ஹிப்ஸ்டர்கள் (Hipsters)
ஹிப்ஸ்டர்அல்லதுஹிப்பி: (Hipster or Hippi)
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்
‘ஹிப்ஸ்டர்’ அல்லது ஹிப்பி என்பது ஒரு மக்கள் சமூகத்தின் கிளைக்கலாச்சாரம் (sub-culture). ஒரு நிலப்பரப்பில், ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த, வாழும் மக்களின் பொதுக்கலாச்சாரத்திலிருந்து விலகுவதுதான், கிளைக்கலாச்சாரம் எனப்படுகிறது. எல்லோரும் முகத்தை மழித்தால், தாடியும், மீசையும் வைத்துக்கொள்வது, எல்லோரும் மீசை வைத்தால் மழித்துக்கொள்வது, மற்றவர்கள் அணியும் உடையிலிருந்து மாறுபடும் உடை அணிவது என்பதாக, ஹிப்ஸ்டர் வாழ்வுமுறை அமைகிறது.
2000த்தில் இப்படிப்பட்ட ஹிப்ஸ்டர் கலாச்சாரம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் துவங்கி, அதன்பிறகு உலகெங்கிலும் பரவுகிறது. அந்த காலகட்டத்தில்தான், அவர்களது இசைகூட பொதுமக்கள் இசையிலிருந்து வேறுபட்டதாகவே இருந்தது. பழைய தமிழ்த் திரைப்படங்கள் இப்படிப்பட்ட ஹிப்ஸ்டர் அல்லது ஹிப்பி கலாச்சாரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.
ஹிப்ஸ்டர் அறிவியல்:
பெரும்பாலான ஆண்கள் முகத்தில் முடி வளர்க்காதபோது, தாடி, மீசைவைத்த ஆண்களை இளம்பெண்கள் விரும்புகின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதனால்தான், இன்றைய தமிழ் இளைஞர்கள் தாடி வளர்க்கிறார்கள் என்று நம்பலாம். அன்றைய திருமணங்களில் ஆண்களின் முகங்களில் மீசை இருக்கும். ஆனால் தாடி இருக்காது. இன்று திருமணத்தின்போதும் தாடிவைத்துக்கொள்வது நாகரீகம் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான ஹிப்பியிசம்தான். ஒரு காலகட்டத்தில் வெறுக்கப்பட்ட ஹிப்பியிசத்தின், புதிய வடிவம் (neo-Hipster) என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், அனைவரும் தாடிவைத்தால், மழிக்கப்பட்ட ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கலாம். அதுதான் உளவியல்.
இணையத்தில் (online) ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இருபாலின ஆண்களும் பெண்களுமாக (straight men and women) சிலர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்கள் மூன்று தொகுதியாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு தொகுதியினருக்கு,முற்றிலும் மழிக்கப்பட்ட முகங்களை மட்டுமேகொண்ட ஆண்களின் படங்கள் காட்டப்பட்டன. இரண்டாம் தொகுதியினருக்கு முழுவதும் வளர்ந்த தாடியுள்ள முகங்கள்மட்டுமே காட்டப்பட்டன. மூன்றாம் தொகுதியினருக்கு, முழுவதும் மழிக்கப்பட்ட முகங்கள், மழிக்கப்பட்டதிலிருந்து 5 தினங்கள் கழிந்த முகங்கள், 10 தினங்கள் கழிந்த முகங்கள், நான்கு வாரங்கள் கழிந்த முகங்கள் அனைத்தும் காட்டப்பட்டன.
பிறகு மூன்று தொகுதியினருக்கும், மழிக்கப்பட்ட முகங்களும், தாடியுள்ள முகங்களும் காட்டப்பட்டன. அவற்றில் எந்த முகங்கள் அழகியத்தோற்றம்கொண்டவை என்று தரம்பிரிக்கச் சொல்லப்பட்டனர்.
மூன்று தொகுதியினரும் தாடிவைத்த முகங்களையே, அழகிய முகங்களாகத் தெரிவுசெய்தனர். குறிப்பாகப் பத்துநாள் தாடிவைத்த முகங்கள் (heavy stuble) பலருடைய விருப்பத்தேர்வாக இருந்தது.
ஆனாலும், மழிக்கப்பட்ட முகங்களை மட்டுமே பார்த்தவர்களில் அதிகம்பேர், தாடிவைத்த முகங்களை விரும்பியிருந்தனர். தாடிவைத்த முகங்களை மட்டுமே பார்த்தவர்களில், அந்த விகிதம் குறைவாக இருந்தது. இவை இரண்டிற்கும் இடையில் அமைந்திருந்தது, அனைத்துவிதமான முகங்களையும் பார்த்தவர்களது விருப்பத்தேர்வு. எனவே, தாடி வைத்த முகம் தனித்திருக்கும்போது (exception) மிகவும் விரும்பப்படுகிறது. அதுவே பொதுவான விதி (common rule) என்றும் சொல்லிவிடமுடியாது.
ஹிப்ஸ்டர் சமன்பாடு (Hipster equation):
MIT Technology Review என்னும் இதழில், கணிதப்பேராசிரியர் ஜோனதான் டவ்போல் (Brandeis University mathematician Jonathan Touboul) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பொதுச்சமூகத்திலிருந்து விலகுவதாகக் காட்டிக்கொள்ளும் ஹிப்பிகள் அனைவரும் ஏன் ஒரேமாதிரி இருக்கிறார்கள்? என்னும் கேள்வியைத் தலைப்பாகக் கொண்டிருந்தது, அந்தக்கட்டுரை. இதனை அவர் ‘ஹிப்ஸ்டர் முரண்’ (Hipster paradox) என்று அழைக்கிறார்.
பொதுச்சமூகத்திலிருந்து விலகும் ஹிப்ஸ்டர்கள் தனி நடை, உடை, பாவனை கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் அப்படி வரும்போது முதலில் வந்தவர்கள், அவர்களை மாற்றிக்கொள்கின்றனர். என்றாலும் ஒரு காலகட்டத்தில், ஹிப்ஸ்டர்கள் ஒருங்கிணைந்து, பொதுச்சமூகத்திலிருந்து வேறுபடுகின்றனர். தாடி ஆய்வும் அப்படித்தான். அனைவரும் தாடிவைத்தால், இவர்கள் மழிப்பார்கள். அனைவரும் மழித்தால் இவர்கள் தாடிவைப்பார்கள்.
ஹிப்ஸ்டர் பாலியல்: (Hipster Sexism)
ஹிப்ஸ்டர் பாலியல், ‘பின்-பெண்ணியம்’ (post-feminism) என்பதோடு தொடர்புடையது என்று அமெரிக்காவைச்சேர்ந்த பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர் ஆலிசா குவார்ட் (Alisa Quart) கருத்துத் தெரிவிக்கிறார். அவர்தான், ‘ஹிப்ஸ்டர் பாலியல்’ என்னும் சொல்லாடலையும் உருவாக்குகிறார். பொதுச்சமூகம் புரிந்துகொள்வதுபோல அது ஒன்றும் அறுவறுக்கத்தக்கதோ, ஆபத்தானதோ அல்ல என்றும் வேடிக்கையானதுதான் (satirical and ironic) என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
நோட்லிங்கன் ரீஸ்: (Nordlingen Ries)
உலகிலேயே இதுபோன்ற அழகிய நகரம் இல்லை என்கின்றனர். காரணம், ஜெர்மனியின் பவேரியா மாவட்டத்தில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மைல் நீளமுள்ள ‘விண்பாறை’ (asteroid) விழுந்ததால் ஏற்பட்ட அரைக்கிண்ணவடிவப் பள்ளத்தில் (crater) ‘நோட்லிங்கன் ரீஸ்’ (Nordlingen Ries) நகரம் அமைந்துள்ளது. 26 கி.மீ.விட்டமும், 200 மீ. ஆழமும்கொண்ட அப்பள்ளத்தில், 20,000 மக்கள் வசிக்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான், அந்தப்பள்ளம் விண்பாறை விழுந்ததால் உருவானது என்னும் உண்மை தெரியவந்தது. அதற்கு முன்னர், அது ஒரு எரிமலை வாயில் (volcano crater) என்றே நம்பிவந்தனர்.
நோர்ட்லிங்கன் நகரம், பார்ப்பதற்கு மற்ற ஜெர்மன் நகரங்களைப்போன்றேத் தோற்றம் காட்டுகின்றது. ஆனாலும், ஒரு நுண்ணிய வேறுபாடும் உள்ளது. நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தின் கோபுரம், வீடுகள், கடைகளின் சிவப்புநிற மேற்கூரைகளில் பல மில்லியன் வைரத்துண்டுகள் (Tiny Diamonds) புதைந்துள்ளன (embeded). பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து பவேரியாவில் பள்ளத்தை உருவாக்கிய ‘விண்பாறையே’ வைரத்துண்டுகளுக்கும் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நோர்ட்லிங்கன் நகரத்திலும், அதனைச்சுற்றியுள்ள நிலப்பகுதியிலும், 72,000 டன் விலை உயர்ந்த கற்கள் (gemstones) இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நோர்ட்லிங்கன் ரீஸ் நகரில் ஹிப்ஸ்டர் கல்லறைகள்:
அகழாய்வாளர்கள் இந்த நோட்லிங்கன் ரீஸ் நகரத்தில், ஆடம்பரமான இரண்டு கல்லறைகளையும் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்றில், 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பணக்காரப் படைவீரரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இறக்கும்போது 40 அல்லது 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதருடன், போருக்கான நுண்ணிய ஆயுதங்களும், ஒரு குதிரையும், கத்தரிக்கோல்களும், தந்தத்தாலான ஒரு சீப்பும், மேலும் சில விலை உயர்ந்த பொருட்களும் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப்பார்க்கும்போது, அந்த மனிதர் செல்வ வளத்துடன் வாழ்ந்தவர் என்பதும், தன்னை அலங்கரிப்பதில் விருப்பமுடையவர் என்பதும் புரிகிறது.
தந்தத்தால் ஆன சீப்பு, அந்த மனிதனின் தலைமுடி மற்றும் தாடிமுடியை ஒழுங்குசெய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தந்தச்சீப்பின் வடிவம், எனக்குப் பழைய நினைவுகளை மீட்டிவிட்டன. 1970 வரையிலும்கூட எங்கள் வீடுகளில் அதே வடிவில் அமைந்த சீப்புகளை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். என்ன ஒன்று, ஜெர்மனியின் சீப்பு தந்தத்தால் ஆனது. நாங்கள் பயன்படுத்தியது மரத்தாலான சீப்பு. மாட்டுக்கொம்பில் செய்யப்பட்ட அழகிய சீப்பை, நரிக்குறவர் இனத்துப் பெண்கள் வீதிவீதியாக விற்பனை செய்வார்கள். அவற்றையும் பயன்படுத்தியதுண்டு. பிற்காலத்தில், பிளாஸ்டிக்கிலும் சீப்பு வந்தது. குறிப்பாகப் பெண்கள், தலையில் பேன்பார்க்கும்போது இந்த வடிவிலமைந்த சீப்பைப் பயன்படுத்துவார்கள். பேன்சீப்பு என்றும் அழைத்ததுண்டு. இத்தனைத் தொலைவில் இப்படி ஒரு ஒற்றுமையா என்று எனக்கு மிகவும் வியப்பாகவே உள்ளது.
அந்தக் கல்லறைக்கு அருகில் மற்றொரு கல்லறையில், 30 முதல் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலுடன் நகைகள், உணவுப்பொருட்கள், ஆப்பிரிக்காவின் வடக்கிலிருந்துத் தருவிக்கப்பட்ட தரம் உயர்ந்த சிவப்புப் பீங்கான் கிண்ணம் (red ceramic bowl) ஆகியவையும் புதைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு உடல்களுமே 6-ஆம் நூற்றாணடைச் சேர்ந்தவை. தந்தத்தாலான சீப்பும், சிவப்புப் பீங்கான் கிண்ணமும் அந்த காலகட்டத்தின் வழக்கத்திற்கு மாறானவையாகப் பார்க்கப்படுகின்றன. அவை, அன்றைய காலகட்டத்தில் உண்மையாகவே ஆடம்பரப் பொருட்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்
மான்போன்ற விலங்குகள்: (Gazelle-like animals)
தந்தச்சீப்பை ஆய்வுசெய்தபோது, அதன் இருபுறங்களிலும், வேட்டை விலங்குகளிடமிருந்துத் தப்பித்து ஓடும் மான்போன்ற விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மனிதரின் கல்லறையில், குதிரையின் மிச்சங்களும், கோடரி, கேடையம் உள்ளிட்ட பல பொருட்களும் புதைக்கப்பட்டிருப்பதால், அந்த மனிதர் பெரிய செல்வந்தராக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பெண்ணின் கல்லறையில், சிவப்புப் பீங்கான் கிண்ணத்துடன், பாதுகாக்கப்பட்ட முட்டைகள், உணவுப்பொருட்கள், தறியில் நூற்பாவை அடிக்கப் பயன்படும் குச்சிகள் (weaving swords), ஆகியவை கிடைத்துள்ளன. கிண்ணத்தின் அடிப்புறத்தில் ஒரு சிலுவைக்குறியீடும் உள்ளது. கிண்ணத்தின் விளிம்பில், அன்றைய ஜெர்மன் மொழியின் எழுத்துகள் காணப்படுகின்றன. அந்தப்பெண்ணின் பெயராகக்கூட அது இருக்கலாம்.
நோட்லிங்கன் ரீஸ் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்குச் சொந்தக்காரர்களான ஆணும், பெண்ணும் அன்றைய காலகட்டத்தில், பொதுச்சமூகத்திலிருந்து விலகிய கலாச்சாரத்துடன் வாழ்ந்திருக்கலாம் என்றும், அதன் அடிப்படையிலேயே அவர்களும் ஹிப்ஸ்டர்கள் அல்லது ஹிப்பிகள் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நிப்ஸ்டெர்களும், புதிய நாசிசமும்: (Nipsters and neo- Nazism)
2014-இல் ஜெர்மனியில், வலதுசாரி புதிய.நாசி இயக்கம் இளைஞர்களிடையே உருவானது. அவர்களை, ‘நிப்ஸ்டர்’ (Nipster) என்று அழைத்தனர். புதிய பாசிஸ்டுகளைக்கொண்ட வலதுசாரித் தீவிரவாத இயக்கம் பிரிட்டனிலும் உருவாகியிருக்கிறது.