பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் – நூல் அறிமுகம்
பேராசிரியர் பா. மதிவாணன்
யானிஸ் வருஃபாகிஸ் எழுதிய ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்னும் இந்த நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு முன்பே, பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளில் பெயர்க்கப்பட்டுவிட்டது.
இதனை ஆங்கிலத்தின் வழி நயங்குன்றாமல் தமிழாக்கியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை ; எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்க முடியாது.
‘க்ரியா’ தனக்குரிய தரங்குன்றாமல் வெளியிட்டுள்ளது.
இருவர்க்கும் எத்துணை நன்றி சொன்னாலும் தகும்.
என் பொருளியலறிவை அரைகுறை என்றுகூட சொல்லமுடியாது. ஆனாலும் அத்துமீறும் வாய்ப்பை ஆசிரியரே தருகிறார். நூலறிமுகம் நீண்டு விட்டதும் ஓர் அத்துமீறலே. பொறுத்திடுக; படித்திடுக.
” பொருளியலாளர்¹களிடம் விட்டுவைக்கப் படக் கூடாத மிக முக்கியமான விஷயமே பொருளாதாரம்² என்று நான் உறுதியாக நம்புவதுதான் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணம்” (ப.13) என்கிற வருஃபாகிஸின் தொடக்கமே வாயில் திறந்து நம்மை வரவேற்கிறது.
“இளம் வயதினர் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் பொருளாதாரத்தை உங்களால் விளக்க முடியவில்லை என்றால் , உங்களுக்குமே அது புரியவில்லை என்றுதான் … எப்போதும் கருதியிருக்கிறேன்” (பக்.13-14) என்று பொருளாதார ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு வைக்கிறார்.
” அடிக்குறிப்புகள், ஆதாரக் குறிப்புகள், கல்விப்புலம் அல்லது அரசியல் சார்ந்த புத்தகங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் எதுவும் தரப்படாமல் நான் எழுதியுள்ள புத்தகம் இது ஒன்றுதான். அந்த ‘சீரியஸான’ புத்தகங்களுக்கு மாறாக, நான் இதை எனது சுதேசிமொழியில்தான் எழுதினேன் ” (ப.15) என்கிறார்.
‘முதலாளியம்’ என்பதற்குப் பதிலாகச் ‘சந்தைச் சமுதாயம்’, ‘மூலதனம்’ என்பதற்குப் பதிலாக ‘இயந்திரங்கள்’ , ‘உற்பத்திக்கான சாதனங்கள்’ எனப் பயன்படுத்துகிறார். ” பிரத்தியேகமான அர்த்தங்கள் கொண்ட கடினமான சொற்களைத் தவிர்க்க முடியும்போது அவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்?”( ப.17) என்று வினவுகிறார்.
” பொருளியலாளர்கள் , கணிதத்தைப் பயன்படுத்துவதன் காரணமாகத் தங்களை அறிவியலாளர்கள் என்று வலியுறுத்திக் கூறிக்கொள்வதற்கும் , வானவியலாளர்களைப் போலவே கணினியையும் சிக்கலான விளக்கப்படங்களையும் பயன்படுத்துவதால் தாங்களும் அறிவியலாளர்களே என்று சோதிடர்கள் கூறிக்கொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
” அதிகபட்சமாகச் சொல்வதென்றால் , நாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த தத்துவவாதிகளே தவிர வேறல்ல என்பதை ஒத்துக்கொள்வோமேயானால், நாம் அறிவியலாளர்கள் என்று பாசாங்குசெய்துகொண்டு , ஒரு சந்தைச் சமுதாயத்தின் எந்த ஆளும் வர்க்கங்களை நியாயப்படுத்தி வருகிறோமோ அந்த ஆளும் வர்க்கங்களால் நமக்குத் தொடர்ந்து கொழுத்த சன்மானங்கள் வழங்கப்படுவது சாத்தியமில்லாமல் போய்விடும் “(பக். 200 – 201) என்று பொருளியலாளரை இடித்துரைக்கிறார்.
