ஸ்குவிட் கேம் / SQUID GAME – யமுனா ராஜேந்திரன்
வாழ்வே கடும்போட்டிதான் என்கிற மாதிரிச் சித்தரிக்கிற முதலாளித்துவத்தின்அதீதப் போட்டியைப் பற்றிச் சொல்வதாக, நவீன முதலாளித்துவ சமூகம் குறித்த உருவகமாக, கட்டுக்கதையாக ஒரு கதையை நான் எழுத விரும்பினேன். நாம் யதார்த்த வாழ்வில் சந்திக்கிற குணச்சித்திரங்களை இதற்குப் பயன்படுத்த நினைத்தேன். உயிர்வாழ்தலுக்கான விளையாட்டு எனும் அளவில் இது மானுட நாடகமாகவும் பொழுதுபோக்காவும் இருக்கும் என நினைத்தேன். சித்தரிக்கப்பட்ட விளையாட்டுகள் மிக எளிமையானவை, புரிந்துகொள்ளச் சுலபமானவை. இது விளையாட்டுக்களைச் சிரமப்பட்டுப் புரிந்துகொள்வதை விடுத்து, கதாபாத்திரங்களின் மீது கவனம் குவிக்கக் காரணமாக இருக்கிறது.
குவாங் தாங் ஹயுக்
ஸ்குவிட் கேம் இயக்குனர்
I
ஸ்குவிட் கேம் (2021) திரைத்தொடர் முதலும் முடிவுமாக நிலவும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சுரண்டலும் குரூரமும் வன்முறையும் பற்றியது. திரைத்தொடரின் கதைத்தன்மை, சமூகப்பின்னணி எனும் அளவில் ஸ்குவிட் கேம் திரைத்தொடருக்கு முன்னோடித் திரைப்படங்கள் உண்டு.
ஜப்பானிய இயக்குனர் பிஞ்ஜி புக்காசாவு இயக்கிய பேட்டில் ராயல் (2000), அமெரிக்க இயக்குனரான கேரி ரோஸ் இயக்கிய த ஹங்கர் கேம்ஸ் (2012), தென்கொரிய இயக்குனரான கிம் டு கிக் இயக்கிய பியட்டா (2012), வெளிநாட்டுப் பிரிவிலான சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுபெற்ற தென் கொரிய இயக்குனரான பாங்க் ஜோன் ஹ_வின் பாரசைட் (2019) போன்றன இந்தத் திரைப்படங்கள். வறுமையும் வன்முறையும் குறித்தன இந்தப்படங்கள்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஜப்பானிய சமூகத்தில் பொருளாதார வீழ்ச்சியும் சம்பளக்குறைப்பும் பெரும் வேலையின்மையும் நிலவிய காலத்தில் இதற்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் கலகத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களை ஒடுக்குவதற்காக ஜப்பானிய அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்தச் சமூகப் பின்னணியில் பேட்டில் ராயல் படம் உருவாகிறது. தனித்தொரு தீவில் அடைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் வென்று வருபவர் அங்கிருந்து விடுதலை பெறத் தகுதியானவர். அவர்களது கழுத்தில் வெடிக்கத்தக்க ஒரு கழுத்துப்பட்டி பூட்டப்பட்டிருக்கும். தோற்றவர் அல்லது நியதிக்கு எதிராகக் கலகம் செய்பவரது கழுத்து வெடித்துச்சிதறி உடனடியாக அவர் மரணமுறுவார்.
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் தோழமையாகவும் இருக்க வேண்டிய மனிதரை தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமது சகமனிதரைக் கொல்லுமாறு ஏவும் போட்டி குறித்தது பாட்டில் ராயல் படம்.
அமெரிக்கச் சமூகத்தில் அமெரிக்க மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒரு யதார்த்தம். நியூயார்க் மாநிலம் உச்சபட்சமான செல்வத்தைக் கொண்டிருக்க நியூ மெக்சிக்கோ பலபடிநிலைகள் கீழே இருக்கின்றது என்பது இருபதாம் நூற்றாண்டு யதார்த்தம். இந்தச் சமநிலையின்மை செல்வம் படைத்தவர்களின் ஆதிக்கத்தைப் பிறமக்கள் மீது செலுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை உருவாக்குகிறது. இந்தச் சமூகப் பின்னணியை ஹங்கர் கேம்ஸ் படம் எடுத்துக்கொள்கிறது.
பொருளாதார ரீதியில் தோல்வியுற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் யுவதிகளையும் இளைஞர்களையும் தேர்ந்துகொண்டு அவர்களுக்கிடையில் போட்டியிட்டு ஒருவரைக் கொன்று மற்றவர் வெற்றியாளராக வரவேண்டும்.
பேட்டில் ராயல் படம் போலவே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் தோழமையாகவும் இருக்க வேண்டிய மனிதரை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தமது சகமனிதரைக் கொல்லுமாறு ஏவும் போட்டி குறித்தது த ஹங்கர் கேம் படம்.
தென்கொரியப் படங்களான பியட்டா, பாரசைட், ஸ்குவிட் கேம் என மூன்றுமே தென்கொரிய சமூகத்தின் வேலையின்மை குறித்தது, வறுமை குறித்தது, வட்டித் தொழிலின் கொடுமை குறித்தது. அரசியல் மொழியில் முதலாளித்துவ சமுக அமைப்பும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் வங்கித் தொழில் நிறுவனமும் குறித்தது. இந்த மூன்று படங்களுமே தென்கொரிய சமூகம் பற்றிய இருபத்தியோராம் நூற்றாண்டு குறித்த சித்திரம்.
தென்கொரியாவில் நிலவுகிற குரூரமான ஒரு பிரச்சினையை பியட்டா எடுத்துக் கொள்கிறது. கடும் வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள், கடன்வாங்கும் அதே தருணத்தில் இன்சூரன்ஸ் படிவம் ஒன்றிலும் கையொப்பமிட்டுத் தரவேண்டும். வேலைத்தளத்தில் விபத்து நேர்ந்து ஊனமுற்றுவிட்டால் கிடைக்கக் கூடிய இன்சூரன்ஸ் தொகைக்கான வேண்டுதல் படிவம் அது. கடன் தரும் வட்டிக்காரன் வசம் அந்த விண்ணப்பம் இருக்கும். வட்டிதர முடியாதவனை வலுக்கட்டாயமாக ஊனமாக்கி அந்தப்பணத்தை வட்டிக்காரன் எடுத்துக்கொள்வான்.
இப்படி ஒரு வட்டிக்கார முதலாளியிடம் வேலைசெய்யும் ஒரு தாயற்ற இளைஞனான கருணையற்ற கையாள்தான் பியட்டா படத்தின் நாயகன். கொஞ்ச நஞ்சமும் கருணையற்று கடன் வாங்கிய வறிய மனிதர்களின் கைகளையும் கால்களையும் துண்டிப்பவன் கையாளான காங் டு. இவனது வன்முறை வாழ்வே பியட்டா படம்.
பாரசைட் படம் தென்கொரியாவின் நகர்களில் தரைக்குக் கீழ்தளக் குடியிருப்பில் வாழும் வேலையற்ற ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. மழைநாட்களில் நகரின் தெருக்களில் பெருகும் வெள்ளத்துடன் சாக்கடை நீரும் கலந்து இந்தக் குடியிருப்புகளில் புகும்போது அங்கு வதியும் முழுக் குடும்பங்களும் சாக்கடை நீரில் மூழ்குவர். இத்தகைய கீழ்தளக் குடியிருப்பில் வாழும் ஒரு குடும்பத்தவர் தாய் தந்தை மகன் மகள் என நால்வரும் பொய்சொல்லி ஒரு பெரும் பணக்காரரின் வீட்டில் திட்டமிட்டு வேறுவேறு பணி செய்பவர்களாக நுழைகிறார்கள்.
இந்த ஏற்றத்தாழ்வும் மனித மாண்புகளின் சீர்குலைவும் அந்த வீட்டில் நிகழும், செல்வர்கள் கூடும் ஒரு விருந்து நிகழ்வில் பெரும் கொலைக்களமாக வடிவமெடுக்கிறது. ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கிறார்கள். இரத்தம் பெருகுகிறது. வறுமையும் வன்முறையும் குறித்த படம் பாரசைட்.
பேட்டில் ராயல், த ஹங்கர் கேம்ஸ், பியட்டா மற்றும் பாரசைட் எனும் இந்தப் படங்கள் உலக அளவில் ஒரு புதிய வகைத் திரைப்பட வகையினத்திற்கான மாதிரிகளாக ஆகின. பரந்துபட்ட மக்கள் திரளின் அனறாட வாழ்வுடன் தொடர்பு கொண்ட பெரும் வசூல் குவித்த படங்களாக பெரும் பார்வையாளர் பரப்பை எட்டிய படங்களாக ஆகின.
குறிப்பாக விளையாட்டையும் வன்முறையையும் இணைத்த பேட்டில் ராயல், த ஹங்கர் கேம்ஸ் என இரண்டு படங்களும் மிகப்பெரும் தாக்கத்தை இளைய சமூகத்தினரிடம் உருவாக்கின. பள்ளிச் சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை இப்படங்கள் இரத்தம் தெறித்தலும் வன்முறையும் சாகச விளையாட்டுமாகத் தங்கின.
