ஜிப்ஸியின் துயர நடனம்
-யமுனா ராஜேந்திரன்
பிரித்தானியச் சுரங்க ரயில்களில் பயணம் செய்கிறபோது குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி அடர்த்தியான வர்ணங்களில் உடை அணிந்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்கும் பெண்களை முகச்சுளிப்புடன் எதிர் கொண்டிருந்ததை எவரும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். அழுக்கான குழந்தைகளானாலும் அழகான குழந்தைகள் பிச்சையெடுக்கிறபோது அக்குழந்தையின் தாயின் மீது கோபம் வரவும் செய்யும். மஞ்சள் நிறமான முகத்துடன் நிறநிற உடைகள் அணிந்தபடி தெளிவான சிந்தனையுடன் பிச்சையெடுக்கும் அந்த ஆரோக்கியமான தாயைக் காணும் போது இன்னும் கோபம் வரும். அந்தத் தாயும் குழந்தையும் ஜிப்ஸி வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதோ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாடற்றுத் திரிகிற ஒரு இனத்தைச் சேர்ந்தர்கள் அவர்கள் என்பதோ யூதர்களுக்கு அடுத்தபடியாக பல்லாயிரக் கணக்கில் இட்லரால் இனக்கொலை செய்யப்பட்டவர்கள் அவர்கள் என்பதோ அதிகமும் தெரிய வராத வரலாறு. அவர்களது துயரமயமான வரலாற்றை நாம் தெரிந்து கொள்கிறபோது நமது கோபத்தின் திசை வேறுபுறங்களில் திரும்பவதை நம்மால் உணரமுடியும்.
பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் பஞ்சாப் பிரதேசத்தில் ஆரியர்களுக்கும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியினால் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களே அவர்கள். அவர்களது தாய்மொழி பஞ்சாபி மொழியும் ஹிந்தியும் சமஸ்கிருதமும் கலந்த, ஐரோப்பிய மொழிகளும் பெர்சிய இலக்கணமும் செறிந்த மொழி என்பதனை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்தியாவிலிருந்து மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவிய அவர்கள் அழுக்கானவர்கள் எனும் காரணத்தினால் ரஸ்ய அதிபரான ஸ்டாலினாலும், கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளின் ஆட்சியாளர்களாலும் சித்திரவதைக்கு ஆளானார்கள். பாசிச காலகட்டத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாசிகளால் கொல்லப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் யுகோஸ்லாவிய நெருக்கடியின்போது கொசவா யுத்தத்தின் போது அல்பேனியர்களாலும் கொசவர்களாலும் சம அளவில் வெறுக்கப்பட்ட ஜிப்ஸி மக்கள் அகதிகளாக உலகெங்கும் உயிர் தப்பிச் சென்றார்கள்.
அவர்களுக்கு மேற்கத்திய அரசுகள் அடைக்கலம் தர மறுத்து விரட்டியடித்தன. ‘மனிதக் கழிவுகள் ஜிப்ஸிகள்’ என ஐரோப்பியப் பத்திரிக்கைகள் எழுதின. அரசியல் அடைக்கல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலைமையிலே அவர்கள் மேற்கத்திய நாடுகளின் தெருக்களில் சுரங்க ரயில்களில் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துயர்நிலையில் ஜிப்சிப் பெண்களின் நிலைமை என்பது இரட்டைத் துயர் வாய்ந்ததாகும். ஜிப்ஸி மரபுகளின்படி ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் குடும்ப வருமானத்திற்கு கட்டாயமாகப் பங்களிப்பு வழங்க வேண்டும். பழைய வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு மாற்றாகக் கூட ஜிப்ஸிப் பெண்களை ஜிப்ஸி ஆண்கள் விற்பனை செய்து விடுவார்கள்.
அரசியல் அங்கீகாரமும் எல்லைகளும் அற்று நாடோடிகளாகத் திரியும் ஜிப்ஸிகள் பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்கள். ஐரோப்பிய சமூகத்தவர்களால் பன்னூறு ஆண்டுகளாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள். இந்நிலையில் தம் வருமானத்திற்கான ஒரு தொழிலாகப் பிச்சையெடுக்க நிரப்பந்திக்கப்பட்டவர்களாகவே ஜிப்ஸிப் பெண்கள் ஆகிறார்கள். ஜிப்ஸி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவென ‘ஐரோப்பிய ரோமா உரிமைகள் கழகம்’ ஜெர்மனியின் புகழ் பெற்ற எழுத்தாளர் குந்தர் கிராஸ் முன் முயற்சியில் செயல்படுகிறது. ரோமா என்பது ஜிப்ஸி மக்களின் இன்னொரு பெயர். ஜிப்ஸி இனம் நாடற்றுத் திரியும் மக்களினம் என்பதை நாம் புரிந்து கொள்வோமெனில் அவர்தம் துயரையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஜிப்ஸித் தாயையும் அவளுடன் பிச்சை கேட்கும் குழந்தைகளையும் கூடப் பரிவுடன் புரிந்து கொள்ள நம்மால் முடியும்.
எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குள் பரவிய கறுப்பு மக்கள் எனும் நம்பிக்கையில் ஐரோப்பியர்கள் ரோமா இன மக்களை ‘சிறிய எகிப்தியர்கள்’ எனும் அர்த்தம் தரும் வகையில் ‘ஜிப்ஸிகள்’ என அழைக்கத் துவங்கினர். தமது வரலாறு குறித்து ஏதும் அறியாத ரோமா மக்கள் ஆரம்பத்தில் அதனையே தமது அடையாளமாகவும் வரித்துக் கொண்டார்கள். ஜிப்ஸிகள் எனும் அடிப்படையில் பன்னூறு ஆண்டுகளாக இனக்கொலைக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளான இம்மக்களுக்கு இப்பெயர் ஒரு அவமானத்தையே கொண்டு தந்ததால் இவ்ர்களை அதிகாரபூர்வமாக ‘ரோமா இன மக்கள்’ என அழைப்பதென ஐரோப்பியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது. இவர்களது இடப்பெயர்வு மூன்று கட்டங்களாக நடந்திருப்பதாக ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவுக்குள் பரவிய இவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவுக்குள்ளும் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டுகளில் பாசிசத்தையும் சோசலிச நாடுகளின் வீழ்ச்சியையும் அடுத்து அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்தனர்.
மூன்று மொழிக் குடும்பங்கள் கொண்டவர்களாக இம்மக்கள் திகழ்கிறார்கள். மத்தியக் கிழக்கிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவியவர்கள் ‘தொமாரி’ மொழியையும், மத்திய ஐரோப்பிய நாடுகளில் பரவியவர்கள் ‘லொமாரின்’ மொழியையும், மேற்கு ஐரோப்பாவுக்குள் பரவியவர்கள் ‘ரோமா’ மொழிக் குடும்பத்தையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். உலகெங்கும் பரவி வாழும் இவர்கள் நான்கு பெரிய இனக்குழுக்களாகவும் அதிலிருந்து கிளைத்த 10 சிறு இனக்குழுக்களாகவும் சிதறியிருக்கிறார்கள். இவர்கள் குடியேற நேர்ந்த நாடுகளின் பிரதானமான மதத்தை பற்றியிருப்பவர்களாகவும் இவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் ஜிப்ஸி மக்கள் குறித்து பல அவநம்பிக்கைக் கதைகள் உண்டு. சாத்தானுக்கும் ரோமா இனப்பெண் ஒருவருக்கும் ஜனித்த இனம் ரோமா இனம் எனவும் இயேசு கிறிஸ்துவின் சிலுவையேற்றத்திற்குத் தேவையான ஆணிகளை ஜிப்ஸிகள்தான் உருவாக்கிக் கொடுத்தார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இயேசு கிறிஸ்து சிலுவையேற்றத்தின்போது சிலுவையில் அறையப்பட்ட ஆணிகளை ஜிப்ஸிகள் திருடிச்சென்றதால், இயேசு கிறிஸ்து வலியிலிருந்து தப்பினார் என்று பின்னுமொரு கதையும் உண்டு. தகுந்தாற்போல ஜிப்ஸிகள் பாரம்பர்யமாக தச்சுத் தொழலாளர்களாகவும் குறிசொல்பவர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்தது இந்த நம்பிக்கைகளுக்குத் தோதாக அமைந்துவிட்டது.
