ஞானி புகழஞ்சலி – 2
அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர்
மு.சிவகுருநாதன்
மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளருமான கோவை ஞானி என்கிற கி.பழனிச்சாமி நேற்று (ஜூலை 22, 2020) காலமான செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தைக் கொண்டு சேர்க்கிறது. இவரது இணையர் திருமதி இந்திராணி செப்டம்பர் 09, 2012 இல் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.
சில முறை அவரைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கைகூடியிருக்கிறது. 1990 களில் ‘கனவு’ சுப்ரபாரதிமணியன் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கோவையில் முதன்முதலாகச் சந்தித்தேன். இறுதியாக 2009 மே 24 இல் தஞ்சையில் ‘தமிழ்வெளி’ அமைப்பு ஏற்பாடு செய்த ‘கீழை மார்க்சியம்: வரலாறு-அரசியல்- மெய்யியல்’ எனும் எஸ்.என்.நாகராசன் நூலுக்கான திறனாய்வு நிகழ்வில் பங்குபெற்றதையும் மறக்க இயலவில்லை. பார்வை இழப்பிற்கு உள்ளான நிலையில் கரங்களைப் பற்றிக் கொண்டு அன்புடன் உரையாடிய ஞானியை இனிக் காணப் போவதில்லை என்பது பேரிடியாக வந்து தாக்குகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியம் படித்து 30 ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணி செய்த ஞானி, அப்பணியில் முடங்கி விடாமல் வாசிப்பு, கவிதை, விமர்சனம், சிற்றிதழ்கள், மார்க்சியம், தத்துவம், தமிழ்த் தேசியம் என தொடர்ந்து இயங்கிவந்த ஆளுமையாக நம்முன் நின்றவர். வாசிப்பு, விவாதங்கள் என தமது சிந்தனையை அகலிக்கச் செய்து, அதை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவர். க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, அ.மார்க்ஸ் என மார்க்சிய அறிஞர்கள் வரிசையில் இடம்பெற்றவர். புதிய தலைமுறை (1968-69), வானம்பாடி (1970-73) ஆகிய இதழ்களில் பங்கு பெற்றிருந்தார்.
மார்க்சியம் சோவியத் ரஷ்யா, சீனாவைத் தாண்டி இந்தியா, தமிழகத்திலும் புதிய பரிமாணங்களைப் பெற்றிருப்பதால் 1979 இல் ‘பரிமாணம்’ எனும் மார்க்சியச் சிற்றிதழைத் தொடங்குகிறார். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் மார்க்சியத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும் புதிய மார்க்சிய சிந்தனை வெளிச்சங்கள் கிடைத்துள்ளதை ‘நிகழ்’ இதழ் (1988) விவாதப் பொருளாக்கியது. 32 இதழ்கள் வந்த ‘நிகழ்’ தமிழ்ச் சூழலில் தனது தடத்தை ஆழப் பதித்தது. பரவலான கவனிப்பைப் பெற்ற ‘நிறப்பிரிகை’ இதழைப்போலவே ‘நிகழ்’ இதழின் தேவை தமிழுக்கு அவசியமானதாக இருந்தது. டங்கல் திட்டம், ‘காட்’ ஒப்பந்தம் குறித்த விரிவான விவாதங்களை இவ்விதழ் முன்னெடுத்தது. இன்றைய பாதிப்புகளை அன்றே அக்கட்டுரைகள் தெளிவாக எடுத்துக்காட்டின.
1990 களில் தமிழ் வாழ்வும் வரலாறும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இதனை ஆய்வு செய்யவும் தீர்வுகளைக் கண்டறியவும் ‘தமிழ் நேயம்’ இதழ் (1998) தொடங்கப்பட்டதாக அவரே சொல்கிறார். 67 ‘தமிழ் நேயம்’ இதழ்கள் வெளிவந்தன. இதன் மூலம் மார்க்சியத்துடன் இணைந்த தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்தெடுக்க முயன்றார்.
