தோழர் நமசு – சில நினைவுகள்
(ஓர் உண்மை மனிதரின் வாழ்க்கைக் கதை)
-குமரன் தாஸ்
தோழர் நமசு என்ற பெயரை 1980-களின் பிற்பகுதியில் அனேகமாக 1989-ஆம் ஆண்டு என நினைக்கிறேன் கேள்விப்பட்டேன். அப்போது அவர் சார்ந்திருந்த மார்க்சிய லெனினியக் கட்சி தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு தேர்தலில் பங்கெடுப்பது என்ற முடிவை எடுத்து அதன்படி இந்தியா முழுமையும் வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜானு என்ற சதானந்த கணேஷ் என்பவர் மக்கள் நல இயக்கம் மற்றும் இந்திய மக்கள் முன்னணி வேட்பாளராக சுயேச்சையாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு படகு சின்னத்தில் போட்டியிட்டார். அதேசமயம் தேவகோட்டையைச் சேர்ந்த தோழர் நமசு என்பவரும் சட்டமன்ற வேட்பாளராக நிற்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவரை நேரில் பார்த்ததில்லை.
நான் அவரை நேரில் சந்தித்தது மிகவும் பிற்பாடு 1996 அல்லது 1997 என்று நினைக்கின்றேன். அப்போது அவர் தேவகோட்டை ராம்நகர் பல்மேரா இல்லத்தில் தங்கியிருந்தார். நண்பர் குமார் என்னை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். குமார், தோழர் நமசு அவர்களை மாமா என்று அழைப்பார். நமசு குமாரின் பெற்றோரை மைத்துனர், தங்கை என்று அழைக்கும் விதமான நீண்ட கால குடும்ப நட்போடு இருந்து வந்தனர். நான் நமசைச் சந்தித்தபோது அவர் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லாமல் தனி ஆளாக இருந்தபோதும் கூட மக்கள் பணி செய்து கொண்டுதான் இருந்தார்.
அப்போது ஒரு பெட்டியில் சில உடைகளும் கொஞ்சம் புத்தகங்களும் அவரது உடமைகளாக இருப்பதைக் கண்டேன் மேலும் தேவகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளையும் சேர்ந்த நடுத்தர, உழைக்கும் ஏழை எளிய மக்கள் தங்களது பல்வேறு பிரச்சனைகளை முன்னிட்டு அவரோடு பேசுவதற்கும் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டேன். அப்போதும் நான் அவரோடு நெருங்கிப் பழகி விடவில்லை.
2001-இல் நான் கிரைண்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்த பிறகு வாரம் ஒரு நாள் வேலை நிமித்தமாக தேவகோட்டை செல்லும்போது அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தேவகோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே ஓர் கடை வாயிலின் முன்பாக, கிராமத்து மக்கள் புடைசூழ அமர்ந்து ஏதாவது துண்டறிக்கையையோ, மனுவையோ அவர் எழுதிக் கொண்டிருப்பதை பார்ப்பேன்.
அங்கு போய் நின்றவுடன் சுற்றி இருப்போரிடம் என்னை அறிமுகம் செய்து விட்டு, என்னை அழைத்து வந்து பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள தேநீர் கடையில் டீ வாங்கிக் கொடுத்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை கொடுப்பார். அப்போது அவர் கையில் பீடி புகைந்து கொண்டு இருக்கும்.
