பறக்கும் தட்டில் விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் ஏலியன்கள்
(UFO – unidentified Flying Object & Aliens)
பேரா. சு. இராமசுப்பிரமணியன்
நம் பூமியில் வாழும் மனிதர்களுக்கு எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கின்றன. பூமிக்கு வெளியிலும், நம்மைப்போன்ற மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பது அந்த நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது., அந்த வேற்றுலகவாசிகள் அல்லது விண்ணுலகவாசிகள் அடிக்கடி நம் பூமிக்கும் வந்துபோகிறார்கள் என்றும், அறிவு, அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர்கள் நம்மைவிட சிறந்தவர்கள் என்றும் நம்புகிறார்கள். மாத்திரமல்ல, அவர்கள் நம் பூமியை அழித்துவிடுவார்கள் என்னும் அச்சம்கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கையில், சாமானியர்கள், அறிவியலாளர்கள், அரசுகள் என்றெல்லாம் வேறுபாடு எதுவும் இல்லை.
வெளிக்கோள்களிலிருந்து பூமிக்கு வரும் விண்ணுலகவாசிகள், ஏலியன்கள் (aliens) என்று அழைக்கப்படுகின்றனர். விண்ணில் பயணிப்பதற்கு அவர்கள் பயன்படுத்துவதுதான் ‘பறக்கும் தட்டு’ (flying saucer) பறக்கும் தட்டில், விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு ஏலியன்கள் (aliens) வந்துபோனதைப் பார்த்ததாகப் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். அது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்னும் விவாதம் சாதாரண மக்கள்முதல், அறிவியலாளர்கள் வரையிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1947-இல் வாஷிங்டன்னில் (Washington DC), ரெய்னர் குன்றிற்கு (Mount Rainier) அருகில் சிறிய விமானம் ஒன்றில் பறந்துகொண்டிருந்த கென்னத் ஆர்னால்ட் (Kenneah Arnold) என்னும் தொழில்முனைவர், விண்ணில் விரைந்துபறந்த ஒன்பது விநோதமான பொருட்களைக் கண்டதாகக் கூறியதுதான் ‘பறக்கும் தட்டு’ பற்றிய முதல் பதிவாக உள்ளது.
அந்தப் பறக்கும்தட்டுகள், மணிக்குப் பல ஆயிரம் மைல் வேகத்தில், தவளைப்பாய்ச்சலில் பறந்ததாக அவர் பதிவுசெய்துள்ளார்.
அதன்பிறகு, பறக்கும்தட்டுகளைப் பார்த்ததாகப் பலரும் சொல்ல ஆரம்பித்தனர். அதனை ஆய்ந்தறியும் வகையில், 1948-இல், அமெரிக்க விமானப்படை, ‘குறியீடுத் திட்டம்’ (Project Sign) என்னும் பெயரில் ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தது. அந்த ஆய்வுக்குழுவில் இருந்தவர்களில், பெரும்பாலானவர்கள், அவை சோவியத் ஒன்றியத்தின் நவீனவகை விமானங்கள் என்று கூறினர். என்றாலும், மிகச்சிலர், அவை, விண்ணுலகில் இருந்து வந்தவையாக (extraterrestrial objects) இருக்கக்கூடும் என்றும் கூறினர்.
1949- ‘இல் மனவெறுப்புத்திட்டம்’ (Project Grudge) ஆரம்பிக்கப்பட்டது. 1952-இல், நீண்டகாலம் நிலைத்திருந்த ‘நீலப்புத்தகத் திட்டம்’ (Project Blue Book) நிறுவப்பட்டது. இவை எல்லாமே, பறக்கும் தட்டுகள் மற்றும் விண்ணுலகவாசிகள் பற்றிய புதிர்களை அவிழ்த்துத் தெளிவை உண்டாக்குவதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆகும்..
1952 முதல் 1969 வரையான காலகட்டத்தில், ‘நீலப்புத்தகத் திட்டம்’ 12,000 விண்-நிகழ்வுகளையும், காட்சிகளையும் (events or sightings) ஆய்வுசெய்தது. அவற்றில் பெரும்பாலானவை, வளிமண்டல நிகழ்வுகள் (Atmospheric phenomena), விண்வெளி நிகழ்வுகள் (Astronomical phenomena) மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகள் (Man made phenomena) ஆகியவற்றோடு தொடர்புபடுத்தக்கூடியதாக இருந்தது. 6 விழுக்காடு நிகழ்வுகள் மட்டுமே, காரணம் சொல்லமுடியாதவையாக இருந்தன.
எனவேதான், புரியாத விண்வெளி நிகழ்வுகளை (UAP- Unidentified Aerial Phenomena), பறக்கும் தட்டுடன் (UFO) சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று, மிக் (Mick) என்னும் ‘சதிக்கோட்பாட்டு வல்லுநர்’ (conspiracy theory expert) கூறுகிறார்.
1953-இல் நிறுவப்பட்ட ராபர்ட்சன் குழுவும் (Robertson Panel) அப்படிப்பட்ட கருத்தையே வெளிப்படுத்தியது. ஒளிமிகுந்த கோள்கள் (bright planets), எரிகற்கள் (meteors), ஒளிவெள்ளம் (Aroras), அயனி மேகம் (ion cloud) போன்ற விண்ணியல் நிகழ்வுகளும், விமானங்கள், பறக்கும் பலூன்கள், பறவைகள், தேடல் ஒளி (search light) போன்ற மண்ணியல் நிகழ்வுகளுமே காரணம் என்றனர்.
பொதுவாக அனைத்துக் குழுவினருமே, பறக்கும் தட்டில், வெளிக்கோள்-மனிதர்கள் (aliens) பூமிக்கு வரும் கொள்கையை ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில், பறக்கும் தட்டுகள் பற்றிய முழுமையான ஆவணங்களை வைத்திருக்கும் நாடு கனடா. ஏறத்தாழ 750 விண்ணியல் காட்சிப்பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, கிரீஸ் போன்ற நாடுகளும், பறக்கும்தட்டுகள் தொடர்புடைய சில காட்சிகளை ஆவணப்படுத்தியுள்ளன.
ரஷ்யாவிலும், சீனாவிலும் இராணுவ நடவடிக்கைகளைப்பற்றி அறிந்திராத பொதுமக்கள்தான், அவற்றைப் பறக்கும் தட்டோடு தொடர்புபடுத்திப் பேசுவதாகச் சொல்லப்படுகிறது.
2020 டிசம்பர் 29 அன்று, ஹவாயில் (Oahu, Hawaii) இரவு நேரத்தில் நீலவண்ணத்தில் அடையாளம் காணமுடியாத பொருளொன்று (UFO) பாய்ந்து சென்று கடலில் வீழ்ந்ததைப் பலரும் பார்த்திருக்கின்றனர், அதனை, கேமராக்களில் பதிவும் செய்திருக்கின்றனர்.
பயிர்வட்டமும், பறக்கும் தட்டும்
கோதுமை, பார்லி, மக்காச்சோளம், சோயா போன்ற தானியங்கள் பயிரிடப்பட்டிருக்கும் வயல்களில், வானிலிருந்து பறவைக் கோணத்தில் பார்க்கும் போது, பல்வேறு உருவங்கள் தெரியும் விதத்தில், பல ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சாய்க்கப்பட்டிருப்பதுதான் ‘பயிர் வட்டங்கள்’ (Crop Circles).
பறக்கும் தட்டுகளில் (UFO- Unidentified Flying Object) விண்ணிலிருந்து, மண்ணுக்கு வரும் விண்ணுலகவாசிகள்தான் (aliens) இப்பயிர்வட்டங்களை உருவாக்குவதாகவும், பல்வேறு உருவங்களின் வாயிலாக ஏதோ செய்தியைச் சொல்லிச்செல்வதாகவும் ஒரு கருத்து உள்ளது.
1966-இல் ஆஸ்திரேலியாவின் டுல்லி (Tully) என்னும் இடத்தில், முப்பது அல்லது நாற்பது அடி உயரமுள்ள ‘பறக்கும் தட்டு’ ஒன்று எழும்பி விண்ணில் பறப்பதைப் பார்த்ததாகவும், அது எழும்பிய இடத்தைப் பார்வையிட்ட போது 32 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட ஏறத்தாழ ஒரு வட்ட வடிவில் பயிர்வட்டத்தைக் கண்டதாகவும் ஒரு விவசாயிப் பதிவுசெய்திருக்கிறார். பயிர்கள் வலஞ்சுழியாக சாய்க்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1963-இல், வில்ஷயர் (Wiltshire)-இல் உள்ள ஓர் உருளைக்கிழங்கு வயலில் இனம்தெரியாத விண்பொருளால் (UFO) ஒரு பள்ளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்றும், அருகில் உள்ள கோதுமை வயல்களில், பயிர்கள் சாய்க்கப்பட்டு, பல வட்டங்களும், நீள்வட்டங்களும், சுருள்வடிவங்களும் உருவாகியிருந்ததாக, சர் பேட்ரிக் மூர் (Sir Patric Moore) என்கிற வானிலை ஆய்வு ஆர்வலர் பதிவு செய்திருக்கிறார்.
பயிர்வட்டங்கள் மட்டுமல்ல, ஈஸ்டர் தீவில் பல டன் எடைகொண்ட கற்சிலைகளை (Easter Island Heads) நகர்த்தியது, இங்கிலாந்து சாலிஸ்பெரி சமவெளியில் பல டன் எடைகொண்ட கற்பாளங்களை நகர்த்தி, நேர்நிறுத்திக் கல்வட்டத்தை (Stone-henge) உருவாக்கியது, பெரு நாட்டின் நாழ்கா சமவெளியில் பெரியபெரிய தரைச்சித்திரங்களை (Nazca Lines in Peru) உருவாக்கியது போன்ற பிரமாண்டங்களை, பறக்கும்தட்டில், பூமிக்கு வரும் விண்ணுலகவாசிகள் (Aliens) உருவாக்கினார்கள் என்று சொல்வது வழமையாகிவிட்டது.
பறக்கும்தட்டு மற்றும் விண்ணுலகவாசிகள் பற்றிய சில அறிவியல் விளக்கங்கள்:
நம்முடைய வெறும் கண்கள் நம்மை ஏமாற்றிவிடும் வாய்ப்பு அதிகம். பிரகாசமான ஒளி, ஒளிமிகுந்த கோள் போன்றவற்றால் நாம் ஏமாறக்கூடும். சான்றாக வெள்ளிக்கோள் (Venus), நகர்வது போன்று தோற்றம் காட்டுவதுண்டு.
மலைகள், மேகங்கள் போன்று பின்புலம் இல்லாமையால், விண்ணில் நகரும் பொருட்களின் வேகத்தைக் கணிப்பதும் தவறாகவே இருக்கும்.
கண்ணாடி சன்னல்களிலிருந்தும், கண்-கண்ணாடிகளிலிருந்தும் (eye-glasses) எதிரொளிக்கும் ஒளி, சிக்கலான ஒளி அமைப்புகளை (complex optical systems) ஏற்படுத்திவிடுவதுண்டு. எடுத்துக்காட்டாக, கேமரா ஒளிவில்லை (camara lens) ‘புள்ளி ஒளிமூலங்களிலிருந்து’ (point sources of light) வரும் ஒளியைப் பிறைவடிவில் (saucer shaped) மாற்றிவிடுவதுண்டு. அதுபோன்ற ஒளி மாயைகள் (Optical illutions), பெரும்பாலான புரியாத, புதிரான விண்ணியல் நிகழ்வுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
ரேடார் பதிவுகள் ஓரளவிற்கு நம்பத்தகுந்தவை என்றாலும், மனிதர்கள் உருவாக்கும் செயற்கைப்பொருட்களுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் வேறுபாட்டை அவற்றால் பிரித்தறியமுடிவதில்லை.
உறைவுறக்கம்’ (sleep paralysis):
பறக்கும் தட்டுகள், அதில் வரும் விண்ணுலகவாசிகள் போன்றவற்றைப் பார்த்ததான பதிவுகளோடு, அவர்கள் தங்களை சிறைப்பிடித்து விட்டதாகவும் சிலர் கூறுவதுண்டு. அதில் உண்மை இல்லை என்றும், அதற்கான விளக்கமாக ‘உறைவுறக்கம்’ (sleep paralysis) என்பதனைக் கூறலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
‘உறைவுறக்கம்’ (sleep paralysis) என்பது ஒருசிலருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் தொடர்புடைய நிகழ்வு. ஒருசில வினாடிகள் அல்லது ஒருசில நிமிடங்கள் என்னும் அளவிற்கு மிகக்குறுகிய காலத்திற்கு, ஒருவருடைய உடல், தலை, கை கால்கள் நகராமலும், பேசமுடியாமலும் உறைந்துவிடுவதுண்டு… அப்படிப்பட்டவர்களுக்கு, உறக்கத்தில் ஆழ்வதுபோலவோ அல்லது, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பதுபோலவோ தோன்றும். அந்தக் குறுகிய காலத்தில், அவர் எங்கிருந்தார் என்பதே அவருக்குத் தெரியாமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது.
‘உறைவுறக்கம்’ என்னும் நிலை, ஒருவருடைய வாழ்நாளில் எப்போதுவேண்டுமானாலும் நிகழலாம். அதற்கு வயது வரம்பெல்லாம் இல்லை.
இந்த உறைவுறக்கம் ஏற்படும் சிலருக்கு ‘மாயத்தோற்றம்’ (hallucination) என்னும் நோய்க்குறியீடும் சேர்ந்துகொள்கிறது. அதன் விளைவாக, அந்த நபர் அதுவரையிலும் பார்த்தறியாத ஏதோ ஒன்றைப் பார்த்ததாக அல்லது கேட்டதாகக் கூறுவதுண்டு. அதற்கும் மேலாகத் தனக்கு அருகில் வேறொரு நபர் இருந்ததாகவும், தன்னைத் தொட்டதாகவும்கூட சொல்வதுண்டு. விண்ணுலகவாசிகளைக் கண்டதாகச் சொல்வதும், தங்களைச் சிறைப்படுத்திவிட்டார்கள் என்று சொல்வதும்கூட இப்படித்தான் என்று அறிவியலாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.
பறக்கும் தட்டு பற்றிய முதல் திரைப்படம்:
உலகம் எங்கிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த பறக்கும் தட்டில் பூமிக்கு வரும் ஏலியன்கள் பற்றி இரகசியமாக ஆய்வு செய்வதற்காக, அன்றைய சோவியத் ஒன்றியம் தனது ஒற்றர்களை, அலாஸ்காவின், ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அனுப்பியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது. அதனை அறிந்து, முறியடிக்கும் வகையில், அப்பகுதியில் பிறந்து வளர்ந்த பெரும் பணக்காரரான மைக் டிரெண்ட் (Mike Trent) என்பவரை அமெரிக்க உளவுத்துறைப் பணியமர்த்துகிறது. இப்படியான திரைக்கதையுடன், 1956-இல் தயாரிக்கப்பட்ட ‘பறக்கும் தட்டு’ பற்றிய முதல் ‘அறிவியல்-புனைவு’ (Science-fiction) திரைப்படம் ‘The Flying Saucer’ நகர்கிறது.
அதற்குப் பிறகு, ஏறத்தாழ 50 திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், பறக்கும்தட்டு மற்றும் ‘ஏலியன்களை’ மையமாக வைத்து வெளிவந்துள்ளன. 2021-இல்கூட ‘Space Jam: A New Legacy’ என்னும் திரைப்படம் வெளிவந்துள்ளது.
‘பெண்டகன்’ (Pentagon) அறிக்கை:
அமெரிக்க இராணுவக்கட்டுப்பாட்டு மையம் ‘பெண்டகன்’ (Pentagon), பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பறக்கும் தட்டு’ மற்றும் புரியாத புதிரான விண்ணியல் நிகழ்வுகள் (UFO & UAP) பற்றிய ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையினர் கண்டதாகப் பதிவுசெய்த 144 விண்வெளி நிகழ்வுகள் அனைத்திற்கும் விண்ணுலகவாசிகள் காரணம் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. 2004 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 144 நிகழ்வுகளில், ஒரே ஒரு நிகழ்வு மட்டும் ‘மிகவும் இரகசியம்’ (highly confidential) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும்கூட, மிகப்பெரிய காற்றுநீக்கப்பட்ட பலூன் என்பதாகும் (deflated balloon).
பறக்கும்தட்டு- தொடரும் புதிர்கள்:
இங்கிலாந்தைச் சேர்ந்த காலின் ஆண்ட்ரூஸ் (Colin Andrews). ‘வட்டச்சான்று’ (‘Circular Evidence’) உள்ளிட்ட, பயிர்வட்டம் பற்றிய பல நூல்களை எழுதியவர், இவர் மின் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். பயிர்வட்டத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, அப்பணியை உதறிவிட்டு, பயிர்வட்ட ஆய்வில் 37 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
பயிர்வட்டங்களுக்கும், UFO க்களுக்கும் தொடர்பு இருப்பதை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகளும் நம்புகின்றன. ஆனாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அதனை மக்களிடம் இருந்து மறைக்க அவை முயற்சிக்கின்றன என்கிறார், காலின் ஆண்ட்ருஸ்.
என்னதான் பெண்டகன் அறிக்கை முற்றுப்புள்ளி வைத்தாலும், பறக்கும் தட்டு மற்றும் பூமிக்கு உலாவரும் வேற்றுலகவாசிகள் பற்றிய செய்திகள், உரையாடல்கள், சந்தேகங்கள், ஆய்வுகள், கதைகள், கற்பனைகள் தொடர்கதையாகவே நீடிக்கிறது. அது சுவாரசியமும்கூட.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று, ‘உலகப் பறக்கும்தட்டு தினம்’ (World UFO Day on 2nd July) கொண்டாடப்படுகிறது.