தனது மார்க்சிய ஆசான்களாக மார்க்சிய, பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரையையும் கீழை மார்க்சியம் எஸ்.என்.நாகராஜனையும் குறிப்பிடுவார். இருப்பினும் எஸ்.என்.நாகராஜனின் கீழை மார்க்சியமான ‘வைணவ மார்க்சியத்தை’ விதந்தோதி எடுத்துச் சென்றார். இதன் காரணமாக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும் பொறுப்பாகவும் இனிமையாகவும் தனது தரப்பு விளக்கங்களை சளைக்காமல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
“மேலை மார்க்சியம் என்றும், கீழை மார்க்சியம் என்றும் நாகராசன் பேசுவதைப் பலர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இரண்டு வகை மார்க்சியமா என்கின்றனர். மேலை மார்க்சியம், உற்பத்தி சக்திகளுக்கும் கீழை மார்க்சியம், உற்பத்தி உறவுகளுக்கும் அழுத்தம் தருகிறது. மேலை மார்க்சியம் பகை முரண்பாட்டிற்கும் கீழை மார்க்சியம், நட்பு முரண்பாட்டிற்கும் அழுத்தம் தருகிறது. இப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன். மேலை மார்க்சியம் உற்பத்தி சக்திகளுக்கு அழுத்தம் தருகிறது என்ற முறையில்தான் நவீன அறிவியல் தொழில்நுட்பம் பற்றியும், மார்க்சின் மெய்காண் முறையில் உள்ள குறைகள் பற்றியும் மேற்கத்திய சமூக வரலாறு பற்றியும் நாகராசன் எடுத்துரைக்கிறார்”, (நிகழ், கிழக்கு வெல்லும் – தொடர் விவாதக் குறிப்புகள்)
மார்க்சியத்திற்குள் ஆன்மீகத்தைத் தேடினார். “எனக்குள் இருக்கும் கடவுளை வெளியேற்றத் தொடர்ந்து ஆய்வுகள் செய்தேன். இறுதியாகக் கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம் மட்டுமே. இது கருத்தாக்கம் மட்டுமல்லாமல் ஓர் அழகிய கருத்தாக்கம். சற்று போதை தரும் கருத்தாக்கம்”, (தி இந்து நேர்காணல்) என்று குறிப்பிடும் ஞானி ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, ‘நானும் கடவுளும் நாற்பதாண்டுகளும்’. என்கிற நூல்களைப் படைக்கிறார். கல்லிகை (1984,85), தொலைவிலிருந்து (1989), கல்லும் முள்ளும் கவிதைகளும் (2012) போன்ற இவரது கவிதைத் தொகுதிகள் அந்நியமாதலையும், ஆன்மீகத் தேடலையும் எடுத்துக்காட்டுவன. அறிவியல், ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை ‘நிகழில்’ வெளியிட்டார். அதன் தொகுப்பே ‘அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்’ என்று வெளியானது. (காவ்யா வெளியீடு) இவரது ஆன்மீகத் தேடலே தமிழ்த் தேசியத்திற்குள் கொண்டு செலுத்தியிருக்க வேண்டும்.
இதே கண்ணோட்டத்துடன்தான் தமிழ்ப் பக்தி இயக்கங்களை அணுகுகிறார். “தேவாரக் காலச் சூழலில் கோயில்கள், சிற்பங்கள், இறைவன் பற்றிய கதைகள், திருவிழாக்கள், வழிபாடுகள், இறைவனைப் பற்றிய இசைப் பாடல்கள் முதலியவை பெருகிய நிலையையும் சேர்த்துப் பார்த்தால் – இவற்றால் மனிதர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் பக்தி இலக்கியத்தின் இயக்கம் புலப்படும். ஆன்மாவற்ற உலகுக்கு ஆன்மாவாகவும் உயிரற்ற உலகின் உயிர்ப்பாகவும் வேதனைமிக்க உலகின் அழுகையாகவும் வேதனை தரும் சூழல்களுக்கு எதிர்நிலையாகவும் அவலமிக்க உலக வேதனைகளுக்கிடையில் அமுதமாகவும் நஞ்சாகவும் – அதாவது அபினாகவும் – பக்தி இருந்ததைப் பக்தி இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன”, பக். 33, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்)
தமிழ்நேயம் இதழில் முன்னுரையாகவும் ‘அகமும் புறமும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவந்தார். இதழ் நின்ற பிறகு அதை ‘புதுப்புனல்’ இலக்கிய மாத இதழில் தொடர்ந்தார்.