போர் மற்றும் வன்முறை விளையாட்டுக்களை வெளியிடும் வீடியோ கேம் நிறுவனங்கன் பலபத்து கேம்களை இந்தப் படங்களின் அடிப்படையில் உருவாக்கி வெளியிட்டன. காரணம் இந்தப் படங்களின் கதைகளில் விளையாட்டில் ஈடுபட்டவர்கள் பள்ளி மாணவர்கள் (பேட்டில் ராயல்) 12 வயதுச் சிறுமிகள், 18 வயது இளைஞர்கள் (த ஹங்கர் கேம்ஸ்).
இதன் விளைவுகள் எத்தகையதாக இருந்தன என்பதற்கு இன்றைய சான்று ஒன்றைச் சொல்லலாம். இங்கிலாந்தில் கல்வித்துறை சார்ந்தவர்கள் ஸ்குவிட் கேம் படத்தை தமது குழந்தைகள் பார்ப்பதை தடுக்குமாறு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஜப்பானிய பேட்டில் ராயல், அமெரிக்க த ஹங்கர் கேம்ஸ் தென்கொரிய பியட்டா, பாரசைட் பின்னணியில்தான் நமக்கு ஸ்குவிட் கேம் திரைத்தொடர் பார்க்கக் கிடைக்கிறது. ஸ்குவிட் கேம் படம் நெட்பிளிக்ஸ் தளத்தின் வரலாற்றில் முதன்மைப் பார்வையாளர்களைக் கொண்ட படமாக ஆகியிருக்கும் சூழலில் நெட்பிளிக்ஸ் நிர்வாகம் ஸ்குவிட் கேம் வீடியோ கேம் விளையாட்டை கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது.
கொல்லும் குழந்தைப் பொம்மை ஏற்கனவே சந்தையில் கிடைக்கிறது. தென்கொரியாவிலும் அரபு நாடுகளின் பெரும் சர்வதேசியப் பயணியர் விடுதிகளிலும் பச்சை விளக்கு சிவப்பு விளக்கு விளையாட்டுக்கள் துவங்கிவிட்டன.
II
ஸ்குவிட் கேம் பிரதானமாக நான்கு மனிதர்களின் வாழ்வு பற்றியது.
ஜீ ஹ_ன் ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்கொரியத் தொழிலாளி. இவரது நண்பனும் பல்கலைக் கழகப் பட்டதாரியும் செய்த தொழில் முடங்கிப் போனவருமான நடுத்தரவர்க்க தென்கொரியத் தொழில் முனைவர் சூ ஹாங் வூ. வடகொரியாவிலிருந்து தப்பி தனது வயோதிபத் தாயை தன்னுடன் அழைத்துக் கொள்ள விரும்பும் தனது சகோதரனை அனாதை விடுதியில் விட்டிருக்கும் இளம்பெண்னான காங் ஷே பியாக். சட்டவிரோதக் குடியேற்றவாசியாகிய பாகிஸ்தான் தொழிலாளி அப்துல் அலி.
இவர்களுக்குத் தத்தமக்கே உரிய பொருளாதார நெருக்கடிகள் உண்டு.
ஜீ ஹ_ன் கடன்வாங்கி வட்டிகட்ட அவதிப்படுபவர். நோயுற்ற தாயைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர். விவாகரத்துப் பெற்ற இவர் தனது பெண்குழந்தையைப் பார்க்க தன்னுடன் வைத்துக்கொள்ள அல்லாடுபவர். சூதாடிக் கடனை அடைக்க தன் வருவாயைப் பெருக்கக் கருதுபவர்.
சூ ஹாங் வூ தனது தொழில்களில் நிறைய ஊழல் செய்து தன்னைத் துரத்துபவர்களின் கடன்களை அடைக்க விழைபவன்.
காங் ஷே பியாக்கிடம் அவளது தாயை அழைப்பதாகச் சொன்னவன் காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விடுகிறான். தாயை சகோதரனை மீட்க அவளுக்கு பணம் வேண்டும்.
அப்துல் அலி தான் வேலை செய்த இடத்தில் விபத்தில் விரல்களை இழந்தவன். அவனுக்கு இழப்பீடு எதையும் தொழிற்சாலை தரவில்லை. பாகிஸ்தானிலுள்ள தன் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற அவனுக்குப் பணம் வேண்டியிருக்கிறது.
