பண்பாட்டுப் பொருளாதாரம் – சிலகுறிப்புகள் : குமரன் தாஸ்
நான் முதன்முதலாக 1988 ஆமாண்டு காரைக்குடிக்கு வந்த சமயம் பேருந்திலிருந்து செஞ்சை நிறுத்தத்தில் இறங்கி சந்தைப்பேட்டைக்கு ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன். அப்பொழுது பெருமாள் கோயிலைத் தாண்டியவுடன் தறியில் பல நூறு நாடாக் கட்டைகள் ஓடி ஓடி மோதும் ஓசை சடக் சடக்கென தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தன .
இன்னும் சற்று தூரம் கடந்தவுடன் பித்தளைத் தகடுகளின் மீது சுத்தியல் கொண்டு அடிக்கும் ஓசை கேட்கத் துவங்கி திங்கட்கிழமைச் சந்தை சுவர் முடியும் வரை கேட்டது . சந்தைச்சுவர் முடிந்து வடக்கு நோக்கித் திரும்பியவுடன் கருங்கல் பாறைகளின் மீது உளி மோதும் ஓசை காதை அடைத்தது . வெளியே சத்தம் கேட்காவிட்டாலும் தங்கபுஷ்பம் புகையிலைக் கம்பெனியில் இருந்து சில பத்து பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். அதே போல ராணி குங்குமம் கம்பெனியிலும் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதெல்லாம் ஒரு காலம்! இப்போது மயான அமைதி ! ஆயிரக்கணக்கான தறிகள் பல நூறு பித்தளைப் பட்டறைகள், கல்லு பட்டறைகள் , சில்வர் பட்டறைகள், தங்கபுஷ்பம் புகையிலை கம்பெனி என ஒரு சிறு தொழில் நகரமாக அன்று காரைக்குடி விளங்கியதெல்லாம் 2000 வரை தான்.
1990களில் இருந்தே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின . 1990 களில் தறி நெய்யும் நெசவாளர்கள் வாழ்க்கை தெருவுக்கு வந்தது. கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அதுபோலவே பித்தளைப்பட்டறைகளில் முதலில் வெல்டிங் மிஷின் புகுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பல நூறு பித்தளைப் பட்டறைகள் காணாமல் போயின. ஒரு சில பெரிய பட்டறைகள் மட்டும் நிலைத்தன.
திறமை வாய்ந்த கைவினைத் தொழிலாளர்களின் பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன . பலர் வணிக நிறுவனங்களில் கூலிகளாக வேலைக்குச் சேர்ந்தனர் . கல்லுப்பட்டறைகளில் 1990களுக்கு முன் அம்மி , ஆட்டுக்கல் தயாரிப்பில் மும்முரமாக இருந்த நிலைமாறி தொண்ணூறுகளின் பிற்பகுதியில் புதுக்கோட்டை அன்னவாசல் மலையிலிருந்து கல் தகடுகள் கொண்டுவரப்பட்டு வேலிக்கால் தயாரிப்பு முதன்மையானதாக மாறியது.
மிக்ஸியும் கிரைண்டர் வருகையும் அம்மி ஆட்டுக்கல் தொழிலைக் காலி செய்தது. சிறிது காலம், பயன்பாட்டுக்காக அன்றி சடங்கு சம்பிரதாயமாகக் கருதி ஒரு சிலர் அம்மிக்கல் ஆட்டுக்கல் வாங்கி திருமணத்திற்குச் சீர் வைத்தனர் . இதே காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்து வந்த நிலையானது வேலிக் கல் தேவையை அதிகரித்தது.
இவ்வாறு தமிழகக் கைவினைத் தொழில் அழிவு என்பது 1990 களில் தான் முதன் முதலில் துவங்கியதா ? என்றால் இல்லை. அது இந்தியாவுக்கு பிரிட்டிஷார் வருகையோடு துவங்குகிறது. இந்தியத் தொழில்களின் அழிவென்பது நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பிரிட்டிஷார் டின்னைக் கண்டுபிடித்து இங்கு கொண்டு வந்த போது தோல் தொழில் அழிவுற்றது பற்றியும் தோல் தொழிலாளர்களான அருந்ததியர்கள் வேலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக மாறியது பற்றியும் எட்கர் தர்ஸ்டன் தனது குலங்களும் குடிகளும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
.கண்ணாடி பீங்கான் குடுவைகளின் வருகை மரக்குடுவைகளின் பயன்பாட்டை அழித்தொழித்தது. தொடர்ந்து அலுமினியம் சில்வர் பாத்திரங்களின் வருகை மட்பாண்டத் தொழிலை நசிவு அடையச் செய்தது . அதன்பிறகு பித்தளைப் பாத்திரங்களின் பயன்பாட்டை சில்வர் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும், பிளாஸ்டிக் பொருட்களின் வருகை பித்தளை சில்வர் அலுமினியப் பாத்திரங்களின் பயன்பாட்டையும் வெகுவாக குறைத்தது . (ஆனாலும் இன்றளவும் கலியாணச் சீர்வரிசையில் பித்தளை, சில்வர், அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெறவே செய்கின்றன.)
அதைப்போலவே பனை மரங்கள் நிரம்பிய தென்மாவட்டங்களில் நடைபெற்று வந்த பனையோலைப் பொருட்கள் தயாரிப்பையும் பிளாஸ்டிக் வயர் கூடை களின் வருகை தடுத்து நிறுத்தியது. ஆக இதுவோர் தொடர்கதையாகும்! புதிய ஒன்றின் வருகை பழையவற்றின் அழிவு என்று காலம் முன்னோக்கிச் சுழல்கிறது . இந்தச் சுழற்சியின் வேகம் 1990க்குப் பிறகு பாய்ச்சலாக மாறியது தான் அதாவது ஒரு தலைமுறைக்குள்ளாகவே பல தொழில்களின் அழிவையும் காணக்கூடிய சூழலை உருவாக்கியதுதான் உலகமயத்தின் வேலையாகும்.
எந்த தொழிலும் எப்போதும் அழிந்து விடலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி மாறுபாடுகள் உடனுக்குடன் இந்தியா போன்ற நாடுகளுக்குள் மறு நிமிடமே வந்து விடக்கூடிய அளவுக்கு இன்று கட்டுப்பாடற்ற நிலையும் போக்குவரத்து வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது . 50 ஆண்டுகள் 25 ஆண்டுகள் கோலோச்சிய ஒரு தொழில்நுட்பம் என்பதெல்லாம் பழங்கதை. மிகுந்த பண முதலீட்டில் துவங்கப்படும் ஒரு தொழில் ஆறு மாதத்திற்குள்ளாகவே வேறு ஒரு புதிய தொழில்நுட்ப வரவால் இழுத்து மூடப்படக் கூடிய நிலை! இன்று புதிது! நாளையே பழசு!! என்ற நிலை.
எடுத்துக்காட்டாக நீண்ட காலமாக நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தலைவர்களது, நடிகர்களது உருவங்களைச் சுவர்களிலும், தட்டிகளிலும் ஓவியங்களாகத் தீட்டிக் கொண்டிருந்த ஓவியர்களும் கைவினைஞர்களும் ப்ளக்ஸ் என்னும் கணினித் தொழில்நுட்ப வருகையால் வேலையின்றி தெருவில் நிறுத்தப்பட்டதை நாம் கண்டோம். முன்பு இவர்கள் தான் இரு சக்கர , ஆட்டோ, கார் போன்ற வாகனப் போக்குவரத்து அதிகரிப்பின் போது மிகவும் பரபரப்பாக ஓய்வின்றி வாகனங்களுக்கு வண்ணம் தீட்டியும் நம்பர் பிளேட்டில் வாகனப் பதிவு எண்களை எழுதித் தரும் வேலையையும் செய்தனர் .
அதன்பிறகு கணினி மூலம் வாகனங்களுக்கு பல விதங்களில் நம்பர் மற்றும் பெயர் எழுதி ஒட்டும் ஸ்டிக்கர் எனும் தொழில் நுட்பமுறை வருகையால் ஓவியர்கள் வேலை இழந்தனர் . ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக இன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் மூலம் எண் ஒட்டும் முறை முடிவுக்கு வந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலேயே நவீன பிரின்டிங் முறை வந்துவிட்டது. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றம் நிகழ்ந்து மக்களது வாழ்நிலையும் தொழிலும் நிலையற்றதாக ஆக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக சிறு, பெரு நகரங்களில் அண்ணாச்சிகளின் மளிகைக்கடைகள் (ஸ்டோர்ஸ்) எல்லாம் செல்வாக்கிழந்து சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகியதை நாம் பார்த்தோம். இன்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்குப் போகாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருள்களைத் தேர்வு செய்து வாங்கும் (அமேசான், பிளிப்கார்ட்…..) முறை அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.
மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டில் உழைப்பதற்கு ஆட்கள் தேவைக்கு அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இவ்வாறான கட்டுப்பாடற்ற நவீன தொழில்நுட்ப வருகை மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தவே செய்யும். ஆக இந்தியாவில் உள்ள தொழில்கள் மக்களது வாழ்க்கை அனைத்தும் உலகமயம் எனும் சூழலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. பொதுவாக நாம் இப்படிக் கூறினாலும் உலகமயத்தினுள்ளும் இன்னும் நீடித்து நின்று வாழும் சில தொழில்களையும் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும் அதை நம்பி வாழும் மக்கள் திரளையும் காலம் தோறும் நாம் பார்த்து வருகிறோம்.
சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். ராமேஸ்வரம் தீவில் பனை ஓலையைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்களும், அத்தொழிலிலும் ஒரு காலத்தில் மிகச் செல்வாக்கோடு இருந்தது. தமிழக அரசும் அதற்கென்று சொசைட்டிகளை நிறுவி மானியங்களை வழங்கியது. குறிப்பாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்குவது போல் அன்று பெண்கள் சொசைட்டியில் சேர்ந்து இயங்கினார்கள் . பனை ஓலைப் பெட்டிகள், கொட்டான்கள், விசிறிகள் கூடைகள், தொப்பிகள் என பல்வேறு விதமான பொருட்களை உற்பத்தி செய்தனர்.
இவையெல்லாம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களால் விரும்பி வாங்கப்பட்டன. பனையோலைப் பொருட்கள் உள்ளூர் மக்களது அன்றாட வாழ்விலும் பயன்பட்டன. உதாரணமாக பனை நாரினால் செய்யப்படும் கடகப் பெட்டிகள் என்பவற்றை மக்கள் அரிசி காய்கறி மளிகைப் பொருட்கள் வாங்கிச் செல்ல பயன்படுத்தினர். வீட்டில் உப்பு புளி அரிசி போன்றவற்றையும் கொட்டான் களிலும் பொட்டிகளிலுமே கொட்டி வைத்தனர்.
குறிப்பாக புளியை பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகளிலேயே அமுக்கி எடை வைத்து விற்றனர். பனையின் குருத்து ஓலைகளினால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட அழகிய சிறிய மணிபர்ஸ்களை இடுப்பில் சொருகிக்கொண்டனர், சிலர் வெத்தலைப் பையாகவும் இதனைப் பயன்படுத்தினர். பனையோலை விசிறி மிகவும் புகழ்பெற்ற பயன்பாட்டு பொருளாக விளங்கியது.
ராமேஸ்வரம் கோயில் கடைகளில் சிறிய கொட்டான்களில் மரச்சொப்பு சாமான்களும் அடைத்து விற்கப்பட்டன. காலப்போக்கில் மின் விசிறிகள் வந்தபிறகு பனை ஓலை விசிறியின் தேவை குறைந்து போனது . அதேபோல் பிளாஸ்டிக் வயர் கூடை கள் வந்த பிறகு பனையோலை பயன்பாடு குறைந்தது. மேலும் பனையோலை கூடைகளின் ஆயுள் குறைவானதாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் இற்றுப் போய்விடும். அழுக்கைப் போக்க கழுவவும் முடியாது.
மாறாக பிளாஸ்டிக் கூடைகள் ஆயுள் கூடுதல். சோப்பு போட்டுக் கழுவ முடியும். எனவே பனையோலை பொருட்கள் உற்பத்தி குறையத் தொடங்கியது. இருப்பினும் மற்ற எல்லாப் பொருட்களும் புறந்தள்ளப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பனையோலையால் செய்யப்பட்ட அஞ்சறைப்பெட்டி மட்டும் பரமக்குடி, மதுரைப் பகுதியில் வாழும் மஞ்சள் புத்தூர் செட்டியார் சாதியினரால் வாங்கப்பட்டு வந்தது . அது அவர்களது ஜாதிப் பண்பாட்டில் ஒன்றாக இருந்தது.
அதாவது திருமணம் பேசி முடிக்கப்பட்ட மணமகளை அவரது பெற்றோர் ராமேஸ்வரம் அழைத்துவந்து கோயில் கிணறுகளில் தீர்த்தமாடியும், கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டும் கோவிலுக்குள் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கடைகளில் பனை ஓலையால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டியும் பாலாடை ( பால் சங்கு) களையும் மணமகள் கையால் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
நிச்சயமாக அந்த அஞ்சறைப்பெட்டி வாழ்நாள் முழுவதும் பயன்படப் போவதில்லை . அது ஒரு சாஸ்திரம் அவ்வளவுதான் அந்த வகையில் ஒரு ஜாதிப் பண்பாட்டின் அங்கம் என்ற வகையில் பனையோலையால் செய்யப்படும் அஞ்சறைப் பெட்டி தொழில் கொஞ்ச காலம் நீடித்தது. அன்றாடப் பயன்பாட்டில் இருந்த பிற அனைத்தையும் பிளாஸ்டிக் ஒழித்துக்கட்டிய போதும் ஜாதி இந்துப் பண்பாட்டில் ஒட்டிக்கொண்ட அஞ்சறைப்பெட்டியிடம் மட்டும் பிளாஸ்டிக் (நவீனம்) தோற்றுப் போனது.
இதைப் போலவே மற்றொரு உதாரணத்தையும் கூறலாம். பித்தளை சில்வர் அலுமினியம் போன்றவை வந்து மட்பாண்டங்களை அழித்ததை நாம் பார்த்தோம். அன்றாடப் பயன்பாட்டில் மட்பாண்டங்கள் இடம் பெறாமல் தொலைந்து போனதே ஒழிய ஜாதியப் பண்பாட்டின் அடிப்படையிலான மட்பாண்டத்திற்காண தேவை 2021 லும் தொடரவே செய்கிறது. குறிப்பாக பொங்கல் பானையாகச் சில இடங்களிலும் கொள்ளிச் சட்டியாகப் பல இடங்களிலும் இன்றும் மண்பாண்டம் தொடரவே செய்கிறது .
கேஸ் சிலிண்டர் வந்த பிறகு சிலர் விறகு அடுப்பில் மண் பாண்டத்தில் பொங்கல் வைப்பதும் மின்சாரச் சுடுகாடு வந்த பிறகும் கொள்ளிச் சட்டியை சாவு ஊர்வலத்தின் முன்பாக எடுத்துச் செல்வதும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு தான் இன்றும் சில பாரம்பரிய கைவினை பொருட்களை இந்து ஜாதியப் பண்பாடு தொடர்ந்து காத்து வருகிறது. அதே சமயம் இத்தொழில்கள் இனி வளர முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
இதே போல் வெகு காலமாக தொடரக்கூடிய ஒரு பண்பாடு காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் குறிப்பாக செட்டி நாட்டுப் பகுதியில் நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்போரும் தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு வந்து வெண்சங்கு வாங்கிச் சென்று வெள்ளிப்பூண் பிடித்து திருமணத்தில் வைப்பதும் திருமணத்தின்போது சங்கு ஊதுவதும் என்ற ஒரு நடைமுறை சடங்காகத் தொடர்கிறது .
இன்றைக்கும் ராமேஸ்வரத்தில் அச்சங்கை செட்டியவீட்டுச்சங்கு என்று சொல்லி கடைக்காரர்கள் தனியே வைத்து இருப்பதைக் காணலாம் . இதைப் பார்த்து செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த பிற இடைநிலைச் சாதியினரும் தங்களது இல்லத் திருமண சடங்குகளின் போதும் பொங்கல் நாள் அன்றும் சங்கு ஊதுவதை மேற்கொள்கின்றனர். இவர்களும் சங்கு வாங்கிச் செல்கின்றனர்.
இது போன்ற ஒரு பண்பாடு வங்காளிகள் மத்தியில் (மேற்கு வங்க இந்துக்கள் ) காணப்படுகிறது. திருமணமான பெண்கள் அனைவரும் சங்கு வளையல் அணிந்து இருப்பதை நாம் காண்கிறோம். அது அவர்களது அடையாளமாக உள்ளது. சங்கு வளையல் அணிவது அழகுக்காக என்பதாக இல்லாமல் சடங்காக அங்கு உள்ளது. இதன் பொருட்டே ராமேஸ்வரத்தில் கிடைக்கும் வெண் சங்குகள் கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டு அங்கு அவை அறுக்கப்பட்டு வளையல்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு இந்து மதப் பண்பாட்டினை முன்னிட்ட உற்பத்தியும் விற்பனையும் அதனைச் சுற்றி வரும் பொருளாதாரமும் என்ற ஒன்று இன்றைய உலகமயச் சூழலிலும் தொடர்ந்து நிலவி வருவதை நாம் காண்கிறோம்.
அதாவது இந்தியாவில் தமிழகத்தில் நிலவிவந்த சிறந்த கைவினைதொழில் நுட்பங்களை எல்லாம் சிதைத்து அழித்தொழித்த நவீன எந்திர முதலாளிய உற்பத்தி முறையானது இந்தியப் பண்பாட்டை ஒட்டிய சிலவற்றையும் ஆன்மீக பொருளாதாரத்தையும் அழித்து விடாமல் தொடர அனுமதித்துள்ளது . (சோசலிச சீனாவானது இந்துக்களின் இவ்வாறான ஆன்மீகம், பண்பாட்டுத்தேவை சார்ந்த பொருட்களையும் தயாரித்து டன் கணக்கில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து பணம் பார்ப்பது தனிக்கதை.)
இன்றைய ஒன்றிய அரசு/ஆட்சியாளர்களது பொருளாதாரத் திட்டங்களாலும் சட்டங்களாலும் (பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, தனியார் மயமாக்கம், பெட்ரோல் டீசல் தொடர் விலையேற்றம்…) தினமும் ஆட்குறைப்பு வேலையின்மை கதவடைப்பு ஆலைகள் மூடல் என்று செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டுள்ள நிலையில் சிறு தொழில்கள் வணிக நிறுவனங்கள் எல்லாம் தங்களது எதிர்காலம் பற்றிய அச்சத்தில் உள்ள நிலையில் பண்பாட்டு நடவடிக்கைகளும், ஆன்மீக பழக்கவழக்கங்களும் விழாக்களும் எவ்வித தடையுமின்றி தொடர்வதை நாம் காண்கிறோம். அதை ஒட்டிய வணிகமும் உற்பத்தியும் தடையின்றி தொடர்வதையும் நாம் பார்க்கிறோம்.
ஓர் ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழாக்களையும் மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை பார்ப்பனப் பண்பாட்டு விழாக்களையும் நடத்தக்கூடிய தமிழர்கள் வாழும் நாட்டில் இந்தப் பண்பாட்டு பொருளாதாரத்திற்கு அழிவு இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக இந்துக்களின் அன்றாட வாழ்வும் உணவு முறையும் பிற நுகர்வுகளும் கூட இந்து சாதியப் பண்பாட்டால் வரையறுக்கப் பட்டுள்ளதால் அவர்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் மதத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக இந்துக்களின் தேவைகள் அனைத்துமே அவர்களது உடல் அல்லது உடல் சார்ந்த மனதால் தீர்மானிக்கப்படுவதில்லை! உடலுக்கு வெளியே உள்ள மதத்தால் ஆன்மீகப் பண்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது மனித அகநிலையானது மதம் என்னும் புற நிலையால் அடிமைப் படுத்தப் பட்டுள்ளது. ஆம் ஒரு ஆண்டின் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்தின் 30 நாட்களும் ஒரு நாளின் 24 மணி நேரமும் ஒரு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு வினாடியும் கூட இந்து மதம் வரையறுத்துத் தந்துள்ள வழியிலேயே கழிக்கப்படுகிறது .
ஓர் இந்துவின் வாழ்வில் என்ன கிழமை என்ன உண்ண வேண்டும் என்ன கிழமை எவ்வாறு நீராட வேண்டும் என்ன கிழமை எந்த நேரம் எந்த கோயிலுக்குச் சென்று எந்தக் கடவுளை வழிபட வேண்டும் என்ன பொருளை வைத்துப் பூஜிக்க வேண்டும் என்பது வரை வறையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளபோது எவ்வாறு தனது பொருளாதாரத்தை சுதந்திரமாகச் செலவிடமுடியும்?
அதேபோல் ஓர் இந்து தனது தலைமயிரை சிரைத்துக்கொள்ள சனி அல்லது ஞாயிற்றுக் கிழமையைத் தேர்வு செய்கிறார். ஆனால் அவர் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளை ஒருபோதும் தேர்வு செய்ய மாட்டார் . ஆக அவருடைய பொருளாதாரம் ஒரு சலூன் கடைக்காரரிடம் அவ்விரு நாட்களிலும் போய்ச் சேராதாகையால் அந்தச் சலூன் கடைகாரர் வாழ்வும் இந்து மதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது .
பார்ப்பனரல்லாத ஓர் இந்து இறைச்சி உண்ண வேண்டும் என்றால் அவர் சனி , ஞாயிறு அல்லது புதன் கிழமைகள் வரைக் காத்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள இந்துக்களிடம் என்ன தொழில் செய்பவராக இருந்தாலும் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் அவரிடம் ”உங்கள் வீட்டில் என்ன குழம்பு ?” என்று கேளுங்கள், நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் சாம்பார் என்று கூறுவதையே நீங்கள் பதிலாகப் பெறுவீர்கள் . இந்த ஒரு கேள்வியும் சாம்பார் என்ற ஒரு பதிலும் போதும் நாம் மேலே கூறிய விஷயம் முழுவதும் உண்மை என்பதை நிரூபிக்க
ஆக இங்கு நுகர்வு அனைத்தும் மதத்தால் கட்டுப் படுத்தப்படும் போது பொருளாதார சுழற்சியும், வளர்ச்சியும் கூட மதத்தால் கட்டுப்படுத்தப்படுவதை நாம் புரிந்து கொள்ள முடியும். நமது இந்தக் கூற்று நகரம், பெரு நகரம், கிராமம் அதேபோல் வர்க்கம் சாதி சார்ந்து சற்று மாறுபடலாமே தவிர முற்றிலும் விரோதமாக இருக்காது.
அடுத்து தேவை (needs ) என்பது வணிகத்தின், சந்தையின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஆனால் இந்தத் தேவையைத் தீர்மானிப்பதிலும் இங்கு மதத்திற்கு ஒரு முக்கிய இடமுள்ளதை நாம் காண்கிறோம். இங்குள்ள மனிதர்களிடம் தேவையைப் பற்றிய அறிவியல் பூர்வ அணுகுமுறை என்பதே இல்லை! எடுத்துக்காட்டாக உணவில் காய்கறி பழங்கள் போன்றவற்றை தினமும் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதில் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும்கூட, ஏழைகள் முதல் பணக்காரர் வரை அனைவரும் விநாயகர் சதுர்த்தி ஆயுத பூஜை ஆடி வெள்ளி புரட்டாசி சனி , ஆவணி ஞாயிறு போன்ற நாட்களில் வாழைப் பழங்கள் காய்கறிகள் தேங்காய் வாங்குவதை நாம் காணலாம்.
இதனால் அந்நாட்களில் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேறுவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு பழங்கள் வாங்கும் மக்களில் பெரும்பான்மை யோர் தினமும் ஒரு வாழைப்பழத்தைக் கூட உணவில் சேர்த்துக்கொள்ளாத வர்களாக உள்ளனர் என்பதும் உண்மையாகும்.
குறிப்பாக 2000க்குப் பிறகு பிறந்த நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கக் குழந்தைகளில் பெரும்பாலோர் பேக்கரிகளில் வாங்கப்படும் ஸ்னாக்ஸ் மட்டுமே உண்கின்றனர் பழங்களை தொடுவதே இல்லை . தேவைப்பட்டால் புட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜூஸ்களை குடிக்கின்றனர் என்பதும் உண்மையாகும்.
ஆனால் 20 ரூபாய்க்கும் 25 ரூபாய்க்கும் தேங்காய் விற்கும் காலத்திலும்கூட கோயிலுக்கு தேங்காய்களை வாங்கி சென்று சிதறடிப்பவர்களும் அரை மூடித் தேங்காயைத் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அரை மூடியை மட்டும் வீட்டுக்குக் கொண்டு வருபவர்களும் உள்ளனர். புள்ளி விபரம் எடுத்துப் பார்த்தால் ஓர் ஆண்டில் தமிழகத்தில் உண்ணப்படும் தேங்காயை விட வீணடிக்கப்படும் தேங்காய் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் !
உலகில் வேறு எந்த நாட்டிலும் உணவுப் பொருளை ஆண்டு முழுவதும் இப்படி வீணடிக்கும் பழக்கம் உள்ளதா? என்பது கேள்விக்குறியே . குறிப்பாக ஆயுத பூஜை அன்று பூசணிக்காயை வீதிகளில் போட்டுடைக்கும் கணக்கை எடுத்துப் பார்த்தாலும் அதுவும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உண்ணப்படும் பூசணிக்காயின் எண்ணிக்கையைவிட சாலைகளில் சிதறடிக்கப்படும் பூசணிக்காய் களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும் என்பதும் உண்மையாகும் .
இதுபோல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எடுத்துக்காட்டாக ஒரு கிராமப்புற காய்கறிக்கடைக்காரரிடம் பேசிப்பாருங்கள். அக்கிராமத்தின் நூறு குடும்பங்கள் உள்ளது என்றால் அவர்கள் அனைவரும் தினசரி ஏதாவது ஒரு குழம்பும் அதில் காய்களும் போட்டுத் தானே தீர வேண்டும்? கடைக்காரரோ வாரத்தின் பலநாள் வியாபாரமே இல்லை என்றே சொல்வார். நமக்கு சந்தேகம் வந்துவிடும். இவர்கள் தினமும் என்ன தான் சாப்பிடுகிறார்கள் என்று?
இவ்வளவு வறுமையில் உள்ளவர்கள் தான் விசேஷ நாட்களில் மட்டும் வாழை இலை, காய்கறிகள், தேங்காய், பத்தி சூடம் வெத்தலை பாக்கு என வாங்கிப் பணத்தை வீணடிக்கவும் செய்வதைக் காணலாம் . ஆகத் தேவை என்பது உடல் நலன் சார்ந்ததாக இங்கில்லை! நம்பிக்கை சார்ந்ததாக உள்ளது. மேலும் அந்த விசேஷ நாளில் மட்டும் வாங்கி சமைக்கப்படும் காய்கறிகளும் கூட முழுமையாக உண்ணப் படாமல் வீணடிக்கப் படுவதைக் காணலாம். ஆம் அதுதான் மனிதர்களுக்காக வாங்கி சமைக்கப்பட்டது இல்லையே! கடவுளுக்கும் முன்னோருக்கும் படைக்கச் சமைக்கப்பட்டது தானே?
@
தமிழர்களின் வாழ்க்கை முறையே அவர்களது பண்பாட்டின் மீதான நம்பிக்கையின் மீது தான் கட்டப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் பிற இனங்களில் இதுபோல் உள்ளதா என்பது கேள்விக்குறியே. ஆம் 25 ஆண்டுகளுக்கு முன் 1990களில் ஒருமுறை ராமேஸ்வரத்தில் ஒரு இளம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பூட்டிய ஒரு பெரிய பழைய பார்ப்பனரது வீட்டின் முன் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு இருபது வயது தான் இருக்கும். அவரை விசாரித்தபோது அவர் ஜப்பானிலிருந்து வந்திருப்பதாகவும் தான் ஒரு ஆய்வு மாணவி என்றும் தனது ஆய்வு இந்தியப் புனிதத் தலங்களில் உள்ள கட்டிடமுறை பற்றியது என்றும் கூறினார். எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தனி ஒருவராக வந்து இந்தியாவின் கடைக்கோடியில் நின்று ஆய்வு மேற்கொள்ளும் 20 வயது பெண் பிள்ளை என்று நினைத்தபோது அப்போது எனக்கு பெரும் வியப்பாக இருந்த தோடு அன்றைய நமது பெண் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கவும் செய்தேன்.
இன்று (2021) வெகுவாக மாறுதல்கள் நிகழ்ந்து இருப்பினும் கூட, நிறையப் பெண் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி பயில்கிறார்கள் என்ற போதிலும் கூட இன்றைக்கும் சராசரி மனிதர்களாக உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தனது பெண் குழந்தைக்கான திருமணம் என்பதையே தன் வாழ்வின் பெரும் கடமையாகவும் அதற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்று துவங்கி தமது லட்சியமே அதுதான் என்று வாழ்க்கையை முடித்துக்கொள்வதையும் இங்கு அதிகளவில் காண்கிறோம் .
அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலப்பதிகாரம் காட்டுகிற கோவலன் கண்ணகி திருமண காட்சி போலவே இன்றைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தமது வர்க்க சாதிய நிலைக்கு ஏற்ப தமது பிள்ளைகளின் திருமணத்தை நடத்திவிடத் துடிக்கின்றனர் . ஆம் இந்த பண்பாடுதான் இங்கு மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது . அவர்களது பொருளாதார ஈட்டலுக்கு காரணமாக இருந்து அவர்களை இயக்கு விக்கிறது . இந்த விதமான நிலை பற்றி 05/05/1935 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் இப்படிக்கூறுகிறார்,
”திருமணம் சம்பந்தமாக செலவு, மெனக்கெடு, வீண்கஷ்ட்டம், நஷ்டம் ஆகியவை பற்றி பழைய முறைக்கல்யாணங்களில் லட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்திற்காக மூன்று நாள் நான்கு நாள் ஏழு நாள் கூட மெனக்கெட்டு வெளியூர் உறவினர்களையும் தருவித்து மெனக்கெடச்செய்து அய்ந்து நாள் விருந்து பத்து நாள் விருந்து என்று சாப்பாட்டுச் செலவும் பந்தல் மேளம்,சங்கீதம், ஊர்வலம்,வானம் என்பதாக வீண் காரியங்களும் – குடிகாரர்கள் குடித்த போதையில் தாறுமாறாக நடப்பது போல்- கலியாண போதையில் சிக்கி பணங்கள் நேரங்கள் கஷ்ட்டங்கள் ஆகியவைகள் தாறு மாறாக செலவழிக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு மூன்று நாட்களாக சிலர் பார்த்துப் புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாறுமாறான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதியினர் தலையிலோ அல்லது குடும்பத்தார் தலையிலோ விழுந்து கலியாணக் கடன்களால் வெகு நாளைக்கு அவதிப்படவேண்டியிருப்பதால் – சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே ’பாப்பர்’ ஆகி மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆக வேண்டியதாகிவிடுகின்றன.”
ஆக இங்கு பொருளாதாரத்தின் பயன் மேற்குலக நாடுகளைப் போல ஒவ்வொரு தனி மனிதனின் அறிவுத்தேடல், சுகம், நலனுக்காக என்பதைவிட “ பண்பாட்டின்” நீட்டிப்பிற்காகத் தான் என்று அமைகிறது. இன்றைக்கும் நாம் வைகாசி ஆனி ஆவணி தை போன்ற மாதங்களில் பார்த்தால் நகை, துணி, பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம். இப்படி வாங்கப்படும் பொருட்களில் பல அவர்களின் வாழ்நாளில் ஒரே ஒரு முறை கூடப் பயன்படுத்தப்படாமல் மூட்டையாகக் கட்டி லாப்ட்டுகளில் ( இப்போது பரண்கள் கிடையாது) போடப்படலாம். ஆனாலும் அவற்றை வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தை இந்துத் தமிழ்ப் பண்பாடு ஏற்படுத்துகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மாறுதல்களையொட்டி அம்மி, ஆட்டுக்கல்லுக்குப்பதில் மிக்ஸியும் கிரைண்டரும் வந்திருக்கலாம். ஆனால் ஒரு வீட்டுக்கு ரெண்டு மிக்ஸியும் இரண்டு கிரைண்டரும் தேவையா? என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
இன்றைய எந்திர மயமான நகர்ப்புற வாழ்வில் மிக்ஸி கிரைண்டரைக்கூட பயன்படுத்தும் சூழல் குறைந்து விட்டது எனலாம். எல்லாம் ரெடி மிக்ஸ் பாக்கெட் பொடிகள் என்றான பிறகும் கூட, அதற்கும் மேல் ஆன் லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் வந்துவிட்ட பிறகும் கூட கல்யாணச்சீர் செய்வது குறையவில்லை எனும் போது இந்த உற்பத்தியும் வணிகமும் அதில் சூழலும் பொருளாதாரத்தையும் நினைத்துப்பாருங்கள்.
இதேபோல் நவீன மின்சார பொருட்கள், கார் பைக், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவி, மொபைல், ஏசி வாஷிங் மெஷின் போன்ற அனைத்தின் விற்பனையும் இந்து பண்டிகையை ஒட்டியே அதிகமாக விற்பனையாகிறது! அமேசான், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் இந்துப் பண்டிகைகளை முன்னிட்டே ஆஃபர் போட்டு (சிறப்புச்சலுகைகள் கொடுத்து) விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பதையும் காணும்போது நவீன கார்ப்பரேட் கம்பெனிகளுடைய பொருட்களின் மார்க்கெட்டும் இந்துப் பண்பாட்டைச் சார்ந்து இயங்குவதைப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து மிக முக்கியமான ஒன்றை பற்றிக் கூறவேண்டும் உலகநாடுகளில் வேறு எங்கும் காணமுடியாத பூ வுக்கு நமது பண்பாட்டில், வாழ்வில் உள்ள பங்கு! தமிழகத்தில் சங்க காலத்திலிருந்து தொடரும் ஓர் பண்பாடு பூச்சூடுதல் என்பதாகும். தமிழ் நாட்டில் இசுலாமிய, கிறிஸ்த்தவப் பெண்களும் பூச்சூடு கின்றனர் என்பது குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டிய ஒன்றாகும். சங்க காலத்தில் ஆணும் பெண்ணும் பூச்சூடிய நிலை மாறி பூச்சூடுதல் பெண்களுக்கான தாக மட்டும் மாறியது ஏன்? என்பது தனிக்கதை.
பூ விவசாயம் என்பதும், பூ வணிகம் (பூ மார்க்கெட் ) என்பது தமிழகத்தில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தப் பூ வால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மை என்ன? என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் வெறும் குப்பை என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை பூவிலிருந்து வாசனை திரவியங்களும் மருந்து பொருட்களும் தயாரிக்கப்படுமானால் அவை மட்டுமே அன்றாடப் பயன்பாட்டுக்கானது என்று ஏற்றுக்கொள்ளலாம் .
மற்றபடி இந்து ஆணாதிக்கப் பண்பாட்டின் அடிப்படையில் பெண்கள் வெள்ளி செவ்வாய்களில் கட்டாயமாக பூ சூடிக் கொள்வதும் தமிழகத்தில் தெய்வங்களுக்கும் இறந்தவர்களது உடலுக்கும் மலர் மாலைகள் அணிவிப்பதும், தலைவர்களது சிலைகள், படங்களுக்கும் உயிரோடு உள்ள தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் ஆளுயர மலர் மாலைகள் சூட்டுவதும் (இதுவும் நமது பண்பாடு சார்ந்தது தான்) பிறகு அவை அனைத்தும் வீதியில் குப்பையாக கொட்டப்படுவது மானநிலையை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த வழக்கமும் மேலைநாடுகளில் நாம் காண முடியாத ஒன்று. இவ்வாறு ஒருவரை கௌரவித்தல் மரி யாதை செய்தல் என்ற மனம் சார்ந்த ஒன்றைத் தவிர பிற வகையில் எவ்வித பயனையும் தராத மிகையான பூ உற்பத்தியும் வணிகமும் பயன்பாடும் அதையொட்டிய பொருளாதார சுழற்சியும் வீணடிப்பையும் இங்கு நினைத்துப் பாருங்கள்.
ஆக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அதன் சமூகப் பயன் (பயன் மதிப்பு) என்ன என்பதையும் அதனால் சமூகத்திற்கு கேடு ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இறுதியாக குப்பையில் கொட்டப்படுவதற்காகவே இவ்வாறு பூ உற்பத்தி செய்யப்படுவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் மனிதர்களுக்குப் பயன்படக்கூடிய பால் வெண்ணெய் நெய் போன்றவை கடவுள் நம்பிக்கையின் பெயரால் பண்பாட்டின் பெயரால் வீணடிக்கப்படுவதையும் நாம் குறிப்பிட வேண்டும் .
ஆனால் இந்தப் பகுத்தறிவுப் பார்வைக்கான அடித்தளம் இங்கு மிகப் பலவீனமாக இருப்பதையும் நாம் சொல்லியே தீரவேண்டும்! ஆம் இந்தப் பகுத்தறிவுக் கண்ணோட்டம் என்பது தர்க்கப் பூர்வமாகவும், கருத்தியலாகவும் மிகச்சரியானதாக இருந்தாலும் இன்றுவரை அதற்கான பொருளாதார அடித்தளம் உறுதியாகப் போடப்படவில்லை என்பதே உண்மையாகும். இதற்கு சில எடுத்துக்காட்டுகளை நாம் பார்க்கலாம்.
தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மிகப்பிற்பட்ட ஜாதியின் குலத் தொழிலாக பூக்கட்டுதலும் விற்பனையும் இன்றுவரைத் தொடர்கிறது. அந்தவகையில் தமிழ் நாட்டில் பல லட்சம் குடும்பங்கள் குறிப்பாகப் பெண்கள் பூக்கட்டும் தொழில் மூலம் பொருளீட்டுகின்றனர். கடவுள் நம்பிக்கையும், பூச்சூடும் பண்பாடும் இவர்களை வாழவைக்கிறது. இவ்வாறான வாழ்க்கை முறைதான் இந்து மதத்தின் நீடித்த ஆயுளுக்கும், இந்துத்துவத்திற்கான ஆதரவுப் போக்கிற்கும் அடித்தளமாக அமைகிறது.
இவர்களுக்கான மாற்றுத் தொழிலை நாம் ஏற்படுத்தித் தராமல் கருத்தியலாக மட்டும் நாம் பூச்சூடுதல் மற்றும் பூவின் பயன்பாடு பற்றிப் பேசிப் பயனில்லை. பண்பாட்டுப் பொருளாதாரத்தின் சமூக விளைவு இந்துத்துவத்திற்கு ஆதரவு மன நிலையை உற்பத்தி செய்தல்தான் என்பதற்கு இன்னும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
இராமேஸ்வரம் கன்யாகுமரி போன்ற கோயில் நகரங்களில் இந்துத்துவ சக்திகள் வலிமையாக இருப்பதற்கும் திராவிடர்கழகம் மற்றும் திராவிட இயக்கம் வளரமுடியாமல் இருப்பதற்கும் முதன்மையான காரணம் இந்த ஆன்மீக, பண்பாட்டுப் பொருளாதாரமே காரணமாகும். இங்கு கோவிலைச் சுற்றி வாழும் பல் நூறு ஜாதி இந்துக்குடும்பங்களுக்கு கோவிலே நேரடியாகவும் மறைமுகமாகவும் சோறு போடுகிறது.
ஆம்! அதுதான் உண்மை! நீங்கள் இராமேஸ்வரத்தில் இந்தச் சொற்களை மிகச் சாதாரணமாகக் கேட்க முடியும். ”இன்னைக்கு இராமனாதன்(சுவாமி) அளந்தது இவ்வளவுதான்!” என்றும் ”அந்த இராமனாதன் புண்ணியத்துல பசியாம கஞ்சி குடிக்கிறோம்!” என்றும் சொல்லக் கேட்கலாம். ஆக கோவிலும் கடவுளும் நீடித்து நிலை பெற்றிருப்பதே தங்களது வாழ்வுக்கும் வளத்திற்கும் நன்மை என்று கருதும் மக்கள் மத்தியில் கடவுள் இல்லை என்று சொல்லும் திராவிடர்கழகம் எப்படி வளரமுடியும்?
1980,1990 களில் இருந்த ஒருசில திராவிடர் கழக இளைஞர்களும் காணாது போய் இராமேஸ்வரம் நகரில் திக அழிந்தும் போயிற்று. அதற்கு நேர்மாறாக பல இந்துத்துவ அமைப்புகள் செல்வாக்கோடு திகழ்கின்றன. இராமேஸ்வரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியானாலும், திமுகவானாலும் கோவில் விசயத்தில் பாஜக வின் நிலை பாட்டையே எடுக்கும் நிலமையுள்ளதும் கள யதார்த்தமாகும். (இது போல் நிறைய எடுத்துக் காட்டுகளை நம்மால் சொல்ல முடியும் ஆனால் சுருக்கங்கருதி இத்துடன் முடித்துக் கொள்வோம்)
ஆகப் பண்பாட்டுப் பொருளாதாரத்தினை நம்பி பல லட்சம், அல்லது சில கோடி மக்கள் தமிழ் நாட்டில் வாழ்க்கையை நடத்திச்செல்லக் கூடிய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு இன்றளவும் உயிர்ப்போடு இயங்கும் நிலையில் அதன் விளைவுகளும் தொடர்வது வியப்பானதல்லவே?
@
இதுவரை நாம் தமிழகத்தில் நிலவிய பாரம்பரிய கைத்தொழில் பிரிட்டிஷார் வருகை துவங்கி இன்றைய உலகமயமாக்கல் வரை அழிக்கப்பட்டுவருவதைப் பற்றியும் அதேசமயம் அதில் வெகுசில மற்றும் பண்பாட்டுத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இன்றும் குறிப்பிட்ட அளவில் உயிர் வாழ்ந்து வருவதையும், மேலும் தமிழர்களது வாழ்விலும் பொருளாதாரத்திலும் பண்பாடு ஓர் தீர்மானகரமான பங்கு வகிப்பதையும் பார்த்தோம். இவ்விடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது .
ஒருவேளை பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்? இந்தியக் கைவினைத் தொழில்கள் அழியாமல் மக்களது முழுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய வகையில் வளர்ந்து இயந்திரமயமாகி இந்தியா இன்று ஒரு வல்லரசாக உயர்ந்திருக்குமோ? இவ்வாறு தான் பலரும் கூறுகின்றனர் . இல்லை ஒரு போதும் இவ்வாறு நிகழ்ந்திருக்காது! இன்றைக்கு நாம் சந்திக்கும் இந்த நவீன வாழ்க்கைச் சாதனங்கள் கல்வி மருத்துவம் போன்ற எதுவும் நாம் பார்த்திருக்க முடியாது! என்றே தோன்றுகிறது.
ஆம் பிரிட்டிஷாரின் வருகைக்கு முந்தைய தமிழகம்/இந்தியா அதன் இயல்பிலேயே மலட்டுத்தன்மையைக் கொண்டிருந்தது. அந்த மலட்டுத்தனத்தை உருவாக்கியதில் இந்தப் பார்ப்பனியப் பண்பாட்டிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. இந்த விஷயத்தைப் பற்றி பல்வேறு அரசியல் சமூக பொருளாதார ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து உள்ளனர். குறிப்பாக அவர்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் விளக்கியுள்ளதை நாம் காண்கிறோம் .
மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களும் தமது மூலதனம் மற்றும் செருமானியக் கருத்தியல் என்னும் நூல்களில் இந்தியாவின் தனித்தன்மையைப் பற்றி கூறியுள்ள தகவல்களைப் பலரும் பதிவு செய்துள்ளனர். இந்தியாவைப் பற்றிய மார்க்ஸ் எனும் தனி நூலும் வந்துள்ளது. மார்க்சிய ஆய்வாளர் முனைவர் கோ. கேசவனும் தனது இந்திய தேசியத்தின் தோற்றம் எனும் நூலில் இதுபற்றி விளக்குகிறார். மேலும் இந்தியாவில் பிரிட்டிஷார் வருகைக்கு முந்தைய சமூக அமைப்பு முறை எனும் அத்தியாயத்தில் இப்படிக் கூறுகிறார் (பக்கம் 15 – 25)
“ முழு அதிகாரம் கொண்ட கொண்ட கிராமச் சமூகங்கள் இருந்தன. அவற்றில் கைவினைத்தொழிலும் உழவுத்தொழிலும் ஒருங்கிணைப்போடு செயல்பட்டன. கிராமத்திலிருந்து தனி நபர் தன்னை விடுவித்துக் கொள்ள இயலாது. அல்லது வேலைப் பிரிவினையில் தனக்கென விதிக்கப்பட்ட இடத்திலிருந்து மீள இயலாது.”…….” வேளாண்மை உற்பத்தியில் பண்டப்பொருள் (சரக்கு) உற்பத்தி மேலாதிக்கம் பெறுவதில்லை. சிறு இயந்திர உற்பத்தி என்பது நிலவுடமைக்கு கீழ் பட்டதாகவோ கட்டுண்டதாகவோ இருக்கும் ”….
“அரசு உபரி உற்பத்தியை அபகரிக்கிறது. அரசின் படை பலம் கருத்தியல் பலம் ஆகியவற்றின் துணைகொண்டு உபரி அபகரிக்கப்படுகிறது. அபகரிக்கப்பட்ட உபரி மீண்டும் உற்பத்தியில் முதலீடு செய்யப்படவில்லை. ஆடம்பரமான செலவுகளில் பெரிதும் பயன்பட்டது. “ …. “ சாதி வேலைப் பிரிவினையின் வடிவமாகும். இது சமூக உற்பத்தியை ஒழுங்குபடுத்தியது. ஒரு மனிதனின் தொழில் திருமணம் சமூகப் பங்கு ஆகிய அனைத்தையும் முறைப்படுத்தியது.”
“ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஒருவித தேக்க நிலையுற்று கூடுதல் உற்பத்தி என்பதை விட கூடுதல் உபரி உற்பத்தி அபகரிப்பு என்ற நிலைக்கு திரும்பிய பின் இந்த மூன்று (சாதி, கிராம சமூக அமைப்பு ,கொடுங்கோல் அரசு) சமூக உறவு வடிவங்களும் மக்களின் மீது ஒட்டுண்ணிகளாக விளங்கின. உற்பத்தி வளர்ச்சிக்கானத் தடைகளாகவும் விளங்கின. அத்தகைய காலத்தில் இவற்றின் பிற்போக்கான தன்மையை உடைத்தெறியாமல் சமூகம் வளர வாய்ப்பிருக்காது. இந்தியப் பகுதியின் தேக்கத்திற்கும் மாறா நிலைக்கும் இத்தகைய தடைகளே காரணமாக இருந்தன. இவற்றையும் மீறி வளர்வதற்கான சமூகக் கூறுகள் மிகக் குறைவாகவும் பலவீனமாகவும் தென்பட்ட நேரத்தில் பிரிட்டன் வணிக நிறுவனம் என்ற வெளி ஆதிக்க சக்தி வந்து சேர்ந்தது ”.
மேலே குறிப்பிடப்படும் விவரங்கள் ஒன்றை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. பிரிட்டிஷார் வராவிட்டாலும் கூட இங்கிருந்த கைவினைப்பொருள் உற்பத்தியானது பிற ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற வளர்ச்சியை ( தொழிற்புரட்சி) அடைந்திருக்க முடியாது ! என்பதையே காட்டுகின்றன.
முனைவர் கோ.கேசவன் முன்வைக்கும் இந்த வரலாற்று விபரங்கள் நமக்கு பிரிட்டிஷார் வருகைக்கு முன்பிருந்த தமிழகத்திலும், தமிழர்களிடத்திலும் பண்பாட்டுச் செல்வாக்கு மிகுந்திருந்ததை உணர்த்துகிறது. அதாவது உற்பத்தி மற்றும் நுகர்வில் ஜாதியின் ஆதிக்கமும் சுரண்டப்பட்ட உபரி படாடோபங்களுக்கு செலவழிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை ஆகும்.
அதாவது உற்பத்தியே ஜாதியப் பண்பாட்டிற்கு அடிமைப்பட்டிருந்த நிலை. உலகம் முழுவதும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி தான் மாற்றங்களை கோரியது. ஆனால் இங்கு உற்பத்தி முடமாக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளை ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலை அதாவது உழைப்பு சமூகமயமாக்கப்படவில்லை. உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி விடுகிறது.
அடுத்து இங்கு நடைபெற்றது நுகர்வுக்காக மட்டுமேயான உற்பத்தி அதாவது பயன்பாட்டுக்கான உற்பத்தி, பரிவர்த்தனை கான உற்பத்தி அல்ல! பரிவர்த்தனைக்கானதாக உற்பத்தி செய்யப்படும் போது அதாவது பொருள் சரக்காக மாறும் போதுதான் உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு உற்பத்தியும் நுகர்வும் வரையறுக்கப்பட்டு விட்டதால் வளர்ச்சி சாத்தியம் இல்லை. மேலும் உபரியை கொடுங்கோல் அரசும்(அரசன்?) அதிகாரிகளும் (இவர்கள் எந்த ஜாதியினர் ) உறிஞ்சி அவற்றை உற்பத்திக்கான நீராதாரம், நிலத்தைப் பண்படுத்துதல் கச்சாப் பொருட்களை பெருக்கவும் உழைப்பாளிகளுக்கும் செலவிடாமல் கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் , ஆடம்பர பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் செலவிடும்போது கைவினைத் தொழில் பிறநாடுகளில் எந்திரப் பட்டறைத் தொழிலாக வளர்ந்தது போல் இங்கு வளர முடியாமல் செய்துவிடுகிறது.
தமிழகத்தில் நாம் காணும் பெரிய பெரிய கோபுரங்களையும் அரண்மனை களையும் சத்திரங்களையும் சதுர்வேதி மங்களங்களையும் புண்ணிய தலங்களில் செழித்து விளங்கும் அக்ரஹாரங்களையும் பார்க்கும்போது அவை தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையின் சின்னங்களாக காண்பதற்கு மாறாக அவை தமிழர்களின் பாரம்பரிய கைவினைத் தொழிலை காயடித்த கைவினைஞர்களை முடமாக்கியதற்கான நினைவுச் சின்னங்கள் என்று உணர வேண்டும்.
@
அப்படி என்றால் பிரிட்டிஷாரின் வருகையினால் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்ன? பிரிட்டிசார் வருகையால் நமக்கு இருவேறு விளைவுகள் ஏற்பட்டன . ஒன்று நாம் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல ஜாதி ரீதியான கைவினைத் தொழில்கள் பல அழித்தொழிக்கப்பட்டன, சில எஞ்சின. மற்றொன்று இங்கு அதுவரை இல்லாத புதிய நவீன தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், மக்களுக்கான கல்வி, மருத்துவம், இலக்கியம், தத்துவம், அரசியல் கண்ணோட்டங்கள், அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை என இன்னபிற எண்ணற்ற விஷயங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இன்று நாம் காணும் அனைத்துக்குமான மூலங்களையும் நமக்கு அறிமுகப்படுத்திய வேலையையும் பிரிட்டிஷாரே செய்தனர். அவ்வாறு புகுத்தப்பட்ட மாற்றங்களின், நவீனங்களின் பயனை அனைவரும் அனுபவித்தாலும் அந்த நவீனங்கள் விளைவால் ஜாதியப் பண்பாட்டில் ஏற்படக் கூடிய சிறு கீறலையும் இங்கிருந்த சனாதனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷாருடன் இணைந்து மக்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செய்யவும் நவீனச் சுகபோகங்களை அனுபவிக்கும் விரும்பிய அதே நேரம் நவீன சமூக அரசியல் கோட்பாடுகளை (மறுமலர்ச்சிக் கோட்பாடுகளை) எதிர்க்கவும் செய்தனர் ,
இவர்களே அன்றைக்கு இருந்த இந்துத்துவவாதிகள். இவர்களில் பலர் தேச விடுதலைப் போராட்டத்திலும் காங்கிரசிலும் கூட ஊடுருவியும் இருந்தனர் . இவர்களின் தொடர்ச்சியை, வாரிசுகளை இன்றும் நாம் சந்திக்கின்றோம். தோற்றத்தில் நவீனமாகவும் ஆனால் உள்ளத்தில் ஜாதி மத அடிப்படைவாதி களாகவும் நம் முன் நின்று தமது இரண்டாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியப் பெருமைகளை பேசுகின்றவர்கள்தான் அவர்கள்.
இவர்கள் உள்ளீடற்ற பொய்யர்கள். சொந்த வாழ்வில் நவீன ஆடை நவீன கார் நவீன கல்வி, மருத்துவம், நவீன கருவிகள் எனத் தங்களது சுய நலத்திற்கு அனைத்து அறிவியலையும் பயன்படுத்தி சுகத்தை அனுபவிக்கும் அதே நேரம் மறுஉற்பத்தி (திருமணம்) விஷயத்தில் மட்டும் ஜாதி மத இனப் பண்பாட்டை கறாராக பின்பற்றவும், பிறருக்குப் போதிக்கவும் செய்யும் பண்பாட்டுக் காவலர்கள் (வெறியர்கள்) இவர்கள்.
அன்றைக்கு பிரிட்டிஷார் கொண்டுவந்த உடன்கட்டையேறுதல் எனும் சதி மீதான தடையை எதிர்த்தவர்கள். கல்வி நிலையங்களில், ரயில் பேருந்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுத்தவர்கள் மேலும் பழைய பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு எல்லாம் புதிய விளக்கங்களைக் கொடுத்து அவற்றை நியாயப்படுத்துபவர்கள், தேவதாசி முறையை ஆதரித்தவர்கள் அதன் மீதான தடையை எதிர்த்தவர்கள். இன்றைக்கு ஆணவக்கொலையை ஆதரிப்பவர்கள். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்ப்பவர்கள். அனைத்துச்ஜாதியினரும் அர்ச்சகராவதைத் எதிர்ப்பவர்கள்!
இவர்களில் ஒரு பிரிவினர் மதத்தின் பெயராலும் மற்றொரு பிரிவினர் இனத்தின் பெயராலும் பாரம்பரியப் பெருமையும் விளக்கமும் கொடுத்து பழைய பண்பாட்டிற்குத் திரும்ப வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றனர். பண்பாட்டில் தொடங்கி படிப்படியாக மருத்துவம் கல்வி விவசாயம் அரசு ஆட்சி முறை என அனைத்திலும் பின்னோக்கி மத அடிப்படைவாதிகள் வேத காலத்திற்கும் இன அடிப்படைவாதிகள் ராஜராஜ சோழன் காலத்திற்கும் அழைத்துச் செல்லத் துடிக்கின்றனர்.
இவர்களுக்கான ஆதரவை, அடித்தளத்தை தமிழகத்தில் இன்றும் நிலவி வரும் பண்பாட்டுப் பொருளாதாரமும் பண்பாட்டுத் தேவையை மய்யமிட்ட நவீன உற்பத்தியும், தமிழக மக்கள் மத்தியில் நிலவிவரும் பண்பாட்டின் ஆதிக்கமும் ஏற்படுத்தித் தருகின்றன. இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ் நூலில் மாமேதை கார்ல் மார்க்ஸ் கூறுவார் பிரிட்டிஷாருக்கு முன் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தவர்கள் எல்லாம் இந்தியச் சமூக அமைப்புமுறையில் (கீழைக் கொடுங்கோன்மை முறையில்) எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த இயலவில்லை. மாறாக அதனால் உள்வாங்கப்பட்டு செரிக்கப்பட்டனர். முதல் முறையாக பிரிட்டிஷார்தான் இதில் மாறுதலை ஏற்படுத்தினர் என்பார்.
உண்மைதான்! பிரிட்டிஷார் மாறுதலை ஏற்படுத்தினர் என்று மார்க்ஸ் கூறியது உண்மைதான். ஆனால் அவர்கள் இங்கு ஏற்படுத்திய மாறுதல் என்பது பழைய கைவினை உற்பத்திமுறை, கருவிகள் போன்றவற்றை அழித்து விட்டு எந்திரங்களைக் கொண்டுவந்து புகுத்தினரே தவிர இங்கிருந்த பார்ப்பனிய ஜாதியப் பண்பாட்டை, ஜாதிய உறவு முறையை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. அது அவர்களுக்கு அவசியப்படவுமில்லை.
அதன் பிறகு, 1947க்குப் பிறகு படிப்படியாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார அரசியல் சட்ட திட்டங்களால் பின்தங்கிய நிலவுடமை உற்பத்திமுறை தகர்ந்ததே ஒழிய நிலவுடமை முறையால் பலன் பெற்ற (பார்ப்பன பனியா) ஜாதிகள் இன்றும் அப்படியே அதே உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மேலை நாடுகள் காணாத இந்திய நாட்டின் தனித்துவமான நிலையாகும். குறிப்பாக பிரஞ்ச்சுப் புரட்சியின் போது நிலப்பிரபுத்துவ வர்க்கம் அழித்தொழிக்கப்பட்ட விதம் நாமறிந்ததே! புரட்சிக்குப் பின் அங்கு நிலப்பிரபுக்கள் ஒழிந்துபோயினர். ஆனால் இங்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் என்பது குறிப்பிட்ட ஜாதிகளாகவும் இருந்த நிலையில் அதே ஜாதியினர் இன்றைக்கும் சமூகச் செல்வாக்கோடும் தொடர்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இது ஜாதியே வர்க்கமாகவும் நீண்டகாலம் செயல்பட்டு வந்ததின் விளைவாகும். அதன் தொடர்ச்சியாகத்தான் இங்கு வந்த நவீனங்கள் அனைத்தினூடாகவும் ஜாதியமும் பார்ப்பனியப் பண்பாடும் புகுத்தப்பட்டு அவற்றைத் தங்களது நலனுக்கானதாகவும் மாற்றிக்கொள்ள முற்பட்டது. ஒரே ஒரு சிறு உதாரணம் மட்டும். மிக நவீன தொலைக்காட்சி அலைவரிசையின் மூலம் நவீன எல் ஈ டி டிவியில் தினமும் காலையில் பார்ப்பனச் சோதிடர்கள் தோன்றி 1000 ஆண்டுகளுக்கு முந்தய பழைய பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து மனிதர்களின் ராசிகளுக்கு பலன்களைக் கூறிச் சுரண்டலில் ஈடுபடுவதையும் அதைப் பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் தினசரிப் பார்த்தும் கேட்டும் அதன்படி நடக்கவும் பார்ப்பனர்களுக்கும் கோவில்களுக்கும் தங்களது சம்பாத்தியத்தில் ஒரு பங்கை அளித்துவருவதையும் நாம் பார்க்கிறோம்.
இவற்றையெல்லாம் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டவராக தந்தை பெரியார் இருந்தார். என்பதோடு இந்தப் பார்ப்பனப் பண்பாட்டு மோசடிகளையும் தீமைகளையும் எதிர்த்து தன் வாழ்நாளெல்லாம் போராடவும் செய்தார். தந்தை பெரியாரின் இந்தப் புரிதலும், எதிர்ப்பு போராட்டமும் இன்றும் தேவையாக உள்ளது. அதனுடன் கூடுதலாக நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைப்பையும், கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலையும் தமிழர்களிடம் புரையோடிப் போயுள்ள ஜாதியக் கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்ளவும், எதிர்க்கவும் மார்க்சியத்தையும் அம்பேத்கரியத்தையும் உள்வாங்க வேண்டியுள்ளது.
இவ்வாறு மூன்று கண்ணோட்டங்களும் ஒன்றினையாமல் தனித் தனியாக பிரிந்து நின்று சிந்திப்பது என்பது ஒன்று கார்ப்பரேட் முதலாளியத்திற்கோ அல்லது பார்ப்பனியத்திற்கோ நம்மைப் பழியாக்கிவிடும் என்பதை கடந்த கால வரலாறு காட்டுகிறது. ஆக இன்றைய உடனடித்தேவை அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய கண்ணோட்டங்கொண்டோரின் முழுமையான ஒன்றிணைவும் செயல்பாடும் மட்டுமேயாகும்.
@