பீத்தோவன் : புரட்சிகரமான காலகட்டங்கள் – மைக்கேல் ராபர்ட்ஸ்
தமிழாக்கம் – கமலாலயன்
இந்த ஆண்டு, இசைமேதை பீத்தோவன் பிறந்த நாளின் இருநூற்றி ஐம்பதாம் ஆண்டு நிறைகிறது. (இதன் மூலக்கட்டுரை 16.12.2020 அன்று வெளிவந்தது). அவர் பிறந்தது, அனேகமாக 1770-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16 அல்லது 17-ஆம் நாளில் இருக்கலாம். பீத்தோவன் உள்பட, எவர் ஒருவருக்கும் அவரின் பிறந்த தேதி இன்னதுதான் என்று சர்வ நிச்சயமாகத் தெரியாது. ‘ செவ்வியல் ‘ இசையமைப்பாளர்களுள், பீத்தோவன் ஓர் இசையியல்ரீதியான புரட்சிக்காரர் எனக் கருதப்படுகிறார். என்னுடைய பார்வையில், அது வரலாற்றின் விபத்தல்ல; காரணம், பீத்தோவன் தனது காலகட்டத்தின் மனிதர்.
அவர் பிறந்த காலம், ‘அறிவொளிக்காலம் ’ என்றழைக்கப்பட்ட ஒரு காலம். ஐரோப்பியச் சிந்தனைகள், பணிந்து ஒடுங்கிக் கிடந்த நிலையிலிருந்து உடைத்துக் கொண்டு மதத்திற்கும், பரம்பரை முடியாட்சி அதிகாரத்துக்கும் மாறிக்கொண்டிருந்த காலம். சுதந்திரச் சிந்தனை, அறிவியல், ஜனநாயகம் ஆகியவற்றின் பதாகையை உயர்த்திப்பிடித்த காலம். ‘ சுதந்திர வர்த்தகம், போட்டி ‘ ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த தொடக்கநிலை ஒளிக்கீற்றுகள் புலப்படத் தொடங்கியிருந்தன.
‘ தேசங்களின் செல்வம் ’ என்ற தனது மகத்தான பொருளாதார ஆய்வு நூலை ஆடம் ஸ்மித் என்ற பொருளாதார நிபுணர் பதிப்பித்திருந்தார். அப்போது பீத்தோவனுக்கு ஆறு வயது. அமெரிக்க சுதந்திரப்போர் நிகழ்ந்த காலம் அது. அந்தப்போரில், முந்தைய பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்கள் பிரிட்டிஷ் முடியரசிடமிருந்து முற்றாக முறித்துக் கொண்டனர். இவ்வாறு செய்ய அவர்களுக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் பொருளாதார, இராணுவ உதவிகளும், ஆதரவும் பேருதவியாக அமைந்தன. அதன் மூலம், வாக்களிக்கும் உரிமைகளுடன் ஒரு குடியரசை அவர்கள் நிறுவினார்கள். அது நடந்ததும் இதே ஆண்டில்தான் !
என்னுடைய பார்வையில், பீத்தோவனின் இசைப்பயணம், அவரின் வாழ்க்கைப் பயணத்தின் மேடு பள்ளங்களுக்கிடையே ஊசலாடியவாறேதான் அடைந்திருக்கிறது. மேற்கண்ட இந்தப்புரட்சிகரமான காலப்பயணத்துடன்தான் அவரின் வாழ்க்கை நெடுகிலும் அது தொடர்ந்தது. ஆனால், முடியரசையும், நிலப்பிரபுத்துவ உரிமைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த பிரெஞ்சுப் புரட்சியின் எழுச்சி, பாய்ச்சல் ஆகியவற்றுடன்தான் மிகவும் குறிப்பாகத் தொடர்ந்தது. அந்தப்புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவருக்கும் ( ஆண்களுக்கு மட்டும் ) உண்டு என்று பிரகடனம் செய்தது. ஐரோப்பாவிலிருந்த அன்றைய பல இளம் மிட்லிங் மக்களுடன், வளரிளம் பருவத்து இளைஞராக அப்போதிருந்த பீத்தோவன், தொடக்கத்திலிருந்தே புரட்சியின் வலிமையான ஆதரவாளராயிருந்து வந்தார்.