இதுவன்றி பல துணைப் பாத்திரங்களும் இருக்கிறார்கள். இல் நாம் எனும் பெயர் கொண்ட மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட முதியவர். காங்க் துவுக் சூ எனும் பெயர் கொண்ட கேங்க்ஸ்டர். ஹான் மினி யூ எனும் தனித்தாய். விளையாட்டை முதன்மையாக இருந்து நடத்தும் முன்னோடி மனிதன். காவல்துறை அதிகாரியாகிய அவரது சகோதரன் ஹ_வாங் ஜூனு. தனது தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரைக் கொலை செய்த ஒரு இளம்பெண்னான ஜியூவாங். இவர்களின்றி விநோதமான விலங்குகளின் முகமூடிகளோடு இடம்பெறும் வெள்ளையின முதலாளிகள்.
ஸ்குவிட் கேம் கதை என்ன?
இரண்டாயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றிரண்டு கோடியே, எண்பது இலட்சத்து, எழுபத்தி ஆறு ரூபாய் (45.6 பில்லியன் தென் கொரிய வோன்) பரிசுத் தொகை கொண்ட விளையாட்டில் இவர்கள் ஈடுபட வேண்டும். மொத்தமாக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் 456 பேர்கள். ஆறு சுற்றுகள் கொண்ட இந்த விளையாட்டு மூன்று விதிகளால் ஆனது.
1.விளையாட்டை நிறுத்திக்கொள்ளும் உரிமை விளையாடுபவருக்கு இல்லை. 2. விளையாட மறுப்பவர் அகற்றப்படுவார். 3. விளையாட்டைத் தொடர்வதா இல்லையா என்பதை பெரும்பான்மை வாக்களிப்பின் மூலம் தீர்மானிக்கமுடியும்.
ஒவ்வொருவர் தோல்வியுறும் போதும் பரிசுத்தொகை கூடுதலாகும். அறுதியில் பெரும்தொகையை வெற்றி பெற்றவர் அடைவார்.
ஆறு சுற்று விளையாட்டுக்கள் என்னென்ன?
முதல் சுற்று : பச்சை விளக்கு சிவப்பு விளக்கு விளையாட்டு. பச்சை என்று சொல்லும்போது போட்டியாளர்கள் இறுதிக்கோட்டை நோக்கி ஓட வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும்போது சிவப்பு எனும் சொல்லைக் கேட்டவுடன் அவரவர் அசையாது நின்ற இடத்தில் நிற்க வேண்டும். எவராவது நிற்கமுடியாமல் அசைந்தால் அவர்கள் விளையாட்டில் தோல்வியற்றவர்கள். அவர்கள் விளையாட்டில் இருந்து அகற்றப் படுவார்கள்.
இங்கு அகற்றுதல் என்பது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று பொருள். தோல்வியுற்றவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போதுதான் தோல்வி என்பது மரணம் என்பதைப் போட்டியாளர்கள் உணர்கிறார்கள்.
போட்டியாளர்களில் பாதிப்பேர் இந்த முதல் விளையாட்டிலேயே கொல்லப்படுகிறார்கள்.
இரண்டாவது சுற்று: சக்கரைத் தேன் மிட்டாய் விளையாட்டு. சக்கரையும் தேனும் கலந்து வட்டம், சதுரம், நட்சத்திரம், குடை வடிவங்களில் அச்சு சின்னங்கள் அமைய அவற்றை வெட்டியெடுக்க வேண்டும் என்பது இலக்கு. வெப்பத்தில் சக்கரை கரையும்போது இதனை வெட்டி எடுப்பது சுலபமாக இருக்கும். இதனை அறிந்தவர்கள் வெயில் வரும்போது மிட்டாயை நக்கி நக்கி சின்னத்தை அடைகிறார்கள்.
மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
மூன்றாவது சுற்று : கயிறு இழுத்தல் விளையாட்டு. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் முதல் உலகெங்குமுள்ளவர்கள் அறிந்த விளையாட்டு இது. இரு குழுக்கள் இரு பக்கமும் இழுக்க தாக்குப் பிடிப்பவர்கள் இதில் வெல்வர். இந்தக் கயிறிழுத்தல் விளையாட்டு அந்தரத்தில் இடைவெளிவிடப்பட்ட பாலத்தின்மேல் நடக்கிறது.
தோற்றவர்கள் கிழே விழுந்து தரையில் உடல்மோதி மடிகிறார்கள்.
நான்காவது சுற்று : முழுவதும் கோலிக்குண்டுகளைக் கைப்பற்றும் விளையாட்டு. கோலிவிளையாட்டுக்கான விதிகளை விளையாடும் இருவரே உருவாக்கிக் கொள்ளலாம். அறுதியில் எவரொருவர் முழுமையாகக் கோலிகளைக் கைப்பற்றியவரோ அவர் வென்றவர். மற்றவர் தோல்வியுற்றவர்.
