே கடும் வதைப்படுத்தப்பட்டிருந்தார்.
நகக் கண்களில் ஊசியேற்றுவது, கால் சுண்டு விரல்களை சூ வால் ஏறி மிதித்துத் திருகுவது, தூங்கவிடாமல் செய்வது என சிறப்புப் புலனாய்வினரின் வதை நடவடிக்கைகள் மல்லிகை அலுவலகத்தின் மேல்மாடி இலங்கையின் நான்காவது மாடி வதைக்கூடம் போல செயற்பட்டது.
ஏறக்குறைய அன்றைக்கு ராஜீவ்காந்தி படுகொலையில் கைது செய்யப்பட்டவர் யாதொருவர் நிலைமையும் இப்படித்தான் இருந்தது. பொண்களின் நிலைமை கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது.
கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் இழுத்து வந்து காவலில் இருந்தவர்கள் முன் வதைப்படுத்தியிருந்தனர். ராஜீவ் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் அனுபவங்கள், வதைகள் ஒன்றுபோலவே இருந்தன.
கட்டாயப்படுத்தியதாலோ அச்சுறுத்தியதாலோ மூன்றாம் தர முறைகள் ஏதும் பயன்படுத்தியதாலோ, அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் உளவியலைத் திறமையாகப் பயன்படுத்தியதாலோ ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதற்கு விசாரணை நீதிமன்றத்தில் முறையீடு ஏதும் பெறப்படவில்லை என்று நீதிபதி வாத்சவா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்(பக்-87). ஆனால் நீதி மன்றில் நேர் நிறுத்தும் போதெல்லாம் கேட்கப்படும் சடங்கான கேள்விகள் போலவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு போலீஸ் காவலில் நேர்ந்தவற்றை நீதிமன்றில் துணிந்துக் கூறவோ, எழுத்து மூலம் புகாரளிக்கவோ இயலாது என்பதை நீதிபதி புறந்தள்ளி வாக்கு மூலத்தை ஏற்றார்.
அதுவே 9 வோல்ட் மின்கலன் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனையும், படுகொலையில் ஈடுபட்ட தணுவையும், முதல் எதிரிகளாக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகியோருடன் பேரறிவாளனையும் குற்றச்செயலில் சம பங்காளாராக்கியிருந்தது.
விசாரணையின் தொடக்கத்தில் பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் கார்த்திகேயன், விசாரணையில் தகவல்களைப்பெறுவதற்காக அடித்துத் துன்புறுத்தி Third degree method பயன்படுத்தமாட்டேன் என்ற வேண்டுகோளை ஏற்றே பணியை ஒப்புக்கொண்டேன் என்றார் (கார்த்திகேயன் நேர்க்காணல்(ஜுனியர்விகடன்-07.08.1991)
படுகொலைப் புலனாய்வில் பல ஓட்டைகள் இருந்தன. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்வதன் வழி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. காவல் அதிகாரி தியாகராஜனின் மனச்சான்று திறப்பு அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 9 வோல்ட் மின்கலனை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியவர்களால் தற்கொலைக் குண்டை செய்து கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் போனதுதான்.
ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்கமுடியாத விஷயம் ஏதாவது உண்டா என்ற கேள்விக்கு புலனாய்வுக் குழு தலைவர் ரகோத்தமன்,தணு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டைச் செயது கொடுத்த நபர் யார் என்பதுதான் என்கிறார்(ஜுனியர்விகடன் நேர்காணல்-31.07.2005)
பேரறிவாளனின் மின்னணுவியல் பட்டயப் படிப்பும், பெரியாரிய குடும்பக் கொள்கைச் சார்புமே அவரை வெடிகுண்டு நிபுணராக்கி, புலனாய்வாளர்களின் கற்பனை ஊற்றை பெருக்கிக் குற்றச் செயலின் பங்கேற்பளாராக்கியது.
ஒடிந்து விழும்படியான, அவ்வளவாக நம்பகத் தன்மையில்லாத சான்றின் அடிப்படையிலான ஒரு குற்றத் தீர்ப்பூக்காக 15 ஆண்டுகள் சிறைப்பட்டிருப்பது என்ற நீண்ட துன்பம் தேவையில்லை என 17 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ் குறிப்பிட்டார். நைந்துபோனக் காரணங்களால் அவரது களுத்துக்கு தூக்குக் கயிறு காத்துக் கொண்டிருத்ததது.
