கொதிநிலையில் லிபியா – மீண்டும் சூழும் போர்மேகங்கள்
இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலைக் குறிக்க “இடியப்பச் சிக்கல்“ என்ற சொற்றொடரைத் தமிழில் பாவிப்பது வழக்கம். மேற்கு ஆபிரிக்க நாடான லிபியாவில் தற்போது எழுந்துள்ள சிக்கலைக் குறிக்க இந்தச் சொற்றொடரே மிகவும் பொருத்தமானது.
உள்நாட்டு யுத்தம்
2011 இன் பின்னான – கேணல் கடாபி மேற்குலகின் படைத்துறை உதவியுடன் அகற்றப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதன் பின்னான – லிபியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து வருகின்றது. நாட்டின் தலைநகரான திரிப்பொலியில் பிரதமர் பாயஸ் அல்-சராஜ் தலைமையிலான ஐ.நா. ஆதரவு பெற்ற ஒரு அரசாங்கமும், தெற்கு நகரான ரோபுறுக்கில் பீல்ட் மார்சல் கலீபா ஹாப்ரர் தலைமையிலான போட்டி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றன. திரிப்பொலியில் உள்ள தேசிய உடன்படிக்கை அரசாங்கம் தலைநகர் உள்ளிட்ட ஒருசில பகுதிகளையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. மறுபக்கம் ஹாப்ரர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவம் பெங்காசி உட்பட நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தலைநகர் திரிப்பொலியைக் கைப்பற்றுவதற்காக லிபிய தேசிய இராணுவம் கடந்த ஆண்டில் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, லிபிய உள்நாட்டு யுத்தம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
லிபியா மீதான யுத்தத்தை மேற்கொண்ட நேட்டோ – யேர்மன் தவிர்ந்த – கேணல் கடாபியைக் கொன்றொழித்து அங்கிருந்த எண்ணை வளங்களைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமது பணிகளை (?) முடித்துக் கொண்டது. கேணல் கடாபிக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களும் தத்தம் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களுக்குத் தாமே உரிமை கோரியது மட்டுமன்றி, ஒரு பொது உடன்பாட்டுக்கும் வருவதற்கு மறுத்தன.இந்த உள்நாட்டு யுத்தத்தில் லிபியாவில் கடாபிக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்த குழுக்கள் மாத்திரமன்றி அயல் நாடுகளில் இருந்த ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டன. இத்தகைய குழுக்களுக்கு அயல்நாடுகளான எகிப்து, ஜக்கிய அரபு எமிரேட்ஸ், ரியூனீசியா, அல்ஜீரியா போன்ற நாடுகளும் நேட்டோ நாடுகளான பிரான்ஸ், முன்னாள் குடியேற்ற நாடான இத்தாலி போன்றவையும் ஆயுத, தளபாட உதவிகளை வழங்கின.
சிரியா
மத்திய கிழக்கில் உள்நாட்டு யுத்தமொன்றை எதிர்கொண்ட சிரியாவில், அரசின் அழைப்பையேற்றுத் தனது படைகளை அனுப்பிய நட்பு நாடான ரஸ்யா, ஏறத்தாழ உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்து இருக்கிறது. மறுபுறம், சிரியாவின் எல்லையில் உள்ள நாடான துருக்கி தனது நாட்டில் நீண்டகாலமாக உள்ள குர்திஸ் தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தினை ஒடுக்கும் நோக்கோடு தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி வைத்துள்ளது. மேற்குலகின் வேண்டப்படாத நாடுகளின் பட்டியலில் உள்ள ரஸ்யாவும் துருக்கியும் சிரியாவில் இணைந்து செயற்படுவதுவும் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தணியக் காரணம் எனலாம். ரஸ்யாவின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி போர்ப் பதற்றம் உருவாகக் காரணமாக இருந்த துருக்கி, பின்னர் ரஸ்யாவின் நட்பு வளையத்திற்குள் வந்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எண்ணை வளம்
லிபிய தேசிய இராணுவத்தை வழிநடத்தும் ஹாப்ரர் முன்னர் கடாபியின் நண்பராக இருந்தவர். பின்னாளில் அவரோடு முரண்பட்ட அவர் அமெரிக்காவிற்குத் தப்பியோடி, கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டதன் பின்னரே நாடு திரும்பியவர். இன்று லிபியாவில் பலம் மிக்க ஒரு இராணுவத்தைக் கொண்டுள்ள அவர் எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் ஆதரவு பெற்றவர். நேட்டோவின் பலம் மிக்க நாடுகளுள் ஒன்றான பிரான்ஸ் இவரையே ஆதரித்து நிற்கின்றது. இவரது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் உள்ள பெற்றோலிய வளங்களை பிரான்ஸ் நிறுவனமான `டோட்டல்` கைவசம் வைத்துள்ளது.