அவர் சுட்டுக் கொல்லப்படுவார்.
ஐந்தாவது சுற்று: உயரத்தில் தொங்கும் கண்ணாடித் தட்டுகளைத் தாண்டி மீளும் விளையாட்டு. இடைவெளிவிட்டு அமைக்கப் பட்டிருக்கும் கண்ணாடித் தட்டுக்களில் சில மனிதரைத் தாங்கும் வலுக்கொண்டது. சில உடைந்துவீழும்போது தாண்டுபவர் கீழே வீழ்ந்து தரையில் மோதிச் சிதறுவார். எந்தத் தட்டு வலுவானது எது தாங்கு வலு அற்றது என்பது எவருக்கும் தெரியாது. இந்த தட்டுகளில் நடந்து இறுதி இடத்தை அடைபவர் வெற்றிபெற்றவர்.
மற்றவர்கள் அதளபாதாளத்தில் வீழ்ந்து மடிவர்.
ஆறாவது மற்றும் இறுதிச் சுற்று : ஸ்குவிட் கேம் அல்லது கணவாய் மீன் வடிவில் அமைந்த சட்டகத்திற்குள் நடக்கும் விளையாட்டு. தாக்குபவரும் எதிர்த்து நிற்பவரும் என இருவர் மோதும் இவ்விளையாட்டில் மீனின் கழுத்துப் பகுதி போன்ற இடத்தில் நிலைத்து மற்றவரை வீழ்த்துபவர் வெற்றி பெற்றவர்.
தோல்வியுற்றவர் சுட்டுக் கொல்லப்படுவார்.
இந்த ஆறு விளையாட்டுக்கள் தவிரவும் போட்டி விளையாட்டுகளுக்கு வெளியில் இரு விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன. ஸ்குவிட் கேமின் துவக்கத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் டாக்ஜி எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது. சிவப்பு நீலம் என இரு அட்டைகள் இருக்கிறது. ஒரு அட்டையை இன்னொன்றின் மீது அடித்து அதனைப் புரட்டிவிட்டால் அவர் வெற்றியாளர். இதில் சிவப்பு அட்டையைத் தேர்பவர் பிரதான விளையாட்டில் காவலாளியாக ஆவார். நீல அட்டைக்கு உரியவர் விளையாடுபவராக ஆவார்.
இன்னொரு விளையாட்டு விளக்கு அணைந்தபின் ஒரு குழுவினர் இன்னொரு குழவினர் தாக்கிக் கொண்டு மரணமுறுவது. இத்தகைய சூழலை எந்த அறிவிப்பும் இல்லாமல் விளையாட்டை நடத்தும் நெறியாளன் உருவாக்குகிறான். அவனைப் பொறுத்து போட்டியாளர்களின் எண்ணிக்கையை விரைவில் குறைப்பது மட்டுமே நோக்கம்.
குரூரமான விதவிதமான சாவுகளைக் கண்டுகழிப்பது பிறிதொரு நோக்கம்.
III
உலகின் செல்வ வளம்மிக்க நாடுகள் என அமெரிக்காவும் ஜப்பானும் அமெரிக்க ராணுவத்தை தனது நிலத்தில் கொண்ட தென் கொரியாவும் அறியப்படுகின்றன. 2020 ஆண்டில் உலகின் ஜனத்தொகையை 780 கோடிகள் எனவும் இவர்களது பொருளியல் வளத்தை 2000 பெரும் பணக்காரத் தனிமனிதர்களே ஆட்சி செலுத்துகிறார்கள் எனத் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்போம் அமைப்பின் புள்ளிவிவரம் அறிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலுமானவர்கள் அமெரிக்க, மேற்கத்திய, ஜப்பானிய, தென்கொரிய நாடுகளில் வாழ்கிறார்கள்.
இலட்சம் பேரில் அமெரிக்கத் தற்கொலை விகிதம் 14.5 சதம். ஜப்பான் 12.2 சதம். தென்கொரியாவின் தற்கொலை விகிதம் 21.2 சதவீதம். சீனாவின் தற்கொலை விகிதம் 6.2 சதம். கியூபா 10.2 சதம்.
இந்தத் தற்கொலைப் புள்ளிவிவரங்களில் தென்கொரியாவில் தற்கொலைகள் அதிகமும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர் களுக்கிடையில் நிகழ்கிறது. கடன் தொல்லையும் அதன் விளைவான நோய்மையும் இதன் காரணமாக அமைகிறது. மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் மேலானோர் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர்.
