அணையா நெருப்பின் அடிக்கங்கு
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு நூல் குறித்த விமர்சனம்
ஆகஸ்ட் 1, 2020 தேதியிட்ட தமிழ் இந்துவில் வெளிவந்த நூல் விமர்சனத்தின் முழு வடிவமே இக்கட்டுரை.
“நட்ட நடு நிசியும் நடுநடுங்க
மின்னும் நட்சத்திரங்களும் நடுநடுங்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
பூமி குலுங்கட்டும் கும்மி கொட்டுங்கடி
திக்கெல்லாம் மூடும் இருள் நொறுங்க
நாங்க தேடுற பாதை வெளிச்சம் வர வந்த
செக்கச் சிவந்த பொழுதுகளே
உங்க தங்கச்சிகள் கும்மி கொட்டுகிறோம்”
– மக்கள் கவிஞன் இன்குலாப்
தோழர் செ. சண்முக சுந்தரம் அவர்கள் எழுதிய ‘அரை நூற்றாண்டுக் கொடுங் கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ என்கிற நூலினைப் படித்து முடித்த போது, வெண்மணி குறித்து மக்கள் கவிஞன் இன்குலாப் அவர்கள் எழுதிய ‘திருவிழா’ என்கிற கவிதை மனநிலைதான் எனக்கு வாய்த்தது.
சாதியாலும் வர்க்கத்தாலும் ஒருசேர வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு திக்கெல்லாம் மூடிய… மூடிக்கிடந்த… வெண்மணி மக்களின் இருள் நொறுங்கிட, அவர்கள்தேடிய பாதையில் வெளிச்சம் தரவந்த… தரவைத்த… செக்கச் சிவந்த பொழுதுகளின் வரலாற்று விமர்சனக் குறிப்புகள்தான்தோழர் செ. சண்முக சுந்தரம் அவர்கள் எழுதிய,’அரை நூற்றாண்டுக் கொடுங் கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ என்கிற இந்த நூல். இந்நூலின் தனித்துவம் என்னவென்றால்… சிறப்பு உட்க்கூறு என்னவென்றால்… அந்தச் செக்கச் சிவந்த பொழுதுகளை மட்டும் காட்டவில்லை இந்நூல். மாறாக, செக்கச் சிவந்த பொழுதுகளோடு… கன்னங் கருத்த பொழுதுகளையும்… நீல நீலமாய்ப் படிந்திருந்த நீலப் பொழுதுகளையும் என ‘நிறங்களின் நிஜங்களை’ ஒரு சேர வடித்துக் காட்டியதுதான், அடித்துச் சொல்லியதுதான் இந்நூலின் தனித்துவம். தனிச் சிறப்பு.
இன்குலாப்பின் கவிதையில் அந்தத் தங்கச்சிகள் எப்படி கும்மி கொட்டினார்களோ அதைப்போல, படித்து முடித்தவுடன் ஒவ்வொரு வாசகனும் கட்டாயம் கும்மி கொட்டுவான். கொட்டிடுவான் என்பதுதான் நிஜம்.
அணையா நெருப்பின் அரை நூற்றாண்டுக் கொடுங் கனவுகள்தான் இந்நூல். இந்த அரை நூற்றாண்டுகளில் காலம் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை, சம்பவங்களைக் கடந்து போயிருக்கிறது. கடத்திப் போயிருக்கிறது. பலவும் வெற்றுச் செய்திகளாக, தகவல் குப்பைகளாக, நினைவடுக்குகளில் பதிவாகாமல் போகிற போக்கில் காணாமற் போயிருக்கிறது. வேறு பலவோ அந்தக் கணத்தில் பொங்கிப் பிரவகித்து, கோடி கோடிப் பூக்களை வண்ண வண்ணமாய் நொடிதனில் சொரியுமே, அப்படியான வாண வேடிக்கை மத்தாப்புகளாய், அப்போது மட்டும் பிரகாசித்து, பின் சட்டென்று சாம்பலாய்க் காலக் காற்றில் கரைந்து போயிருக்கிறது. ஆனால் சில நிகழ்வுகளே, நிகழ்த்துதல்களே, நினைவடுக்கில் ஆழமாய்… அழுத்தமாய்… வடுக்களாயும், வனப்புகளாயும், வாழ்க்கைப் பாடஞ் சொல்வதாயும் அமைந்திருக்கின்றன. கால மாயம் தன்னுள் பல காயங்களைக் கரைத்துவிட்ட போதிலும், கடந்துவிட்ட போதிலும், கடத்திவிட்ட போதிலும், இந்த வெண்மணித் தீ மட்டும் இன்னும் அணையாமல் தன்னுள் தகிப்போடு கனன்று கொண்டேயிருக்கிறதே ஏன்?
