ஒவ்வொரு சுற்றுச்சூழல்வாதியும் முதலாளித்துவம் குறித்து என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
“What Every Environmentalist Needs to Know About Capitalism” என்ற தலைப்பிலான நூலை, ஜான் பெல்லமி பாஸ்டர், ப்ரெட் மேக்டாப்போடு இணைந்து எழுதியுள்ளார். இந்நூல் 2011 ஆம் ஆண்டில் “மன்த்லி ரிவியூ” ப்ரெஸ் வெளியீடாக வெளிவந்தது. அமெரிக்காவில் சுமார் அறுபது ஆண்டுகளாக இயங்கி வருகிற இடதுசாரி இதழான மன்திலி ரிவியூவில், நூலாசிரியர்கள் இருவரும் எழுதிய கட்டுரைகளின் விரிவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பாக இந்நூலைக் கொண்டு வந்துள்ளனர்.
நூலாசிரியர் குறித்து:
ஜான் பெல்லமி பாஸ்டர் 2006 ஆம் ஆண்டு முதலாக மன்திலி ரிவியூவில் ஆசிரியராக உள்ளார். தொழில்முறையில் ஒரீகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சமகால சூழலியல் சிக்கல்களை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகுகிற இவரது பகுப்பாய்வு முறையால் தனிக் கவனம் பெற்று வருகிறார்.
பெல்லமி பாஸ்டர் 2000 த்தின் தொடக்கத்திலிருந்து சூழலியல் குறித்த மார்க்சிய விவாதத்தை பல்வேறு நூல்களின் வழியே எழுதியும் பேசியும் வருகிறார்.அவை முறையே Marx’s Ecology (2000),Ecology Against Capitalism(2002), Ecological Imperialism(2006), Marx’s Grundrisse and the Ecological Contradictions of Capitalism(2008), The Ecological Revolution(2009) ,The Ecological Rift(2010), What Every Environmentalist Needs to Know About Capitalism(2011), Marx and the Earth: An Anti-Critique(2016) ,The Return of Nature: Socialism and Ecology(2019) The Robbery of Nature: Capitalism and the Ecological Rift(2019)
இவரது ஆங்கில நூலின் முதல் தமிழாக்க நூலானது 2011 ஆம் ஆண்டில் “சூழலியல் புரட்சி”(தமிழில் தோழர் துரை மடங்கன்) என்ற தலைப்பிலும் இரண்டாம் நூல் 2012 ஆம் ஆண்டில் “மார்க்சும் சூழலும்”(தமிழில் தோழர் மு வசந்தகுமார்) என்ற தலைப்பிலும் வெளிவந்தது. இவ்விரு நூல்களையும் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பெல்லமி பாஸ்டரின் ஆய்வும் சமகால அரசியல் விவாதங்களும்:
தமிழக அளவிலான சூழலியல் அரசியல் விவாதங்களில் பெல்லமி பாஸ்டர் நூல்கள் முதலில் அதிகம் அறியப்படாமல் இருந்தாலும் பின்னாட்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எனலாம்.சூழலியல் சிக்கல்கள் குறித்து மார்க்சிய முறையியல் ஆய்விற்கு பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் பெரிதும் பங்காற்றியது.குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் சூழலியலாளர்கள் மத்தியில் நிலவிய பல்வேறு தாராளிய கண்ணோட்டம்,சூழலியல் குறித்த மார்க்சிய கட்சிகளின்/இயக்கங்களின் கண்ணோட்டம் ஆகியவற்றை பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் மறு வரையறை செய்யத் தூண்டியது என்றே கூறலாம்.
மார்க்ஸ் அல்லது மார்க்சியம், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் குறித்துதான் அக்கறை கொண்டுள்ளது எனவும் சூழலியல் சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.அதாவது மார்க்சிடம் பிரோமிதியேன் வாதமே செல்வாக்கு செலுத்தியதாக விமர்சிக்கப்பட்டார்.போலவே சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிற தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்துதான் அக்கறைப்பட்டார்கள் எனக் கூறப்பட்டது.
சூழலியலாளர்கள் மத்தியிலோ சூழலியல் சிக்கல்களுக்கு தனி நபர்களின் ஒழுக்க மீறல்கள்தான் காரணம் என்றும்,சட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதுதான் காரணம் என்றும்,மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம் என்றும் முன்வைக்கப்பட்டன.இதற்கு தீர்வாக இந்த முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இத்தகைய பின்புலத்தில்தான் சூழலியல் குறித்த மார்க்சிய தத்துவார்த்த விளக்கங்களை பாஸ்டரின் நூல்கள் முன்வைக்கத் தொடங்கின.எனது சொந்த நிலைப்பாடும் மார்க்சின் பக்கம் திரும்புவதற்கு பாஸ்டர் காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.
சமகால சூழலியல் சிக்கல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளும் அடிப்படைக் காரணியாக இருப்பது முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை ஆகும்.அதாவது மூலத்தனதிற்கும் தொழிலாளி வர்க்கத்துடனான முரண்பாடு மூலதனத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடாக உள்ளது.மூலதனத்தை குவிப்பதற்கான உற்பத்திப் பெருக்கத்திற்கான,லாபத்திற்கான முதலாளித்துவத்தின் “அனிமல் ஸ்ப்ரிட்” ஆனது தொழிலாளரிகளின் உழைப்பை சுரண்டுவதோடு இயற்கை வளங்களையும் சுரண்டுகிறது.தனது உற்பத்திக் கழிவுகளால் சுற்றுச்சூழலை சீரழிக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் கேடுகளை அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை அறிவியல்பூர்வமாக வெளிப்படுத்திய மார்க்சும் எங்கெல்சும் இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்பாட்டை முதலாளித்துவம் கூர்மைப்படுத்துவது குறித்தும் அக்கறை கொண்டிருந்தததை அவர்களது எழுத்துக்களே பிரதிபளிக்கின்றன.
“Working class condition in England” என்ற நூலில் தேம்ஸ் நதியில் கழிவுகள் கலப்பது குறித்து தனது விமர்சனத்தை எங்கெல்ஸ் எழுதியிருப்பார்.போலவே மார்க்ஸ் தனது “வளர்சிதைமாற்ற பிளவு” என்ற கருத்தின் வழியே மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடுகுறித்து பேசி வந்தார்.
மார்க்ஸ் எங்கெல்ஸ் இன் சூழலியல் கரிசனத்தை பின்னாளில் சுவீசி,பாரன் ஆகியார் பல கட்டுரைகளில் எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் மன்த்லி ரிவியூவில் தொடக்க காலத்தில் பணியாற்றியவர்கள்.
இவர்களின் மரபின் தொடர்ச்சியாக பெல்லமி பஸ்டர் தனது ஆய்வுமுறைகளை ஆழ அகலப்படுத்திக் கொள்கிறார்.
நூல் பற்றி:
இந்நூலைப் பொறுத்தவரை அதன் தலைப்பே கூறுவது போல ஒவ்வொரு சுற்றுச்சூழல்வாதியும் முதலாளித்துவம் குறித்து என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.இதன் துணை தலைப்பாக “சுற்றுச்சூழல் மற்றும் முதலாளித்துவம் குறித்தான குடிமக்களுக்கான ஒரு எளிய கையேடு” எனக் கூறுவதிலிருந்து இந்நூலானது சாமானிய மக்கள் படித்து புரிந்துகொள்ளும் நோக்கில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
இந்நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால் நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல “What every environmentalist needs to know, of course, is that capitalism is not the solution but the problem” என்பது குறித்துதான்.
அதாவது சூழலியல் சிக்கல்களுக்கு இந்த அமைப்பிற்குள்ளே சூழல்வாதிகள் தீர்வு காண இயலும் என நம்புகிறார்கள். ஆனால் பிரச்சனையே முதலாளித்துவத்தால் தான் என்ற உண்மையை இந்நூலில் முன்வைக்கிறோம். என்பார்கள்.
இந்நூல் ஆறு குறு அத்யாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல் அத்யாயம் -Planetary crisis. நாம் இன்று சொல்லும் சூழல் சிக்கல்களை ,குறிப்பிட்ட ஒரு சிக்கல் எனச்சுருக்க முடியாது. அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி . மாறாக அது பல சிக்கல்களை கொண்டவை எனத் தொடங்குகிற இந்த பகுதி,புவியை சூழந்துள்ள முதன்மையான சூழியல் சிக்கல்கள் குறித்த பட்டியலை பல அறிவியல்பூர்வ புள்ளி விவரங்களோடு வழங்குகிறது.குறிப்பாக
- பருவ நிலை மாற்றம் 2. கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு 3.ஒசோன் மெலிவு 4. உயிர் -புவி வேதிப்பொருள் ஒழுக்கு எல்லை5. உலக நன்னீர் பயன்பாடு 6.நிலப் பயன்பாட்டு மாற்றம் 7.பல்லுயிரிய இழப்பு 8.வளிமண்டல தூசுப்படல அதிகரிப்பு 9. வேதியியல் மாசு
போன்ற சிக்கல்களை விரிவாக எடுத்துரைக்கிறது.
இரண்டாம் அத்யாயம்– Business as Usual: The Road to Planetary Destruction
தற்போதைய உற்பத்தி முறையும் நுகர்வும்,சூழல் மாசும் தொடர்ந்தால் அடுத்து நூறாண்டில் இந்த புவி அதன் தாங்கு திறனை இழந்து விடும் என்று எச்சரிக்கிறது.மேலும் தற்போதைய உற்பத்தி முறையானது வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிற அதேவேளையில் நாடுகளுக்குள்ளே ஏழை பணக்காரனையும் உருவாக்குகிறது.அமெரிக்காவின் உயர் நடுத்தர வரர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்தைப் போல பிற நாட்டு மக்களும் நுகரத் தொடங்கினால் இப்புவியைப் போல ஆறு புவி தேவைப்படும் என்கிறது.
மூன்றாவது அத்யாயம் “GROWTH IS IMPERATIVE” என்ற தலைப்பில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியடைந்த கட்டமான ஏகபோக முதலாளித்துவ சக்திகளின் பண்புகளை உதாரணங்களின் வழியே விரிவாக விளக்குகிறது.மேலும் உற்பத்திக்கான கச்சா பொருளையும் சந்தையையும் ஏகபோகமாக கட்டுப்படுத்துகிற முதலாளித்துவ சக்திகள் சுற்றுச் சூழலுக்கும் ஆகப்பெரும் கேடு விளைவிப்பதை எடுத்துரைக்கின்றனர்.உதாரணமாக புதைபடிவ எரிபொருளான நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முற்படகிற முதலாளிகள், நிலக்கரி சுரங்க பணியால்ஏற்படுத்துகிற சுகாதாரக் கேடுகளையும் சூழல் கேடுகளையும் விவரிக்கின்றனர்
போட்டி முதலாளித்துவமானது போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் பலவந்தமாக பொருட்களை விற்பனை செய்ய முனைகிறார்கள்.பல்வேறு மாடல்களில் தொலைக்காட்சிகள்,வாகனங்கள்,துணிமணிகள்,மின்னணு சாதனங்கள் என பொருட்களை சந்தைகளில் மலை போல குவித்து சமூகத்தில் நுகர்வு கலாசாரத்தை திணிக்கிறார்கள்.சந்தையில் பொருட்களை விற்பதற்கான விளம்பரத்திற்கு மட்டுமே லாபத்தில் இருபது விழுக்காட்டை முதலாளித்துவ சக்திகள் ஒதுக்குவதை குறிப்பிட்டு காட்டுகிறார்கள்.
நான்காவது அத்யாயம் “ The Environment and Capitalism” முதலாளித்துவ உற்பத்தி அமைப்பானது சந்தைக்காகவும் கச்சாப் பொருட்களுக்காகவும் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதை பட்டியலிடுகிறது.உதாரணமாக ஆப்ரிக்காவில் முப்பது ஹெக்டேர் நிலத்தை பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகள் கையப்படுதியுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்கள்.மேலும் ஆப்பிரிக்காவின் எண்ணெய் எரிவாவு எடுப்பு பணிக்காக பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஊழல் மற்றும் சூழல் கேடுகளை விவரிக்கிறார்கள்.எண்ணெய் எரிவாயு எடுப்பு பணிகளில் உள்ள முதலாளித்துவ சக்திகள் அரசியல் லாபிகளில் ஈடுபட்டு வரிச் சலுகைகள் பெறுவது பற்றியும் சந்தைகளை உத்தரவாதம் செய்துகொள்வது பற்றியும் கார்பரேட்களுக்கும் அரசியல் தலைமைக்குமான எடுபிடி உறவை கோச் சகோதரர்களின் உதாரணம் மூலமாக எடுத்துரைக்கின்றனர்.
ஐந்தாவது அத்தியாயம் “Can Capitalism Go Green” முதலாளித்துவம் பசுமையாக இருக்க முடியாது ஏனெனில் அவ்வாறு இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது என்கிறார்கள்.சூழலை காப்பதாக முதலாளித்துவ சக்திகள் கூறுகிற கேப் அண்ட் ட்ரேட்,பசுமை பொருட்கள் இவை யாவுமே சந்தை நலனையே அடிப்படையாக கொண்டுள்ளது என்கிறார்கள்.அதாவது சூழலியல் சிக்கல்களுக்கு சந்தை சார்ந்த தீர்வுகளையே முன்வைப்பதாக விமர்சிக்கிறார்கள்.இறுதியாக ஆறாவது அத்யாயத்தில் “An Ecological Revolution Is NotJust Possible—It’s Essential” சூழலியல் சிக்களுகளுக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்களின் மூலமாகவும் பொருளாதார அமைப்பை மறு கட்டமைப்பு செய்வதன் மூலமாகத்தான் இந்த புவியை காக்க முடியும் எனக் கூறி முடிக்கிறார்கள்.