இவ்வாறான சந்திப்புகளின் போது எனது சொந்த விஷயங்கள், வேலையின் தன்மை, வருமானம் குறித்தெல்லாம் அக்கறையாக விசாரிப்பார். விரைவாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவார். இதுதான் நமசு! இதுவரை நான் பார்த்த தோழர்களிடம் இல்லாத பண்பு அது. உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பேசுபவர்கள் தோழர்களின் தனிமனித வாழ்க்கை குறித்து பெரிய அளவில் அக்கறை செலுத்துவது இல்லை. ஆனால் நமசு மாறுபட்டவராக இருந்தார்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களின், தன்னிடம் ஏதாவது உதவி வேண்டி வருபவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார். தோழர் நமசு அவர்களிடம் ஏதாவது உதவி, ஆலோசனை, காவல் நிலைய பிரச்சனைகள், வழக்குகள் போன்றவைகளுக்காக வரக்கூடிய தேவகோட்டை சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை நடுத்தர விவசாயிகள், பட்டியலின, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தும் ஆலோசனைகளை வழங்கியும், தேவைப்பட்டால் காவல் நிலையம் அழைத்துச் சென்றும் பிரச்சனை தீரவில்லை என்றால் போராட்டங்களை அறிவித்தும் துண்டறிக்கைகளை எழுதி வெளியிட்டும் உதவுவதோடு அவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல வழிச் செலவுக்கு கையில் பணம் உள்ளதா என்றும் விசாரிப்பார்.
அவரோ எந்த வருமானமும் இல்லாத, பொது வாழ்க்கையில் உள்ள தனிநபர். ஆனால் அது பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டதே இல்லை. உதவி வேண்டி வந்தவர்களில் எவரிடம் கையில் பணம் உள்ளதோ, யார் கொடுக்கக்கூடிய அளவுக்கு வசதி உள்ளவரோ அவரிடம் ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி தேவைப்படுபவருக்கு கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பார்.
தோழர் நமசுவுக்கு கொடுப்பதில் யாருக்கும் மனத்தடை இருக்காது. ஆனால் முகம் தெரியாதவர்களுக்கு தன் பணம் போய்ச் சேருவதைப் பற்றி எப்படி நினைத்திருப்பார்களோ? இது போன்ற அனுபவம் எனக்குப் பல முறை தோழர் நமசு மூலம் ஏற்பட்டு உள்ளது. தேவகோட்டையில் எனது கம்பெனி வேலைகளை முடித்துக்கொண்டு தோழர் நமசுவை நான் சந்திக்கும் நேரம் மதியம் ஒன்று முப்பதிலிருந்து இரண்டு மணி அளவாக இருக்கும்.
சரி தோழரை அழைத்துக்கொண்டு போய் சாப்பிடலாம் என்று போனால் ஆண்களும் பெண்களுமாக சிலர் சூழ்ந்திருக்க அப்போதும் அவர் ஏதாவது எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தோழர் சாப்பிட்டீர்களா? என்று கேட்டால் அருகில் இருப்பவர்களிடம் அவர்களது உணவு பற்றி விசாரிப்பார். எவராவது கையில் பணம் இன்றி இருந்தால் அவருக்கு எவ்வளவு தேவை என்று கேட்டுவிட்டு என்னிடம் பணத்தை வாங்கி அவரிடம் கொடுத்து சாப்பிட்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டு வாங்க டீ குடிக்கலாம் என்று அழைப்பார் என்னை.
இப்படி மதிய வேளைகளில் டீயும் பீடியுமாகக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டார். பல்மேரா இல்லத்தில் இருந்து வெளியேறிய பிறகு தேவகோட்டையில் தனியே அறை எடுத்து தங்கியிருந்தார். அறை வாடகையையும் தோழர்களே கொடுத்து வந்தனர். குறிப்பாக வழக்குரைஞர் கருணாநிதி மற்றும் எஸ்.பி. துரை ராஜ் இருவரிடமும் மிகவும் உரிமையோடு தனது தேவைகளுக்கும் பொது விஷயங்களுக்கும் பணம் கேட்டு வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.
மேலும் கூட்டங்கள் நடத்த, சுவரொட்டிகள் அச்சடிக்க, துண்டறிக்கை மற்றும் புத்தகங்கள் வெளியிட வழக்குச் செலவு போன்றவற்றிற்கு என்று தயங்காமல் கடன் வாங்குவார். இவ்வளவு கடன் வாங்குகிறீர்களே? எப்படி திருப்பிச் செலுத்துவீர்கள்? என்று ஒருமுறை நான் கேட்டபோது ”நமது சொந்தச் செலவுக்கா வாங்குகிறோம்? மக்களுக்காக தானே! முடிந்தவரை திருப்பிக் கொடுப்போம்! முடியாவிட்டால் அவமானப்பட என்ன இருக்கிறது? என்றார்.