எந்நேரமும் சாவு கயிற்றரவமாகத் தொங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே சிறை விழ்வில் தான் விரும்பியப் படிப்புகளைக் கற்று தேர்ந்தார்.
தான் படித்த ஜோலார் பேட்டை அரசு பள்ளியில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேர்ச்சியில் பள்ளியின் முதல் மாணவராக தேறியிருந்தார்.
கல்வியின் மீது தீராத் தாகம் கொண்டவருக்கு சிறைச் சாலைக் கல்விக்கூடமானது வியப்பில்லைதான்.
வழக்கு தொடர்பானத் தொடர் அவதானிப்புகளால் ஓர் சட்டத்தரணிக்கிணையானச் சட்ட அறிவைப் பெற்றிருக்கிறார் பேரறிவாளன்.
“மாறிவரும் உலகம் அவருக்கு மட்டும் அப்படியே நிலைத்திருக்க அவர் பார்ப்பதும் உணர்வதும் நான்கு சுவர்களும் இரும்புக் கம்பிகளும் மட்டுமே. இதுவே கண்ணீராலும் கழுவ முடியாத பெருந்துன்பம்!”
என்று பேரறிவாளனின் பாடுகளைத் தன்பாடாக உணர்ந்து நெகிழ்ந்த முன்னய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆ.கிருஷ்ணய்யர் பேரறிவாளனின் மறியாதைக்குரியர் ஆனார். மட்டுமல்லாதுத் தூக்குத் தண்டனை ஒழிப்பிலும் முன்நின்றிருந்தார்.
தனது விடுதலையின் பின்னர் தங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் செய்யவும், சட்டத்தரணியும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கிருஷ்ணய்யர் புகைப்படத்திற்கு மாலை மரியாதை செய்யவும் விரும்பியதைச் சிறைமீண்டு செய்து முடித்தார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது கொள்கை நெறிபட்ட வாழ்வுக்கு வழிக்காட்டியான பெரியாருக்கு,பெரியார் நினைவிடத்திற்குத் தனதுத் தாயார் அற்புதம் அம்மாளுடன் சென்று மரியாதைச் செலுத்திக் கொண்டுள்ளார்.
தூக்கு மேடையில் நின்ற போதும் பகத்சிங் சுயமரியாதைச் சிந்தனையிலிருந்தும், நாத்திகக் கொள்கையிலிருந்தும் விலகி ஓடி ஒளிந்துக் கொள்ளவில்லை. மாறாக அவரது நெஞ்சுரத்துக்கு அவற்றையே துணையாகக் கொண்டிருந்தார் என்பதை ஒப்புமைக் கொள்ளலாம்.
அண்ணா நினைவு நூற்றாண்டு நினைவுநாளில் தமது 18 ஆண்டுகால சிறைவாழ்விலிருந்து விடுவிக்கக் கோரும் விண்ணப்பத்தில்,
“நான் பெரியாரின் கொள்கை வழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை..மொழி. இன பற்றாளன் தொப்பூழ் கொடி உறவாம் தமிழீழ மக்கள் படும் இன்னல் கண்டு இதயம் நொந்தவன் உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன் இவையே என்னைக் கொலைக்களத்தில் நிறுத்தப் போதுமான காரணங்களாகிவிட்டன என்கிறார். இது பேரறிவாளன் போன்றோருக்கு சாதாரானமாவே பொருந்தக்கூடிய ஒன்றே. அதனால்தாம் ஜெயின் கமிசன் ராஜீவ் கொலையில் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் குற்றவாளி என குற்றம் சாட்டியிருந்து.
அதனால்தாம் சிறைமீண்டும் தான் பெரியார் பேரன் என்று பேரறிவாளன் சொல்லிக்கொள்ளத் தயங்கவில்லை.
ஏனெனில் அவரைத் தளைப்படுத்தியது பெரியாரியமே என்றால் அவரை விடுவித்ததும் பெரியாரியமே!