பீத்தோவனின் தந்தை ஜோஹன், ஃப்ளெமிஷ் பரம்பரையிலிருந்து வந்தவர். அந்தக்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இசைக்கலைஞனின் மகன் அவர். ஜெர்மனி யின் பான் நகரின் ஆர்ச் பிஷப் -எலெக்டோர் ஆகப் பொறுப்பு வகித்தவரின் .அவையில் பணி செய்து வந்தவர் ஜோஹன். இவர் தனது ஏழாவது வயதில் முதலாவது பொது இசை நிகழ்வை நடத்தினார். பின்1792-ஆம் ஆண்டில் வியன்னாவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் சந்திக்கச் சென்றவர், ஜோசப் ஹேடன். இவர் இசைமேதையான மொசார்ட்டுடன் சேர்ந்து வியன்னாவின் இசையியல் மரபுக்கு வடிவம் கொடுத்தவர். அதற்கு முந்தைய ஆண்டுதான் மொசார்ட் தனது 35-ஆம் வயதிலேயே மரணமடைந்திருந்தார்.
அப்போது வியன்னா ஹாப்ஸ்பர்க் அப்சொல்யூட்டிஸ்ட் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால், பீத்தோவன் சுதந்திரம் பற்றிய நெப்போலினியச் சிந்தனைகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தார். அவர் மிகத்தீவிரமான குடியரசுக்காரராக ஆகியிருந்தார்; அவருடைய கடிதங்கள், உரையாடல்கள் இரண்டிலும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். தனக்கு வர வேண்டிய ராயல்டி பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. தனது ஆரம்பகாலப் புரவலர்களுள் ஒருவரான கார்ல் லிச்னோவ்ஸ்கி என்பவருக்குப் பீத்தோவன் இப்படி எழுதியிருந்தார் : ” இளவரசே, நீங்கள் இன்றைக்கு என்னவாக இருக்கிரீர்களோ, அது உங்கள் பிறப்பினால் நேர்ந்த விபத்து அது. ஆனால், நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னால் உருவாக்கப்பட்டது !”
ஆஸ்திரியாவின் மன்னரான இரண்டாவது ஃப்ரான்ஸ், பீத்தோவனுடன் இணைந்தோ அல்லது அவருக்காகவோ எந்த ஓர் உதவியையும் செய்ய முடியாதென்று மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடிப்படைக்காரணமாக இருந்தது, “ பீத்தோவனின் இசையில் ஏதோ ஒரு புரட்சிகரமான கூறு இருக்கிறது .” ஜெர்மன் எழுத்தாளரும், மகாகவியுமான கதேயுடன் இசையமைப்பாளர் பீத்தோவன் கொண்டிருந்த நட்பு, அது எந்தவிதமானதாக இருந்திருப்பினும், 1812 -ஆம் ஆண்டில் திடுதிப்பென்று முடிவுக்கு வந்து விட்டது. இருவரும் பூங்காவில் ஒரு நாள் நடைப்பயிற்சியின் போது உரையாடியபடியே போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஆஸ்திரியப் பேரரசி எதிரே வந்திருக்கிறாள். அவ்வளவுதான்; கதே மிகப்பணிவுடன் உடலை வளைத்துக் குனிந்து வணங்கினார். ஆனால், பீத்தோவன் தன் புறக்கணிப்பைத் தயக்கமில்லாமல் வெளிக்காட்டும் விதத்தில் அரசிக்குத் தன் முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று கொண்டார்.
அவருடைய இசைக்கோவைகளில் ஆகப்பெரும்பான்மையானவற்றுள், இந்தப் புரட்சிகரமான உத்வேகம் உள்ளுறை ஆன்மாவாக நீடித்திருந்தது. இந்தப் புதிய யுகத்தினுள் அவர் இசையை உந்தித் தள்ளியிருந்தார். ஜெர்மனின் இலக்கியக்களத்தின் கவித்துவ ஆற்றலையும், புரட்சியின் பிரெஞ்சு கீதங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு வந்ததன் மூலம், இசை என்னவாக இருக்க வேண்டுமோ அந்த வகையில் முற்றிலுமாக அதை மாற்றியமைத்தார். இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி கூறுகிறார் : “ பீத்தோவன், பிரெஞ்சுப் புரட்சியின் நண்பர்; சமகாலத்தவர். இறுதி வரையிலும் அதற்கு விசுவாசம் நிறைந்தவராகவும் இருந்து வந்திருக்கிறார். பிளேபிய அறிவுலகத்து மேதையான பீத்தோவன், மிகுந்த பெருமிதத்துடன் பேரரசர்கள், இளவரசர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆகியோருக்குத் தமது முதுகைக் காட்டிப் புறக்கணித்து வந்திருந்தார். அந்தப் பீத்தோவனைத்தான் நாம் நேசித்துக் கொண்டிருக்கிறோம் : அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கைவாதத்துக்காக, வீரியம் மிக்க துயரச்சாயைகளுக்காக விதியின் தொண்டையைப் பிடித்து நெரிக்குமளவுக்கு ஆற்றலை அவருக்கு வழங்கிய எஃகைப் போன்ற அவரின் மன உறுதிக்காக …! “ இசையமைக்கப்படும் விதம், அது கேட்கப்படும் விதம் இரண்டையுமே அடியோடு மாற்றியமைத்தவர் பீத்தோவன். அவருடைய இசை அமைதியானதல்ல; மாறாக, அதிர்ச்சியூட்டுவதாகவும், தொந்தரவு செய்வதாகவுமே இருக்கும்,.