இது போன்ற பொது விஷயங்களுக்கு தோழர்கள் எவராவது கையில் பணமிருந்தும் தராத போது கடுமையாகத் திட்டவும் செய்திருக்கிறார். ஒருமுறை என்னிடம் உடனே 5000 ரூபாய் தேவைப்படுகிறது யாரிடமாவது வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார். 500 ரூபாய் என்றால் நான் தந்து விடுவேன் என்று தயங்கிய உடன் ”சார் உலகம் ரொம்ப பெருசு சார் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று தொலைபேசியைத் துண்டித்து விட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் அவர் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்.
அடுத்த முறை சந்திக்கும்போது மிக இயல்பாக பேசுவார். விடைபெறும்போது பஸ்ஸுக்கு காசு கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்வார். இதையெல்லாம் நான் கூறியவுடன் சுற்றி இருந்தவர்களிடமெல்லாம் நமசு பணம் கேட்டவர் என்று நினைத்துவிடாதீர்கள். தனது பங்காக பூர்வீகச் சொத்திலிருந்து கிடைத்த பெரும் சொத்து அனைத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளுக்கும் தோழர்களுக்கும் செலவு செய்து அழித்ததோடு தனக்கென்று ஒரு ரூபாயைக் கூட வைத்துக் கொள்ளாத, இழப்பதற்கு ஏதுமற்ற மனிதராக வாழ்ந்தவர் அவர்.
எப்போதாவது எனது விடுமுறை நாள் அன்று தேவகோட்டையில் அவரது அறைக்குச் சென்றால் துணி துவைத்துக் கொண்டோ குளித்துக் கொண்டோ இருப்பார். வெள்ளை வேட்டி ஜிப்பா தோளில் ஒரு துண்டு ஜோல்னா பை அதில் நாளிதழ்கள், இதழ்கள், காகிதங்கள், துண்டறிக்கைகள் சகிதமாக ”மக்கள் வந்து காத்திருப்பார்கள் சந்திக்க வேண்டும்” என்று கிளம்பி விடுவார். அவர் அறையில் ஓய்வாக படுத்திருந்து நான் பார்த்தது அவரது இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்ட போது மட்டும் தான்.
தொண்டை புற்று நோய் தீவிரமாகும் வரை ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். நோய் தாக்கிய துவக்கத்தில் அவர் சோர்வடையாமல் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தார். நானும் காரைக்குடியில் மருத்துவர் சிவக்குமார் (பி.ஹெச்.எம்.எஸ்) அவர்களின் ஹோமியோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வழி செய்தேன். பீடியை விடும்படி மருத்துவர் சொன்னதை அவர் கேட்காததோடு, கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன் என்று நான் கேட்டுக் கொண்டதையும் கூட புறந்தள்ளி பீடிபிடிப்பதை இறுதிவரைத் தொடர்ந்தார். முரட்டுப் பிடிவாதக் குழந்தையைப் போன்றவர் என்பதே அவரைப் பற்றிய எனது மதிப்பீடு.
(தோழர் நமசு)
அவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாதவர் என்று கூறினேன் அல்லவா? நாம் யாராவது புத்தகங்களை அவருக்கு கொடுத்தால் அதை படித்துவிட்டு தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டார். பிறருக்கு கொடுத்து படிக்கச் சொல்வார். ஒருமுறை தோழர் கருணா மனோகரன் எழுதிய நூல் ஒன்றை எனக்குக் கொடுத்து வாசியுங்கள் என்றார். சரி நமக்குத்தான் கொடுத்துள்ளார் என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் போன் செய்து அந்த நூலை வாசித்து விட்டீர்களா? நூலை வேறு ஒருவர் பெயர் சொல்லி அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டார்.