ஸ்குவிட் கேம் தொடரின் நாயகனான ஜீ ஹ_ன் வேலையற்ற மக்கள் பிரிவில் இருந்த வருபவர். அவரது வறுமை, ஏழ்மை, வேலையின்மை, கடன் அனுபவத்தில் துவங்கும் கதை அவரது அனுபவத்தில் துவங்கும் கதை அவர் ஸ்குவிட் கேம் வன்முறையிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பி வந்த அனுபவத்துடன் முடிகிறது.
ஜீ ஹ_ன் ஒரு மோட்டார் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை நீக்கம் செய்யப்பட்டு, அவரது கண்முன்பு அவரது சகதோழர் காவல்துறையால் கொல்லப்பட்டு, நிர்க்கதியாகத் தெருவில் விடப்படுகிறார். விளைவாக விவாகரத்து. குழந்தையைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாத துயர். நீரிழிவு நோயினால் வதியும் தாயைப் பராமரிக்க முடியாமை. விளைவாகக் கடன் வாங்குதல். சமூக நிராகரிப்பு. சூதாட்ட வெற்றி தன்னை மீட்கும் எனும் நம்பிக்கை. சொற்பப் பணத்திற்காகத் தன்னை வன்முறைக்கு உட்படுத்திக் கொள்ளும் அவலம்.
இதன் தொடர்ச்சியாக ஸ்குவிட் கேம் தீவுக்குள் நுழையும் அவனிலிருந்தே கதை துவங்குகிறது.
ஸ்குவிட் கேமின் கதை முதலாளித்துவ சமூகம் பற்றிய ஒரு உருவகம் அல்லது கட்டப்பட்ட கதை என்கிறார் இயக்குனர். அந்த உருவாகத்திற்கான ஆதாரம் கட்டப்படுதலுக்கான அடிப்படை தென்கொரியாவின் பியாங்டேக் நகரில் அமைந்துள்ள சாங்யாங் மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலையில் 2009 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை நடந்து வரும் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகும்.
அறுபதுகளில் இரு தென்கொரிய நிறுவனங்களால் துவங்கப்பட்ட இந்த மோட்டார் தொழிற்சாலை பிரதானமாக தென்கொரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவத்திற்கு ஜீப்களை உற்பத்தி செய்தது. பிற்பாடு பேருந்துகளையும் கார்களையும் தயாரிக்கத் துவங்கின.
2009 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். 77 நாட்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நிர்வாகம் ராணுவத்தையும் போலீசாரையும் அழைத்தது. தொழிலாளர்களுக்கு எதிராக கருங்காலிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.
ஹெலிகாப்ட்டர்கள் தொழிற்சாலைகள் மீது பறக்க தொழிற்சாலையினுள் தொழிலாளிகள் தாக்கப்பட்டார்கள். தொழிலாளிகள் தற்காப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வேலைநீக்கம் செய்யப்பட்ட பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.
2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் இந்த தொழிற்சாலையைப் பொறுப்பேற்றது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களளை மறுபடி பணிக்கு அமர்த்துவது என ஒப்பந்தம் போட்டாலும் இன்று வரை பிரச்சினை தீராது தொடர்கிறது.
இந்தப் பணி நீக்கம் தொழிலாளர் மீதான வன்முறையைத்தான் ஜீ ஹ_ன் தனது அனுபவமாக இந்த தொடரில் வெளிப்படுத்துகிறார்.
இந்தப் படம் எவ்வாறு முதலாளித்துவத்தின் உருவகமாக ஆகிறது?
இந்தப் படத்தில் விளையாட்டில் ஈடுபட வரும் அனைவரும் விளிம்புநிலை மனிதர்கள். பெரும்பாலும் தொழிலாளர்கள். பிறர் பிரதான சமூகத்தினால் கைவிடப்பட்டவர்கள். காவல்துறையினால், கடன்தந்தவர்களால், குடியேற்ற அதிகாரிகளால், வங்கிகளால், கேங்க்ஸ்ட்டர்களால் தேடப்படுபவர்கள்.
முதல் விளையாட்டில் 255 பேர் மட்டுமே மிஞ்ச மற்றவர்கள் மரணமடைகிறார்கள். பெரும்பான்மையினர் விளையாட்டை மறுத்து சமூகத்திற்குத் திரும்பும்போது மறுபடி அவர்கள் விரட்டப்படுகிறார்கள். தமது உயிர்வாழ்தலுக்கு அவர்களுக்கு வருமானம் வேண்டும். இது ஒரு விஷச்சுழல்.
அவர்கள் மறுபடி ஸ்குவிட் கேம் தீவுக்கு வருகிறார்கள். இவர்களை ஒடுக்க கருங்காலிகளாக கேங்ஸ்ட்டர்களும் உள்ளே வருகிறார்கள். இவர்கள் உணவு திருடினாலும் இவர்களை நிர்வாகம் காக்கும்.