ஏனென்றால், அதன் அடியில் இருக்கும் காரணிகள்தான். அவைகள் அரை நூற்றாண்டுகள் கடந்தபிறகும் மாறவில்லை. மாறிவிடவில்லை. மாற்றப்படவில்லை என்பதுதான். இன்னும் இந்த மண்ணில் ஆயிரமாயிரமாய்ச் சாதிய வன்கொடுமைகள், உழைப்புச் சுரண்டல்கள் என சாதியும் வர்க்கமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஒன்றுடன் ஒன்றாய்ப் பிணைந்து பின்னிக் கொண்டிருப்பதுதான். நாம் இன்னும் சாதியயையும் அழித்தொழிக்கவில்லை. வர்க்க முரண்பாட்டையும் அழித்தொழிக்கவில்லை. இன்னும் இந்த இரண்டு கொடுந்தீயையும் அணைக்காமலிருக்கும்வரை எப்படி அவியும் அந்த அரை நூற்றாண்டுக் கொடுந் தீ? அதனால்தான் இன்னும் அந்தக் கொடுந்தீ அணையாமல் அவியாமல் தன்னுள் கனன்று கொண்டேயிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? அதனை வரலாற்றுப் பூர்வமாக, ஆவண ஆதாரங்களோடு சொல்லிச் செல்கிறது இந்நூல். அற்றைக் கால அவலங்களை நம் கண்முன் விரித்துப்போடுகிறது இந்நூல்.
ஆதியிலிருந்தே மனித குல அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உணவு. அதற்கு அடிப்படைத் தேவை நிலம். அந்த நிலத்தில் தன் உழைப்பு கொண்டு, தனக்குத் தேவையான, தன் இனத்திற்குத் தேவையான, உற்பத்தியை விளைவித்துக் கொண்டது. நாளடைவில் தன் இனக் கூட்டம் பெருகிடப் பெருகிட, மனித அறிவால் விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் கொள்ள, தேவைக்குப் போக மீந்த ‘உபரி‘யை (அழுத்தம் எம்முடையது) யார் கைப்பற்றுவது என்கிற போராட்டத்தில் தனிவுடைமை தோற்றமெடுக்க, ஆக இற்றைநாள் வரைக்கும் அந்த தனிவுடைமையே ஆகப் பெரிய பெரும் பிரச்சனையாய் இருக்கிறது மனித குலத்திற்கு. இந்த ஆகப் பெரிய மனித குலப் பிரச்சனையின் தோற்றுவாயை, அதன் தொடர்ச்சியை, படிநிலை வளர்ச்சியை, பகுத்துத் தொகுப்பதன் மூலம் ஒரு இயங்கியல் வழிப்பட்ட அறிவியல் பூர்வ கண்ணோட்டத்தில் இயங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
பொதுவாக ஒவ்வொரு நூலாசிரியருக்கும் நூலெழுதுதலின்போது தனக்கெனவென்று ஒரு தனித்த போக்கிருக்கும். ஆக்கமிருக்கும். இந்நூலின் தனித்த போக்கு என்பது, தனிச் சிறப்பான ஆக்கம் என்பது, எடுத்துக் கொண்ட பிரச்சனையின் ஆதி அந்தம் வரை தனித்தனியாகப் பகுத்திருப்பதுதான். வகுத்திருப்பதுதான். தொகுத்திருப்பதுதான்.