சற்றுக் கடுமையான சுயவிமரிசனக் குறிப்புகள்தாம்.
பிறிதோரிடத்தில்,” பொருளாதாரம் பற்றி நன்கு எழுதுபவர்கள், தங்களின் மிகச்சிறந்த கருத்துகளைக் கலைஞர்கள், நாவலாசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரிடமிருந்து கடன் வாங்குகிறார்கள்” (ப.123) என்கிறார்.
அறிமுக நூலைப் படித்துவிட்டுக் கோட்பாட்டுச் சிலம்பம் சுழற்றும் தமிழ்கூறு ‘நல்’லுலகிற்கு ஓர் இன்றியமையா எச்சரிக்கையை நான் சொல்லியாக வேண்டும்:
எளிமை என்பது முற்றிய துறைப்புலமையின் சாதனை; எல்லோர்க்கும் இயல்வதன்று.
வருஃபாகிஸ் பொருளியல் பேராசிரியர்; உண்மையிலேயே பேராசிரியர் (நூலின் பின்னட்டை உள் மடிப்புக் காண்க).
தன் மகளுக்குச் சொல்லும் பான்மையில் அவர் எழுதிச் செல்லும்போது நாமும் உடனிருந்து கேட்பதுபோல் படித்துச் செல்லமுடிகிறது.
அன்றாட நிகழ்வுகள், வரலாற்று நிகழ்ச்சிகள் முதல் கிரேக்க , ஆங்கில, ஜெர்மானியச் செவ்வியல் இலக்கியங்கள், திரைப்படங்களினூடாகப் பொருளாதரம் புலப்படுத்துகிறது இந்நூல்.
ஒட்டுமொத்த நூலின் அடிப்படை இழைகள் அனுபவமதிப்பும்(experiential value) , பரிவர்த்தனைமதிப்பும் (exchange value) தாம்.
எகினா தீவில் ஒரு மாலைப்பொழுது. நண்பர்களுடன் மராதோனாஸ் கடற்கரைக்குச் செல்லும் வருஃபாகிஸுடன் மகள் – சிறுமி – ஸீனியாவும் செல்கிறாள். கேப்டன் கோஸ்டாஸின் நங்கூரம் பாறையின்கீழ் மாட்டிக்கொண்டது. மூட்டு வலி காரணமாக அவரால் முக்குளிக்க இயலவில்லை. ஸீனியாவின் உதவியை நாடுகிறார்.
இருண்ட கடல் தரும் அச்சம், உடை களைதல், உடல் குளிர்தல், ஈரமாதல், உப்புப்படிதல் முதலிய அசௌகரியங்கள் கடந்து சாகச உணர்வுடன் குதித்து, முக்குளித்து நங்கூரம் விடுவிக்கிறாள் சிறுமி ஸீனியா. இந்தக் குதூகலமே அனுபவமதிப்பு.
இத்தகைய, வாழ்வை மகிழ்ச்சியால் நிரப்பும் ‘நல்லவை’ (goods) க்கும், கடை அலமாரிகளில் விற்பனைக்கு உள்ள பொருட்களுக்கும் (goods)³ வேறுபாடு உண்டு . பொருட்களின் இன்னொரு பெயர் சரக்குகள்(commodity).
வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காய்கனிகள் காய்கறிகளைச் சேகரித்தல் என இயற்கையோடு இயைந்திருந்த காலத்தில் உபரி (surplus) இல்லை. பசியைப் பகிர்ந்து கொள்ளும் நெருக்கடி நேர்ந்த கட்டத்தில் இயற்கையை உற்பத்தி செய்ய வைக்க வேண்டியதாயிற்று. வேளாண்மை பிறந்தது. “பொருளாதாரம் என்று அழைக்கப்படுவதன் அடிப்படை அம்சத்தை வேளாண் உற்பத்தி உருவாக்கியது: அதுதான் உபரி ” (ப. 24)
விளைந்தவற்றில் உண்டவையும், அடுத்து விதைப்பதற்குரியவையும் போக எஞ்சியவைதாம் தொடக்ககால உபரி.
உபரியின் விளைவாகப் பேச்சு மொழியின் அடுத்தகட்டமாகிய எழுத்து, கடன், பணம், அரசு, அதிகாரி வர்க்கம், இராணுவம், மதகுரு , தொழில்நுட்பம் ஆகியனவெல்லாம் உருவானதை விளக்குகிறார் வருஃபாகிஸ்.
போகிறபோக்கில் ஆதியில்…உபரி இருந்தது⁴ (ப.32)என விவிலியத் தொடரைப் பகடி நயத்துடன் ஆளும்போது பொருள் அழுத்தமும் கூடுகிறது.
oikos (வீடு) + nomoi ( சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள்) →oikonomia →Economy
எனப் பொருளாதாரத்தின் சொற்பிறப்பியல் காட்டும் வருஃபாகிஸ் , இப்போதைய சந்தைப் பொருளாதாரத்தை agoranomy (agora = சந்தை) என்று சொல்லவேண்டுமெனினும் பழகியதனால் பழைய சொல்லையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார்.
பண்டைய சமூகங்களில் சந்தைகள் இருந்தன. ஆனால் அவை சந்தைச் சமூகங்களல்ல என்கிறார்; பண்டைய கிரேக்கர் ரோமானியரிடையேபொருள்களின் விலைமதிப்பை விடவும் கெளரவ(honour) மதிப்பே போற்றப்பட்டதை எடுத்துக்காட்டுகிறார். அப்போது பொருள்கள் சரக்குகளாகக் கருதப்படவில்லை.
“அடிமைமுறையும் நிலப்பிரபுத்துவ முறையும் இருந்த காலங்களில் கொத்தடிமைகளும் பண்ணையடிமைகளும் கடினமாக வேலை செய்தார்களேயன்றித் தங்கள் உழைப்பைத் தமது எஜமானர்களுக்கு விற்கவோ (அல்லது வாடகைக்கு விடவோ)இல்லை… அந்த உழைப்பாள்களின் கருவிகள் அதே பண்ணையில் வேலை செய்துவந்த கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டவை… இறுதியாக, நிலமும் கூட ஒரு சரக்காக இருந்ததில்லை” (ப.50 )
பின்னர் வணிகம் உலகளாவிய கதையை அவரே சுருக்கமாகத்தான் சொல்கிறார். ஒரு கட்டத்தில் பெரு நிலவுடைமையாளர்கள் வணிகம் சார்ந்த உற்பத்திக்குத் தங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்தினார்கள். பிரிட்டனில் அடிமைகளாகிய மந்தைகளை ஆட்டுமந்தைகளால் மாற்றீடு செய்தனர்.நிலம் சரக்காயிற்று.
பிரிட்டனில் பண்ணையடிமைகள் வாழ்வு பரிதாபத்திற்குரியதாயிற்று. 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் பூர்வீக நிலங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்;வறுமையாலும் பஞ்சங்களாலும் நோய்களாலும் பீடிக்கப்பட்டனர். இது மிருகத்தனமான கொடூரமான நிகழ்வு.
பல பதிற்றாண்டுகளுக்குப் பிறகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட பின் உழைப்பை விற்கும். ‘சுதந்திரம்’ கிடைத்தது. எல்லாமும் விற்பனைச் சரக்குகளாயின.
வீடு, கார்,தக்காளி போன்ற பொருள்களின் பரிவர்த்தனை மதிப்பு இறுதியில் அவற்றின் அனுபவமதிப்பிலிருந்தே பெறப்படுகிறது என்பதை – வழக்கம் போல் சுவைக் குறிப்புடன்- விளக்கும் வருஃபாகிஸ் , உழைப்புக்கு அது பொருந்தாதென்பதை உணர்த்துகிறார்.
தொழிற்சங்கங்கள் ஊதியக் குறைப்புக்கு ஒப்புக்கொள்வதால் மட்டுமே புதிய தொழிலாளரகளை அமர்த்த முடியாது என்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் தேவை, ஊதியக் குறைவால் தேவை குறைதல் , பொருள் தேக்கம் – என்னும் பணச் சுழற்சியின் இழுபறிக்கும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துதலுக்குமான ஏறுமாறான போக்கை உணர்த்துகிறார். ‘இயல்பான வேலையின்மை’ என ஒன்றைப் பொருளியலாளர்கள் சொல்வது பற்றியும் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் பற்றியும் விமரிசனக் குறிப்பை முடிவுரையில் தருகிறார்.
கடன், வட்டி, வங்கி என்பவை சந்தைச் சமுதாயத்தின் இன்றியமையாமையாயின. பணமே வணிகப்பொருளாயிற்று. ” கடன் தான் தொழிற்புரட்சி என்னும் இயந்திரத்தை இயக்கிய உண்மையான எரிபொருளேயன்றி நிலக்கரி அல்ல” (ப.69)
பொருளாதாரம் இலக்கியத்தினூடாகத் தன்னைக் காட்டிக் கொள்வதைவதை வருஃபாகிஸ் , பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் மார்லோ எழுதிய ஃபவுஸ்டஸ் நாடகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதே எழுதிய ஃபவுஸ்டஸ் நாடகத்தையும் ஒப்பிட்டு வட்டி பற்றிய சமூக மனோபாவ மாறுதலைப் புலப்படுத்துவது சுவையானது. கத்தோலிக்கம் X புரொடஸ்டண்டு முரண்பாட்டுக்கும் பொருளாதார அடித்தளம் காட்டுகிறார்.
வாராக்கடன்கள் பற்றிய செய்தி வராத நாளே இல்லை என்கிற நிலையிலுள்ள நமக்கு , அரசு அந்தக் கடன்களைக் கையாளுவது பற்றிய தெளிவையும் , தொழில்முனைவோர் – அரசுக்கிடையிலான முரணும் இணக்கமுமான உற[ழ்]வையும் இந்நூல் நன்கு புலப்படுத்துகிறது.
பணத்தை அரசுடன் தொடர்பற்றதாக மாற்றும் முயற்சியில், டிஜிடல் யுகம் தந்த வாய்ப்பு பிட்காயின்; 2008 நவம்பர் 1ஆம் நாள் சடோஷி நகமோட்டோ என்னும் மின்னஞ்சலாளர்- தனியொருவரையோ குழுவையோ குறிக்கும் புனைபெயராளர் – அனுப்பிய கணினி நிரலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் கொடுக்கல் வாங்கல் கண்காணிப்பு ‘ஒவ்வொருவரிடமும்’ இருந்தது. இதில் எதிர்பாரா வகையில், தவிர்த்திருக்கக்கூடிய, மோசடி நிகழ்ந்தபோது அரசின் தேவை உணரப்பட்டது. அது மட்டுமன்றி வேறு சில நெருக்கடிகளும் உருவாகும்.
” கார்ப்பரேட் லாப வேட்டையின் பொருட்டு , நிகர பரிவர்த்தனை மதிப்பு எவ்வளவு காலத்துக்குக் கிடைக்குமோ அவ்வளவு காலம் மாசு ஏற்படுத்துவதிலும் சுரண்டலிலும் ஈடுபட்டு, நமது புவிக்கோளத்தை , நரகத்திலல்ல , நாமே உருவாக்கிய அடுப்பில் எரிந்துபோக வைக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன” (ப.177)
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு(Environmental Impact Assessment or EIA ) நம்மிடையே – நம்மிடையே மட்டும்தான் – விவாதத்திற்குள்ளாகியிருக்கிற சூழலில் ‘ வெறும் அனுபவமதிப்பு மட்டுமே உள்ள இயற்கை வளங்களை எங்களிடம் விட்டுவிட்டால் நாங்கள் அதைப் பரிவர்த்தனை மதிப்புள்ளதாக்கிப் பாதுகாக்கவும் செய்வோம் ‘ என்றொரு தீர்வு காத்திரமாகவே (serious) கார்பரேட்களால் முன்வைக்கப் படுவதை வருஃபாகிஸ் எடுத்துக்காட்டுவது எனக்கு வியப்பளித்தது. இதுதான் இன்றைய மோஸ்தர் என்கிறார்(ப.182)
” தனியார் நலன்களையும் புவிக்கோளத்தின் நலன்களையும் ஒன்றிணைக்க முடியுமா?
நிச்சயமாக முடியும்! அபாரிஜின்கள்[ ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ] இதை நன்றாகவே செய்தனர். வேட்டையாடுவதிலும் மீன்பிடிப்பதிலும் நாள் முழுவதையும் செலவழிக்காமல் தங்களைத் தாங்களே பேணிப் பராமரித்துக்கொள்ள எல்லோரும் அழகாக ஒன்றுசேர்ந்து பாடுபட்டனர். இதன் காரணமாக அவர்களது ஓய்வுநேரத்தைச் சடங்குகள், கதை சொல்லுதல், ஓவியம் தீட்டுதல் , பாடல்களைப் பாடுதல் ஆகியவற்றில் செலவிட்டனர். தனி நபர்களாக மட்டுமன்றி, ஒரு சமுதாயமாகவும் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ விரும்பிய அவர்களால் ஓர் அசலான நல்வாழ்க்கையை வாழ முடிந்தது. இது, அவர்களை எதிர்கொண்ட ஆங்கிலேயர்களிடம் பொறாமையை உருவாக்கியது” (பக். 177 – 178)
சந்தைச் சமுதாயங்கள்தான் இறுதியான இயற்கையான அமைப்பு என்று நிரூபிக்க முயல்கிறது ஆளும்வர்க்கம் . இதற்கான சமயச்சார்பற்ற கருத்துநிலையாகத் திகழ்கிறது பொருளியல்.
ஆனால், அது உண்மையன்று என்பதால்தான் வருஃபாக்கிஸ் பொருளியலையே விமரிசனப் பார்வைக்கு உட்படுத்துகிறார்.
உண்மையான மகிழ்ச்சி பற்றியும் – தத்துவச் சாயலுடன் – விவாதிக்கிறார். ஹால்பெவாம்(HALPEVAM: Heuristic Algorithmic Pleasure-Experiential Value Maximizer) என்கிற [கற்பனைக்] கணினி தரும் நிரந்தர மீள இயலாத மகிழ்ச்சி உலகம் ஒன்றைக் காட்டும் வருஃபாகிஸ், ” திருப்தியால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைவிட , அதிருப்தியடைவதற்கான சுதந்திரமே நமக்குத் தேவை” (ப.194)என்கிறார்.
ஜனநாயகமே தீர்வு என்கிறார்.
ஒரு நாவலைப்படிக்கும் , இலக்கிய அனுபவம் தரும் பொருளாதார நூல் இது.
ஆங்கிலத்தின் சாதாப்பதிப்பு(paperback) விலை ₹ 449/- ,தமிழ்ப் பதிப்பு₹ 275/-தான்
- Economist , 2.Economy [ Economics = பொருளியல் என எஸ்.வி.ஆர். மொழிபெயர்த்துள்ளார்]
- நல்லவை, பொருட்கள் இரண்டையும் குறிப்பதாக goods என்பது ஆங்கிலத்தில் ஆளப்பட்டுள்ளது[நயமுமாம். தமிழில் வாய்ப்பில்லை]
- எஸ்.வி. ஆர். ” தொடக்கத்தில்…உபரி இருந்தது” என்று மொழிபெயர்த்துள்ளார்.