ஜிப்ஸிகளின் மீதான அவநம்பிக்கைக் கதைகளின் அடிப்படையில் 1721 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்ட நான்காவது கார்ல் மன்னன் சட்டப்படி ஜிப்ஸிகளைக் கொன்றொழிப்பது கிறிஸ்தவர்களின் கடமை என ஆணை பிறப்பித்தான். பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் ரோமா இன மக்கள் ஐரோப்பாவில் அடிமை முறைக்கு ஆட்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதனையடுத்தே இவர்கள் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1920 ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்புக்கு ஜிப்ஸிகளால் அச்சுறுத்தல் எனும் பெயரில் ரோமா இன மக்கள் அனைவரும் ஐரோப்பியக் காவல்நிலையங்களில் பதிந்து கொள்ளக் கோரப்பட்டனர்.
நாசிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஜெர்மானிய இரத்தத்தையும் மேன்மையையும் பாதுகாப்பதன் பொருட்டு ‘ஜிப்ஸிக் கொள்ளை நோய்க்கு எதிராகப் போராட வேண்டுமென’ நாசிகள் கோரினர். ஜிப்ஸிகள் ‘கேவலமான பிறவிகள்’ என அறிவிக்கப்பட்டனர். 1941 ஆம் ஆண்டு, யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஜிப்ஸிகள், மனநோயாளர்கள் போன்றவர்களைக் கொன்றொழிக்க ஆணையிடப்பட்டது. ஜிப்ஸிகள் அனைவரும் ‘அஸ்க்விட்ச்’ மரணமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமென இட்லர் ஆணை பிறப்பித்தான். அமெரிக்க யூத இனக்கொலை அருங்காட்சியகத்தின் வரலாற்றாசிரியர் சிபில் மில்ட்டன் சொல்கிறபடி ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோமா மற்றும் சிந்தி இன ஜிப்ஸி மக்கள் அஸ்க்விட்ச் முகாமில் மட்டும் கொல்லப்பட்டனர்.
தாராளவாதம் சொல்கிற சட்டத்தின் ஆட்சி பற்றிய பிரம்மைகள் நமக்கு நடந்தவைகளை நினைக்க உடைந்து போகும். ‘நேஷனல் சோஷலிஸ்ட் சட்டத்தை ஒரு சட்டத்துறைப் புரட்சி’ என்றான் இட்லர். அரசின் எதிரிகளையும் அன்னியர்களையும் தண்டிக்க அவன் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தான். மக்கள் நீதி மன்றங்களையும் அமைத்தான். நீதிபதிகளும் இருந்தனர். எதிரிக்கு எதிரான நீதி சட்டப்படி உறுதிப்படுத்தப்பட்டது. யார் எதிரிகள்? கம்யூனிஸ்ட்டுகள், யூதர்கள், ஜிப்ஸிகள், சின்னத் திருட்டுச் செய்தவர்கள், அறிவிக்காது ஆடுமாடு வெட்டியவர்கள், அங்கஹீனர்கள், மனநோயாளிகள் என இவர்கள் தான் எதிரிகள்.
இன்றும் உலகெங்கிலும் அரசின் எதிரிகளுக்கு எதிராகச் சிறப்பு நீதிமன்றங்கள் இயங்குகிறது. அதை ‘மக்கள் நீதிமன்றம்’ என்றும் கூட ஒரு எதேச்சதிகார அரசு சொல்ல முடியும். இந்தியாவில் கொணரப்பட்ட தடா, பொடா போன்றவைகள் இத்தகைய சட்டங்கள் தான். நீதித்துறை ஒரு கருத்தியலினால் வழிநடத்தப்பட முடியுமானால் மனித அறத்துக்குப் பதிலாக அரசியல்நீதி ஒரு நாட்டில் ஆட்சி செலுத்துமானால் தாராளவாத சட்டம் அது இந்தியச் சட்டம் உள்பட பாசிச வடிவமெடுக்கக் காலம் ஆகாது என்பதைத் தான் நேஷனல் சோசலிஸ்ட் சட்டமும் அது நடைமுறைப்படுத்திய கொலைத் தண்டனைகளும் உறுதிப்படுத்துகின்றன.
1933 முதல் 1945 முடிய ஜெர்மனியில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 16,500 பேர்களாவர். இவர்களில் 11,881 பேர் கில்லட்டின்களில் தலை வெட்டுப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். இத்தகைய ஆபத்து இன்று வரை இருக்கின்றது. இவ்வகையில் மனித அறம் குறித்து சதா ஞாபகம் ஊட்டுகிறவர்களாக உலகெங்கிலும் இருக்கிற மனித உரிமையாளர்களும் கலைஞர்களும்தான் இருக்கிறார்கள். இதே காரணத்துக்காகத்தான் பாசிசம் பற்றிக் குரலெழுப்பிய ஜெர்மானியக் கவிஞன் நாடகாசிரியன் பெர்டோல்ட் பிரெக்ட் ஸ்டாலினியம் பற்றியும் அபாயக் குரல் எழுப்பினான்.
ஸ்டாலினியமும் கிழக்கு ஐரோப்பாவில் நிலைபெற்ற பாசறைக் கம்யூனிஸமும் ஜிப்ஸி மக்களை வேட்டையாடியதை நாம் மறந்து விடமுடியாது. பாசிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட யூதர்களோடு ஒப்பிடுகிறபோது ஜிப்ஸி மக்களின் துயர் என்பது வரலாற்றில் பெறப்பட வேண்டிய இடத்தினைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். ஜெர்மனியில் அமைக்கப்பட்ட பிரதான யூத நினைவகங்களில் ஜிப்ஸி மக்களின் துயருக்கு உரிய இடம் தரப்படவில்லை. பில் கிளின்டன் இரண்டாம் உலகப்போர் இனக்கொலை குறித்த அருங்காட்சியகக் குழுவில் இருந்த ஜிப்ஸிப் பிரதிநிதியைத் தனது ஆட்சிக் காலத்தில் வெளியேற்றியிருக்கிறார். யூதர்கள் கூட அதிகாரபூர்வமாக ஜிப்ஸி மக்களைத் தமக்கு இணையாகக் கருதுவதில்லை என்பது மட்டுமல்ல தம்மை விடவும் கீழான சுத்தமற்ற இனமாகவே ஜிப்ஸிகளை யூதர்கள் கருதுகிறார்கள் என்பது ஒரு வரலாற்று முரணாகும்.
யூத இனக்கொலை பற்றி இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஸின்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் வெளியானபோது அப்படத்தில் தெருவில் கிடக்கும் நாயின் அளவே ஜிப்ஸி மக்களின் இனக்கொலை ‘வெறும் வசனத்தில்’ ஒரு காட்சியில் வந்துபோகிறது என விமர்சித்தார் ரோமா இன அறிவுஜீவியான இயான் ஹான்குக். அதற்காக ஸ்பீல்பர்க்கின் ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் இயான். அவுஸ்திரேலிய நடிகர் மெல் கிப்சனிக் ‘பேஸன்ஸ் ஆப் ஜீஸஸ் கிறிஸ்ட்’ படத்தில் யூதர்களைக் கனிவானவர்களாகச் சித்தரிக்காமல் இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்களாகச் சித்தரித்தமைக்கு ஆட்சேபக் குரல் எழுப்புகிற யூத அறிவுஜீவிகள் தம்முடன் கொல்லப்பட்ட ஐந்து இலட்சம் ஜிப்ஸி மக்களைக் கீழான இனம் என ஒதுக்கி வைத்து அங்கீகரிக்க மறுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பது மனதளவில் கொடூரத்தன்மை வாய்ந்ததொரு நிலைபாடாகும்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ரோமா இன மக்களின் வாழ்வு பிறிதொரு வகை கொடுமை கொண்டதாகும். ரோமா இன மொழி பேசக் கூடாது. பொது இடங்களில் ரோமா இனத்தவர் நடமாடக் கூடாது. அவர்களது இசை அரங்குகளும் உணவு விடுதிகளும் தடை செய்யப்பட்டன. ஜிப்ஸிகள் குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவர்களோடு நட்பு பாராட்டக் கூட விரும்பவில்லை. ஜிப்ஸிகள் கலாச்சாரமோ சுத்தமோ அற்றவர்கள் என்ற காரணங்களுக்காக ஸ்டாலின் கால ரஸ்யாவிலும் ஜிப்ஸிகள் நிராகரிக்கப்பட்டார்கள். அவர்களது மொழிசார்நத கலாச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. ரஸ்யாவும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளும் திட்டமிட்டே இம்மக்களை ஒடுக்கிவந்தன. ஸெர்பியாவில் நிலைமை இன்னும் கொடுமையாகவிருந்தது. இஸ்லாமியக் குழுக்களாலும் கிறிஸ்த்தவக் குழுக்களாலும் சம அளவில் வெறுக்கப்பட்ட மக்களாக ஜிப்ஸிகள் வாழ்ந்திருக்கிறார்கள். இரு மதத் தலைவர்களும் ஜிப்ஸி மக்களின் மீதான இனவெறுப்பைத் திட்டமிட்டே தூண்டியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பு பிரதான சமூகத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு என அனைத்துமே நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கோடியே 20 இலட்சம் ஜிப்ஸி இனத்தவர் உலகெங்கும் சிதறியிருப்பதாக நம்பப்படுகிறது. அதனை உறுதியாகச் சொல்ல முடியாத அளவில் அவர்கள் மீது சகலவிதங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. 1917 ஆம் ஆண்டு ரோமா இன மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் 1998 ஆம் ஆண்டு நியூஜெர்சியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்தவர்கள் கிறித்தவத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன்பின் ரோமா இனச் சடங்குகள் நம்பிக்கைகள் என அனைத்தும் அநேகமாக முடிவுக்கு வந்துவிடுகின்றன.
1997 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜல்சில் முதல் ரோமா கிறித்தவ தேவாலயம் ஆரம்பிக்கபட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ரோமா கிறித்தவ தேவாலயங்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கிறது. யுகோஸ்லாவியாவில் ஸெர்பியர்கள் அல்பேனியர்கள் கொசவர்கள் போன்றவர்களுக்கிடையிலான இனப்பிரச்சினை யுத்தமும் அதனைத் தொடர்ந்து நேட்டோப் படைகள் அங்கு நுழைந்ததும் அங்கு அவர்கள் இனக்கொலைக்கு முற்றுப் புள்ளி வைத்ததும் வரலாறாகச் சொல்லப்படுகிறது. அங்கு பிறிதொருவகை இனக்கொலை தொடங்கிவைக்கப்பட்டது என்பதுதான் சரியானதாகும். இப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒன்றரை இலட்சம் ரோமா ஜிப்ஸி இனத்தவர் கொசாவாவிலிருந்து நேட்டோ ஆதரவு கொசவா விடுதலைப் படையினரால் விரட்டப்பட்டுள்ளார்கள். ஜிப்ஸிகளது கிராமங்கள் முற்றாக தீக்கிரையாக்கபட்டுள்ளது.
அமெரிக்காவினதும் நேட்டோ நாடுகளினதும் படைகள் இந்த மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஸெர்பியர்களால் தொடர்ந்து இனக்கொலைக்கு ஆளாக்கப்பட்ட ரோமா இன மக்கள், கொசவா பிரதேசம் கொசவர்களின் கைக்கு வந்தவுடன் ரோமாக்களை வேட்டையாடத் துவங்கினார்கள். ஒரு சிறுபான்மையின இனம் என்னும் அளவில் பிரதான மதங்களைப் பின்னணியாகக் கொண்ட ஸெர்பியக் கிறித்தவர்களுக்கும் கொசவா இஸ்லாமியர்களுக்கும் இடையில் அகப்பட்ட ஒரு தேசமாகவே நசுங்கிப் போயினர் ரோமா இன மக்கள். இனம் என்ற அங்கீகாரமும் இல்லை. பிரதிநிதித்துவப் படுத்த அரசுகளோ அமைப்புகளோ இல்லை. எடுப்பார் கைப்பிள்ளைகளாக இரு பிரதான இனத்தவர்களாலும் நிரப்பந்திக்கப்பட்டவர்களாகவே கடந்தகாலத்தில் ரோமா இன மக்கள் யுகோஸ்லாவியாவில் வாழ முடிந்தது. கொசவாவிலிருந்து இனக்கொலைக்குத் தப்பி வெளியேறிய மக்கள்தான் மேற்கு ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். மேற்கு ஐரோப்பிய அரசுகள் அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் மறுத்தபோதுதான் அவர்கள் தெருக்களிலும் சுரங்க இரயில்களிலும் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும்படி விடப்பட்ட தாய்மார்களாகவும் குழந்தைகளாகவும் ஆனார்கள்.
தொடர்பாடலில் பல்வகைகள் உண்டு. இதுவன்றி வரலாறென்பது இல்லை. இலக்கியம் அறிவியல் இசை நடனம் கலைகள் என்பதும் இல்லை. ரோமா இன ஆய்வாளரான இயான் ஹான்குக் மற்றும் கொச்சனாவஸ்க்கி போன்ற மொழியியல் அறிஞர்கள் ரோமா இன மக்களின் தோற்றம் இந்தியாவிலிருந்து குறிப்பாக பஞ்சாபிலிருந்து தொடங்குகிறது என்பதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மொழி, இசைவடிவங்கள், நடன வடிவங்கள் போன்றவற்றைக் குறித்த ஆய்வுகளிலிருந்தே அவர்கள் இந்த நிலைபாட்டை அடைந்திருக்கிறார்கள். பல்வேறுபட்ட மக்கள் குழக்களின் இணைவாகவே ஆரம்பகாலம் தொட்டே ரோமா மக்கள் இருந்திருக்கிறார்கள். இந்த மக்களுக்கு வெளியாட்களாக இருந்தவர்களாலேயே இவர்களது இணைவும் அடையாளமும் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக துவக்கத்தில் இவர்களது அடையாளத்தை, வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியர்கள் உருவாக்கினார்கள். இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பிய இனவாதிகள் இவர்களது அடையாளத்தை உருவாக்கினார்கள்.