புத்தகங்களை மட்டுமல்ல நான் அவருக்கு என்றோ வாங்கிக் கொடுத்த கைலி துண்டு வேட்டி போன்றவற்றைக் கூட அவர் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு கொடுத்து விட்டதை அறிந்த போது தான் ஒன்று புரிந்தது. தோழருக்கு நாளைக்கு வேண்டுமே என்பதற்காக எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளும் ஆசையோ வழக்கமோ ஏன் சிந்தனையோ துளியும் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டேன். அப்படித்தான் தன் இறுதிநாள் மூச்சு வரை வாழ்ந்தார். ஒருநாள் திடீரென அவர் மயங்கி சரிந்த போது அவர் கையில் பொருளாதாரம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரைச் சுற்றி தோழர்கள் இருந்தார்கள். அவரது மருத்துவச் செலவு முழுவதையும் தோழர்களே செய்தனர்.
@
தோழர் நமசு அவர்களோடு உறவைப் பேணுவது சற்று சிரமமான காரியமாகும். நாம் எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும். அதிகாலை 5 மணிக்கு போன் செய்வார். நான் உங்க ஊர் பேருந்து நிலையத்தில் நிற்கிறேன் பார்க்கணுமே என்பார். கிளம்பி போனால் இப்பத்தான் சென்னையில் இருந்து வந்தேன் என்பார். ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது இதழ்கள் வாங்கி வந்திருந்தால் வாசியுங்கள் என்று கொடுப்பார். அரை மணி நேரத்தில் ஒரு டீயும் இரண்டு பீடியும் புகைத்துவிட்டு புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு தட்சணை கொடுங்கள் என்பார்.
அதே நமசு பின்னாளில் நான் கிரைண்டர் கம்பெனி வேலையை விட்டுவிட்டு சிரமப்பட்ட காலத்தில் என்னைச் சந்திக்கும் நேரத்தில் செலவுக்குப் பணம் ஏதும் வேண்டுமா? என பலமுறை கேட்டு இருக்கிறார். நான் சிரித்துக் கொள்வேன். எனக்கு வேலை வாங்கித் தரக் கூட முயன்றார். அவர் என்மீது காட்டிய அன்பை அக்கறையை எப்படிப்பட்டது என்று என்னால் விளக்க முடியாது. ஏனென்றால் அவரது கடந்தகால இயக்கச் செயல்பாடுகள் எதிலும் பங்கேற்காத, அவரை விட 20 வயது குறைந்த என்னிடம் அவர் காட்டிய அன்பு, பாராட்டிய தோழமை ஆச்சரியமானது.
அவரது நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சி அனுபவம், போராட்ட வாழ்க்கை, அர்ப்பணிப்பு, சிறை, வழக்குகள் போன்றவற்றை எல்லாம் மறந்து அவரோடு சமமாக எவ்வித தடையுமின்றி பழகவும் விவாதிக்கவும் செய்திருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் எளிமையானவராகவும் தோழமைக்கு இலக்கண மாகவும் திகழ்ந்தார்.
அவர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி ஜாதி – தீண்டாமை ஒழிப்பு செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கத் துவங்கிய காலகட்டத்திலேயே நான் அவரோடு நெருக்கமானேன். நானும் அப்போது அம்பேத்கர் பெரியார் கருத்துக்களைப் பயின்று வந்ததால் அவரோடு நெருங்கிச் செல்ல முடிந்தது. கூடவே அவரது தமிழ்த்தேசிய கருத்தியலில் முரண்படவும் செய்தேன். அவர் மிகவும் பொறுமையாக பலமுறை எனக்கு அது பற்றி விளக்கியிருக்கிறார்.
அவரோடு நான் சேர்ந்து செய்த வேலை உண்டு என்றால் அது தியாகி இமானுவேல் பேரவை சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் (2005—2010) காரைக்குடியில் ஒட்டியது தான். அப்போது தியாகி இமானுவேல் பேரவை உறுப்பினர்கள் எவரும் காரைக்குடிப் பகுதியில் கிடையாது. ஆகவே தேவகோட்டையில் இருந்து தோழர் நமசு சுவரொட்டிகளை கொண்டு வருவார். நான் எனது வீட்டில் பசை காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்து அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்குடி முழுவதும் ஒட்டி இருக்கின்றோம்.