பீத்தோவனின் இசைக்கோவைகளை நான்கு காலகட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்திக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். அவருடைய வாழ்க்கைக்காலங்களின் மேடுகளுக்கும், பள்ளங்களுக்கும் அம்மாதிரியான வகைப்படுத்தல் பொருந்திப்போகும். அவருடைய வாழ்க்கைக் காலம், மூன்று மாபெரும் புரட்சிகளின் யுகமாயிருந்தது : இங்கிலாந்தின் தொழிற்புரட்சி , ஃப்ரான்சின் அரசியல் புரட்சி, மற்றும் ஜெர்மனியின் மெய்யியல் புரட்சி. அவருடைய வாழ்வின் முதல் காலகட்டம் இளம் சிறுவனாகவும், அதன் பிறகு இளைஞராகவும் ஐரோப்பாவின் புரட்சிகரமான எழுச்சியின் போது கழிந்தது ; அதோடு கூட, முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் ஒரு புதிய பொருளாதார எழுச்சியின் காலகட்டமுமாகும். இந்த எழுச்சி, பிரெஞ்சுப்புரட்சியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றது. அதோடு, கலகக்கார ஜாக்கோபியன் நிர்வாகத்தின் ஏற்றம் 1792-இல் நிகழ்ந்த காலமுமாகும். அப்போது பீத்தோவனுக்கு 22 வயது.
1794 முதல் 1815 வரையிலான இரண்டாவது காலகட்டம், உண்மையில், ஃப்ரான்சில் புரட்சியின் இராணுவப் பாதுகாப்புத் தளபதியான நெப்போலியன் போனபார்ட், தம்மைத்தாமே சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்து கொண்டார்; ஜாக்கோபின்கள் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டனர். இந்த மாற்றத்தின் இன்னோர் அம்சமாக, நெப்போலியனின் இராணுவம், ஐரோப்பா நெடுக புரட்சியின் சிந்தனைகளையும், சட்டங்களையும் பரவலாக விதைத்தன.ஆஸ்திரியா,ஸ்பெயின், இத்தாலி, ப்ரஷ்யா ஆகிய நாடுகளின் அரை நிலப்பிரபுத்துவ, பிற்போக்குவாத அப்ஸொல்யூட் முடியரசுகளை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்தன. நெப்போலியன் அடைந்த வெற்றிகள், பீத்தோவனின் பார்வையில் அவரை ஒரு திருவுருவாகக் காட்சிப்படுத்தின..
இந்தக் காலகட்டத்தில்தான், முதிர்ச்சி அடைந்து கொண்டிருந்த பீத்தோவன் தனது மாபெரும் இசைக்கோவைகளுள் சிலவற்றை உருவாக்கியிருக்கிறார். அவருடைய இணையற்றதோர் இசைக்கோவையான ஐந்தாவது சிம்பொனி, புரட்சியின் இசைச்சாயல்களுடன் பிரிம்மிங் ஆகியிருந்தது. அந்த இசைக் கோவையைப் பற்றிக் குறிப்பிடுகையில், பீத்தோவன் பின்வருமாறு சொல்கிறார் : “ என்னுடைய சிம்பொனி, படுகொலை செய்யப்பட்ட பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் தலைவர் ழீன்- பால் மாரத் பற்றி எழுதப்பட்ட வார்த்தை களை வெளிப்படுத்துகிறது : “ வி ஸ்வியர், ஸ்வோர்ட் இன் ஹாண்ட், டு டை ஃபார் தி ரிபப்ளிக் அண்ட் ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் “ என்கிறார். அவரின் ஒரே ஓர் இசைநாடகமான ஃபிடெலியோ, ஸ்பானியச் சிறையிலிருந்த தனது கணவனும், அரசியல் கைதியுமான ஒருவனை விடுதலை செய்யும் ஒரு தன்னந்தனிப் பெண்ணின் கதையைப் பேசுகிறது. இந்த நாடகத்தின் நிகழிடமும், பின்னணியும் அரசியல் காரணங்களுக்காகப் பிரான்சிலிருந்து அப்பால் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள், ஸ்பெயினில் அப்போதிருந்த ஆட்சி அதிகாரத்தின் மீது அவருக்கிருந்த வெறுப்பும் ஒரு காரணமாயிருந்தது.
ஐந்தாவது சிம்பொனியின் ஒவ்வோர் இசை அலையையும் புரட்சிகரமான உந்துதல் எழுப்பியிருக்கிறது. ’லிசென்’ என்ற இந்தப் படைப்பின் தொடக்க அலைகள் மிகவும் கொண்டாடப்படுபவை. வரலாற்றில், எந்த ஓர் இசைப் படைப்பின் தொடக்க அலைகளைக் காட்டிலும், அனேகமாக இதன் தொடக்க அலைகள் ஆகச்சிறந்த அதிரடித் தொடக்கமாக அமைந்திருக்கக்கூடும். தற்செயலான உடனிகழ்வாக, அவை ‘வெற்றி’ என்பதன் குறியீடான ‘வி’ க்கு உரிய மோர்ஸ் குறியீட்டு அடையாளத்தின் இசைச்சமன்களாக அமைந்திருக் கின்றன.இரண்டாவது உலகப்பெரும் போரின் போது, ஜெர்மானிய ஆக்கிரமிப் பாளர்களை எதிர்த்துப் போராட அணிதிரளுமாறு பிரெஞ்சுக் குடிமக்களை அறைகூவி அழைப்பதற்குப் பயன்பட்ட குறியீடு அது. “ இது இசையல்ல ; இது ஓர் அரசியல் போராட்டம். இது நமக்குச் சொல்வது இதைத்தான் : நாம் பெற்றிருக்கும் இந்த உலகம், நல்லதல்ல; நாம் இதை மாற்றியமைப்போம் ! நாம் புறப்படுவோம் ! “ – நிக்கோலஸ் ஹார்னன்கோர்ட் , இசையமைப்பாளர்
அந்த ஆண்டில், தன் நண்பர் ஒருவருக்குப் பீத்தோவன் எழுதிய கடிதமொன்றில், கண்டனம் செய்யும் தொனியில் அவர் எழுதியிருந்தார் : “ நெப்போலியன் போப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்ட நிமிடத்திலிருந்து, எல்லாமே பழைய குட்டையில் மறுபடி ஊறத் தொடங்கி விட்டன. ” நெப்போலியன் 1804-இல் தன்னைத்தானே பேரரசராகப் பிரகடனம் செய்து கொண்ட போது, அவர் மீது பீத்தோவன் கொண்டிருந்த பெருமதிப்பு கடைசியாகக் கசப்புணர்வாக மாறி விட்டது. இந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை பீத்தோவன் அறிந்ததுமே, மிகுந்த கோபமடைந்த அவர், தனது புதிய சிம்பொனியில் நெப்போலியனுக்கு அர்ப்பணித்திருந்ததைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார். அந்தக் கையெழுத்துப் பிரதி இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் சமர்ப்பணப்பக்கத்தில், ஓர் ஓட்டை விழும் அளவுக்கு அவ்வளவு ஆவேசத்துடன், வன்மையாகத் தாக்கி அழித்திருக்கிறார் பீத்தோவன் என்பதை நாம் பார்க்க முடியும். அதன் பிறகு, புரட்சியின் ஓர் அறியப்படாத நாயகனுக்குத் தன் சிம்பொனியை அர்ப்பணித்திருக்கிறார். எராய்கா சிம்பொனியாக அது உருவெடுத்தது.
பீத்தோவனின் இசையியல் வாழ்க்கையில், மூன்றாவது காலகட்டம், ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் அதிர்ச்சியூட்டும் கீழ் நோக்கிய ஒரு சரிவு, ஆழமான அந்தப் பின்னடைவுக் காலத்துடன் பொருந்திப்போவதாக அமைந்தது. 1815-இல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பழைய முடியரசுகள் உடனேயே மீண்டும் ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டன. பீத்தோவன் அந்தச்சூழலினால் விரக்தியடைந்தார். இந்தக்காலகட்டம் முழுவதிலும் அவர் மிக சொற்பமான இசைக்கோவைகளையே உருவாக்கினார். எங்கு பார்த்தாலும் முற்போக்குச் சிந்தனைகள் பின்வாங்கிக் கொண்டிருந்தன. விக்டோரியா காலத்திய இங்கிலாந்தின் மாபெரும் கற்பனாவாதக் கவிஞர்களான ஷெல்லியும், பைரனும் நிர்ப்பந்தமாக வேறு நாடுகளில் புகலிடம் தேடியாக வேண்டியிருந்தது. மேரி ஷெல்லி, ஃப்ரான்க்கென்ஸ்டெய்ன் என்றொரு நாவலை எழுதினார். மூடநம்பிக்கைகள், இனவாதம் இவை இரண்டின் மீதும் கடும் அதிருப்தியை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. அதே போல, எழுச்சி பெற்று வரும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில், கட்டுப்பாடற்ற, அறிவியல்பூர்வமான தொழிற்துறைக்கு எதிரான ஒரு மன நிலையையும் வெளிப்படுத்துகிறது. கற்பனாவாத மிகையுணர்வு, புரட்சிகரமான உணர்வுகளின் முடிவு இது. டேவிட் ரிகார்டோவைப் போன்ற ஏறக்குறைய பீத்தோவனின் சம வயதினரின் காலகட்டம் இப்போது தொடங்கியிருந்தது. வரி விதித்தல், அரசியல் பொருளாதாரம் பற்றிய தன் கொள்கைகளை 1817-இல் டேவிட் ரிகார்டோ எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்தின் ஏவலாளான பூர்ஷ்வாப் பொருளாதாரத்தின் திட்டவட்டமான படைப்பு இது.
ஐரோப்பிய மக்களுக்கு 1816-19 ஆம் ஆண்டுகள் மிகப் பயங்கரமானவை ; ஆனால், கோவிட் தீ நுண்மிப் பெருந்தொற்று ஆண்டான 2020-ஐ போன்றவையல்ல. ஐரோப்பியப் பொருளாதாரம், நிரந்தரமானதொரு குளிர் காலத்தினுள் புதையுண்டு போனது. பொருளாதார ரீதியாகவும், உண்மையான பொருளிலும் ஆக இருவகையிலும் புதையுண்டு போன காலமிது. 1816-ஆம் ஆண்டு, ‘வறுமை ஆண்டு’ என்றும், ‘கோடை காலமே இல்லாத’ ஓர் ஆண்டு என்றும் அறியப்பட்ட ஓர் ஆண்டானது. காரணம், மிகத்தீவிரம் வாய்ந்த, அசாதாரணமான தட்பவெப்ப நிலைகளும் ஐரோப்பிய வானிலையைப் பாதித்தன. இதன் விளைவாக, வரலாற்றில் பதிவான படுமோசமான குளிர் நிரம்பிய காலத்தின் பிடியில் ஐரோப்பா சிக்குண்டது. இதன் விளைவாகப் பெருமளவுக்கு உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. ஜெர்மனியில் இந்தச்சிக்கல் மிகத் தீவிரமானதாயிருந்தது. ஐரோப்பா முழுமையிலும் உணவு விலைகள் கிடுகிடுவென வானளவுக்கு உயர்ந்தன. பசிக்கொடுமை நிறைந்த காலங்களில் கலகங்கள் நடப்பது சாதாரணம்தான். ஆனால், 1816- 19 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உணவுக்கலகங்கள், பிரெஞ்சுப் புரட்சிக்கு அடுத்து மிக அதிகப்பட்ச அளவுக்குக் குடிமக்களின் வன்முறையை வெளிப்படுத்தின. 19- ஆம் நூற்றாண்டின் படு மோசமான பஞ்சமாக, ஐரோப்பிய முதன்மைப் பகுதியில் நிலவியது.