ஐரோப்பியர்கள் மத்தியில் ஜிப்ஸிகள் எனும் பெயர் எகிப்திய வழித்தோன்றல்கள் எனும் அடிப்படையிலிருந்தே பெறப்பட்டமை பரவலான நம்பிக்கையாக இருக்க 15 ஆம் நூறறாண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஐந்தாவது ஜேம்ஸ் மன்னர் ரோமா இனத் தலைவரிடம் அவர்களது சிறியபூமியை பெற்றுத் தருவதாக ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் என வரலாறு தெரிவிக்கிறது. கிரீஸ்-அல்பேனியக் கடற்பகுதியிலுள்ள ‘எபிரஸ்’ பிரதேசமே ஜிப்ஸிகளது பூர்வீகப் பிரதேசம் எனவும் அன்று கருதப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில்தான் ரோமா மொழி இந்தியாவிலிருந்து வந்தது என அறியப்பட்டது. அடிப்படையான வார்த்தைகள், குறிப்பாக எண்களுக்கான வார்த்தைகள், இரத்த உறவுகள் மற்றும் குழு உறவுகளுக்கான சொற்கள், உடல் அவயங்களுக்கான சொற்கள், நடத்தைகளுக்கான சொற்கள் போன்றன இந்திய மொழிகளின் தன்மையைப் பெற்றிருந்தன. மொழியின் ஆதாரம் இந்தியாவாக இருக்குமானால் அதைப் பேசும் மக்களும் இந்திய ஆதாரங்களையே கொண்டிருக்க வேண்டும் எனும் நிலைபாட்டுக்கு மொழியியலாளர்கள் வந்தனர்.
இதையுணர்ந்தவுடனே அடுத்த கேள்வி எழுந்தது. ரோமாக்கள் இந்தியர்கள் எனில் அவர்கள் எப்போது, என்ன காரணங்களுக்காக இந்தியாவினின்று இடம் பெயர்ந்தார்கள்? எனில் தற்போதும் இந்தியாவில் ரோமா இன மக்கள் இருக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்காக பின்னோக்கிய வரலாற்றுப் பயணம் அவசியமாகியது. பதினோறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முஸ்லீம் படைத் தளபதியான மஹ்மூத் கசானியன் படைத் தாக்குதலுக்கு ஆளாகியபோது அவரது படைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்துக்கு வட இந்தியாவை ஆண்ட ஆரியர்கள் வரவேண்டியிருந்தது. இந்தியாவுக்குள் நகர்ந்த கசானி கிழக்கு நோக்கி நகரத் துவங்கினார். கசானிக்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, இஸ்லாமியப் படையெடுப்பை எதிர்கொள்ள ஆரியரல்லாத சமூகப் பகுதிகளைத் திரட்டி ஆரியர்கள் படையமைத்துப் போராடி வந்தனர்.
பல நூற்றாண்டுகள் முன்பாகவே இந்தியாவினுள் நுழைந்த ஆரியர்கள் வடக்கிலிருந்த இந்தியப் பூர்வகுடிகளை தெற்கு நோக்கித் துரத்தி வந்தனர். அவர்களது சமூகத்தின் கீழான பகுதியாக அவமானம் மிக்கவர்களாக இந்தியப் பூர்வகுடிகளை அவர்கள் ஆக்கினார்கள். பற்பல சாதிகளாக அவர்களை வரையறுத்தார்கள். ஆரியர்கள் தமது வாழ்வை பிற ஆரியரல்லாதவர்களின் வாழ்வை விடவும் எப்போதும் உயர்வானதாகக் கருதிவந்ததால் போர்க்களத்தில் அவர்கள் தாம் கொல்லப்பட விரும்பவில்லை. கஸானியின் படைகளை எதிர்கொள்வதற்கென ஆரியரல்லாத மக்கள் பகுதிகளில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆரியர்கள் படைவீரர்களைத் திரட்டினார்கள். சத்திரியர்களோடு இப்படையினரையும் இணைத்து இவர்களுக்கு படையணிகளையும் கவசங்களையும் அளித்தனர். இவர்கள் பல்மொழி பேசுகிற பல இனக் குழுக்களிலிருந்தும் திரட்டப்பட்டவர்கள். இவர்களது மொழியும் உச்சரிப்புகளும் வித்தியாசமானவையாகும். லோகர்கள், குஜ்ஜர்கள், தன்டாக்கள் என்பவர்களாக இவர்கள் இருந்தனர். இவர்களில் பலர் ரஜபுத்திரர்கள், பிறர் இந்தியாவிற்கு வேறிடங்களிலிருந்து பிழைக்க வந்தவர்கள். இன்னும் சிலர் ஆப்ரிக்காவிலிருந்து வந்த சித்திக்கள். சித்திக்கள் இஸ்லாமியர்களுக்காகவும் இந்துக்களுக்காகவும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் கூலிப்படைகளாகப் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார் ரோமா இன வரலாற்றாசிரியர் இயான் ஹான்குக்.
இயான் குக் இங்கிலாந்தின் ‘ஹெட்போர்ட்ஸயர்’ பல்கலைக் கழகத்திலும் அமெரிக்காவில் ‘ஆஸ்டின்’ பல்கலைக் கழகத்திலும் ரோமா இன மக்கள் குறித்து ஆய்வு செய்துவருபவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையில் ரோமா இனமக்களின் பிரதிநிதியாகவும் இவர் செயல்படுகிறார். இயான் ஹான்குக் மேலும் சொல்கிறார் : பல்வேறு இனமக்களைக் கொண்ட அந்தப் படை இஸ்லாமியப் படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டு பெர்ஸியா நோக்கி மேற்குப் புறமாக நகர்ந்தது. இந்த ஆய்வு நிலைபாடு விரிந்த அளவில் கருதுகோளாக இருந்தபோதிலும் கிடைக்கப்பெறும் மொழியியல் வரலாற்று ஆதாரங்களை வைத்துப் பார்க்கிறபோது இந்நிலைபாடே இன்றைய அளவில் கூடிய ஆதாரங்கள் கொண்டதாக இருக்கிறது. இஸ்லாம் கிழக்கு நோக்கி இந்தியாவுக்குள் நுழைந்து இறங்கியது என்பது மட்டுமல்ல அது மேற்கிலிருந்தே ஐரோப்பாவுக்குள்ளும் பரவியது என்பதற்கும் நிரூபிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது.
இந்த வரலாற்று நெருக்கடி ரோமா இன மக்களை இன்னும் முன்னேறி 1300 ஆம் ஆண்டளவில் தென்கிழக்கு ஐரோப்பா வரை பரவிச் செல்லச் செய்தது. தொடக்கத்திலிருந்தே ரோமா இன மக்கள் பல இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களாகவும் பல்வேறுபட்ட காரணங்களுக்காக ஒன்றிணைந்தவர்களாகவுமே இருந்தனர். பல்லின பன்மொழி மக்கள் தொகை தமது நிலத்திலிருந்து தொலைதூரம் விலக விலக தமக்கே உரித்தான இனத்தன்மையை எய்தத் தொடங்கியது. பெர்ஸிய இலக்கணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் வந்து சேர்ந்த நாடுகளின் கலாச்சாரங்களின் பாதிப்பையும் மொழியின் பாதிப்பையும் அவர்கள் தமக்குள் எடுத்துக் கொண்டார்கள். ரோமா இனம் என்பது தனித்துவம் வாய்ந்த பல இனக்குழுக்களின் ஒரு கூட்டு இன அடையாளமாகவே தற்போது பரிமாணம் பெற்று உலகெங்கிலும் சிதறிப் போயிருக்கிறது.
இசை நடனம் போன்றவற்றினாலும் அவர்களது உணர்ச்சிவயமான காதல் வாழ்வினாலும் துயர் தோய்ந்த அவர்தம் நாடோடி வாழ்வின் அனுபவங்களாலும் ஐரோப்பாவின் மிகச் சிறந்த படைப்பாளிகளையெல்லாம் ரோமா ஜிப்ஸி இன மக்கள் பாதித்திருக்கிறார்கள். அவர்களது கலாச்சாரத்தில் தீராத காதல் கொண்டு வாழ்ந்து மரணித்தவனாக ஸ்பானிய மொழிக் கவியான கார்ஸியா லோர்க்காவின் பெயர் இருக்கிறது. லோர்க்காவின் கவிதைகளின் மீதும் நாடகங்களின் மீதும் மாபெரும் பாதிப்புச் செலுத்தியவைகளாக ரோமா ஜிப்ஸி இன மக்களது நடனமும் இசையும் இருக்கிறது. அவரது ‘இரத்தத் திருமணம் – பிளட் வெட்டிங்’ ரோமா இனக் காதலும் பிரிவும் மரபுமீறலும் குறித்ததாக இருக்கிறது. அவர் உருவாக்கிய ‘ஜிப்ஸி நடனக் கதைகள் – ஜிப்ஸி பாலெட்ஸ்’ எனும் கவிதைகளின் தொகுதி அவருக்கு உலக இலக்கியத்தில் அமர இடத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஸ்பெயினில் லோர்க்காவின் பிறப்பிடமான அந்துலூசியப் பிரதேசத்தில் வாழ்ந்த ஜிப்ஸிக்களின் வாழ்வை அடியொற்றி லோர்க்காவின் படைப்புகள் அமைந்தது போன்றே உலகக் கலாச்சாரத்திற்கு ஜிப்ஸி மக்களின் கொடையாக அமைந்த ‘பிளெமிங்கோ’ நடனத்தின் மீதும் தீராத காதல் கொண்டவனாக வாழ்ந்தான் கார்ஸியா லோர்க்கா.
‘கார்மென்’ எனும் ஜிப்ஸி நடனப் பெண்ணின் பாத்திரப் படைப்பு இதுவரையிலும் உலக சினிமாவில் எழுபது திரைப்படங்கள் வரை சித்தரிக்கப்பட்டிருப்பதாக சினிமா வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஸ்பெயினின் புகழ் பெற்ற திரைப்படக் கலைஞனான இயக்குனர் கார்லோஸ் ஸவ்ராவும் லோர்க்காவின் அளவே ஜிப்ஸிக் கலாச்சாரத்தினால் பாதிப்புற்றவராவார். பிளெமிங்கோ நடனத்தின் அடிப்படையிலேயே அவர் மூன்று திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். கார்ஸியா லோர்க்காவின் ‘இரத்தத் திருமணம் – பிளெட் வெடிடிங்’ இவருடைய இயக்கத்தில் அதியற்புதமான திரைக் காவியமாக வடிவம் பெற்றிருக்கிறது.
ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நாளன்று தனது காதலனுடன் ஓடிப்போகிற மணபெண், அதனைத் தொடர்ந்து குடும்பங்களினுள் நிகழும் வன்முறை போன்றவற்றை ஓங்கி வளரும் கூடார நெருப்பின் சிவப்பு வண்ணப் பின்னணியில் விரகத் தகிப்புடன் திரைப்படமாக்கியிருக்கிறார் கார்லோஸ் ஸவ்ரா. ஜிப்ஸிப் பெண்ணான கார்மென் கதையும் கூட கார்லோஸ் ஸவ்ராவினால் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்பானிய சர்வாதிகாரி பிராங்கோவின் முன்பாக நடன அசைவின்போது தனது முலைகளிலொன்றைக் காண்பித்து அதிர்ச்சியடைய வைத்து அவர்களைப் பரவசமூட்டித் தப்பிச்செல்லும் கார்மென் குழுவினர் பிற்பாடு கொல்லப்படுவதனையும் கார்மென் ஸ்பானியப் படையினரால் கொல்லப்படுவதையும் துயரம் ததும்பச் சித்திரித்த திரைப்படம் கார்லோஸ் ஸவுராவின் கார்மென்.
போர்த்துக்கல்லிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜிப்ஸிக்கள் பிரேசிலுக்குப் போனபோது தாம் ஏந்திச்சென்ற பிளெமிங்கோ நடனம் பிரேசிலின் பாரம்பர்ய நடனமான ஸல்ஸாவில் புதியதொரு வடிவத்தைத் தோற்றுவித்தது என்பது வரலாறாக இருக்கிறது. பிளெமிங்கோ நடனத்தை ஜிப்ஸி மக்களின் கொடை என்பதை மறுக்கிற ஸ்பானியர்களும் உண்டு. ஜிப்ஸிக்கள் வருவதற்கு முன்பே அந்தலூசியாவில் கிராமிய நடனங்கள் இருந்திருக்கிறது என்பாரும் அதுவே பிளெமிங்கோவாக பிற்பாடு பரிமாணம் பெற்றது என்பாரும் உண்டு.
பதினைந்தாம் நூற்றாண்டில் ரோமாக்கள் ஸ்பெயினுக்குள் வந்தபோதே இன்றளவும் பிளமிங்கோ நடனத்தில் இடம்பெறும் கதைகளுடன் நாடகங்களுடன் வந்தனர். அவர்கள் அந்தாலூசிய கிராமிய நடனத்தில் மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கினார்கள். இந்த வகையில்தான் கார்ஸியா லோர்க்காவின் படைப்புகளில் பிளெமிங்கோ நடனமும் ஜிப்ஸி மக்களது வாழ்வும் பிரிவுபடாமல் சித்தரிப்புப் பெறுகிறது. பிளமிங்கோ நடனத்திற்கும் இந்திய நடன வகைகளான கதக், கதகளி, மணிபுரி, பரதநாட்டியம் போன்றவற்றிற்கும் இடையிலான நேரடியான உறவுகள் கூட தற்போது இனம் காணப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நடன வகைகளுக்கும் இந்திய நடன வகைகளுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் – இசைக்கும் கூட இந்நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கலாம் – ஐரோப்பிய நடனம் புறவெளி நோக்கி விரிவு பெறுவது, மாறாக இந்திய நடனங்கள் அகவெளி நோக்கி முயக்கம் கொள்வது, குறிப்பாக கதக் நடனத்திற்கும் பிளெமிங்கோவுக்கும் உள்ள உறவை ஜிப்ஸி நடனப் பெண்மணியான நதியா ஹாவா இனங்கண்டு சொல்கிறார். ‘கதக் நடனத்தில் குதிகாலும் முன்பாதங்களும் குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் வைக்கும் அடிகள் மிகமுக்கியமானதாகும். பிளெமிங்கா நடனத்திலும் குதிகால் அடிகள் மிகமுக்கியமான பாத்திரம் வகிக்கிறது. கதக் நடனத்தில் தலைக்கு மேல் உயர்ந்த கைகளும் சுதந்திரமாக விசிறி போல் விரியும் கைவிரல்களும் போலவே பிளெமிங்கோ நடனம் முழக்கவும் தலைக்கு மேல் உயர்ந்து விரியும் விரல்கள் நடனம் முழுவதும் அசைந்தபடி இருக்கிறது. இணைந்த கைகளின் சத்தமும் இரண்டு நடனங்களுக்கும் பொது’ என்கிறார் நதியா ஹாவா.
