நான் ஏன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கிறேன்?
– கொபாட்காந்தி (Kobad Ghandi)
தமிழில்: பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்
74 வயதாகும் கொபாட் காந்தி, “முறிந்த சுதந்திரம்; சிறை நினைவுகள்” (Fractured Freedom; A Prison Memoir) என்னும் நூலின் ஆசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்.
90 ஆண்டுகளுக்கு முன்பு, பார்சி இனத்தைச்சேர்ந்த, வசதிபடைத்த திருமதி கேமா (Madam Cama) நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டமைக்காகக் கைதுசெய்யப்பட்டார். இப்போது, இந்தியாவில் ஆகச்சிறுபான்மையான அதே பார்சி இனத்தைச்சேர்ந்த பொருளாதார வசதிபடைத்த கொபாட் காந்தி,, இந்தியாவின் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்களை, அவர்களது உழைப்பைச்சுரண்டிப் பயன்படுத்தி, அவர்களை அமுக்கிக்கொண்டிருப்பவர்களிடம் இருந்து, அவர்களே விடுதலை பெறும் வகையில் பணிசெய்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
2009 செப்டம்பரில் கொபாட் காந்தி, டில்லியில் (Delhi’s Bhikaji Cama Place) கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகப் பாடுபட்டதும், அதன்பொருட்டு தனது வாழ்நாளை செலவு செய்ததும், அவரது சிறைப்படுத்தலுக்கான உண்மை காரணங்கள். என்றாலும், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் (Communist Party of India Maoist) அமைப்பின் உயர் கருத்தாளர் (Top ideologist) என்னும் காரணத்தைச் சொல்லியே அவரைக் கைது செய்தார்கள்.
கொபாட் காந்தி, டூன் பள்ளியில் (Doon School ) படித்தவர். இலண்டனில் சார்ட்டர்ட் அக்கௌண்டன்சி (Chartered Accountancy) படித்தவர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தி, 10 ஆண்டுகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அவரை அடைத்துவைத்தார்கள். அந்த காலகட்டங்களில் அவருக்கு ஏற்பட்ட சிறை அனுபவங்களைத்தான், “முறிந்த விடுதலை; சிறை நினைவுகள்” என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார். 2019 அக்டோபரில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
2021 மார்ச் 16-இல் ரோலி புக்ஸ் (Roli Books) என்னும் பதிப்பகம், கொபாட் காந்தியின் சிறை நினைவுகளை ‘முறிந்த சுதந்திரம்’ (Fractured Freedom) என்னும் தலைப்பில் வெளியிட்டது.
ரவுடிகள், பாலியல் வல்லுறவாளர்கள், ஊழல் தொழில்முனைவோர், அரசியல் வன்முறையாளர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சிறையில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. அவர்களில் இருவரது பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. ஒருவர் சுதீந்திர குல்கர்னி (Sudheendra Kulkarni). அவர் வாக்குக்குப் பணம்கொடுத்தார் என்னும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர். மற்றவர் அஃப்சல் குரு (Afsal Guru). 2001-இல் நாடாளுமன்ற வளாகத்தைத் தாக்கிய வகையில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் அஃப்சல் குரு தூக்கிலடப்பட்டார்.
1960 களின் பிற்பகுதியில், இலண்டன் நகரில் நிறவெறிக்கு எதிராகப் போராடும் குழுக்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டபோதுதான் மார்க்சியம் தன்னை ஈர்த்ததாகக் கொபாட் காந்தி, பதிவுசெய்கிறார். 1972-இல் அவர் மும்பை வந்தபோது அவரது முற்போக்கு அரசியல் (radical politics) கோட்பாடுகளும், செயல்பாடுகளும், மிகவும் ஆழமாக வேரூன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். அதன் விளைவாக மாயா நகர் சேரிப்பகுதியில் (Maya slums) , அங்குள்ள விளிம்புநிலை மக்களிடம் சமூகப் பணியாற்றுபவராகத் தன்னை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார்.
அந்த காலகட்டத்தில், ‘முற்போக்கு இளைஞர் இயக்கத்தில்’ (Progressive Youth Movement) இணைந்திருக்கிறார். அது, முதன்மையான பல தொழிற்சங்கத் தலைவர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்திருக்கிறது.
முற்போக்கு இளைஞர் இயக்கத்தில் உறுப்பினராக (also, Maoist central committee member) இருந்த அநுராதா ஷான்பக் (Anuradha Shanbag) என்பவர், கொபாட் காந்தியின் வாழ்க்கைத் துணைவியாக இணைந்திருக்கிறார். தனது வாழ்க்கையில் அநுராதா ஷான்பக்கின் பங்கு மிகவும் சிறப்பானது என்று கொபாட் காந்தி கூறுகிறார். அநுராதா ஷான்பக் 2008-இல் மத்திய இந்தியாவில் ‘தண்டகாரண்யா’ காட்டில், மலேரியா நோய் தாக்கத்திற்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார்.
‘முறிந்த விடுதலை’ நூலின் இறுதி அத்தியாயத்தில், புதிய பண்புகளை (New values) புகுத்துவதன்வழியே, இந்த உலகை மாற்றியமைக்க முடியும் என்று கொபாட் காந்தி கருத்துரைக்கிறார். அப்புதிய கருத்துருக்கு, ‘அநுராதா மாதிரி’ (Anuradha model) என்று பெயரிட்டு அழைத்துத் தனது மனைவியாக இருந்து மறைந்த தோழர் அநுராதாவுக்குப் பெருமை சேர்க்கிறார்.
கொபாட் காந்தியிடம், ஸ்க்ரோல் (Scroll) மின்னிதழின் தலைமை ஆசிரியர் நரேஷ் ஃபெர்னாண்டஸ் ( Naresh Fernandes) கண்ட நேர்காணல்.
1970-இல் நீங்கள் சமூக செயற்பாட்டாளராக மாறிய பிறகு, வர்க்கப்போராட்டம் முதன்மையானதாக மாறியது; அப்போது, இந்திய சமூக ஒற்றுமைக்கு இந்துப் பெரும்பான்மைவாதம் அச்சுறுத்தலாக அமையும் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டா?
உண்மையில் 1980-களில் இருந்தே காங்கிரஸ் கட்சி இந்துத்துவா சீட்டைக் கையில் எடுத்து விளையாட ஆரம்பித்துவிட்டது. பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்டது, 1984-இல் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைக் கொலைசெய்தது போன்று பல இந்து அடிப்படைவாத செயல்களைக் காங்கிரஸ் முன்னெடுத்துவிட்டது. 80-களில் ‘தாராளப் பொருளாதாரம்’ (liberalized economy) இந்தியாவில் புகுத்தப்பட்டுவிட்டது. அன்றைய காலகட்டத்தில், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாக அறிமுகமாகியிருந்த தொலைக்காட்சியில் ராமானந்த் சாகரின் (Ramanand Sager) இராமாயணம் ‘தொடர்’ ஒலிபரப்பாகியது. அது, அடுத்து வந்தப் பேரழிவிற்குக் கட்டியம் கூறுவதாகவும், அடித்தளமாகவும் அமைந்தது. பொருளாதாரம் கற்றவன் என்னும் அடிப்படையில், அந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை என்பதை உறுதியாக அறிவேன்.
மன்மோகன்சிங் நிதி அமைச்சராகவும், மோன்டெக்சிங் அலுவாலியா (Montek Singh Ahluvaliya) நிதித்துறைச் செயலாளராகவும் இருந்த 90-களில், பன்னாட்டு நிதியத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, நவதாராளப் பொருளாதாரம் (Neo-liberal economy) பெரிய அளவில் புகுத்தப்பட்டது. ஆனால், அதற்கான விதை 1980-களிலேயே ‘தனியார்மயம்’ (privatisation) என்று எழுந்த பேச்சின்வழியே புகுத்தப்பட்டுவிட்டது.
தாராளமயம் என்பது ஏழைகளைச் சுரண்டி, பெரும் கார்பொரேட்டுகள் பணம் ஈட்டுவது என்பது தவிர வேறொன்றும் இல்லை. இப்போதெல்லாம், நடுத்தர வர்க்கம்கூட ஒப்பந்த கூலிகளாகத்தான் பணிசெய்ய முடிகிறது.
தொழிற்சங்கத்தொடர்பு இருந்த காரணத்தால், 1970 முதல் பாம்பேயில் பஞ்சாலைகள் மூடப்பட்டதும், விசைத்தறிகளில் ஒப்பந்த கூலிகள் நியமிக்கப்பட்டதையும் பார்க்கமுடிந்தது.1984-இல் நடந்தப் பஞ்சாலைப் போராட்டம் பாம்பே நகரின் அடிப்படைத் தன்மையையே மாற்றியது. உழைப்பாளிகளின் நகரமாக இருந்த பாம்பே, பணம் ஈட்டும் மையமாக மாறியது. வொர்லி-(Worli) யில் நான் வசித்தபோது, தொழிற்சாலைகளில் பணி (shift) ஆரம்பிக்கும்போது பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்வதைப் பார்க்கமுடிந்தது. பின்பு அந்த நிலை மாறியது. நவதாராள பொருளாதார அமைப்பிற்கான விதைகள் 80-களிலேயே ஊன்றப்பட்டுவிட்டன.
இப்போதைய கோவிட் ஊரடங்குகூட ஏதோ ஒரு வகையில் உலகப் பொருளாதார சரிவிற்குக் காரணமாக இருக்கிறது என்று நான் உணர்கிறேன். ஏழைகள் பொருளாதாரத்தில் கீழேகீழே சென்றுகொண்டிருக்க, பணம்படைத்தவர்கள் மேலே மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்டப் பொருளாதார சரிவு மற்றும் பொருளாதார முரண்களிலிருந்து உழைக்கும் மக்களை, உழுகுடி மக்களை திசைதிருப்பவே மதம்சார்ந்த பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் எடுத்துப் பயன்படுத்துகின்றனர். வரலாற்று அடிப்படையில் இந்த மோசமானப் பொருளாதாரப் பின்னடைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பங்கு மிகப்பெரியது என்று நான் கூறுவேன்.
நரேந்திரமோடி அடைந்திருக்கும் புகழுக்குக் (popularity) காரணம் என்ன?
சிறையிலிருந்து வெளியே வந்த உடன், கோவிட் ஊரடங்கு காரணமாக மக்களைச் சந்தித்து, உரையாடி அவர்களது கருத்தை அறியமுடியவில்லை. ஆனாலும், மோடியும் அவரது கட்சியினரும், மதம் மற்றும் தேசப்பற்று என்பனவற்றை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். இதனைச் செய்வதற்காக, அனைத்து ஊடகங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கின்றன. குறிப்பாக சில ஊடக நெறியாளர்கள் (anchors) தேசிய அளவில் மோடிக்கு மாற்று கிடையாது என்று மக்களைக் கண்மூடித்தனமாக நம்பவைக்கிறார்கள்.
பிராந்திய அளவில் மாற்று இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடையாமல் ஒரு எல்லைக்குள் சுருங்கிவிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சிமீது பலரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பிற்கேற்ப அந்தக்கட்சி செயல்படுவதில்லை. அவர்களும் மெல்லிய இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இது தேவையாக இருக்கிறது என்றும் சிலர் பேசுகின்றனர். தவிரவும், அவர்களும் நவதாராளக் கொள்கையில் எந்த ஒரு முடிவுக்கும் வருவதில்லை. என்றாலும் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் அவர்கள் சிறப்பாக செயலாற்றியிருக்கிறார்கள். இது நீண்டகாலப் பயனைத்தருமா என்று சொல்லமுடியவில்லை.
அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இலட்சக்கணக்கிலான விவசாயிகள், கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்களம் உருவாகவில்லை. அரசியல் அற்று இருப்பது பெருமை என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுபோல அரசியலற்று இருந்த தொழிற்சங்கங்களையும், இயக்கங்களையும் எங்கள் காலங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு அரசியல் களம் உருவாகவில்லை என்றால், இந்தப்போராட்டம் ஒரு முட்டுச்சந்தில் முடிந்துவிடும். இதுபோல் முடிவுக்கு வந்த பல போராட்டங்களையும், இயக்கங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அந்தப்புள்ளியில்தான் நக்சல்களும் ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்று தவறிழைக்கிறார்கள். தேர்தல் புறக்கணிப்பு, தவறானவர்கள் வருகைக்கே வழிவகுக்கும்.
உடோபியா (Utopia) பற்றி உங்கள் கருத்து என்ன?
அது மிகவும் நீண்ட தொலைவில் உள்ளது. எதிர்காலத் திட்டங்களில் அது இடம்பெறவில்லை. 40 ஆண்டுகளாக இதனைச் சிந்திக்கும் செயற்பாட்டாளனாக இருந்திருக்கிறேன். சமத்துவம் (equality) என்றால் என்ன? வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது என்று சொல்லலாமா? அது பொருளாதாரம் மட்டுமே. ஆனால் சமூகம் மற்றும் மனிதம் போன்ற காரணிகளைப் பற்றிய கருத்து என்ன?
‘உடோபியா’ என்பது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனவும், பெரும்பணமும் சொத்துகளும் இருந்தாலும் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், மன இறுக்கத்தில் இருப்பதாகவும் சில பணக்கார ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்.ஆனால் ஒரு ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்துபார்த்தால் மட்டுமே, அவர்கள் எந்த அளவிற்கு மன இறுக்கத்தில் வாழ்கிறார்கள் என்பது புரியும்.
எனவேதான், நோக்கம் மகிழ்ச்சியாக மாற்றப்படவேண்டும் (goalposts should change to happiness). அது பொருளாதாரத் திட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். ஏழைகளுக்கான எந்த ஒரு தீர்வையும் முதலாளித்துவம் வைத்திருப்பதில்லை. மாறாக, ஏதோ ஒரு வகையிலான சோசலிசம்தான், ஏழைகளுக்குக் கொஞ்சமாவது நிவாரணம் தந்திருக்கிறது. கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில்கூட, தங்களுக்கு மருத்துவமும், கல்வியும் இலவசமாகக் கிடைத்த நாட்களை மக்கள் திரும்பிப்பார்க்கிறார்கள். சோசலிசம் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறது. உலகில் பெரும் பணக்காரர்களை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் சீனா, பெரும்பகுதி அடித்தட்டு மக்களை நடுத்தட்டுக்கு உயர்த்தியிருக்கிறது. எனவே, பொருளாதார அடிப்படையில் ஏழை மக்களுக்கு வாழ்வளிக்க சோசலிசமே தேவையாக உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார முன்னேற்றத்துடன் மகிழ்ச்சி happiness), சுதந்திரம் (freedom), ஜனநாயகம் (democracy) ஆகிய பண்புகள் இணைக்கப்படவேண்டும். புதிய பண்புகள் (new values) இல்லாமல் இது சாத்தியமற்றது. இயல்புத்தன்மை (naturalness), நேர்மை (straightforwardness), எளிமை (simplicity), தான் என்னும் செருக்கும் தன்முனைப்பும் இல்லாதிருத்தல் (without ego), திரிபுவாதம் இல்லாதிருத்தல் (without manipulativeness ) போன்ற புதிய பண்புகள் தேவைப்படுகின்றன. இவற்றைத்தான் ‘அநுராதாவை’ மாதிரியாகக்கொண்டு, மற்றவர்களுக்கும் நீட்டிக்க முயல்கிறேன்.
நான் சுதந்திரம் (freedom) பற்றிப் பேசும்போது , அரசியலை மட்டுமே பேசவில்லை. ஒருவருடைய சுதந்திரம் என்பது அவரிடமிருந்தே தொடங்குகிறது. நாம் ஒவ்வொருவரும், நமது வாழ்க்கையில் பலமுடிச்சுகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், நம்மிடமிருந்தே அந்நியப்பட்டுவிடுகிறோம்.. அதன் காரணமாக நாம் நாமாக இருப்பதில்லை. நாம் நமது உணர்வுகளைக்கூடப் புரிந்துகொள்வதில்லை. அழகற்றப் பேருருவம் (monstrosity) என்று மார்க்ஸ் குறிப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். எல்லா நேரங்களிலும், நாம் நமது பிரச்சினைகளோடேயேப் பிணைக்கப்பட்டுவிடுகிறோம். நமது குழந்தைப்பருவத்தில், நமது மூளைக்குள் ஏற்றப்பட்டு, உறைந்துபோன அகவய உணர்வுகள் (subconcious emotions), புறவய உண்மைகளுடன் (actual reality) முரண்படுகின்றன. மிக ஆழமாக அகவயமாகப் பதிந்திருப்பதால், கோட்பாடு மாற்றங்கள் மட்டுமே புதிய பண்புகளைக்( new values) கொண்டுவந்து சேர்த்துவிடாது.
புதிய பொருளாதாரம் என்பது, மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகிய புதிய பண்புகளை உயர்த்த வழிவகுக்கவேண்டும். பலவகையான சோசலிச மாதிரிகள் உள்ளன. சோவியத் மாதிரியில், அனைத்தும் அரசுத்துறைகள்சார்ந்து மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதால், அதனை அனைவரும் நிராகரித்துவிட்டனர். சீன மாதிரியில், மனிதர்கள் இரண்டு கால்களில் சமன் செய்து நடப்பதுபோல, அரசு மற்றும் தனியார் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தியது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் இதுபோன்ற மாதிரிகளைக் கூறமுடியும். எந்த வகையானப் பொருளாதார மாதிரி என்றாலும் அது மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கவேண்டும்.
இந்தியாவின் கடந்த காலங்களில் இருந்து, நமது நிகழ்காலத்திற்கு உங்களால் ஒரு மாதிரியை முன்வைக்க முடியுமா?
நமது நாட்டை ஜனநாயகப்படுத்துவதிலிருந்தும், வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதிலிருந்தும் நம்மைத் தடுத்து நிறுத்துவது, உண்மையில் நம் நாட்டில் நிலவும் சாதி அமைப்பு முறையே (caste system) ஆகும். இப்படிப்பட்ட நிலை உலகில் வேறு எங்குமே இல்லை. பிற நாடுகளை வென்றெடுப்பவர்கள், அங்குள்ள மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியையே கொள்கையாகப் பயன்படுத்துகின்றனர். ஆயிரம் துண்டுகளாகப் பிரிந்திருக்கும் இந்தியாவை, அவர்களுக்குத் தாம்பாளத்தட்டில்வைத்து நாம் நீட்டுகிறோம். சாதி அமைப்பு , மக்களைத் துண்டாடுவது மட்டுமல்ல, அது மிக மோசமான மேல்கீழ் என்னும் படிநிலை அமைப்பையும்கொண்டது. அதனை உடைத்தாலன்றி, இந்தியாவை ஜனநாயகப்படுத்தவும் முடியாது, வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லவும் முடியாது. என்றாலும், நமது கலாச்சார வரலாற்றில், நமக்கு சில மாதிரிகளும் உள்ளன. சான்றாக, பூலே (Phule) மற்றும் அம்பேத்கர் செய்ததுபோல, பக்தி மரபின் சமத்துவம், அதற்கும் முன்பான சார்வாகா (charvaka) மற்றும் புத்தரின் சமத்துவக் கோட்பாடுகளை முழுமையாக மேம்படுத்தி, முன்னெடுத்துச் செல்லவேண்டும். இதுபோன்ற ஜனநாயக அடித்தளத்தில் நின்று, மேன்மையான இந்தியாவை உருவாக்கவேண்டும்.
சிறையிலிருந்து வெளிவந்த நாள்முதல், பெரும்பாலான கலாச்சார மரபுகள் (cultural traditions) இந்துத்துவாவை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுவதை, நான் பார்க்கிறேன். அதன்காரணமாக அந்தக் கலாச்சாரங்கள் சாரம் இழந்துவிட்டன. அவற்றை நாம் மீட்டெடுக்கவேண்டும். சாதி அமைப்பைப் புறந்தள்ளி, வர்க்கப்போராட்டத்தை மட்டுமே முன்னெடுக்கும் மார்க்சியர்களின் மனநிலை மாறவேண்டும்.
இப்போதும் நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கிறீர்களா?
ஆமாம். சோசலிசப் பொருளாதாரம் மட்டுமே மாற்றாகும் என்று இப்போதும் நான் கூறுகிறேன். அதனை அடையும் வழிமுறைகள் சூழலைப் பொறுத்தது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமானால், உலகப்போர்களின்போது மட்டுமே ஆயுதப்போராட்டம் வெற்றியைத் தந்திருக்கிறது. மறுதலையாக, இந்தோனேஷியா, சிலி போன்ற பல நாடுகளில், அமைதி வழியிலான கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் கோட்பாடுகள் புதிதுபுதிதாக உருவாகும்போதும், பொருளாதாரக் கட்டமைப்பு மாறும்போதும், கம்யூனிசம் வளர்கிறது. நாம் நமது கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு, மகிழ்ச்சி, சுதந்திரம் என்னும் புதிய பண்புகளை, மாற்றத்திற்கான எந்த ஒரு பொருளாதார மாதிரியிலும் உள்ளீடு செய்யலாம். அந்தந்த நாடுகளில் நிலவும் சூழலுக்கு ஏற்ப சோசலிசத்தில் புதிய மாற்றங்களை செய்யத் தேவையான ஒரு மாதிரியைக் (model) கண்டடைய வேண்டும். இன்றைய சமூகம், பணக்காரர்கள் Vs ஏழைகள் என்று மாறியிருப்பதால், அப்பணி எளிதாகிவிடுகிறது. ஆனால், உலகப்பொருளாதாரம் ஒருபுறமாகக் குவிந்திருப்பதால் (polarized), 3,500க்கும் மேற்பட்ட உலகப்பணக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கும், மக்களுக்கும் இடையிலான போராட்டமாக அமையும். இந்த 3,500 குடும்பங்களும், அக்குடும்பங்களுக்கு அரசியலிலும், அதிகாரத்திலும் இடைத்தரகர்களாக செயல்படுபவர்களிடமும் இருக்கும் சொத்தைக்கொண்டு நம் பூமியில் சொர்க்கத்தையே உண்டுபண்ணலாம்.
நன்றி : Scroll (Article by Naresh Fernandes dt. March 30, 2021)