இவர்களைக் கட்டுப்படுத்துபவர்கள் முதலாளிகளுக்கு வேலை செய்யும் ஆயுததாரிகள். இவர்களை வழிநடத்த ஒரு மேலாளர் இருக்கிறார். இந்த ஸ்குவிட் கேமை மூலதனமிட்டு நடத்த சர்வதேசிய வெள்ளை முதலாளிகளும் தென்கொரிய முதலாளிகளும் இருக்கிறார்கள்.
ஸ்குவிட் கேம் தீவை ஒரு தொழிற்சாலையாக உருவகப்படுத்தினால், அங்கு தொழிலாளிகளாக விளையாடுபவர்களையும், காவல்துறையாக ஆயுதம் தாங்கிய காவலர்களையும், நிர்வாகியாக முதன்மை மனிதனையும், கார்ப்பரேட் முதலாளிகளாக இறுதியில் வேடிக்கை பார்க்க வரும் வெள்ளையர்களையும், தொழிலாளிகளுக்கு உள்ளிருந்தே ஏமாற்றும் உள்ளூர் முதலாளியையும் நாம் அடையாளம் காணமுடியும்.
இது கட்டப்பட்ட கதைதான் என்றாலும், தென்கொரிய யதார்த்தத்தின் மீது கட்டப்பட்ட கதை. இதன் கதைமாந்தர்கள் தென்கொரிய சமூகத்திலுள்ள யதார்த்த மனிதர்கள். மட்டுமல்ல உலகில் வங்கி கடன்தருவபவர்களிடமிருந்து மீளமுடியாத கடனில் மூழ்கியிருப்போர் அனைவருமே இந்தக் கதையில் இடம்பெற்றுவிடக் கூடிய யதார்த்த மனிதர்கள்தான்.
இந்த உருவக சமூகம் இன்னொரு விதமாகவும் இந்தக் கட்டுக்கதையில் இடம்பெறுகிறது. ஸ்குவிட் கேம் மேலாளர் ஜனநாயகம், உரிமை, சமவாய்ப்பு போன்றவற்றை திரும்பத் திரும்பப் பேசுகிறார். இவை அனைத்தும் தாராளவாத முதலாளித்துவச் சமூகத்தின் வாக்குறுதிகள்.
நிஜத்தில் என்ன நடக்கிறது?
விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தமது தோழமைகளைத் தேடுகிறார்கள். ஒன்றுபடுதலை நாடுகிறார்கள். அதற்கான வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டு ஒருவரைப் பிறிதொருவருக்கு எதிராகவே, மனிதரை மனிதர் வெறுப்பவர்களாகவே போட்டிகள் அறிமுகமாகின்றன. போட்டி என்ன, போட்டி நடைபெறும் விதங்கள் என்ன என்பது குறித்த முன்கூட்டிய எந்த அறிவும் விளையாடுபவர்களுக்கு இல்லாது பார்த்துக் கொள்கிறார்கள்.
இருமுறை விளக்கை அணைத்து விளையாடுபவர்களுக்கு இடையில் அடித்துக் கொள்ள வைக்கிறார்கள். கண்ணாடித் தட்டைத் தாண்டும்போது வெளிச்சத்தைக் குறைக்கிறார்கள். கான்சர் நோயாளியாகவும் முதியவராகவும் வரும் முதலாளி முதல் விளையாட்டிலும் கோலிக் குண்டு விளையாட்டிலும் ஏமாற்றித் தப்புகிறார்.
விளையாட்டின் விதிகளையும் திடீர் திடீரென அறிவிக்கிறார்கள். முன்பே தீர்மானித்து வைத்துக்கொண்டு அதில் உரிமை, ஜனநாயகம் போன்றவற்றைப் பசப்புகிறார்கள். மருத்துவ உதவி கொடுத்துக் காப்பாற்ற முடிகிற இளம்பெண்ணைச் சாகவிடுகிறார்கள்.
ஸ்குவிட் கேம் தொடர் என்பது இரு பரிமாணங்களால் ஆனது.
விளையாட்டு என்பது அடிப்படையில் மகிழ்வூட்டுவது. சிறுவர்கள் முதல் சகல மக்களும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிற எளிமையான விளையாட்டின் வடிவத்தில் கதை சொல்லப்படுகிறது.
ஒரு வீடியோ கேமுக்கும் இந்தப் படத்தின் கதை சொல்லலுக்கும் வித்தியாசம் காண்பது கடினம். தோல்வி அல்லது அகற்றுதல் என்பது குரூரமான மரணங்களாக நிகழ்கிறது. ரத்தம் தெறிக்கிறது. தலைகள் சிதறுகிறது. உடல்கள் பிளக்கிறது. உடல்தரையில் மோதிச் சிதறுகிறது.
இந்தக் கொடும் வன்முறைகள் யதார்த்த உலகில் எளிய வறிய. சிறுபான்மை மக்கள் மீது ராணுவத்தினரால், காவல்துறையினரால் நிகழத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஈராக் போர் முதல் பிளாக் லைவ்ஸ் மேட்டர் வரை இதனை நாம் பார்க்கிறோம்.
ஸ்குவிட் கேம் இவ்வகையில் நம் கால முதலாளித்துவ சமூகத்தின் குரூரமான உருவகம்.
IV.
பேரழிவுகளிடையிலும் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்திலும் மனித்தன்மை என்பது அழிந்துபோய்விடுவதில்லை என்கிற நம்பிக்கையையும் இந்தத் தொடர் நம்மிடையே விட்டுச் செல்கிறது.
மனிதர்கள் அடிப்படையில் நேயத்தை வெளிப்படுத்தவும் ஒன்றி வாழவும் விரும்புகிறார்கள். இதுவே அவர்கள் இயல்பு. புற்றுநோய் கொண்ட முதியவருக்கு இரங்கும் தொழிலாளியும், தனது சகதோழியின் தாயையும் சகோதரனையும் காக்கத் தனது உயிரைத் தரும் இளம் பெண்ணும் இறுதி விளையாட்டில் தனது சகாவின் மரணத்தில் தன் வெற்றியை விரும்பாது மறுக்கும் நண்பனும் இருக்கவே செய்கிறார்கள்.
இதுவே சுயதேர்வில் வெளிப்படும் மனித இயல்பு.
இதற்கு மாறாக நேரடியாக அறிமுகமில்லாத பாகிஸ்தான் தொழிலாளிக்கு பேருந்துக் கட்டணம் தந்து உதவும் அதே மனிதன் பின்னாளில் அவனை ஏமாற்றித் தான் உயிர்வாழும் நிலைக்குத் தள்ளியது நிலவிய அமைப்பு. அது அவன் மீது சுமத்தப்பட்டது.
தனது உயிரைக் காத்துக் கொள்ள முதியவரை ஏமாற்றும் தொழிலாளியை அந்த இடத்தில் நிறுத்தியது அமைப்பு. தீமை என்பது மனித இயல்பல்ல. அது மனிதன் மீது அமைப்பினால் சுமத்தப்படுவது. எந்த நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர மனிதன் அன்பு மயமானவன். கதையின் நாயகனும் தொழிலாளியும் ஆன ஜீ ஹ_ன் இதற்கான சாட்சியமாக இருக்கிறான்.
தீமைக்கு ஆட்படும் நண்பனை மன்னிக்கிறான். வாக்குக் கொடுத்தபடி நண்பனின் தாயைப் பராமறிக்க ஏற்பாடு செய்கிறான். வாக்குக்கொடுத்தபடி தனது சகதோழியின் சகோதரனான சிறுவனை அனாதை விடுதியிலிருந்து மீட்டு அவனுக்கும் தங்க ஏற்பாடு செய்கிறான்.
அவன் இறுதித்தேர்வு தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று தன் மகளைத் தேடிக் குடியேறுவது அல்ல, மாறாக, இந்தத் தீய விளையாட்டின் பின்னிருப்போரைத் தெளிவாக இனம் காண்பது. கதையில் இது கடினமாக இருக்கலாம். யதார்த்தத்தில் இந்த தீமையின் காரணகர்த்தாக்கள் யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.
சம்பாதித்துச் சம்பாதித்துச் செல்வம் குவித்துச் சலிப்பேற்பட்டதால் இந்த விளையாட்டில் இன்பம் பெறுவதாக அறிவிக்கிறார் முதலாளி. குதிரைகளுக்குப் பதில் மனிதர்கள்.
இல்லை மனிதர்கள் யாரும் நிராகரிக்கப்பட்டு மரணமடைய விடப்படமாட்டார்கள், யாரேனும் பிறவொரு மனிதன் கருணையுடன் அவனைக் காப்பாற்ற வருவான் என்கிறான் தொழிலாளி. தெருவோரத்தில் சுருண்டு விழுந்த மனிதனை ஆம்புலன்ஸ் வரச்செய்து அப்படிக் காப்பாற்றுகிறான் ஒரு வழிப்போக்கன்.
மனிதனை மனிதன் நேசிப்பதே விதி.
*
நன்றி : படச்சுருள் இதழ் நவம்பர் 2021