கைவிரல்கள் விசிறி போல் திறந்திருக்கும் பண்பு இரண்டு நடனங்களுக்கும் பொது என்கிறார் நதியா. துக்கமும் பரவசமும் பிளெமிங்கோ நடனத்தின் முக்கிய அம்சம் எனவும் அவர் குறிப்பிடுகிறார். பிளெமிங்கோ நடனத்தில் இடம் பெறும் அழுத்தமான சிவப்பு நிறமும் அடர் வண்ணங்களும் இந்திய நடனத்தின் உடை ஒப்பனை ஒத்தது என்கிறார் அவர். பிளெமிங்கோ நடனம் நடுவில் வளர்க்கப்பட்ட தீக் குண்டம் அதன் மீது உள்நோக்கிக் குவியும் நடன அசைவுகள் என அமைகிறது எனும் நதியா ஜிப்ஸி நடனம் விரகதாபத்தையெழுப்பும் இரவு நடனம் மட்டுமே என ஐரோப்பியர்களால் சுட்டப்படுவதை முற்றாக மறுக்கிறார். நிமிர்ந்த திமிர்நத உடல் தோற்றம், தன்னெதிரிலுள்ள ஆணின் கண்களை பெண் நேருக்கு நேர் பார்த்தல், அடர்ந்த சிவப்பு வண்ண உடைகள் போன்றவற்றை வைத்து ஐரோப்பியர்கள் இவ்வாறு மதிப்பிடுகிறார்கள். பெருமித உணர்வு, உக்கிரமான வெளிப்பாட்டு மனநிலை, பூமியில் அழுத்தமாகப் பிணைந்த உணர்வு, நட்சத்திரங்கள் நோக்கி வானுரசும் சுதந்திரப் பறத்தல் மனம் போன்றவற்றைச் சித்தரிப்பதாகவே பிளெமிங்கொ நடனம் இடம் பெறகிறது என்கிறார் நதியா ஹாவா.
பிளெமிங்கோ நடனத்தோடு நிற நிற உடுப்புகள் அணிந்தபடி ஜிப்ஸிப் பெண்கள் பிச்சையெடுப்பதாலும் அவர்கள் பாலுறவு ஒழுக்கம் குறைந்தவர்கள் என ஐரோப்பியர்கள் நினைப்பதையும் மறுக்கிறார் நதியா. அவர்களது நீண்ட பாவாடைகளின் நுனி கணவனைத் தவிர பிற ஆண்களால் தீண்டப்படக் கூடாது எனும் மரபு கொண்டவர்கள் ஜிப்ஸிப் பெண்கள். ஜிப்ஸி மரபுகளை மீறினால் சுத்தமில்லாதவர்கள் எனப் பெண்கள் அவர்களது இனத்திலிருந்து விலக்கப்படுவது ஜிப்ஸி மரபு. அவர்கள் பாலியல் ரீதியில் எளிதில் அடையக் கூடியவர்கள் எனும் எணணம் பிழையானது என்கிறார் நதியா. இந்திய நடனங்களில் இடம் பெறும் கருப்பொருட்களும் ரோமா இன நடனங்களின் கருப்பொருட்களும் ஒத்த தன்மையானவை என்கிறார் அவர். சந்தோசம், காதல், துக்கம், இழப்பு போன்றவற்றோடான உணரச்சிகரமான நடனம் ஜிப்ஸி நடனம் என்கிறார் அவர். பிறப்பு, அரங்கத்தில் ஆடுதல், திருமணம், மரணவீடு, அறுவடை, குளிர்காலத்தின் பின்பான வசந்தம், காளி வழிபாடு போன்றவை இரண்டு நடனங்களுக்கும் உள்ள பொதுவான அடிப்படைகள் என்கிறார் அவர். ராஜஸ்தான் மாநிலத்தின் ‘கூமர்’ நடனம், பஞ்சாப் மாநிலத்தின் ‘கிதா’ போன்றவற்றுக்கும் பிளெமிங்கோவுக்கும் நிறைய ஒத்ததன்மைகள் உள்ளன என்கிறார் நதியா.
ஜிப்ஸி இசையின் சாதனையாளர் எனக் குறிக்கப் பெறுபவர் பிரான்ஸில் வாழ்ந்து மரணமுற்ற ஜிப்ஸி இசைக் கலைஞர் டிஜாங்கோ ரீன்ஹார்ட் ஆவார். ஜாஸ் இசையில் கிதாரின் பாவனையை மாற்றியமைத்தவர் என இவரைக் குறிப்பிடுகிறார்கள். பிரான்ஸின் வயலனிஸ்ட்டான ஸ்டெபனி கிராபெல்லியுடன் இவர் இணைந்து அமைத்த ஜாஸ் ஐரோப்பிய இசைவெளிக்குள் ‘ஜிப்ஸி ஜாஸ்’ எனப் புதியதொரு இசைவடிவத்தினைத் தொடங்கியது எனப் பதிந்திருக்கிறார்கள் ஐரோப்பிய இசை விமர்சகர்கள்.
1960 ஆம் ஆண்டில் ஹங்கேரிய இசையின் வேர்களை ஆராயத் தொடங்கிய ஹங்கேரியின் ‘என்சம்பள் மியூசின்ஸ்’ எனும் குழு அதற்கென டிரான்ஸில்வேனியாவைச் சென்று அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஜிப்ஸி இசையின் வேர்களையும் காணமுற்பட்டபோது யூத இசையின் வேர்களையும் தேட முனைந்தார்கள். ரோமா இனத்தவர்கள் சிதறிப்போன யூதர்களின் இசைக் குறிப்புகளை நெறிப்படுத்த உதவியிருக்கிறார்கள் எனும் உண்மையை அப்போது அவர்கள் கண்டார்கள். அழிந்து கொண்டிருக்கும் இசைக் குறிகளைத் தேடிப் பாதுகாத்தவர்களாக ஜிப்ஸிகள் இருந்தமை இனங்காணப்பட்டது. மொழியின் தடத்தைப் போலவே, நடனத்தினது தடத்தைப் போலவே, ஜிப்ஸி இசையின் தடங்களையும், நடனத்துடன் இணைந்த இந்திய இசையில் கண்டிருக்கிறார்கள் மேற்கத்திய இசை வரலாற்றாசிரியரான ஸபாரோ போன்றவர்கள்.