கடந்த வருடம் ஹாப்ரரின் ஆதரவு நிலைப்பாட்டை ரஸ்யா எடுத்தது. அத்தோடு, 1,500 வரையான தனது இராணுவ ஆலோசகர்களையும் அவருக்கு ஆதரவாகப் பணிக்கு அமர்த்தியுள்ளது. அது மாத்திரமன்றி போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளபாடங்களையும் ரஸ்யா அவருக்கு வழங்கியுள்ளது.
இத்தகைய பின்னணியில் தலைநகர் திரிப்பொலியைக் கைப்பற்றி முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹாப்ரர் முயற்சி செய்தார்.திரிப்பொலியில் உள்ள அரசாங்கத்திற்கு ஆதரவாக இத்தாலி உள்ளிட்ட நாடுகள் செயற்பட்டு வருகின்றன. இத்தாலிய பெற்றோலிய நிறுவனமான `ஈஎன்ஐ` இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளங்களைக் கைவசம் வைத்துள்ளது. மறுபுறம், திரிப்பொலி அரசாங்கத்திற்கு ஆதரவாக துருக்கி கடந்த வருடத்தில் தனது படைகளை அனுப்பி வைத்தது. இதனால் தைரியம் பெற்ற திரிப்பொலி அரசாங்கப் படைகள் திரிப்பொலி மீதான முற்றுகையில் இருந்து விடுபட்டது மாத்திரமன்றி துறைமுக நகரான சிர்ரேயைக் கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
விமானத் தாக்குதல்
யூலை 5 ஆம் திகதி நடைபெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் லிபியத் தேசிய இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் கைப்பற்றப்பட்ட அல்-வாற்றியா விமானத் தளம் இலக்கானது. மிகவும் துல்லியமாக நடாத்தப்பட்ட 9 தாக்குதல்களில் விமானப் படைத்தளம் பாரிய சேதங்களுக்கு இலக்காகியது. இத் தாக்குதலில் துருக்கியின் இராணுவ ஆலோசகர்கள் ஒருசிலர் காயங்களுக்கு இலக்காகினர். 3 துருக்கிய ராடர்களும் சேதமாகின.
தாக்குதல்களை நடாத்தியது யார் என இதுவரை தெரியாத போதிலும் தாக்குதலை நடாத்திய விமானங்கள் பிரான்ஸ் தயாரிப்பு ரஃபேல் விமானங்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே இத்தகைய விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ‘லிபியாவின் எண்ணை வளங்கள் மீது கண் வைத்துள்ள துருக்கிக்கு எதிராக இதுபோன்ற தூக்குதல்கள் தொடரும்|| என லிபிய தேசிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக துறைமுக நகரான சிற்ரே மற்றும் லிபியாவின் மிகப் பாரிய விமானத் தளமான அல்-யுப்ரா ஆகியவற்றின் மீது தாக்குதல் நடாத்தப்படும் என துருக்கி அறிவித்துள்ளது.
எகிப்தின் புதிய சட்டம்
இந்நிலையில், லிபிய தேசிய இராணுவத்தின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அயல்நாடான எகிப்து நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ~எகிப்தின் அயல்நாடுகளில் பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச்செயல்கள் புரியும் ஆயுதக் குழுக்கள் என்பவற்றை ஒடுக்குவதற்கு படைப்பிரயோகம் மேற்கொள்ள அனுமதி வழங்குகிறது.| இதன் அர்த்தம் அடுத்துவரும் நாட்களில் எகிப்து நாட்டுப் படைகள் லிபியாவினுள் – உத்தியோகபூர்வமாகச் – செல்லப் போகின்றன என்பதே. இதன் விளைவாக துருக்கியும் எகிப்தும் – நேரடியாக இல்லாவிட்டாலும் – லிபிய மண்ணில் ஒரு ஆயுத மோதலில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.