இந்தப் பணிகளை முன்னிட்டு இருமுறை என் வீட்டிற்கு வந்து இரவு தங்கி உணவு உண்டும் சென்றுள்ளார்.
மற்றொரு முறை என்னை அழைத்து தியாகி இமானுவேல் பேரவை தலைவர் தோழர் பூ.சந்திரபோஸ் அவர்களுடன் கோயமுத்தூர் வரை நீங்கள் சென்று வரவேண்டும் என்றார். அது டி.என்.ஜா எழுதிய பசுவின் புனிதம் நூல் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு தோழர் பூ.சந்திரபோஸ் அவர்கள் உரையாற்ற வேண்டிய நிகழ்வுக்கான பயணம். தனக்கு வேறு முக்கியமான வேலை இருப்பதால் நீங்கள் அவசியம் சென்று வர வேண்டும் என்று நமசு வற்புறுத்தியதன் பேரில் நான் மதுரை சென்று தோழர் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து கொண்டேன்.
அவர் பரமக்குடியில் இருந்து மதுரை வந்திருந்தார். அதற்கு முன்பே தோழர் அரங்க குணசேகரன் (தமிழக மனித உரிமைக் கழக தலைவர்) அவர்களுடன் சேர்ந்து பூ.சந்திரபோஸ் அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து இருந்தாலும் கூட நெருங்கிப் பழகியதில்லை. இந்த கோவை பயணத்தின் மூலம் தோழர் சந்திரபோஸ் அவர்களுடைய அன்பைப் பெறும் வாய்ப்பை நமசு ஏற்படுத்தித் தந்தார்.
சந்திரபோஸ் அவர்களுக்கும் நமசுவுக்கும் நல்ல நெருக்கமான பற்றுதலும் அரசியல் புரிதலும் இருந்ததை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தோழர் நமசு அவ்வளவு எளிதில் யாருடனும் (இயக்கத் தலைவர்களுடன்) இணங்கிப் போய் விடக் கூடியவர் அல்ல. உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்தாலும் அத்தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்களுக்காக குரல் கொடுக்கும் நமசு இயக்கத் தலைவர்களது நேர்மையின்மையை கடுமையாக விமர்சிக்கக் கூடியவராக இருந்தார்.
அந்த வகையில் பார்க்கும்போது தனது இறுதி நாள் வரை சுமார் பதினெட்டு ஆண்டுகள் தியாகி இமானுவேல் பேரவையில் அதன் தலைவர் தோழர் பூ.சந்திரபோசு அவர்களுடன் ஒன்றுபட்டு அவர் பயணித்தது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
@
தோழர் நமசு அவர்கள் சிறந்த இயக்க வாதி மட்டுமல்ல. சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவருக்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் நடத்திய இதழ்களை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரைச் சந்தித்த நாட்களில் பலருக்கும் அவர் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். தன்னைச் சுற்றி இருந்த உள்ளூர் தோழர்கள் முதல் பெரிய தலைவர்கள், எழுத்தாளர்கள் வரை பலருக்கும் கடிதங்கள் எழுதியதோடு அவற்றை நகல் எடுத்து என்னைப் போன்ற பலருக்கும் வாசிக்கவும் கொடுத்தார். கடிதங்களில் பல கடும் விமர்சனங்களைச் செய்து எழுதப்பட்டவையாக இருந்தன.
தோழர் நமசு நல்ல வாசகராகவும் இருந்தார். நாங்கள் நடத்திய பகிர்வு, புதிய தடம் ஆகிய இதழ்களை தொடர்ந்து வாசித்ததோடு பரப்பவும் செய்தார். ஏனோ அவருக்கு பகிர்வு என்ற இதழின் பெயர் பிடிக்கவில்லை. ஆனால் புதிய தடம் என்ற பெயர் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. மேலும் நான் பல இதழ்களுக்கும் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை அவரிடம் காட்டி அவரது கருத்துக்களைக் கேட்கவும் செய்தேன்.
எனது கையெழுத்திலான கட்டுரையை வாங்கியவுடன் முதலில் எழுத்துப் பிழைகளையும் பிறகு வாக்கிய அமைப்பையும் கூட சில இடங்களில் திருத்துவார். பிறகே உள்ளடக்கத்தைக் கவனிப்பார். அவர் ஜனசக்தியில் சிலகாலம் மெய்ப்புத் திருத்தும் பணி செய்ததையும் அப்போது தோழர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் போன்றோருடன் பழகியதையும் பலமுறை கூறியுள்ளார். அவ்வாறே சி.பி.எம். கட்சியில் இருந்தபோது எஸ்.ஏ.பி யுடனும், சி.பி.ஐ (எம் எல்) கட்சியில் வினோத் மிஸ்ரா, பி.வி.சீனிவாசன் போன்றோருடன் சந்தித்துப் பேசியது பற்றியும் அவ்வப்போது கூறியுள்ளார்.
ஆகவே எதை வாசித்தாலும் எழுத்துப்பிழை முதலில் அவர் கண்ணில் பட்டுவிடும். எழுத்தில் மட்டுமல்ல அவரோடு பேசும்போது சொற் பிழைகளையும் உடனுக்குடன் திருத்துவார். அவ்வாறு பலமுறை அவரிடம் வாபஸ் என்று சொல்லி எனது சொற்களைத் திரும்ப பெற்றுள்ளேன். அவரது கையெழுத்து மிகவும் அழகாகவும் சீராகவும் இருக்கும். அவரது கைப்பட பலருக்கும் நூற்றுக்கணக்கில் எழுதிய கடிதங்களை தொகுத்தால் அது இளம் தோழர்களுக்கு அருமையான பாடமாகவும் நல்ல கடித இலக்கியமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.
அவருடைய கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகூறலில் அவருடைய தந்தை யாருடைய வைதீக போக்கு பற்றியும் ஒரு பணக்கார விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது பற்றியும் அவரது ஆசானாக விளங்கிய பூவநாதன் அவர்களைப் பற்றியும் மற்றும் நேர்மறை எதிர்மறை ஆசான்களாக தன் வாழ்வில் வந்து போன பல தலைவர்களைப் பற்றியும் அடிக்கடி கூறியுள்ளார். குறிப்பாக கூத்தகுடி சண்முகம், பி.ஆர்.சந்திரன் போன்றவர்களைப் பற்றி எல்லாம் நிறைய பேசுவார். அதேபோல் தனது கட்சி வாழ்வின் சக தோழர்களைப் பற்றி அவர்களது பண்புகள் பற்றி எல்லாம் விமர்சனமாகவும் அடிக்கடி கூறுவார். அவ்வாறான விமர்சனத்தின் போது அவர் பயன்படுத்தும் கடும் சொல் ”வெட்கம்கெட்ட பண்டி (பன்றி)” என்பதாகும்.
தன் சக தோழர்கள் மட்டுமின்றி மூத்த மற்றும் இளைய தோழர்கள் பலரையும் முகத்திற்கு நேராக மேற்கண்ட அடைமொழியால் திட்டியுள்ளார். அரசியலில் நேர்மையை அவர் மிகவும் எதிர்பார்த்தார். தோழர்களின் நேர்மையற்ற போக்குகளை வெளிப்படையாக விமர்சித்தார். என்னை பலமுறை அவ்வாறு விமர்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நான் தோழர்களுடனான உறவு கெட்டு விடாதா? உங்களைப்பற்றி தவறாகக் கூற மாட்டார்களா? என்று கேட்டபோது யாருடைய நற்சான்றிதழும் எனக்குத் தேவையில்லை! என்று கூறினார்.
வெளியில் மிகவும் முரட்டுத்தனமாகத் தெரியக்கூடிய தோழர் நமசு உண்மையில் மிகவும் மென்மையானவர். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது சில முறை கண்கலங்கி உள்ளார். அது சில தோழர்களின் தியாக வாழ்க்கையைப் பேசிய சமயங்கள். மேலும் அவர் தலைவர் என்று குறிப்பிடும் தோழர் பழனியப்பன் அவர்களைப் பற்றி அவரது கண்ணோட்டத்தில் உள்ள தவறுகள் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த தோழர் நமசு ஒருமுறை (தோழர் மாடக்கோட்டை சுப்பு அவர்களின் மகள் திருமணத்தில் என நினைக்கிறேன்) தேவகோட்டையில் தோழர் பழனியப்பனை நேரில் சந்தித்தபோது கட்டிப்பிடித்து அழுதுவிட்டார். தோழர் பழனியப்பனும் அழுதுவிட்டார்.
பழனியப்பன் பலமுறை என்னிடம் கூறியுள்ளார் நமசுவுடன் எதையும் விவாதிக்க முடியவில்லை. அசிங்கமாகப் பேசுகிறார் என்று. ஏனென்றால் தோழர் பழனியப்பன் வாயிலிருந்து ஒரு சிறு அநாகரிகச் சொல் கூட வந்து நான் கண்டதில்லை. அதுவும் நமசுவுக்கு 10 வயது மூத்தவர். பலரையும் உருவாக்கியவர். தலைவர் என நமசு, சிம்சன், மீ.த.பாண்டியன், அரங்க குணசேகரன் போன்ற பலராலும் அழைக்கவும் மதிக்கவும்பட்டவர். ஆனால் தோழர் நமசு பழனியப்பனுக்கு நேரெதிர். கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும்.
ஒரு முறை, சி.பி.எம். கட்சியில் இருந்தபோது நமசு மீது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுபற்றி விசாரிக்க மேல்மட்டத்தில் இருந்து தோழர் ஒருவரும் வந்து ”யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள்?” என்று கேட்க அதற்கு நமசு, “எனக்கு … கேட்டு மூத்திரம் பெய்யும் பழக்கம் இல்லை” என்று சொல்லவும் வந்த தோழர் அதிர்ந்து போயுள்ளார். இதுதான் நமசு! யாருக்கும் எந்த அதிகாரத்திற்கும் பயப்படுபவரல்ல அவர்.
தோழர் நமசுவுக்கு மிகவும் பிடித்தமானவர் தோழர் கருணா மனோகரன் ஆவார். அவர் பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் அடிக்கடி பேசுவார். கருணா மனோகரன் துணைவியார் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்று கூறியதோடு அவர்கள் நமசுவுக்கு அன்றாடச் செலவுக்கு சில முறை பணம் தந்து உதவியதையும் கூறியுள்ளார். தோழர் நமசு அவர்கள் மார்க்ஸிய லெனினியக் கட்சியிலிருந்து ஜாதி ஒழிப்புக் கருத்தியலை நோக்கி நகர்ந்ததில் தோழர் கருணா மனோகரனின் எழுத்திற்கு ஓர் பங்கு இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.
@
தோழர் நமசு தனது (25 ஆண்டுகாலத்திற்கும் மேல்) பொதுவுடமைக் கட்சிகளில் செலவிட்ட வாழ்நாளில் சந்தித்த போராட்டங்கள் வழக்குகள் சிறைத்தண்டனை போலவே கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகும் கூட அவ்வாறே வாழ்நாளை கழித்தார். அதாவது கட்சி சாராத கம்யூனிஸ்டாகவே இயங்கினார் என்றே கூறவேண்டும். மக்களிடமிருந்து விலகாதவராகவே வாழ்ந்தார்.
ஒருமுறை தேவகோட்டைப் பகுதியில் நடந்த தலித் மாணவர் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முன்னணி வகித்தபோது காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் அவரது நடு மண்டை பிளந்து பெரிய அளவில் தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து அடிக்கடி தலை வலிக்கிறது என்று கூறிவந்தார். புற்றுநோய் தாக்குதலுக்குப் பிறகு நான் அவரை சந்திக்கும் வேளைகளில் என்ன செய்கிறது? என்று கேட்கும் போது தலைவலி, சளி தொண்டையில் ஏதோ அருவுகிறது என்று கூறுவார். ஹோமியோபதி நாட்டு வைத்தியம் ஏதும் பலனின்றிபோய் இறுதியாக சென்னை அடையார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
சென்னை சென்று வந்த பிறகு குரல் குன்றிப்போய் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல் மிக மெதுவாகத் தான் அவரால் பேச முடிந்தது. இடையே ஒரு முறை மிகவும் ஆபத்தான நிலைக்கு ஆளாகி மதுரை அரசு மருத்துவ மனைக்கு தோழர்கள் ஸ்டீபன்ராஜ் எஸ்.பி. துரைராஜ் போன்றோரால் கொண்டுபோய் சேர்க்கப்பட்டார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு நான் போய் பார்த்தபோது தோழர்கள் ஆரோக்கியமேரி, மீ.த.பாண்டியன் ஸ்டீபன்ராஜ் சந்தனமேரி போன்றோர் உடனிருந்து கவனித்து வந்தனர்.
தோழர் நமசு அவர்களின் மருத்துவச் செலவுக்காக நண்பர்கள் சிலரிடம் வசூல் செய்து சிறிய தொகையை நானும் அளித்தேன். மீண்டு வந்த பிறகும் தோழர் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். தியாகி இமானுவேல் பேரவை தலைவர் தோழர் சந்திரபோசு அவர்களும் தியாகி இமானுவேல் பேரவைத் தோழர்களும் பெரும் பொறுப்பை ஏற்று தோழரை பராமரித்து வந்தனர். இந்தக் காலகட்டங்களில் தோழர் நமசு வாசிக்கவோ எழுதவோ பேசவோ முடியாமல் நடமாடியதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இப்படி அவர் ஒருபோதும் ஒரு நாள் கூட இருந்ததில்லை. இறுதியாக இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு மதியம் ஒரு மணி வாக்கில் தொலைபேசியில் அழைத்து மருத்துவர் சிவக்குமார் கிளினிக்கில் இருக்கிறேன் வர முடியுமா? என்றார். நான் சென்று பார்த்தபோது ராசு அம்மாவுக்கு (தோழரின் தம்பி மனைவிக்கு) மருந்து வாங்க வந்தேன் என்றார். நான் கடிந்து கொண்டேன். ஏன் இந்த வெயிலில் நீங்கள் வந்தீர்கள்? என்றேன். அவர்களுக்கு வயல் வேலை இருந்தது என்றார்.
மருத்துவரும் கூட கூறினார் அந்த அம்மாவை வரச் சொல்லுங்கள் என்று. தோழர் மிகவும் தளர்வாக இருந்தார். வண்டியில் அழைத்து கொண்டு போகும் போது சாப்பிட்டு விட்டுப் போங்களேன் தோழர். மணி இரண்டாகப் போகிறது என்றேன். இல்லை நான் உடனே போகவேண்டும். தேவகோட்டையில் இருந்து அறநூற்றிவயலுக்கு பிறகு பேருந்து கிடைக்காது என்று கூறினார். தேவகோட்டைக்கு பேருந்தில் ஏற்றி விட்டேன் மிகுந்த தள்ளாட்டத்தோடு ஏறிப் போனார் அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை.
தோழர்களிடம் இருந்து (10/06/2018 ) இறப்புச்செய்தி தான் வந்தது. தோழர்கள் சிம்சன் அரச முருகுபாண்டியன் ஆகியோருடன் அறநூற்றிவயலுக்குச் சென்றபோது கண்ணாடிப் பேழையில் படுக்க வைக்கப்பட்டிருந்தது நமசு என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அறநூற்றிவயலுக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்த போது இந்த வெயிலில் ஏன் வந்தீர்கள்? என்று திரும்பத் திரும்பக் கேட்டாரே அவர் தான் நமசு!
தன் நலன், பசி, தூக்கம் எதுவும் பாராது மற்றவர் நலன் பற்றி மட்டுமே சிந்திப்பவர் தான் நமசு! தன்னைச் சுற்றி வாழ்ந்த எளிய மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த உண்மை மனிதர் தோழர் நமசு!