வியன்னாவின் பிற்போக்குத்தனமான சூழலில் மூச்சுத் திணறி, மேம்பட்ட ஒரு நிலையை உருவாக்கவல்ல எந்த ஒரு மாற்றமும் தென்படாத நிலையில் மிகுந்த விரக்தியுற்ற பீத்தோவன், பின் வருமாறு எழுதினார் : “ கொஞ்சம் பழுப்பு பீரும், தொட்டுக்கொள்வதற்குக் கொஞ்சம் ஊறுகாய்களும் ஆஸ்திரியாக்காரன்களிடம் எஞ்சி இருக்கும் வரையில், அவர்கள் ஒருபோதும் புரட்சிக்காகக் கிளர்ந்து எழப் போவதில்லை !”
எனினும், 1820-களிலிருந்து நீடித்த, பீத்தோவனின் இறுதிப்பத்தாண்டுக்காலம் ஐரோப்பியப் பொருளாதாரத்தில் ஒரு மீட்டெடுப்பைக் கண்டது. காரணம், முதலாளிய உற்பத்தி முறை பரவலாகி வந்தது. பெரும்பாலும் ஊரகப்பகுதிகளே நிரம்பியிருந்த ஜெர்மனியையும், ஆஸ்திரியாவையும் தொழிற்பெருக்கம் உருமாற்றி விட்டது. உண்மையில், 1825-இல் முதல் முதலாளியப் பொருளாதார எழுச்சி நிகழ்ந்திருந்தது. பிற்பாடு, பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடையாளங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கின. பிரான்சில் 1830-இல் மீட்டெடுக்கப்பட்டிருந்த போர்போன் முடியரசைத் தூக்கியெறிவதற்கு அவை வழி வகுத்தன. இங்கிலாந்தில் 1832 -இல் சீர்திருத்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவாக, முதன்முறையாக, வசதி படைத்த குடும்பங்களின் வயது வந்த ஆண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
1824-ஆம் ஆண்டில், பீத்தோவன் தன் இறுதியான, மகத்தான இசைக்கோவை யை வெளியிட்டார். நீண்டகாலமாக அவருடைய மனதில் அலையோடிக் கொண்டிருந்த ஒரு சிந்தனையின் வெளிப்பாடு அது. கோரல் சிம்பொனி ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற கனவுதான் அது. ஜெர்மன் கவிஞரான ஷில்லரின் ‘ஆனந்தத்துக்கான வேட்கை’ என்ற கவிதையை தன் இசைக் கோவைக்கான மூலப்பிரதியாக பீத்தோவன் தேர்வு செய்திருந்தார். இதை அவர் 1792-ஆம் ஆண்டிலிருந்தே அறிந்திருந்தவர் அவர். ஜெர்மன் குடியரசுக் கட்சியினருக்கான குடியின் கீதத்திலிருந்து எடுக்கப்பட்ட இக்கவிதை, முதலில் 1785-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையில், ஷில்லர் தனது பாடலுக்கு ’சுதந்திரத்துக்கான வேட்கை’ என்றுதான் தலைப்பிடலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், பிற்போக்கு சக்திகளிடம் இருந்து வந்த அளவற்ற நிர்ப்பந்தங்களின் நெருக்கடி காரணமாக, ‘சுதந்திரம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, ’ ஆனந்தம் ‘என்ற வார்த்தையைத் தேர்வு செய்யுமாறு நேர்ந்தது. ஷில்லரின் இந்தச் சொல்லாடல்களே ஒன்பதாவது சிம்பொனியின் மைய இழையாக அமைந்திருக்கின்றன. இந்த இசைக்கோவையைத்தான் ஐரோப்பிய ஒன்றியம் தனது தேசிய கீதமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. 1827-இல் பீத்தோவன் மறைவெய்தினார். மகத்தான ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கை, மேற்கண்ட நான்கு கட்டங்களைத் தாண்டி நிறைவடைந்தது…
(Beethoven: revolutionary times என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)
(தோழர் கமலாலயன் அவர்களிடம் இக்கட்டுரையை மொழியாக்கம் செய்யவேண்டும் எனக் கேட்டபோது மனமுவந்து அதை ஒப்புக்கொண்டார். தற்போது ஆறுமாத கால ஓய்வுக்காக லண்டன் சென்றிருக்கும் அவர் தனது வசிப்பிடமான லண்டன் மெய்டன்ஹெட் பகுதியிலிருந்து மூன்று தினங்களுக்குள்ளாகவே (13.05.2022, 15.05.2022) இம்மொழியாக்கத்தை செய்து அனுப்பியிருக்கிறார். தோழர் கமலாலயனுக்கு நன்றியும், அன்பும்)
மூலக்கட்டுரையை வாசிக்க…