ஜிப்ஸி மக்களின் இசை தற்போது உலகெங்கிலும் சகல இசைகளின் மீதும் பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக ஜிப்ஸி இசைக் கலைஞரான கோரன் பிரிக்கோவிக்கின் இசை, இரண்டு திரைப்படங்களில் இடம் பெற்றதையடுத்து ஜிப்ஸி இசையின் மீதான கவனம் உலகெங்கிலும் பரவலாகியிருக்கிறது. யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த ஸெர்பிய திரைப்பட இய்ககுனர் எமிர் கஸ்தூரிகா இயக்கிய ‘தி டைம்ஸ் ஆப் ஜிப்ஸிஸ்’ திரைப்படமும், ‘தி ரோட் ஆப் ஜிப்ஸிஸ்’ எனப்படும் ‘லாட்ச்சோ டிராம்’ திரைப்படமும் வெளியானதையடுத்து ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஜிப்ஸி இசை குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல ஜிப்ஸி மக்களின் துயர் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது.
ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது ‘தி டைம்ஸ் ஆப் தி ஜிப்ஸிஸ்’ திரைப்படம். ஸெர்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நூற்றுக்கணக்கான ஜிப்ஸி சிறுவர்கள் கடத்தப்படுவது அவர்களை அங்கஹீனர்கள் ஆக்கி உலகெங்கிலும் பிச்சையெடுக்கவைப்பது என்னும் குரூரமான வியாபாரம் பற்றியதாக இந்தப்படம் இருந்த போதிலும் ஜிப்ஸி மக்களின் வரலாறு கடந்த துயரத்தினையும் அவர்களது பெண்களும் குழந்தைகளும் அறிவொளி மரபு சார் வெள்ளையர்களால் சுரண்டப்படுவது பற்றியுமான கடுமையான விமர்சனத்தை இப்படம் கொண்டிருந்தது, ஜிப்ஸி மக்களின் கூடாரக் கூட்டு வாழ்வு, அம்மக்களது கையறுநிலை, காதல், நடனம், இசை போன்றவற்றை ஜீவனுடன் உள்வாங்கியதாக இந்தப்படம் இருந்தது. பிரான்ஸில் கேன் திரைப்பட விழாவில் விருதுகளையும் அள்ளிய இப்படம் ஜிப்ஸி மக்கள் குறித்த மிகமுக்கியமானதொரு திரைப்பதிவாகும்.
ரோமா இன மக்களின் இறை நம்பிக்கையாக காளி வழிபாடு அமைந்திருக்கிறது. சூலம் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆயுதமாக இருக்கிறது. கடவுள், சாத்தான், கெட்ட சகுனம், ஆவிகளின் சக்தி, சாபங்களின் சக்தி, நோய்தீர்க்கும் மந்திரவாதிகள், அசுத்தத்திற்கு எதிரான தண்டனைகள் எனும் நம்பிக்கைகள் அவர்களது வாழ்வில் புதைந்திருக்கிறது. இடுப்புக்குக் கீழேயிருக்கும் பெண்ணின் உடம்பு சுத்தமில்லாதது என்பது அவர்களது நம்பிக்கை. காரணம், மாதவிலக்குடன் அந்தப் பிரதேசம் சம்பந்தப்பட்டிருப்பதால்தான். கருத்தரித்த பெண் சுத்தமற்றவள். மகப்பேற்றின் பின் புதிய தாய் தொட்ட அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும். குழந்தை ஓடும் தண்ணீரில் குளிப்பாட்டப்படும். குழந்தைக்கு வைக்கப்படும் முதல் பெயர் தாயுடன் இணைந்ததாக கெட்ட ஆவிகளைக் குழப்பமூட்டுவதற்காக வைக்கப்படும். அசல் பெயர் பிற்பாடு வைக்கப்படும். திருமணத்திற்கு முன்பான பாலுறவு தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் இறந்து போகும்போது அம்மனிதனுக்குத் தாம் செய்த தீமைகளை மன்னித்துவிடுமாறு சம்பந்தப்பட்ட மனிதரின் உறவினர்களைப் பிற ஜிப்ஸிகள் கேட்டுக் கொள்வர். கணவன் இறந்தால் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இறந்தவரின் உடமைகள் அவருடன் சேர்த்துப் புதைக்கப்படும். மறுபிறப்பில் நம்பிக்கையுண்டு. இப்பிறப்பில் தீமை செய்தவர்களை மறுபிறப்பில் பழி வாங்குவர். மறுபிறப்பில் மிருகங்களாகவோ மானிடப் பிறவியாகவோ பிறப்பர். தண்ணீருக்கு வாழ்வில் முக்கிய இடம் உண்டு… ஓடும் தண்ணீரிலேயே குளிப்பர். கருவுற்ற பெண்களின் உடுப்புகள் தங்கியிருக்கும் கூடாரத்திலிருந்து தொலைதூரத்தில் துவைக்கப்படவேண்டும். பெண்களின் கால்கள் வெளியே தெரியக் கூடாது. நீண்ட பாவாடைகளை நிறநிறமாக அணிவர்.
குதிரைகளைத் தமது ஜென்ம ஆதாரங்களுடன் தொடர்புபடுத்தும் ஆரியர்கள் நெய்யுடன் சேர்த்து குதிரை இறைச்சி உண்ணும் பழக்கம் உடைய அதே பொழுதில் தமது நாடோடி வாழ்வில் பயண முக்கியத்துவத்துடன் இடம்பெறுவதால் குதிரைகளை ஜிப்ஸிகள் கொல்வதுமில்லை, அதனது இறைச்சியை உண்பதும் இல்லை. குறிசொல்வது அல்லது நோய்தீர்க்கும் மந்திர தந்திரங்களைச் செய்வதனைப் பெண்கள் தொழிலாக ஏற்பர். இதனை ஜிப்ஸிகள் அல்லாதவர்களுக்கே இவர்கள் வழங்குவர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றின் தொலைவில் தொலைந்து போன தமது மூதாதையரின் வரலாற்றைக் கல்வியறிவு பெற்ற ஜிப்ஸி வழித்தோன்றல்கள் தேடிக் கண்டுபிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ரோமா இனமக்கள் வேறு வேறு நாடுகளில் வித்தியாசமான பெயர்களில் அழைக்கப் பெறுகிறார்கள். ஸ்பெயினில் அவர்களுக்குப் பெயர் ‘கலோ’க்கள், ஜெர்மனியிலும் பிரான்சிலும் அவர்கள் ‘சின்ட்டோ’க்கள், எகிப்தில் அவர்களுக்குப் பெயர் ‘நவார்’கள் என்பதாகும். ஜிப்ஸிக்கள் தமது நீண்ட பயணத்தில் தாம் சேகரித்துக் கொண்ட அடையாளத்தில் எவையெவற்றைத் தக்கவைத்துக் கொள்வது எதனை மறந்துவிடுவது எனும் கேள்விக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
நாசிகள் புரிந்து கொடுமைகள் யூதர்களின் நினைவுகளில் பல்லாண்டுகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பணக்காரர்களும் அறிவுஜீவிகளும் ஆன யூதர்களின் மீதான இனப் படுகொலை அதிகமும் நினைவு கூறப்படுகிறது. எழுதவோ படிக்கவோ தெரியாத ஜிப்ஸிக்களின் மரணம் பதியப்படவேயில்லை. அதற்கான ஆவணங்கள் என்பதோ வாய்வழிக் கதைகள் என்பதோ கூட இல்லை. அவர்களது மரணம் சம்பந்தமான எழுத்துக்களும் இல்லை. இப்போது அதற்கான நடவடிக்கைகளை ரோமா இனத்தின் அறிவுஜீவிகள், இயான் ஹான்குக், நதியா ஹாவா போன்றவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். நாசிகளின் கொலைக் கூடமான ‘அஸ்க்விட்ச் பிர்க்கனோவ்’ முகாமில் ஒரு தனித்த மூலையில் ஜிப்ஸிக்கள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இப்போது ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஜிப்ஸிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவுநாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவென அங்கு வருகிறவர்கள் இருக்கிறார்கள்.
இனக்கொலைக்கு உள்ளான யூதர்களைப் போன்று பிரதானமான நினைவுச் சின்னங்கள் ஜிப்ஸிகளுக்கு இல்லை. இந்தத் தருணம்வரை அமெரிக்க ஐரோப்பிய அரசுகளும் யூத அமைப்புகளும் கூட ஜிப்ஸி இன மக்களைக் கீழான இனமாகவே பார்க்கிறார்கள். தங்களுக்குச் சமமான மனிதர்களாக ஜிப்ஸிகள் இவர்களால் மதிக்கப்படுவதில்லை. இந்தக் காரணத்திற்காகவே ஐரோப்பிய ரோமா ஆய்வு மையத்தின் நடவடிக்கைகளில் தான் அதிக ஈடுபாடு காட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார் நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய நாவலாசிரியர் குந்தர் கிராஸ். அரசு சாரா அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் ஜிப்ஸிகளின் இடத்தை வரலாற்றில் நிறுவ முயற்சி செய்து வருகிறார்கள்.
ஜிப்ஸிகளினிடையிலிருந்து கவிஞர்களும் நாவலாசிரியர்களும் வரலாற்றிசிரியர்களும் தோன்றியிருக்கிறார்கள். இவர்களது மொழியில் உலக இலக்கியத்தின் பல படைப்புகளும் மொழியாக்கம் பெறுகிறது. கார்ஸிகா லோர்க்காவின் ஜிப்ஸிகள் தொடர்பான கவிதைகளின் தொகுப்பொன்று ஹங்கேரியில் ரோமா மொழியில் மொழியாக்கம் பெற்றிருக்கிறது. ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ‘தி ஓபன் சொஸைட்டி இன்ஸ்டிட்யூட்’ இவர்களுக்கிடையில் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கென இலக்கிய விருதுகளை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஜிப்ஸி மக்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறபோது உடனடியில் ஞாபகம் வருகிறவர்கள் நரிக்குறவர்கள். அவர்களைப் பற்றிய விரிவான வரலாறு ஏதும் பதியப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகம்தான். கூடார நெருப்பு நாடோடி வாழ்வு அவர்களது குடும்பத்திற்குள் அணுக்கமாக உள்ளொடுங்கிய அவர்களது பாலுறவு மதிப்பீடுகள் மீறல் நிகழும்போது நேரும் விலக்கம், அவர்தம் நடனம் இசை போன்றவற்றை முன்வைத்து ஜிப்ஸிக்களின் வாழ்வோடு அவர்களை ஒப்புநோக்கமுடியும். நரிக்குறவர்கள் குறித்த அறிவுபூர்வமான மனதாபிமானக் கண்ணோட்டம் கொண்டவர்கள் அன்று அதிகமும் தமிழகத்தில் இல்லாத வேளையில்தான் நரிக்குறவர்கள் குறித்த பரிவும் அன்பும் கொண்டிருந்தார் எம்.ஜி.ராமச்சந்திரன். அவர்களும் ஒரு மக்கள் கூட்டம் எனும் அளவில் அவர் மீது மாறாத அன்பு கொணடிருந்தார்கள். அவர்களது கல்வி இருப்பிடம் போன்றவை குறித்துச் சிந்தித்தவராகவும் எம்.ஜி.ராமச்சந்திரன் இருந்தார்.
நரிக்குறவர்களின் உடைகளின் வண்ணங்களும் ஜிப்ஸிகளின் உடைகளது வண்ணங்களும் ராஜஸ்தான் பஞ்சாப் நாடோடிப் பாடகர்களின் உடைகளது வண்ணங்களும் நிறையப் பொதுத் தன்மைகள் கொண்டவை. இவ்வகையில் கூட ஜிப்ஸி மக்களைக் குறித்த பதிவுகளை இந்திய மொழிகளில் ஒன்றான தமிழில் மேற்கொள்வது விசேஷமான முக்கியத்துவம் கொண்டது. ஆரியர்கள் இந்தியாவின் ‘பூர்வகுடிகள் – இன்டிஜெனஸ்’ – என நிறுவுவதற்காக ‘குதிரைச் சின்னம்’ குறித்த புனைவுகளும் ‘பூமிக்குக் கீழாக ஓடிய சரஸ்வதி நதி’ குறித்த ஆய்வுகளும் அதிகரித்திருக்கிற இந்தியச் சூழலில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் – இந்தியக் கலாச்சார மீட்பாளர்கள் என மத எதிர்மை கட்டமைக்கப்பட்டு அதனடிப்படையில் இந்துத்துவம் நிலைநாட்டப்பெறும் தமிழக இலக்கியச் சூழலில் ஜிப்ஸிகள் குறித்த தமிழ் மொழிப்பதிவு முக்கியத்துவமானது.
ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிமக்கள் என நிரூபிக்க மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் உண்மையிலேயே இந்தியாவின் பூர்வகுடிகளாக அமைந்து ஐரோப்பியர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகளாக நடத்தப்பட்டு வேட்டையாடப்பட்டு துரத்தப்பட்டு அல்லலுறும் ஜிப்ஸி மக்கள் பற்றி ஏதும் எழுதாததில் ஆச்சர்யமில்லை. ஆரியர்கள் அல்லாதவர்கள், தூய்மையற்றவர்கள், குற்றப் பரம்பரையினர், ஒழுக்கமற்றவர்கள் எனும் காரணத்திற்காக ஐரோப்பியர்களால் வேட்டையாடப்பட்டவர்கள் ஜிப்ஸிகள்.
ஐரோப்பிய இந்துத்துவ ஆதரவாளர்களில் சிலர் யூதர்களையும் இந்துக்களையும் ஒப்பிட்டு ஜெர்மானியர்களின் இனக்கொலைக்கு ஆளான யூதர்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களின் இனக்கொலைக்கு ஆளான இந்துக்கள் என எழுதுகிறார்கள். இவர்கள் பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகள் என்றும் சொல்கிறார்கள். இதனை அடியொற்றி எழுதும் தமிழில் ‘பூர்வகுடி தேடி’ எழுதும் எழுத்தாளரொருவரும் யூதர்களுக்குச் சார்பாக பாலஸ்தீனர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என எழுதினார். யூதர்கள் இந்துக்கள் என மனித உரிமைப் பாசாங்கு நிலைபாட்டையும் அவர் முன்வைத்து வருகிறார். பாலஸ்தீனர்களைப் போலவே நாடு நாடாக அலைகிறவர்கள்தான் ஜிப்ஸிகளும். பாலஸ்தீனர்களுக்கு வரலாற்றுரீதியில் நிலப்பரப்பாவது உண்டு. ஜிப்ஸிகளுக்கு அதுவும் இல்லை. வன்கரங்களின் இடையில் அகப்பட்ட தேசமாகவே அவர்களது நினைவுகளில் அவர்களது மங்கலான தேசம் இருக்கிறது. இந்துத்துவவாதிகளின் பூர்வகுடித் தேடலுக்குள் ஒதுக்கப்பட்ட இனமாகியிருக்கும் இந்தியப் பூர்வகுடிகளான ஜிப்ஸி மக்கள் வராததில் ஆச்சர்யமேதுமில்லை..