அடிப்படையில் வெண்மணியின் பிரச்சனை என்பது என்ன? சாதிய அடக்குமுறையும் வர்க்க ஒடுக்குமுறையும்தான். இந்த அடக்கு முறைக்கெதிராய், ஒடுக்குமுறைக்கெதிராய், வெகுண்டெழுந்து நின்ற போராட்டத்தை… அடக்கி ஒடுக்க, ஆண்டைகளால் ஏவப்பட்டதுதான் அந்தக் கொடுந்தீ. அந்தக் கொடுந்தீயின் கோரப் பற்களை, அதன் பிளவுண்ட நாக்குகளை, விகார முகத்தினை வாசிப்பவனுக்குள் அதன் வெம்மை தணியாமல் கடத்துதலோடு மட்டுமல்ல. அந்தக் கொடுந்தீக்கான அடிப்படை எது? அடிநாதம் எது? என்கிற அறிவுப் புரிதலை, அரசியற் புரிதலை, வாசகப்பரப்பினுள் கடத்துவது என்பதுதான் ஒரு மக்கள் விடுதலைக்கான எழுத்தாளனின் அம்சம். அதன் அடிப்படையில் மிகச் சரியாகவே மிக மிகச் சரியாகவே இயங்கியிருக்கிறார் தோழர் செ. சண்முகசுந்தரம் அவர்கள்.
வெறும் வரலாற்றுக் குறிப்புகளை, நிகழ்ச்சிக் குறிப்புகளை, வெறுமனே அள்ளித் தெளிக்காமல், ஆண்டு தேதி குறிப்பிட்டு ஜாதகம் கணிக்காமல், உண்மையின் பிரச்சனை என்ன? அதன் அடிப்டை என்ன? அடிச்சரடு என்ன? அடிநாதம் என்ன? என்பன போன்றவற்றின் மீதெல்லாம் அக்கறை கொண்ட எழுத்தாடல் களங்களைக் கட்டமைப்பதுதான் ஒரு மக்கள் விடுதலைக்கான எழுத்தாளனின் கடமை. அதன் அடிப்படையில் தோழர் செ. சண்முகசுந்தரம் அவர்கள் தனது காத்திரமான எழுத்தாடல்களின் வழி, தான் ஒரு மக்கள் விடுதலைக்கான செயல்பாட்டாளன்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
அதன் வழியில், பிரச்சனையின் ஆதி அடிப்படையான நிலம். பின்னர் அதன் களம். அடுத்து பிரச்சனைக்கு விடைகாண எத்தனித்த கூறுகளில் ஒன்றான வதம் என மிகத் தெளிவாக, பிரச்சனையின் போக்கினை, வரலாற்றின் கட்டங்களை மூன்று இயல்களாக அடுத்தடுத்து ஆழமாக அடுக்குகிறார். அந்த அடுக்குதல்களின்போதே தனது ஆழமான, ஆழ்ந்த விசாரணைகளுடன் கூடிய, விவாதக் கணைகளையும் தொடுக்கிறார்.
இந்திய நிலவுடைமையின் தோற்றம், வளர்ச்சி, பிற குடியேற்றங்களினால் ஏற்பட்ட மாறுதலகள், நிலங்கள் யாரிடம்? யார் கைகளில்? யார் கட்டுப்பாட்டில்? யார் அதிகாரங்களின் கீழ்? என்கிற காலகட்டங்களுக்கு, சிந்து, மொகஞ்சதோரா, ஹரப்பா தொடங்கி, ஆரியர் உள்நுழைவிலிருந்து, பிற குடியேற்றங்களிலிருந்து, எப்படி படிப்படியாக பண்ணையார்களிடம், மிராசுதார்களிடம் வந்து சேர்ந்தது என்பதையெல்லாம்… ஒவ்வொருவரிடமிருந்து எப்படி அடுத்தடுத்து கைமாறியது? மாற்றப்பட்டது? என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியரின் பக்குவத்தோடு இயல்படுத்துகிறார். நிரல் படுத்துகிறார் நூலாசி்ரியர்.
அடுத்த இயலாக பிரச்சனையின் களம் எப்படியிருந்தது? அது தோழர் பி. சீனிவாசராவ் தொடங்கி, தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் வரை ஒரு பரந்துபட்ட அரசியற்களமாடல்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இடையில்… இன்று பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும், ‘வெண்மணியில் தந்தை பெரியார் நிலை என்ன?’என்பதான அவதூறுகளுக்கு, அன்றைய கள ஆதாரங்களோடு, தனது விவாதத்தினையும் தொகுத்து, ஒரு தீவிர வாசகப் பரப்பினுள் நல்லதொரு விவாதக் களமாடியுள்ளார் தோழர் செ. சண்முகசுந்தரம் அவர்கள்.
இறுதி இயலாகவெண்மணி குறித்து தமிழ் இலக்கியப் பரப்பினுள் பதிவான புதினங்களை வாசிப்பு விசாரணைக்குள்ளாக்குகிறார். பொதுவாக எந்த ஒரு பிரச்சனையானாலுஞ் சரி. அப் பிரச்சனையின் தீவிரத்தை, அதன் காத்திரத்தை, கனதியை, அடர்த்தியை, நீர்த்துப் போகச் செய்வதுதான், மலினமாக்கி ஒன்றுமில்லாமற் செய்வதுதான், ஆளும் வர்க்க அடிவருடி எழுத்தாளர்களின் நிலை. அதன் வரிசையில் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய ‘குருதிப் புனலை’ தீவிர வாசக விசாரணைக்குட்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த விசாரணையில் தோழர் செ. சண்முகசுந்தரத்தின், பொங்கி எழுந்து பீறிட்டுக் கிளம்பும் அறச் சீற்றம் இருக்கிறதே. அப்பப்பா… அப்படி ஒரு அறச் சீற்றப் பதிவு அது. பின்னர் தோழர் சோலைசுந்தரப் பெருமாளின் ‘செந்நெல்’ குறித்த சிலாகிப்பு. தோழர் மீனா கந்தசாமியின் ‘குறத்தி அம்மன்’ புனைவில் பெரியார் குறித்த அவதூறுகளுக்குப் பதிலடி. எமது நூலான ‘கீழைத்தீ’ குறித்தான உடன்பாட்டுப் பதிவுகள். இறுதியாக, தனது புனைவு எழுத்தாடலின் பரிசோதனை முயற்சியாக ‘வதம்’ என்கிற தனித் தலைப்பில் அருமையாக எழுத்தாடியிருக்கிறார். உண்மையில் அந்தப் புனைவை மிகக் கவனமாகக் கையாடுள்ளளார். அதுமிகு புனைவாகி விடாமல், பொய்ப் புனைவாகிவிடாமல், அதேசமயம் இலக்கிய நவீனத்துவ கூறுகளை உள்ளடக்கிய புனைவாகப் பதிவு செய்யதன் மூலம், அவருக்கு அ – புனைவெழுத்து மட்டுமல்ல புனைவெழுத்தும் வசப்படும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வீரத் தெலுங்கானா, தெபகா எழுச்சிகளைப் போல கேரளத்து கையூர் புரட்சியையும், கீழத் தஞ்சைப் போராளிகளான வாட்டாக்குடி இரணியன், மணலி கந்தசாமி போன்றோர்களின் வரிசையில் தோழர் மணலூர் மணியம்மையாரையும் சேர்த்துக் கொண்டால், இந்த நூல் இன்னும் அடர்த்தியாகும். கனதியாகும். நூலாசிரியர் அடுத்த பதிப்பின்போது கவனங் குவித்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது எமது பரிந்துரை.
அருமையான, வசீகரமான, வனப்புடனான அட்டை. நல்ல அச்சு. நல்ல கெட்டியானதாள். மெனக்கெட்டால் மட்டுமே எண்ணிவிடக்கூடிய எழுத்துப் பிழைகள் என நல்லதொரு நூல் தயாரிப்பில் அன்னம் வெளியீடு.
பொதுவாக வாசிப்பின் முடிவில் நூல் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பீடு எழும். எமது வாசிப்பின் முடிவில் இந்நூல் குறித்தான எமது மதிப்பீடு என்பது… வெண்மணியின் அணையா நெருப்பின் அடிக்கங்கு இந்நூல்.
இறுதியாக… கீழவெண்மணி இந்த அரை நூற்றாண்டுகளின் கொடுங் கனவல்ல. வடு. இந்த அரை நூற்றாண்டுகளின் கொடும் வடுவினை அகற்ற, வேரோடும் வேரடியோடும் எப்போது ரண சிகிச்சை செய்யப் போகிறோம்? எப்போது மாற்றிடப் போகிறோம்? நக்சல்பாரிப் புரட்சி வெண்மணிக் கொடுங்கோலனுக்கு தகுந்த தண்டணை தந்தது. அந்தக் கோபால கிருஷ்ண நாயுடுவுக்குத் தகுந்த தீர்ப்பினைத் தந்தது. அழித்தொழித்தது. ஆனால் இன்னும் அடியில் இருக்கும் அந்த சாதிய, வர்க்க அடக்குமுறை, ஒடுக்குமுறை, சுரண்டல் வன்கொடுமைகளை நம்மால் அழித்துதொழிக்க முடியவில்லையே? தக்க தீர்வினைக் கொடுக்க முடியவில்லையே? அது முடியாதவரை, இயலாதவரை, இந்தத் தீ அரை நூற்றாண்டுகள் மட்டுமல்ல. இனியும் நாம் அணைக்காதவரை, அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி. எரிந்து கொண்டேதான் இருக்கும். உள்ளுக்குள் கனன்று கொண்டேதான் இருக்கும். இந்தத்தீயை எப்போது முற்றிலுமாய் முழுவதுமாய் அணைக்கப் போகிறோம்? அழித்தொழிக்கப் போகிறோம்?
காலத்தின் முன் களமாட வேண்டும். வேண்டியாகவேண்டும் நாம். காலம் புதிய புதிய போராட்டச் சக்திகளை ஈன்று கொண்டேதான் இருக்கிறது. அவர்களும் இடையறாது, இடைவிடாது போராடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும் பாரிய வெற்றிகளை ஈன்றெடுக்க இயலவில்லை. மனித குலத்தின் அந்த இரண்டு பெரும் எதிரிகளிடம் போராடிப் போராடித் தோற்றுத்தான் போகிறார்கள் என்றாலும், அவர்கள் போராட்டம் முடிவதில்லை. முடித்துக் கொள்ளப்படுவதில்லை. என்ன இங்குப் பிரச்சனை? ஏதில் இங்குப் பிரச்சனை?
உண்மையில் அந்த செக்கச் சிவந்த பொழுதுகள் மட்டும் போதாது நமக்கு. அந்த ஒற்றை ஒளி மட்டும் போதாது நமக்கு. மாறாக மூன்று ஒளிகள் இப்போது நம் கண்ணுக்குத் தெரிகின்றன. கண் முன்னால் தனித்தனியாக உயர்ந்து நிற்கின்றன. விரிந்து நிற்கின்றன. கருப்பு, நீலம், சிவப்பு என பரந்து விரிந்து உயர்ந்துநிற்கும் தனித்தனியான அந்த மூன்று நிற ஒளிக் கலவைகளை, ஒன்றாக்கிய வெளிச்சத்தில்… ஒன்றுபடுத்திய வெளிச்சத்தில்தான்… அந்த அரை நூற்றாண்டுக் கொடுந்தீயை முற்றிலுமாய், முழுவதுமாய் அழித்தொழிக்கமுடியும். அழித்தொழிப்போம்.
அரைநூற்றாண்டுக்கொடுங்கனவு(கீழ்வெண்மணிக்குறிப்புகள்)
ஆசிரியர் :செ.சண்முகசுந்தரம்
வெளியீடு :அன்னம்
மனைஎண்1,நிர்மலாநகர்
தஞ்சாவூர்-613007
விலை :ரூ.150
நூல் வாங்க தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 7598306030