சென்னை சமஸ்கிருத சேவா சமிதியில் ஜெயகாந்தன் தெரிவித்த கருத்திற்கு கோவையில் நடந்த கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை ஒட்டி ஞானி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
“மார்க்சியத்திலும் இடதுசாரி, வலதுசாரிப் போக்குகள் உண்டு. பெரியாரியமும் இதற்கு விதி விலக்கு இல்லை. பார்ப்பனீயத்தின் உள்ளும் இடதுசாரி, வலதுசாரி போக்குகள் உண்டு. ஆதிக்கத்தோடு, அரசோடு, சாதியோடு, உடைமையோடு ஒத்துச் செல்வது வலது சாரித்தனம்; எதிர்ப்பது இடதுசாரிப் போக்கு. முதலாளியத்தை ஒப்புக் கொள்கிற மார்க்சியமும், பெரியாரியமும் வலதுசாரிப் போக்கு. சாதி மதத்தை பிறகொழிக்கலாம். அதன் பிறகு சமத்துவத்தையும் சமதர்மத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்பது வலதுசாரிப் போக்கு. அதிகாரம், தனியுடைமை ஆகியவற்றை எதிர்க்காமல் சாதி, மதம், பார்ப்பனீயம் ஆகியவற்றை ஒழிக்கலாம் என்பது வலதுசாரிப் போக்கு. இடதுசாரிப் பார்ப்பனர்; ஜெயகாந்தனும் பாரதி வழியே இடதுசாரியினர்”. (தமிழ்நேயம் 23)
“தொல்காப்பியர், வள்ளுவர் என்று ஓயாமல் பேசுவதில் நமக்குள் போலித்தனமான நிறைவு காண்கிறோம். எதிர்காலத்துக்கும், இளைஞர்களுக்கும், அடித்தள மக்களுக்கும் எதையும் விட்டுக் கொடுக்க மறுக்கிறோம். இவைப் பற்றியெல்லாம் தமிழ் நேயத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எழுதி எழுதி நான் சலித்து போய்விட்டேன். எழுதுவதுகூட ஒருவகையில் நம் நிகழ்காலத்தைப் பதிவு செய்வது என்பதற்கு மேல் எதுவும் இல்லை”, 20/11/2003, தமிழ் நேயம் 17 இல் சலிப்புடன் பதிவு செய்கிறார்.
கறாரான மார்க்சிய நிலைப்பாட்டை எடுக்காமல் இலக்கியப் பிரதிகளை இயல்பாக அணுகும் விமர்சனத்தை மேற்கொண்டார். பொன்னீலன், அருந்ததி ராய் குறித்த பதிவுகள் நமக்கு இதை எடுத்துக்காட்டும். அருந்ததி ராயின் நாவல் குறித்த கட்டுரைத் தொகுப்பு ஒன்றை (டிச.1998) வெளியிட்டார்.
பின்நவீனத்துவத்தை கட்சி மார்க்சியர்கள் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது, அவ்வாறு நிராகரிக்க இயலாது; அதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வதற்கு உண்டு என்றார்.
மார்க்சியம், பெரியாரியம், லெனினியம், மாவோயிசம், அம்பேத்கரியம், தமிழ்த் தேசியம், வைணவம், தமிழ் மரபு, சித்தர் மரபு என எல்லாவற்றிலிருந்தும் உடன்பாடான கூறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். பகை முரண்களை மறந்து நட்பு முரண்களைக் கொண்டாடும் மனப்போக்குடையவராக இருந்தார். மார்க்சியம், தமிழ்த் தேசியம் என எவற்றையும் மானுட அன்பின் வழிநின்று அணுகினார்.
தனது தோழர் எஸ்.என்.நாகராசனின் கீழை மார்க்சியத்தைப் போற்றியது போன்று அறிவர் குணா (பெங்களூர் குணா) போன்றவர்களிடமிருந்தும் மார்க்சியத்தையும் அவை சார்ந்து அவர் கட்டமைத்த தமிழ்த் தேசியத்தை வளப்படுத்த முடியும் என்று நம்பினார். அவரது எழுத்துகள், இதழ் பணிகள் ஆகியன இதைத்தான் உணர்த்துகின்றன. இதில் அவர் பெற்ற வெற்றி தோல்வி என்பதைவிட தமிழ்ச் சமூகத்திற்கு அவரளித்த பங்களிப்புகள் ஈடிணையற்றவை. அவற்றில் கொள்வனக் கொண்டும், தள்ளுவனத் தள்ளியும் தமிழ்ச் சமூகம் தன்னை அடுத்தகட்ட நகர்விற்கு தயாராவதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.