தலையிடும் உரிமை
துருக்கி தலைமையிலான ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நாடு லிபியா. இதனால் லிபியாவில் தலையிடும் உரிமை தனக்கு உள்ளது என்கிறது துருக்கி. லிபியா எனது கொல்லைப் புறத்தில் உள்ளது. அதனால், அங்கே நடக்கும் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பாத்தியதை தனக்கு உள்ளது என்கிறது எகிப்து. 1911 முதல் 1943 வரை தனது குடியேற்ற நாடாக இருந்த லிபியாவில் தனக்கு உரிமை இருக்கிறது என்கிறது இத்தாலி. லிபியாவின் தெற்கு எல்லையில் உள்ள நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகள் பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடுகள். தற்போது மாலியில் தீவிரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரான்ஸ் அதன் ஒரு அங்கமாக எல்லையில் உள்ள தனது முன்னாள் குடியேற்ற நாடுகளையும் கண்காணிப்பில் வைத்திருக்க விரும்புகின்றது. எனவே, தீவிரவாதிகள் லிபியாவில் இருந்து ஊடுருவுவதைத் தடுக்கவும், ஆயுதக் கடத்தல்களை முறியடிக்கவும் லிபியாவில் ஒரு கண் வைத்திருக்க விரும்புகின்றது. எனவே, தவிர்க்க முடியாமல் ஹாப்ரரின் லிபியத் தேசிய இராணுவத்தோடு உறவுகளைப் பேணியே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.
பனிப்போர்க் காலகட்டத்தில் உலகின் பல பாகங்களிலும் வல்லரசு நாடுகள் மறைமுக யுத்தங்களில் ஈடுபட்டன. தற்போது, பனிப்போர்க் காலகட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும் கூட, மறைமுக யுத்தங்கள் முடிவிற்கு வரவில்லை என்பதற்கு லிபியாவும் ஒரு எடுத்துக்காட்டு. அது மாத்திரமன்றி, நலன்கள் என்று வரும்போது எந்தவொரு நாடும் நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பதையும் பார்க்க முடிகின்றது.
நேட்டோ அமைப்பில் நட்பு நாடுகளாக உள்ள பிரான்சும் இத்தாலியும் லிபியாவில் ஒன்றுக்கு ஒன்று எதிரான தரப்பை ஆதரித்து நிற்கின்றன. அதேசமயம், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஒற்றுமையாகச் செயற்படும் ரஸ்யாவும், துருக்கியும் ஒன்றுக்கு ஒன்று எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இந்த முரண்நகையை எவ்வாறு புரிந்து கொள்வது?
தற்போது எழுந்துள்ள கேள்வி லிபியாவில் முழு அளவிலான யுத்தம் வெடிக்குமா என்பதே? உலகம் முழுவதும் கொரோனா பீதியில் ஆழ்ந்து இருக்கும் வேளையில் இந்தக் கேள்வி மானுடத்திற்கு விரோதமானதே. ஆனாலும், இந்தக் கேள்வியை எழுப்பியே ஆகவேண்டி இருக்கின்றது.
உடையுமா நேட்டோ?
அத்தகைய முழு அளவிலான யுத்தம் ஒன்று வெடிக்குமாயின் அதன் பரிமாணம் எத்தகையதாக இருக்கும்? நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரான்சும் இத்தாலியும் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்குமா? அல்லது மோதலில் தங்கள் படைகளையும் நேரடியாக ஈடுபடுத்துமா? இதன் விளைவாக நேட்டோ அமைப்பில் விரிசல்கள் உருவாகுமா? இதுபோன்ற விடைதெரியாத பல கேள்விகள் எழுகின்றன.நேட்டோ ஆரம்பித்து வைத்த லிபிய யுத்தம் நேட்டோவின் சிதைவுக்கு வித்திடுமாக இருந்தால் “வினை விதைத்தவன் வினை அறுப்பான்“ என்ற சொலவடையை நிரூபிப்பது போன்று அமையும்.
லிபியக் களத்தில் ரஸ்யா நேரடியாகத் தலையிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் பதிலடி எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது. நவம்பரில் அரசுத் தலைவர் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்கா கொரரோனாத் தீநுண்மியின் பாதிப்பினால் துவண்டுபோய்க் கிடக்கின்றது. இந்த நிலையில் லிபியா பற்றிச் சிந்திக்கும் அவகாசம் டொனால்ட் ட்ரம்பிற்கு இருக்க முடியாது என்பதே யதார்த்தம். எனவே, அமெரிக்காவின் கருத்தையோ, தீர்க்கமான செயற்பாட்டையோ பார்ப்பதற்குக் குறைந்தது அடுத்த வருடம் யனவரி 20 ஆம் திகதிவரை காத்திருக்க வேண்டும். அதுவரை லிபிய யுத்தகளம் காத்திருக்குமா என்பது கேள்விக்குரியதே.
(26.07.2020 அன்று வீரகேசரி இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுவெளியீடு)